ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 4

பாடம்-4: ஒரு வலுவான பண்பாட்டினால் மட்டுமே வலுவான சமூகத்தையும் சமூக  அமைப்புகளையும்  கட்டி எழுப்பமுடியும்.

 

உலகின் தலைசிறந்த இராணுவ தத்துவமேதைகள் பொதுவாக ஏற்றுக்கொள்ளும் உண்மை என்னவென்றால், இராணுவ உத்திகளைவிட இராணுவ வீரர்களின் உளவியல்தான்  போரில் அதிமுக்கியமானது. எவ்வளவு நல்ல திட்டமாக இருந்தாலும் கோழைகளை  வைத்துக் கொண்டு ஒரு இராணுவம் இம்மியளவும் நகரமுடியாது.

“Clausewitz’s greatest contribution to the theory of war was in emphasizing psychological factors…he showed that the human spirit is infinitely more important than operational lines and angles.” [1]

ஈழப்போரில் ஒரு பெரிய புதிர் என்னவென்றால் புலிகளால் எவ்வாறு மனபலத்தில் உலகிலேயே நிகரற்ற இதற்குமுன் வரலாற்றில் எங்கும் காணாத படையை உருவாக்க முடிந்தது என்பதுதான். இதைப் பற்றி ஆராய்ச்சிகள் நடந்துள்ளனவா எனத் தேடினேன். பெரும்பாலான ஆராய்ச்சிகள் புலிகள் “பயங்கரவாதிகள்” என்ற முடிவுக்கு வந்துவிட்டு அதற்கேற்ற உளவியலைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் [2,3].  அதிலிருந்து நாம் கற்பதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை.  ஆனாலும் பெரும்பாலோனோர் புலிகள்தான் உலகிலேயே மனபலத்திலும் தாக்குதலிலும் நிகரற்றவர்கள் என்று ஒப்புக்கொள்கிறார்கள். புலிகள் ஒரு பலமான விடுதலை இயக்கமாக வளர்வதற்கு என்ன உளவியல் காரணங்கள் என்பது தான் நமது பார்வையில் முக்கியம்.  நான் தேடிய அளவில் அதுபோன்ற ஆராய்ச்சிகளைக் காணமுடியவில்லை.   இக்கட்டுரையின் நோக்கம் அந்தத் தேவையை ஓரளவு பூர்த்தி செய்வதே.  இது நான் அறிந்த வரலாற்றுத் தகவல்களையும் உளவியல் தத்துவங்களையும் அடிப்படையாகக் கொண்டே இருக்கும் என்பதால், இது ஒரு முழுமையான ஆய்வு அல்ல. இதை ஒரு ஆரம்பமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

பொதுவாக ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பதில் தமிழர்களின் பண்பாடு என்ன என்றால், அனைவருக்கும் நினைவுக்கு வருவது நண்டு கதைதான். நண்டுகள் எவ்வாறு ஒன்றை ஒன்று பின்னுக்கு இழுக்கிறதோ, அதுபோல ஓர்  ஒற்றுமையற்ற சமூகம்தான் தமிழ்ச்சமூகம். இதை “நண்டுப்பண்பாடு” என்று எடுத்துக் கொள்வோம்.

நண்டுப் பண்பாடு:

  • சுயநலம்தான் குறிக்கோள். நானும் என் குடும்பமும் நன்றாக இருக்கவேண்டும். மற்றவற்றைப் பற்றி பெரிய  கவலை இல்லை. யாருக்கு என்ன தலையில் எழுதி இருக்கிறதோ, அதுதான் நடக்கும்.
  • சமூகத்தில் இருக்கும் மற்றவரைப் போட்டியாகக் கருதுவர். ஒருவரின் முன்னேற்றம்/இலாபம் மற்றொருவரின் நட்டமாகப் பார்க்கப்படும். இதன் விளைவாக ஒருவருக்கொருவர் நண்டுபோல இழுத்துக்கொண்டு ஒத்துழைப்பற்று இருப்பர்.
  • ஒழுக்கம் என்பது அவரவர் விருப்பம்
  • இன்பம்: எளிமையான காமம், பொழுதுபோக்கு, போதை என்கிற மாயைகளுக்குள் சிக்கிக் கொள்வர். இவை இன்பம் தருவதுபோலத் தோன்றினாலும்,  முடிவில் துன்பத்தையே கொடுக்கும்.
  • சமூக கட்டமைப்புகள்: மக்களிடையே ஒத்துழைப்பின்மையால், மக்களால் இயக்கப்படும் பொதுநல அமைப்புகள் குறைவாகவே இருக்கும். மேலும் அனைத்து அரசு மற்றும் பொதுநல அமைப்புகளிலும்  நண்டுகள் புகுந்து  அமைப்புகளை சீர்கெடுக்கும். குடும்ப நிறுவனங்களை அதிகமாக் காணலாம். அரசியல் கட்சிகளும் குடும்ப நிறுவனங்களாக மாறும். சட்டங்கள் கேலிக் கூத்தாகும். யாரும் அதைப் பெரிதாக பொருட்படுத்த மாட்டார்கள். அனைத்திற்கும் சமூகம் அரசையே நம்பி இருக்கும், ஆனால் அரசு அமைப்புகளும் மிக மோசமான நிலையிலேயே இருக்கும். மிக முக்கியமாக  இப்படிப்பட்ட சமூகத்தால் சிக்கலான அமைப்புகளை உருவாக்கி சிக்கல்களைத் தீர்க்கும்  வல்லமை  இருக்காது.
  • இதுபோன்ற சமூகங்களில் நண்டாக இருந்தால்தான் பிழைக்க முடியும். நேர்மையாக இருக்கவேண்டும் என நினைப்பவர்களுக்குப் பிழைக்கத்தெரியாதவன் என்ற பட்டம் கட்டப்படும். இவ்வாறான சமூக உருவாக்கத்திற்கு தனி மனிதனைக் குற்றம் கூறமுடியாது. அந்தப் பண்பாட்டில் அவ்வாறு இருந்தால்தான் பிழைக்க முடியும். இங்கு பிழை என்பது பண்பாட்டில்தான் உள்ளது. நெரிசலில் (Stampede) மாடுகள் எவ்வாறு குருட்டுத்தனமாக ஒன்றின்பின் ஒன்றாக  ஓடுகிறதோ, அதுபோல சமூகம் ஓடும். இதுபோன்ற நிலையில் சமூகம்  அழிவதற்கு  வாய்ப்புகள் அதிகம்.

இவ்வாறு செயல்படும் நண்டுகளை வைத்து ஒரு பெரிய இயக்கத்தைக் கட்டி எழுப்புவதென்றால், அது முடியாத காரியம். இதிலிருந்து தப்பிக்க ஒரேவழி மாற்றுப் பண்பாடுதான். அதை உணர்ந்து பிரபாகரன் அவர்கள் உருவாக்கியதுதான் “புலிப் பண்பாடு”.  எதற்கும் உதவாத நண்டுகளை  எடுத்து உலகில் அனைவரையும் விஞ்சிய புலிகளாக எப்படி  உருவாக்க முடிந்தது?

புலிப் பண்பாடு:

ஒரு பெரிய கட்டிடம் கட்டுவதற்கு பலமான அடித்தளம்  வேண்டும், அதுபோல ஒரு பெரிய  இயக்கத்தை கட்டி எழுப்ப, அதற்குத் தேவையான அடித்தளம் என்பது பண்பாடு தான். ஆயுதப் போராட்ட ஆரம்பகாலத்தில் பலவேறு குழுக்கள் இருந்தாலும், முதன் முதலில் பண்பாட்டுத் தேவையை உணர்ந்து, ஓர் அதியுச்ச ஒழுக்கமான பண்பாட்டை பிரபாகரன் அவர்கள் உருவாக்கினார்கள்.  அந்த பண்பாட்டின்  முக்கிய அங்கங்களாக நான் கருதுவது:

  1. தனிப்பட்ட சமூகம் (Community):

ஒரு புதிய பண்பாட்டை உருவாக்குவதற்கு ஒரு “தனிப்பட்ட சமூகம்” முக்கியமானது. அச்சமூகத்திற்கு யார் உறுப்பினர், யார் இல்லை என்பதை தெளிவாக வரையறுக்கும் எல்லை இருக்கவேண்டும்.  சமூகத்தில் ஒரு மனிதனின் செயல்பாட்டை பெரும்பங்கு தீர்மானிப்பது, அச்சமூகத்தில் தன்னைச் சுற்றியுள்ள மற்றவர்கள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதுதான்.  தன்னை சுற்றி இருப்பவர்கள் நண்டுகளாக இருந்தால், ஒருவர் நண்டாக மாறுவார். சுற்றி இருப்பவர்கள் புலிகளாக இருந்தால், புலியாக மாறுவார்[22,23]. இதுதான் அடிப்படை உளவியல்.  ஒரு தனிச் சமூகத்தை உருவாக்கும்பொழுது எளிதாக புதிய விதிகளையும் நடைமுறைகளையும்  உருவாக்கி அதிக ஒத்துழைப்பான சமூகத்தை உருவாக்கிவிடலாம். புலிகள் ஒரு போர் புரியும் கொரில்லா இயக்கம் என்பதால், காடுகளில் ஒரு சமூகமாக தனித்து இயங்குவது அவர்களுக்கு இயற்கையிலே அமைந்தது. பிரபாகரன் அவர்கள் அதீத ஒத்துழைப்பான இயக்கம் தேவை என்பதை முதலில் உணர்ந்து, அதற்கேற்ற விதிகளை உருவாக்கினார்.  இதுதான் தான் அவர்களின் வெற்றிக்கு அடிப்படை காரணம் என்கிறார் ஆய்வாளர் பரணி கிருஷ்ணரஜனி[5]. மற்ற போராட்ட  இயக்கங்கள் இதில் கவனம் செலுத்தாதனால் அவர்களால் பெரிதாக வளர முடியவில்லை.

  1. சுயம் (Self):

ஒரு மனிதனின் குணங்கள் பிறப்பில் தீர்மானிக்கப் படுவதல்ல. மனிதனின் குணங்களை  மரபணுக்களும்  பண்பாடும் இணைந்து உருவாக்குகின்றன. பிறக்கும்போது மனிதன் குறிப்பிட்ட பண்புகளுடன்  பிறக்கிறான், ஆனால்  பின்பு வளரும்பொழுது  அவன் வாழும் சமூக சூழல்  அப்பண்புகளை  சூழலுக்கு  ஏற்றவாறு மாற்றுகிறது.  இந்தப் பண்புகள் வளர்ந்து பெரியவனானபின்  மாற்றுவது கடினமானது, ஆனால் முடியாத காரியம் இல்லை [7].

ஒரு விடுதலை இயக்கத்திற்கு முக்கியமான  பண்பு  “நான் யார்” என்ற சுய அடையாளம்.  ஒருவனுக்கு சுயம் உருவாகியபின் அந்த சுயத்தைக் காப்பதுதான் அவன் குறிக்கோள். சுயத்திற்கு தீங்கு ஏற்பட்டால் வலிக்கும், கடுங்கோபம் வரும். சுயம் என்பது ஒருவனின் உடல் மட்டுமல்ல. எதற்கெல்லாம் வலிக்கிறதோ, அவற்றை எல்லாம் அவன் சுயத்தில் அங்கமானதாக எடுத்துக் கொள்ளவேண்டும். உதாரணமாக ஒருவரின் புதிதான வண்டியில் (car) ஒரு கீறல் ஏற்பட்டு அவர் துடித்தால், அவரின் வண்டியும் அவரின் சுயத்தில் அங்கமானதே.

புலிகளின் வெற்றியைப் புரிந்துகொள்ள அவர்களின் சுயம் என்ன என்ற புரிதல் முக்கியமானது.

  • ஒரு புலி வீரனின் சொத்து என்பது ஒரு துவக்கும் சயனைடு குப்பியும்தான். புலி வீரர்கள் முதல் ஐந்து வருடங்கள் திருமணம் கூடாது என்பதாலும், பற்று வைக்க குடும்பமும் இல்லை.
  • புலி வீரர்களின் ஒரே இலக்கு என்பது  “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்று அனைவரும் அறிந்ததே. அதனால் ஈழம் தான் புலிகளின் சுயம் என்று ஆனது.
  • பெரும்பாலோனோர் இளவயதில் இயக்கத்தில் இணைவதால், அவர்களின் சுயத்தை வடிவமைப்பது எளிதாகிறது. மேலும் சுற்றியுள்ளோர் அனைவரும் ஈழம் தான்  சுயம் என்று இயங்கும் பொழுது,  புதியவர்களுக்கும் அந்த  சுயம் வந்துவிடுகிறது.
  • ஈழம்தான் ஒருவரின் சுயம் என்று ஆனபின், தங்கள் சுயத்தை காக்கவேண்டும் எனில், அவர்கள் ஈழத்தைக் காக்கவேண்டும். அவர்களுக்கு போரில் இறப்பது பெரிய துன்பம் அல்ல. தான் உயிர் துறந்தாலும், ஈழம் வாழ்ந்தால் அந்த சாவும் வாழ்வாகவே அவர்கள் பார்வையில் தெரியும். இவ்வாறு உயிர் பயம் முற்றிலும் போய்விட்டதால், எந்த கொம்பனையும் எதிர்க்கும் வல்லமை பெற்றார்கள். இந்தியா வந்து மிரட்டிய போதும், அவர்கள் குறிக்கோளில் நகரவில்லை. முடிவில் இந்தியாதான் மிரண்டு  ஓடியது.
  • பிரபாகரன் அவர்களே “ஈழக் குறிக்கோளில் இருந்து பின் வாங்கினால் என்னை சுட்டுவிடுங்கள்” என்று கூறியிருக்கிறார்கள். அவர்களின் சுயம் என்பது “ஈழம்” மட்டுமே. அதில்லாமல் அவர்களால் உயிர் வாழமுடியாது.

ஈழ இனவழிப்பின் காரணமாக,  உலகில் பல தமிழர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டார்கள். இதற்குக் காரணம் அவர்களின் சுயத்திலும் ஈழம் ஒரு பாகத்தைக் கொண்டிருக்கிறது. ஈழ அழிப்பு என்பதை தங்களின் ஒரு பாகம் இறந்து போனதாகவே உணர்வர். ஈழத்தை முழுதாக சுயத்தில் உள்வாங்கிய முத்துக்குமார், முருகதாசன் போன்றவர்கள், வாழ்வை   மாய்த்துக் கொண்டார்கள். அதே நேரம் பல தமிழர்கள் “மானாட மயிலாட” பார்த்து இரசித்துக் கொண்டிருந்தார்கள். இதற்குக் காரணம், அவர்களின் சுயத்தில் தமிழர் என்ற அடையாளமோ அல்லது ஈழமோ இல்லை. இது அவர்களின் குற்றமில்லை. குறிப்பாக அவர்கள் வளரும் வயதில் அவர்களுக்கு அமைந்த சூழல்தான் அடிப்படைக் காரணம்.

  1. நடத்தை, விதிகள்:  அதீத  ஒழுக்கத்திற்கும் ஒத்துழைப்பிற்கும் ஏற்றவாறு விதிகளும் பழக்கவழக்கங்களும்  உருவாக்கப்பட்டன

புகைப்பிடித்தல், மது அருந்துதல், பாலியல் ஒழுக்கமின்மை  தடை செய்யப்பட்டது.  உலகிலேயே பாலியல் குற்றச்சாட்டு இல்லாத ஒரே இராணுவம் புலிகள்தான்.

சாதி மத வேறுபாடுகள் களையப்பட்டு அனைவரும் தமிழர்  என்ற உணர்வு கொண்டுவரப்பட்டது. வெவ்வேறு மதத்தினர் ஆனாலும், அனைவருக்கும் மத சார்பற்ற தமிழ்ப்பெயர் வழங்கப்பட்டது. அனைவரும் அண்ணன் தம்பி, அக்காள் தங்கை உறவுமுறை கொண்டு   பெரிய குடும்பமாக ஒற்றுமையாக செயல்பட்டார்கள்.

எதிரிகளிடம் பிடிபடக்கூடாது; அவ்வாறு பிடிபட்டால் சயனைடு அருந்தவேண்டும் என்ற பழக்கம் கொண்டுவரப்பட்டது. உலகில் இதுபோன்ற ஒழுக்கமுள்ள, எதிரிகள் நடுங்கும் ஒரு படை இருந்ததென்றால் அது சப்பானியர்களின் சாமுராய் படைகள்தான். அவர்கள் இரு கத்திகள் வைத்திருப்பார்கள்; பெரிய கத்தி போர் புரிவதற்கென்றும், சிறிய கத்தி எதிரிகளிடம்  பிடிபடாமல் இருப்பதற்காகவும்  மானத்தைக் காப்பதற்காகவும்  வயிற்றைக் கிழித்து தற்கொலை செய்துகொள்ள பயன்படுத்தினார்கள்.  இதுபோன்ற பழக்கம் வீரர்களிடம் மரண பயத்தை முற்றிலும் நீக்கி,  எதிரிகளிடம்  மரண பயத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

  1. இன்பம்:

நீங்கள் நினைக்கலாம், இவ்வளவு ஓர் ஒழுக்கமான இயக்கம் என்றால், அவர்கள் எந்திரம் போல எந்த இன்பமும் இல்லாமல் வாழ்ந்திருப்பார்கள் என்று. இது ஏனென்றால், நாம் பெரிதாக சாதிக்கவேண்டுமென்றால் தியாகம் செய்து துன்பங்களை ஏற்று உழைத்து வெற்றிகொள்ளவேண்டும் என்று நாம் சிந்திக்கிறோம். ஆனால் உண்மை என்னவென்றால், இவ்வுலகில் புதுமையைப் படைத்த எவரும், அவர்கள் செயலில் துன்பம் கண்டு  சாதிக்கவில்லை, மாறாக இன்பம் கொண்டே சாதிக்கின்றனர்.  சிறந்த அறிவியலாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள், ஓவியர்கள், இசை அமைப்பாளர்கள், புலவர்கள்  அனைவரும் அவர்களின் படைப்பில் எல்லையில்லா இன்பம் காண்கிறார்கள், அதனால்தான் அவர்கள் அதிக வெற்றிபெறுகிறார்கள். துன்பப்படும் மனதால் புதுமையைப் படைக்கமுடியாது. இந்த இன்ப நிலையை உளவியலாளர் Mihaly Csikszentmihali  “ஓட்டம்” (flow) என்கிறார் [8]. ஒருவர் தொடர்ந்து கற்று, தன்னை வளர்த்துக்கொண்டு,  புதுமைகளைப் படைக்கும்பொழுது அவர்கள் இந்த ஓட்ட நிலையை அடைகின்றனர்.  அப்பொழுது இன்ப நிலையையே அடைந்து,   காரியத்தில் குறியாக நிற்காமல் தொடர் ஓட்டத்தில் இருப்பர். மற்றவர்களுக்கு அதுபோன்றவர்களை பார்ப்பதற்கு  இயந்திரம் போலத் தெரியலாம், ஆனால் உண்மையில் அவர்கள் அதியுச்ச இன்பநிலையில் இருப்பர். அதனால்தான் அவர்களால் அவ்வாறு செய்ய முடிகிறது.  ஒருவரின் மனதில் ஈடுபாடு இல்லை என்றால், அந்தக் காரியத்தை நீண்ட நேரம் செய்ய இயலாது.

புலிகள் கண்ட இன்பமும்  இதுபோன்ற ஓட்ட நிலையில் கிடைக்கும் இன்பமே. அவர்கள் இயக்கம் ஆரம்பித்ததிலிருந்து படு வேகமாக கற்று, வளர்ந்து, பல வெற்றிகளை ஈட்டி மாபெரும் சாதனைகளைப் படைத்தார்கள். அவர்கள் பெற்ற வெற்றிகளில் உலகத் தமிழர்கள் எல்லாம் துள்ளிக் குதித்தார்கள் என்கிறபொழுது, களத்தில் வெற்றிகண்ட அவர்கள்  எதுமாதிரியான இன்ப நிலையில் இருந்திருப்பார்கள் என்று எண்ணிப் பார்க்கலாம்.

ஈழ இனவழிப்பிற்குப்பின்  இன்றைய  தமிழ்ச்சமூகம் ஒரு துன்பநிலையை அடைந்துள்ளது. இதிலிருந்து மீண்டு இன்ப நிலையை அடைய வேண்டுமானால், புலிகளைப்போல ஒரு ஓட்ட நிலையை நாம் அடையவேண்டும். அதற்கு இன்றைய தேவைக்கேற்ப தொடர்ந்து கற்று, புதுப்புது அமைப்புகளை உருவாக்கி நாம் வளர்ந்து கொண்டே இருக்கவேண்டும். வேறுவழி  இல்லை.

  1. சடங்குகள்:

சடங்குகள் ஒரு சமூகத்தை “நாம்” என்று ஒற்றுமைப்படுத்தி, ஒத்துழைப்பைப் பெருக்கி, எது முக்கியம் என்று உணரவைத்து மக்களை திரள வைக்கிறது[9,10].

“Ritual practices..turn out to be the solution to one of the hardest problems humans face:  cooperation without kinship.” [9]

புலிகள் உருவாக்கிய ஒரு பெரிய சடங்கு மாவீரர் நாள். கார்த்திகை மாதமே  மாவீரர் மாதம் என்றானது. இது  புலிகளையும் மக்களையும் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”  என்று ஒன்றைக் குறிக்கோளில் உணர்வுப்பூர்வமாக இணைத்தது. மக்களுக்கு இது வருடம் ஒருமுறை வரும் சடங்காக இருக்கலாம், ஆனால் புலிகளுக்கு இது தினந்தோறும் நடக்கும் சடங்கு. சடங்குகளின் பலம் என்பது அது உருவாக்கும் உணர்வுகளிலிருந்து வருகிறது.  ஒவ்வொரு புலிவீரன் விதைக்கப்படும் பொழுதும், மற்ற வீரர்களிடம்   குறிக்கோளின் மீதான பற்று மேலும் உறுதியாகிறது..

மனிதனை இயக்குவது அவனது உணர்வுகளே. மனிதனின் பகுத்தறிவு என்பது அவனது உணர்வுகளுக்கு அடிமை என்று உளவியல் ஆராய்ச்சிகள் கூறுகிறது [9]. மக்களை பகுத்தறிவு பேசி ஒன்று திரட்ட முடியாது, அவர்களை உணர்வுகளின் மூலமே ஒன்று திரட்ட முடியும். அந்த உணர்வுகளை உருவாக்குவதில் சடங்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. புலிகளுக்கும் மக்களுக்கும் மாவீரர் சடங்குகள் அந்த உணர்வை அளித்து அவர்களை வீரியமுடன் செயல்பட வைத்தது.

தமிழ்நாட்டில் இன்று பல்வேறு சிக்கல்களைத் தீர்க்க மக்களை ஒன்று கூட்ட முடியாமல் போவதற்கு,   தமிழர் என்ற உணர்வை அளிக்கும்   சடங்குகள் இல்லை என்பது ஒரு முக்கிய காரணம். சாதி மதங்கள் அவர்களுக்கென்று பல சடங்குகள் வைத்திருக்கிறார்கள், அதனால் மக்களை எளிதாக சாதி மதங்களை அடிப்படையாகக் கொண்டு ஒன்று திரட்ட முடிகிறது. தமிழருக்கென்று இருக்கும் ஒரே சடங்கு பொங்கல்தான். அந்த சடங்கு உருவாக்கிய உணர்வினால்தான் மக்கள் சல்லிக்கட்டு போராட்டத்திற்கு வரலாறு காணாத மக்கள் போராட்டம் நடந்தது. மக்கள் சிந்தித்து செயல்படுவதில்லை, உணர்வுகளின் உந்துதலினால் செயல்படுகின்றனர் என்ற உண்மையை உணர்வது முக்கியம். மாவீர்ர் நாளை ஒவ்வொரு தமிழரும் அனுசரிப்பதற்கு வழி செய்யவேண்டும். மேலும் வருடம் முழுவதும் தமிழர் என்ற உணர்வைக் கொண்டுவர மேலும் பலசடங்குகள் உருவாக்கப்படவேண்டும்.  அவ்வாறு செய்தால் மக்களை ஒன்று திரட்டி சிக்கல்களைத் தீர்ப்பது எளிதாகும்.

  1. வரலாற்று சாயல்:

ஒரு தேசத்தின் வரலாறு என்பது ஏதோ பழையது, எந்தவொரு விளைவும் இல்லாதது அன்று.  ஒரு தேசத்தின் இறந்தகால வரலாறுதான்  தேசியத்தின் எதிர்கால வரலாற்றை தீர்மானிக்கிறது. மக்கள்   நிகழ்கால சூழ்நிலையையும், முன்னோர்கள் அவர்களுக்களித்த இறந்தகால வரலாற்றையும் கொண்டே எதிர்காலத்தை படைக்கிறார்கள். முன்னோர்களின் பாரம்பரியம் வாழும் மக்களின் மனதில் ஆழமாக பதிந்து அவர்களை ஆட்டுவிக்கிறது [11, 20].  எப்பொழுது தேசிய இயக்கங்கள் வரலாற்றை சாதகமாகப் பயன்படுத்துகிறதோ, அப்பொழுதே மக்களின் ஆதரவு பெருகும். இதை உலகின் அனைத்து தேசிய இயக்கங்களிலும் காணலாம். மனிதர்களின் உளவியல் அவ்வாறு வடிவமைக்கப் பட்டிருக்கிறது [12].

புலிகள் வரலாற்றின் முழுபலத்தைக் கொண்டு இயக்கத்தை கட்டி எழுப்பினார்கள். அவர்கள் தமிழர் வரலாற்றில் யாரும் படைக்கமுடியாத புதுமைகளைப் படைத்த இயக்கம் என்றாலும், அவர்கள் பழமையின் சாயலில் கட்டி எழுப்பப்பட்ட இயக்கம்:

  • புலி என்பதே சோழர்களிடம் இருந்து வந்தது.
  • உயிர்க்கொடை என்பது வரலாற்றில் “நவகண்டம்” என்பதிலிருந்து வந்தது.
  • வீட்டுக்கு ஒருவர் போருக்கு அனுப்பும் முறை
  • பெண்கள் படைகளில் சேர்ந்து போரிடுவதற்கு, பண்டைய வரலாற்றில் பெண்கள் முறத்தால் புலியை விரட்டிய கதையை உதாரணமாக  எடுத்துக் கொள்ளலாம்.
  • ஒரு வீரத்தாய் கணவனையும், தந்தையையும் போரில் பலிகொடுத்தபின், தனது சிறு மகனையும் போருக்கு அனுப்பி, அவன் மார்பில்  வேல் பாய்ந்து வீரமரணம் அடைவதைக் கண்டு பூரிக்கும் கதை.  இதுபோன்ற வீரத்தாய்கள் ஈழத்தில் ஏராளம்.
  • போரில் இறந்தவர்களுக்கு நடுகல் இட்டு வழிபடுவதை அடிப்படையாக வைத்து துயிலும் இல்லங்கள் கட்டி மாவீரர் நாள் அனுசரிக்கப் பட்டது.

இவ்வாறு வரலாற்றைப் பயன்படுத்தியதனால்தான் புலிகளுக்கு மக்களின் ஆதரவு பெருகி மாபெரும் இயக்கமாக வளர்ந்தார்கள். மேலுள்ள வரலாற்றுப் பயன்பாட்டை நீக்கிவிட்டால்,  புலிகள் இயக்கம் வெற்றி பெற்றிருக்குமா என்பதே ஐயம்தான். ஒருவகையில் புலிகள் இயக்கம் என்பதே பண்டைய தமிழர் வரலாற்றின் மீளுருவாக்கம் என்பதாகவே பார்க்கவேண்டியுள்ளது. இப்பொழுது புலிகள் பண்டைய வரலாற்றை விஞ்சி புதிய வரலாறுகளை படைத்திருக்கிறார்கள்.

நாம் ஒருவகையில் வரலாற்றின் பிடியில் சிக்கி  இருக்கும் கைதிகள். வரலாறு காலத்திற்கு ஏற்ப  நம்மை செதுக்கி வழிநடுத்துகிறது. அவ்வாறான வரலாற்றின் வழிநடத்தலில் செல்லும் இயக்கங்களே எதிர்காலத்திலும் வெற்றி பெரும். ஒன்றை மற்றும் உறுதியாகக் கூறலாம்: எதிர்கால தமிழ்த்தேசிய விடுதலை இயக்கங்கள் புலிகளின் சாயலிலேதான்  கட்டியமைக்கப்படும்; அவர்கள் புலிகளின் சாதனைகளையும் விஞ்சுவார்கள்.

(குறிப்பு: புலிகளின் சாயல் கொண்ட இயக்கம் என்றால், அது கண்டிப்பாக ஆயுத  இயக்கமாக இருக்கவேண்டிய  அவசியம் இல்லை. அதே புலிகள் இயக்கத்தில்தான் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த திலீபனும் இருக்கிறார்.)

  1. சுயநல ஒழிப்பு:

ஒரு சமூகத்தில் கூட்டு ஒத்துழைப்பை  உருவாக்குவது  என்பது அவ்வளவு எளிதல்ல. இதுவரை பார்த்த  பல்வேறு உளவியல் மற்றும் ஒழுக்க விதிகளைப் பின்பற்றியே மக்களை ஒத்துழைக்க வைக்க முடிகிறது. இவ்வளவு செய்தும்  அந்த ஒத்துழைப்பு நிரந்தரமல்ல. அது எப்பொழுதும்  எளிதில் சிதையும்  அபாயத்திலேயே இருக்கிறது [13].

இந்த ஒத்துழைப்பு சிக்கல் மனித சமூகத்திற்கு மட்டும் இருப்பதல்ல. இது பரிணாம வளர்ச்சி ஆரம்பித்த காலத்திலிருந்து அனைத்து உயிர்களுக்கும் இருக்கிறது. நமது உடலில் கோடிக்கணக்கான செல்கள் ஒத்துழைத்து வேலை செய்வதால்தான் நாம் உயிரோடிக்கிறோம். ஒரே ஒரு செல் ஒத்துழைக்காமல் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா? அதுதான் புற்றுநோய் என்பது. அது குட்டிப்போட்டு பல்கிப் பெருகி நம்மைக் கொன்றுவிடுகிறது. அதற்குத் தீர்வு  புற்றுநோய் கொண்ட செல்களைக் கொல்லவேண்டும்,  இல்லை அவ்வுறுப்பை அறுத்தெறியவேண்டும். நமது உடல்களில் உள்ள ஒவ்வொரு செல்லும் தன்னை சுற்றியுள்ள செல்களைக் கண்காணிக்கும். ஏதாவது ஒரு செல் ஒழுங்காக வேலை செய்யவில்லை எனில், அதை சுற்றியுள்ள செல்கள் கொன்றுவிடுகிறது (Apoptosis). சிலநேரம் புற்றுசெல்கள் இதிலிருந்து தப்பித்துவிடுவதால்தான் புற்றுநோய் ஏற்படுகிறது. மனித சமூகமும் இதுபோன்ற நிலையிலேயே இருக்கிறது. ஒருவர் சுயநலத்துடன் செயல்பட்டால், அந்த சுயநலம் மற்றவர்களிடம் புற்றுநோய் மாதிரி பரவ ஆரம்பிக்கிறது. முடிவில் அது முழு சமூகத்தையும் விழுங்கிவிடுகிறது.

புலிகள் ஓர் அதி ஒத்துழைப்பான இயக்கத்தைக் கட்டி எழுப்பினாலும், அதில் சுயநலத்தை ஆரம்பத்திலேயே கிள்ளி எறியவேண்டும். இல்லையென்றால் அது இயக்கத்தை விரைவில் வலுவிழக்கச்செய்யும். இதை பிரபாகரன் அவர்கள் மிகநன்றாகவே உணர்ந்தவர். அவருக்கு இருந்த அதிகாரத்தைக் கொண்டு தன் மூன்று பிள்ளைகளில் ஒருவரையாவது வெளிநாட்டில் தப்பிக்க வைத்திருக்க முடியும். ஏன் செய்யவில்லை? ஏனென்றால் அதுதான் இயக்கத்தில் தோன்றும் புற்றுநோய்க்கு ஆரம்பமாக இருந்திருக்கும். அவரின் நேர்மை கேள்விக்குள்ளாகும், மற்றவர்களுக்கும் சுயநலம் தலைதூக்கும், பின்பு இயக்கம் அழிவதற்கு எதிரிகூடத் தேவையில்லை.  ஒத்துழைப்பை உருவாக்குவது கடினமானது, அதைப் பேணிக்காப்பது அதைவிட கடினமானது.  ஒத்துழைப்பை தொடர் கண்காணிப்பின் மூலமே காக்கமுடியும். ஒத்துழைக்காதவர்களை  ஓர்  அமைப்பில் இருந்து வெளியேற்றாவிட்டால், அந்த அமைப்பு வெகுவிரைவில் புற்றுநோய் பிடித்து செயல் இழக்கும்.

புலிகள் பல சாதனைகளைப் படைத்ததற்கு இறுதிவரை அந்த ஒத்துழைப்பை இயக்கத்தில் பேணியதே காரணம். ஒரு கேள்வி எழலாம்: ஏன் இயக்கம் இறுதியில் பிளவுண்டது? எனது அனுமானம் என்னவென்றால் போர் நிறுத்தம் புலிப்பண்பாடு கொண்ட புலிகளையும்  நண்டுப்பண்பாடு கொண்டவர்களையும் பொதுவில் கலந்தது. இந்த கலப்புதான் இயக்கத்தில்  சிலருக்கு  சுயநல புற்றுநோயை உருவாக்கி இயக்கத்தை பிளவுபடுத்தியது. ஒரு புலியைச் சுற்றி நண்டுகளாக இருந்தால், அந்த புலியும் நண்டாக மாறும் வாய்ப்புகள் அதிகம். அதுதான் நடந்தது.

என்னுடைய பார்வையில் இதுவரை பார்த்த ஏழு செயல்பாடுகள்தான் புலிகளை ஒரு பலம் வாய்ந்த இயக்கமாகக் கட்டி எழுப்புவதற்கு அடித்தளமிட்டது. இவை  எனக்குத் தெரிந்தவை மட்டுமே. புலிகளின் முழு செயல்பாடுகளை ஆழமாக ஆராய்வதின்  மூலமே நாம் மேலும் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்.  நீங்கள் கூர்ந்து கவனித்தால் ஒன்றை உணரலாம். இந்த ஏழும் தனித்து நிற்பவை அல்ல; அவை ஒன்றை ஒன்று வலுப்படுத்தி சேர்ந்து இயங்கும்  ஒரு நெறி முறை (moral system), இதில் ஒன்று செயலிழந்தாலும் இயக்கம் பெரிதாக பாதிக்கப்படும்.

Moral systems are interlocking sets of values, virtues, norms, practices, identities, institutions, technologies, and evolved psychological mechanisms that work together to suppress or regulate self-interest and make cooperative societies possible. [9]

பிரபாகரன் அவர்கள் மாபெரும் படைத் தலைவர், இராணுவ உத்திகளில் சிகரம் தொட்டவர், இரண்டு நாட்டு இராணுவங்களை பலமுறை தன்னந்தனியாக எதிர்த்து  தோற்கடித்தவர் என்பது உலகறிந்தது. ஆனால் அவரின் இன்னொரு மாபெரும் சாதனை கண்டு கொள்ளப்படவில்லை. அதுதான் அவரின் அனைத்து வெற்றிகளுக்கும் அடிப்படையாக இருந்த புலிப் பண்பாடு.  .

பண்பாடு என்பது இராணுவ அமைப்புகளுக்கும் மட்டுமல்ல, மனிதர்களை உள்ளடக்கிய எந்த ஒரு சமூக அமைப்பிற்கும்  முக்கியமானது. ஒரு அமைப்பின் பண்பாடுதான் அந்த அமைப்பின் வெற்றிக்கு அடித்தளமிடுவது. எந்த ஓர் அமைப்பிலும்  மிகப்பெரிய மாற்றத்தைக்  கொண்டுவர நினைப்பவர்கள் முதலில் மாற்றுவது பண்பாட்டைத்தான்.  அவ்வாறான  பண்பாடு மாற்றம் மூலமே மக்களிடமுள்ள  முழு ஆற்றலை வெளிக்கொணர முடியும்.

Greatest shapers don’t stop at introducing originality into the world; they create cultures that unleash the originality in others – Adam Grant [14]

பிரபாகரன் அவ்வாறான ஒரு புலிப்பண்பாட்டை உருவாக்கியே, நண்டுகளை எடுத்து உலகம் வியக்கும் புலிகளாக மாற்றிக்காட்டினார். இதுதான் அவர் படைத்த புதுமைகளில் ஒரு  முக்கியமான புதுமை.

அடுத்து என்ன?

இறுதிப் போருக்குப்பின் நடந்த ஈழம் சார்ந்த போராட்டங்கள் விரல்விட்டு என்னும் அளவிலேயே இருக்கிறது. “ஒரு அடியிலேயே எதிரியை மட்டுமல்ல உலகத்தையே கிடுகிடுக்க வைத்த ஒரு இனத்தின் போராட்டம் எவ்வளவு வேகமாக தன்னை உள்ளிழுத்துக் கொண்டுள்ளது” என்று ஆய்வாளர் பரணி கிருஷ்ணராஜனி குறிப்பிட்டிருந்தார் [6]. புலிகளால் கிடுகிடுவென வளர்ந்து மாபெரும்  சாதனைகளை நிகழ்த்த முடிந்தது, ஆனால் அதே தமிழினத்தால் புலிகள் சாதித்ததில் ஒரு சதம் கூட பத்தாண்டுகளில் செய்யமுடியவில்லை. இதற்கு அடிப்படைக் காரணம்  என்னவென்றால் புலிகளுடன் 2009-இல் புலிப்பண்பாடும் அழிந்தது. இன்று இருப்பது நண்டுப்பண்பாடு மட்டுமே. இதற்கு எந்த ஒரு தனிமனிதனும் காரணம் அல்ல. பிழை பண்பாட்டில்தான் உள்ளது.

இன்றைய தமிழ்ச்சமூகம் ஓர் ஒத்துழைப்பற்ற சுயநல நண்டுச் சமூகம். இதை  வைத்துக்கொண்டு ஓர் உருப்படியான  உள்ளூர் ஆட்சி செய்யும்  அமைப்பைக்கூட உருவாக்கமுடியாது. இதிலிருந்து தப்பிப்பிழைக்க ஒரே வழிதான் இருக்கிறது. அதிலிருந்து விலகி ஓர் அதி ஒத்துழைப்பான புலிப்பண்பாட்டு சமூகத்தை உருவாக்கி, சிறிது சிறிதாக நண்டுகளைப் புலிகளாக மாற்றி முழுச் சமூகத்தையும் புலிப்பண்பாட்டில் கொண்டு வருவதே வழி.  அவ்வாறுதான் புலிகள் சிறு குழுவாக இருந்து மாபெரும் இயக்கமாக வளர்ந்தார்கள்.  நபிகள்  ஆரம்பித்த சிறிய குழு உலகலாவப் பரவி மாபெரும் நாகரீகமாக  மாறியதும் இவ்வாறே [15]. கிறித்தவமும் அவ்வாறே முழு ரோமப் பேரரசை விழுங்கியது [16]. அவை அதி ஒத்துழைப்பான சமூகங்களாக இருந்ததனால்தான் இது சாத்தியமானது.  ஆனால் ஒரு முக்கிய வித்தியாசம் என்னவென்றால்,  புலிகள் உருவாக்கிய பண்பாடு மற்ற அனைத்தையும் விழுங்கும் மதசார்பற்ற அதியுயர் ஒத்துழைப்பு பண்பாடு, இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்குத் தேவையான பண்பாடு  (மதசார்பற்ற என்றால் கடவுள் மறுப்பு  அல்ல, அனைத்து நம்பிக்கைகளையும் உள்ளடக்கியது ).   புலிகள் இராணுவ உத்திகளில் உலகில் முன்னோடிகளாக இருந்தார்கள். புலிப்பண்பாட்டை உள்வாங்கிய தமிழ்ச்சமூகம் உலகின் அனைத்து துறைகளிலும் முன்னோடியாக இருக்கும். மொத்தத்தில் அனைத்திலும் புலியாக இருப்பார்கள். நோபல் பரிசுகளில் யூதர்களை விஞ்சினாலும் ஆச்சரியமில்லை. அனைத்திற்கும் தேவையானது ஒழுக்கம், அதில் புலிப்பண்பாட்டை யாரும் விஞ்சமுடியாது.

புலிகள் புலிப்பண்பாட்டை  ஒரு இராணுவ அமைப்பிற்கு உருவாக்கினார்கள். ஆனால் அதை பொதுச் சமூகத்திற்கு ஏற்ப மாற்றுவது என்பது கடினமான வேலை இல்லை. எதிரிகளை கிடுகிடுக்க வைத்த புலிப்பண்பாட்டால் ஒன்றுக்கும் உதவாத நண்டுபண்பாட்டை ஒழித்து மக்களை புலிப் பண்பாட்டிற்குள் இழுப்பது என்பது ஒரு கடினமான காரியமே இல்லை. அதுவும் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான  மக்கள் தொகையினர் புலிகளை தெய்வங்களாக பார்க்கும்பொழுது, இது செய்து முடிக்கக்கூடிய காரியமே.  மக்கள் நண்டுப்பண்பாட்டில் வேறு வழி இல்லாமல்தான்  இருக்கிறார்கள். ஓர் அதி ஒத்துழைப்பான மாற்று பண்பாடு இருந்தால், அவர்கள் தாமாக முன்வந்து இணைவார்கள். அவ்வாறுதான் புலிப்பண்பாடு முழு சமூகத்தையும் விழுங்கவேண்டும். அவ்வாறுதான் ஒத்துழைப்பைப் பெருக்கும்  மதங்களும் வளர்ந்தன. பரிணாமம் என்பது போட்டி மட்டுமல்ல, ஒத்துழைப்பும் சேர்ந்ததுதான் [19]. எந்த பண்பாடு நன்றாக ஒத்துழைப்பைப் பெருக்கி பலம் பெறுகிறதோ, அவை பரிணாமப் போட்டியில் வெல்கின்றன.

இது போன்ற பண்பாட்டு மாற்றத்திற்கு ஒரு நல்ல உதாரணம் சப்பானியர்கள்தான். அன்றைய சப்பான் பல வர்க்க வேறுபாடுகளுடன் ஒருவித சாதிக் கட்டமைப்புடன் இருந்தது. படை வீரர்களான சாமுராய்கள் சமூகத்தில் உயர்நிலையில் இருந்தனர்.  இது நவீன சப்பானை உருவாக்க பெரிய தடங்கலாக இருந்தது. வர்க்க வேறுபாடுகளை ஒழித்து நவீன சப்பான் கட்டி அமைக்கப்பட்டது என்று ஏற்கனவே பாடம்-1 -இல் பார்த்தோம் [17]. சாமுராய்கள் ஒழிக்கப்பட்டாலும், சாமுராய்களின் ஒழுக்கமும் பண்பாடும் ஒழிக்கப்படவில்லை. மாறாக அதை முழு சப்பானிய சமூகமும் உள்வாங்கிக்கொண்டது. இப்பொழுது உள்ளவர்களிடம் இரண்டு கத்திகள் இல்லை, ஆனால் ஒவ்வொருவரின் உள்ளுக்குள் ஒரு சாமுராய் இருக்கிறார். உதாரணாமாக ஆழமான அறிவியல் கருத்துக்களை கொண்ட ஒரு சப்பானியரை உற்று நோக்கினால், அவருக்குள் ஒரு சாமுராய் தெரிவார் என்கிறார் நிடோபே. இவ்வாறு அவர்கள் சாமுராய்களின் ஒழுக்கத்தை உள்வாங்காவிட்டால்,  நவீன சப்பான் உருவாகி இருக்குமா என்பது சந்தேகமே.

Scratch a Japanese of the most advanced ideas, and he will show a samurai.[18]

அதேபோல இரண்டாம் உலகப்போரில் சப்பான் சரணடையும் நிலை ஏற்பட்டபொழுது, சரணடைவதில் விருப்பமில்லாத இராணுவ உயர் அதிகாரிகள் சாமுராய்களைப் போல தங்கள் வயிற்றைக் கிழித்து வீரமரணம் அடைந்தனர் [21]. சாமுராய்களின் பண்பாடுதான் அவர்களை இன்றும் உள்ளிருந்து இயக்குகிறது.

ஒரு சமூகம் தனக்கு அளிக்கப்பட வரலாற்றைக் கொண்டே அடுத்த கட்டத்திற்கு நகரும் [11,12]. இதை உலகில் அனைத்து  நாடுகளின் வரலாற்றிலும் காணலாம். தமிழினத்திற்கு புலிகளின் வரலாறு கிடைத்துள்ளது. இதை நிராகரித்துவிட்டு சமூகம் எதையும் செய்யமுடியாது. தமிழ்த்தேசியம்  புலிகளை உள்வாங்கியே அடுத்த கட்டத்திற்கு நகரமுடியும்.   ஆனால் எதிரிகளுக்கு இது நன்றாகவேத் தெரியும். அதனால்தான்  எதிரிகள் எப்படியாவது புலிகளின் வரலாற்றை தமிழர்களிடமிருந்து மறைத்து அழித்துவிடவேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறார்கள்.

சப்பானியர்கள் எப்படி சாமுராய்களின் பண்பாட்டை  உள்வாங்கி அனைவரும் சாமுராய்கள் ஆனோர்களோ, அதுபோல தமிழர்கள் அனைவரும் புலிப்பண்பாட்டை  உள்வாங்கி புலிகளாக மாற வேண்டும். அதுதான் தமிழ்த்தேசியத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு பலமான அடித்தளமாக அமையும். புலிகளை அழித்து விட்டோம் என்று கொக்கரிக்கும் எதிரிகளுக்கும்,  பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டோம் என்று ஒரு விடுதலை இயக்கத்தைக் கொச்சைப் படுத்துவோருக்கும்,  முழுச்சமூகமும் புலிகளாக மாறி நிற்பதுதான் சரியான பதிலாக அமையும்.

பி.கு 1: உங்கள் கருத்தை கீழே கருத்துப் பகுதியில் தெரிவித்தால் உதவியாக இருக்கும்

பி.கு.2: புலிகள் எந்த தவறும் செய்யாத இயக்கம் என்று நான் கூறவில்லை. இதை ஒவ்வொரு கட்டுரையிலும் தெளிவு படுத்தியே வருகிறேன். அவர்களிடம் இருந்து என்ன கற்கலாம் என்பதுதான் எனது கட்டுரைகளின் நோக்கம்.

 

உசாத்துணை:

  1. Strategy, Liddel Hart
  2. Hudson, Rex A. “The sociology and psychology of terrorism: Who becomes a terrorist and why?.” Library of Congress Washington Dc Federal Research Div, 1999.
  3. Kruglanski, Arie W., et al. “The psychology of radicalization and deradicalization: How significance quest impacts violent extremism.” Political Psychology 35 (2014): 69-93.
  4. Battle, Stephen L. Lessons in Legitimacy: The LTTE End-Game of 2007-2009. NAVAL POSTGRADUATE SCHOOL MONTEREY CA DEFENSE ANALYSIS DEPT, 2010.
  5. பரணி கிருஷ்ணரஜனி, https://www.facebook.com/parani.krishnarajani/posts/2321748251211367
  6. பரணி கிருஷ்ணரஜனி , தமிழின அழிப்பு / பத்து வருடங்கள் / எதிர்ப்பு அரசியல் https://www.facebook.com/parani.krishnarajani/posts/2337911159595076
  7. Richerson, Peter J., and Robert Boyd. Not by genes alone: How culture transformed human evolution. University of Chicago press, 2008.
  8. Csikszentmihalyi, Mihaly. “The evolving self.” (1994).
  9. Haidt, Jonathan. The righteous mind: Why good people are divided by politics and religion. Vintage, 2012.
  10. Rappaport, Roy A. Ritual and Religion in the Making of Humanity. Vol. 110. Cambridge University Press, 1999.
  11. Smith, Anthony, and Anthony D. Smith. Nationalism and modernism. Routledge, 2013.
  12. Kaufman, Stuart J. Nationalist passions. Cornell University Press, 2015.
  13. Nowak, Martin, and Roger Highfield. Supercooperators: Altruism, evolution, and why we need each other to succeed. Simon and Schuster, 2011.
  14. Grant, Adam. Originals: How non-conformists move the world. Penguin, 2017.
  15. Wright, Robert. The evolution of God: The origins of our beliefs. Hachette UK, 2010.
  16. Stark, Rodney. The triumph of Christianity: How the Jesus movement became the world’s largest religion. Harper Collins, 2011.
  17. சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் –  பகுதி 1
  18. Nitobe, Inazō. Bushido, The soul of Japan: An exposition of Japanese thought. GP Putnams̓ sons, 1905.
  19. Wright, Robert. Nonzero: The logic of human destiny. Vintage, 2001.
  20. சு. சேது, பண்பாட்டுத் தளத்தில் தமிழ்த் தேசிய வேர்கள்
  21. Seppukku Suicide, Encyclopaedia Britannica, https://www.britannica.com/topic/seppuku
  22. Pentland, Alex. Social physics: How good ideas spread-the lessons from a new science. Penguin, 2014.
  23. Vogl, Charles. The art of community: Seven principles for belonging. Berrett-Koehler Publishers, 2016.

 

This entry was posted in அரசியல், ஈழப்போர், ஈழம், தமிழ்த்தேசியம், Uncategorized. Bookmark the permalink.

14 Responses to ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 4

  1. Pingback: தமிழர்களின் 'நண்டுப் பண்பாட்டை' நீக்கி 'புலிப் பண்பாட்டை' உருவகித்த தலைவர் பிரபாகரன். | வ

  2. Pingback: தமிழர்களின் நண்டுப் பண்பாட்டை நீக்கி ‘புலிப் பண்பாட்டை’ உருவகித்த தலைவர் பிரபாகரன். | EelamView

  3. Pingback: தெர்மாப்பிளையும் நந்திக்கடலும் | Sethu's Blog

  4. Pingback: தெர்மாப்பிளையும் நந்திக்கடலும் ! | EelamView

  5. Pingback: ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 5 | Sethu's Blog

  6. Pingback: தமிழர்களின் நண்டுப் பண்பாட்டை நீக்கி ‘புலிப் பண்பாட்டை’ உருவகித்த தலைவர் பிரபாகரன். « Velupillai Prab

  7. Pingback: ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 5 | EelamView

  8. Pingback: நந்திக்கடல் / பத்தாண்டுகள். மீள் பதிவு 04. | வெளிச்சவீடு

  9. Pingback: ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 7 – இறுதி பாகம் | Sethu's Blog

  10. Pingback: புலிப் பண்பாடு. | வெளிச்சவீடு

  11. Pingback: குழுக்களின் குழு: தமிழ்தேசியத்திற்கான ஒரு மறுசீரமைப்பு – அறிவுக்கடல்

  12. Pingback: பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவம் | Sethu's Blog

  13. Pingback: பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவம் ! | EelamView

  14. Pingback: மாவீரர்களின் அர்த்தமுள்ள வாழ்க்கை | Sethu's Blog

Leave a comment