ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 5

பாடம் 5: சிக்கனமாக இயங்கி வாய்ப்புகளைப் பெருக்கும் இயக்கமே வெற்றி பெரும்

ஒரு லிட்டர்  தேனைக் கொண்டு  ஒரு தேனீ உலகை பலமுறை சுற்றி  வந்துவிடும். மனிதமூளை மிகக்குறைந்த அளவு சக்தியைக் கொண்டு,  பல கணிப்புகளில் பலமடங்கு அதிக சக்தியை உள்வாங்கும் கணினியைவிட வேகமாகவும் சிறப்பாகவும் கணிக்கிறது. இத்தனைக்கும் தேனீயையோ மனிதனையே யாரும் திட்டமிட்டு உருவாக்கவில்லை. இதற்கு அடிப்படைக்காரணம் பரிணாமம்தான். பரிணாமப் போட்டியில் யார் சக்தியை சிக்கனமாகப் (Efficient) பயன்படுத்துகிறார்களோ  அவர்கள் வெல்வதற்கு வாய்ப்புகள் கூடுகிறது. ஈழப்போரில் புலிகளின் பொருளாதார பலம் சிங்களத்தைவிட பலமடங்கு குறைவாக இருந்தும், அவர்களை பலமுறை தோற்கடித்து வெற்றிகண்டத்திற்கு புலிகளின் சிக்கனம் முக்கிய காரணம். இறுதிப்போரில் புலிகளின் பொருளாதாரம் உலகத்தால் பெரும்பாலும் முடக்கப்பட்டதால்தான் அவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. முடிவில் ஓர் அமைப்பின் அல்லது உயிரின் வெற்றிக்கு அடிப்படையாக இருப்பது அவ்வமைப்பின் உபயோக ஆற்றல்.

உபயோக ஆற்றல் = சிக்கனம் * கிடைக்கும் ஆற்றல்

உதாரணமாக ஓர் இயந்திரம் 60% சிக்கனமாக 100 வாட்சு ஆற்றலைப் பயன்படுத்தினால், அதன் உபயோக ஆற்றல் 60 வாட்சு. மீதம் 40 வாட்சு வீணடிக்கப்பட்டது..

ஓர் அமைப்பு வெற்றி பெற சிக்கனமாகவும் இருக்கவேண்டும், அதன் பொருளாதாரத்தையும் வளர்த்துக்கொண்டே இருக்கவேண்டும்.  உலகில் ஒரு  நாட்டின் ஆற்றல் உபயோகத்தை வைத்தே, அதன் பலத்தை கணக்கிட்டு விடலாம். இது ஏனென்றால் வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதிதான் (Second Law of thermodynamics) பரிணாமத்திற்கே அடிப்படையானது. இதைப் பற்றிய விளக்கத்திற்கு நான் எழுதிய இன்னொரு கட்டுரையைப் பார்க்கவும்[16].

“Winning Darwin’s game happens to be about dissipating more than your competitor.”  [1]

பரிணாமப் போட்டியில் வெல்ல எதிரியைவிட அதிக ஆற்றலை சிக்கனமாக பயன்படுத்தவேண்டும். அதை எப்படிச் செய்வது?  இரண்டாம் விதியிலிருந்து வரும் இன்னொரு முக்கிய கருத்து என்னவென்றால் ஆற்றலுக்கும் அறிவுக்கும் உள்ள நேரடித் தொடர்பு. உதாரணமாக உங்களுக்கு பங்குச்சந்தையில் எந்த பங்குகள் நாளை உயரும் என்று உங்களால் சரியாகக் கணிக்க முடிந்தால், அந்தத் தகவலைப் பணமாக (ஆற்றலாக) மாற்றிவிடலாம். நாம் பள்ளிகளில் போட்டிபோட்டு பிள்ளைகளைக் கற்கவைப்பதற்குக் காரணமும் இந்த அறிவுக்கும் ஆற்றலுக்கும் உள்ள தொடர்புதான். இந்தத் தொடர்பினால் பல அறிவியலாளர்கள் “தக்கது எஞ்சும்” என்ற டார்வினின் தத்துவத்தை “அறிவுடையது எஞ்சும்” என்று மாற்றிக் கூறுகின்றனர்.

“The old Darwinian view of survival of the fittest is now being cast aside in some quarters in favor of the new view of survival of the best informed.” – Jeremy Rifkin [2]

உலகில் முன்னேறிய நாடுகள் அறிவிலும் முன்னேறி இருப்பதற்கு இதுதான் காரணம். அறிவு இல்லாமல் இவ்வுலகில் எதிலும் முன்னேற்றம் ஏற்படமுடியாது. ஒரு வாழ்வின் உயிருக்கும்  அறிவுதான் அடிப்படையானது.

புலிகள் கிடைக்கும் ஆற்றலை மிகச்சிக்கனமாக பயன்படுத்தியதினால்தான், பலமடங்கு  பொருளாதார பலம்  வாய்ந்த சிங்களத்தை பலமுறை புலிகளால் விரட்ட முடிந்தது. புலிகள் எவ்வாறு சிக்கனமாக செயல்பட முடிந்தது,  அவர்கள் அதற்கு எவ்வாறு அறிவைப் பயன்படுத்தினார்கள், அதற்கு எது மாதிரியான உத்திகள் பயன்படுத்தப்பட்டன, அதிலிருந்து தமிழ்த்தேசியம் என்ன கற்கலாம் என்று ஆராய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.  புலிகளின் பொருளாதாரம் இக்கட்டுரையின் நோக்கமில்லை.

chickenPuzzle

ஒரு பக்கம் திறந்த ஆனால் மூன்று பக்கம் கண்ணாடி சுவர்களால் கட்டப்பட்ட ஒரு அறையில் ஒரு கோழியை விட்டு, அதற்கான உணவை கண்ணாடிக்கு  அந்தப்பக்கம்  வெளியே வைத்தால் அந்த கோழி என்ன செய்யும்? அது கண்ணாடி சுவற்றை முட்டிக்கொண்டு வலதும்  இடதுமாக நடந்து கொண்டிருக்கும். முன்னால் இருக்கும் இலக்கை அடைய அது பின்னோக்கி சென்று சுற்றி அடையவேண்டும். ஆனால் கோழிக்கு இது முடியாத காரியம்.  இந்த இரு அச்சு  சிக்கலை (இடது-வலம், முன்-பின்) நமது  நான்கு வயது குழந்தை  எளிதில் தீர்த்துவிடும், ஆனால்  உணவுக்குப் பதிலாக பொம்மையை வைக்கவேண்டும் என்பது வேறு விடயம் [3].

உத்திகளில் ஓர் அடிப்படைத் தத்துவம் என்னவென்றால், சடுதியான  வெற்றிக்கானப் பாதை என்பது  இவ்வாறு சுற்றிவரும் நீண்ட பாதையாகவே இருக்கும்[6]. நேரான பாதை எதிரிக்கு நன்றாகவேத் தெரியும், அதை மறித்துதான் நின்றுகொண்டிருப்பான். நம்மால் இரு அச்சு சிக்கலை எளிதாகத் தீர்த்துவிடுவோம், ஆனால் மனித சமூகம் எதிர்நோக்கும் சிக்கல்கள் பல-அச்சுக்களைக் கொண்டது.  அவ்வாறான  சிக்கல்களை எதிர்நோக்கும் பொழுது, எளிதான பாதையை கண்டுபிடிக்க முடியாமல் நாம் கோழியைப் போல முட்டிக்கொண்டு நிற்போம். உதாரணமாக ஈழம் அடைய என்ன செய்யவேண்டும் என்றால், இதுதான் என்று ஒன்றை சொல்லிவிட முடியாது. பல செயல்பாடுகளை செய்யவேண்டும், ஒரே நேரத்தில் வெவ்வேறு அளவில் செய்யவேண்டும், காலத்திற்கேற்ப, எதிரிகளின் நடவடிக்கைக் கேற்ப உத்திகளும் மாறிக்கொண்டே இருக்கவேண்டும்.   வெற்றிக்கான பாதையை முன்பே அறியமுடியாது. அந்தப்பாதையை பல-அச்சுகளைக் கொண்ட  உத்திகளில் ஒவ்வொரு எளிதான அடியாக எடுத்துவைத்து பரிணமித்துதான்  அடையவேண்டும்.

இதை  விளக்குவதற்கு நல்ல உதாரணம் சதுரங்க ஆட்டம்தான்.  ஒரு ஆட்டக்காரர் முதலிலேயே இப்படித்தான் வெற்றியடைவேன் என்று முழுதாக திட்டம் தீட்ட முடியாது. எந்த ஒரு திட்டமும் எதிரியின் ஒரு சில  நகர்வுகளிலேயே  மாறிவிடும்.  ஆட்டம் என்பது 16-அச்சுகள் (16-காய்கள்) கொண்ட சிக்கல். இந்த 16-காய்களை புத்திசாலித்தனமாக நகர்த்தி வெற்றிகொள்ளவேண்டும். அதை ஒவ்வொரு நகர்த்தலாக செய்துதான் வெற்றிக்கான பாதையை பரிணமித்து அடையமுடியும். இங்கு முக்கியமான கேள்வி ஒவ்வொரு நகர்த்தலையும் தீர்மானிக்கும் உத்தி என்ன என்பதுதான்.

இதற்கான விடை: எந்த நகர்த்தல் எதிர்கால நகர்த்தலுக்கு  அதிக வாய்ப்புகளை அளிக்கிறதோ, அதுதான் வெற்றிக்கான நகர்த்தல்[4]. அடிப்படையில்  வெற்றியைத் தீர்மானிப்பது வாய்ப்புகளின் எண்ணிக்கையே. இதை ஏற்கனவே பாகம்-3 -இல் பார்த்திருந்தோம் [5]. இதுதான் உத்திகளின் மையக்கருத்து.

மேலும் இது  புத்திசாலித்தனம் என்ன என்பதற்கே விளக்கம் அளிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்:

“Intelligence should be viewed as a physical process that tries to maximize future freedom of action and avoid constraints in its own future.” [4]

சதுரங்க ஆட்டத்திற்கும் சமூக அரசியல் ஆட்டத்திற்கும் சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன:

 1. விளையாட்டின் விதிகளை சுற்றுச்சூழல் தீர்மானிக்கிறது. அந்த சூழல் காலத்திற்கு ஏற்ப மாறுவதானால் விதிகளும் மாறிக்கொண்டே இருக்கும். உதாரணமாக 2001-இல் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப்பின் விடுதலை இயக்கங்களுக்கு எதிராக உலக விதிகள் மாறி  புலிகளை  வெகுவாக பாதித்தது. மேலும் ஆட்டத்தில் உள்ளவர் அனைவருக்கும் ஒரே விதிகள் என்பதல்ல,  பாரபட்சமாகவும் இருக்கும்.  உதாரணமாக இறையாண்மை உள்ள அரசுக்கு ஒரு விதிகளும், எதிர்த்து போரிடும் இயக்கங்களுக்கு ஒரு விதிகளும் இருக்கும். அதுவும் தெளிவாக எழுதத்தப்படாமல்தான் இருக்கும்.
 1. ஆட்டத்தில் எது மாதிரியான காய்கள் பயன்படுத்துப் படுகின்றன என்பது அவரவர் பொருளாதாரத்தையும் உத்திகளையும் சார்ந்தது. காய்களை ஆட்டத்தில் உள்ளவர்களே உருவாக்கவேண்டும்.
 1. ஆட்டம் இருவருக்கு இடையேயானது அல்ல. ஒவ்வொரு அணியிலும் பலபேர் பல காய்களை ஒரே நேரத்தில் நகர்த்துவார்கள். ஆட்டத்தில் பல அணிகள் ஒரேநேரத்தில் விளையாடும். ஈழ விவகாரத்தில் புலிகள், சிங்களம், இந்தியா என்று மூன்று தரப்பும் விளையாடின. அதுபோக பல அணிகள் வெளியிலிருந்து வேறு உதவிகள் புரிந்தன.
 2. ஆட்டத்தின் கள நிலவரத்தை ஒருவரால் பார்த்து புரிந்து கொள்ள முடியாத அளவு சிக்கலான விளையாட்டு இது. எதிரிகளின் உத்திகளும் காய்களும் மறைக்கப்பட்டிருக்கும்.  எந்த அணியில் வெவ்வேறு  விதமாக சிந்திக்கும் அறிவுள்ளவர்கள் இருக்கிறார்களோ, அந்த அணியே திறமை மிக்க அணி [15]. அனைவரும் ஒரே மாதிரி சிந்திப்பவர்களாக இருந்தால், அவர்களால் கள நிலவரத்தை சரியாகப் புரிந்துகொள்ள முடியாது.
 1. எந்த அணி அதிக எண்ணிக்கையிலான வெவ்வேறு  காய்களை உருவாக்கி இணைந்து நகர்த்தி ஆடுகிறார்களோ, அவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். ஒரே ஒரு காயை உருவாக்கி நகர்த்தி வெற்றிகொள்ள நினைப்பது, சதுரங்க ஆட்டத்தில் முதன் முதலில் ஆடுபவர் ஒரே ஒரு சிப்பாயை மட்டுமே முன்னகர்த்தி எதிரி அரசனைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும். அது சிறுபிள்ளைத் தனமானது.

மொத்தத்தில் எந்த அணி இருக்கும் பொருளாதாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தி பல்வேறு காய்களை உருவாக்கி ஒத்துழைத்து ஒவ்வொரு அடியாக வாய்ப்புகளைப் பெருக்கி விளையாடுகிறதோ, அதற்குத்தான் வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம். அப்படி திறம்பட விளையாடினாலும் வெற்றி உறுதி  என்று சொல்ல முடியாது. எந்த நேரமும் ஒரு விபத்தினால் சில காய்களை இழக்கலாம்  அல்லது விதிகள் மாற்றப்பட்டு பின்னடைவு ஏற்படலாம். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன்தான் இந்த விளையாட்டை ஆட முடியும். உறுதியான வெற்றி என்பதற்கான திட்டம் யாரிடமும் இல்லை. திறமையானவர், நேர்மையானவர் அல்லது உண்மையானவர்   வெற்றி பெறுவார் என்று எந்த உறுதியும் இல்லாத ஆட்டம் இது. வெற்றி என்பது நிகழ்தகவாக (probability) மட்டுமே கூற முடியும், உறுதியாகக் கூற முடியாது.

இங்கே சிக்கனம் எங்கே வருகிறது என்ற கேள்வி எழும். சமூக சிக்கல்கள் என்பது பல-அச்சு உத்திகளைக் கொண்ட சிக்கல். ஆனால் நாம் விரும்பும் அனைத்து உத்திகளையும் பயன்படுத்த நமக்கு பொருளாதாரம் இருக்கப்போவதில்லை. இருக்கும் பொருளாதாரத்தை வைத்து சிக்கனமாக பயன்படுத்தி நமது வாய்ப்புகளை எப்படி பெருக்குவது என்பதுதான் புத்திசாலித்தனம். அப்படி எவ்வாறு வெற்றிக்கான வாய்புக்களைப் பெருக்குவது என்று புலிகளின் வரலாற்றின் ஊடகா அடுத்து பார்ப்போம்.

 1. அதிக வாய்ப்புகளை உருவாக்கும் காய்களை (உத்திகளை) குருட்டுத்தனமாக உருவாக்க முடியாது. வரலாற்றைப் பற்றிய ஆழ்ந்த புரிதலும்  கற்றலும் இருக்கவேண்டும். எல்லாவற்றையும் அனுபவத்தில் கற்றுக்கொள்ளவேண்டும் என நினைத்தால், அது ஆற்றலை வீணடிக்கும். புத்திசாலியானவன் வரலாற்றில் மற்றவர்களின் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறான்.

Only a fool learns from his own mistakes. The wise man learns from the mistakes of others.’ – Otto von Bismarck

பிரபாகரன் அவர்கள் வரலாற்றை ஆழ்ந்து கற்றவர். அவர் வாசிப்பில் ஆர்வம் மிகுந்தவர். 1970களில் பாலசிங்கம் இங்கிலாந்தில் இருந்து எழுதிய கொரில்லாப் போர் முறை குறித்த நூலை பிரபாகரன் அவர்கள் வாசித்ததின் மூலமே இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டது [7]. அவர் வரலாற்றில் கற்ற பாடங்களைக் கொண்டே இயக்கம் கட்டி எழுப்பப்பட்டது.

இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி – பிரபாகரன் அவர்கள்

கொரில்லாப் போர்முறையே அரசுப்படைகளை எதிர்க்கும் சிறப்பான உத்தி என்பதன் அடிப்படையிலேயே கொரில்லா இயக்கமாக புலிகள் உருவெடுத்தார்கள்.  சதுரங்க ஆட்டத்தில் கிராண்ட் மாஸ்டர் தகுதி பெற்ற ஆட்டக்காரர்களின் நகர்வுகளில் 60% பழைய ஆட்டங்களில் மற்ற வெற்றிபெற்றவர்கள்  ஆடியதை வைத்தே நகர்வுகளை  மேற்கொள்கிறார்கள்[8]. அரசியல்/இராணுவ  ஆட்டமும் விதிவிலக்கல்ல.

 1. தேனீக்கள் சிக்கனமாக இயங்குவதற்குக் காரணம் அது மேலிருந்து யாரும் திட்டமிட்டு உருவாக்கியதல்ல, அவை கீழிருந்து பரிணமித்தவை. அதுபோலவே புலிகள் இயக்கமும் கீழிருந்து (Bottom-up) பரிணமித்தது. புலிகளின் பலம் அதன் தலைமையில்  இருப்பதாகத் தோன்றலாம், ஆனால் அதன் உண்மையான பலம் அடிமட்டத்தில் உள்ள புலி வீரனைக் கொண்டே அமைந்துள்ளது.

எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கிறதுபிரபாகரன் அவர்கள்

புலிகள் இயக்கம் புலிப்பண்பாட்டின் மூலம்  உணர்வுகளின் வழியாக, பலமான அடித்ததளத்தில் இருந்து கட்டப்பட்ட இயக்கம்[9]. எதிரிகள் தலைமையை அழித்தாலும், அது மீண்டும் பலமான தலைமையைப் பெரும் வல்லமையுடையது. இதை எதிரிகளால் கொல்லப்பட்ட எழுத்தாளர்  தராகி சிவராம் பலமுறை கூறியுள்ளார்கள்.

புலிவீரர்கள் உணர்வுகளின் அடிப்படையில்  விடுதலைக்குப் போராடுவதானால், அவர்கள் முழு அர்ப்பணிப்புடன் போராட முடிந்தது.  மாறாக எதிரிப்படைகள் மேலிருந்து (TopDown) திட்டமிட்டு கட்டப்பட்டவை. போர் வீரர்கள் வறுமையின் காரணமாக வேறுவழி இல்லாமல் இராணுவத்தில் இணைவதால், அவர்களிடம் உண்மையான அர்ப்பணிப்பு, உணர்வு, ஓர்மம் கிடையாது. புலிகளால் எந்த ஒரு சம்பளமும் பெறாமல், எதிரிகளை விட பலமடங்கு மனபலம் வாய்ந்த படைகளை உருவாக்க முடிந்ததற்குக் காரணம் அது கீழிருந்து கட்டியமைக்கப்பட்ட இயக்கம்.

2009 இழப்புக்குப்பின் பெரிய போராட்டங்கள் நடக்காமல் இருப்பதற்கு புலிப்பண்பாட்டு இழப்புதான் காரணம், தலைமை இழப்பு அல்ல.   ஆப்கானிசுத்தானிலும்  ஈராக்கிலும் பல வருடங்களாக அமெரிக்காவும் அதன் துணைநாடுகளும் போர் புரிந்து, பல இயக்கங்களின் தலைமைகளைக் கொன்றாலும் போர் முடிவிற்கு வராததற்குக் காரணம், அவ்வியக்கங்களும் கீழிருந்து மேலாக ஒரு பண்பாட்டின் மூலம் கட்டியமைக்கப் பட்டிருப்பதுதான். அவர்களின் தலைமை அழிய,  புதிய தலைமைகள்  முன்பைவிட வீரியமாகத் தோன்றி சிக்கலைக் கூட்டுகிறது.  அவர்களின் பண்பாட்டை மாற்றாமல் வெற்றி என்பது நடக்காத காரியம்.

மேலிருந்து  திட்டமிட்டு கட்டியமைப்பது என்பது நியூட்டன் சட்டகம். பிரபாகரன் சட்டகத்தில் (சிக்கல் அமைப்பு) கீழிருந்து மேலாக கட்டியமைக்கப்படும். அவ்வாறாக கீழிருந்து கட்டியமைக்கப்படும் இயக்கங்களே நீண்டகாலம் தாக்குப்பிடித்து மாறும் சூழலுக்கு ஏற்ப  தகவமைத்து வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகளைக் கூட்டுகிறது.

“Evolution moves from the simple to the complex. Healthy complex systems evolve by chunking together healthy simpler systems. Attempts to design large, highly complex organizations from the top down rarely work, if ever. This merely confirms what  successful military organizations have long recognized: success starts at the small-unit level. Build strong, adaptable squads and sections first. Train and equip them well—which includes giving them ample time to train themselves (i.e., to evolve). Give them the very best leaders. Give those leaders the freedom and responsibility to lead (i.e., let them act as independent agents). Then chunk the teams and squads together into increasingly larger units.” [13]

இன்றைய திராவிடக் கட்சிகள் பார்ப்பதற்குப் பலமாக இருந்தாலும், அவை ஒரு தலைமையால் பணத்தால் மேலிருந்து கீழாக கட்டியமைக்கப்பட்ட இயக்கங்கள். தலைமையோ அல்லது தொடர்ந்து பணவரவோ இல்லையென்றால் அவை எளிதில் நொறுங்கும் தன்மை கொண்டது. அவை நீண்டகாலம் நீடிக்கப்போவதல்ல. கீழிருந்து மேலாக கட்டியமைக்கப்படும் இயக்கங்களே நிலைத்து நிற்கும். மத இயக்கங்கள் பல ஆயிர வருடங்களாக இன்றும் நிலைத்து நிற்பதற்குக் காரணம் அவை கீழிருந்து மேலாக கட்டியமைக்கப்பட்ட இயக்கங்கள். அவர்களின் பலம் என்பது சாதாரண மனிதனின் நம்பிக்கையில் பிறக்கிறது.

 1. புலிகளின் பொருளாதார பலமும் ஆட்பலமும்   மிகக்குறைவானது என்பதால், தவறுகள் என்பது பாரிய இழப்பை உண்டாக்கும். துல்லியமான தகவல்கள் அவர்களின் சிக்கனமான நடவடிக்கைகளில் முக்கிய பங்கை வகித்தது. எதிரிகளின் நிலைகளையும் திட்டங்களையும் அறிவதின் மூலமே, அவற்றிற்கு எதிராக சிறந்த நகர்வுகளை மேற்கொள்ள முடியும். புலிகளின் புலனாய்வுப் பிரிவு இதில் மிகச்சிறப்பாக செயலாற்றியது. அவ்வாறு நல்ல தகவல்களின் அடிப்படையிலே புலிகளின் தாக்குதல்கள் அமைந்ததால், அவர்களின் திட்டம் குறி தவறுவதில்லை. அதேநேரம் புலிகள் தங்கள் நிலைகளை திட்டங்களை இரகசியம் காத்தார்கள். எதிரிப்படைகளுக்கு எங்கே தாக்குதல் நடக்கும் என்பது தெரியாததால், அவர்கள் அனைத்து நிலைகளிலும் தயாராகவே இருக்கவேண்டும். இது எதிரிகளின் ஆற்றலை வீணடித்தது.
 1. புலிகள் இயக்கம் ஒரு கைத்துப்பாக்கியில் ஆரம்பித்து வான்படை வரை  வளர்ந்தது.  தொடர்ந்து  கற்று புதிய புதிய  அணிகளையும்   படைகளையும்   உருவாக்கிக்கொண்டே இருந்தார்கள். இதற்கான அடிப்படை சூத்திரம் என்பது   இருக்கும் பொருளாதாரத்தையும் ஆட்பலத்தையும் கொண்டு எந்தப் படையணியை உருவாக்கினால் அதிக வாய்ப்புகள் கிட்டும் என்பதுதான். இதற்கு சிறந்த உதாரணம் கருப்புலிப் படையணிதான்.  சிறிய  குழுவினால் ஆன இப்படை ஆழ ஊடுருவி எதிரியை அவனது நிலத்திற்குள்ளேயே பாய்ந்து இராணுவ இலக்கைத்  தாக்கி எதிரிக்கு  பெரும் சேதத்தை உருவாக்கும்.  இதுபோன்ற தாக்குதல் எங்கு வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், இது தாக்குதலுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்குகிறது.  எதிரி தனது முக்கிய நிலைகளை எப்பொழுதும் தீவிரமாக காத்துக் கொண்டிருக்கவேண்டும். இது அவர்களின் பொருளாதாரத்தையும் ஆட்பலத்தினையும்  திசை திருப்பியது. சிறிய படைகொண்டு அதிக தாக்குதல் வாய்ப்புக்களை உருவாக்கி  பெரிய எண்ணிக்கையிலான எதிரிப்படைகளை  முடக்கிய  ஒரே படை கருப்புலிப்படைதான். இதுபோலத்தான் புலிகள் இயக்கம் ஆரம்பித்ததிலிருந்து   ஒவ்வொரு படையணி உருவாக்கத்திற்கும் பின்புலத்தில் வாய்ப்புகளின் எண்ணிக்கையும் சிக்கனமும்  காரணமாக இருக்கும்.  இவ்வாறு கீழிருந்து ஒவ்வொரு அடியிலும் சிக்கனத்தை மையமாக வைத்து புலிகள் இயக்கம் கட்டி எழுப்பப்பட்டது. அதனால்தான் அவர்கள் குறைந்த ஆற்றலில் பலமடங்கு ஆற்றலுள்ள எதிரியை பலமுறை தோற்கடித்து உலகை வியக்கவைக்க முடிந்தது.

பலவீனமான மக்களின் பலம் மிக்க ஆயுதமாகவே கரும்புலிகளை உருவாக்கினேன்” – பிரபாகரன் அவர்கள்

 1. புலிகள் இயக்கம் புதுமைகளைப் படைத்த இயக்கம். உலக இராணுவங்கள் பயன்படுத்திய நியூட்டன் சட்டக வியூகங்களை உடைத்து புதிய சட்டகத்தை உருவாக்கி இந்திய இலங்கை இராணுவங்களைப் பலமுறை தோற்கடித்தார்கள் [5]. யாரும்  நம்பவே முடியாத திட்டங்களையும் உத்திகளையும் வகுத்தார்கள்.  அவர்கள் இராணுவ உத்திகளைப் பற்றிய அறிவில் முன்னோடிகளாக இருந்தார்கள் [5]. அறிவுதான் சிக்கனத்திற்கே அடிப்படையானது.  எந்த உத்தி சிறப்பானது என்ற அறிவு இல்லாவிட்டால், அவர்களால் இவ்வளவு  வெற்றிகளை அடைந்திருக்க முடியாது.  அவர்களின் கப்பற்படைப் படகுகளை  அவர்களே வடிவமைத்தார்கள்,  பல இராணுவ தளபாடங்களையும் அவர்களே படைத்தார்கள். சிறிய எளிமையான விமானங்களை  எடுத்து, குண்டெறியும் விமானங்களாக மாற்றி வடிவமைத்தார்கள் [11]. இதெல்லாம் அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கும் சிக்கனத்திற்கும் உதாரணங்கள். நமக்குத் தெரியாதது எத்தனையோ.

மொத்தத்தில் புலிகள் இருக்கும் பொருளாதாரத்தையும் ஆட்பலத்தையும் வைத்து சிக்கனமாக ஒவ்வொரு காய்களாக உருவாக்கி அவற்றை இணைத்து வாய்ப்புகளைப் பெருக்கி ஒவ்வொரு அடியாக முன்னேறினார்கள். இதுதான் இன்றைய சிக்கல் அமைப்புகள் பற்றிய ஆராய்ச்சிகள் கூறும்  .வெற்றிக்கான பாதை [12]. அதைப் புலிகள் ஆரம்ப காலத்திலிருந்தே பின்பற்றி வந்தார்கள்.

அடுத்து என்ன?

புலிகளின் உத்திகள் இராணுவ செயல்பாடுகளுக்கு வடிவமைக்கப்பட்டாலும், அவற்றை  சமூகம், அரசியல் உட்பட அனைத்து சிக்கலான  அமைப்புகளுக்கும் பயன்படுத்தலாம். இது ஏனென்றால் புலிகள் பயன்படுத்திய உத்திகளும்  சிக்கலான அமைப்புகளுக்கான உத்திகளும் ஒன்றே  என்று அண்மைய ஆராய்ச்சிகளின்  மூலம் தெரிகிறது [12].  அடிப்படையில் இன்று நாம் எதிர்நோக்கும் பெரும்பாலான சிக்கல்களுக்கான உத்திகளை புலிகள் ஏற்கனவே நமக்காக உருவாக்கிவிட்டார்கள். அதை எடுத்து பயன்படுத்துவதுதான் மிச்சம்.

அன்று புலிகள் பயன்படுத்திய உத்திகளை  இன்றைய தமிழ்த்தேசிய செயல்பாடுகளுடன் ஒப்பிட்டால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்தான் தெரிகிறது. அதற்கு  இன்றைய தமிழ்த்தேசியத்தைக் குற்றம் கூற முடியாது. புலிகளின் உத்திகளை முழுதாகப் புரிந்து கொள்வதற்கு    புலிகள் தங்கள் உத்திகளை இரகசியம் காரணமாக ஆவணப்படுத்தவில்லை அல்லது அவ்வாறான ஆவணம் 2009-இல் அழிந்து போயிருக்கலாம். இதனால் நாம் பின்னோக்கி அவர்களின் செயல்பாடுகளை  நவீன அறிவியல் தத்துவங்களின்  வாயிலாக  ஆராய்வதின்  மூலமே அறிந்து கொள்ளமுடிகிறது.

இன்றைய தமிழ்த்தேசிய இயக்கங்கள் தங்களது உத்திகளையும் செயல்பாடுகளையும்  சிக்கல் அமைப்பு சட்டகத்தின் (அல்லது பிரபாகரன் சட்டகத்தின்)  கீழ் மறுசீரமைப்பு செய்யவேண்டும். அதற்கு அடிப்படையாக கீழ்வரும் கேள்விகளிலிருந்து ஆரம்பிக்கலாம்:

 1. நீங்கள் உங்கள் எதிரியைவிட அதிக அறிவைப் பெற்றிருக்கிறீர்களா?

இடார்வினின் “தக்கது எஞ்சும்” என்ற தத்துவம் சிக்கல் அமைப்பில் “அறிவுடையது எஞ்சும்” என்று மாற்றி  வழங்கப்படுகிறது. புலிகளால் இவ்வளவு வெற்றிகளைப் பெறுவதற்கு ஒரு அடிப்படைக் காரணம் அவர்கள் எதிரிகளை விட போர் உத்திகளிலும் கள நிலவரங்களிலும் அறிவில் சிறந்தவர்களாக இருந்ததனால்தான்.  தமிழ்த்தேசிய இயக்கங்கள் தங்களுக்குத் தேவையான அறிவைத் திரட்டுவதில் முனைப்புடன் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் தங்களது ஆற்றலை தேவையில்லாத இடங்களில் வீணடிக்க வேண்டிவரும்.  இருப்பதிலேயே மோசமான தவறு என்பது நாம் தவறான பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம் என்பதே தெரியாமல் செல்வதுதான்.  நமது உத்திகளை தொடர்ந்து கற்று கேள்விக்குட்படுத்தவேண்டும்.

நமது அறிவு முன்னேற்றத்தைத் தடுக்கும் பெரிய தடை என்பது “நம்மால் அனைத்தையும்  பார்த்து புரிந்துகொள்ள முடியும்” என்பதே. இதுபோன்ற கருத்துக்கள்தான் “உலகம் தட்டை” என்று மனிதர்களை நீண்டகாலமாய் முன்னேறாமல் தடுத்தது. நாம் அறிவியல் தத்துவங்களைக் கற்கவேண்டும், அதன்  அடிப்படையில் சிந்திக்கவேண்டும். [14]

 1. நீங்கள் ஒரு உத்தி என்றில்லாமல் பல உத்திகளைக் கையாள்கிறீர்களா?

சதுரங்க ஆட்டத்தில் எப்படி ஒரு காயை மட்டும் நகர்த்தி வெற்றிபெற முடியாதோ,  அதுபோல ஒரு உத்தியை மற்றும் வைத்துக்கொண்டு  வெற்றிபெற முடியாது.  பல்வேறு உத்திகளை இணைத்து வாய்ப்புகளைப் பெருக்கி ஒவ்வொரு அடியாக வைத்துதான் வெற்றிபெற முடியும்.  வெற்றிக்கான  திட்டம் என்று முதலிலேயே ஒரு திட்டம் தீட்டமுடியாது. வெற்றிக்கானப் பாதை தானாக ஒவ்வொரு அடியாக பரிணமிக்கும்.

இன்று தமிழகத்தில்  ஒரு பலமான அரசியல் கட்சியை உருவாக்கி வெற்றி கொள்ளலாம் என்று நினைப்பது ஒரு காயை நகர்த்தி வெற்றிகொள்ள நினைப்பதற்குச் சமம். பா.ச.க கட்சி (BJP) ஏன் இந்திய அளவில் வெற்றி பெறுகிறது என்றால் அது ஒரு தனி  கட்சி  அல்ல, பல்வேறு இந்துத்வா அமைப்புகளுடன் சேர்ந்து இயங்கும் கட்சி. நம்மிடம் இருக்கும் காய்களின் எண்ணிக்கையை விட அவர்களிடம் அதிக காய்கள் உள்ளன. இதுதான் அவர்களின் வெற்றிக்கு அடிப்படை. அவர்களை எதிர்கொள்ள அவர்களைவிட அதிக எண்ணிக்கையிலான அமைப்புகளை/உத்திகளை உருவாக்கி இயங்கவேண்டும். அப்பொழுது வெற்றி  எளிதாகும்.

 1. உங்கள் அமைப்புகள் கீழிருந்து மேலாக கட்டப்பட்டிருக்கிறதா?

ஒரு இயக்கத்தின் உண்மையான பலம் தலைமையில் இல்லை, அதன் கீழ்மட்ட உறுப்பினரிடம் உள்ளது. புலிகளின் பலம் ஒரு புலிவீரனின் நெஞ்சுரத்திலிருந்து பிறக்கிறது. அவ்வாறு பலமான உறுப்பினர்களை வைத்து, படிப்படியாக கீழிருந்து பல்வேறு பிரிவுகளை உருவாக்கி அடுக்கடுக்காக ஒரு அமைப்பு உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவும் சிக்கனமாக தேவைக்கேற்ப இயங்கி இயக்கத்தின் மொத்த வாய்ப்புகளை  பெருக்கும்படி  உருவாக்கப்படவேண்டும்.

இவ்வுலகத்தில் உயிர்கள் இவ்வாறுதான் கீழிருந்து மேலாக பரிணமித்தன. அவ்வாறு கீழிருந்து மேலாக உருவாகும்  இயக்கங்கள்தான்  பரிணாம இயக்கங்களாக, சூழலுக்கு ஏற்ப சிறப்பான தகுதியுடையதாக வெற்றிபெறுவதாக அமையும்.

 1. நீங்கள் புதுமையைப் படைக்கிறீர்களா?

ஒரு இயக்கம் தொடர்ந்து கற்று புதுப்புது உத்திகளையும் அமைப்புகளையும் உருவாக்கிக்கொண்டு செல்லவேண்டும். எவ்வளவு தூரம்  பல காய்களை சேர்த்து நகர்த்துகிறீர்களோ, அவ்வளவு தூரம் வெற்றி வாய்ப்புகள் கூடும். அவ்வாறு புதுமையைப் படைக்க தொடர் கற்றலிலும்  சோதனையிலும் ஈடுபடவேண்டும்.

 1. நீங்கள் சிக்கனத்தைக் கடைபிடிக்கிறீர்களா?

இவ்வுலகில் பரிணாமப் போட்டியில் யார் சிக்கனமாக ஆற்றலைப் பயன்படுத்துகிறார்களோ, அவர்களுக்கே வெற்றிக்கான வாய்ப்புகள் கூடுகின்றன.  இதை அனைத்து உயிர்களிடத்தும் காணலாம்.  இவ்வுலகில்  சிக்கனமானது எஞ்சும் என்றும் கூறலாம். இயக்கத்தின் ஒவ்வொரு அடியிலும் சிக்கனம் பேணப்படவேண்டும். எந்த உத்திகள் சிறந்தது என்பதையும் சிக்கனமே கண்டுபிடிக்க உதவும். குறைந்த செலவில் எது அதிக வெற்றி வாய்ப்புகளை உருவாக்குகிறதோ, அந்த உத்திகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.

இன்று தமிழ்தேசிய இயக்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்துகிறார்கள். ஆனால் அதில் எவ்வளவு வெற்றி கிடைக்கிறது என்பதில் தெளிவு இல்லை. வெற்றிக்கான வாய்ப்புகள் இல்லாத இடத்தில் பொருளையும் நேரத்தையும் வீணடிக்கக்கூடாது. தெளிவான குறிக்கோளுடன் செயல்பாடுகள் இருக்கவேண்டும். செயல்பாடுகள் குறிக்கோள்களை எட்டவில்லை என்றால், உத்திகளை மறுபரிசீலனை செய்து  வீணான உத்திகளை/செயல்பாடுகளை  நீக்கவேண்டும்.

 1. எதிரியின் ஆற்றலை வீணடிக்கிறீர்களா, உறிஞ்சுகிறீர்களா?

உங்களின் ஆற்றலை சேமித்துக்கொண்டு எதிரிகளின் ஆற்றலை வீணடிப்பது ஒரு உத்தியாக இருக்கவேண்டும். புலிகள் குறைந்த செலவில் எதிரிகளுக்கு பெரு நட்டத்தை உருவாக்குவதில் கைதேர்ந்தவர்கள். புலிகளின் பெரும்பாலான ஆயுதங்கள் எதிரிகளிடமிருந்து கைப்பற்றியவையே.

இன்று தமிழகத்தின் பொருளாதாரத்தை உறிஞ்சி அதைக்கொண்டே தமிழையும் தமிழர் அடையாளத்தையும் வெகுகாலமாக அழித்துக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தலைகீழாக மாற்றவேண்டும். எதிரியை உறிஞ்சி நாம் எப்படி பலம்பெறுவது என்று  செயல்படவேண்டும்.

இதுவரை நாம் பார்த்தது பிரபாகரன் சட்டகத்தின் (சிக்கல் அமைப்பு சட்டகத்தின்) சில முக்கியமான ஆர்வத்தை ஏற்படுத்தும் கருத்துக்களை மட்டுமே.    இது எந்த வகையிலும் ஒரு முழுமையான ஆய்வு அல்ல.

புலிகளை அறிவில்லாத முரடர்கள் என்று சில தமிழ் இயக்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் உண்மையில் புலிகளைப்போல அறிவிலும் ஆற்றலிலும் விஞ்சிய இயக்கங்கள் இதுவரை தமிழர் வரலாற்றிலேயே தோன்றியதில்லை. புலிகள் கற்றது படைத்தது பலவகையில் புதுமை என்பதால், உலக இராணுவங்கள்  இன்னும் பல நூற்றாண்டுகள் அவர்களைக் கற்றுக்கொண்டிருக்கும். புலிகளைக் கற்காமல் தமிழ்த்தேசியம் ஒரு அடியும் முன்னேற முடியாது.

பி.கு: புலிகள் எந்த தவறும் செய்யாத இயக்கம் என்று நான் கூறவில்லை. இதை ஒவ்வொரு கட்டுரையிலும் தெளிவு படுத்தியே வருகிறேன். அவர்களிடம் இருந்து என்ன கற்கலாம் என்பதுதான் எனது கட்டுரைகளின் நோக்கம்.

 

உசாத்துணை:

 

 1. What is Life? Lecture by Jeremy England. https://www.youtube.com/watch?v=e91D5UAz-f4
 2. Osinga, Frans PB. Science, strategy and war: The strategic theory of John Boyd. Routledge, 2007.
 3. Newman, James R. The world of mathematics., 1956.
 4. Alex Wissner-Gross: A new equation for intelligence, TED Talk, https://www.youtube.com/watch?v=ue2ZEmTJ_Xo
 5. சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் –  பகுதி 3
 6. Strategy, Liddel Hart
 7. அன்ரன் பாலசிங்கம், விக்கிப்பீடியா, https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
 8. Chandler, Murray, and Graham K. Burgess. How to Beat Your Dad at Chess. Gambit, 1998.
 9. சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் –  பகுதி 4
 10. Black Tigers, Wikipedia, https://en.wikipedia.org/wiki/Black_Tigers
 11. பரணி கிருஷ்ணரஜனி, https://www.facebook.com/parani.krishnarajani/posts/2353230988063093
 12. Bar-Yam, Yaneer. Making things work: solving complex problems in a complex world. Knowledge Industry, 2004.
 13. Alberts, David S., and Thomas J. Czerwinski. Complexity, global politics, and national security. NATIONAL DEFENSE UNIV WASHINGTON DC, 1997.
 14. சு.சேது, தமிழ்த்தேசிய அரசியலுக்கு எதிராக உள்ள பெரிய தடைக்கல் எது?
 15. Page, Scott E. The Difference: How the Power of Diversity Creates Better Groups, Firms, Schools, and Societies-New Edition. Princeton University Press, 2008.
 16. சு.சேது, தமிழுணர்வு எங்கிருந்து வருகிறது, அதன் சமூக தாக்கம் என்ன?

 

 

 

 

This entry was posted in அரசியல், ஈழப்போர், ஈழம், தமிழ்த்தேசியம், Uncategorized. Bookmark the permalink.

6 Responses to ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 5

 1. Pingback: நியூட்டன் சட்டகம் / சிக்கல் உத்தி/ பிரபாகரன் சட்டகம் / நந்திக்கடல் கோட்பாடுகள். | வெளிச்சவீடு

 2. Pingback: நியூட்டன் சட்டகம் / சிக்கல் உத்தி/ பிரபாகரன் சட்டகம் / நந்திக்கடல் கோட்பாடுகள். : ஈழம் செய்திகள்

 3. Pingback: நந்திக்கடல் / பத்தாண்டுகள். மீள் பதிவு 05. | வெளிச்சவீடு

 4. Pingback: ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 7 – இறுதி பாகம் | Sethu's Blog

 5. Pingback: புலிகளின் பரிணாம உத்தி/ பிரபாகரன் சட்டகம். நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். | வெளிச்சவீடு

 6. Pingback: மாவீரர்களின் அர்த்தமுள்ள வாழ்க்கை | Sethu's Blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s