ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 7 – இறுதி பாகம்

இறுதி ஈழப்போரைப் பற்றி அலசும்பொழுது சிலர் மேற்கொள்ளும் ஒரு தவறான முடிவு என்னவென்றால்,  புலிகள் தங்கள் இலக்கை அடையமுடியவில்லை, அதனால் அவர்களின் ஒட்டுமொத்த உத்திகளும் தவறு என்று. இது ஒரு தவறான மிகமிக எளிமையான பார்வை. நமது இலக்கு என்ன, அதை அடைய என்ன செய்யவேண்டும் ஆகியன தெளிவாக எளிமையாக இருக்கும்பொழுதே (linear problems) இதுபோன்ற பார்வை பொருந்தும்.

ஒரு நாட்டை எப்படி அடைவது, போரை எப்படி வெல்வது என்பது கடுமையான தொகையற்ற சிக்கல்கள் (nonlinear complex problems). எளிமையான பார்வை இதற்குப் பொருந்தாது[7]. மேலும் இதுபோன்ற சிக்கல்களில் சரியா/தவறா என்ற கேள்வியே தவறானது. நாம் கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால் “யார் அதிக சிக்கலுடன் செயல்படுகிறார்கள்?” என்பதுதான். உதாரணமாக ஒரு சிங்கம் மனிதனைவிட பலமானது, ஆனால் ஏன் அது கூண்டினில் இருக்கிறது? அது தவறான உத்தியைப் பயன்படுத்தியதனால் அல்ல, மாறாக  மனிதர்கள் அதிக சிக்கலான முறையில்  செயல்படுபவர்கள் என்பதனால்தான். சிங்கம் பலமானது ஆனால் சிக்கலானது அல்ல. ஒரு சிங்கம் ஒரு மனிதனைக்  கொல்ல வேண்டுமானால், வெட்ட வெளியில் ஆயுதமற்ற மனிதனைப் பார்க்கவேண்டும். மாறாக மனிதன் சிங்கத்தைக் கொல்ல அல்லது அடக்க வேண்டுமானால், எத்தனையோ வகைகளில் செய்யலாம்.

யார் நிறைய வேறுபட்ட உத்திகளை  பல்வேறு வகைகளில் பயன்படுத்தி  அதிக வாய்ப்புகளை உருவாக்குகிறார்களோ அவர்களே  சிக்கலானவர்கள்.   நாம் எப்பொழுது நமது சிக்கல்தன்மையை அதிகரிக்கிறமோ, அப்பொழுது நாம் நமது சூழலை கட்டுப்படுத்தும் தன்மையை அடைகிறோம், நமது வெற்றி வாய்ப்புகள் கூடுகிறது.  அதனால் உத்திகள் நல்லவையே கெட்டவையா என்பதை,  அவை நமது சிக்கல்தன்மையைக் கூட்டுகிறதா இல்லையா என்பதே தீர்மானிக்கிறது.

புலிகள் இயக்கம் ஆரம்பித்ததிலிருந்து கிடுகிடுவென பல்வேறு படைப்பிரிவுகள், உளவுப்படை, கடற்படை, விமானப்படை,  உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் அமைப்புகள் என வளர்ந்தார்கள். அவர்கள் தொடர்ந்து கற்று உத்திகளையும் அமைப்புகளையும் வளர்த்து சிக்கல்தன்மையைக் கூட்டிக்கொண்டே வந்தார்கள்.  அவர்கள் பலம்வாய்ந்த இந்திய இலங்கை இராணுவங்களை தோற்கடித்ததிற்குக் காரணம், புலிகள் எதிரிகளை  விட அதிக வாய்ப்புகளை உருவாக்கும் சிக்கலான அமைப்பு என்பதால்தான் [3]. அப்படி இருந்தும் ஏன் இறுதிப்போரில் வெல்ல முடியவில்லை என்ற கேள்வி எழுகிறது.  இதற்குக் காரணம்  புலிகளின் உத்திகள் அல்ல. அவர்கள்தான் உத்திகளின் முன்னோடியாகவே இருந்தார்கள்.  உலக நாடுகள் புலிகளின் மீதான தடைகள், புலிகளின் பொருளாதார முடக்கம்,  இலங்கைக்கு  உத்திகள், உளவு,  இராணுவ தளபாடங்கள் எனச் செய்த உதவிகள்,  புலிகளின் சிக்கல் தன்மையைக்  குறைத்தும்  இலங்கையின் சிக்கல் தன்மையைக் கூட்டியதுதான் காரணம்.

புலிகள் போன்ற சிக்கலான இயக்கம் இந்திய துணைக்கண்டத்தின் நவீன  வரலாற்றில் இதுவரை தோன்றியதில்லை.  திராவிட இயக்கத்தை புலிகளுடன் ஒப்பிடும்பொழுது அதற்கு பலமும் கிடையாது, சிக்கலும் கிடையாது. இந்திய இலங்கை நாடுகளை உருவாக்கியது வெள்ளையர்களே, இன்றைய ஆளும் வர்க்கம் கிடையாது. அடிப்படையில் இந்த நாடுகள் உருவானது ஒரு மாறிய உலக ஒழுங்கின் விளைவாக ஏற்பட்ட  அமைதியான ஆட்சி மாற்றத்தின் விளைவாகவே. இந்த ஆளும் வர்க்கங்கள் புலிகளைப்போல பெரும்போர் நடத்தி எதிரிகளை வீழ்த்திய வரலாறே கிடையாது. சுயமாக ஒரு நாட்டை வலிமையால் உருவாக்கி ஆண்ட வரலாறும் கிடையாது.  அடிப்படையில் இவர்களும் புலிகளைப்போல சிக்கலானவர்கள் இல்லை.  காந்தியின் போராட்டங்கள் அளவில் பெரிதாக இருக்கலாம், சிக்கலானது இல்லை. சுபாசு சந்திரபோசின் படைகள் சப்பானின் கட்டளைப்படி இயங்கிய ஒரு இராணுவ அமைப்பே தவிர, புலிகளைப் போல தனித்து இயங்கிய அமைப்பு அல்ல. புலிகள் இந்த இமாலய சாதனையை  ஒரு சிறுதொகை மக்கள் பலத்தை  வைத்து, சிறிய பொருளாதார பலத்தைக்கொண்டு சாதித்து காட்டி இருக்கிறார்கள்.

ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டுமானால், புலிகள் ஏன் 2009-இல் வெற்றியடையவில்லை என்று கேட்கக்கூடாது. அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள பெரிதாக ஒன்றுமில்லை. அது இரட்டை கோபுரத் தாக்குதலின்பின் திடீரென்று மாறிய உலக நாடுகளின் நிலைப்பாடுகள்தான் முக்கிய காரணம். அதுபோன்ற திடீர் மாற்றங்களை யாராலும் கணிக்க முடியாது.  நாம் ஈழப்போரிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய சரியான கேள்விகள் என்பது:  ஏன் மூன்றாம் ஈழப்போர் வரை புலிகள்  மாபெரும் வெற்றிகளைப் பெற்று வந்தார்கள்,   அதற்கு எப்படி தெற்காசியாவிலேயே யாராலும் முடியாதபடி சிக்கலான அமைப்புகளைக் கட்டி எழுப்ப முடிந்தது, இனி  தமிழ்த்தேசியம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கு  என்ன செய்யவேண்டும்   என்பவைதான்.  அந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே இக்கட்டுரைத்தொடர் எழுதப்பட்டுள்ளது.  இந்த கேள்விகளுக்கான விடைகளையே இந்த கட்டுரைத் தொடரின் முந்தைய பாகங்களில் ஆராய்ந்தோம். அவற்றை சுருக்கமாகத் தொகுத்து, சில விடுபட்ட கருத்துக்களையும் சேர்த்து அளிப்பதுதான் இக்கட்டுரைப் பகுதியின் நோக்கம்.

புலிகள் சிக்கலான அமைப்பாக வளர்ந்து பல வெற்றிகளைப் பெற்றதற்கு முக்கிய காரணிகளாக நான் கருதுவது:

 1. பரிணாம இயக்கம்: புலிகள் இயக்கம்  என்பது ஈழச்சூழலுக்கு ஏற்ப பரிணமித்த தனித்துவமான பரிணாம இயக்கம். பரிணாம இயக்கங்கள் திட்டமிட்டு கட்டி எழுப்பப்படுவதல்ல. அது சூழலுக்கேற்ப கற்று படிப்படியாக தகவமைத்து (adapt) பரிணமிக்கும் இயக்கம். ஆயுதப் போராட்ட ஆரம்ப காலத்தில் பல்வேறு இயக்கங்கள் பல்வேறு கருத்தியல் வேறுபாடுகளுடன்    தோன்றின. அவற்றிற்கிடையே யார் சிறப்பாக ஈழவிடுதலையை முன்னெடுக்கிறார்களோ, அவர்களுக்கே மக்களின் ஆதரவு பெருகும்.  இவ்வாறு இயக்கங்களுக்கிடேயே ஒரு பரிணாமப் போட்டி ஆரம்பிக்கிறது. பரிணாமத் தத்துவத்தின்படி  எந்த இயக்கம் ஈழச்சூழலுக்கு ஏற்றபடி கற்று தங்களை சரியாக தகவமைத்துக்  கொள்கிறார்களோ,  அவர்களே வெற்றி பெறுவார்கள்.  முடிவில் அந்தப் பேறு புலிகளுக்கே கிடைத்தது. புலிகளின் கற்றல் என்பது இந்த பரிணாமப் போட்டியின் விளைவாகவே உருவானது. போட்டி இல்லாமல் இயக்கங்கள் கற்கவும் முடியாது வளரவும் முடியாது.  புலிகள் பலமான இராணுவமாக பரிணமித்த பின்பும் கற்றல் நின்று விடவில்லை. உலக இராணுவ உத்திகளை கற்றது மட்டுமில்லாமல், ஒவ்வொரு போரிலும் அனுபவம் பெற்று புதிய உத்திகளை, அமைப்புகளை, படைப்பிரிவுகளே  உருவாக்கிக் கொண்டே இருந்தார்கள்.  படைப் பிரிவுகளுக்குள்ளே யார் எதிரியுடன் போரில் சிறக்கிறார்கள்  என்ற போட்டியும் உருவாகிறது. இதன் விளைவாக பல சிறப்பான படையணிகளும் தலைவர்களும் பரிணமிக்கிறார்கள். கடற்படை   விமானப்படை என புதிது புதிதாக பரிணமித்துக்கொண்டே இருந்தார்கள்.   இவ்வாறு படிப்படியாக பரிணமித்துதான் புலிகள் ஒரு சிக்கலான அமைப்பாக உருப்பெற்றார்கள். சிக்கலான அமைப்புகளின் தன்மை என்னவென்றால் அவற்றை நம்மால் பரிணமித்துதான்  அடையமுடியும், முழுத்திட்டமிட்டு அடையமுடியாது.  புலிகள் பலம் வாய்ந்த இயக்கமாக மாறுவதற்கும்,  பலவெற்றிகளைப் பெறுவதற்கும்  ஒரு அடிப்படைக் காரணம் அவர்கள் இவ்வாறு பரிணாம உத்தியின் வழியாக பயணித்ததே [2].

 

 1. புலிப்பண்பாடு: ஒரு பெரிய கட்டிடம் கட்டுவதற்கு பலமான அடித்தளம் வேண்டும், அதுபோல ஒரு பெரிய  இயக்கத்தை கட்டி எழுப்பத் தேவையான அடித்தளம் என்பது பண்பாடு தான்.  பொதுவாக தமிழ்ச்சமூகம் என்பது நண்டுகள் எவ்வாறு ஒன்றை ஒன்று பின்னுக்கு இழுக்கிறதோ, அதுபோல ஓர்  ஒற்றுமையற்ற சமூகம்.   இவ்வாறு செயல்படும் நண்டுகளை வைத்து ஒரு பெரிய இயக்கத்தைக் கட்டி எழுப்புவதென்றால், அது முடியாத காரியம். இதிலிருந்து தப்பிக்க ஒரேவழி மாற்றுப் பண்பாடுதான். அதை உணர்ந்து பிரபாகரன் அவர்கள் உருவாக்கியதுதான் அதியுயர் ஒத்துழைப்பான  “புலிப் பண்பாடு”.   புலிப்பண்பாடு என்பது தனிப்பட்ட சமூகம்,  சுயம்,  விதிகள்,  ஓட்டம்,  சடங்குகள்,  வரலாற்று சாயல், சுயநல ஒழிப்பு என்ற ஏழு முக்கிய காரணிகளை உள்ளடக்கியது.   இதைக்கொண்டு எதற்கும் உதவாத நண்டுகளை  எடுத்து உலகில் அனைவரையும் விஞ்சிய புலிகளாக  மாற்றிக்காட்டினார் [4].
 1. சிக்கலான உத்திகள்:  உலக இராணுவங்கள் முழுத்திட்டமிட்டு செயல்படும் முறைகளைப் பின்பற்றினார்கள் (நியூட்டன் சட்டகம்). ஆனால் புலிகள் அதிக எண்ணிக்கையில் வேறுபட்ட உத்திகளும், முழுத் திட்டமிடல் இல்லாத சந்தர்ப்பவாத அணுகுமுறையைப் பின்பற்றினார்கள் (சிக்கலமைப்பு சட்டகம்).  புலிகள் இந்த உத்திகளைக் கொண்டு உலக இராணுவ வல்லுனர்களின் ஆலோசனையுடன் இயங்கிய சிங்கள இராணுவத்தை இரண்டு தசாப்தங்களாக விரட்டி விரட்டி அடித்தனர்.  இதை  உலக இராணுவ உத்திகளின் தோல்வியாகவே பார்க்கவேண்டும். புலிகளின் உத்திகள்தான்  சிறந்தது என்று சென்ற நூற்றாண்டின் இறுதியில்தான் சிக்கலமைப்பு பற்றிய  ஆராய்ச்சிகள் தெளிவுபடுத்தின. அதன் பின்னரே உலக இராணுவங்கள் தங்கள் உத்திகளை மாற்றின. புலிகள் உத்திகளில் முன்னோடிகளாக இல்லாமல் இந்திய சிங்கள இராணுவங்களை பலமுறை வெற்றிபெற்றிருக்க முடியாது. உலக இராணுவங்கள்  இன்னும் பல நூற்றாண்டுகள் புலிகளை கற்றுக்கொண்டிருக்கும் [3].
 1. சிக்கனம்: பரிணாமத்தில் சிக்கனமாக இயங்கி வாய்ப்புகளைப் பெருக்கும் இயக்கமே வெற்றி பெரும்.  இருக்கும் பொருளாதாரத்தையும் ஆட்பலத்தையும் கொண்டு எந்தப் படையணிகளை உருவாக்கினால் அதிக வாய்ப்புகள் கிட்டுமோ, அதுபோன்று படையணிகள் கீழிருந்து மேலாக ஒவ்வொரு அடியாக கட்டியமைக்கப்பட்டது. ஒவ்வொரு அடியிலும் சிக்கனம் பேணப்பட்டது.  அதுபோக சிக்கனத்திற்கு மேலும் உதவிய செயல்பாடுகள் என்பன:  எதிரிகளைவிட சூழலையும்  உத்திகளையும் பற்றிய  அதிக அறிவு,  துல்லியமான தகவல்கள், ஆழ ஊடுருவி தாக்கும் வீச்சு, எதிரியின் ஆற்றலை உறிஞ்சுதல், புதுமைகளைப் படைத்தல் ஆகியன.   இவ்வாறு செயல்பாடுகளில் சிக்கனத்தை கடைபிடித்ததனால்தான் புலிகள் தங்களைவிட பலமடங்கு பொருளாதார  பலம்வாய்ந்த எதிரிகளை வீழ்த்த முடிந்தது [5].
 1. நம்பிக்கை: நாம் வாழும் உலகம் எவ்வாறு பரிணமிக்கும் என்பது முன்கூட்டியே தீர்மானிக்க முடியாதபடி சிக்கலானது, எண்ணற்ற காரணிகளை உள்ளடக்கியது. நாம் விரும்பும் எதிர்காலத்தை உறுதியாக 100% அடையும் திட்டம் ஒன்றை யாராலும் உருவாக்க முடியாது. அவ்வாறு இருக்கும் பொழுது நாம் விரும்பும் எதிர்காலத்தை அடைய துணிவுடன் நம்பிக்கையின் அடிப்படையிலேயே அணுகமுடியும். புலிகளின் அசுரபலத்திற்கு ஒரு முக்கிய காரணம் அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.  இந்தியாவோ, இலங்கையோ, ஏன் இந்த உலகமே ஒன்று திரண்டு எதிர்த்த பொழுதும் அவர்கள் நம்பிக்கையுடன் தெளிவாகவே செயல்பட்டார்கள்.  நம்பிக்கையைப் பற்றி ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். வெறும் நம்பிக்கை மட்டும் என்றால் அது குருட்டு நம்பிக்கை. அதுபோன்ற நம்பிக்கைகள் சமூகத்தில் அநீதியை உருவாக்கி மக்களைத் துன்பத்தில் ஆழ்த்தும். மத நம்பிக்கைகள் அதுபோன்ற குருட்டு நம்பிக்கைகளே. நம்பிக்கையுடன்  பகுத்தறிந்த  செயல்பாடுகளும் இணையும் பொழுதே சமூகத்தில் நீதி நிலவும் என்கிறார் தத்துவமேதை பிளேட்டோ. அதுபோன்ற பாதைதான் புலிகளின் பாதை [6].

இன்று நாம் இனவழிப்பு, நிலம் பறிப்பு, மொழி  அழிப்பு, அடையாள அழிப்பு  என்று பல்வேறு சிக்கல்களை தமிழர் தாயகத்தில் எதிர்கொண்டுள்ளோம். அதுபோக புலத்திலும்  நமது அடையாளத்தை அடுத்த தலைமுறைகளிடம் கடத்துவதிலும் பெரிய சிக்கல்களை எதிர்நோக்குகிறோம். இச்சிக்கல்களை நேருக்கு நேராக சந்தித்து தீர்வுகாண்பது இன்றைய காலகட்டத்தில் முக்கியமானது. அதை நாம் செய்யத் தவறினால் இன்னும் சிலதலைமுறைகளில் தமிழ் பேசுபவர்களும்   இருக்கமாட்டார்கள், தமிழர் என்று கூறிக்கொள்பவர்களும் இருக்கமாட்டார்கள். மக்கள் அந்தந்த நாட்டு  தேசிய அடையாளங்களில் கரைந்து காணாமல் போய்விடுவர். இன்றைய நிலைமையில் இச்சிக்கல்களைத் தீர்ப்பதற்கான தெளிவான முறையான சிந்தனை இருப்பதாகத் தெரியவில்லை.

புலிகள்  உலக இராணுவங்களின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டும் அளவுக்கு உத்திகளில் முன்னோடியாக இருந்தார்கள், ஆனால் இன்று நாம்  செயலற்று நிற்கிறோம். அன்று புலிகள் பயன்படுத்திய உத்திகளை  இன்றைய தமிழ்த்தேசிய செயல்பாடுகளுடன் ஒப்பிட்டால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்தான் தெரிகிறது. அதற்கு  இன்றைய தமிழ்த்தேசியத்தைக் குற்றம் கூற முடியாது. புலிகளின் உத்திகளை முழுதாகப் புரிந்து கொள்வதற்கு  புலிகள் தங்கள் உத்திகளை இரகசியம் காரணமாக ஆவணப்படுத்தவில்லை அல்லது அவ்வாறான ஆவணங்கள்  2009-இல் அழிந்து போயிருக்கலாம். அதனால் நாம் பின்னோக்கி அவர்களின் செயல்பாடுகளை  நவீன அறிவியல் தத்துவங்களின்  வாயிலாக  ஆராய்வதின்  மூலமே அறிந்து கொள்ளமுடிகிறது.

இக்கட்டுரைத் தொடரை எழுதும்பொழுது நான் உணர்ந்த ஒரு ஆச்சரியமான விடயம்  என்னவென்றால் இன்று நாம் எதிர்நோக்கும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான உத்திகள் பெரும்பாலும்    புலிகளின் உத்திகளுக்குள்ளே மறைந்திருக்கின்றன என்பதுதான். இது ஏனென்றால் புலிகளின் உத்திகள் என்பது அடிப்படையில் சிக்கலமைப்பிற்கான (complex systems) உத்திகள் .  இதைவிட சிறந்த உத்திகள் இன்றைய உலகில் வேறு இல்லை என்றே சிக்கலமைப்பிற்கான ஆராய்ச்சிகள் கூறுகின்றன[8.9]. புலிகள் இவ்வுத்திகளை போரில் பயன்படுத்தினார்கள்; நாம் அதை மாற்றி போரற்ற இன்றைய சூழலில் பயன்படுத்த வேண்டும். அது மட்டும்தான் வித்தியாசம். இனி சிக்கலமைப்பு உத்திகளை எவ்வாறு இன்றைய காலகட்டத்தில் பயன்படுத்தலாம் என சுருக்கமாகப் பார்ப்போம்.

 1. ஒரு சமூகம் பேரிடரை சந்தித்தபின் அதிலிருந்து கற்று தன்னை மறுசீரமைத்து முன்பைவிட பலமடங்கு பலம்பெற வாய்ப்பு ஏற்படுகிறது சமூகங்கள் இவ்வாறான வலுகூட்டலை வரலாற்றுக் கற்பிதங்களின் (naarative) வழியாகவே மேற்கொள்கிறது. உதாரணமாக சப்பானியர்கள், யூதர்கள், மேற்குலகம் பலம்வாய்ந்த நாடுகளாக இவ்வாறுதான் மாறியது. தமிழ்ச்சமூகமும் அவ்வாறு முன்பைவிட பலம்வாய்ந்த தேசமாக மாறுவதற்கு ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது. அவ்வாறான மறுசீரமைப்புக்குத் தேவையான பலம் வாய்ந்த,  முன்னேற்றகரமான, யாருக்குமே கிடைக்காத கற்பிதங்களை (narrative) புலிகள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இதுதான் அவர்களின் மாபெரும் கொடை. அவ்வாறான மறுசீரமைப்பை நோக்கி செயல்படுவது முதன்மையான செயல்பாடாக  இருக்கவேண்டும் [1].
 1. நமது வெற்றி என்பது நாம் எதிர்நோக்கும் சூழலுக்கு ஏற்ப கற்று, பல்வேறு சிக்கலான அமைப்புகளை உருவாக்கி,  அவற்றை இணைத்து இயக்கி,  வாய்ப்புக்களைப் பெருக்குவதை நம்பியே உள்ளது. அவ்வாறு இல்லாமல் நாம் ஒரே  ஒரு உத்தியைத் தேடிக்கொண்டிருந்தால்,  அது சிங்களத்தின்   செயசிக்குறு நடவடிக்கை போன்று படுதோல்வியில் முடியும். நமது சிக்கல்தன்மையை கூட்டுவதை மையமாக வைத்தே நமது செய்லபாடுகள் இருக்கவேண்டும். அதற்கு ஒரு உத்தி என்றில்லாமல், பல்வேறுபட்ட உத்திகளைக் கையாளவேண்டும் [3].
 1. சமூகத்தை பல்வேறு அமைப்புகள் இணைந்து செயல்படும் ஒரு எந்திரமாகப் பார்க்கவேண்டும். நமது இலக்கை அடைய எதுபோன்ற எந்திரங்கள் தேவையோ, அதை உருவாக்குவதுதான் நமது கடமை. மக்களையோ அல்லது ஒரு தலைவரையோ பிழை சொல்லிக் கொண்டிருந்தால், முன்னேற்றம் ஏற்படப்போவதில்லை. நீண்டகால அரசியல் அனைத்தும் அமைப்பு ரீதியானவை என்பதை நாம் முதலில் அறியவேண்டும். (All long term politics are institutional) [10].
 1. அவ்வாறான சிக்கலான அமைப்புகளை உருவாக்குவதற்கு பலமான ஒத்துழைப்பான பண்பாடு தேவை. இன்றைய நண்டுப் பண்பாட்டை  வைத்து நம்மால் எந்த ஒரு உருப்படியான அமைப்பையும் உருவாக்க முடியாது. இதற்கானத் தீர்வை புலிகள் ஏற்கனவே கண்டுபிடித்து விட்டார்கள். அதுதான் அதியுயர் ஒத்துழைப்பான புலிப்பண்பாடு. இன்றைய பொதுச்சமூகத்திற்கு ஏற்றவாறு புலிப்பண்பாட்டை மாற்றி மக்களை அதியுயர் ஒத்துழைப்பான சமூகமாக மாற்றவேண்டும். இதை  மறுசீரமைப்பின் ஒரு முக்கிய பாகமாக எடுத்துக்கொள்ளவேண்டும் [4].
 1. சிக்கலான அமைப்புகளை உருவாக்குவதற்கு அறிவு (knowledge) அடிப்படையானது. நமக்கு எப்பொழுதும் முழுமையான அறிவு இருக்கப்போவதில்லை. அதனால் நாம் தொடர்ந்து சோதனை செய்து கற்று அறிவை வளர்த்துக்கொண்டு செல்லவேண்டும். அதற்கேற்ற ஆராய்ச்சி அமைப்புகளை உருவாக்கவேண்டும். நவீன உலகத்தின் பரிணமாத் தத்துவம் என்பது “அறிவுடையது வெல்லும்”. புலிகள் அறிவில் எதிரிகளைவிட முன்னோடிகளாக இருந்ததால்தான் வெற்றி பெற முடிந்தது [2, 5].
 1. வித்தியாசமான, புதிரான, நம்பமுடியாத, துணிவான கருத்துக்களுக்கும் திட்டங்களுக்கும் செவி மடுக்கவேண்டும். வரலாற்றில் அதுபோன்றவைதான் மனித குலத்தை  முன்னுக்கு இழுத்துச் சென்றிருக்கிறது. புலிகள்  ஆரம்பித்த பொழுது “சிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்து சேராது”  என்றுதான் கிண்டலடிக்கப் பட்டார்கள். முடிவில் அவர்கள் சாதித்ததை  நவீன தெற்காசிய வரலாற்றில் இதுவரை யாரும் சாதிக்கவில்லை. பழைய அலுத்துப்போன வேலை செய்யாத உத்திகளில் ஆற்றலை வீணடிக்கக்கூடாது. இருப்பதிலேயே மோசமான  தவறு என்பது நாம் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமலே செல்வதுதான்.
 1. அமைப்புகளை கீழிருந்து மேலாக சூழலுக்கேற்ப அடுக்கடுக்காக சிக்கனத்துடன் பரிணமிக்க வேண்டும்.  சிக்கலான அமைப்புகளை மேலிருந்து கீழாக திட்டமிட்டு கட்டமுடியாது. புலிகளின் பலம் ஒரு புலிவீரனின் நெஞ்சுரத்திலிருந்து பிறக்கிறது. அவ்வாறு பலமான உறுப்பினர்களை வைத்து, படிப்படியாக கீழிருந்து பல்வேறு பிரிவுகளை உருவாக்கி அடுக்கடுக்காக ஒரு அமைப்பு உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவும் சிக்கனமாக தேவைக்கேற்ப இயங்கி இயக்கத்தின் மொத்த வாய்ப்புகளை  பெருக்கும்படி  உருவாக்கப்படவேண்டும். புலிகள் கீழிருந்து மேலாக கட்டப்பட்டவர்கள். எதிரிகள் மேலிருந்து கீழாக கட்டப்பட்டவர்கள். புலிகளின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம் [5].
 1. அமைப்புகளை பரிணமிப்பதில் அமைப்புகளுக்கிடையே   போட்டிகளை உருவாக்கவேண்டும். அவற்றில் சிறந்த அமைப்புகள் பரிணாமத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு பெரிதாக வளரும். ஒரு அமைப்பு அழிந்தாலும் இன்னொரு அமைப்பு அவ்விடத்தை நிரப்பும். ஒரே ஒரு அமைப்பு என்று செயல்பட்டால் அதன் இழப்பை ஈடுகட்டுவது கடினம். நமது உடலில் பல பாகங்கள் இரட்டிப்பாக இருப்பது இதனால்தான். பரிணாமம் இயற்கையிலே திடத்தன்மையை  உருவாக்கும். புலிகள் ஒரு பரிணாம இயக்கமாக இருந்ததால்தான் பலமுடன் இருந்தார்கள்.    ஆரம்பத்தில் பல்வேறு ஆயுதக் குழுக்களுக்கிடையேயான போட்டியே   புலிகளை செதுக்கி பெரிய இயக்கமாக வளர்த்தது. ஒரு நாட்டுக்கு ஒரு இராணவம்தான் இருக்கமுடியும் என்பதால்தான் ஆயுதப்போராட்டம் முடிவில் ஒரு அமைப்பாக பரிணமித்தது [2].
 1. இலக்கை 100%  உறுதியாக அடைவதற்கான உத்திகளை யாராலும் வகுக்க முடியாது.  அதனால்   இலக்கை நாம் நம்பிக்கையுடன்  தான் அணுகமுடியும்.  நம்மால் முடிந்தவரை பகுத்தறிந்து, அனைத்து அறிவையும் உள்ளடக்கி திட்டமிடவேண்டும். அதே நேரம் மாறும் சூழலுக்கே ஏற்ப தொடர்ந்து கற்று உத்திகளை சீர்படுத்திக்கொண்டே  இருக்கவேண்டும். நம்பிக்கை என்பது இலக்கை அடைவதற்கான மன உறுதியை அளிக்கும். பகுத்தறிந்த செயல்பாடுகள் இலக்கை  அடைவதற்கான வழிகளை உருவாக்கும். புலிகள் அசைக்கமுடியாத நம்பிக்கையையும் பகுத்தறிந்த செயல்பாடுகளையும் இணைத்து செயல்பட்டதனால்தான் பல வெற்றிகளைப்  பெறமுடிந்தது [6].
 1. இன்றைய சூழலில் ஈழத்தை நேரடியாக அடித்து பிடிக்க முடியாது. யூதர்கள் முதலில் ஒற்றுமையான மக்களாக உருவாகி, உலகிலே சாதனையாளர்களாக மாறி, பலம்பெற்ற  பின்னர்தான் நாடு அமைக்க முடிந்தது. நாம் எவ்வாறு ஒற்றுமையான சாதனைப்படைக்கும் சமூகமாக மாறுவது, நமது அடையாளத்தை மொழியை  எப்படி காப்பது, பிறப்பு விகிதத்தை எப்படி கூட்டுவது, நமது பூர்வீக நிலங்களை எப்படி பறிபோகாமால் பாதுகாப்பது என்று பல திசைகளில் செயல்படவேண்டிய அவசியம் உள்ளது. இச்செயற்பாடுகள்  ஒன்றை ஒன்று பலப்படுத்துவது. நாம் இவ்வாறு ஈழத்தை நோக்கி  எங்கெல்லாம் வாய்ப்புகள் இருக்கிறதோ அங்கெல்லாம் காய்களை நகர்த்தி, படிப்படியாக சிக்கலான அமைப்பாக வளர்ந்து,  சுற்றி வளைத்து வாய்ப்பு அமையும் பொழுதுதான்  வீழ்த்த முடியும். நாம் போகவேண்டிய பாதை படிப்படியாக புலிகளைப்போன்று  பரிணமிக்கும். அதை முன்கூட்டியே அறிய முடியாது, திட்டமிடவும்  முடியாது [3].
 1. மனிதனின் பகுத்தறிவுதான் அவனை செயல்படுத்தும் காரணி என்று பொதுவாக பலரும் கருதுகின்றனர். ஆனால் இது பிழையான பார்வை. மனிதனின் பகுத்தறிவு அவனது உணர்வுகளுக்கு அடிமை என்று அண்மைய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. உணர்வுகள் இல்லாமல் மனிதனின் பகுத்தறிவுகூட வேலை செய்யாது [11]. புலிகளின் மனபலத்தில்  உலகில் நிகரற்ற படையை உருவாக்க முடிந்ததற்கு காரணம் உணர்வுகள்தான்.  மக்களிடம் அவ்வாறான உணர்வுகளை உருவாக்குவது முக்கியம். உணர்வுகள்  பெரும்பாலும் வளரும் வயதில் உருவாவதனால், அதற்கேற்றவாறு கல்வி பண்பாட்டு அமைப்புகளை  சீரமைப்பது முக்கியமானது. வளர்ந்து இருபது வயதிற்கு மேலான பின்பு  உணர்வுகளை உருவாக்குவது கடினமானது.
 1. ஒரு நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் வரலாறு முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு சமூகமும் தனது எதிர்காலத்தை வரலாற்றின் சாயலிலேதான்  அமைக்க முற்படுகிறது. புலிகள் யாருக்கும் இல்லாத நிகரற்ற வரலாற்றைப் படைத்திருக்கிறார்கள். அவற்றை முழுவதுமாக ஆவணப்படுத்துவது அதிமுக்கியமானது. அதை ஒவ்வொரு குழந்தைக்கும் கற்பிப்பது அதைவிட முக்கியமானது. அதனால் அதற்கேற்ற பண்பாட்டு அமைப்புகளை உருவாக்கவேண்டியது முக்கியம் பெறுகிறது. ஒவ்வொரு தமிழருக்கும் என்று புலிகளின் வரலாறு தெரிகிறதோ, என்று ஒவ்வொரு வீடும் மாவீரர் நாளில் வணக்கம் செலுத்துகிறதோ, அன்று தமிழின விடியல் வெகுதூரம் இருக்கப்போவதில்லை. இது எதிரிகளுக்கும் தெரியும். அதனால்தான் புலிகளின் வரலாற்றை மறைக்க முழு மூச்சில் செயல்படுகிறார்கள். அவர்களின் கல்லறைகளை இடித்தார்கள், போரில் அழியாத பதுங்கு கட்டிடங்களைத் வெடி வைத்து தகர்த்தார்கள், தலைவர்களின் உடல்களை மறைத்தார்கள்,   ஐயா நெடுமாறனின் நூலை எரிக்க நீதி மன்றம் உத்தரவிடுகிறது. புலிகள் பற்றிய திரைப் படங்களுக்கு தடை இடுகிறது. அவர்கள் அஞ்சுவது புலிகளின் வரலாறு என்ற மாபெரும் ஆயுதத்திற்குத்தான். புலிகளின் வரலாற்றை மறைக்காமல் அவர்களால்  தமிழரை அடிமைப்படுத்த முடியாது [1].
 1. எதிரிகளின் ஆற்றலை உறிஞ்சி நாம் பலம்பெறுவது ஒரு முக்கிய உத்தியாக இருக்கவேண்டும். புலிகளின் பெரும்பாலான ஆயுதங்கள் எதிரிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டவையே [5].
 1. இறுதிப்போரை தோல்வி என்று எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. கிரேக்கர்களின் தெர்மாப்பிளையோ அல்லது யூதர்களின் மாசாதவோ தோல்வி என்று பதியப்படவில்லை. அவை மகத்தான வெற்றிகளாகவே பதியப்பட்டுள்ளன. இதுபோன்ற நிகழ்வுகள் காலம் முழுதும் எதிரொலித்து ஒரு இனத்தை காத்து இயக்கும் வல்லமை கொண்டது. அதனால் நந்திக்கடலின் எதிர்கால விளைவுகளை கருத்தில் கொண்டு அதை ஒரு மகத்தான வெற்றியாகவே பதியப்படவேண்டும். இந்த வெற்றி மனநிலையே நம்மை அடுத்த கட்டத்திற்கு நம்பிக்கையுடன் நகர்த்தும் உந்து சக்தியாக இருக்கும். எவ்வாறு கிரேக்கர்களும் யூதர்களும் மீண்டார்களோ, அதுபோன்ற மீட்சிக்கு வழிவகுக்கும். இவ்வுலகில் போரிட்டு அழிந்த இனங்களைவிட, போரிடாமல் அழிந்த இனங்கள்தான் மிக அதிகம். போர்தான் ஒரு தேசத்தின் ஆன்மாவையே உருவாக்குகிறது என்கிறார் புகழ்பெற்ற தத்துவமேதை ஏகல்[3,12].

புலிகள் எவ்வாறு பலவெற்றிகளைப் பெற்றார்கள் என்று பலகாரணிகளை அடுக்கினேன்,  ஆனால் பிரபாகரன் அவர்களை  அவற்றில் உள்ளடக்கவில்லை. ஏனென்றால் இவற்றை உருவாக்கியதே அவர்தான்.  பிரபாகரன் போன்ற ஒரு ஆளுமை இனி  எவ்வளவு காலமானாலும் கிடைக்கப்போவதில்லை.  பிரபாகரன் போன்ற தலைமையை எப்படி உருவாக்குவது என்பதை எந்த அறிவியல் தத்துவத்தாலும் கூற முடியாது. இதுபோன்ற நிகழ்வுகளை Blackswan என்கிறார் நசீம் தலீபு [13]. பிரபாகரன் அவர்கள் சித்தாந்தம், பண்பாடு, சட்டம், ராணுவ தந்திரங்கள், படைத்தலைமை, நாட்டின் தலைமைப்பொறுப்பு, உலக அரசியல் எனப் பலதுறைகளை கட்டி ஆண்ட ஆளுமை. மற்ற பெரும் தலைவர்கள் ஏதாவது ஒன்றையாவது வெளியிலிருந்து கடன் வாங்கி இருப்பார்கள். உதாரணமாக லெனின், மாவோ ஆகியோர் மார்க்சிடம் இருந்து சித்தாந்தத்தை, பண்பாட்டை கடன் வாங்கினர். நான் அறிந்தவரையில் பிரபாகரனைப் போல இவ்வாறு அனைத்திலும் ஆளுமை செலுத்தியவர் இருவரே. ஒருவர்  சுபார்ட்டாவின் இலைக்கர்கசு[14], இன்னொருவர் முகம்மது நபிகள்.

பிரபாகரன் போன்ற தலைமை நமக்கு இனி கிடைக்கப்போவதில்லை, ஆனால் நாம்  மனம்  தளரத்தேவையில்லை. நபிகளின் காலத்தில் அரேபியா பொற்காலம் காணவில்லை, மாறாக அவரின் மறைவிற்குப்பின் வந்த தலைமைகளை பொற்காலம் படைத்தனர். சுபார்ட்டவும் அவ்வாறே.  நபிகள் போன்ற  தலைமைகள் என்ன செய்கிறார்கள் என்றால், நாட்டிற்கு ஒரு பலமான அடித்தளத்தை அமைத்து போகவேண்டிய பாதையையும், வழிமுறைகளையும் உருவாக்கிவிடுகிறார்கள். அவர்களுக்குப் பின்வரும் தலைமைகள்  அதை பின்பற்றி பெரும் வெற்றிகளைப் பெறுகிறார்கள். இவ்வாறுதான் நாம் பிரபாகரனைப் பார்க்கவேண்டும். பொதுவாக இதுபோன்ற மாபெரும் ஆளுமைகளைப் பற்றி கூறப்படுவது என்னவென்றால் “அவர்கள் சரியான நேரத்தில் தோன்றுவார்கள், சரியான நேரத்தில் மறைவார்கள்”. நாம் பெரிதாக கலங்கத் தேவையில்லை. நாம் மாபெரும் தேசம் படைக்க என்ன தேவையோ,  அதற்கான மிக பலமான அடித்தளத்தை பிரபாகரன் படைத்துவிட்டார். இனி மிச்சம் இருப்பதை கட்டி முடிப்பது மட்டுமே நமது வேளை. இங்கு ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.  பிரபாகரனின் பாதை  என்பது மதங்களைப்போல குருட்டுத்தனமாக  பின்பற்றுவது கிடையாது. பகுத்தறிந்த செயல்பாடுகளையும் நம்பிக்கையையும்  கலந்த பாதை.

இனி நாம் என்ன செய்யவேண்டும் என்பதை  சுருக்கமாகக் கூறினால் “நமது சூழலுக்கேற்ற சிக்கலான அமைப்புகளை கட்டி எழுப்பவேண்டும்”. நாம் பார்த்த அனைத்து உத்திகளும் அடிப்படையில் இதை நோக்கியதே. நாம் எதிரியைத் தோற்கடிக்க அவர்களைவிட சிக்கலான அமைப்பாக நாம் இருக்கவேண்டும். இதைப் பயன்படுத்திதான் புலிகள் வெற்றி கொண்டார்கள், நாம் பயணிக்கவேண்டிய பாதையும் இதுதான். புலிகள் இவ்வுத்திகளை இராணுவ அமைப்பிற்கு பயன்படுத்தினார்கள், நாம் அனைத்து துறைகளிலும் பயன்படுத்தவேண்டும். புலிகள் வகுத்த பாதையைக் கொண்டு நாம்  இழந்ததை மட்டும் மீட்கப்போவதில்லை. தமிழ்ச்சமூகத்தின் சாதி பாகுபாடுகளை ஒழித்து, சமூகத்தை மறுசீரமைத்து, சிக்கலான அமைப்புகளை கட்டி எழுப்பி, உலகில் அணைத்து துறைகளிலும் மாபெரும் சாதனைகள் நிகழ்த்துவோம். அதற்கான வலிமை புலிகளின் வரலாற்றிற்கு உண்டு. அவ்வரலாறுதான்  புலிகள் நமக்கு விட்டுச்சென்ற மாபெரும் கொடை.

 

 

உசாத்துணை:

 

 1. சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் –  பகுதி 1
 2. சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் –  பகுதி 2
 3. சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் –  பகுதி 3
 4. சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் –  பகுதி 4
 5. சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் –  பகுதி 5
 6. சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் –  பகுதி 6
 7. Bar-Yam, Yaneer. Making things work: solving complex problems in a complex world. Knowledge Industry, 2004.
 8. Osinga, Frans PB. Science, strategy and war: The strategic theory of John Boyd. Routledge, 2007.
 9. Alberts, David S., and Thomas J. Czerwinski. Complexity, global politics, and national security. NATIONAL DEFENSE UNIV WASHINGTON DC, 1997.
 10. Popper, Karl. The open society and its enemies. Routledge, 2012.
 11. Haidt, Jonathan. The righteous mind: Why good people are divided by politics and religion. Vintage, 2012.
 12. சு.சேது, தெர்மாப்பிளையும் நந்திக்கடலும்
 13. Taleb, Nassim Nicholas. The black swan: The impact of the highly improbable. Vol. 2. Random house, 2007.
 14. சு.சேது, சுபார்ட்டா (Sparta) எனும் விசித்திர நாடும் புலிகளின் ஈழமும்
This entry was posted in அரசியல், ஈழப்போர், தமிழ்த்தேசியம், Uncategorized. Bookmark the permalink.

3 Responses to ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 7 – இறுதி பாகம்

 1. Pingback: பிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. | வெளிச்சவீடு

 2. Pingback: மாவீரர்களின் அர்த்தமுள்ள வாழ்க்கை | Sethu's Blog

 3. Pingback: மாவீரர்களின் அர்த்தமுள்ள வாழ்க்கை ! | EelamView

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s