பிரபாகரன் சட்டகம்: புலிகளின் உத்திகள்

கட்டுரையை கீழுள்ள சுட்டியில் படிக்கவும்:

பிரபாகரன் சட்டகம்: புலிகளின் உத்திகள்

 

Posted in Uncategorized | Leave a comment

தமிழ்த்தேசியத்துக்கான பெருந்திட்டம்

என்னுடைய முதல்  நூல்:
grandstrategy
தமிழ்த்தேசியம் வெற்றிபெற என்ன செய்யவேண்டும், எது மாதிரியான உத்திகளைப் பின்பற்றவேண்டும், எது மாதிரியான மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும், எவ்வாறு அனைத்து தமிழ்த்தேசிய அமைப்புகளையும் இணைத்து சிறப்பாக செயல்படுவது என்று நீங்கள் சிந்திக்கிறீர்கள் என்றால் இதுதான் நீங்கள் படிக்கவேண்டிய நூல்.
கடந்த சில பத்தாண்டுகளில் உத்திகளைப் பற்றிய ஆராய்ச்சியாளர்களின் பார்வை வெகுவாக மாறிவிட்டது, ஆனால் நாம் பழைய உத்திகளிலேயே மூழ்கி இருக்கிறோம். இன்றைய நவீன உத்திகளை அனைவருக்கும் புரியும்படியாக எளிமையாக விளக்கி, தமிழ்த்தேசியத்தின் இலக்குகளை அடைவதற்கான ஒரு பெருந்திட்டத்தை (Grand Strategy) வகுக்கிறது இந்நூல்.

புலிகள், திராவிட இயக்கம், இந்துத்வா எனப் பல்வேறு அமைப்புகளை ஆய்வுக்குட்படுத்தி நாம் என்ன பாடங்களை கற்கமுடியும் என சிந்திக்கவைக்கிறது.
சன் சூவின் போரியல் உத்திகள், அமெரிக்க-அல்கொய்தாப் போர், திரபால்கர் போர், புலிகளின் கொரில்லாப்போர் எனப் பெரிய வலம் வருகிறது. போரிலிந்து பொருளாதாரம் வரை, சதுரங்க ஆட்டத்திலிருந்து அரசியல் ஆட்டம்வரை உத்திகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்று உதாரணங்களுடன் விளக்குகிறது.
தமிழர்களின் எதிர்காலத்துக்காகப் போராடும் ஒவ்வொருவரும் படித்து விவாதிக்கவேண்டிய நூல்.

 

Posted in Uncategorized | Leave a comment

மாவீரர்களின் அர்த்தமுள்ள வாழ்க்கை

ஒரு நாடு சிறக்க வேண்டுமானால் அறிவிற்சிறந்த தத்துவமேதை தான் அரசாள வேண்டும் என்றார் தத்துவமேதை பிளேட்டோ [2]. ஆனால் என்னவோ இவ்வுலகில் அறிவிற்சிறந்தவர்கள் ஆட்சிக்கு வருவதும் அபூர்வம்;  ஆட்சிக்கு வருபவர்கள் அறிவாளிகளாக இருப்பதும்  அபூர்வம்.  ஆனால்  சிலநேரம் அனைத்தையும் மீறி அவ்வாறான தத்துவ அரசன் தோன்றுவதுண்டு.  இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் ரோமாபுரிப் பேரரசை  ஆண்ட மார்க்கசு அரேலியசு (Marcus Aurelius) அதுபோன்ற ஒரு தத்துவ மேதை [1]. அவரின் ஆட்சி காலம் ரோமாபுரிப் பேரரசின் பொற்காலமாகக்  கருதப்படுகிறது.

தமிழர் வரலாற்றில் எண்ணற்ற புலவர்கள் தோன்றி அழியாத் தத்துவங்களையும்  காப்பியங்களையும்  படைத்தாலும், எந்த ஒரு அரசனும் அவ்வாறு படைத்ததாக வரலாறு இல்லை. அவ்வாறான தத்துவ அரசன் (philosopher king) என்ற பட்டம் ஒருவருக்கு அளிக்கப்படக்கூடியத் தகுதி இருக்கிறதென்றால், அது பிரபாகரன் அவர்கள் மட்டுமே. அரேலியசின் [1] நூலைப் படிக்கும்பொழுதுதான் எவ்வளவு தூரம் அரேலியசும் பிரபாகரனும் ஒரே பண்புகளைக் கொண்டிருந்தார்கள் என்று விளங்குகிறது.   உதாரணமாக  அடக்கம்,  ஒழுக்கம்,  வீரம்,  பயனில சொல்லாமை, கடமையைக்  கண்ணாகக் கருதுதல், இறப்பைத் தூசுபோலக் கருதுதல், அன்பு, குடும்பம், வாழ்க்கைத் துணை, இயற்கையை ஒன்றி  வாழ்தல், இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மாதிரி ஏற்றுக்கொள்ளும் பக்குவம், அறம் போற்றுதல், மூடநம்பிக்கையை வெறுத்தல், அமைதி, பற்றற்று இருத்தல், எளிமை, நேர்மை, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமை, சிந்தித்து செயலாற்றல், இன்பத்தைவிட ஒழுக்கத்திற்கு முதன்மை, புலன்களை அடக்குதல், எதற்கும் கலங்காத அமைதி, மேடை அடுக்குமொழி பேச்சுக்களில் பங்குகொள்ளாமை,  அனைவரிடமும் எளிமையாகப் பழகுதல், காலத்தை வீணடிக்காமை, நீதி தவறாமை,  ஒருவரின் செயலுக்கேற்ற பரிசையோ தண்டனையோ உடனுக்குடன் வழங்குதல், புகழ்ச்சியை வெறுத்தல், கூர்ந்து கவனித்தல், தூரநோக்கான பார்வை,  தெளிந்த சிந்தனை, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படாமல் செய்யவேண்டியதைச் செய்தல், தேவையற்ற தர்க்கங்களில் ஈடுபடாமை போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

அரேலியசின்   தத்துவம் என்பது:  இந்த பிரபஞ்சத்தின் முடிவிலா கால அளவில்  நமது வாழ்க்கை என்பது கண் இமைக்கும் நொடிப்பொழுதே. இதில் ஒருவர் இருபது வயதில் இறக்கிறாரா அல்லது நூறு வயதில் இறக்கிறாரா என்பதில் எந்த வேறுபாடும் இல்லை. ஒருவர் தன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகப்  பயன்படுத்தி இருக்கிறாரா என்பதே முக்கியம். அவ்வாறான அர்த்தமுள்ள வாழ்க்கையை எந்த எதிர்ப்பிற்கும் பயப்படாமல்,  ஒழுக்கத்துடன்   தனது கடமையைத் தவறாமல் பின்பற்றுவதன்  மூலமே  அடைய முடியும்,  மாறாக  புலன்களின் `வழியாக இன்பத்தை நாடுவதன் மூலம் அல்ல.

“If you apply yourself to the task before you, following the right reason seriously, vigorously, calmly, without allowing anything else to distract you, but keeping your divine part pure, as if you might be bound to give it back immediately; if you hold this, expecting nothing, fearing nothing, but satisfied with your present activities according to nature, and with heroic truth in every word and sound which you utter, you will live happily. And there is no man who is able to prevent this.” [1]

“Never value anything as profitable that compels you to break your promise, to lose your self-respect, to hate any man, to suspect, to curse, to act the hypocrite, to desire anything that needs walls and curtains.”  [1]

பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை இத்தத்துவத்திலிருந்து  பெரிதாக வேறுபட்டது அல்ல.  இவ்வுலகில்  மாற்றங்கள் சூறாவளிபோல நிகழ்வது. தத்துவ பிடிப்பு இல்லாத ஒருவரால் நீண்டகாலம் ஒரு திசையில் பயணிக்கமுடியாது.

அரேலியசு  தனது வாழ்க்கைத் தத்துவங்களை தனது சுய குறிப்புக்காக எழுதினார்.  பின்பு அது அவரின் இறப்புக்குப் பின்னர் நூலாக மற்றவர்களால் வெளியிடப்பட்டது. இன்று அது ஒரு தலைசிறந்த தத்துவநூலாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது.  பிரபாகரன் அவர்கள் அரேலியசைப்  போன்று அடக்கமானவர். அரேலியசு தனது தத்துவங்களைத் தானாக முன்வந்து நூலாக வெளியிடாதபொழுது, பிரபாகரனும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் ஒன்றை  உறுதியாகக் கூற முடியும்:  பிரபாகரன் அவர்கள் இறுக்கமான பிடிப்பு கொண்ட தத்துவ மேதை.  அவரை எதைக்கொண்டும் மாற்ற முடியாது.

பிரபாகரன் அவர்கள் ஒரு தலைவராக உலகம் வியக்கும் சாதனைகள் புரிந்தவர் என்றாலும், வாழ்க்கையில்  அவர் ஒரு துறவியே. அவரை எளிதாக திருவள்ளுவர், வள்ளலார் ஆகியோர் வரிசையிலும் சேர்த்துக்கொள்ளலாம்.

“Nearly two millennia after Marcus set down his thoughts, they speak with undiminished eloquence, giving us pause to wonder a man who stood at the pinnacle of worldly power yet preserved the inner life of a saint.” [1]

ஒரு நாட்டின் ஒழுக்கம் தனி மனித ஒழுக்கத்திலிருந்தே ஆரம்பிக்கிறது. ஒழுக்கமில்லாத மக்கள் ஒழுக்கமான நாட்டை எதிர் பார்ப்பது என்பது கானல் நீரே. புலிகளின் ஈழம் உலகில் மிகச்சிறியது என்றாலும், உலகில் யாரும் எண்ணிப்பார்க்க முடியாத சாதனைகளைப் படைத்தனர். அந்த வெற்றிகளின் ஊற்று இந்த தனிமனித ஒழுக்கத்திலிருந்தே பிறந்தது.

Civic virtue is a mirage unless anchored in the inner virtue of each citizen [1]

பெரும்பாலான மாவீரர்கள்  முப்பது வயதுக்குள் விதையாயினும், அவர்கள் சாதித்தது ஆயிரம் ஆண்டுகளானாலும் நினைவு கூறப்படும். அவர்கள் வாழ்ந்தது நிறைவான அர்த்தமுள்ள வாழ்க்கை.

ஒரு நாட்டின்  பொற்காலம் என்பது செல்வச்சிறப்பினால் உருவாவது என்று பார்ப்பது தவறான பார்வை. என்று ஒரு சமூகத்தில் நீதி, நேர்மை, ஒழுக்கம், பண்பாடு சிறக்கிறதோ, அன்று தான் பொற்காலம் ஏற்படுகிறது. செல்வச்செழிப்பு என்பது அதன் ஒரு விளைவுதானே ஒழிய காரணமல்ல. அந்த வகையில் பார்த்தால் புலிகளின் ஈழ நாடு செல்வத்தில் குறைந்திருந்தாலும், தேவையான மற்ற  அனைத்திலும் நிறைந்திருந்தது. அது பொற்காலம் படைக்கத் தேவையான  அனைத்து அடிப்படைக் கூறுகளைக் கொண்ட  ஒரு அர்த்தமுள்ள நாடு.

ஒரு நல்ல சமூகம் தனது மாவீரர்களை முதலில் போற்றும், அதன்பின் அதன் அறிவாளர்களைப் போற்றும். அதை உலகின் தலைசிறந்த முதல் பத்து பரிசில்கள் பிரதிபலிக்கின்றன [3]. இன்று  நமது சமூகத்தில்  மாவீரர்களும் அறிவாளர்களும்  பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.  இன்று புகழ் என்பது பொய்யான திரைப்படத்தில் நடிப்பவர்களை நோக்கிப் பாய்கிறது. இது ஒரு சமூகக்கேடாக மாறி நிற்கிறது. இன்றைய நமது சமூகத்தின் வீழ்ச்சிக்கு இந்தப் புகழின் திரிபும் ஒரு காரணம் [13]. புகழ் என்பது அறம் சார்ந்து அறிவு சார்ந்து  நிற்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் சமூகம் சீரழிய வாய்ப்புகள் அதிகம்.  பண்டைய தமிழர் நாகரீகத்தில்  புகழ் என்பது வாழ்விற்கு முக்கியமான வீரம், அறிவு, அறம்,  ஈதல், கலை, நாடகம், நடனம், இலக்கியம் ஆகியவற்றை ஒட்டி அமைந்தது. அது மாபெரும் படைப்புகளையும் வீரத்தையும்  உருவாக்கியது.  புலிகள் அந்த பண்பாட்டு சிறப்பை மீண்டும் கொண்டு வந்து பல சாதனைகளைப் படைத்தனர். மாவீரர் நாள் தமிழரின் நாட்காட்டிகளில் இருப்பதிலேயே முக்கியமான நாளாக என்று சமூகத்தில் பார்க்கப்படுகிறதோ, அன்று நாம் சாதனைகள் படைக்கும் தன்மை கொண்ட சமூகமாக மாறி நிற்போம்.

தமிழினம் மீண்டு எழவேண்டுமானால், அது தனிமனித ஒழுக்கத்தை நிராகரித்துவிட்டு செய்ய முடியாது. அவ்வாறான ஒழுக்கத்தை கற்க பின்பற்ற நாம் வேறெங்கும் சென்று தேடி அலையவேண்டியதில்லை. பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொரு குழந்தைக்கும் கற்பித்து, கூடவே திருக்குறளையும்  கற்பித்தால் போதுமானது. பிரபாகரனின் வாழ்க்கை என்பது  திருக்குறள் கூறுவதிலிருந்து பெரிய வேறுபாடு இல்லை என்றுதான் கூறவேண்டும். சிலர் பெரியாரைப் பிடிக்கும், ஆனால் பிரபாகரனைப் பிடிக்காது என்பர். ஆனால் உண்மை என்னவென்றால்  பிரபாகரனுக்குள் பெரியார் அடக்கம். பிரபாகரனின் தத்துவங்கள் இன விடுதலை[4], தனிமனித ஒழுக்கம், பண்பாடு [ 8],  போரியல் மற்றும் உத்திகள் [5, 6,7,9,10],  உலக அரசியல்[4], தலைமைத்துவம் [11]  என்று சமூகம் சார்ந்த அனைத்து பரிணாமங்களைக் கொண்டுள்ளது. பிரபாகரன் என்ற பாத்திரம் மிகப் பெரியது; அதை திருக்குறளைக் கொண்டோ அல்லது பெரியாரைக் கொண்டோ நிரப்பிவிட முடியாது. பிரபாகரனின் தத்துவங்களின் தனிச்சிறப்பு என்னவென்றால்,  அவை  உலகம் அனைத்தும் காணும்படி செயல்முறைப் படுத்தப்பட்டு உலகம் வியக்கும் வெற்றிகளை அடையக் காரணமாக அமைந்தது.  நாம் அவற்றை நம்பி பயன்படுத்தலாம்.  ஆனால் இந்த சிறப்பு நூல்களில் உள்ள தத்துவங்களுக்குக் கிடையாது.

சிலர் பிரபாகரன் அவர்கள்  சில    ஆதாரமில்லாத தவறுகளை செய்திருக்கிறாரென்று காரணம் கூறி  அவரை நிராகரிக்கின்றனர். உலகில் தவறு செய்யாத மனிதனே கிடையாது. தத்துவமேதையாகக் கருதப்படும் அரேலியசே தனது  ஆட்சியில் கிறித்தவர்களைத் துன்புறுத்தினார், ஆனால் அதன் காரணமாக அவரது உண்மையான தத்துவ பங்களிப்பு நிராகரிக்கப்படவில்லை. அதே கிறித்துவ உலகம் அவரை ஒரு சிறந்த கிருத்துவ உள்ளம்  கொண்ட தத்துவமேதையாக ஏற்றுக்கொண்டுள்ளது.  பிரபாகரனின் உண்மையான பங்களிப்பை நிராகரிப்பது அறிவுடைமை ஆகாது.

A man who, for reasons of state, possibly sanctioned the persecution of Christians achieved a genuinely Christian depth of humility… “what an affinity  for Christianity had this persecutor of the Christians!”. [1]

ஈழப்போர் என்பது  தமிழர் வரலாற்றின் மாபெரும் பரிணாமம். அது தனக்கு முந்தைய மற்றும் பண்டைய  வரலாற்று, பண்பாட்டு, அறிவுக்   கூறுகளை உள்வாங்கியது மட்டுமில்லாமல்  புதுமையைப் படைத்தது. ஈழப்போரின் விளைவாக தமிழ்த்தேசியம் பாரிய முன்னேற்றங்களை இன விடுதலை, பண்பாடு, வாழ்க்கைத் தத்துவம், போரியல்  உத்திகள், தலைமைத்துவம், உலக அரசியல், சமூகம்  என பல துறைகளில் கண்டுள்ளது.    நாம் மாபெரும் தேசம் படைக்க என்ன தேவையோ, அதற்கான மிக பலமான அடித்தளத்தை பிரபாகரனும் மாவீரர்களும் கட்டிவிட்டனர்[12]. இனி மிச்சம் இருப்பதை கட்டி முடிப்பது மட்டுமே நமது வேளை.   அதை செய்து முடிக்க வேண்டுமானால், அர்த்தமுள்ள வாழ்க்கையை நாம் வாழ நினைத்தால் மட்டுமே முடியும்.

குறிப்பு: அர்த்தமுள்ள வாழ்க்கை என்றால் போரிடுவது மட்டும் என்று  பொருள் கொள்ளக்கூடாது.

இறுதி யுத்தத்தில் நந்திக்கடலில் என்றுமில்லாத பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் என்று சிலர் நினைக்கலாம்.  ஒரு தத்துவ மேதையாக அவரைப் பார்த்தால் அவரின் சிந்தனையைத் தெளிவாக உணரலாம்: “எப்பொழுதும் போல நான் என்னுடைய கடமையைச் செய்கிறேன், நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள்“.  நாம் நம் கடமையைச் செய்கிறோமா என்பதுதான் ஒவ்வொரு தமிழரும் இந்த  மாவீரர் நாளில் கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி. அதுவே நாம் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான முதற்படி.

 1. Aurelius, Marcus. Meditations.
 2. Goldstein, Rebecca. Plato at the Googleplex: Why philosophy won’t go away. Vintage, 2015.
 3. Top Ten Most Prestigious Medals, https://www.historyandheadlines.com/top-ten-prestigious-medals/
 4. பரணி கிருஷ்ணரஜனி, நந்திக்கடல்’ கோட்பாடுகள். ஒரு அறிமுகம், http://eeladhesam.com/?p=5459
 5. சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் –  பகுதி 1
 6. சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் –  பகுதி 2
 7. சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் –  பகுதி 3
 8. சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் –  பகுதி 4
 9. சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் –  பகுதி 5
 10. சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் –  பகுதி 6
 11. சு.சேது, பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவம்
 12. சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 7  – இறுதி பாகம்
 13. சு.சேது, ஒரு சமூகத்தின் சாதனையில் புகழின் பங்கு
 14. Popper, Karl. The open society and its enemies. Routledge, 2012.

 

 

 

 

Posted in ஈழப்போர், பிரபாகரன், Uncategorized | 1 Comment

பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவம்

நீண்ட காலமாக ஒரு தலைமையைப் பற்றி நிலவும் பொதுவான கருத்து என்னவெனில் தலைவர் என்பவர் சிறந்த சதுரங்க ஆட்டக்காரர் போன்று திட்டமிட்டு காய்களை நகர்த்துபவர். அவர் திட்டமிடுவார், அதன்படி படைகள் நகர்த்தப்படும். அவர்கீழ் வரும் அனைவரும் அவர் கட்டளைப்படி செயல்படுவர். இதுபோன்ற பார்வையே பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவம் பற்றியும் பரவலாக தமிழுலகத்தில் பார்க்கப்படுகிறது.  இதில் சிக்கல் என்னவென்றால், இப்பார்வை அரைகுறையானது மட்டுமல்ல, பிரபாகரனின் முக்கியமான தலைமைப் பண்புகளை இப்பார்வை கண்டுகொள்வதில்லை. இதன் ஒரு மோசமான விளைவு என்னவென்றால், நமக்கு  எது போன்ற தலைமை எதிர்காலத்தில் தேவை என்பதன் பார்வையும் பிழையாகிறது. அதனால் நாம் தவறான தலைமைகளை தேடிக்கொண்டிருக்கிறோம்  அல்லது உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தைப் பற்றிய ஒரு முழுமையான பார்வையே, நாம் எதிர்காலத்தில் எது போன்ற தலைமைகளை உருவாக்கவேண்டும் என்பதையும் சிறந்த தலைமைகளை முதலிலேயே அடையாளம் காணவும் உதவும். இதை விளக்குவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

வரலாறு என்பது  மிகப்பெரியது. அதை நாம் கொண்டிருக்கும் தத்துவங்களைக்  கொண்டே பார்த்து புரிந்து கொள்கிறோம்.  நாம் கற்றுக்கொள்ளும் தத்துவங்கள் விரிவடையும் பொழுது, வரலாற்றைப் பற்றிய நமது பார்வையும் மாறுகிறது. அதுபோன்ற மாற்றமே அண்மையில் அமெரிக்க இராணுவத்தளபதி மெக்கிரிசுட்டல் எழுதிய “Team of  Teams” என்ற நூலைப் படிக்கும்பொழுது நிகழ்ந்தது [1]. பிரபாகரனின் தலைமைத்துவ பண்புகளையும் புலிகளின் போர்முறையையும் புரிந்துகொள்ள இது முக்கியமான தத்துவம் என்பதால், இதை முதலில் சிறிது விரிவாகப் பார்ப்போம்.

அமெரிக்க – அல்கொய்தாப் போர்:

ஈராக்கில் சாதம் குசைன்   நீக்கப்பட்டபின் அமெரிக்கப் படைகள் அல்கொய்தாப் படைகளை 2004-இல் எதிர்கொண்டது.  பல மடங்கு ஆட்பலமும் ஆயுதபலமும் கொண்ட உலகின் தலைசிறந்த அமெரிக்கப்படைகள், எந்த பெரிய பயிற்சியோ ஆயுத பலமோ  அற்ற அல்கொய்தா குழுவிடம் திணறிக்கொண்டிருந்தது. அல்கொய்தாவின் தாக்குதல்கள் கூடிக்கொண்டே சென்றதே ஒழிய குறையவில்லை. பொதுவாக ஒரு இயக்கத்தின் உயர்நிலை தளபதிகளை  அழித்தால்  இயக்கம் நொறுங்கிவிடும், ஆனால் அல்கொய்தாவிடம் அது எடுபடவில்லை.  இதற்கு ஒரு தீர்வுகாண  அமெரிக்கப்படைகளின் ஈராக் கட்டளைத்தளபத்தி மெக்கிரிசுட்டல், தனது படைகளின் செயல்படும் விதத்தை ஆராய்ந்தார். படைகளுக்கு இடப்படும் உத்திகளிலோ, கட்டளைகளிலோ, ஆயுதங்களிலோ, அல்லது படைவீரர்களின் திறமையிலோ எந்த குறைபாடுகளும் இல்லை. அனைத்தும் சரியாகவே இருந்தது, ஆனாலும் தோற்றுக்கொண்டிருந்தார்கள்.

ஆழமாக ஆராய்ந்தபின் அவர் கண்டறிந்தது என்னவென்றால், அமெரிக்கப்படைகள் எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறதோ அதுதான் சிக்கலே. பல நூற்றாண்டுகளாக பெரிய இராணுவங்கள் தோன்றிய காலத்திலிருந்து, தளபதி ஒரு தாக்குதலை திட்டமிட்டு கட்டளையிடுவார், அதைக் கீழிருந்த படைவீரர்கள் செய்து முடிப்பார்கள். இத்தனை நூற்றாண்டுகளாக வெற்றிகரமாக பின்பற்றப்பட்ட முறை இப்பொழுது வேலை செய்யவில்லை. அதற்கு காரணமாக அவர் கண்டறிந்தது என்னவென்றால், அல்கொய்தா படைகள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து, அக்குழுக்கள் தாமாக திட்டமிட்டு வாய்ப்புள்ள இலக்குகளை வீழ்த்திவிட்டு, அமைதியாகி விடுவார்கள். அடுத்த தாக்குதல் இன்னொரு குழுவால் இன்னொரு இடத்தில் நடக்கும். எது எப்பொழுது நடக்கும், எங்கே நடக்கும், யாரால் நடக்கும் என்று அமெரிக்கப்படைகளுக்கு தெரியாமல் கடும் குழப்பநிலையில் இருந்தார்கள். அமெரிக்கப்படைகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தும் முன் அல்கொய்தாப்படைகள் வேறு இடத்திற்கு நகர்ந்திருக்கும்.

இது எப்படி என்றால் ஒரு உதைபந்தாட்டத்தை  எடுத்துக்கொள்வோம். இதில் ஒரு அணியில் உள்ள ஆட்டக்காரர்கள்  மொத்த மைதானத்தையும் கவனிக்கிறார்கள். அவ்வணியில் உள்ள மற்றவர்கள் எப்படி ஆடுகிறார்கள், பந்து எங்கே இருக்கிறது  என்று கவனித்து அதற்குத்தகுந்தபடி தாங்களாகவே எங்கே நகரவேண்டும் என்று நகருகிறார்கள்.  இன்னொரு அணியில் உள்ள ஆட்டக்காரர்களுக்கு மொத்த மைதானமும் தெரியாது,  ஒவ்வொரு வீரரும் எங்கே போகவேண்டும் என்ன ஆடவேண்டும் என்று தொடர்ந்து பயிற்சியாளரின் (coach)  நேரடி கட்டளைப்படி நகர்வுகளை மேற்கொள்வார். இவ்வாறு நடந்தால் என்னவாகும்? இரண்டாவது அணி மிக மெதுவாக நகரும், முதல் அணி இரண்டாம் அணி உருவாக்கும் ஓட்டைகளின்  நடுவாக புகுந்து இலக்கை அடைந்து வெற்றி பெறுகிறார்கள். இரண்டாம் அணி வீரர்கள் எவ்வளவுதான் திறமைசாலியாக உடல்வலு மிக்க, சிறந்த ஓடக்கூடிய  வீரர்களாக இருந்தாலும், முழு மைதானமும் தெரியாமல்  பயிற்சியாளர் இடும் கட்டளைக்கு காத்து நிற்பதால் தோற்பார்கள். இரண்டாம் அணி எந்த ஒரு பெரிய பயிற்சி இல்லாவிட்டாலும், திறமை இல்லாவிட்டாலும் வெற்றி பெறுவார்கள். இதுதான் அமெரிக்கப்படைகள் தோற்றுக்கொண்டிருப்பதற்குக் காரணம் என்று மெக்கிறிசுடல் கண்டறிந்தார்.

அமெரிக்கப்படைகள் அல்கொய்தாவை வெல்லவேண்டுமானால், தங்கள் பெருமையை விட்டுவிட்டு அல்கொய்தாவிடம் இருந்து கற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவுக்கு வருகிறார். அதன் விளைவாக அமெரிக்கப்படைகளை சிறுசிறு குழுக்களாக, வேகமாக இயங்கி தானாக முடிவெடுக்கும் அதிகாரத்தை அளிக்கிறார். ஒரு மாதத்திற்கு 18 தாக்குதல்கள் என்று மேற்கொண்டு வந்த அமெரிக்கப்படைகள், மறுசீரமைப்பிற்குப்  பின் மாதத்திற்கு 300 தாக்குதல்களை மேற்கொள்ள  முடிந்ததது. அது மட்டுமின்றி, தாக்குதல்களின் வெற்றி  விகிதமும் கூடியது.  இதன் பின்னரே ஈராக்கில் அல்கொய்தாவை கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.  இத்தனைக்கும் அமெரிக்கப்படைகள் பெரிதாக ஆட்பலத்தையோ, ஆயுத பலத்தையோ கூட்டவில்லை.  மறு  சீரமைப்பு மட்டுமே அவர்களின் பலத்தை 17 மடங்கு கூட்டி இருக்கிறது. மெக்கிறிசுடல் தான் கற்றுக்கொண்ட பாடத்தை குழுக்களின் குழு (Team of Teams) என்று நூலாக எழுதியிருக்கிறார் [1]. அதிலிருந்து வரும் கருத்துக்களை அடிப்படையாகக்  கொண்டே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

ஏன் இந்த  தீடீர் மாற்றம் என்றால், நவீன தகவல் தொழில்நுட்பம், இணையம் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட  பிணைப்புகள் ( fast communication and  interconnectedness)  போன்றவை மாற்றங்களை வெகுவேகமாகக் கொண்டுவருகிறது. இம்மாற்றங்கள் போரில் மட்டுமல்ல, சமூகத்தில் அனைத்து துறைகளிலும் அதிவேக மாற்றங்களைக் அதிக அளவில் கொண்டுவருகின்றன. இம்மாற்றங்களை ஒரு தலைமையால் அனைத்தும் புரிந்து திட்டமிடுவது சாத்தியமற்றது என்றாகிவிடுகிறது. அவர்கள் திட்டமிடுவதற்குள் களநிலவரமே மாறிப்போகும். இதுபோன்ற நிலைகளில் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட பல குழுக்களின் கூட்டாக உள்ள குழுவே வெற்றி பெரும்.

குழுக்களின் குழு தத்துவம்:

மெக்கிரிசுட்டல் தனது அனுபவத்தில் குழுக்களின் குழுவை எவ்வாறு உருவாக்குவது என்று முறை வகுத்திருக்கிறார். அதை விளக்கமாக பார்ப்போம்:

 1. ஒரு குழு என்பது நெருக்கமான நட்பினால் நம்பிக்கையினால் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் உங்கள் கல்லூரியில் படிக்கும்பொழுது உருவாக்கிய நட்புகளை எண்ணிப் பாருங்கள். அதுபோன்ற இறுக்கமான குழுக்களை உருவாக்கவேண்டும். ஒரு குழுவில் ஐந்திலிருந்து நூறுபேர் வரை இருக்கலாம். அதற்குமேல் இருந்தால்  நெருக்கமான குழுவை உருவாக்க முடியாது.  நம்பிக்கை என்பது உடனடியாக ஏற்படுவது அல்ல. தொடர்ந்து  ஒருவருக்கொருவர் உதவுவதன் மூலமும், நேரடித் தொடர்புகள் மூலமும் மெதுவாக ஏற்படுவது.
 1. இவ்வாறு உருவாக்கிய குழுக்களை எல்லாம் இணைத்து ஒரு குழுக்களின் குழுவை (Team of Teams) உருவாக்கவேண்டும். எவ்வாறு ஒரு குழுவில் உள்ளவர்கள் நெருக்கமாக இருக்கிறார்களோ, அதுபோல குழுக்கள் ஒன்றுடன் ஒன்று இணைத்து நெருக்கமாக இருக்கவேண்டும். இதற்கு குழுக்கள் இருப்பதிலேயே சிறந்த சில உறுப்பினர்களை மற்ற குழுக்களுக்கு அனுப்பி அவ்வுறுப்பினர்கள் அக்குழுவில் துணைபுரிந்து நம்பிக்கை வளர்க்கவேண்டும்.
 1. குழுக்கள் தனித்து அவர்களின் கடமைக்குத் தேவையானது மட்டும் போதும் என்று குறுகிய பார்வை கொண்டிருக்கக்கூடாது. மாறாக அனைத்து குழுக்களுக்கும் களத்தின் மொத்த நிலவரம் தெரியவேண்டும். இது அனைவரையும் இணைத்து ஒரே பொது  உணர்வை (shared consciousness) அளிக்கும், பொதுவான இலக்கை (common purpose) நோக்கி செயல்படுத்த வைக்கும்.
 1. ஒவ்வொரு குழுவிற்கும் முடிவெடுத்து செயல்படும் அதிகாரம் அளிக்கப்படவேண்டும் (Empowered execution). அவர்கள் தலைமையின் உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை. ஒவ்வொரு குழுவும் எங்கெங்கே வெற்றிபெற வாய்ப்புள்ளது என்று கூர்ந்து  கவனிக்கவேண்டும்.   வாய்ப்பை உடனடியாகப் பயன்படுத்த வேண்டும். மற்ற குழுக்களின் உதவி தேவைப்படும் எனில் அவர்களை நாடி உதவி பெறவேண்டும். மேலும் மற்ற குழுக்களின் செயல்பாடுகளையும் கவனிக்கவேண்டும். உங்களால் உதவ முடிந்தால் உதவவேண்டும்.

குழுக்களுக்கு அதிகாரம் இருப்பதால் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பதல்ல. செயல்பாட்டுக்கு சில பொதுவான விதிமுறைகள் இருக்கும். உதாரணமாக, “நமக்கு நன்மை கொடுக்கும், ஆனால் சட்டத்தை மீறாத எந்த காரியங்களையும் செய்யலாம்” என்று பொதுவான விதிமுறை வகுக்கலாம்.

இங்கே முடிவெடுக்கும் அதிகாரம் குழுக்களுக்கு அளிக்கப்பட்டுவிட்டால், தலைமைக்கு என்ன வேலை,  தலைமை தேவையா இல்லையா என்ற கேள்விகள் எழும். இங்கே தலைமையின் முக்கியத்துவம் எந்த வகையிலும் குறையப்போவதில்லை. தலைமை முன்பைவிட மிகமுக்கியம், ஆனால் அதன் கடமைகள் வேறு:

 1. தலைமையின் வேலை என்பது ஒரு தோட்டக்காரர் போன்றது. தோட்டக்காரர் எதையும் உற்பத்தி செய்வதில்லை, செடிகள்தான் உற்பத்தி செய்கின்றன. அவரின் வேலை எல்லாம்  நிலத்தை பராமரித்தல், செடிகளுக்கு உரமிடுதல், நீர் பாய்ச்சுதல், களை எடுத்தல் போன்ற வேலைகள்தான். மொத்தத்தில் செடிகள் வளர்ந்து நல்ல விளைச்சலை கொடுக்க எது மாதிரியான சூழலை உருவாக்கவேண்டுமோ, அதை உருவாக்குவதுதான் அவர் வேலை.

“It requires a gardener, a leader displaying the willingness to accept great responsibility remains central to making an ecosystem viable.” [1]

 1. ஒரு இயக்கத்தில் அந்த சூழல் என்பது ஒத்துழைப்பான வெற்றிக்குத்தேவையான ஒரு  பண்பாட்டை  உருவாக்குவதுதான்.  தலைவர் காய்களை நகர்த்துவதை  விட்டுவிட்டு சூழலை வடிவமைக்கவேண்டும்

“The role of the senior leader is no longer that of controlling puppet master, but rather that of an empathetic crafter of culture… Leaders need to shift focus from moving pieces on the board to shaping the ecosystem.” [1]

 1. குழுக்கள் முடிவெடுத்து செயல்படும்பொழுது, நடுவில் குறுக்கிடக்கூடாது. அவர்களை நம்பவேண்டும். களத்தில் நிற்கும் அவர்களுக்குத்தான் அங்கெ இருக்கும் நிலவரம் தெரியும், அவர்களால்தான் சிறந்த முடிவெடுக்க முடியும் என்று ஒதுங்கி இருந்து வேடிக்கை மட்டுமே பார்க்கலாம்.
 1. தொடர்ந்து அமைப்பை கண்காணித்து களைகளை எடுத்து அமைப்பை சீர் செய்து கொண்டே இருக்கவேண்டும். அதே நேரம் .தலைமை திறந்த வெளியாக இருக்கவேண்டும். மற்றவர்கள் அவரை கண்காணிக்க அனுமதிக்கவேண்டும். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக செயல்படவேண்டும்.
 1. ஒரு வலைப்பின்னலை தோற்கடிக்க இன்னொரு வலைப்பின்னலால் மட்டுமே முடியும் என்றுணர்ந்து செயல்படவேண்டும். குழுக்களிடையே தேவையான புதிய இணைப்புகளை உருவாக்கவேண்டும், தேவையற்ற இணைப்புகளை நீக்கவேண்டும். மாறும் சூழலுக்கு ஏற்ப அமைப்பின் வலைப்பின்னலை (Shape the network) தொடர்ந்து வடிவமைக்கவேண்டும்.

“It takes a network to defeat a network.” [1]

 1. தகவல்களை மறைத்து வைக்காமல், அமைப்பில் உள்ள அனைவரும் பார்க்கும்படி பொதுவில் வைக்கவேண்டும். அனைத்து குழுக்களையும் அவ்வாறு செய்யும்படி வழிசெய்யவேண்டும். அவ்வாறு செய்தால் தகவல் கசிந்துவிடும் என்று பயப்படக்கூடாது. வேகமாக மாறும் உலகில் கசியும் தகவல்களால்  ஏற்படும் பாதிப்பை விட, பகிரப்பட்ட தகவல்களால் ஏற்படும் நன்மை அதிகம் என்று உணரவேண்டும்.  அப்பொழுதுதான் அனைவருக்கும் களத்தின்  முழுநிலவரம் தெரியும். அதன்படி சிறந்த முடிவுகளை எட்ட முடியும் என்கிறார் மெக்கிரிசுட்டல். இது அமைப்புகளையும்  சூழலையும் பொறுத்து மாறுபடும். தகவல் பரவலால் ஏற்படும் நன்மைகளையும், கசிவினால் ஏற்படும் பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு செயல்படவேண்டும்.
 1. தலைவர்களின் பேச்சும் செயலும் ஒத்திருக்கவேண்டும். பேச்சொன்று செயலொன்று என்றிருந்தால், குழப்பம் ஏற்படும். உறுப்பினர்கள் பொதுவாக பேச்சைவிட தலைவரின் செயலிலிருந்தே அதிகம் புரிந்து கொள்வார்கள்.
 1. அனைவருக்கும் ஒட்டுமொத்த களநிலவரம் தெரிய வழி செய்யவேண்டும். அவ்வாறில்லாவிட்டால், அதிகாரம் கொண்ட குழுக்களால் தவறான முடிவுகள் எடுக்கப்பட்டு  பாரிய பின்னடைவுகள் ஏற்படும். ஒட்டுமொத்த களநிலவரமும், பரவலாக்கப்பட்ட  அதிகாரமும் இணைந்து செயல்படும்பொழுதே வெற்றி கிட்டும்.

இவ்வாறு செயல்பாடு ஓர் இயக்கம் பின்வரும் பண்புகளைப் பெற்றிருக்கும்:

 1. இயக்கம் மிகவேகமாக செயல்படும். அதன் ஆற்றல் பன்மடங்கு அதிகரிக்கும்.
 1. இயக்கம் ஓர் எந்திரம் போன்று செயல்படாது, மாறாக ஒரு உயிர் போன்று மாறும் சூழலுக்கு ஏற்ப தகவமைத்து எதிரியை வெல்லும். . குறிக்கோளை விடாது துரத்தும்.

“We had become not a well oiled machine, but adaptable complex organism; constantly twisting, turning, and learning to overwhelm our protean adversary.” [1]

 1. தலைமையை அழித்தால் இயக்கம் அழியாது, வேறு தலைமையுடன் அதே உத்வேகத்துடன் மீள் எழுந்து செயல்படும். இயக்கத்தை அழிப்பது மிகக் கடினமானது.
 1. அதிகாரம் கீழ்நிலையில் உள்ளவர்களுக்கு அளிக்கப்படுவதால், அவர்கள் அதிக பொறுப்புணர்வுடன் வீரியமாக கடமையாற்றுவார்கள். அவ்வளவு எளிதில் சோர்வடைய மாட்டார்கள்.

diagram_team

படம்: வேகமான தகவல் தொடர்பாடல்களாலும், உலகம்  ஒன்றோடொன்று  அதிகமாக  இணைக்கப்பட்டதாலும், மாற்றங்கள் வெகுவேகமாக நிகழ்ந்து உலகின் சிக்கல் தன்மை கூடுகிறது. இவ்வாறான உலகில் ஒரு தலைமையால் முழுதும் புரிந்து திட்டமிட்டு செயல்பட முடியாது. இதற்குத்தீர்வு நம்பிக்கையாலும், பொதுவான குறிக்கோளாலும் இணைக்கப்பட்ட குழுக்களின் குழுவை உருவாக்கவேண்டும். அவை உலகைப்பற்றிய ஒரே பார்வை கொண்டு பகிர்ந்த ஒரே உணர்வுடன்  தானாக முடிவெடுத்து செயல்படும். இங்கு தலைமையின் வேலை கட்டளை இடுவதல்ல, மாறாக களைபறித்தல் தான். ஒரு நல்ல தோட்டக்காரர் எவ்வாறு செடிகளுக்கு நல்ல சூழலை ஏற்படுத்தி  விளைச்சல்களை உருவாக்குகிறாரோ,, அதுபோல குழுக்கள் மேற்கூறியபடி செயல்படத் தேவையான சூழலை பண்பாட்டை  உருவாக்குவதுதான் தலைமையின் கடமை. இதுபோன்ற குழு ஒரு உயிர் போன்று மாறும் சூழலுக்கு ஏற்ப தகவமைத்து எதிரியை வெல்லும். குறிக்கோளை விடாது துரத்தும்.

நாம் ‘குழுக்களின் குழுவின் செயல்முறையை நன்றாகப் புரிந்துகொள்ள மற்றவர்கள் வரலாற்றைத் தேடவேண்டியதில்லை. நமது ஈழப்போர் வரலாற்றிலிருந்தே தெரிந்து கொள்ளாலாம்.  குறிப்பாக புலிகளால் எவ்வாறு பலம் வாய்ந்த படைகளைக் கட்டி எழுப்ப முடிந்தது, எவ்வாறு அவர்களைவிட பன்மடங்கு பலம் வாய்ந்த இந்திய இலங்கைப் படைகளை பலமுறை தோற்கடிக்க முடிந்தது என்பதை அலசுவதன் மூலம் நன்றாக புரிந்து கொள்ளலாம். இதற்கு மையப்புள்ளியாக இருப்பது பிரபாகரன் அவர்களின் தலைமை.

புலிகளின் குழுக்களின் குழு:

 1. ஒரு குழுக்களின் குழுவில் தலைமையின் முதற் கடமை என்பது அமைப்பு செழிப்பதற்கான பண்பாட்டு சூழலை உருவாக்குவதுதான், சதுரங்க ஆட்டத்தைப்போன்று  காய்களை  நகர்த்துவது அதற்குப்பின்புதான்  வரும். பிரபாகரன் அவர்களின் செயல்பாடுகளை  கூர்ந்து கவனித்தால் இத்தன்மை விளங்கும். அவர்தான் இயக்கத்திற்கு அடிப்படையான புலிப்பண்பாட்டை உருவாக்கினார் . ( இது இன்னொரு கட்டுரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது [2] ). நெருக்கமான குழுக்களை கட்டி அமைத்தார். பல படையணிகளை உருவாக்கி இணைத்தார். வலைப்பின்னலை உலக அளவில் பெரிதாக்கினார். தொடர்ந்து இயக்கத்தின் ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் காத்தார். அவரின் பேச்சும் செயலும் எப்பொழுதும்  ஒத்திருக்கும், முரண்கள் இருக்காது. ஈழத்திலிருந்து பின்வாங்கினால் தன்னை சுட்டு விடுங்கள் என்று கூறியது, தனது குடும்பத்தை இறுதிவரை களத்திலேயே வைத்திருந்தது, எளிமையாக வாழ்ந்தது, முன்னின்று போர் புரிந்தது  என்று மற்ற வீரர்களுக்கு முன்னதாரணமாக திகழ்ந்தார். அவர் உருவாக்கிய சூழலில் நூற்றக்கணக்கான திறமையான தளபதிகளும், ஆயிரக்கணக்கான ஓர்மை கொண்ட புலிவீரர்களும் உருவாகினர். புலிப்படை என்பது பிரபாகரன் என்ற தோட்டக்காரர் உருவாக்கிய விளைச்சல், ஒர்  அதியுச்ச திறமை கொண்ட  குழுக்களின் குழு.  அவர்களைப்போன்ற சிறந்த உறுதியான குழுக்களை வேறு யாரும்  இதுவரை உருவாக்கி இருக்கிறார்களா என்பது சந்தேகமே.  இதுதான் இருப்பதிலேயே பிரபாகரன் அவர்களின் முக்கியமான தலைமைச் செயல்பாடு. போர் உத்திகள் வகுப்பது என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். அதை அவரின் படைத்தளபதிகளே பெரும்பாலும் பார்த்துக்கொள்வார்கள்.
 1. காலப்போக்கில் எத்தனையோ மிச்சிறந்த தளபதிகளை இழந்தாலும், புலிகள் இயக்கம் சரியவில்லை. மேலும் அதிகமாக புதிய தளபதிகள் வளர்த்தெடுக்கப்பட்டு இயக்கம் முன்னேறிச்சென்றது. புலிகள் இயக்கம் மீளெழும்பும் (Resilient) இயக்கம், நொறுங்கும் (fragile) இயக்கம் அல்ல. பிரபாகரன் இல்லாவிட்டாலும் அவ்வியக்கம் தொடர்ந்திருக்கும் என்று ஆய்வாளர் தராகி சிவராம் பலமுறை குறிப்பிட்டுள்ளார். இது ஏனென்றால் குறிக்கோளை அனைவரும் ஏற்றுக்கொண்டு இறுக்கமான நம்பிக்கையுடன் ஒரு பண்பாட்டின் மூலம் செயல்படுவார்கள்.  தலைவர் குறிக்கோளை மாற்றவேண்டும் என்று நினைத்தாலும், குழுக்கள் விடமாட்டார்கள். அவ்வாறான தலைவரை நம்பிக்கை துரோகியாகவே பார்த்து தலைமையை மாற்றிவிடுவார்கள். குழுக்களின் குழுவில் பிரபாகரன் போன்று “குறிக்கோளிலிருந்து நான் விலகினால் என்னை  சுட்டுவிடுங்கள்” என்று கூறுபவர்தான் தலைவராகவே இருக்க முடியும்.  தலைவர் என்பவர் அவ்வாறான குழுக்களை உருவாக்கத்தான் தேவை. அதன் பின்பு அது தனக்கென்று ஒரு உயிர் பெற்றுவிடும். அதை எந்த ஒரு தனி ஒருவானாலும் திசை மாற்றமுடியாது. நமது உடலில் காயம் பட்டால் எவ்வாறு உடல் சரி செய்து கொள்கிறதோ, அதுபோல ஏற்படும் பிழைகளை இழப்புகளை அதுவே சரி செய்து கொள்ளும். குறிக்கோளை விடாப்பிடியாக நிற்காமல் துரத்தும். இதுதான் 21-ஆம் நூற்றாண்டுக்கான அமைப்புகளின் வடிவமைப்பு.

“The future will take the form of organic networks, resilience engineering, controlled flooding, a world without stop signs.” [1]

புலிப்பண்பாடு  நிற்கும்வரை புலிகளை அழிக்க முடியாது,  இழப்புகளை ஈடுகட்டி மீளெழும்பும் . அப்படியென்றால் ஏன் 2009-இல் இயக்கம் நொறுங்கியது என்று கேள்வி எழும். மாறிய உலகச்சூழலினால் போரில் பின்னடைவு ஏற்பட்டபொழுது, இயக்கம் அழியாமல் இருக்கவேண்டுமானால், சிறுசிறு குழுவாக பிரிந்து செயல்படவேண்டும், ஆனால் அதற்கேற்றபடி நிலப்பரப்போ, மக்கள் நிறைந்த நகர்புறமோ கிடையாது. மேலும் எந்த வாய்ப்பும் இன்றி மக்களையும் சேர்த்து சிங்களம்  இனப்படுகொலை செய்தது. முடிவில் புலிகளின் புலிப்பண்பாடு ஈழத்தில் முடிவுக்கு வந்தது. அதன் மூலம் புலிகள் மீளெழும்  தன்மையை இழந்தனர்.

புலிகளை  அழிப்பது அவ்வளவு எளிதானது  அல்ல. அது  இந்தியாவாலோ சிங்களத்தாலோ முடியாத காரியம்.  புலிகள் எதிரிகளைவிட மிகச்சிக்கலான அமைப்பு   ஒரு உலக வலைப்பின்னலை உடைக்க இன்னொரு உலக வலைப்பின்னலால் மட்டுமே உடைக்க  முடியும்.   முடிவில் ஒரு பெரிய உலக நாடுகளின் கூட்டு சதியால் உருவாக்கிய வலைப்பின்னலே  புலிகளை அழித்தது.

புலிகளுக்கு நேர் மாறானது திராவிட இயக்கங்களின் கட்டமைப்பு. ஒரு தலைமை திட்டமிட்டு அனைத்தும் செய்யப்படும். விளைவு என்னவானது? தலைமைகள் தவறான கைக்கு சென்றன, அல்லது தலைவரின் ஆணையால் குறிக்கோள்கள் திசை திரும்பின. திராவிட இயக்கங்களின் சிக்கல் என்பது “கட்டமைப்பு” சிக்கல். எந்த தலைமை வந்தாலும் “மேலிருந்து கீழாக” கட்டமைக்கப்படும் அமைப்புகள்,  காலப்போக்கில் இப்படித்தான் அது முடியும்.  திராவிடம் அழிவதற்கு எதிரிகள் தேவையில்லை. அவர்களின் தலைமைகளை அக்காரியத்தை சிறப்பாகச் செய்கிறார்கள். மேக்கிரிசுட்டல்  கூறிய எந்த ஒரு தலைமைப் பண்பும் அவர்களிடம் இல்லை. இன்றைய தமிழ்த்தேசிய இயக்கங்கள் வளரவேண்டுமானால்  தலைமைப் பண்புகளை பிரபாகரனிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும், திராவிடத்திலிருந்து அல்ல. ஆனால் என்னவோ தமிழ்த்தேசிய இயக்கங்கள் திராவிட சாயலிலேயே கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன.

 1. இந்தியா-புலிகள் இடையேயான போரில், புலி வீரர்களின் எண்ணிக்கை 2000, ஆனால்  இந்தியப்படைகள்  100,000 படைவீரர்களையும் விமானப் படையையும்  கப்பல் படையையும் கொண்டிருந்தது. அப்படி இருந்தும்  இந்தியப்படைகள் இலக்கை எட்ட முடியாமல் பின்வாங்கியது. இது எப்படி நடந்தது? புலிகள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் கொரில்லா தாக்குதல் நடத்தினார்கள். ஒவ்வொரு குழுவுக்கும்  அவ்வாறான அதிகாரம் இருந்தது. 2000 பேர் 100,000 பேரை எதிர்கொள்ள வேண்டுமானால், தங்களது ஆற்றலை 50 மடங்கு அதிகரிக்கவேண்டும். அதை குழுக்களின் குழுவால் மட்டுமே முடியும். மாறாக ஒரு தலைமை மேலிருந்து திட்டமிட்டு மற்றவர்கள் அதைப் பின்பற்றி சாதிக்க முடியாது.
 1. சிங்களப்படை வருடக்கணக்கில் நகர்வுகளை மேற்கொண்டு புலிகளின் இடங்களைப் பிடிக்கும். ஆனால் புலிகள் அவற்றை ஓயாத அலைகள் போன்ற நடவடிக்கைகள்  மூலம் சில வாரங்களில் பிடித்து விடுவர். இது எப்படி சாத்தியமானது?   சிங்களப்படை மேலிருந்து கீழாக இயங்கும் படை. உயர் தளபதி கட்டளை இடுவார், அதை கீழுள்ளவர்கள் நிறைவேற்றுவர். ஒவ்வொரு நகர்வுக்கும் மேலதிகாரியின் உத்தரவுக்கு காத்து நிற்பர். ஆனால் புலிகளின் படைகள் கீழிருந்து மேலாக நெருக்கமான குழுக்களால் கட்டி எழுப்பப்பட்டது. எப்படி ஒரு  கால்பந்தாட்ட அணியில் வீரர்கள் களநிலவரத்தை அறிந்து தாமாக  வேகமாக நகர்வார்களோ, அதுபோல புலிப்படைகள்  நகரும். படை நகர்த்தும் தளபதிகளுக்கும் பிரபாகரனுக்கும் நெருக்கமான நட்பும் நம்பிக்கையும், ஒருவருக்கு  இன்னொருவரைப் பற்றிய தெளிவான புரிதல் இருப்பதாலும், கள நிலவரத்திற்கேற்றபடி எவ்வாறு நகரவேண்டும் என்று அவர்களுக்கு தானாகவே தெரியும். அவர்களுக்குள் மணிக்கணக்கில் பேசி விளங்க வேண்டியதில்லை. ஒருவரின் நகர்வுகளிலிருந்து மற்றவர்கள் என்ன செய்யவேண்டும் என்று தானாகப் புரிந்துகொள்வார்கள். இதனால் அதிவேகமாக புலிப்படைகள் நகர்ந்தன. சிங்களப்படைகள் அதிகாரிகளின் உத்தரவுக்கு காத்து நின்றதால் மெதுவாக நகர்ந்தனர். அவர்களுக்கு உத்தரவு வரும் முன் புலிகள் களநிலவரத்தையே மாற்றி  பெருங்குழப்பதை உருவாக்குவர். முடிவில் புலிகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தோற்றனர். எப்படி நெல்சனின் தளபதிகள் ஒவ்வொருவரும் நெல்சனாக செயல்பட்டார்களோ [1,4], அப்படியே புலிகளின் ஒவ்வொரு தளபதியும் பிரபாகரனாக செயல்பட்டார்கள். என்னுடைய ஊகம் என்னவென்றால் பிரபாகரன் உத்தரவு பிறப்பித்துதான் தளபதிகள் போரின் நடுவில் ஒவ்வொரு அடியும் எடுக்கவேண்டும் என்பதல்ல. களத்தில்  உள்ள தளபதிகளுக்குத்தான் களநிலவரம் நன்கு தெரியும் என்பதால், நகர்வுகளை அவர்களே மேற்கொள்ளும்  அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கும்.  அவ்வாறு இல்லையென்றால் புலிகளால் அவ்வளவு வேகமாக நகர்ந்திருக்க முடியுமா என்பது  சந்தேகமே. ஆனாலும் இது உறுதி செய்யப்படவேண்டும்.

.

 1. புலிகள் போர் உத்திகளில் முன்னோடிகளாக இருந்தாலும், அவர்களின் உண்மையான பலம் அதுவல்ல. அவர்களின் பலம் என்பது புலிப்பண்பாடும், அவர்கள் குழுக்களின்  குழுவாக இறுக்கமான நட்பினாலும் நம்பிக்கையினாலும் கட்டி அமைக்கப்பட்டிருந்தது தான். அவர்களின் கூட்டு பலம் என்பது  தனி உறுப்பினர்களின் பலத்தின் கூட்டலை விட அதிகம் (As a team they were more powerful  than the sum of the parts). இதை மற்ற இயக்கங்களில் காண முடியாது. இது சிக்கலான அமைப்புகளின் (Complex systems) ஒரு தன்மை.  புலிகள் உண்மையிலேயே புரிந்து கொள்வதில் கடினமான சிக்கலான அமைப்பு.

இன்றைய தமிழ்த்தேசிய இயக்கங்கள் பலமடங்கு வலிமை பெறவேண்டுமானால், புதிய உத்திகளைத் தேடுவதைவிட தங்களது அமைப்புகளை புலிகளைப்போன்று குழுக்களின் குழுவாக  அமைப்பு மாற்றத்தை உருவாக்கவேண்டும்.   இனிமேல் ஒரு நல்ல தலைமையைத் தேடுகிறோம் என்றால், அவர்கள் கட்டளை இடுபவராக இருக்கக்கூடாது. அவர் புலிப்பண்பாட்டை இன்றைய தேவைக்கேற்ப உருவாக்கி, நெருக்கமான நம்பிக்கையினால் இணைக்கப்பட்ட குழுக்களை உருவாக்குகிறாரா என்று பார்க்கவேண்டும். தெளிந்த சிந்தனையும், சிறந்த முன்னதாரணமாகவும், நெறிதவறாதவராகவும்  இருக்கிறாரா என்று பார்க்கவேண்டும்.

இன்றைய  தமிழ்த்தேசிய இயக்கங்கள் குழுக்களின் குழு  முறையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது இன்னொரு கட்டுரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது [4].

 1. புலிகள் பல நெருக்கமான குழுக்களின் குழுவாக இருந்ததால், தேவைக்கேற்ப விரைவில் உருமாறிக்கொள்ளும் தன்மை கொண்டவராக இருந்தனர். பொதுவாக பெரும்பாலும் பல குழுக்களாகப் பிரிந்து தாக்குதல் நடத்தினாலும், பெரிய தாக்குதலுக்கு உடனடியாக  பெரும்படையாக உருமாறுவர்.  அதனால் அவர்கள் கொரில்லாப் படைகள் போன்றும் போரிடுவர், மரபுவழிப்படையாகவும் போரிடுவர். தேவைக்கேற்ப உருமாறிக்கொள்வர்.  இவ்வாறு தேவைக்கேற்ப மாறுவது குழுக்களின் குழுவால் மட்டுமே முடியும் [1].  அதுபோன்ற அமைப்புகளே  பிழைக்கும் வாய்ப்புகள் அதிகம். இத்தன்மை  மேலிருந்து கீழாக செயல்படும் அமைப்புகளுக்குக் கிடையாது.
 1. பிரபாகரனை சிலர் சர்வாதிகாரி என்று பார்க்கின்றனர். இது தலைவரை ஒரு கட்டளை இடும் அதிகாரியாகப் பார்ப்பதினால் வரும் பிழை. பிரபாகரன் அவர்கள் அதிகாரத்தை தளபதிகளிடம் பகிர்ந்தளித்து குழுக்களின் குழுவாக செயல்பட்டவர். அவரின் முக்கிய வேலை என்பது தோட்டக்காரர் போன்றது, கட்டளை இடுவது அல்ல. புலிகள் அனைவரும் ஒரு குறிக்கோளில் ஒரே உணர்வுடன் நம்பிக்கையுடன் செயல்பட்டவர்கள். சொல்லப்போனால் ஒவ்வொருவரும் ஒரு பிரபாகரன்தான். ஒருவருக்கு என்ன ஆபத்தோ, அதேதான் அனைவருக்கும். இங்கு சர்வாதிகாரம் எங்கிருக்கிறது? சொல்லப்போனால் திராவிட இயக்கங்களுக்குத்தான்  சர்வாதிகாரம்  நன்றாகப் பொருந்தும். தலைவர் தனது சுயநலத்திற்காக அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள என்ன ஆட்டம் வேண்டுமானாலும் ஆடுவார். குழுக்களின் குழு முறை என்றுமே மேலிருந்து கீழாக இயங்கும் முறையை விட  சிறந்த சனநாயகம். புலிகளின் ஆற்றல் என்பது   குழுக்களின் குழுவில் உள்ளடங்கிய சனநாயகப் பண்புகளிலிருந்தே வருகிறது.  ஒரு இயக்கம் தேர்தலில் போட்டி இடுவதால் மட்டுமே அது சனநாயகப் பண்புகள் கொண்ட இயக்கமாகாது. அதுபோல போரிடுவதால் ஒரு அமைப்பு சர்வாதிகார இயக்கமாக ஆவதும் கிடையாது. ஒரு இயக்கம் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது, எவ்வாறு அதிகாரம் பகிரப்படுகிறது என்பதே சனநாயகப் பண்புகளை தீர்மானிக்கிறது.

.

 1. குழுக்களின் குழுவில் விரைந்த சோதனைகளும் கற்றலும் நடக்கும், அமைப்பு வெகு வேகமாக வளரும். இதனால்தான் புலிகள் இயக்கம் தோன்றியதிலிருந்து விரைந்து கற்று அசுரவேகத்தில் வளர்ந்தனர். மேலிருந்து கீழாக இயங்கும் அமைப்பில் அனைத்தும் மெதுவாகவே நகரும். கற்றலே இல்லாமல் தேங்கும் ஆபத்தும் ஏற்படும். இன்று திராவிட இயக்கங்கள் அதுபோன்ற தேக்கநிலையிலேயே பல பத்தாண்டுகளாக உள்ளன. இன்றைய தமிழ்த்தேசிய இயக்கங்கங்களும் இதுபோன்ற மந்த நிலையை அடைய வாய்ப்பிருக்கிறது. அவர்கள் வெகுவேகமாக வளரவேண்டுமானால், தங்களை புலிகளைப் போன்று மறுசீரமைத்து கற்றலுக்கு சோதனைகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.
 1. புலிகள் இயக்கத்திலிருந்த அனைவரும் ஒற்றைக் குறிக்கோளைக் கொண்டு, இறுக்கமான நம்பிக்கை கொண்டு, ஒரே சிந்தனையுடன் ஓருயிராக புலிப்பண்பாட்டின் அடிப்படையில் கட்டப்பட்ட  குழுக்களின் குழு. மெக்கிரிசுட்டல் அவர்கள்  இந்த அமைப்பு முறையை  கற்றது   ஈராக்கின் குழுக்களிடமிருந்து என்று கூறினாலும், ஆழ்ந்து ஆராய்ந்தால் இதை முதன்  முதலில் நடைமுறைப்படுத்தி மாபெரும் வெற்றிகளைப் பெற்றவர்கள் புலிகள்தான். மெக்கிரிசுட்டல் இந்த அமைப்பு முறையை புரிந்துகொண்ட காலம் 2004-2006 ஆண்டுகளில் [1]. அப்பொழுதான் குழுக்களின் குழு முறைக்கு எதிர் உத்திகளை வகுத்தார். இந்த பொறிமுறைகள் சிங்களத்திற்கு இறுதி யுத்தத்தில் கற்பிக்கப்பட்டிருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இதை ஏற்கனவே இன்னொரு கட்டுரையில் ஆராய்ந்திருக்கிறோம் [3].

பிரபாகரன் அவர்கள் அதி புத்திகூர்மை கொண்ட தலைவர். போர் உத்திகளில் மட்டுமல்ல, எவ்வாறு சிறந்த அமைப்புகளை உருவாக்குவது என்பதிலும் முன்னோடியாக இருந்தவர். நாம் புலிகளிடமிருந்து   கற்பது என்பது என்றும் முடிவுறாததாகவே இருக்கும். நான் “ஈழப்போரிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள்” என்ற தொடரை எழுதி முடித்தபின், ஓரளவு  முக்கியமான அனைத்து உத்திகளையும் கண்டறிந்துவிட்டேன் என்றே நினைத்தேன், ஆனால் இக்கட்டுரையை எழுதும் பொழுதுதான் எவ்வளவு பெரிய ஓட்டை விட்டிருக்கிறேன் என்பது புலப்படுகிறது. பிரபாகரன் அவர்களையும், புலிகளையும், ஈழப்போரையும் என்றுமே யாராலும் முழுதாகப் புரிந்துகொள்ள முடியாது. புதுப்புது தத்துவங்களின் வழியாகப் பார்க்கும்பொழுதே, நமது பார்வை மேலும் விரிவடையும். ஈழப்போர் நமக்கு தொடர்ந்து பாடங்களை கற்பித்துக்கொண்டே இருக்கும்.

சுபார்ட்டாவுக்கும் ஏதென்சுக்கும் இடையே 27 ஆண்டுகள் நடந்த (431-404 BC) பெலோப்பினீசியப் போரை வரலாறாக எழுதிய துசிடிடிசு,   அப்போரை “அனைத்து காலத்திற்குமான பொக்கிசம்”  ( A possession for all time) என்று வர்ணித்தார் [5,6]. விருப்பு வெறுப்பின்றி உள்ளதை உள்ளபடியே, எந்த உணர்வுகளுக்கும் பாரபட்சத்திற்கும் இடமளிக்காமல் போர் வரலாற்றை எழுதினார். அந்நூல் இன்றும்  உலகப் பல்கலைக்கழகங்களில் பாடமாகக் படிக்கப்படுகிறது, அதிலிருந்து புதுப்புது பாடங்களை இத்தனை ஆண்டுகள் கழித்தும் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். வரலாறு என்பது மீண்டும் மீண்டும் திரும்பும்; அப்படியே இல்லாவிட்டாலும் அது பழமையின் சாயலிலே தோன்றும். அதனால்தான் வரலாற்றைக் கல்லாதவர்கள் மீணடும் அதே தவறை இழைப்பார்கள். ஆய்வாளர் பரணி கிருஷ்ணரஜனி [7] அவர்கள் ஈழப்போர் என்பது   பெலோப்பினீசியப் போரைப் போன்று பாரிய தத்துவத் தாக்கத்தை உலகில் ஏற்படுத்தும் என்ற பார்வையைக் கொண்டுள்ளார். பெலோப்பினீசியப் போர் என்பது அன்றைய உலகில் ஒரு பேரரசை நிறுவிய ஏதென்சு  எவ்வாறு ஒன்றுக்குமே ஆகாத ஒரு சாதாரண விசயத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட போர் முப்பது ஆண்டுகள் இழுத்தடித்து ஏதென்சின் பேரரசை அழித்தது என்பதைப் பற்றியது. இதிலிருந்து வல்லரசுகளுக்கான பாடங்கள் நிறைந்துள்ளன. அதனால்தான் இது இன்றும் ஆர்வமாகப் படிக்கப்படுகிறது. ஆனால் ஈழப்போர் என்பது ஒரு சிறு தேசம் உலக நாடுகள் அனைத்தும் ஒன்று திரண்டு எதிர்த்த பொழுதும் இறுதிவரை தனது விடுதலைக்காக நின்று போராடிய தனித்துவமான கதை. இதிலிருந்து விடுதலை அடைய நினைக்கும் தேசியங்களுக்கான பாடங்களும் வழிகாட்டல்களும் நிறைய உள்ளன. ஈழப்போரும் பெலோப்பினீசியப் போரைப் போன்று உலக வரலாற்றில் பெரிய தத்துவத் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கேற்ற  கூறுகள் உள்ளன.

ஈழப்போர் என்பது உலகத்திற்கு பொக்கிசமா எனபதை காலம்தான் சொல்லவேண்டும். ஆனால் என்னால் ஒன்றை உறுதியாகக் கூறமுடியும். ஈழப்போரும் புலிகளின் வரலாறும்  நாம் என்றென்றும்  கற்றுக்கொள்ள வேண்டிய ஈடு இணையற்ற பொக்கிசம்.

பி.கு: புலிகளிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்ற பார்வையில்தான் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அவர்கள் செய்த எல்லாவற்றையும்  நியாப்படுத்துவதல்ல. அதுபோல ஆயுதப்போராட்டம்தான் செய்யவேண்டும் என்று கூறுவதும் அல்ல.

 

 1. McChrystal, Gen Stanley, et al. Team of teams: New rules of engagement for a complex world. Penguin, 2015.
 2. ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 3 https://sethusubbar.wordpress.com/2019/01/27/eelamlesson3/
 3. ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 4, https://sethusubbar.wordpress.com/2019/02/24/eelamlesson4/
 4. குழுக்களின் குழு: தமிழ்தேசியத்திற்கான ஒரு மறுசீரமைப்பு, https://arivukkadal.com/2019/10/12/teamofteams/
 5. The History of the Peloponnesian War, Thucydides.
 6. Gaddis, John Lewis. On grand strategy. Penguin Books, 2019.
 7. பரணி கிருஷ்ணரஜனி,  தூசிடிடேஸ் – சன்சூ – கௌடில்யர் – வேலுப்பிள்ளை பிரபாகரன். -3, http://www.velichaveedu.com/15319-5-a/?fbclid=IwAR0gRxEYJP-JCwXX_4Iye44ACoGwW8hRLtxlQb4ko1Y_lhACeWl5xb57uWg

 

 

Posted in ஈழப்போர், ஈழம், தமிழ்த்தேசியம், பிரபாகரன், Uncategorized | 4 Comments

குழுக்களின் குழு: தமிழ்தேசியத்திற்கான ஒரு மறுசீரமைப்பு

கட்டுரையை கீழுள்ள சுட்டியில் படிக்கவும்:

குழுக்களின் குழு: தமிழ்தேசியத்திற்கான ஒரு மறுசீரமைப்பு

Posted in தமிழ்த்தேசியம் | Leave a comment

தேவை ஒரு தமிழ்த்தேசிய சிந்தனை மையம்

அண்மையில் அண்ணன் ஆழி செந்தில்நாதன் அவர்களுடன் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. தமிழ்த்தேசியத்திற்கு என்று  ஒரு சிந்தனை மையத்தை (Think Tank) உருவாக்கவேண்டும் என்ற கனவினை என்னிடம் தெரியப்படுத்தினார். இது தொடர்பாக அவருடனும் மேலும் சில நண்பர்களுடனும், குறிப்பாக செ. இரா. செல்வக்குமார், Sam Vijay, வித்தியாசகர், Hv. Vichu  [1] அவர்களுடன்  நேரடி சந்திப்பும் முகநூல் விவாதங்களும் நடந்தன.  இந்த கருத்தாடல்களின்  விளைவுதான் இக்கட்டுரை.

ஓர்  உயிரோ, அமைப்போ, அல்லது சமூகமோ பிழைக்கவேண்டுமானால் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றிய  அறிவியல்  பார்வை கடந்த சில பத்தாண்டுகளில் வெகுவாக  மாறிவிட்டது. வலியது வெல்லும் என்பதெல்லாம் தவறான பார்வை. தக்கது எஞ்சும் என்ற இடார்வினின் பார்வையே அறிவியலாளர்களால் வேறு விதமாகப் பார்க்கப்படுகிறது. தக்கது என்பது வலியது அல்ல, மாறாக   சூழலைப்பற்றிய சரியான தகவலைப் பெற்று தன்னை மாற்றி அமைத்துக்கொள்வதே   தக்கது. எந்த உயிரினம், அமைப்பு, அல்லது சமூகம் தனது சூழலுக்கான அறிவைப் பெற்று அதன் அடிப்படையில் செயல்படுகிறதோ, அதுவே பிழைக்கும்.

“In this evolutionary picture…we find survival as information processing. Our former belief in the survival of the fittest has been replaced by a belief in the survival of the best informed. Life itself goes beyond crude strength to knowledge. The human being is seen as information processor bound in a complex network with other human beings.” [2]

உயிர்கள் அனைத்தும்  தனது சூழலைப் பற்றிய அறிவைக்கொண்டே  இயங்குகின்றன [3]. இந்த அறிவு அதற்கு மரபணுக்கள் மூலம் வருகின்றன, சிந்தித்து வருவதல்ல. திடீரென சூழல் மாறும்பொழுது,  அவ்வுயிர்கள் மாறிய சூழலுக்கான அறிவு இல்லாததனாலேயே அழிகின்றன. ஒரு மனிதன் பிழைப்பதும் இதே போலத்தான். மனிதனின் சூழலைப் பற்றிய அறிவு கூடுதலாக கற்றல் மூலம் வருகிறது. அவ்வாறு நாம் கற்ற அறிவின்  அடிப்படையிலேயே இயங்குகிறோம். நாம் போட்டி போட்டு குழந்தைகளைக் கற்க வைப்பது,  நல்ல அறிவைக்கொடுத்து பிழைக்க வைப்பதற்குத்தான்.

இதே கருத்தை ஏற்கனவே  திருவள்ளுவர் இரு வரிகளில் கூறிவிட்டார் [4]:

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.

பொருள்: அறிவு என்பது அழிவிலிருந்து காப்பாற்றும் ஆயுதம் ஆகும். பகைவர்களாலும் அழித்தல் இயலாத உள்ளிருந்து பாதுகாக்கும் அரண் ஆகும்

தமிழனம் பிழைக்கவேண்டுமானால் செழிக்கவேண்டுமானால் நமது சூழலைப் பற்றிய அறிவு அடிப்படையானது. இது இல்லாமல் என்ன செய்தாலும், அது குருட்டுத்தனமான செயல்பாடுதான். அது வெற்றிபெறும் என்பதற்கு எந்த உறுதியும் கிடையாது.

 

இன்று நாம் ஈழத்திலும் தமிழகத்திலும் பல்வேறு அழிவுகளை எதிர்கொண்டு வருகிறோம். அதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள இன்று பெரும்பாலானோர் தேர்ந்தெடுத்திருப்பது அரசியல் ஆயுதம். அதற்கேற்ப பல்வேறு அரசியல் அமைப்புகள் இயங்குகினறன, ஆனால் வள்ளுவர் கூறிய “அற்றம் காக்கும்” அறிவைத் தேடுவதற்கான அமைப்புகள் உருவாக்கப்படவில்லை. அவற்றிற்கான தேவை உணரப்பட்டுள்ளதா என்பதும் ஐயமே. இக்கட்டுரையில்   அத்தேவையை  உணர்த்தி, நாம் செயல்படவேண்டிய ஒரு திட்டத்தையும் முன்வைப்பதுதான் எனது நோக்கம்.

இன்றைய நமது  செயற்பாடுகள் மிக எளிமையான பார்வையில் இருக்கின்றன. சூழலின் சிக்கல்களைப் பற்றிய  முழு அறிவின்படி நமது செயல்பாடுகள் இல்லை. அறிவு என்பது வெறுமனே பார்த்து அறிவதல்ல. நாம் பார்த்து உண்மையை உணர்வதில்லை, மாறாக தத்துவங்களின் வழியாகவே பார்க்கிறோம் என்கிறார் பாப்பர் [5].. புதிய தத்துவங்களை கடினமான உழைப்பினால்தான் பெற முடியும். அதனால்தான் அறிவியலாளர்கள் கடினமாக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கடினமான அறிவைத் திரட்டி, அறிவுத்தேவையைப் பூர்த்தி செய்வதுதான் நாம் உருவாக்க நினைக்கும் சிந்தனை அமைப்பின் முக்கிய கடமை.

 

அறிவை வளர்ப்பதற்கு தனித்த அமைப்புகள் தேவை. ஏற்கனவே வேறு காரணங்களுக்காக இருக்கும் அமைப்புகளால் அறிவு முன்னேற்றத்தை உருவாக்குவது முடியாது அல்லது மிகக்கடினமானது என்கிறார் சாபி பாகால் [6]. இது இன்றைய தமிழ்த்தேசிய அரசியல் அமைப்புகளுக்கும் பொருந்தும். அரசியல் செய்யும் அமைப்புகளால் சிறந்த வெற்றிக்கான அறிவை உருவாக்க முடியாது அல்லது மிகக்கடினமானது.

உதாரணாமாக ஆங்கிலம் ஏன் உலகப்பொதுமொழி ஆனது என்று கேட்டால் என்ன கூறுவீர்கள்?  ஆங்கிலேயர்கள் உலகை ஆண்டதனால் ஆங்கிலம் பொதுமொழியானது என்று பொதுவான பதில் வரும். ஏன் அவர்களால் ஆள முடிந்தது, மற்றவர்களால் முடியவில்லை? ஏன் வேறு எந்த ஐரோப்பிய நாடும் ஆங்கிலேயர்களைப் போல கோலோச்ச முடியவில்லை?  இதை ஆழமாக ஆராய்ந்த சாபி பாகால் (Safi Bahcall) [6] கூறும் காரணம் என்னவெனில், ஆங்கிலேயர்கள் அறிவியல் புரட்சியில் மற்றவர்கள் அனைவரையும் விட முன்னோடியாக இருந்தார்கள். அதற்கு அடிப்படைக் காரணம், அறிவியலை வளர்ப்பதற்கென்று  தனியான “இராயல் சொசைட்டி” (Royal Society) என்ற அமைப்பை உருவாக்கி அறிவியலை வளர்த்தார்கள். அந்த  அமைப்பில்தான் நியூட்டன்   உறுப்பினராகி  இயக்கவிதிகளை கண்டறிந்து நவீன அறிவியல் புரட்சியை உருவாக்கினார். இன்று நாம் ஆங்கிலம் படிப்பதற்கு   இந்த இராயல் சொசைட்டி தான் காரணம். இதுதான் அறிவின் ஆற்றல் என்பது.

இன்னொரு உதாரணம் அமெரிக்கா. ஏன் அமெரிக்கா வல்லரசானது?  இரண்டாம் உலகப்போரில் வெற்றிபெற்றதனால் ஆனது எனலாம். ஆனால் எது வெற்றிபெற வைத்தது? செர்மனி மற்ற நாடுகளைவிட  இராணுவ நுட்பத்தில்  முன்னோடியாக இருந்தார்கள். அவர்கள் மின்னல் வேகத்தில் ஐரோப்பிய நாடுகளை விழுங்கி வந்தார்கள். அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்திற்கு செல்லும் சரக்குக் கப்பல்களை எல்லாம் அவர்களின் நீர்மூழ்கிகள் மூலம் நிர்மூலம் செய்தார்கள். இங்கிலாந்து உணவிற்கே திண்டாடிக்கொண்டிருந்தது. அப்பொழுது அமேரிக்கா போரில் இறங்கவில்லை. ஆனால் போர்மேகங்கள் அதனை சூழ ஆரம்பித்தன. அப்பொழுது வானவர் புஷ் (Vannevar Bush) என்ற MIT பேராசிரியர், அமெரிக்கப் படைகள் செர்மனியை ஒப்பிடும்பொழுது  இராணுவ  நுட்பத்தில் பின்தங்கி இருப்பதை உணர்ந்து, தனது  வேலையை உதறிவிட்டு  ஜனாதிபதியை சந்தித்து இராணுவ ஆராய்ச்சிக்கென்று தனி அமைப்பை உருவாக்கவேண்டும் என்று பத்து நிமிடம் சந்தித்து பேசுகிறார். ஜனாதிபதி அப்பொழுதே  கையெழுத்திட்டு OSRD என்ற தனி  அமைப்பை உருவாக்குகிறார். முடிவில் அந்த அமைப்பு உருவாக்கிய நுட்பங்களை வைத்தே அமேரிக்கா செர்மனியை வீழ்த்தியது. குறிப்பாக OSRD கண்டுபிடித்த ரேடார் நுட்பம், செர்மனியின்  நீர்மூழ்கிகளை கண்டுபிடிக்க உதவியது. அதன்மூலம் அட்லாண்ட்டிக் பெருக்கடலில் செர்மனியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. OSRD  இல்லாமல் அமெரிக்க வென்றிருக்குமா என்பது பெரும் ஐயமே [6].  இராணுவ அறிவியல் நுட்பங்களில் வெல்லாமல், பெரும்படை மட்டும்கொண்டு வெல்ல முடியாது. வெற்றிக்கு படைகளும்  தேவை, அறிவியல் நுட்பங்களும் தேவை என்பதை உணர்ந்து சர்ச்சில் இவ்வாறு கூறுகிறார்:

    “Had the technology war been lost, all the bravery and sacrifices of the people would have been in vain.” – Winston Churchill

இக்கருத்து இன்றைய நமது சூழலுக்கும் பொருந்தும். அரசியல் சமூக செயல்பாடுகள் மிகமுக்கியமானது. இது இராணுவப்படைகள் போன்றவை. ஆனால் அவை மட்டும் நமக்கு வெற்றியை ஈட்டித்தர போதுமானது அல்ல. நாம் அறிவுப்பூர்வமான செயல்பாடுகளில் எதிரிகளை வெல்வது முக்கியமானது. அதற்கு அவ்வறிவை உருவாக்குவதற்கென்று தனி அமைப்புத் தேவையானது. OSRD செயல்பட 1-2% நிதியே தேவைப்பட்டது, ஆனால் அது போரின் திசையைத் தீர்மானித்தது.  அதுபோல ஒரு சிறிய அறிவார்ந்த குழு, தமிழ்த்தேசியத்தின் வெற்றிக்கான திசையை தீர்மானிக்க முடியும் என்பதை உணரவேண்டும்.

 

உலகம் இருண்ட காலத்திலிருந்து வெளிவந்து இன்று நாம் காணும் நவீன உலகு  உருவாவதற்கு ஒரு காரணம்  பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தோன்றிய அறிவொளிக்கால தத்துவமேதைகள் [7] உருவாக்கிய அறிவுதான். அதேபோல இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உருவாகிய வியன்னா வட்டத்தில்[8] பங்குபெற்ற மேதைகள் உருவாக்கிய தத்துவங்கள் இன்று பாரிய தாக்கத்தை உருவாக்கி வருகின்றன.  ஏன், இன்று தமிழ்த்தேசியம் / திராவிடம் தமிழகத்தில் நிலைப்பதற்கு அன்று உழைத்த அறிவிற்சிறந்த அறிஞர்களேக் காரணம் [9]. மனிதனின் முன்னேற்றம் என்பது அவன் பெரும் அறிவைப்பொறுத்தே அமைகிறது. இன்றைய உலகின் அசுரவேக மாற்றத்திற்கும் அதுவே அடிப்படையாகவே இருக்கிறது. இராணுவமோ, அரசியலோ, சமூகமோ  வெற்றியைத் தீர்மானிப்பது அறிவுதான். அறிவுதான் அற்றம் காக்கும் கருவி.  ஏன், நாம் செல்லும் திசையைத்தீர்மானிப்பதே அறிவுதான்.

 

இன்று நாம் காணும் சிக்கல்கள் ஏராளம். அவற்றைத் தீர்ப்பதற்கு அடிப்படையாக இருக்கப்போவது அறிவு என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அவ்வாறான அறிவை உருவாக்குவதற்கு தனிப்பட்ட அமைப்பு தேவை. இனி அவ்வாறான அமைப்பை எப்படி உருவாக்குவது என்று பாப்போம். ஒரு சிந்தனை அமைப்பை உருவாக்குவதில் இரு அடிப்படைத் தேவைகள் உள்ளன:

 1. சிந்தனையாளர்கள்: சமூகம் என்பது சிக்கலான அமைப்பு. அதனைப் புரிந்துகொள்ள பல்வேறு துறைகளில் அறிவுள்ளவர்கள் தேவைப்படுகின்றனர். அவர்களைத் திரட்டவேண்டும், தேவையான பயிற்சிகள் அளிக்கவேண்டும்.
 2. நிதி: ஒரு அமைப்பை நடத்துவதற்கான பொருளாதாரம் உருவாக்கப்படவேண்டும்.

இவ்விரண்டு தேவைகளையும் உடனடியாகப் பூர்த்தி செய்யமுடியாது. இதைப் படிப்படியாகத்தான் செய்ய முடியும். அதனால் கீழ்வரும் வழியில் ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

 1. அறிவைத் திரட்டுவதற்கென்று ஒரு தனி இணையதளத்தை ஆரம்பிக்கவேண்டும்.  இன்றைய உலகில் பெரிய சிக்கல் என்னவென்றால்  தகவல் என்பது ஒரு பெருவெள்ளமாக (information flood) ஓடுகிறது [10]. இதில் தேவையானது என்ன என்று தெரியாமல் தேவையற்ற செய்திகளில்/கூச்சல்களில் சிக்கிக்கொள்கிறோம். இந்த இணையதளத்தின் முக்கிய நோக்கம் என்பது  தேவையான அறிவினைத் தேடி ஆராய்ந்து திரட்டவதுதான்.
 1. அவ்வாறான அறிவு ஆராய்ச்சி கட்டுரைகளாக, நூல் விமர்சனங்களாக, முக்கிய ஆங்கிலக் கட்டுரைகளின் சுருக்கமாக, அல்லது வேறு எந்த முக்கியமான படைப்புகளாகவும் இருக்கலாம். ஆனால் இவை அனைத்தும் தரவுகளுடன் தெளிவாக ஆராயப்பட்டிருக்கவேண்டும்.
 1. ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் பங்கேற்கலாம். இது ஒரு தட்டையான (flat organization)  இலாப நோக்கமற்ற அமைப்பாக இருக்கும். இது ஒருவர் சொற்படி கேட்கும் சர்வாதிகாரமும் அல்ல, பொது ஓட்டு  எடுத்து   முடிவெடுக்கும் சனநாயகமும் அல்ல [16]. இதன் குறிக்கோள் சிறந்த அறிவை உருவாக்குவது மட்டுமே. அது யாரிடம் இருந்தும் வரலாம். அனைத்து கருத்துக்களும் கேள்விக்குள்ளாக்கப்படும். “எனது  கருத்துதான் சரி” என்ற எண்ணத்தில் செயல்படாமல், நமது கருத்துக்கள் தவறாக இருக்கலாம் என்ற ஐயத்துடனேயே அணுகவேண்டும். அனைவரையும் மதித்துப் போற்றும் பண்பு கொண்டிருக்கவேண்டும். கருத்துக்கள் மீதான கேள்விகளை, அவமதிப்பாக எடுத்துக்கொள்ளாமல்  அதை கற்றலுக்கு வாய்ப்பாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
 1. அறிவு என்பது கூட்டிக்கொண்டே செல்வதல்ல, தவறானவற்றைக் கழித்திலும் ஆகும். புரட்சிகரமான புதிய கருத்துக்கள் பழையவற்றை தவறாக்கியே வருகிறது. பொதுவாக அதுபோன்ற புதிய கருத்துக்கள் வரவேற்கப்படுவதில்லை, மாறாக கூறியவர்கள் தாக்கப்படுகிறார்கள். உதாரணமாக கலிலியோவை எடுத்துக்கொள்ளலாம். மனிதன் அன்றிலிருந்து இன்றுவரை மாறவில்லை. அதுபோன்ற மனநிலைதான் நமது முன்னேற்றத்திற்கு இருக்கும் பெரிய தடங்கல். புதிய கருத்துக்களை உளவாங்கி சீர்படுத்தி அதை பரப்புவது இந்த இணையதளத்தின் ஒரு முக்கிய செயல்பாடாக இருக்கும். அதுபோன்ற கருத்துக்களில்தான் நமது வெற்றியே தங்கி இருக்கிறது. அமெரிக்க இராணுவ ஆராய்ச்சி மையமான DARPA, புதிய திட்டங்களுக்கு என சில கேள்விகளை முன்வைக்கிறது [11]. அதிலிருந்து சில முக்கிய கேள்விகளுக்கான விடைகளுடன் ஒவ்வொரு படைப்பின் முன்னுரையும் ஆரம்பிக்கலாம் :
 • எளிமையான தமிழில் புதிய கருத்தை சில வரிகளில் விளக்கவும்
 • இன்று நிலவும் கருத்துக்கள் என்ன? உங்கள் புதிய கருத்து இதிலிருந்து எவ்வாறு மாறுபடுகிறது?
 • இப்புதிய கருத்துக்களினால் யாருக்கு என்ன பயன்? இவற்றைக்கொண்டு எது மாதிரியான மாற்றங்களை உருவாக்க முடியும்?

 

 1. நமது சிந்தனைகள் அனைத்தும் மாதிரிகளின் (models) மூலமே வருகிறது.  நமது மூளையில்  இவ்வுலகு எவ்வாறு இயங்குகிறது என்ற ஒரு மாதிரி (நாம் உணராவிட்டாலும்) இருக்கிறது. இம்மாதிரியின் மூலமே நாம் சிந்திக்கிறோம். ஆனால் சிக்கல் என்னவென்றால் அதுமாதிரியான வெளியே கூறப்படாத மாதிரிகளின் மூலம் எடுக்கப்படும் முடிவுகளினால்தான் பெரிய தவறுகள் ஏற்படுகின்றன [12].

      Many bad decisions are due to unarticulated models of the world  – Roger Martin

மாதிரிகளை வெளிப்படையாக்கினால், அதனை அனைவரும்  ஆராய்ந்து  சோதனை செய்து, சீர்படுத்தி சிறப்பாக்க முடியும். அவ்வாறு சிறந்த மாதிரிகளைக் கொண்டு எடுக்கப்படும் முடிவுகள் சிறப்பானதாக அமையும். அவ்வாறான மாதிரிகளை உருவாக்குவதை   ஒரு முக்கிய கடமையாகக்கொண்டு  இந்த இணையதளம் செயல்படவேண்டும்.

 1. சமூகம் போன்ற சிக்கலான அமைப்புகளை அலசுவதற்கு பல்வேறு துறைகளின் புரிதல் தேவைப்படுகிறது என்பதால், இதை ஒரு கூட்டு முயற்சியின் மூலமே வெற்றிபெற வைக்கமுடியும் [14,15]. இதில் பங்குபெற அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள். இது ஒரு கூட்டு முயற்சி, தனி முயற்சி அல்ல. அனைவரும் ஒத்த கருத்துக்களுடன் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. எவ்வளவு மாறுபட்ட கருத்துக்கள் உள்ளதோ அவ்வளவுதூரம் நல்லது. கருத்துக்களில் வேற்றுமை இருக்கவேண்டும், அதன் மூலமே நாம் உண்மையை அறிய முடியும் [13]. உங்களிடம் மாற்றுக் கருத்துக்கள் இருக்கிறதென்றால், நீங்கள்தான் மிக முக்கியம்.  ஆனால் அதே நேரம் தமிழர் நலன் என்ற  குறிக்கோளில் அனைவரும்  உணர்வுப்     பூர்வமாக ஒரு  மனதுடன் இருக்கவேண்டும்.
 1. இதை ஓர் உலகத்தமிழர்களின் கூட்டு முயற்சியாக ஆக்கவேண்டும். இது எந்த ஓர் அரசியல் அமைப்பின் கீழும் இயங்காது. அவ்வாறு சுதந்திரமாக இயங்குவதன் மூலமே சிறந்த அறிவை உருவாக்க முடியும். உலகில்   இருக்கும் தமிழ்த்தேசிய சிந்தனையாளர்கள் இணைந்து செயல்படும் ஒரு தளமாக இதை உருவாக்கவேண்டும்.  அவ்வாறான சிந்தனையாளர்கள் வேறு அமைப்புகளிலும் இருக்கலாம்.
 1. நாம் தேசிய சிந்தனை கொண்டவர்களாக இருக்கும் அதே வேளையில் மனிதநேயம் கொண்டவர்களாக இருத்தல்வேண்டும். வெறுப்புக் கருத்துக்களுக்கு இடமளிக்கக் கூடாது.

இது ஒரு ஆரம்பகட்ட திட்டமே. விவாதங்களின் மூலம் எவ்வாறு செயல்படுவது, செயல்படும்   விதிமுறைகள் ஆகியன கண்டறியப்படும். அனைத்தும் விவாதத்திற்கு உட்பட்டதே.

தற்பொழுது  arivukkadal.com என்ற தளம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இத்தளத்தை வடிவமைத்து  கட்டுரைகள் ஒவ்வொன்றாக  பதிப்பிக்க வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் “Contact” பக்கம் ( https://sethusubbar.wordpress.com/contact/ ) மூலமாக தயவு செய்து தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.

இதுதான் ஒரு சிந்தனை மைய ஆரம்பத்திற்கான திட்டம். இதிலிருந்து சிந்தனையாளர்களை திரட்டி படிப்படியாக ஒரு சிந்தனை மையமாக வளரவேண்டும். இன்று நாம் எதிநோக்கும் சிக்கல்கள் கடினமானவை. ஆனால் அடிப்படையில் சிக்கல்கள் அனைத்தும்  அறிவுச்சிக்கல்களே. அவற்றை தீர்ப்பது  எவ்வாறு  என்று அறிந்து விட்டால், தீர்ப்பது எளிதாகிவிடும். அவ்வாறான அறிவைப் பெறுவது சிந்தனையாளர்களின் வரலாற்றுக் கடமை. அதற்கான வாய்ப்பாக இம்முயற்சி இருக்கும்.

 

 1. ஆழி செந்தில்நாதன், செ. இரா. செல்வக்குமார், Sam Vijay, வித்தியாசகர், Hv. Vichu, ஆகியோரது கருத்துக்கள் மிகவும் உதவியாக இருந்தது.
 2. Coker, Christopher. The Future of war
 3. Plotkin, Henry C. Darwin machines and the nature of knowledge. Harvard University Press, 1997.
 4. இக்குறளை முதன் முதலில் எனக்கு அறிமுகப்படுத்தியவர் ஐயா செ. இரா. செல்வகுமார் அவர்கள்.  பின்பு ஆழி செந்திலநாதன் அவர்கள் விவாதத்தின்போது இக்குறளை என்னிடம் கூறினார்கள். அதன்பின் எனக்கு இக்குறள் திருக்குறளிலேயே மிகவும் பிடித்த குறளாக மாறிப்போனது.
 5. Popper, Karl. All life is problem solving. Routledge, 2013.
 6. Safi Bahcall, Loonshots How to Nurture the Crazy Ideas That Win Wars, Cure Diseases, and Transform Industries, 2019
 7. Russell, Bertrand. History of western philosophy.
 8. Vienna Circle, https://en.wikipedia.org/wiki/Vienna_Circle
 9. Vaithees, V. Ravi. Religion, Caste, and Nation in South India: Maraimalai Adigal, the Neo-Saivite Movement, and Tamil Nationalism, 1876-1950. Oxford University Press, 2015.
 10. Gleick, James. The information: A history, a theory, a flood. Vintage, 2012.
 11. The Heilmeir Catechism, https://www.darpa.mil/work-with-us/heilmeier-catechism
 12. Riel, Jennifer, and Roger L. Martin. Creating great choices: A leader’s guide to integrative thinking. Harvard Business Press, 2017.
 13. Page, Scott E. The Difference: How the Power of Diversity Creates Better Groups, Firms, Schools, and Societies-New Edition. Princeton University Press, 2008.
 14. Meadows, Donella H. Thinking in systems: A primer. chelsea green publishing, 2008.
 15. Stroh, David Peter. Systems thinking for social change: A practical guide to solving complex problems, avoiding unintended consequences, and achieving lasting results. Chelsea Green Publishing, 2015.
 16. Ray Dalio, Principles: Life and Work, 2017.
Posted in தமிழ்த்தேசியம், Uncategorized | 2 Comments

அறிவில் எதிரும் புதிரும்

 1. புத்திசாலியான ஒன்றை உருவாக்க புத்திசாலி தேவையில்லை – இடார்வினின் பரிணாம தத்துவம்
 2. கணக்கு போட கணக்கு தெரியவேண்டிய அவசியமில்லை – டூரிங்கின் கணினி தத்துவம்
 3. ஒரு ஏரண (logical) அமைப்பால்  அதன் ஏரணத்தை நிரூபிக்க முடியாது –  கோடாலின் தத்துவம்
 4. மனிதர்களின் சுயநல செயல்பாட்டால் கூட்டு ஒத்துழைப்பை உருவாக்க முடியும் – ஆடம் சுமித்தின் பொருளாதாரத் தத்துவம்
 5. தட்டையாக இருக்கும் ஆனால் உருண்டையானது – பூமியைப் பற்றி பண்டைய கிரேக்கர்கள்
 6. பூமி நிலையாக இருக்கும், ஆனால்  அதிவேகமாக சுற்றும் – கோபர்நிக்கசின் சூரிய மையக் கொள்கை
 7. கோள்கள் இணைக்கப்படாமல்  கோடிக்கணக்கான மைல்கள் தொலைவிலிருந்தாலும்  ஒன்றை  ஒன்று ஈர்க்கும் – நியூட்டன்
 8. ஒளி அலையாகவும் இருக்கலாம் துகளாகவும் இருக்கலாம் – மாக்சு பிளாங்கு
 9. சிறந்த திட்டம் என்பது முழு திட்டமில்லாத செயல்பாடுதான் – சிக்கல் அமைப்புகள்
 10. போரிடாமலும் போராடலாம் – காந்தி

இவ்வுலகில் கடினமான சிக்கல்களைத் தீர்க்கமுடியாமல் போவதற்கு ஒரு முக்கிய காரணம்  எதிரெதிர் துருவங்களை இணைப்பதில் ஏற்படும் கடினம்தான்.  நமது மூளை அவ்வளவு எளிதில் ஒப்புக்கொள்ளாது. அதையும் மீறி தீர்வுகளைக் கண்டுபிடித்தாலும் மற்றவர்கள் ஒப்புவதில்லை. நமது மூளையில் ஒரு மோசமான வியாதி உண்டென்றால் “இதுவா அதுவா” என்று சிந்திப்பதுதான்.  மாறாக நாம் “இதுவும் அதுவும்” என்று சிந்தித்துப் பழகவேண்டும்.

If you want the truth to stand clear before you, never be for or against. The struggle between ‘for’ and ‘against’ is the mind’s worst disease.”  – Jianzhi Sengcan

எதிரும் புதிருமான கருத்துக்களை ஒரே நேரத்தில் மனதில் வைத்துக்கொண்டு குழப்பமில்லாமல் தெளிவுடன் செயல்படுவதுதான் அதி புத்திசாலித்தனத்தின் முதல் அறிகுறி.

The test of a first-rate intelligence is the ability to hold two opposed ideas in mind at the same time and still retain the ability to function. — F. Scott Fitzgerald

Posted in அறிவியல், தத்துவம், Uncategorized | Leave a comment