உன்னை அறிந்துகொள்

உளவியல் மேதை கார்ல் யுங்கு [1] கூறும் ஒரு ஒரு ஆழமான தத்துவத்தை உணர்ந்துகொள்வது மிகமுக்கியமானது. . அவர் கூருவது “அனைத்து முன்னேற்றமும் புலப்படா சிந்தையில் (unconscious) உள்ளதை புலப்படும் சிந்தைக்கு (conscious) மாற்றுவதில் இருக்கிறது” என்றார். இது அறிவியலிலிருந்து அரசியல் வரை அனைத்திற்கும் அடிப்படை. முதலில் சில உதாரணங்களைப் பார்ப்போம். அதன் பின்னர் இது எவ்வாறு நமது சிக்களைப் புரிந்துக்கொள்ளப் பயன்படுகிறது எனப்பார்ப்போம்.

  1. மொழி அனைத்து மனிதர்களுக்கும் இயற்கையானது, பொதுவானது. ஒரு குழந்தை தானாக கற்றுக்கொள்கிறது, பேசுவதற்கு பாடம் எடுக்கத் தேவையில்லை. இது மூளையில் புலப்படா சிந்தையில் உள்ளது. அதன் துணைகொண்டு நாம் பேசுகிறோம், ஆனால் எழுத்து மொழி அப்படியல்ல. பேச்சு மொழியின் இலக்கணம் புலப்படாத சிந்தனையில் உள்ளது. அதை நாம் புலப்படும் சிந்தனைக்கு கொண்டுவந்து ஆராயும் பொழுதே, அம்மொழியின் இலக்கணம் வரையறுக்கப்பட்டு எழுத்து மொழி தோன்றியது. எழுத்து மொழி இல்லாமல் இன்று ஏற்பட்டுள்ள எந்த முன்னேற்றமும் ஏற்பட்டிருக்காது.
  2. கணிதமும் புலப்படாத சிந்தனையில் உள்ளதை புலப்படும் சிந்தனைக்கு கொண்டுவந்தே தோன்றியது. உதாரணமாக முப்பரிமாணம்( 3D) என்பது மனித மூளையில் இருப்பது. வெளியுலகு முப்பரிமாண உலகு அல்ல. வெளியுலகை முப்பரிமாணத்தில் நிழல் படுத்தியே (projection) உலகை பார்க்கிறோம். முப்பரிமாணம் போன்று பல்வேறு முன் தத்துவங்கள் (apriori concepts) மனித மூளையில் இயற்கையில் பிறக்கும் பொழுதே நம்முடன் சேர்ந்து பிறக்கிறது. இந்த முன் தத்துவங்கள் இருப்பதாலேயே கணிதம் சாத்தியமானது என்கிறார் காந்து(Kant) [2]. அடிப்படையில் நாம் முன் தத்துவங்களின் வழியாகவே உலகைப் பார்க்கிறோம். விலங்குகள் எவ்வளவு முயன்றாலும் அவற்றால் மொழியை கற்க முடியாது, ஏனெனில் அவற்றிற்கு மொழிக்கான முத்தத்துவங்கள் இல்லை.
  3. அறிவியல் முறையும் புலப்படா சிந்தனையில் உள்ளதை புலப்படும் சிந்தனைக்கு மாற்றியதன் மூலமே உருவானது. இயற்கையான சிந்தனை முறை என்பது புலப்படா சிந்தனையில் உள்ளது. நிகழ்வுகள் அடிக்கடி இணைந்து நடக்கும்பொழுது அதை உண்மை என்று எடுத்துக்கொள்கிறோம். உதாரணமாக, சூரியன் கிழக்கில் உதிக்கிறது, மேற்கில் மறைகிறது, பூமி தட்டையானது, சூரியன் பூமியை சுற்றுகிறது போன்றவை. இதுபோன்ற உண்மைகள் அன்றாட சிக்கல்களைத் தீர்க்க பயனுள்ளவை. இவை ஆழமாக சிந்திக்காமலேயே உருவாகிறது. ஆனால் இந்த சிந்தனையை புலப்படும் சிந்தனையில் கொண்டுவந்து, அம்முறையில் உள்ள பிழைகளை நீக்கியே அறிவியல் முறை பிறந்தது.
  4. அனைத்து அரசியல் தத்துவங்களின் அடிப்படை என்பது மனித உளவியல் பற்றிய கருதுகோள்கள். மனித உளவியலும் புலப்படா சிந்தனையில் உள்ளது. இன்றைய உலகில் பல்வேறு சிக்கல்களைத் தீர்க்க முடியாமல் போவதற்கு ஒரு முக்கிய காரணம் நாம் நம்மையே சரியாக உணராமல் இருப்பதுதான். எந்த ஒரு நிலையான அரசையும் உருவாக்க முடியாமல் போவதற்கு காரணமும் மனித உளவியல்தான்.
  5. மனிதனின் புலப்படா சிந்தனையில் இருக்கும் அனைத்தும் சரி என்று பொருள் கொள்ளமுடியாது. பல்வேறு தவறுகள் இருக்கின்றன. அதை புலப்படும் சிந்தனைக்கு வெளிக்கொண்டுவந்து சரி செய்துதான் முன்னேற்றம் காணமுடியும். மனித உளவியல் பாடப்பிரிவின் ஒரு நோக்கம் இதுதான். Bhavioral Economics என்ற ஒரு பிரிவு எது போன்ற பொருளாதாரத் தவறுகளை “புலப்படா சிந்தனை” உருவாக்குகிறது என ஆராய்கிறது.
  6. கிரேக்க கோவில்களில் “உன்னை அறிந்துகொள்” ( Know Thyself) என பொறிக்கப்பட்டிருக்கும். அரிசுடாட்டில் “மனிதன் தன்னை அறிந்துகொள்வதுதான் ஞானத்தின் ஆரம்பம்” என்றார். இது உண்மைதான் போல. நமது முன்னேற்றம் எல்லாம் நம்மை, நமது புலப்படா சிந்தனையில் இருப்பதை அறிந்து கொள்வதிலேயே இருக்கிறது. எழுத்து மொழி முதற்கொண்டு, அனைத்து அறிவியல்களும், அரசியல்களும், ஏன் அறிவியல் முறைகூட இதிலிருந்துதான் பிறக்கிறது. இன்று செயற்கை அறிவை (Artificial intelligence) உருவாக்க நினைப்பவர்கள் கூட, மனித மூளையைத்தான் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். நாம் எப்பொழுது நம்மை முழுமையாக அறிகிறோமோ, அன்று நாம் அளவிட முடியாத ஆற்றல் மிக்கவர்களாக இருப்போம்.

இதை சுருக்கமான படிகளாக இவ்வாறு விளக்கலாம்:

  1. புலப்படாத சிந்தனையில் உள்ள உளவியல் அல்லது முன் தத்துவங்கள்
  2. அவற்றை புலப்படும் சிந்தனைக்கு கொண்டு வந்து ஆராய்ந்து அதை முழுமையாக புரிந்து கொள்ளுதல்.
  3. அதைப் பயன்படுத்தி சிக்கல்களுக்கான புதிய தீர்வுகளை உருவாக்குதல்.

இதுதான் அனைத்து முன்னேற்றத்திற்கும் அடிப்படை. இவ்வுலகில் உள்ள மதங்கள், அரசியல், அறிவியல், எழுத்துமொழி என எல்லாம் மனித உளவியல் அல்லது முன் தத்துவங்கள் மீதுதான் கட்டப்பட்டுள்ளது. இவற்றின் வழியாகவே உலகைப் பார்க்கிறோம், உத்திகளை அமைத்து உலகை எதிர்கொள்கிறோம். இந்த வழியை விட்டால் வேறு வழி என்பது இல்லை.

இனி அரசியலுக்கு வருவோம். திராவிட அரசியல் என்பது மனிதனிடம் இருக்கும் “சுயநலம்” என்ற உளவியல் அடிப்படையிலானது. அரசியல்வாதிகளும் அவரின் சுயநலத்துக்காக அரசியல் செய்கின்றனர், மக்களின் சுயநலத்தின் அடிப்படையில் வாக்குறுதி அளித்து, பணம் கொடுத்து வாக்குகளைப் பெறுகின்றனர். சுயநலம் என்பது இயற்கையாக மரபணுக்கள் வழியாக வருவது, இது விலங்குகளுக்கும் உண்டு. சமூகநீதி என்ற கருத்தியல் சமூக நன்மைக்காக என்றாலும், அதுவும் மக்களின் சுயநலன் அடிப்படையிலே திராவிட அரசியலில் செயல்படுகிறது. ஏனென்றால் பொதுவாக சமூக நீதி யாருக்கு பயனளிக்குமோ அவர்கள் அதை ஆதரிக்கின்றனர், யாருக்கு இழப்போ அவர்கள் அதை எதிர்க்கின்றனர். சமூகத்திற்கு நன்மை என்று பெரும்பாலானோர் சமூகநீதியை ஆதரிப்பதில்லை. திராவிடக் கட்சியிலேயே அவர்கள் சமூகநீதியைப் பின்பற்றுவதில்லை என்பதை கவனிக்கவேண்டும்.

தமிழ்த்தேசிய வெற்றிக்கு அடிப்படையில் நாம் கேட்கவேண்டிய கேள்வி இதுதான்: நாம் எதுபோன்ற உளவியலைக் கொண்டு உத்திகளை வடிவமைக்கவிடும் என்பதே. தமிழ்த்தேசியம் என்பது ஒட்டுமொத்த சமூகம் சார்ந்த குறிக்கோளைக் கொண்டது. அது நிலம், மொழி, பண்பாடு, அடையாளம் ஆகியவற்றைக் காப்பதே. இது பொதுநலம் சார்ந்தது, சுயநலம் சார்ந்தது அல்ல. திராவிடம் நடத்தும் சுயநல அரசியலால் தேசியம் சார்ந்த பொதுநல அரசியலை நடத்தவே முடியாது. சுயநலம் என்பது மக்களுக்கிடேயே போட்டியையும் பொறாமையையும் உருவாக்கி ஒற்றுமையை குலைக்கும். ஒற்றுமையற்ற மக்களால் தேசியம் சார்ந்த எந்த பொதுநல குறிக்கோளையும் அடையமுடியாது.

பொதுநல அரசியல் என்பது தியாகம் சார்ந்தது, ஒற்றுமை சார்ந்தது. பொது நன்மைக்காக சுயநலத்தை மறந்து தியாகம் செய்யத் தயாராக இருக்கவேண்டும். அதுபோன்ற உளவியலால் மட்டுமே தமிழ்த்தேசிய குறிக்கோள்களை வெல்ல முடியும். அதனால் எதுபோன்ற உளவியல் மக்களை ஒற்றுமைப் படுத்தும், பொதுவான குறிக்கோள்களை அளிக்கும், அதற்குப் போராட மன உறுதி அளிக்கும், சுயநலத்தை ஒழிக்கும் என்பதுதான் நாம் கேட்கவேண்டிய முக்கிய கேள்வி. அதற்கா விடைதான் “தியாக உளவியல். நான் அண்மையில் எழுதிய கட்டுரைகள் எல்லாம் இதை நோக்கியதே. தலைவர் பிரபாகரன் இந்த தியாக உளவியலை சரியாக கையாண்டதுதான் ஈழப்போரின் சாதனைகளுக்கு முக்கிய காரணம். தியாக உளவியல் இல்லாமல் புலிப்பண்பாடு என்பது இல்லை.

அடிபப்டையில் தமிழ்த்தேசிய வெற்றியும் , நமது புலப்படா சிந்தனையில் உள்ளதை புலப்படும் சிந்தனைக்குக் கொண்டுவருவதை நம்பியே இருக்கிறது. இயக்கம் எவ்வாறு மாபெரும் இயக்கமாக வளர்ந்தது, அதன் உளவியல் என்ன, தலைவரின் உளவியல் தாக்கம் என்ன, அந்த தியாகத்தின் உளவியல் விளைவுகள் என்ன என்பதெல்லாம் புலப்படாத சிந்தனையில் உள்ளவை. அதை முழுமையாக வெளியே கொண்டுவந்து, புரிந்து, அதை நாம் பயன்படுத்தும் பொழுது அதன் முழு ஆற்றலை உணர முடியும். நான் எழுதிய தியாக தேசம், தயனிசியன், மனபலம், வீரநாயகன், ஊபர்மேன்சு ஆகிய கட்டுரைகள் எல்லாம் அதை நோக்கியதே. நமது உண்மையான ஆற்றல் நமது உள்ளுக்குள்ளே பிறக்கிறது. பிரபாகரனின் போராட்டமும் தியாகமும் அந்த ஆற்றலை எவ்வாறு வெளிக்கொண்டு வருவது என்பதற்கான வழியை வகுத்திருக்கிறது. அதை அறிந்துகொண்டு எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதுதான் நமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.

குறிப்பு: தியாக உளவியலும் சுயநலமும் எதிரும் புதிருமானவை, அதனால் தியாக உளவியலை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது பொருள் அல்ல. எதிரும் புதிருமான உத்திகளை கையாள்வது என்பது உத்திகளின் அடிப்படை என்பது “தமிழ்தேசியத்திற்கான பெருந்திட்டம்” நூலில் ஏற்கனேவே பார்த்துவிட்டோம். தியாக உளவியல் முதன்மையானதாகவும், அதன் கீழே ஒரு கருவியாக சுயநல உளவியலையும் பயன்படுத்தலாம். அதுபோன்ற உத்திகளே அதிக பலனளிக்கும். சுயநல உளவியலை தனியாகப் பயன்படுத்துவதுதான் ஆபத்தானது. தலைவர் ஈழத்தில் சாதியை ஒழித்து சமத்துவத்தை நிலைநாட்டினார், சமூகநீதி, மொழி, நாடு, பண்பாடு என அனைத்தும் காக்கப்பட்டது. சமூக நீதி என்பது கூட தியாக உளவியலின் கீழ் நடக்கும்பொழுதே, அது சமூகத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தி நன்மை விளைவிக்கும், உண்மையான சமூகநீதி நிலைநாட்டப்படும்.

தரவுகள்

  1. Jung, Carl G. Man and his symbols. Bantam, 2012.
  2. Kant, Immanuel, et al. Critique of pure reason. London: JM Dent, 1934.
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

1 Response to உன்னை அறிந்துகொள்

  1. Anonymous says:

    தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( https://bookmarking.tamilbm.com/register ) திரட்டியிலும் இணையுங்கள்.

    Like

Leave a comment