யூதர்களின் கல்விமுறையிலிருந்து தமிழ்க்கல்விக்கான சில உத்திகள்

புலம்பெயர் நாடுகளில் தமிழ்க்கல்வியின் குறிக்கோள் என்ன என்பதை  கனடாத் தமிழ்க் கல்லூரியின்  இணையப்பக்கம் தெளிவாகக் கூறுகிறது[1]:

மரபு, பண்பாடு, விழுமியம், வரலாறு, மொழி என்பன ஓர் இனத்தின் அடையாளங்கள் ஆகும். இவையே அவ்வினத்தின் இருப்புக்கான ஆணிவேராக அமைகின்றன. தமிழினம்  இவ்வடையாளங்களை மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகச் சுமந்து வருகின்றது. இவற்றை, புலம்பெயர் நாட்டில் நாம் இழந்து விடக் கூடாது என்பதற்காகவும் இவற்றை எமது அடுத்த தலைமுறை அறிய வேண்டும் என்பதற்காகவும் 1993 ஆம் ஆண்டு கனடாத் தமிழ்க் கல்லூரி உருவாக்கம் பெற்றது.”

அடிப்படையில் நமது அடையாளத்தைக் காப்பதுதான் தமிழ்க்கல்வியின்  முதன்மை குறிக்கோள்.  இது நமக்கு மட்டும் உள்ள சிக்கல் அல்ல.  புலம்பெயர் நாடுகளில் அடையாளத்தை எவ்வாறு காப்பது என்பதற்கு சிறந்த உதாரணம் யூதர்கள்தான்.  அவர்களின் கல்வி முறைகளிலிருந்து நாம் என்ன கற்கலாம் என்பதை சுருக்கமாக ஆராய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம். அவர்களின் சிந்தனை நமது சிந்தனையுடன் ஒப்பிடும்பொழுது முற்றிலும் மாறுபட்டது. கீழுள்ள இரண்டு கேள்விகளுக்கு நாமும் அவர்களும் எப்படி விடையளிக்கிறோம் என்பது சுருக்கமாக விளக்கும்.

கேள்வி: எந்த ஊரில் குடியிருக்கக் கூடாது?

தமிழர்கள்: கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம்

யூதர்கள்: பள்ளி இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்.

“There was a stern prohibition against living in a town which was not provided with a school.” [2]

கேள்வி: நாட்டைக் காப்பவர்கள் யார்?

தமிழர்கள்: நல்ல அரசன்.

யூதர்கள்: நல்ல ஆசிரியர்கள்.

“A President of the Academy  relates the Talmud “once sent several learned men from Palestine to aid the progress of instruction and establish schools where none existed. They came to a city where they saw no sign of a school nor could they find a teacher. They said to the citizens, ‘bring the keepers of the city before us.’ The magistrate and the chief police officials appeared. ‘These are not the city’s keepers’ the wise men exclaimed. ‘Who then are ?’ asked the citizens in astonishment. ‘The city’s keepers are the teachers,’ was the reply… A city without schools should be destroyed or excommunicated.  And Jerusalem was destroyed because its people neglected the schools and school children.” [2]

யூதர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக அவர்களுக்கென்று ஒரு நாடு இல்லாவிட்டாலும் மொழியை மறந்து விட்டாலும், அவர்கள் தங்களது அடையாளத்தைக் காத்தது மட்டுமில்லாமல்  இழந்த நாட்டையும் மறந்த மொழியையும் மீட்டு விட்டார்கள். அதற்கு அடிப்படையாக அமைந்தது அவர்களின் யூதக் கல்விமுறை.  அதிலிருந்து மூன்று முக்கிய பாடங்களை முன்வைக்கிறேன்.

 1. இன அடையாளத்தை வரலாற்றுக் கதையாற்றல்(historical narrative) மூலமே சிறப்பாகக் காக்க முடியும்.

ஓர் இனம் என்பது ஒரு பெரிய கற்பிதக் குடும்பம் [3]. அவர்கள்  ஒரு பொதுவான மரபுவழியில்  வந்தவர்கள் என்ற நம்பிக்கையாலும் (உண்மையாக இருக்கவேண்டிய அவசியமில்லை), பொதுவான வரலாற்றுக் கதையாற்றல்,  பொதுவான பண்பாடு ஆகியவற்றின் மூலம் ஒரு குழுவாக இணைக்கப்படுகின்றனர்.  இந்த வரலாற்றுக் கதையாற்றல் யார் குழுவின் உறுப்பினர், யார் இல்லை, இனக்  குறியீடுகள், இனத்தின் பொற்காலம், இறந்த காலம், அழிவு காலம், எது புனிதம்,  எது  பூர்வீகம்,  யார் மாவீரர்கள், யார் எதிரிகள்,   ஆகியவற்றை உள்ளடக்கி  இன அடையாளத்தின் மையமாக இருக்கிறது.  இந்தக் கதையாற்றல் மூலம் தான்  நிலத்தை  காக்கவேண்டும், அடையாளத்தை காக்கவேண்டும், மொழியைக் காக்கவேண்டும்,  மாவீரர்களைப் போற்றவேண்டும், எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணமும் உணர்வுகளும் வருகிறது [3, 14].

யூதர்கள் தங்கள் அடையாளத்தைக் காக்க முடிந்ததின் இரகசியம் என்பது அடிப்படையில் அவர்கள் வரலாற்றுக் கதையாற்றலைக் கற்பிப்பதற்கு அதிக  முக்கியத்துவம் கொடுத்ததுதான்.  யூதக்கல்வி முறையில்:

 1. வரலாற்றுக் கதையாற்றல் தான் ஒரு குழுவின் அடையாளத்துக்கும், ஒற்றுமைக்கு அடிப்படை. வரலாற்றுக் கதையாற்றலை உள்வாங்குவதுதான் முக்கியம் என்பதால், அது குழந்தைகளுக்கு எந்த மொழியில் புரியுமோ அதில் கற்பிக்கப்பட்டது.
 2. அவர்களின் ஈப்ரு மொழியை ஒரு பண்பாட்டு குறியீட்டு மொழியாக கற்பித்தார்கள். அவர்களுக்கு அடிப்படையில் அதில் பிரார்த்தனை செய்யவும், எழுத்துக்களை அடையாளம் காண்பது, ஓரளவு எழுத்துக்கூட்டி படிக்கவும் கற்றுக்கொடுத்தார்கள். ஆனால் அனைவருக்கும் படித்து முழுதாக புரிந்து கொள்ளவோ அல்லது பேசவோ தெரியாது. அவ்வாறு இருந்தாலும்  அவர்களின் ஈப்ரு மொழி உயர்வானது என்ற உணர்வுகள் கதையாற்றல் மூலம் கற்றுத்தரப்பட்டன. இது வடமொழியைப் போல,  வழக்கொழிந்தாலும் கதையாற்றல்களால் உயர்வாகக் கருதப்பட்டது.

“You’ve stumbled upon one of the secrets to Jewish survival. As holy as Hebrew is, and as central as it is to our prayer and study, it is not what defines us as Jews… Ever since we were exiled from Israel, we have spoken many languages…Is this ideal? No. In a perfect world, we would all be speaking Hebrew…But the rabbis understood that it is not Hebrew, but the Torah, that sustains us as a nation. Our language, country of residence, culture, and accent have changed numerous times throughout history. But we are still here today. For the Torah has been studied and its mitzvahs observed in all times, lands, and circumstances. Let the language be compromised, but not the message.” [4]

முடிவில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தபொழுது, யூதர்கள் இழந்த நாட்டையும் இறந்த ஈப்ரு மொழியையும் மீட்டுவிட்டார்கள்.   இந்துத்வ குழுக்களும் அவ்வாறு வடமொழியை மீட்க முயற்சி செய்கின்றன. ஒரு மொழி வாழ்வதற்கு  மக்களின் மனதில் அதன் தகுதி என்ன என்பதுதான் முக்கியம் என்கிறது ஆராய்ச்சி முடிவுகள் [5]. மொழிக்குத் தகுதி இருந்தால், இறந்த மொழியை மீட்டு விடலாம். தகுதி இல்லாவிட்டால், இருக்கிற மொழியும் இறந்துவிடும்.

புலம்பெயர் நாடுகளில்  வாழும் தமிழர்களிடம், மொழியை மட்டும் நாம் கற்பிக்க முனைந்தால் தோல்வி ஏற்படலாம். வரலாற்றுக் கதையாற்றலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். நமது பூர்வீக  நிலங்களில் தமிழ் கற்பிக்கப்பட்டாலும், நமது  வரலாற்றுக் கதையாற்றல் கற்பிக்கப் படுவதில்லை. இதனால் தமிழ் ஒரு தாழ்வான மொழியாகக் கருதப்பட்டு, தமிழ் மொழியும் தமிழ்வழிக் கல்வியும் அழிந்து வருகிறது.  வரலாற்றுக் கதையாற்றல்  குழந்தைகளின் மனதில் பதிந்து அவர்களின் உணர்வுகளுடன் கலந்து அடையாளத்தைக் கொடுக்கிறது. மொழி ஒருவரது அடையாளத்தில் கலந்துவிட்டால் அதை இழிவாகக் கருதமுடியாது. அவ்வாறு இழிவாகக் கருதினால், தன்னையே இழிவாகக் கருதுவதற்கு ஒப்பாகும்; இது நடக்க முடியாத காரியம்.   வரலாற்றுக் கதையாற்றலால்  தமிழையும், தமிழ்வழிக் கல்வியையும், தமிழர் அடையாளத்தையும்,  இழந்த நாட்டையும்  மீட்க முடியும் என்பதை உணரவேண்டும்.  இதுதான் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம்.  அதற்காக நாம் அவர்களைப் போல் மொழியை விட்டுவிட வேண்டியதில்லை. அவர்கள் இருந்த நிலைமையில் நாம் இல்லை. தமிழ்க்கல்வி என்பது வரலாற்றுக் கதையாற்றலுக்கு  அதிக முக்கியத்துவம் கொடுத்து  சேர்த்து கற்பிக்கப்படவேண்டும்.

யூதர்களின் வரலாற்றுக் கதையாற்றல் பெரும்பாலும் மதம் சார்ந்தது, ஆனால் கதையாற்றல் எல்லாம் மதம் சார்ந்து இருக்கவேண்டிய அவசியமில்லை. அவை மதசார்பற்ற உண்மையின் அடிப்படையிலும் அமைக்கலாம். சொல்லப்போனால் மதங்களே தங்களை உண்மை என்று கூறியே மக்களை ஈர்க்கிறது. மேலும் மதச்சார்பின்மை என்பது இறைமறுப்பு அல்ல, அனைத்து மதங்களை சமமான பார்வையில் எடுத்துக்கொள்வதே. நம்மால் மதசார்பற்ற உண்மையான கதையாற்றலைக் கொண்டு யூதர்களைப் போல செய்யமுடியும்.

 1. தமிழ்க்கல்வியில் படிக்கும் மாணவர்கள் அவ்வழியில் படிக்காத மாணவ்ர்களைவிட வாழ்வில் அதிக வெற்றிகளை ஈட்டவேண்டும்.

யூதர்கள் ஈராயிர வருடங்களாக அதிக கல்வியறிவுள்ள சமூகமாக இருந்து வந்துள்ளார்கள். அவர்களின் கற்றலால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, விவசாயத் தொழிலிருந்து விலகி  நகர்ப்புற தொழில், வர்த்தகம் சார்ந்த வேலைகளுக்கு மாறிவிட்டார்கள். நாம் இன்று செய்வதை அன்றே செய்து விட்டார்கள் [6].  அவர்கள் சமூகத்தில் அதிக கற்றறிந்த அறிஞர்களே அதிக செல்வாக்கு உடையவர்களாக புகழுடையவர்களாக  இருந்து வந்துள்ளனர். இது அவர்கள் சமூகத்தில் ஒரு போட்டி நிலையை உருவாக்கி அனைவரையும் யூதக்கல்வியில்  கற்க வைத்தது. அதுபோக கல்வியற்ற அக்காலத்தில், அவர்களின் கல்விமுறை அவர்களுக்கு அரசுகளில் உயர் பதவிகளையும் பெற்றுத் தந்தது,  அவர்களை வர்த்தகத்தில் சிறக்க வைத்தது. யூதக் கல்வி அவர்களுக்குள் ஒத்துழைப்பைப் பெருக்கி  மேலும் பயன்பெற வைத்தது [6]. இன்றைய  நவீன உலகிலும்,   அவர்கள் மக்கள் தொகை உலகில் 0.2% ஆக இருந்தாலும்,  20% நோபல் பரிசுகளை அவர்களே வென்றுள்ளனர் [7].

இவ்வாறு அவர்கள் அக்காலத்திலிருந்து இக்காலம்வரை கல்வி அறிவில் உயர்ந்த சமூகமாகவும், அவர்கள் வாழும் நாடுகளில் அதிக பயனுள்ளவர்களாகவும்  முன்னேறியவர்களாகவும் இருந்து வந்திருக்கிறார்கள். யூதனாக இருப்பதை ஒரு பெருமையான விடயமாக அவர்களின் மக்களிடம் கல்வியினூடாகவும் செயலினூடாகவும் உருவாக்கிவிட்டனர். அதனால் ஒரு யூதன் தனது அடையாளத்தை பெருமையாக நினைத்து  அதை மேலும் தக்கவைக்க உழைக்கிறான்.

அவர்களால் கல்வியில் இவ்வளவு சாதனைகள் புரிந்ததற்கு ஒரு முக்கிய காரணம் அவர்கள் அதிக புத்திசாலிகள் என்பதல்ல. பெரிய சாதனையாளர் ஆவதற்கு 120 IQ  இருந்தால் போதுமானது என்கிறது ஆராய்ச்சி முடிவுகள் [8]. அவர்களின் சாதனைக்கு ஓர் அடிப்படையான காரணம் என்னவென்றால், அவர்கள் கல்வியை கல்விக்காக கற்றார்கள். கற்றலை அகப்படுத்தி அவர்களின் ஒரு தன்மையாகப் பார்க்கிறார்கள் [9]. நாம் கல்வியை ஒரு வேலைக்காக, பொருளுக்காக கற்கிறோம். அதனால் நாம் பொருளீட்டிய உடன் கற்றல் நின்று போகிறது. அவர்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கிறார்கள்.  அவ்வாறு அவர்களின் குணங்கள் (morals) யூதக் கல்விமுறையால்  கட்டி அமைக்கப்படுகிறது. யூதக் கல்வியில் நற்குணங்களை உருவாக்குவது  ஒரு முக்கியமான அங்கமாக அவர்கள் செயல்படுகிறார்கள். அவ்வாறு செயல்படுவதற்கு ஏற்றாவாறு அவர்களின் பண்பாட்டையும்  வரலாற்று கதையாற்றல்களையும் உருவாக்கி இருக்கிறார்கள் [2].

தமிழ்க்கல்வி இவ்வாறு ஒரு அதிகப்பயன் தரும் கல்வி முறையாக மாற்றப் படவேண்டும். அதற்கேற்றவாறு  பண்பாடு மட்டும்  வரலாற்றுக் கதையாற்றல் மூலம் நற்குணங்களை வளர்க்கவேண்டும். தமிழ் மட்டும் கற்பிக்காமல், அதனுடன் எது போன்ற தத்துவங்கள், அறிவியல், கணிதம்  ஆகியன கற்பிக்கப் படவேண்டும் என்று ஆராயவேண்டும். அவ்வாறு தமிழ்க்கல்வி அதிகப் பயன்பெறும்படி ஆகும்பொழுது,  அனைவரும் வலிந்து வந்து படிப்பார்கள், தமிழையும் கற்பார்கள், தமிழர் என்று பெருமிதம் கொள்வார்கள். மேலும் இதுபோன்ற கல்வி ஓர் அறிவார்ந்த ஒத்துழைப்பான சமூகத்தை உருவாக்கி,  சமூகத்தை ஓர் உயர்ந்த  நிலைக்குக்  கொண்டு செல்லும்.

 1. சமூக மறுசீரமைப்பிற்கானப் பாதையை தமிழ்க்கல்வி உருவாக்கவேண்டும்

யூதர்களை அழிக்க பாபிலோனியர்கள்,  ரோமர்கள்,  நாசிகள் என்று பலர் வரலாற்றில் தோன்றி இனவழிப்பு செய்துள்ளனர்,  ஆனால் நடந்தது என்னவோ யூதர்கள் இன்றும் இருக்கிறார்கள், இனவழிப்பு செய்தொர் இன்றில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் அவர்கள் இனவழிப்புகளில் இருந்து கற்று, தங்களை மறுசீரமைப்பு செய்து கொண்டதுதான். பாபிலோனியர்கள் கி.மு 598-இல் இனவழிப்பு  செய்தபோது,  யூதர்கள் அவர்களின் வரலாற்று கற்பிதங்களைக் கொண்டு  பைபிளை உருவாக்கி  மறு சீரமைத்தனர் [10]. சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர்  ரோமர்கள் இஸ்ரேலைப் பிடித்து, இனவழிப்புக்கு உள்ளாக்கி, கோவிலை இரண்டாவது முறையாக கி.பி. 70-இல் உடைத்தார்கள்.  இம்முறையும் யூதர்கள் தங்களை மாறிய சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொண்டார்கள். கோவில்களும் பூசைகளும் தங்களைக் காப்பாற்றாது, முறையான கற்றலின் மூலமே தங்களைக் காக்கமுடியும் என்று மறுசீரமைத்துக் கொண்டனர் [11].

“After 70 CE, Judaism no longer centered on temple service and ritual sacrifices. Instead, it demanded that all of its members read and study the Torah, educate their male children, and invest in literacy and instruction.” [11]

நாடே இல்லாமல் இரண்டாயிரம் வருடங்களாக வாழ்ந்தாலும், அவர்கள் கற்றல் மூலம் தங்கள் இன அடையாளத்தை இழக்காமல் பாதுகாத்தனர். வரலாற்றுக் கதையாற்றல்கள் உணர்வுப் பூர்வமாக அவர்களை இணைத்து அவர்களை ஒற்றுமையுடன் வைத்த்திருந்தது. பின்பு 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் யூத எதிர்ப்பு பரவியபோது,  மீண்டும் சீர்திருத்தம் கொண்டுவந்து, அவர்களின் நாட்டை மீட்டெடுக்க கல்வியின் மூலம் புதிய தலைமுறையை வளர்த்தெடுத்து வெற்றி கொண்டார்கள்.

“Jewish Nationalism was always influenced by the model of biblical Exodus, according to which an old generation had to expire in the desert before a new generation, free of the norms adopted during slavery, could be relied upon to conquer the land. Similarly, after 2000 years of Jewish life in Exile, it could not be expected that the same elite who led the people in “house of bondage” would lead them successfully into Promised Land. Ahad Ha’am, for example, was aware that the future of Zionist movement lay not with the parents in the synagogues but with the children who could be influenced in educational institutions. Ahad Ha’am wrote “that in a war of parents and children it is always the children who win in the end; the future is theirs”.[12]

ஒவ்வொரு பெரிய சிக்கலையும் எதிர்கொள்ள அவர்கள் கையாண்ட அடிப்படை உத்தி என்பது கல்வியின் மூலம் உருவாக்கும் சமூக மறுசீரமைப்புதான்.  இன்று தமிழினமும் இனவழிப்பு, நிலமிழப்பு, அடையாள இழப்பு, சாதிமத பிணக்குகள் எனப்பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. இதிலிருந்து மீண்டு ஒரு பலமான இனமாக மேலெழுவதற்கு தமிழ்க்கல்வியை  ஒரு அடிப்படை உத்தியாகப் பார்க்கவேண்டும். இன்று மக்கள் கோவிலுக்கு கோடிகோடியாக பணத்தை இறைக்கின்றனர், ஆனால் அவர்களின் உண்மையான நலனுக்காக செய்யப்படும் காரியங்களுக்குப் பெரிய உதவி செய்வதில்லை. உதாரணமாக  ஆர்வர்டு தமிழ் இருக்கை அமைப்பதற்கு பெரிய பரப்புரை செய்யவேண்டி இருந்தது. கோவிலுக்குச் செல்லும் பணத்தில் ஒரு 10% திருப்பினால் கூட, ஆர்வர்டு போன்று 100 இருக்கைகள் அமைக்கலாம், பல்வேறு முன்னேற்றத் திட்டங்களை முன்னெடுக்கலாம்.

மனிதர்கள் பகுத்தறிந்து சிந்தித்து இயங்குவதில்லை. பகுத்தறிவு உணர்வுகளுக்கு அடிமை என்கிறது ஆராய்ச்சி முடிவுகள் [13]. மனிதனுக்கு முக்கியமானது அனைத்தும் அவன் உணர்வுகளுடன் தொடர்புடையது. முக்கியமானதை இழந்தால் உணர்வுகள் வருத்தமளிக்கும். முக்கியமானத்தைப் பெற்றால் மகிழ்ச்சியளிக்கும். கோவில்கள் அவர்களின் உணர்வுகளை உந்தி நிதியளிக்க வைக்கிறது. ஆனால் ஆர்வர்டு இருக்கை பெரும்பாலானோர் உணர்வுகளைத் தொடுவதில்லை, அதனால்தான் அவர்கள் நிதியளிப்பதில்லை. உணர்வுகள் அவர்களுக்கு சிறுவயதில் வரலாற்றுக் கதையாற்றல் மூலம்  வந்து சேர்கிறது. அவர்கள் வளர்ந்தபின் அவர்களை மாற்றுவது கடினம். இன்றையத் தேவைக்கேற்ப மக்களின் உணர்வுகளை கதையாற்றல் மூலம் மாற்றி சமூகத்தை மறுசீரமைப்பது நமது முன்னேற்றத்திற்கு முக்கியமானது. இது உடனடியாக நடப்பதல்ல, ஓரிரு தலைமுறைகள் ஆகும். அதனால் நீண்டகால நோக்கில் செயல்படுவது அவசியம். அதற்கு தமிழ்க்கல்வி அடிப்படை உத்தியாக அமையும்.

 

உசாத்துணை:

 1. https://www.tamilacademy.org/
 2. Leipziger, Henry Marcus. The Education of the Jews. Vol. 3. No. 6. Laurie, 1890.
 3. Kaufman, Stuart J. Nationalist passions. Cornell University Press, 2015.
 4. Is it Torah if it is not in Hebrew, https://www.chabad.org/library/article_cdo/aid/1073767/jewish/Is-It-Torah-If-Its-Not-In-Hebrew.htm
 5. Abrams, Daniel M., and Steven H. Strogatz. “Linguistics: Modelling the dynamics of language death.” Nature6951 (2003): 900.
 6. Botticini, Maristella, and Zvi Eckstein. “The Chosen Few: How Education Shaped Jewish History, 70-1492.” Economics Books (2013).
 7. List of Jewish Nobel laureates, https://en.wikipedia.org/wiki/List_of_Jewish_Nobel_laureates
 8. Simonton, Dean Keith. Creativity in science: Chance, logic, genius, and zeitgeist. Cambridge University Press, 2004.
 9. Harrison, Lawrence E., and Samuel P. Huntington. Culture matters: How values shape human progress. Basic books, 2000.
 10. History of The Bible, Documentary, https://www.youtube.com/watch?v=Ksp4kRn7lGk
 11. Botticini, Maristella, and Zvi Eckstein. “The Chosen Few: How Education Shaped Jewish History, 70-1492.” Economics Books (2013).
 12. Keren, Michael. The pen and the sword: Israeli intellectuals and the making of the nation-state. Westview Pr, 1989.
 13. Haidt, Jonathan. The righteous mind: Why good people are divided by politics and religion. Vintage, 2012.
 14. சு. சேது, பகுதி 1: இன அரசியல் – இன எழுச்சி எவ்வாறு ஏற்படுகிறது?
 15. சு. சேது, தமிழ்வழிக் கல்விக்கான ஒரு திட்டம் , https://sethusubbar.wordpress.com/2018/04/14/tamileducation/

 

This entry was posted in கல்வி, சமூகம், தமிழ், தமிழ்த்தேசியம், தமிழ்வழிக் கல்வி, Uncategorized. Bookmark the permalink.

1 Response to யூதர்களின் கல்விமுறையிலிருந்து தமிழ்க்கல்விக்கான சில உத்திகள்

 1. விசுவேசுவரன் says:

  தமிழில் வரலாறுகள் உண்டு கதைகளும் உண்டு. நமக்கு இப்போது இருப்பவை சிலப்பதிகாரமும் மணிமேகலையும்.

  இழந்த கலை, கதைகளை காப்பியக் கதைகள் புனரமைப்பு செய்யலாம்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s