அறிவை அறிவோம்

 

“அறிவியல் அறிவோம்” என்ற நூலில் நான் எழுதிய ஒரு கட்டுரை. நூலை ஆழிப் பதிப்பகத்தில் பெறலாம்.’

இவ்வுலகிலேயே ஒரு முக்கியமான பாடம், பள்ளிகளிலே பொதுவாக கற்றுத்தரப்படாத பாடம் ஒன்று உண்டு என்றால் அது “அறிவின் தன்மை என்ன,  அதை எப்படிப் பெறுவது”  என்பதுதான். பசித்த ஒருவருக்கு  ஒரு மீனை அளித்தால் ஒரு வேளை பசி அடங்கும், ஆனால் அவருக்கு மீனை எப்படிப் பிடிப்பது என்று கற்றுக்கொடுத்தால் வாழ்க்கை முழுவதும் பசியாறுவார் என்கிறது ஒரு சீனப் பழமொழி. இப்பழமொழி  அறிவுப்பசியில் உள்ளவருக்கும்  பொருந்தும். அறிவை எப்படிப் பெறுவது என்று  தெரிந்து கொண்டால்,   அவர் வாழ்க்கை முழுவதும் கற்பது மட்டுமில்லாமல், புதிய அறிவைப் படைத்துக் கொண்டு செல்வார்.  மேலும் கூடுதலாக  அறிவுப்பசி இல்லாதவர்களுக்கும் அப்பசியையும் கிளப்புவார்.  இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியலாளாரான ஐன்சுடீன் அவர்கள் தான் சந்தித்த சிறப்பான மாணவர்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்.  “ஒரு ஆசிரியராக நான் பார்த்த சிறந்த மாணவர்களைப் பற்றி ஒன்றை உறுதியாகக் கூற முடியும். அவர்கள் அனைவரும் அறிவின் தன்மையைப்  பற்றிய  தத்துவத்தில் அதிக ஆர்வமாக இருந்தனர். சிறந்த மாணவர்கள் என்று நான் குறிப்பிடுவது திறமையில் மட்டுமல்ல, சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் தன்மையையும் சேர்த்துதான்.”

“I can say with certainty that the ablest students whom I met as a teacher were deeply interested in the theory of knowledge. I mean by “ablest students” those who excelled not only in skill but in independence of judgement. They liked to start discussions about the axioms and methods of science and proved by their obstinacy in the defense of the opinions that this issue was one important to them.” [1]

இதைப் படித்தவுடன் இது ஏதோ அறிவியலாளர்களுக்கு மட்டும்தான், நமக்கில்லை என்று யாரும் நினைத்து ஒதுங்கி விடாதீர்கள். இது தனி மனிதனின் வெற்றி, வணிக வெற்றி, நாட்டுப்  பொருளாதார வெற்றி, அரசியல் வெற்றி,  ஒரு அமைப்பின் வெற்றி, ஒரு சமூகத்தை எப்படி மாற்றி அமைப்பது என அனைத்துடனும் தொடர்பு கொண்டது. இது ஏனெனில் அறிவு என்பது அனைத்து வெற்றிகளுக்கும் அடிப்படையானது. அதை எப்படிப் பெறுவது என்பதை  அறிவது வெற்றிக்கான முதல் படி.

இக்கட்டுரையை அனைவருக்கும் புரியும்படியாக எளிய முறையில்  எழுத முனைகிறேன். நான் கற்ற  பாடங்களிலேயே,  எனது  சிந்தனையைப் பிடித்து இழுத்து  என்னை தூண்டிவிட்ட பாடங்களில் ஒன்று இது. இந்தத்  தூண்டலை மாணவர்களாகிய உங்களிடம்  பகிர்ந்து,  முடிந்தால்  உங்களையும் தூண்டிவிடுவதுதான் எனது நோக்கம். வாருங்கள் அறிவை ஆராய்வோம்.

அறிவை அடையும் முறை:

    நாம் அறிவை எப்படி  அடைகிறோம் என்பதைப் பற்றி  நான் முதலில் சிந்திக்கும் பொழுது, இது கண்டிப்பாக பெரிய விசித்திரமானதாக இருக்காது. இவ்வளவு தூரம் அறிவியல் முன்னேற்றம் கண்டிருக்கிறோம், அறிவை எப்படிப்  பெறுவது என்று ஒரு முறை இல்லாமலா  இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் உண்மை என்னவென்றால் அறிவியல் முறை என்ன என்று அறிவியலாளர்களிடம் ஒரு ஒற்றுமை இல்லை. அறிவியல் முறையில் குறிப்பிடத்தக்க மூன்று  தத்துவப் பார்வைகள் உள்ளன. இவை மூன்றையும்  அறிவதன் மூலமே அறிவைப் பற்றிய சிறந்த பார்வை கிடைக்கும் என்பதால் இவற்றை  ஒவ்வொன்றாக இனி பார்ப்போம்.

  1. பாப்பரின் (Popper) தத்துவம் [2]

நீங்கள் முன்பின் தெரியாத ஒரு புதிரான அறைக்குச் சென்று,  அங்குள்ள ஒரு  மின்விளக்கை ஒளிர வைக்கவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அந்த அறையில் பல சுவிட்சுகள் சீரற்ற (random) முறையில் அமைக்கப்பட்டுள்ளன. அதில் எது விளக்குக்கான சுவிட்சு என்று உங்களுக்குத் தெரியாது. இந்த சிக்கலை எப்படித் தீர்ப்பீர்கள்? இதற்கு ஒரே ஒரு தீர்வுதான் உண்டு. ஒவ்வொரு சுவிட்சாக போட்டுப் பார்த்துதான் கண்டுபிடிக்க முடியும், வேறு வழியில்லை. இந்த முறையில் சிக்கல்களைத் தீர்ப்பதை   “செய்து தேர்தல்” முறை (trial and error) என்று கூறலாம். இது மூன்று கட்டங்களைக் கொண்டது:

  1.  சிக்கல் (Problem) :    விளக்கை ஒளிர வைத்தல் 
  2. தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்வுகள் (Attempted solutions): அறையில் உள்ள சுவிட்சுகள் 
  3. தகுதியற்ற தீர்வுகளை நீக்குதல் ( Elimination):  ஒன்றொன்றாக சோதனை செய்து தவறானவற்றை நீக்கி சரியான சுவிட்சை அடைதல். 

பாப்பர் கூறுவது என்னவெனில் அறிவியல் முறையும் இதுபோன்றது தான். இவ்வுலகில் அனைத்து அறிவுமே இவ்வாறு “செய்து தேர்தல்” முறை (trial and error) வழியாகத்தான் பெறப்படுகிறது என்பது அவரது வாதம்.

இவ்வுலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் அறிவு உள்ளது. உதாரணமாக  ஒரு மரத்திற்கு சூரிய ஒளியை நோக்கி வளரவேண்டும் என்று தெரியும், நீர் நிலத்தில் இருக்கிறது, அதனை நோக்கி வேர்களைப் பாய்ச்சவேண்டும் என்று தெரியும்.  அவ்வறிவு அதன் மரபணுக்களில் இருந்து அவற்றை உருவாக்கி செயல்படுத்துகிறது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த அறிவு எவ்வாறு வந்தது? உயிர்கள் பரிணாம வளர்ச்சியில் தோன்றின என்பது அனைவரும் அறிந்ததே. அந்த பரிணாமமே இந்த மூன்று கட்ட செய்து தேர்தல் முறையின் வழியில் நடப்பதே என்கிறார் பாப்பர்:

  1. சிக்கல்:  ஓர் உயிர் தன்னை சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தனது உடல் கட்டமைப்பையும் செயல்பாட்டையும் மாற்றிக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் அழியும்.
  1. தேர்ந்தெடுக்கும் தீர்வுகள்: அவ்வுயிர் பல குட்டிகளை மரபணு மாற்றங்களுடன் ஈனுகிறது. ஒவ்வொரு குட்டியும் மற்றவற்றிலிருந்து வேறுபட்டிருக்கும்.
  1. தகுதியற்ற தீர்வுகளை நீக்குதல்:  எந்த குட்டிகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப மரபணுக்களால் வடிவமைக்கப் படுகிறதோ (adaptation) அவை வாழ்கின்றன; அவ்வாறு இல்லாதவை அழிகின்றன. எந்த குட்டிகளுமே சரியாக இல்லை என்றால், அந்த உயிரினம் அழிகிறது.

இதன் வழியாகத்தான் அனைத்து  உயிர்களும் பரிணமித்தன. ஒரு உயிரின் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தகவமைப்பை (adaptation), அவ்வுயிரின் சுற்றுச்சூழலைப் பற்றிய அறிவு எனலாம். இது உவமையல்ல. இதிலிருந்து எந்த உயிர்கள்  தாம்  வாழும் சுற்றுச்சூழலுக்கான அறிவைப் பெற்றுள்ளதோ அவை வாழ்கின்றன, மற்றவை அழிகின்றன என்று அறியலாம்.  இதுதான் அடிப்படையில் பரிணாமம் என்பது. பலமானது வாழும், மற்றவை அழியும் என்பது தவறான புரிதல்.

அடிப்படையில் அறிவியில் முறையில் அறிவைப் பெறுவதும்,  உயிர்கள் பரிணாம வளர்ச்சியில் அறிவைப் பெறுவதும் ஒரே முறையின் வழியில்தான். இது உயிரியலில்  தானாக இயற்கையில் நடக்கிறது. ஆனால் அறிவியலில் நாம் வலிந்து சோதனை செய்து அறிவைப் பெறுகிறோம். நவீன அறிவியலை உயிரியல் பரிணாமத்தின் தொடர்ச்சியாக பாப்பர் பார்க்கிறார். உயிர்கள் ஒரு செல்லாகத் தோன்றியதிலிருந்து அறிவைப் பெருக்கிக் கொண்டே செல்கின்றன. அது மனிதனிடம் அறிவியலாகத் தென்படுகிறது.  

அறிவியல் முறையை நன்றாகப் புரிந்துகொள்ள, இந்த மூன்று கட்டத்தை  நான்கு கட்டமாக  விரிவாக்கி பின்வருமாறு விவரிக்கிறார் பாப்பர்.

  1. பழைய சிக்கல் 
  2. தற்காலிக கோட்பாடுகள் 
  3. ஆய்ந்து, விவாதித்து, சோதனை செய்து தவறான கோட்பாடுகளை கண்டுபிடித்து நீக்குதல் 
  4. புதிய சிக்கல்களின் தோற்றம்: மூன்றாம் கட்டத்தில் செய்த விவாதத்தால் விளைவது

ஆரம்பத்தில் சிக்கல்கள் எதார்த்தமாக இருக்கும். அதற்கு அறிவியலாளர்கள் வெவ்வேறு கோட்பாடுகளை உருவாக்கி, அவர்களுக்குள் விவாதித்து சோதனை செய்து தவறான கோட்பாடுகளை நீக்குவர். எஞ்சியுள்ள கோட்பாடு(கள்), சிக்கலை முழுமையாக தீர்ப்பதில்லை, மேலும் அவை புதிய சிக்கல்களை உருவாக்குகின்றன. இந்த புதிய சிக்கல்கள் கோட்பாடுகளின் வழியாக வருவதால், இவை பார்ப்பதற்கு எதார்த்தமாக இருக்காது. இந்த சிக்கல்களைத் தீர்க்க மீண்டும் பழையபடி இந்த நான்கடுக்கு முறை சுழற்சியில் பின்பற்றப் படும். இவ்வாறு அறிவியல் நிற்காமல் சுழன்று கொண்டே அறிவைப் பெருக்கிக் கொண்டே செல்லும்.  இன்றைய அறிவியல் என்பது  பல சுழற்சிகளைத் தாண்டி வந்துள்ளதால், இன்றைய அறிவியலாளர்கள் காணும் சிக்கல்கள் என்பது நாம்  பார்த்து புரிந்துகொள்ளும் படியாக இருக்காது. ஆனால் நமது முன்னேற்றத்திற்கு மிக முக்கியமானது. அறிவியலின் நோக்கம் என்பது நாம் ஏற்றுக்கொள்ளும் படியான கோட்பாடுகளைப் பெறுதலே ஆகும். 

C:\Users\Raji\Amazon Drive\knowledge\popper.png

பாப்பரின்  நான்கு கட்ட அறிவியல் முறை பார்ப்பதற்கு எளிதாக இருந்தாலும், அதில் பல ஆழமான கருத்துக்கள் உள்ளன. 

  • அறிவை நாம் பார்த்து அடைவதில்லை, மாறாக நாம் அறிவின் வழியாகவே பார்க்கிறோம்.

பலரின் அறிவைப் பற்றிய பார்வை எப்படி இருக்கிறதென்றால்,   அறிவைப் பெறுவதில் என்ன பெரிய சிக்கல் இருக்கப்போகிறது? நாம் நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால் எல்லாம் தெளிவாகத் தெரிகிறது, அதைக் கொண்டு சிந்தித்தால் நாம் என்ன செய்யவேண்டும் என்று தெளிவாகத் தெரியப்போகிறது. இதில் என்ன பெரிய சிக்கல்?  உண்மை என்னவென்றால் இதுபோன்ற சிந்தனைதான் நமது முன்னேற்றத்திற்கு  எதிராக இருக்கும் பெரிய தடைக்கல். இது போன்ற பார்வையின் விளைவாகத்தான் பூமி தட்டை என்றும், பூமியைச் சுற்றி சூரியன் வருகிறதென்றும் கருத்துக்கள் தோன்றின. அறிவியல் முன்னேற்றம் என்பது நமது புலன்கள் நம்மை ஏமாற்றும் என்பதை உணர்ந்தபின்தான் ஆரம்பித்தது. இருப்பதிலேயே இதுதான் சிக்கலானது. நாம் பார்ப்பவை தவறாக இருக்கலாம் என்று எண்ணுவது மிகக்கடினமானது. ஆனால் அது இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமில்லை.

பாப்பர் அறிவியலைப் பற்றி பாடம் நடத்த அறையில் நுழைந்தவுடன், நேராக கரும்பலகையின் முன் நின்றுகொண்டு “பாருங்கள்” என்று சொல்லிவிட்டு அமைதியாக நிற்பார். மாணவர்கள் திருதிருவென்று விழித்துவிட்டு எதைப் பார்ப்பது என்று கேட்பர். அதற்கு பாப்பர் கூறுவது என்னவென்றால் அறிவியலில் நாம்  கற்றுக்கொள்ள வேண்டிய முதல் பாடம் என்னவென்றால் எதைப் பார்க்கவேண்டும் என்று தெரியாமல், நம்மால்  பார்க்க முடியாது. நாம் இவ்வுலகைப் பார்த்து அறிவை அடைவதில்லை, மாறாக நம்மிடம் ஏற்கனேவே உள்ள அறிவைக் கொண்டே இவ்வுலகைப் பார்க்கிறோம். அறிவு என்பது அடிப்படையில் செய்து தேர்தல் (trial and error) வழியிலேயே வருகிறது. 

உதாரணமாக நியூட்டனின் கண்டுபிடிப்பை எடுத்துக் கொள்வோம். ஆயிரக்கணக்கான வருடங்களாக, ஆப்பிள்கள் மரங்களில் இருந்து விழுவதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள், விண்ணில் உலவும் கோள்களையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஏன் நியூட்டன் மட்டும் அதன் இயக்க விதிகளை அறிய முடிந்தது? ஈராயிரம் வருடங்களாக மக்கள் நினைத்தது என்னவென்றால் விண்ணை கடவுளர் இயக்குகின்றனர் என்றும், பூமியில் உள்ள பொருள்கள் அனைத்தின் இறுதி நிலை பூமி என்பதால் அனைத்து பொருட்களும் பூமியை நோக்கி விழுகின்றன என்று கருதினர்.

கோப்பர்நிக்கசு, கலிலியோ, கெப்ளர் ஆகியோரது கண்டுபிடிப்புகள், விண்ணில் உள்ளவையும், பூமியில் உள்ள பொருட்களும் சில இயந்திர விதிகளின் படி இயங்கின்றன என்ற பார்வையை கொண்டு வந்தது. இந்த தத்துவப் பார்வை கிடைத்தபின்தான் நியூட்டன் அதனைக் கொண்டு இயக்க விதிகளைக் கண்டறிந்தார்[15]. இல்லையென்றால் நியூட்டனும் மற்றவர்களைப் போல ஆப்பிள் விழுவதை பார்த்திருப்பார், ஆனால் ஒன்றும் அறிந்திருக்க மாட்டார். நியூட்டன் இதனை “என்னால் இவளவு தூரம் பார்க்க முடிந்திருக்கிறதென்றால், அது மற்ற அறிவியலாளர்களின் தோளின் மேல் ஏறி நின்று பார்த்ததனால் தான்” என்று கூறுகிறார். நமது தத்துவங்களே நமக்கு பார்வையை அளிக்கிறது. இது பாப்பரின் அறிவியல் முறையில்  நான்காவது கட்டத்தில் நிகழ்கிறது.

  • அனைத்து அறிவியல் கோட்பாடுகளும் தாற்காலிக உண்மைகளே (temporary truths), நிரந்தர அசைக்க முடியாத உண்மைகளல்ல.

அறிவியலில் நாம் உண்மையை  கணிதத்தைப் போல  நிரூபித்து கண்டறிவதில்லை. பல கோட்பாடுகளை உருவாக்கி சோதனை செய்கிறோம். சோதனைகளில் தோற்ற கோட்பாடுகளை நீக்கி எஞ்சியுள்ளதை எடுத்துக் கொள்கிறோம். எதிர்காலத்தில் ஒரு சோதனையில் எஞ்சியுள்ள கோட்பாடும் தோற்கலாம் என்பதால், அறிவியல் கோட்பாடுகள் அனைத்தும் தற்காலிகமே. பாப்பரின் அறிவியல் முறையில் ஒரு கோட்பாட்டை தவறு என்றுதான் நிரூபிக்க முடியும், உண்மை என்று நிரூபிக்க முடியாது.   நாம் நிரந்தரமான அசைக்க முடியாத உண்மையை அறிவியல் முறையில் அறிய முடியாது.  பாப்பரின்  நான்கு காட்ட சுழற்சி முறை என்றுமே நிற்காது. அனைத்து அறிவும் தற்காலிகம் என்பதால்தான் நாம் அறிவை சிறப்பாக்கிக் கொண்டே முன்னேற முடிகிறது.

  • ஒரு கோட்பாடு  அறிவியலா இல்லையா? (Demarcation Problem) 

ஒரு அறிவியல் கோட்பாட்டை சோதனைக்கு உட்படுத்தி, அதைத் தவறாக்க முயற்சி செய்யமுடியும். இது  மூன்றாவது கட்டத்தில் நிகழ்கிறது.  சோதனைப்படுத்தி தவறாக்கவே முடியாத கோட்பாடுகள் அறிவியலாகாது என்கிறார் பாப்பார்.   

உதாரணமாக 

  1. அனைத்து காகங்களும் கருப்பு 
  2. வெள்ளை நிறக் காகம் என்று ஒன்று இல்லை.
  3. இறைவன் இருக்கிறான் 

நாம் என்றாவது ஒரு நாள் கருப்பற்ற வேறு எந்த நிறமுள்ள காகத்தை  கண்டால் முதல் கோட்பாடு தவறாகிறது. வெள்ளை நிறக் காகத்தைக் கண்டால்,  இரண்டாவது கோட்பாடு தவறாகிறது.  அதனால் முதல் இரண்டு கோட்பாடுகளையும்   அறிவியல் கோட்பாடுகள் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் மூன்றாவது கோட்பாடை எக்காலத்திலும் தவறாக்க முடியாது. இப்பிரபஞ்சத்தில் நாம் காணும் அனைத்தும் இறைவனின் இருப்புக்கு ஆதாரமாகக் காட்டப்படுகிறது. அதனால் பாப்பரின் அறிவியலால் இதை உண்மை என்றும் சொல்ல முடியாது, பொய்  என்றும் சொல்ல முடியாது. இது அறிவியலல்ல என்று மட்டுமே கூற முடியும்.

  • அறிவியல் ஆழமான கோட்பாடுகளையே நோக்கியே நகருகிறது.

எது ஆழமான கோட்பாடு  என்று எப்படிக் கண்டறிவது? உதாரணமாக ஏற்கனவே பார்த்த மூன்று கோட்பாடுகளையும் எடுத்துக் கொள்வோம்.  இரண்டாம்  கோட்பாட்டைத் தவறாக்க, ஒரு வெள்ளை நிறக் காகத்தை நாம் பார்க்கவேண்டும், ஆனால் முதலாவது  கோட்பாட்டை தவறாக்க கருப்பைத் தவிர எந்த நிறமான காகத்தைக் கண்டாலும் போதும். அதனால் முதல்   கோட்பாடு அதிக விளக்கத்தை அளிக்கிறது. ஒரு கோட்பாட்டின் ஆழம் என்பது அதை எத்தனை வகையில் தவறாக்க முடியும் என்பதே. முதல் கோட்பாடு இரண்டாவது  கோட்பாட்டைவிட ஆழமானது. மூன்றாவது கோட்பாட்டை எந்த நிகழ்வும் தவறாக்க முடியாததால், அது எதையும் விளக்குவதில்லை. அதன் விளக்கும் திறன் பூச்சியம். ஐன்ஸ்டைனின் கோட்பாட்டை  நியூட்டனின் கோட்பாட்டைவிட அதிக வழியில் தவறாக்க முடியும். அதனால் ஐன்ஸ்டைனின் கோட்பாடு ஆழமானது. இயற்பியலில் உள்ள அனைத்து  விதிகளையும் இணைத்து ஒரே தத்துவமாக மாற்றும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அவ்வாறான கோட்பாட்டிற்கு ஆழம் இன்னும் அதிகமாக இருக்கும். ஆழமான கோட்பாடுகளே அதிக விளக்கத்தை அளிக்கின்றன. அறிவியல் இவ்வாறு ஆழமான கோட்பாடுகளை நோக்கியே  முன்னேறுகிறது.

  • அறிவியலில் பழைய கோட்பாடுகளை தவறாக்கி முற்றும் முழுதும் புது கோட்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும். அதனால் அறிவியல்  என்பது கூட்டிகொண்டே செல்வதல்ல, மாறாக அது  புரட்சிகரமானது (revolutionary).
  • அறிவு உயிர்களின் வாழ்விற்கு அடிப்படையானது.

அறிவு மனிதனுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிர்களுக்கும் உள்ளது. ஒரு விதைக்கு எப்பொழுது முளைக்கவேண்டும், பூப்பூத்து காய்க்கவேண்டும் என்று தெரியும்;  நீர் நிலத்தில் உள்ளது என்று அறிந்து வேரை  கீழ் நோக்கி வளர்க்கத் தெரியும். அது போல விலங்கினங்களும் எதை உண்ணவேண்டும், உண்ணக்கூடாது, எது ஆபத்தானது போன்று தெரியும். பறவைகளுக்கு பறக்கத்  தெரியும், மீனுக்கு நீரில் சுவாசித்து நீந்தத்தெரியும். அடிப்படையில்  அனைத்து உயிர்களும் அது வாழும் சுற்றுச்சூழலைப் பற்றிய அறிவைப் பெற்றுள்ளது. அதனாலேயே அவை உயிர் வாழ்கின்றன. உயிர்களின் வாழ்க்கைக்கு அடிப்படையானது  அறிவு. தாவரங்கள், விலங்கினங்கள் அவை பெற்றுள்ள அறிவை  உணர்வதில்லை. அவ்வறிவானது அதன் மரபணுக்கள் வழியாகத் ஒரு உயிரின் உடலமைப்பையும் செயல்பாட்டையும் தீர்மானிக்கிறது.  எப்பொழுது ஒரு உயிரினத்திற்கு தனது சுற்றுச்சூழலைப் பற்றிய அறிவு இல்லாமல் போகிறதோ, அப்பொழுது அது அழிகிறது. உதாரணமாக, இன்று மனிதன் சுற்றுச்சூழலை வெகுவாக மாற்றி வருகிறான், அதனால பல உயிரினங்கள் அந்த மாறிய சுற்றுச்சூழலுக்கு ஏற்ப மரபணுக்கள் வழியாக புதிய அறிவைப்பெற்று  வேகமாக மாற முடியாததால் அழிந்து வருகின்றன.

அறிவியலுக்கு முந்தைய காலத்தில் அறிவு என்பது பிடிவாதமான மாற்ற முடியாதவகையில் சமூகத்தில் கட்டமைக்கப் பட்டிருந்தது. விலங்குகள் தங்கள் அறிவை எப்படி மாற்ற முடியாதோ,   அது போலத்தான் ஒருவகையில் இதுவும். அதனால் சூழல் மாறும் பொழுது விலங்குகள் எப்படி அழிந்தனவோ, அப்படியே மனிதர்களும் மனித சமூகங்களும் அழிந்தன.

ஆனால்  அறிவியல் புரட்சிக்குப் பின் அறிவு என்பது தொடர்ந்து சோதனை செய்து மேம்படுத்திக் கொண்டே செல்கிறோம். முன்பு நம்மைக் கொன்ற நோய்களெல்லாம் நம்மால் இப்பொழுது கட்டுப் படுத்தமுடிகிறது. அறிவினால் நமது இறப்பை பலவகையில் தடுத்து வாழ்வை மேம்படுத்திக் கொண்டு செல்கிறோம். நமது உடல் நிலத்தில் வாழ்வதற்கு ஏற்றவாறு மரபணுக்களால் அமைக்கப் பட்டாலும், நமது அறிவைக் கொண்டு கடலில் மிதக்கிறோம், வானில் பறக்கிறோம், விண்ணிலும்  வாழ்கிறோம். இனி எதிர்காலத்தில் மனித குலம் இருக்குமா என்பதையும் தீர்மானிக்கப் போவது நாம் பெறப்போகும் அறிவுதான். எதிர்காலத்தில் தமிழினம் என்று ஒன்று  இருக்குமா, அது தமிழ் பேசுமா என்பதும் தமிழினம் அதற்கான அறிவைப் பெறுவதிலேயே உள்ளது. அரசியலிலோ, போர் வீரத்திலோ இல்லை. அதற்கு நாம் தத்துவங்களை விடாப்பிடியாக முயலுக்கு மூன்றே கால்கள் என்று பிடித்து தொங்கிக் கொண்டிருக்கக் கூடாது. அனைத்து தத்துவங்களும் தாற்காலிகமே என்று உணர்ந்து, தொடர்ந்து சோதனைகள்  செய்து, விவாதித்து, உலக அறிவியல் கருத்துக்களைக் கற்று, நமது தத்துவங்களை ஆழமாக்கிக் கொண்டே செல்லவேண்டும். 

  • சிக்கலில் ஆரம்பிப்பது சிறந்தது

அறிவியல் முறை சுழற்சியில் இயங்கினாலும், ஒருவர் முதல் கட்டமான சிக்கலில் ஆரம்பிப்பதே சிறந்தது. நமக்கு சிக்கல்தான் ஆர்வத்தைத் தூண்டுவது. அதன் வழியேத்தான் அறிவியல் புரட்சியே உருவானது. பாப்பர் தான் தத்துவ மேதையானதே, அவர் எடுத்துக்கொண்ட சிக்கலினால்தான் என்கிறார். அவர் பத்தொன்பது வயதில் மார்க்சியத்தின் மேல் சந்தேகம் வருகிறது, ஆனால் மார்க்சு, இங்கில்சு, லெனின் ஆகியோர் மார்க்சியத்தை அறிவியல் என்று கூறுகின்றனர். அக்காலத்தில்  அறிவியல் மிக உயர்வாகக் கருதப்பட்டது. அதனால் அவருக்கு மார்க்சியம் அறிவியலா இல்லையா என்று கேள்வி எழுகிறது. இதைக் கண்டறிய  அவர் சுயமாக ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார். மார்க்சியம் என்பது ஒரு அறிவியல் கோட்பாடு இல்லை என்று  விடைகாண பன்னிரண்டு ஆண்டுகள் ஆனது. இயற்பியல் ஆசிரியராக நினைத்த அவரை,  முடிவில் அந்தக் கேள்வி அவரைப் புகழ்பெற்ற அறிவியல் தத்துவமேதையாக (Philosopher of Science) ஆக்கிவிட்டது. நாம் யார் என்ற  அடையாளத்தை அளித்து, நமது சாதனையின் அளவையும் தீர்மானிப்பது நாம் தீர்க்க முயலும் சிக்கல்களே. அதனால்  ஆழமான சிக்கல்களை யாரும் காணாத  சிக்கல்களை தைரியமாக கையிலெடுப்பது சிறப்பானது. வெற்றி பெற்றாலும் மேதையாவீர்கள், தோற்றாலும் மேதையாவீர்கள்.

  1. கூனின் தத்துவம் [3]

பாப்பரின் பார்வையில் அறிவியல் என்பது முற்றும் முழுதும் பகுத்தறிவினால் ஆராய்ந்து முன்னேறுவது. பகுத்தறிவற்ற எந்த செயலுக்கும் அறிவியலில் இடமில்லை; ஒரு கோட்பாடு  தவறாக்கப்பட்டால்,  அது தவறு என்று நீக்கப்படும். ஆனால் கூனின் பார்வை  இதிலிருந்து வேறுபட்டது. அவரின் தத்துவப்படி அறிவியல் என்பது முற்றும் முழுதும் பகுத்தறிவான செயல் அல்ல.  இது    தத்துவவாதிகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  அதைப் பற்றிய விவாதம் இன்றும் தொடர்கிறது. இனி கூனின் தத்துவங்களை சுருக்கமாகப் பார்ப்போம்:

நாம் பாடப் புத்தகங்களைப் படிக்கும் பொழுது, அறிவியல் என்பது தகவல்களை சேகரித்து, பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து, சோதனை செய்து,  ஒவ்வொரு கண்டுபிடிப்பாக  அடுக்கி,   சீராக முன்னேறுவது போன்று தோற்றமளிக்கும். இது ஒரு தவறான பார்வை. கூனின்  பார்வையில் அறிவியல் முன்னேற்றம் என்பது சட்டகங்களின் (paradigm) வழியாக  நடக்கிறது.

  • ஆரம்பத்தில் அறிவியலார்களிடேயே எந்த ஒரு கருத்தொற்றுமையும் இருக்காது. கண்பார்வை அற்றவர்கள் யானையைத் தடவிப் பார்த்து வெவ்வேறு விதமாகக் கூறுவதுபோல, அறிவியலாளர்கள் ஒரு விளைவை  வெவ்வேறு விதமாக விளக்கி வெவ்வேறு கோட்பாடுகளை வைப்பர். அவர்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வெவ்வேறு நூல்களை எழுதுவர்
  • காலப்போக்கில் சிலருக்கு கருத்தொற்றுமை ஏற்பட்டு, ஒரு விளைவு இப்படித்தான் இருக்கும் என்று அதை ஆராய்வதற்கு ஏற்ற விதிமுறைகளை வகுப்பர். யானைக் கதையின் வழியாக சொல்வதென்றால், சிலருக்கு யானை இப்படித்தான்  தோராயமாக இருக்கும் என்று ஒரு கருத்தொற்றுமை ஏற்படுகிறது. யானையை முழுதாகக் கண்டறிய என்னென்ன செய்யவேண்டும் எப்படி செய்யவேண்டும் என்ற விதிகளை வகுப்பர். இதுதான் சட்டகம்.  முடிவில் இந்த சட்டகம் ஆராய்ச்சியில் நல்ல முன்னேற்றத்தைத் தருவதால், ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் சட்டகத்திற்கு மாறுகின்றனர்.   அனைத்து ஆராய்ச்சிகளும் இதுபோன்ற சட்டகத்தைக் கொண்டே நடக்கிறது. சட்டகம் இல்லாமல் அறிவியல் முன்னேற்றம் என்பது இல்லை. 

  புதிய மாணவர்களுக்கு சட்டகம் கற்பிக்கப்பட்டு ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப் படுகின்றனர். சட்டகத்திற்கு புறம்பாக அவர்கள் எந்த கண்டுபிடிப்பையும் செய்ய முடியாது. அதை மீறி செய்தால், அவர்களின் கண்டுபிடிப்புகள் நிராகரிக்கப்படும். சட்டகத்தில் உள்ள அனைவரும், அந்த சட்டகத்தை உடையாமல் பாதுகாப்பர். சட்டகத்தை உடைப்பது போன்ற ஏதாவது ஒரு நிகழ்வை காண நேரிட்டால், அந்நிகழ்வை எவ்வாறு சட்டகத்தைக் கொண்டு விளக்குவது என ஆராய்வர். இதில் பெரும்பாலும் வெற்றியும் காண்பர். சில நேரம் எவ்வளவு முயற்சி செய்தும் அந்நிகழ்வை சட்டகத்தால் விளக்க முடிவதில்லை. அந்நிலையில் அவர்கள் இது தற்பொழுது விளக்க முடியாத நிகழ்வு என்று கூறி அதை எதிர்காலத்தில் தீர்ப்பதற்காக ஒத்தி வைப்பர். பாப்பர் கூறுவதுபோல தவறாக்கப்பட்டது என்று கூறி யாரும் சட்டகத்தை நிராகரிப்பதில்லை. உதாரணமாக நியூட்டனின் தத்துவங்களைக் கொண்டு  புதன் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையைக் கணிக்க முடியவில்லை. அதனால் நியூட்டனின் விதிகள் தவறு என்று நிராகரிக்கவில்லை, மாறாக அச்சிக்கலை ஒத்திவைத்து விட்டனர். முடிவில் ஐன்ஸ்டைனின் சட்டகம் வழியாக இது தீர்க்கப்பட்டது.  

ஒரு சட்டகத்தின் மூலம் எந்த சிக்கல்களைத் தீர்க்க முடியுமோ, அது மட்டுமே ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்படும். மற்றவை கண்டுகொள்ளப்படாது. இவ்வாறு ஒரு குறுகிய நோக்கோடு அனைவரின் பலத்தோடு செயல்படுவதால், அறிவியல் கண்டுபிடிப்புகள் சட்டகத்திற்குள் அதிவேகமாக நிகழ்கின்றன. சட்டகத்திற்குள் தோன்றும் ஒவ்வொரு சிறு சிக்கலும், போட்டிபோட்டு தீர்க்கப்படுகின்றன.  சட்டகம் என்பது கண்போன்றது. சட்டகம் என்பதன்  வழியாகவே அனைத்து சிக்கல்களையும் பார்க்கின்றனர். சட்டகமே எது மாதிரியான சோதனைகள் செய்யவேண்டும், எது மாதிரியான உபகரணங்கள் தேவைப்படுகின்றன எது ஏற்றுக்கொள்ளப் படவேண்டும், நிராகரிக்கப் படவேண்டும்  என்பதைத் தீர்மானிக்கிறது. உதாரணமாக சிலர் வந்து நான் மூலிகையில் இருந்து எரிபொருள் கண்டுபிடித்துவிட்டேன், நான் எரிபொருள் இல்லாமல் தானாக இயங்கும் எந்திரத்தைக் கண்டுபிடித்துவிட்டேன் என்று கூறினால், அறிவியலாளர்கள் அதைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அவர்களின் சட்டகத்தில் இது நடக்கமுடியாத நிகழ்வு. அதை ஏற்றுக்கொள்வது என்பது இதுவரை அவர்கள் செய்த மொத்த ஆராய்ச்சியும் தவறு என்பதைப்  போன்றது.

  • இவ்வாறு ஒரு சட்டகத்தின் வழியாக முன்னேறிக்கொண்டிருக்கும் பொழுது, தீர்க்க முடியாத சிக்கல்கள் ஒரு காலகட்டத்தில் பெரிய இடர்பாடுகளை உருவாக்கும். அப்பொழுது சிலர் சட்டகத்தின்  மீது  நம்பிக்கை இழந்து, புதிய சட்டகத்தை உருவாக்குவர். இதை அறிவியல் புரட்சி (scientific revolution) என்கிறார் கூன். யானைக் கதையின் வழியாக சொல்வதென்றால், இதுவரை யானை என்று நாம் நினைப்பதே தவறானது, இது ஒரு காண்டாமிருகம் என்று கூறுவதற்கு ஒப்பானது. மொத்தத்தில் அடிப்படைப் பார்வையே மாறுகிறது.

இந்நிகழ்வு ஏற்படும் பொழுது அறிவியல் சமூகத்தில் பிளவு ஏற்படும். பெரும்பாலானோர்  இது யானைதான் என்று உறுதியாக நிற்பர், சிலர் காண்டாமிருகம் என்று உறுதியாக நிற்பர். யார் பார்வை சரியானது என்று பகுத்தறிவினால் யாராலும் தீர்க்க முடியாது. ஒரே தகவலின் அடிப்படையில் இருவேறு பார்வைகள் இருக்கும். புதிய சட்டகத்தை உருவாக்குவோர் நம்பிக்கையின் அடிப்படையிலேயே உருவாக்குகின்றனர். அது சரியாக இருக்கும், அதை மற்றவர்கள்  ஏற்பார்கள் என்று எந்த  .உறுதியும் இல்லை. ஆரம்பத்தில் புதிய சட்டகம் பழைய சட்டகத்தைவிட மோசமான ஊகத்தையேத் (predictions) தரும். மற்ற அறிவியலாளர்கள் புதிய சட்டகத்தில் இணைந்து அதன் அமைப்பையும்  விதிமுறைகளையும் தெளிவுபடுத்தி, புதிய சிக்கல்களைத் தீர்க்க ஆரம்பித்த  பின்தான் புதிய  சட்டகம் மதிப்பு பெரும்.  அதன்பின் மேலும் பலர் இணைவர். இவ்வாறு இரு சட்டகங்களுக்கிடையே ஒரு பரிணாமப் போட்டி நிலவும். இறுதியில் ஒரு சட்டகம்  வெற்றி பெரும். 

உதாரணமாக டாலமியின் (Ptolemy) சட்டகப்படி  பூமி நிலையானதாகவும் மற்ற கோள்கள் சுற்றிவருவதாகவும் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் அக்கோள்களின் பாதையை டாலமியின் சட்டகத்தில் சுற்றுக்கள் (cycles) மற்றும் துணைச்சுற்றுக்கள் (epicycles)  மூலம் கணக்கிடப்பட்டன.  இம்முறையில் கணக்கிடுவது  சிக்கலாகிக் கொண்டே சென்றது. இதற்கு மாறாக கோபெர்னிக்கசு சூரியனை மையமாக வைத்து, பூமியும் மற்ற கோள்களும் சுற்றிவருவதாக எடுத்துக் கொண்டால் சிக்கல் எளிதாகும் என நினைத்தார். ஆனாலும் அவரின் கணக்கும் மோசமாகவே இருந்தது; அவர் டாலமியின் அதே சுற்றுக்கள் மற்றும் துணைச்சுற்றுக்களைப் பயன்படுத்தியதால் இது கூடுதல் சிக்கலானது. பின்பு கலிலியோ மற்றும் கெப்ளர் ஆகியோரின் முயற்சிகளால் கோபர்நிக்கசின் சட்டகம் வலுப்பெற்றது. முடிவில் நியூட்டனின் கண்டுபிடிப்புக்குப் பின் இச்சட்டகம் முழுமை பெற்றது.

அடிப்படையில் அறிவியல் என்பது ஒரு பகுத்தறிவான செயல் என்றாலும், ஒரு சட்டகத்திலிருந்து இன்னொன்றுக்கு செல்வது நம்பிக்கையின் அடிப்படையில் தான், முழுதும் பகுத்தறிவின் அடிப்படையில் அல்ல. மேலும் இம்முறையில் நாம் உறுதியான உண்மையை நோக்கி நகருகிறோம் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. நாம் ஒரு சட்டகத்திலிருந்து இன்னொரு சட்டகத்திற்குத் தாவிக்கொண்டே இருப்போம். நிலையான உண்மை என்று எதுவும் இல்லை. நாம் படிக்கும் பாடப் புத்தகங்கள் என்பது தற்பொழுது நிலவும் சட்டகங்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன. சட்டகங்கள் மாறும் பொழுது, பாடப் புத்தகங்களும் மாற்றி எழுதப்படுகின்றன. அதனால் முந்தைய சட்டகத்தில் ஆராய்ச்சி செய்த அறிவியலாளர்கள் செய்தது அறிவியல் இல்லை என்று ஆகாது. அதை அறிவியல் முன்னேற்றத்தின் ஒரு படியாகவேக் கருதவேண்டும். இவ்வாறுதான் அறிவியல் முன்னேறுகிறது என்பது கூனின் வாதம்.

  1. பெயிராபெண்டின் தத்துவம் [4]

பெயிராபெண்டு அவர்கள் பாப்பரின் மாணவரும் கூனின் நண்பரும் ஆவார், ஆனால் இவரின் தத்துவம் முற்றிலும் மாறுபட்டது. அறிவியல் என்பது ஒரு பகுத்தறிவான (rational) செயல்பாடு என அறிவியலாளர்களால்  பொதுவாக கட்டியமைக்கப் பட்டுள்ளது, ஆனால் அது ஒரு தவறான பார்வை என்கிறார். அறிவியலுக்கு என்று பொதுவான எந்த ஒரு முறையும் இல்லை; அறிவியல் எல்லாப் பாதைகளிலும் சென்று முன்னேறுகிறது. பகுத்தறிவு (reason) என்பது அதில் ஒரு அங்கமே ஒழிய, அதுமட்டும்தான் அறிவியல் என்பது பிழையான பார்வை என்கிறார்.  இவரின் கருத்துக்களால் அதிர்ச்சியுற்ற பல அறிவியலாளர்கள் அவரை அறிவியலின் மிகமோசமான எதிரி என இன்றும்  கருதுகின்றனர். 

அறிவியல் என்பது பல  வழிகளில் முன்னேறும் ஒரு சிக்கலான செயல்பாடு. அது இவ்வாறுதான் செயல்படுகிறது என்று  முறை வகுப்பது, அதை  ஒரு குறுகிய பெட்டிக்குள் அடைக்க நினைப்பது போன்றது.  அவ்வாறு நாம் வகுக்கும் முறைகளுக்கு எதிராக ஏராளமான உதாரணங்களை வரலாற்றில் காணலாம். ஒரு பிரதானமான உதாரணமாக அவர் எடுத்துக் கொள்வது கோப்பர்நிக்கசின் சூரியனைச் சுற்றி கோள்கள் உலாவருகின்றன என்ற சூரியமையத் தத்துவம் (Heliocentric theory). அன்று இத்தத்துவம், சான்றுகளுடன் ஒத்துப் போகவில்லை. டாலமியின் புவிமையக் கொள்கை (Geocentric theory)., கோப்பர்நிக்கசின் கொள்கையைவிட கோள்களின் பாதையை சிறப்பாகக் கணித்தது.  இது உட்பட பலகாரணங்களுக்காக  அன்றைய அறிவியலாளர்கள் அதை நிராகரித்தனர். ஆனால் கலிலியோ கோப்பர்நிக்கசின் தத்துவத்தை மீட்டெடுக்க முயல்கிறார், ஆனால் அவ்வாறு நிறுவுவதற்கு போதிய சான்றுகள்  மற்றும் துணை தத்துவங்கள் இல்லை. அதனால்  அவர் பரப்புரை, உளவியல் தந்திரங்கள், பகுத்தறிவு என அனைத்தையும் உபயோகப்படுத்தி மீட்டெடுக்கிறார். கோப்பர்நிக்கசின் தத்துவத்தை நிரூபிக்கத் தேவையான இயக்க விதிகள் (Laws of motion), ஒளியியல் கோட்பாடுகள் (Theory on Optics) அன்று இல்லை.  ஒரு தத்துவத்தை நிறுவ போதிய சான்றுகள் இல்லாதபொழுது, பகுத்தறிவற்ற செயல்பாடுகள் மூலமே தூக்கிப் பிடிக்கவேண்டி இருக்கிறது. அவ்வாறு கலிலியோ செய்யாதிருந்தால், இன்று நாம் காணும் நவீன அறிவியல் தோன்றாமலே போயிருக்கலாம் என்கிறார் பெயிராபெண்டு.

ஒரு அறிவியலாளர் எதிர் நோக்கும் சிக்கல்கள் என்பது முன்பின் தெரியாதது, அதுபோன்ற வேளைகளில் இதுபோலத்தான் சிந்திக்கவேண்டும், செயல்படவேண்டும் என்றால் அந்த  வழிமுறைகள்  அவரைக்  செயல்படவிடாமல் கட்டிபோட்டு விடும். எந்த வழிமுறையையும் பின்பற்றும் சிறந்த சந்தர்ப்பவாதிகளாகவே அறிவியலாளர்கள் இருக்கிறார்கள் என்கிறார் ஐன்ஸ்டீன் அவர்கள்:

“External conditions which are set for the scientists by the facts of experience do not permit him to let himself too much restricted, in the construction of the conceptual world, by the adherence to an epistemological system. He, therefore, must appear to the systemic epistemologist as a type of unscrupulous opportunist…”[4]

அறிவியலாளர்கள் விதிகளைக் குத்துமதிப்பாகத் தான் பின்பற்றுகிறார்கள், முழுமையாக அப்படியே அல்ல. அவ்வாறு இருக்கும் பொழுது ஏரணத்தைக் கொண்ட பகுத்தறிவின் மூலம் மட்டும்தான் அறிவியல் முன்னேறுகிறது என்பது பிழையானது. 

பகுத்தறிவு என்பது  எல்லையில்லா சக்திகொண்டது என்ற நிலைப்பாட்டை தவிர்த்து, அதன் எல்லைகளை உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்படவேண்டும் என்கிறார் பெயிராபெண்டு. அறிவியல் முன்னேற்றம் என்பது  அவ்வப்போது பகுத்தறிவை நிராகரிப்பதன் மூலமே நடைபெறுகிறது.  இன்றைய நவீன அறிவியலின் அடித்தளம் என்பதற்கு அன்றைய அறிவியலாளர்களின் பாரபட்சம், கர்வம், விடாப்பிடியான வெறி போன்றவை முக்கிய காரணமாக இருந்தன,  பகுத்தறிவோ ஏரணம்  மட்டுமோ  அல்ல.   அன்று அறிவியலுக்கென்று விதிமுறைகளை வைத்து விடாப்பிடியாக பின்பற்றி இருந்தால், இன்று அறிவியல் என்று ஒன்றே நாம் கண்டிருக்க மாட்டோம்.

பகுத்தறிவாளர்கள் எதைப் பகுத்தறிவு என்று கூறுகிறார்களோ, அதே பகுத்தறிவு அவர்கள் விரும்பும் முன்னேற்றத்திற்குத் தடையாக நிற்கும். அதனால் நமது உள்ளுணர்வு பகுத்தறிவிற்கு எதிராக போகச் சொல்கிறதென்றால், அவ்வாறு போவது சிறந்ததே என்கிறார் பெயிராபெண்டு.

அறிவியல் கட்டுமானம் என்பது சீராக ஏரணத்தால் கட்டப்படுவதல்ல. ஒரு தத்துவத்தை நிலை நிறுத்தத் தேவையான துணை தத்துவங்கள் வர காலமாகலாம் என்பதால், அத்தத்துவங்களை தவறாக்கப்பட்டன என்று நிராகரிக்கக் கூடாது. மாறாக அத்தத்துவத்தை நிலை நிறுத்த தேவையான சான்றுகளையும்   துணை தத்துவங்களையும் கண்டுபிடிக்க முயலவேண்டும். பாப்பர் கூறுவது போல நாம் இவ்வுலகை தத்துவங்களைக் கொண்டே பார்ப்பதால்,  புதிய தத்துவங்கள் நமக்கு புதிய பார்வையை அளிக்கும். அதன் மூலம் நாம் புதிய சான்றுகளையும் கண்டுபிடிப்புகளையும் செய்யலாம். அதனால் அனைத்து தத்துவங்களுக்கும் இடம் உண்டு. அவை அனைத்தையும் எப்படி மேலும் சிறப்பாக்குவது என்றுதான் ஆராயவேண்டுமே  ஒழிய, அவற்றை நிராகரிக்கக் கூடாது.

நமது முன்னேற்றத்தைத்  தடுக்காத ஒரு தத்துவம்  உண்டென்றால் அது “அனைத்தும் ஏற்பானதே” என்பதுதான். எந்த முறையையும் நிராகரிப்பதோ  அல்லது இதுதான் முறை என்பதோ அல்ல.

“The only principle that does not inhibit progress is anything goes.”

இதன் பொருள் எந்த தத்துவமும் முறையும் வேண்டாம் என்பதல்ல. தத்துவங்கள் என்பது ஒரு வரைபடம் (map) போன்றது. அது நமக்கு நல்ல வழிகாட்டியாக அமையும், ஆனால் அதை அச்சுப் பிசகாமல் அப்படியே பின்பற்றினால், நாம் போய் சேரவேண்டிய இடத்திற்கு போய் சேரமுடியாது. இடத்திற்கு காலத்திற்கு  ஏற்ப வரைபடத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு வேறு பாதையை எடுக்கவேண்டிய தேவை ஏற்படும். வரைபடமே இல்லாமல் போவதும்  வெற்றியைத் தராது. வரைபடத்தை அச்சுபிசகாமல் பின்பற்றுவதும் வெற்றியைத் தராது. நமக்குத் தத்துவங்கள்/முறைகள் தேவையானது, ஆனால் தேவைப்பட்டால் அதிலிருந்து விலகுவதற்குத் தயங்கக்கூடாது.

பெயிராபெண்டின் கருத்துப்படி அறிவியல் என்பது சிறிது சிறிதாக உறுதியான உண்மையைத் தேடிச் செல்வதல்ல, மாறாக ஏராளமான ஒன்றுக்கொன்று முரண்படும் தத்துவங்களை உருவாக்குவதே. இவ்வாறு பல்வேறு வேறுபாடுகளைக் கொண்ட தத்துவங்களே நமக்கு பாரபட்சமற்ற  அறிவை அளிக்கமுடியும்.   

கூன், பாப்பர், பெயிராபெண்டு ஆகியோர் தத்துவங்களின் வளர்ச்சியைப் பற்றி இவ்வாறு முரணான வெவ்வேறு  பார்வை கொண்டுள்ளனர். எது சரியானது என்றால், அனைத்தும் சரியானதே. அறிவியலோ அல்லது அரசியலோ  சீராக முன்னேற்றுவதில்லை, அவை அனைத்து வழிகளிலும் முன்னேறுகின்றன. இதுதான் முறை என்று வகுக்க முடியாது. நமது முன்னேற்றத்தைத் தடுக்காத ஒரு தத்துவம் உண்டென்றால், அது அனைத்தும் ஏற்பானதே என்று கூறும் பெயிராபெண்டின் பார்வை சரியானது.

C:\Users\Raji\Amazon Drive\knowledge\theories.png

 அறிவை அடைவதற்கான ஒரு வரைபடம்:

இதுவரை நாம் புதிய  அறிவைப் படைப்பதற்கான  முறைகளை ஆராய்ந்தோம்.  ஆனால் இதை மட்டும் தெரிந்து கொள்வது ஒரு மாணவனுக்குப்  போதாது. மனித சமூகம் இதுவரைக் கண்டறிந்த அறிவு எவ்வாறு  கட்டமைக்கப் பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்வது மிக முக்கியமானது. நாம் முன்பின் தெரியாத ஊருக்குப் போகிறோம் என்றால், நாம் முதலில்  பார்ப்பது ஒரு வரைபடத்தை (map). அப்படம் நாம் அவ்வூருக்கு எப்படிச் செல்வது, எந்த பாதையில் செல்வது, அவ்வூரில் சுற்றிப்பார்க்க சிறந்த இடங்கள் என்னென்ன என்று முன்பே தெரிந்து கொள்ள உதவுகிறது. அதைப் போல அறிவை வளர்க்க  முயல்பவர்களுக்கு  அறிவுக்கென்று ஒரு வரைபடம் கிடைத்தால் அவர்களின் முயற்சி எளிதாகும். அதுதான் இப்பகுதியின் நோக்கம்.

அறிவு என்பது இவ்வுலகத்தைப் பற்றியது. அதனால் இவ்வுலகு எவ்வாறு  கட்டியமைக்கப் பட்டுள்ளது என்பதற்கும் அறிவின் கட்டமைப்புக்கு நேரடித் தொடர்பு உள்ளது. இந்த பிரபஞ்சம் பெருவெடிப்பில் (Bigbang) 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தது. அப்பொழுது இயற்பியல் விதிகளும் அணுத்துகள்களும்  மட்டுமே இருந்தன. அதன்பின் இயற்பியல் விதிகளின் விளைவால், அணுத்துகள்கள் இணைந்து அணுக்கள் உருவாகின்றன. அதன்பின் படிப்படியாக  அணுக்கள் இணைந்து மூலக்கூறுகள் உருவாகின்றன. அணுக்களும்  மூலக்கூறுகளும் ஒன்றுடன் ஒன்று  சேர்ந்து வினைகளின் விளைவால்  புதிய மூலக்கூறுகள் உருவாகின்றன. இவ்வாறு இயற்பியலின் வழியாக உருவானதுதான் வேதியியல். 

அதன்பின் கிட்டத்தட்ட நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சில குறிப்பிட்ட  மூலக்கூறுகள் ஒன்றிணைந்து தன்னைத் தானே பிரதி (self-replicate) எடுக்கும் தன்மையை அடைகின்றன. இதிலிருந்து பரிணாம வளர்ச்சி ஆரம்பித்து ஒரு செயல் உயிர் தோன்றியது. இதுதான் உயிரியலின் ஆரம்பம். பின்பு பல் செல்கள் ஒன்றிணைந்து  தாவரங்கள், விலங்கினங்கள் தோன்றின. அவாறு தோன்றிய விலங்குகளில் ஒன்றுதான் மனிதன். அதன்பின் மனிதர்கள் ஒன்றிணைந்து உருவாக்குவதுதான் மனித சமூகம் மற்றும் நாடுகள். இவ்வாறுதான் இந்த பிரபஞ்சத்தில் நாம் காணும் அனைத்தும் படிப்படியாக இயற்பியல் விதிகளில் ஆரம்பித்து தோன்றின.  இப்பிரபஞ்சத்தின்  ஆரம்பம்   பெருவெடிப்பாக ஒரு புள்ளியில் ஆரம்பித்துப் படிப்படியாக அணுத்துகள்கள், அணுக்கள்,  மூலக்கூறுகள்,  உயிர்கள்,  மனிதன்,  மனித சமூகம் என்று சிக்கலான அமைப்புகள் உருவாகின.    அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளின் தொகுப்புதான் நட்சத்திரங்களும் கோள்களும் என்று காணவேண்டும். நமக்குத்  தெரிந்த அளவில் இப்பிரபஞ்சத்தில் மிகச்சிக்கலான அமைப்புகள் என்பது மனித மூளையும், அது உருவாக்கும் சமூக அமைப்புகளும் தான்.

இயற்பியல் விதிகள் நமக்குப் புரிவதற்குக்  கடினமாக இருந்தாலும், இப்பிரபஞ்சத்திலேயே எளிமையானது இயற்பியல் விதிகள்தான். அனைத்து இயற்பியல் விதிகளையும் ஒரு கரும்பலகையில் எழுதிவிடலாம். மாறாக ஒரு சமூகத்தின் விதிகள் என்பது மிகச்சிக்கலானது. ஒரு நாட்டின் சட்டம் பற்றிய நூல்கள் மட்டுமே நூலகத்தின் ஒரு மாடியை எடுத்துக்கொள்ளும். சமூகம்தான் இருப்பதிலேயே மிகச்சிக்கலானது.  அது  இன்னும் வளர்ந்து சிக்கலாகிக் கொண்டே செல்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய கண்டுபிடிப்புகள் தோன்றி சமூகத்தை மாற்றி அமைத்து சிக்கலாக்கிக் கொண்டு செல்கின்றன.

சுருக்கமாக கூறுவதெனில், இவ்வுலகில் முதலில் தோன்றியது இயற்பியல், அதிலிருந்து படிப்படியாக மற்றவை தோன்றி ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி கட்டமைக்கப்பட்டுள்ளன. நாம் பள்ளிகளில் கற்கும் பாடங்களான இயற்பியல், வேதியியல், உயிரியல், சமூகவியல் என்று தனித்தனியே கற்பிக்கப் பட்டாலும் அவை அனைத்தும் தொடர்புகொண்டவை. இயற்பியலிலிருந்து வருவது வேதியியல், வேதியியலிருந்து வருவது உயிரியல், உயிரியலிலிருந்து வருவது மனிதனும் மனித சமூகம் பற்றிய பிரிவுகளும்.

இங்கு  எழும் ஒரு ஆச்சரியமானக் கேள்வி என்னவென்றால் எவ்வாறு எளிமையான இயற்பியல் விதிகளிலிருந்து சிக்கலான உயிர்கள் மற்றும் மனித  சமூகம் வரையான அடுக்குகள் தோன்றின் என்பதுதான். எளிமையானதில் இருந்து எளிமையானதுதானே தோன்றும், சிக்கலானது எப்படித் தோன்றும் என்பது இயற்கையான கேள்வி.  இதைப் புரிந்துகொள்வது மிக முக்கியமானது என்பதால், கான்வே (Conway) என்ற திறமிக்க கணிதவியலாளர் சில எளிய விதிகளின் துணைகொண்டு, இது எவ்வாறு நடைபெறுகிறது என்று அனைவரும் அறியும்படியாக  ஒரு எளிய ஆட்டத்தை உருவாக்கினார். இதைப் புரிந்துகொள்வது நல்ல தெளிவை அளிக்கும் என்பதால், இதைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.  

ஒரு சதுரங்க அட்டையில் 8×8 என 64 கட்டங்கள்  இருக்கும் இதை  விரிவாக்கி நிறைய கட்டங்கள் கொண்ட ஒரு அட்டையை எடுத்துக்கொள்ளவும். அதன்பின் கீழ்வரும் விதிகளைப் பின்பற்றவும்: [11,12]

  1. ஒரு கட்டம் இரண்டே தன்மைகளைக் கொண்டிருக்கும்:  உயிரோடு இருக்கும் அல்லது இறந்திருக்கும்.
  2. ஒரு கட்டம் உயிரோடிருந்து அதனை ஒட்டியுள்ள கட்டங்களில் இரண்டு அல்லது மூன்று கட்டங்கள் உயிரோடிருந்தால், அக்கட்டம் அடுத்த நொடியிலும் உயிரோடிருக்கும். அவ்வாறில்லாமல், மூன்றிற்கு மேலான கட்டங்கள் உயிரோடிருந்தாலோ அல்லது இரண்டிற்கும் குறைவான கட்டங்கள் உயிரோடிருந்தாலோ, அக்கட்டம் அடுத்த நொடியில் இறக்கும்.
  3. ஒரு இறந்த கட்டத்தை ஒட்டி சரியாக மூன்று உயிருள்ள கட்டங்கள் இருந்தால், இறந்த கட்டம் அடுத்த நொடியில் உயிர் பெரும். அவ்வாறு இல்லையெனில் இறந்த கட்டம் இறந்தவாறே இருக்கும்.

இந்த மூன்று விதிகளைக் கொண்டு எண்ணற்ற உயிர்களை சதுரங்க அட்டையில் தோற்றுவிக்க முடியும். உதாரணமாக:

நிலையான உயிர்: ஒரு நிலையான உருவைப் பெற்று மாறாமல் உயிருடன் இருக்கும்.

ஆடும் உயிர்:  ஒரே உருவைக் கொண்டு நின்று படுத்து  ஆடும்

தவழும் பூச்சி:  தவழ்ந்து உருமாறி மீண்டும் ஐந்தாவது நொடியில் பழைய உருவை அடைகிறது.

மேலுள்ளவை மிக எளிமையான உயிர்கள்.  இவற்றை விட மிக சிக்கலான உயிர்களும் உருவாக்கப்பட்டுள்ளன. தன்னைப்போல குட்டிபோடும் சில உயிர்களும் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் ஆராய்ச்சியாளர்கள் இதில் ஒரு கணினியையும் உருவாக்கிக் காட்டியிருக்கிறார்கள்.  இவ்வுலகில் நாம் காணும் பரிணாம வளர்ச்சியைப் போல  இந்த சதுரங்க உலகிலும் பரிணாம வளர்ச்சியை உருவாக்க முடியும் என்று சில அறிவியலாளர்கள் நம்புகிறார்கள். 

ஒரு சதுரங்க அட்டையில், எளிய விதிகளைக் கொண்டு எப்படி சிக்கலான அமைப்புகளை  உருவாக்க முடிகிறதோ, அதைப்போலவே நாம் வாழும் பிரபஞ்சமும் எளிமையான விதிகளைக் கொண்டு அனைத்து சிக்கலான அமைப்புகளையும்  (நாம் உட்பட) உருவாக்கி இயக்குகிறது.  இந்த சதுரங்க ஆட்டத்தில் ஆரம்ப விதிகளும் கட்டங்களின் ஆரம்ப நிலையும், எதிர்காலத்தில் நடப்பவை அனைத்தையும் தீர்மானிக்கிறது.  அடிப்படையில் நாம் வாழும் பிரபஞ்சமும் ஓரளவு இதுபோன்றதுதான். ஆனால் நம்மால் எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்க முடியாது. இதற்கு குவாண்டவியல் தன்மையும் ( Quantum effects) குழப்ப நிலையும் (deterministic chaos) அடிப்படைக் காரணங்கள் . அவ்வாறு கணிக்கும் விதிகள் இருந்தாலும் அதற்கான கணிப்பு நடைமுறையில் சாத்தியமானது இல்லை. அதனால்தான் இவ்வுலகைப் புரிந்து கொள்ள ஒவ்வொரு அடுக்குகளிலும் நாம் தனித்தனியாக விதிகளைக் கண்டுபிடிக்கிறோம். இதன் விளைவாகவே அறிவியல் என்பது இயற்பியல், வேதியியல், உயிரியல், சமூக அறிவியல் என்று பலப் பிரிவுகளாகப் பிரித்து ஆராய்கிறோம், கற்கிறோம். மேலும் இப்பிரிவுகளே சிக்கலாக இருப்பதால் அவற்றில் மேலும்  பல கிளைப் பிரிவுகளையும் உருவாக்குகிறோம். இவ்வாறு அறிவு பலப்பிரிவுகளாக பிரிக்கப் பட்டாலும்,  இயற்கையில் அவை அனைத்தும் இயற்பியல் வழியாக வந்தவைதான். அதனால் அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்ட ஒரு வலைப்பின்னலாக அமைந்துள்ளன.  இவ்வாறுதான் இவ்வுலகைப் பற்றிய அறிவு கட்டமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அனைத்தையும் சுருக்கி இயற்பியலின் வழியாகப் பார்ப்பதை குறுக்கப்பார்வை (Reductionism) என்று கூறுவர் [9, 14]. பெரும்பாலான அறிவியலாளர்கள் இப்பார்வையைக் கொண்டுள்ளனர். ஆனால் இது மட்டுமே அனைவரும் ஏற்றுக்கொள்ளும் கருத்து அல்ல. சிலர் ஒவ்வொரு  அடுக்குகளிலும்   புதிய  விதிகள் தோன்றுகின்றன.  அவ்விதிகள்  இயற்பியல் விதிகளை மீறுவதில்லை, ஆனால்  அவற்றை இயற்பியல் விதிகள்  தீர்மானிப்பதில்லை என்ற பார்வையும் கொண்டுள்ளனர் [10].  

அறிவியல் என்பது  பல பிரிவுகளைக் கொண்ட ஒரு பிரமாண்டமான  கட்டமைப்பு. எந்த ஒரு தனிமனிதனாலும் முழுவதும் அறிய முடியாது. ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ஒரு மாணவனுக்கு  எங்கே ஆரம்பிப்பது, எதை படிப்பது என்பது இயற்கையாக எழும் கேள்வி.  கற்றது கைமண் அளவு என்பது அனைவரும் அறிந்ததே. இன்று ஒரு நாளில் பதிப்பிக்கப்படும் நூல்களை மட்டும் படித்து முடிக்க நமக்கு வாழ்நாள் போதாது. இது ஒரு சோகமான செய்தி. ஆனால் இதைப்பற்றி நாம் கவலை கொள்ளத்தேவையில்லை என்கிறார் டேவிட் டாய்ச்சு [6]. நாம் உலகில் உள்ள அனைத்தையும் அறிந்து கொள்ள முடியாது; ஒவ்வொரு தகவலையும் நாம் அறிந்து கொள்ள நினைப்பது முடியாத காரியம். ஆனால்  இவ்வுலகைப்பபற்றிய முக்கியமானவற்றைப் புரிந்து கொள்வது நம்மால் சாத்தியமானது என்கிறார் டாய்ச்சு. நாம் இங்கே அறிதலுக்கும் புரிதலுக்கும் உள்ள வேறுபாட்டை கவனிக்கவேண்டும். அறிதல் என்பது ‘என்ன’ என்ற கேள்விக்கு விடையளிக்கும். புரிதல் என்பது ‘ஏன்’ என்ற கேள்விக்கு விடையளிக்கும். இவ்வுலக நிதர்சனத்தை புரிந்து கொள்ள நாம் நான்கு தத்துவங்களை நன்கு தெரிந்து கொண்டால் போதுமானது என்கிறார்::

  1. இயற்பியல் விதிகள் (Physics): அனைத்திற்கும் இயற்பியல் விதிகள் அடிப்படையானது என்பதால்  இது முக்கியமாகிறது
  2. பரிணாம தத்துவம் (Evolution – biological and Cultural): பரிணாமத் தத்துவம் இல்லாமல் உயிரியலில் எதுவுமே விளங்காது என்பது அறிவியலாளர்களிடம் நிலவும் பரவலான கருத்து. பரிணாமம் என்பது எதோ மனிதனை உருவாக்கியதுடன் நின்று விடுவதல்ல. சமூக மாற்றங்களும் பரிணாமத் தத்துவத்தின் கீழ்தான் வருகின்றன. இந்த சமூக பரிணாமம்  “பண்பாட்டு பரிணாமம்” (Cultural Evolution) என்று அழைக்கப்படுகிறது. மனித சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள பரிணாம தத்துவம் முக்கியமானது.
  3. அறிவை அடையும் முறை (Epistemology, Theory of Knowledge): மனிதகுலம் முன்னேறாமல் இருண்டகாலத்தில் பலகாலமாக இருந்ததற்கு ஒரு அடிப்படைக் காரணம் புதிய அறிவைப் படைப்பது எப்படி என்பது தெரியாமல் இருந்ததால்தான். அறிவை எப்படிப் படைப்பது என்பதைத் தெரிந்துகொள்வது மனித முன்னேற்றத்திற்கு அடிப்படையானது. இதுதான் இக்கட்டுரையின் மையக் கருத்து.
  4. கணினி தத்துவம் (Theory of Computation): இயற்பியல் விதிகளிலிருந்து அனைத்தும் தோன்றின எனப் பார்த்தோம். அது தோன்றிய விதம் எப்படி என்றால், அவை அனைத்தும் இயற்பியல் விதிகளைக்கொண்ட  கணிப்பின் வழியாக வருகிறது. சதுரங்க ஆட்டத்தில் ஒரு நொடியிலிருந்து அடுத்த நொடிக்கான நிலையை ஆராய நாம் விதிகளைக் கொண்டு எந்த கட்டம் வாழ்கிறது இறக்கிறது என்று கணக்கிட்டோம். அனைத்து உயிர்களின் தோற்றமும் செயல்பாடும் இவ்வாறான கணிப்பின் வழியாகத்தான் வருகிறது. நமது பிரபஞ்சமும் இவ்வாறான கணிப்பின் வழியாகவே பரிணமிக்கிறது. அறிவியலாளர்கள் பலர் நமது பிரபஞ்சத்தையே ஒரு பிரமாண்டமான கணினி என்று கருதுகின்றனர் [13]. இக்கணினி தன்னைத்தானே கணக்கிட்டு அடித்த நிலைக்கு செல்கிறது. இவ்வுலகில் வாழும் உயிர்கள் அனைத்தும் எப்பொழுதும் கணக்கிட்டுக் கொண்டே இருக்கின்றன. இவ்வுலகைப் புரிய கணினித் தத்துவம் முக்கியமானது.
C:\Users\Raji\Amazon Drive\knowledge\realityGuide.png

இவ்வுலகில் உள்ள அனைத்தையும் அறிய வேண்டியதில்லை, ஆனால் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.  இதற்கு மேலுள்ள நான்கு தத்துவங்களைப் பற்றிய அறிவு உதவும். இவை  அறிவைத்தேடுவோர்க்கு நல்ல ஆரம்பமாகவும் வழிகாட்டியாகவும் அமையும்.

இறுதிச் சுருக்கம்:

இதுவரை நாம் ஆராய்ந்தது, அறிவின் தன்மையைப் பற்றிய ஒரு அடிப்படை ஆரம்பகட்டப் பார்வை. இது  ஒரு  நல்ல திசையினைக் காண்பித்து, ஆர்வத்தைத்  தூண்டி,  உங்களின் தொடர் கற்றலுக்கும் புதிய படைப்புகளுக்கும், வெற்றிக்கும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன். அறிவினைப் பற்றி சுருக்கமாக ஒரு பத்து கருத்துக்களுடன் இக்கட்டுரையை முடிக்கிறேன்.

  1. புதிய முக்கிய கருத்துக்கள் பெரும்பாலும் நமது பழைய கருத்துக்களை தவறாக்கும். அறிவு என்பது கூட்டிக்கொண்டே செல்வதல்ல, பழையவற்றை கழிப்பதும் ஆகும். நமது கருத்துக்கள் தவறாக இருக்கலாம் என்ற எண்ணமில்லாமல், புதிய உண்மைகளை கற்க முடியாது, படைக்க முடியாது. 
  2. புதிய அறிவு என்பது பொது வாக்கெடுப்பு மூலம் வருவதல்ல. ஒருவரால் அல்லது மிகச்சிறிய குழுவால் உருவாக்கப்பட்டு மற்ற அனைவரின் கருத்துக்களும் தவறு என்று உருவாகிறது.
  3.  நமது கருத்துக்கள் நாம் காண்பவற்றை எல்லாம் விளக்கி விட்டால், நமது கருத்துக்கள் எல்லாம் சரி என்பதல்ல. அதை வேறுவிதத்திலும் சிறப்பாக விளக்க முடியும். பூமியைச் சுற்றித்தான் சூரியனும் கோள்களும் உலாவருகின்றன என்பதிலிருந்து சூரியனைச் சுற்றிதான் பூமியும் கோள்களும் உலாவருகின்றன என்ற கருத்து இப்படித்தான் தோன்றியது. இவ்வாறுதான் அறிவியல் முன்னேறுகிறது.
  4. நாம் காணும் ஒரு நிகழ்வை, காண்பதை வைத்து விளக்க முயல்வோம். ஆனால் ஆழமான புரிதலுக்கு நம்மால் காணமுடியாதற்றைக் கொண்டு விளக்க முயலவேண்டும். பின்பு அந்த காண முயாதவற்றை இன்னொரு காண முடியாதவற்றைக் கொண்டு விளக்கவேண்டும். இவ்வாறுதான் அறிவியல் முன்னேறுகிறது. நாம் காண்பதை காண்பவற்றைக் கொண்டு விளக்கிக் கொண்டிருந்தால், இன்னும் பூமி தட்டை என்பதிலிருந்து முன்னேற முடியாது.
  5. முக்கியமான அறிவுசார் படைப்புகள் நாம் தினந்தோறும் காண்பவற்றைக்கொண்டு நிகழ்வதல்ல. நாம் தினந் தோறும் காண்பவற்றுக்கு நேர்மாறாக நிகழும் அரிய நிகழ்வுகளை ஆராயும் பொழுது உருவாகிறது.[3]
  6. கடினமான சிக்கல்களுக்கான அறிவை ஏரணத்தைக் (logic) கொண்டு மட்டும் அறிய முடியாது. நிறைய அறிவுசார் நூல்களையும் தகவல்களையும் கற்கவேண்டும். அதன்பின் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும், பெரும்பாலும் அவை தோல்வியில் முடியும். முடிவில் உண்மை நாம் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று தானாகத் தோன்றும். அவ்வாறு தோன்றியபின் ஏரணத்தைக் கொண்டு உண்மையா என்று சரி பார்க்கலாம்.[5]
  7. ஒரு ஐன்ஸ்டீன் ஆவதற்கு அதிக IQ தேவையில்லை, 120 க்கு மேலிருந்தால் போதுமானது. நிறைய கருத்துக்களை கற்கவேண்டும், அவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்து புரிந்து கொள்ளல் வேண்டும். பின்பு நிறைய படைப்புகளை உருவாக்க முயல வேண்டும். அவற்றில் ஒன்றிரண்டு அதிக பயனுள்ளதாக அமையும்.[5]
  8.  அறிவு என்பது அழகானது என்கின்றார் பிலேட்டோ (Plato). நாம் ஒரு கருத்தை புதிதாக கண்டுபிடிக்கறோம் என்றால், அது உண்மையா என்று கண்டறிவதற்கு ஒரு அடிப்படைத் தேவையாக அறிவியலாளர்கள் காண்பது அதன் அழகு, நாம் ஒரு ஒழுங்கான பிரபஞ்சத்தில் வாழ்கிறோம். நாம் அவற்றைப் பற்றிய கண்டுபிடிப்புகள் அழகாக சுருக்கமாகத்தான் இருக்கும் என்பது அறிவியலாளர்களின் பார்வை. இது அறிவியல் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை உண்மையாக நிற்கிறது [8].
  9. ஒரு அறிவியல் கருத்து தனித்து நிற்பததல்ல, அது மற்ற அறிவியல் கருத்துக்களுடன் தொடர்புடையது. ஒரு கருத்து உண்மையா என கண்டறிவதற்கு, அது எவ்வாறு மற்ற கருத்துக்களுடன் தொடர்பு கொண்டுள்ளது என்பதைக் கொண்டு கண்டறியலாம். இவ்வுலகில் உள்ள அனைத்து அறிவும் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்ட ஒரு வலைப்பின்னல். [9]
  10. தத்துவமேதை பினோசா (Spinoza) இன்பத்தை பற்றி ஆழ்ந்து சிந்தித்து கண்டறிந்தது என்னவென்றால், இவ்வுலகில் நீங்காத அதியுச்ச இன்பமளிப்பது உண்மையைத் தேடி அறிதல் என்கிறார்[7]. உலகில் சிறந்த அறிவியலார்கள் பல சாதனைகளைப் படைத்ததற்குக் காரணம், அவர்கள் தங்களை வருத்திக் கொண்டதனால் அல்ல. அவர்கள் அதில் அதியுச்ச இன்பம் கண்டதனால்தான். 

இது அறிவியல் ஆராய்ச்சி செய்ப்பவர்களுக்கு மட்டும் பொருந்துவது அல்ல. அனைத்து அறிவுசார் படைப்புகளை உருவாக்குபவர்களுக்கும் , அரசியல் சமூக சிக்கல்கள் உட்பட, பொருந்தும். ஏனெனில் நாம் ஒரு ஒழுங்கான, அனைத்து அறிவும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட அழகான பிரபஞ்சத்தில் வாழ்கிறோம்.

உசாத்துணை:

  1. Frank, Philipp. Philosophy of science: The link between science and philosophy. Courier Corporation, 2004.
  2. Popper, Karl. All life is problem solving. Routledge, 2013.
  3. Kuhn, Thomas S. The structure of scientific revolutions. University of Chicago press, 2012.
  4. Feyerabend, Paul. Against method. Verso, 1993.
  5.   Simonton, Dean Keith. Creativity in science: Chance, logic, genius, and zeitgeist. Cambridge University Press, 2004.
  6. Deutsch, David. The fabric of reality. Penguin UK, 1998.
  7.  Goldstein, Rebecca. Betraying Spinoza: the renegade Jew who gave us modernity. Schocken, 2009.
  8.  Goldstein, Rebecca. Plato at the googleplex: Why philosophy won’t go away. Vintage, 2015.
  9.  Wilson, Edward O. Consilience: The unity of knowledge. Vol. 31. Vintage, 1999. 
  10. Davies, Paul. Cosmic Blueprint: New Discoveries In Natures Ability To Order Universe. Templeton Foundation Press, 2004.
  11. Hawking, Stephen. The grand design. Random House Digital, Inc., 2011.
  12. Levy, Steven. Artificial life: A report from the frontier where computers meet biology. Random House Inc., 1993. 
  13. Tegmark, Max. “The mathematical universe.” Foundations of physics 38.2 (2008): 101-150.
  14. Gell-Mann, Murray. The Quark and the Jaguar: Adventures in the Simple and the Complex. Macmillan, 1995.
  15. Dolnick, Edward. The clockwork universe: Isaac Newton, the Royal Society, and the birth of the modern world. New York: HarperCollins, 2011.
  16. ஆச்சாரி, அறிவியலின் தத்துவம் ஓர் எளிய தொடக்கம்

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a comment