போர்க்குற்றம் என்பதற்கான தத்துவ விளக்கங்களைப் புரிந்து கொண்டால், அந்த வாதம் எதுவுமே தமிழர் தரப்பின் மீது ஏவ முடியாது. அதை விளக்குவதுதான் இப்பதிவின் நோக்கம்.
2018 -இல் அந்தமான் தீவில் சென்டினல் எனும் காட்டுவாசிகளை சந்திக்க ஒரு பாதிரியார் செல்கிறார், ஆனால் அவரை சென்டினல் வீரர்கள் அம்பெய்து கொல்கிறார்கள். ஆனால் உலகில் யாரும் சென்டினல் வீர்ர்களை கொலையாளிகள் என்று கூறவில்லை, எந்த தண்டனையும் விதிக்கவில்லை. சென்டினல் மக்கள் பாதிரியாரைக் கொன்று தின்றிருந்தாலோ, அல்லது சித்திரவதை செய்திருந்தாலோ கூட அவர்கள் மீது யாரும் குற்றம் சாட்ட முடியாது. இது ஏன்? ஏனெனில் அவன் இயற்கை மனிதன், பொதுமனிதன் இல்ல. இந்த வேறுபாடு மிகமுக்கியமானது.
உலகில் ஒரு நாட்டை உருவாக்குவதற்கு முன்னர் அனைத்து மனிதர்களும் இயற்கை மனிதர்களே( State of Nature) என்கிறார் தத்துவமேதை உரூசோ. இங்கு நீதி நிலைநாட்ட யாருமில்லை. ஒவ்வொருவரின் பாதுகாப்பும் அவரவர் பொறுப்பு. இதனால் இயற்கை மனிதர்களிடையே வெட்டுக்குத்து, பழிக்குப்பழி என்று இரத்த ஆறு ஓடும். இந்த நிலையில் இருந்து முன்னேறுவதற்கு ஒரு நாடு உருவாக்கப்படுகிறது. மக்களிடையே நீதியையும் பாதுகாப்பையும் உருவாக்குவது அரசின் கடமை; தண்டிக்கும் உரிமை அரசுக்கு மட்டும் உண்டு என மக்களும் அரசும் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்குகிறார்கள். இதுதான் சமூக ஒப்பந்தம் (social contract). இந்த சமூக ஒப்பந்தத்தின் வழியாக நாடு உருவாகிறது, மக்கள் இயற்கை மனிதனில் இருந்து பொதுமனிதானாக மாறுகிறான். எப்பொழுது அரசு மக்களைக் காக்கும் கடமையில் தவறுகிறதோ, அப்பொழுது அவ்வரசு சமூக ஒப்பந்தத்தை கிழித்து எறிந்துவிட்டது எனப் பொருள். அப்பொழுது பொது மனிதன் ஒப்பந்தத்திலிருந்து விடுபட்டு மீண்டும் இயற்கை மனிதன் ஆகிறான். அவன் ஆயுதம் ஏந்தி யாரையும் தண்டிக்கலாம். அது அவனுக்கு இயற்கை அளித்த உரிமை.
இப்பொழுது சென்டினல் கதைக்கு வருவோம். அவர்கள் இயற்கை மனிதர்கள், அவர்கள் அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட பொதுமனிதன் கிடையாது. அதனால் அவனுக்கு யாரை வேண்டுமானாலும் கொல்லும் உரிமை உள்ளது. அவன் அரசு விதிகளுக்கு அப்பாற்பட்டவன்.
இனி போர்க்குற்றம் பற்றிய தர்க்கத்திற்கு வருவோம். இதே இயற்கை மனிதன் கருத்தை நாடுகளுக்கு இடையேயும் பொருத்திப் பார்த்து ஆராய்கிறார் அறிஞர் உரோடின். ஒவ்வொரு நாடும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளப் படைகளை வைத்திருக்கிறது. எந்த விதிகளும் இல்லாத உலகில், நாடுகளும் ஒன்றுடன் ஒன்று வெட்டுக்குத்துப் போரில் இருக்கும். இவ்வாறான நாடுகளின் நிலையும் இயற்கை நிலைதான். நாடுகள் இவ்வாறு இயற்கை நிலையில் இருந்தாலும், போர்களை கட்டுப்படுத்த, இழப்புகளை குறைக்க ஐநா போன்ற அமைப்புகள் உருவாகி நாடுகளுக்கிடையே ஒப்பந்தங்களை உருவாக்கி இருக்கின்றன. இந்த ஒப்பந்தங்களை மீறினால் அந்நாடுகளின் மீது குற்றங்கள் சாட்டப்படும். இப்பொழுது கேள்வி ஐநா வின் ஒப்பந்தத்திற்கு தமிழர்கள் கட்டுப்பட்டவர்களா என்பதுதான். நாம் நாடில்லாத மக்கள், நாம் எந்த ஐநாவின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறோம்? நாம் எந்த ஒப்பந்தத்திற்கும் கட்டுப்படாத இயற்கை நிலையில் இருக்கிறோம். ஐநா தமிழீழத்தை அங்கீகரித்து, தமிழர் தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் , பின்னர் குற்றம் சாட்டும் உரிமை அவர்களுக்குக் கிடைக்கும். அதற்கு முன்பு ஐநாவிற்கு எந்த உரிமையும் கிடையாது. இலங்கை ஐநாவின் அங்கமாக இருப்பதால், அவர்கள் ஐநாவின் ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட்டவர்கள், அதனால் அவர்கள் மீது குற்றம் சாட்டலாம். நமது போராட்டமே ஐநாவின் ஒரு அங்கமாக தனிநாடாக இருப்பதே. நமக்கு எந்த அங்கீகாரமும் அளிக்காமல், குற்றம் சாட்டுவதற்கு அவர்களிடம் எந்த தர்க்கமும் இல்லை. இது அனைத்து நாடற்ற சமூகங்களுக்கும் பொருந்தும். அவர்கள் இயற்கை நிலையில் இருக்கிறார்கள், அவர்கள் எந்த ஆயுதம் எடுத்து போரிட்டாலும் எந்த குற்றமும் இல்லை. அது அவர்களுக்கு இயற்கை அளித்த உரிமை என்கிறார் உரோடின்.
ஒரு நாடு தனது மக்களை பாதுகாக்கவில்லை என்றால் சமூக ஒப்பந்தத்தை அது மீறுகிறது, அப்பொழுது மக்கள் தானாக இயற்கை நிலைக்கு மாறுகிறார்கள். அவர்களுக்கு போராடும் அனைத்து உரிமையையும் இயற்கை அளிக்கிறது, ஐநா இங்கு தேவையே இல்லை. அதனால் தமிழரின் பாதுகாப்புக்கு எப்பொழுது இலங்கை அச்சுறுத்தல் விட்டதோ, அப்பொழுதே தமிழர் ஆயுதம் ஏந்தும் உரிமையைப் பெறுகின்றனர். அதனால் தமிழர் தரப்பு ஆயுதம் ஏத்தியது எந்த குற்றமும் அல்ல.
ஐநாவின் விதிகளின்படி உள்நாட்டுப் போரில் மற்ற நாடுகள் தலையிடக்கூடாது. ஆனால் என்ன நடந்தது? உலக நாடுகள் எல்லாம் தமிழர் தரப்பை தடை செய்தன, ஆயுதக் கொள்வனவை, பொருளாதாரத்தை முடக்கியது. ஆனால் இலங்கைக்கு அனைத்து ஆயுதங்களும், பயிற்சிகளும், பொருளாதார உதவியும் அளிக்கப்பட்டன, அடிப்படையில் ஐநாவின் விதிகளை அந்நாடுகளே மீறுகின்றன. அவர்கள் தமிழர் மீது எந்த குற்றமும் சாட்ட முடியாது, ஏனெனில் நாம் அவர்களின் ஒப்பந்தங்களில் அங்கமல்ல.
சுருக்கமாகச் சொன்னால்:
தமிழர் தரப்பு எந்த போர்க்குற்றங்களையும் இழைக்கவில்லை, நாம் இயற்கைநிலையில் இருக்கிறோம். நாம் ஐநாவின் விதிகளுக்கு அப்பாற்பட்டவர்கள். இயற்கை நம்மை பாதுகாக்க அனைத்து உரிமைகளையும் அளித்துள்ளது. இயற்கை நமது நண்பன்.
அவர்கள் நம்மை காட்டுமிராண்டிகள் எனச் சொல்லலாம், அதில் சிக்கல் இல்லை. ஆனால் குற்றவாளிகள் என்று சொல்வதற்கு எந்த தர்க்கமும் இல்லை. அதே நேரம் நாம் அவர்களைக் குற்றவாளிகள் என்று சொல்லலாம். ஏனெனில் அவர்களின் விதிகளையே அவர்கள் மீறிவிட்டார்கள்.
தரவுகள்:
Rousseau, Jean-Jacques. “The social contract (1762).” Londres (1964).
Rodin, David. War and Self defense, Oxford university Press, 2002.