இதற்கான காரணம் என்பது அறிவின் தன்மை. இவ்வுலகில் விடயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. தினமும் புதிதாக முளைக்கின்றன. இவை சலசலப்பு (noise), அறிவு (knowledge) ஆகாது. இன்றைய தொலைக்காட்சி ,செய்திகள் என்பது தினந்தோறும் நடக்கும் சலசலப்புகள். அதனால் அவை கூத்தாடுகின்றன என சொல்லலாம்.
அறிவு என்பது சலசலப்பைக் கடந்து ஒருபடி மேலே சென்று, எது எக்கலாத்திற்கும் மாறாத தன்மை கொண்டது என்பதை அறிவது. அறிவைத்த தேடுவது என்பது மாறாததை தேடுவது. உதாரணமாக இயற்பியல் விதிகள் இப்பிரபஞ்சத்தின் அனைத்து இடங்களிலும் மாறாத தன்மை கொண்டது. பிரபஞ்சம் ஒவ்வொரு நொடியும் மாறுகிறது, ஆனால் அவ்விதிகள் மாறாது. அறிவில் மாற்றம் ஏற்படும், ஆனால் மிக மெதுவான மாற்றம். உதாணமாக் நியூட்டனின் விதிகளைத் தாண்டி, ஐன்சுடைன் விதிகள் தோன்றியது.
ஞானம் (wisdom) என்பது இன்னொரு படி மேலே சென்று அனைத்து அறிவையும் ஒன்றுடன் ஒன்று இணைத்து ஒருமையைக் காண்பது. இதுதான் அறிவின் உச்சநிலை. அமைதிநிலை. மாற்றங்கள் வெகு அரிதானவை.
இவ்வாறு அறிவின் படிநிலையில் உயர உயர சலசலப்பு குறைகிறது. மனிதன் நிறைகுடம் ஆவது என்பது இவ்வாறு அறிவின் படிநிலையில் உயர்வதே. அறிவின் படிநிலையில் உயர்பவருக்கு எது சலசலப்பு, எது அறிவு என்பது தெரியும். அதனால் சலசலப்பில் கவனம் செலுத்தாமல் நிலையானவற்றில் கவனம் செலுத்துகிறார். அதனால் அவர் நிறைகுடம் போன்று அமைதியாகிறார்.
எது அறிவு எது விடயம் என்பதை உணராதவர், விடயங்களுக்குள் சிக்கிக்கொள்கிறார். விடயங்களை எவ்வளவு அதிகமாக கற்றுக்கொள்கிறாரோ, அவ்வளவு அதிகமாக குறைகுடம் போன்று சலசலப்பை உருவாக்குகிறார். நிறைகுடமும் குறைகுடமும் தனி மனிதனின் குணம் அல்ல, அது அறிவின் தன்மை.