முடிவிலியும் (infinity) முடிவிலா ஆட்டமும்

முடிவிலி (infinity) என்பது கணிதத்திலும் சரி, அரசியலிலும் சரி சில தலைகீழான பண்புகளைக் கொண்டுள்ளன.


ஒரு விடுதியில் முடிவில்லா எண்ணிக்கையுள்ள அறைகள் உள்ளன (infinity hotel) என்று எடுத்துக்கொள்வோம். அனைத்து அறைகளும் விருந்தினர்களால் நிரம்பிவிட்டன. இப்பொழுது ஒரு புதிய முடிவிலா தொடர்வண்டி (infinity train) ஊருக்குள் வருகிறது. அதில் முடிவிலா எண்ணிக்கையான பயணிகள் இருக்கின்றனர். இவர்கள் இந்த விடுதிக்கு வந்து அறை கேட்கின்றனர். விடுதியின் மேலாளர் அறைகள் நிரம்பிவிட்டன என்று சொல்வார் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் மேலாளருக்கு சிக்கல் எதுவும் இல்லை. அனைவருக்கும் அறைகள் தருகிறார். இது எப்படி? ஒவ்வொரு அறையிலும் இருப்பவர்களை, அவர்களது அறை எண்ணை இரண்டால் பெருக்கி, அந்த எண்ணில் உள்ள அறைக்கு மாறச்சொல்கிறார் (P -> 2P ). புதிதாக வந்த விருந்தினர்களை அவர்களது வரிசை எண்ணை இரண்டால் பெருக்கி ஒன்றை கழித்து வரும் எண் உள்ள அறைக்கு போகச் சொல்கிறார் (p-> 2p-1). சிக்கல் தீர்ந்தது. எவ்வளவு முடிவிலா எண்ணிக்கையிலான விருந்தினர் வந்தாலும், விடுதியில் போதுமான இடங்கள் இருக்கிறது. விடுதி எப்பொழுதும் நிறைந்து இருக்கும், ஆனால் முற்றிலும் காலியாக இருக்கும். இதுதான் முடிவிலியின் சிக்கலான பண்புகள். இது போன்ற பல முரணான பண்புகள் உள்ளன. இவை எல்லாம் கணிதத்தில் நிறுவப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்கள்.

குறிப்பு: இது Hilbert Paradox என அழைக்கப்படுகிறது.
https://en.wikipedia.org/wiki/Hilbert%27s_paradox_of_the_Grand_Hotel

அரசியலிலும் முடிவிலா ஆட்டத்தில் இதுபோன்ற முரணான பண்புகளைக் காணலாம்.

  1. பலமானவர்கள் தோற்கலாம், பலமற்றவர்கள் வெற்றி பெறலாம். உதாரணமாக யூதர்கள் இருக்கிறார்கள், ஆனால் பலம் வாய்ந்த ரோமர்கள், பாபிலோனியர்கள் இன்றில்லை.
  2. தோல்வி வெற்றியாகும், வெற்றி தோல்வியாகும். வியட்நாமுக்கும் அமெரிக்காவிற்கும் எதிரான போரில், வியட்னாம் படைகள் ஒவ்வொரு படை நடவடிக்கையிலும் தோற்றார்கள், அமெரிக்கர்கள் அனைத்திலும் வெற்றி கொண்டார்கள். ஆனால் போரின் இறுதியில் அமெரிக்கா பின்வாங்கியது, வியட்நாம் வென்றது. இதற்குக் காரணம் வியட்நாம் ஆடியது முடிவிலா ஆட்டம். அவர்கள் இறுதிவரை களத்தில் நின்றார்கள், அமெரிக்கா வெளியேறியது.
    பலர் ஈழப்போராட்டத்தை எல்லாம் முடிந்துவிட்டது என்று பார்ப்பதற்கு, அதை அவர்கள் ஒரு முடிந்த ஆட்டமாகப் பார்ப்பதுதான். அதை ஒரு முடிவிலா ஆட்டமாகப் பார்ப்பவர்களுக்குத்தான் அதன் தன்மை விளங்கும். ஈழப்போராட்டம் காலியானது அல்ல, அது நிறைந்து நிற்கிறது. அது ஒரு முடிவிலா ஆட்டம். இன்று தமிழ்த்தேசியம் தமிழகத்தில் எழுச்சி பெறுவதற்குக் காரணம் தலைவரின் முடிவிலா ஆட்டம்தான்.

முடிவிலா ஆட்டத்தின் இன்னொரு தலைகீழான பண்பு என்பது:

“முதலில் வந்தவர்களுக்கு கடைசி இருக்கை, கடைசியில் வந்தவர்களுக்கு முதல் இருக்கை.” . இதைக் கூறியவர் முடிவிலா ஆட்டம் ஆடிய ஏசு பிரான்.

ஏசுவைப் பின்பற்றுபவர்களுக்கு எதிரியாக இருந்தவர் பால், ஆனால் கடைசியில் திருந்தி ஏசுவை பின்பற்றி முதலிடத்திற்கு வந்தார். அவர்தான் கிருத்துவத்தையே உருவாக்கினார் எனும் உயர்ந்த நிலையை அடைந்தார். ஆனால் ஏசுவை முதலில் பின்பற்றிய சீடர்களுக்கு முதல் இருக்கை கிடைக்கவில்லை. இத்தனைக்கும் பால் ஏசுவின் இறப்பிற்குப் பின்னர்தான் ஏசுவை நம்பினார். அடிப்படையில் ஏசுவின் முடிவிலா ஆட்டத்தை உணர்ந்து அதை உயர எடுத்துச்சென்றவர் பால்.

பாலைப் போல சீமான் அவர்கள் தலைவரின் மறைவிற்குப் பின்னர்தான் அரசியலில் இறங்கினார். ஈழப்போர் காலத்தில் வைகோ, கொளத்தூர் மணி ஆகியோர்கள் முன்னின்று உதவியவர்கள். ஆனால் வரலாற்றில் சீமான் எதிர்காலத்தில் முதலாவதாக நிற்பார். ஏனெனில் சீமான் தலைவரின் முடிவிலா ஆட்டத்தை உணர்கிறார், மற்றவர்கள் உணரவில்லை. சீமான் அவர்கள் எத்தனை தவறுகள் செய்திருந்தாலும் முடிவிலா ஆட்டம் அதைக் கழுவிவிடும். முடிவிலா ஆட்டம் என்பது யாரையும் நம்பி இயங்குவதில்லை. அது தானாக இயங்கும், அதற்கு வேண்டிய ஆட்களை அதுவாக உள்ளிழுத்துக் கொள்ளும், தன்னைத்தானே சரிசெய்து கொள்ளும். அதில் சேர்ந்து கொள்பவர்கள் புத்திசாலிகள், சேராதவர்கள் வாய்ப்பை இழந்தவர்கள்.

திராவிடம் ஆடுவது முடிவுறும் ஆட்டம். இன்று நிறைந்து இருக்கலாம், ஆனால் வெகு சீக்கிரம் காலியாகும். பின்பு அது நிறைய வாய்ப்பே இல்லாமல் போகும். ஏனென்றால் அது திராவிடம் தானாக தேர்ந்தெடுத்துக் கொண்ட முடிவுறும் ஆட்டம்.

மதங்கள் ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் முடிவிலா ஆட்டத்தை ஆடுபவை. அதன் வழியில் ஆடும் இந்துத்வாவும், சிங்கள பௌத்த அரசியலும் முடிவிலா ஆட்டத்தையே ஆடுகின்றனர். தலைவரின் முடிவிலா ஆட்டத்தைக் கொண்டே நம்மால் இவர்களை எதிர்கொள்ள முடியும்.

இது ஒரு ஆரம்பகட்ட ஒப்புமையே. இன்னும் பல்வேறு ஒப்புமைகள் உள்ளன. அவற்றை மெதுவாக இன்னொரு நாளில் எழுதுகிறேன்.

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a comment