நகலெடுத்தல்-1

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் தான் இவ்வுலகில் என்ன செய்வேண்டும் என்பதை சிந்தித்து அதன்படி செயல்படுகிறான் என்று நினைத்தால் அது தவறானது. உண்மையில் என்ன நடக்கிறதென்றால், அவன் மற்றவர்களைப் பார்த்து நகலெடுத்து செயல்படுகிறான். தமிழில் ஒரு பழைய பாட்டு ஞாபகம் வருகிறது. “அடுத்தாத்து அம்பூஜத்தை பார்த்தேளா” என்று அப்பாடல் ஆரம்பிக்கும். அப்பாடலில் பட்டு மாமிக்கு, அடுத்த வீட்டு மாமி வைத்திருப்பதெல்லாம் தனக்கும் வேண்டும் என்கிறார். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரும் பட்டுமாமி போன்றவர்தான். அவன் வீடு கட்டிவிட்டான், நான் கட்டவேண்டும். அவன் கார் வைத்திருக்கிறான், நாமும் வாங்கவேண்டும். அவன் பிள்ளை டாக்டர் ஆகிவிட்டான், நமது பிள்ளையும் ஆகவேண்டும். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். நகலெடுப்பது மனிதனின் ஒரு அடிப்படை உந்து சக்தி என்கிறார் உளவியலாளர் பிராய்டு. மனிதனின் அனைத்து விருப்பங்களும் இவ்வாறு நகலெடுத்துதான் வருகிறது. ஒருவன் தானாக புதிய விருப்பத்தை உருவாக்குகிறான் என்றால், அவன் பெரும் ஞானியாக அல்லது வீரனாக இருக்கவேண்டும். இந்த நகலெடுக்கும் தன்மை மனிதனுக்கு இருப்பதனால்தான் மீம்கள் ( கருத்துக்கள்) பரவி மக்களை இயக்குகிறது. இத்தன்மை நவீன உலகிற்கானது என நினைக்கவேண்டாம். இது ஆதிகலாத்தில் இருந்து வரும் மனிதனின் அடிப்படை உளவியல்; அனைத்து சமூகங்களிலும் இது உண்டு.

மனிதர்கள் இவ்வாறு ஒருவரை ஒருவர் நகலெடுப்பது ஒரு பெரிய சிக்கலை உருவாக்குகிறது. இதை “மிமடிக்கு தத்துவம்” (Mimetic Theory ; குறிப்பு: Memetic Theory என்பது வேறு தத்துவம் ) என்பதன் வழியாக தத்துவப்படுத்தி இருக்கிறார் இரினே சிரார்டு (Rene Girard). ஒருவர் இன்னொருவரைப் போன்று ஆகவேண்டும் என நினைப்பதால் , அந்த நகலெடுக்கப்படுபவர் ஒரு உதாரணமாக/ மாதிரியாக ( Model ) செயல்படுகிறார். ஆனால் அதேநேரம் இருவரும் ஒரே விருப்பத்தைக் கொண்டுள்ளதால், ஒருவர் இன்னொருவருக்குப் போட்டியாளர் ஆகிறார். இது பொறாமையையும் பகையையும் வளர்க்கிறது. இவ்வாறு ஒரு சமூகத்தில் ஒருவரை ஒருவர் நகலெடுத்தால், அந்த சமூகத்தில் பகை வளர்ந்து ஒற்றுமை சிதையும்.

இந்தப் பகையைப் போக்கி எவ்வாறு ஒற்றுமையை உருவாக்குவது? இதற்கான விடைதான் பலி கொடுப்பது. அப்பாவிகளின் இரத்த தியாகம் மக்களிடம் உள்ள பகையைப் போக்கி மக்களிடம் ஒற்றுமை ஏற்படுத்துகிறது. உதாரணமாகப் போர்வீரர்களின் தியாகங்களை ( பலிகளை) எடுத்துக் கொள்ளலாம். சில பழங்குடி மக்கள் ஒவ்வொரு வருடமும் சிறு குறிப்பிட்ட காலத்தை போர்க்கலாம் என அறிவித்து அருகிலுள்ள மற்ற குழுக்களுடன் போர் புரிந்தனர். இது ஒருவகைப் பலி. இன்னொருவகை என்பது கோவிலில் ஆடுகள் மாடுகள் எனப் பலியிடுவது. நரபலிகள், சிரச்சேதம் ஆகியவையும் இந்த வகையைச் சார்ந்ததே. (சிரச்சேதத்தின் முக்கிய விளைவு தண்டனை அளிப்பதல்ல, மாறாக சமூக ஒற்றுமையை உருவாக்குவது. ) இந்த அனைத்துவகை பலிகளின் அடிப்படைத் தன்மை என்பது மக்களிடம் ஒற்றுமை ஏற்படுத்துவதே. பலி என்பது தொடர்ந்து கொடுக்கப்படவேண்டும் அல்லது நினைவுகூரப் படவேண்டும். உதாரணமாக முருகனின் சூரன் போர் என்பது வருடா வருடம் நடத்தப் படுகிறது. இதன் ஆரம்பகாலத் தோற்றம் இந்தப் பலியை நினைவு கூர்ந்து மக்களிடம் ஒற்றுமையை உருவாக்குவதே. இந்தப் பலியின் அடுத்த முன்னேற்றம் என்பது கடவுளின் தோற்றம். ஒருவரை ஒருவர் நகலெடுப்பதற்கு பதிலாக ஒரு பொதுவான சிறந்த தியாகியைப் பார்த்து நகலெடுத்தால், ஒற்றுமை மேலும் கூடும். அதனால் அந்த தியாகியை புனிதமாக்கி கடவுளாக்கி அனைவரும் தியாகியை நகலெடுக்கின்றனர். இவ்வாறுதான் முருகன் கடவுளானார். அவர் நகலெடுப்பதற்கான முன்மாதிரி.

அனைத்து மதங்களையும் உற்று நோக்கினால், அதில் ஒரு நபர் மையப் புள்ளியாக இருப்பார். அவர்தான் அம்மக்களின் நகலெடுப்பதற்கான முன்மாதிரி. உதாரணம் கிருத்துவத்தில் ஏசுபிரான்தான் முன்மாதிரி. அவரைப் போன்று அவர் வழியில் எத்தனையோ பேர்கள் தியாகம் செய்திருக்கிறார்கள். “ஏசுவை நகலெடுத்தல் (Imitation of the Christ) என்ற ஒரு நூல் 1400 இல் எழுதப்பட்ட முக்கியமான நூல். இதை இந்தியாவின் விவேகானந்தர் தன்னுடன் எப்பொழுதுமே வைத்திருந்தார், அதை வங்கமொழியில் மொழிபெயர்த்திருக்கிறார். அதேபோல் இசுலாமிய மதத்தில் முகம்மது நபிகள் நகலெடுப்பதற்கான மையமாக இருக்கிறார். உலகிலேயே முகம்மது என்ற பெயர்தான் அதிகம் வைக்கப்பட்ட பெயர். இந்து மதத்திலும் கடவுளின் பெயரை வைப்பதை பார்க்கலாம். இதன் அடிப்படை நோக்கம் என்பது மையப்புள்ளியை நகலெடுப்பதே.

சமூகம் இவ்வாறு மையப்புள்ளியை நகலெடுப்பதால், மையப்புள்ளியின் அனைத்து பண்புகளையும் பெறுகிறது. ஒரு சமூக மக்கள் எவ்வாறு வாழவேண்டும், சமூகத்தின் ஒட்டுமொத்த குறிக்கோள் என்ன, சமூக ஒழுங்கு என்ன, போர் நெறிகள், அறம் என அனைத்தும் நகலெடுத்தல் மூலம் வந்து சேர்கிறது. அதற்கு உதவுவதற்கேற்ப புனித நூல்களும் பள்ளிகளும் கட்டமைக்கப் படுகிறது. ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்தத் தன்மையைத் தீர்மானிப்பது அதன் மையப்புள்ளிதான். தனிமனிதர்களும், தலைவர்களும் அம்மையப்புள்ளி செயல்படுத்தும் கருவிகளே.

ஈழத்தில் தலைவர் எவ்வாறு பெரும்படைகட்டி மாபெரும் சாதனைகள் படைத்தார் என்பதையும் நகலெடுத்தல் மூலம் விளக்கலாம். தலைவர் காலப்போக்கில் போராட்டத்தின் மையப்புள்ளி ஆனார். மாவீரர்களின் தியாகம் மக்களை ஒற்றுமைப் படுத்தியது. போராளிகள் தலைவரை நகலெடுத்தார்கள். அதனால் அனைவரும் அதே வீரத்துடன் ஒற்றுமையாக ஒரே குறிக்கோளை நோக்கி இறப்பிற்கு அஞ்சாமல் போர் புரிந்தார்கள்.

இந்த நகலெடுப்பு ஒரு சமூகத்தில் தளர்ந்தால் என்ன நடக்கும்? அப்பொழுதுதான் அது அழிய ஆரம்பிக்கிறது. சுபேங்கலர் (Spengler) என்ற அறிஞர் “மேற்குலகின் வீழ்ச்சி” என தத்துவப்படுத்தி ஒரு நூலை எழுதி இருக்கிறார். அவரின் தத்துவத்தை நகலெடுத்தலுடன் இணைத்துப் பார்ப்பது ஒரு நல்ல புரிதலை அளிக்கும்.

ஒரு பண்பாடு என்பது நேர்கோட்டில் வளர்ச்சியடைந்து செல்வதல்ல, மாறாக ஒரு விதையிலிருந்து ஆரம்பித்து மரமாக வளர்ந்தபின் அழிகிறது. ஒரு பண்பாடு விதையாக ஆரம்பிக்கும் பொழுது, அதன் புனிதம் உயிர்ப்புள்ளதாக இருக்கும், மக்களின் நகலெடுப்பு சிறப்பானதாக இருக்கும், அவர்கள் குறிக்கோள்களில் பற்றுள்ளவர்களாக இருப்பர். அந்த விதையிலிருந்து வளர்ந்து மாபெரும் ஆற்றலுடன் ஒரு நாகரீகமாக வளர்கினறனர். இந்த நாகரீகம்தான் அப்பண்பாட்டின் சிகரம். அதன் பின்னர் அந்நாகரீகம் சிறிது சிறிதாக சிதைவடைந்து அழிகிறது. ஏன் சிகரம் தொட்டபின் அழியவேண்டும் என்பது முக்கிய கேள்வி. அப்பொழுது என்ன நடக்கிறதென்றால், சமூகத்தில் பணம் முக்கியமானதாகிறது. ஒருவரை ஒருவர் நகலெடுக்க ஆரம்பிக்கிறார்கள், புனிதம் தனது இயக்க ஆற்றலை இழக்கிறது, புனிதம் வெறும் சடங்காக மாறுகிறது. சமூகம் தனக்கென்று அடையவேண்டிய புதிய குறிக்கோள்கள் இல்லாமல் இருக்கிறது. போட்டி, உட்பூசல் என சிதைய ஆரம்பிக்கிறது. இந்த சிதைவைத் தடுப்பதற்கு இரும்புக்கரம் கொண்ட அரசனை வைத்து சமூகத்தைக் கட்டிக்காக்க முயல்வர். இது தற்காலிகமாக சிதைவைத் தடுக்கும், ஆனால் மீண்டும் சிதைவு தொடரும். இதை உணர்ந்த சில ஞானிகள், மீண்டும் பழைய புனிதத்தை உயிர்ப்பிக்க முயலவர், ஆனால் மாறிய சூழ்நிலையில் அது பெரும் வெற்றியைத் தராது. அப்பண்பாடு மீண்டும் தழைக்கவேண்டுமானால், ஒரு புதிய புனிதத்துடன் விதைநிலையிலிருந்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். அடிப்படையில் சமூகம் புதிய புனிதத்துடன் பண்பாடு பரிணாமம் அடைகிறது. அது பின்பு புதிதாக வளர்ந்து சாதனைகள் படைக்கிறது.

குறிப்பு: ஒரு பண்பாட்டின் காலம் என்பது நூற்றாண்டுகளில் அளவிடப்படுவது, குறுகிய கால அளவில் அல்ல.

வரலாற்றில் பல நாகரீகங்கள் இவ்வாறு தோன்றி மறைந்திருக்கின்றன. பண்டைய ரோம நாகரீகத்தில், சீசர் தான் அவர்களின் சிகரம். அதன் பின்னர், அப்பண்பாடு வீழ்ச்சி அடைந்தது. அதன் புனிதம் தனது ஆற்றலை இழந்தது. கிறித்தவம் அவ்வெற்றிடத்தை நிரப்பி ஒரு புதிய பண்பாட்டு பரிணாமத்தை உருவாக்கியது.

சுபேங்கலர் தனது தத்துவத்தை வைத்து மேற்குலக நாகரீகம் தனது சிகரத்தை அடைந்து வீழ்ச்சி அடையும் என 100 ஆண்டுகளுக்கு முன்னர் கூறினார். இன்று நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்து மேற்குலக நாகரீகம் அழிந்துவிடுமோ பல அறிஞர்கள் என்ன செய்வதென்று ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். சுபேங்கலர் மேற்குலக அறிஞர்களிடம் பேசுபொருளாக இருக்கிறார். இன்று மேற்குலகின் புனிதங்கள் அதன் ஆற்றலை இழந்து, வெறும் சடங்குகளாக நிற்கிறது.

ஏன் அழிவைத் தடுப்பது கடினம் என்பதற்கு இரு முக்கிய காரணங்கள் உள்ளன:

புதிய உயிர்ப்புள்ள புனிதத்தை திட்டமிட்டு உருவாக்க முடியாது. எந்த சட்டங்களோ, பரப்புரையோ இதை சாதிக்க முடியாது.

இறந்துபோன அல்லது ஆற்றல் இழந்த புனிதத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது. காலத்தைப் பின்னோக்கி நகர்த்த முடியாது.

இனி இத்தத்துவங்களைக் கொண்டு 2500 ஆண்டுகால நமது வரலாற்றை ஆராய்வோம். இங்குதான் Chat-Gpt பயன் அளிக்கிறது. அது உருவாக்கிய அட்டவணையைப் பார்க்கவும். இதை சுருக்கமாக பின்வருமாறு கூறலாம்.

  1. கி.மு.300 – கி.பி. 300 : சங்ககாலம்

புனிதம் : வீரவழிபாடும் அதனை ஒட்டிய மானம், வீரம், காதல், அறம் ஆகியன.

நகலெடுத்தல்: புலவர்கள் பாடிப் பரப்பினார்கள், அவர்களுக்கு மன்னர்கள் ஆதரவு அளித்தார்கள். நடுகல் வழிபாடுகளும் சடங்குகளும் நகலெடுத்தலில் முக்கிய பங்கு வகித்தன.

  1. கி.பி. 300 – 800: கோவில் வழிபாடு + ஆரம்ப பக்தி ஓட்டங்கள்

புனிதம்: தெய்வ வழிபாடு,ம் அதைச் சுற்றிய பக்தியும். இங்கு பக்தி என்பது கடவுளின் மீதான அன்பு, நேரடியாகத் தொடர்பு கொள்ளல், பாடல்கள், அறம் சார்ந்த சிந்தனைகளை ஆகியவற்றை குறிக்கும்.

நகலெடுத்தல்: கோவில்கள், புனிதப் பயணங்கள், பாடல்கள், சடங்குகள்

  1. கி.பி. 800 – 1300: பக்தி ஒருங்கிணைப்பு + பேரரசு கோவில் நாகரீகம் ( பல்லவர் / சோழர் )

புனிதம்: பெருங்கடவுள் வழிபாடு ( சிவன், விஷ்ணு .. ) + அரச கடமை

நகலெடுத்தல்: கோவில்கள், திருவிழாக்கள், மடங்கள், சித்தாந்த கல்வி, கலைகள். மக்களிடம் நகலெடுத்தல் என்பது கற்பிக்கப்பட்டு வருவதல்ல. கோவிலுக்கு செல்லுதல், திருவிழாக்களில் பங்குபெற்ற ஆகியவற்றில் பங்குபெறுவதன் மூலம் உடலால் நகலெடுக்கப்படுகிறது.

தமிழர் பண்பாட்டின் சிகரம் என்பது சோழர் காலத்தில் உயர் நாகரீகமாகத் தோன்றி கடல்கடந்து ஆண்டது. பலர் இந்த சாதனையை முழுதுமாக சோழர்களுக்கு அளிக்கின்றனர். இது இங்கு எடுத்துக் கொண்ட தத்துவங்களின் அடிப்படையில் தவறான பார்வை. அவர்களை எது சாதிக்க வைத்தது என்பதற்கான காரணம் என்பது அன்றைய புனிதம்தான். இது இன்றைய சோழ நாட்டைப் பார்த்தாலே தெரியும். ஏன் இவ்வளவு கோவில்களை கட்டினார்கள்? ஏனென்றால் அவர்களை சாதிக்க வைத்தது அந்தப் புனிதம்தான்.

தமிழர் நாகரீகம் உச்சியைத் தொட்ட பின்னர் தொடர்ந்து இறங்கு முகத்தையே சந்தித்து வருகிறது. புனிதம் தனது ஆற்றலை இழந்து விட்டது. அதை மீண்டும் புதுப்பிக்க பல்வேறு ஞானிகள் பக்தி இயக்கங்களைத் தோற்றுவித்து முயன்றனர், ஆனாலும் இறங்குமுகம் தொடர்கிறது.

கி.பி. 1750 – 1947 : ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் புனிதத்தின் வீச்சு மேலும் சுருங்கியது. பணமும், அரசு பதவிகளும், ஆங்கில மோகமும் ஆரம்பித்தன. நகலெடுத்தல் என்பது வெறும் சடங்குகள், பாரம்பரியம் என சுருங்கியது.

கி.பி.1920-1990: தமிழக அரசியல்:

புனிதம்: பழைய புனிதம் சாதிக் கட்டமைப்புகளை உருவாக்கி அநீதிகளை உருவாக்கியதால், அவை அடித்து நொறுக்கப்பட்டன. அவற்றிற்கு பதிலாக தமிழ் மொழி, திருவள்ளுவர், சமூகநீதி, சுயமரியாதை ஆகியவை புனிதமாகியது.

நகலெடுத்தல்: தமிழ்வழிக் கல்வி, அரசியல் மாநாடுகள், மக்கள்நலச் செயல்பாடுகள், திரைப்படங்கள் ஆகியவை இந்த புதிய புனிதத்தை பரப்புவதில் முதன்மையாக நின்றன.

கி.பி.1990- தற்போது: தமிழக அரசியல்:

புனிதம்: பணம், பதவி, சமூக அந்தஸ்து, சினிமா நாயக வழிபாடு, ஆங்கிலம் ஆகியவை புனிதங்கள் ஆகின. “காசே கடவுளாப்பா” என்பதுதான் இன்றைய புனிதம். அடிப்படையில் இங்கே புனிதம் என்பது செத்துவிட்டது. மக்கள் ஒருவரை ஒருவர் பார்த்து நகலெடுக்கிறார்கள்.

நகலெடுத்தல்: தொலைக்காட்சி, திரைப்படங்கள், சமூக வலைதளங்கள், ஆங்கிலவழிப் பள்ளிகள்.

இன்று தமிழர் நாகரீகம் என்பது அழிவின் விளிம்பில் நிற்கிறது. தமிழர் என்ற அடையாளம் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு நகலெடுத்தல் மூலம் கடத்தப்படுகிறது. இன்றைய புனிதத்தில் தமிழர் அடையாளம் எதுவுமில்லை, அதனால் அவை எதுவும் வலிந்து நகலெடுக்கப்படாது. ஏரணப்படி (pure logic ) பெரும்பாலான தமிழர் அடையாளம் சில தலைமுறைகளில் இல்லமால் போகும். அந்நியர் குடியேற்றம் அரசியல் அதிகாரத்தை மேலும் குறைத்து அழிவை வேகப்படுத்தும். போட்டி பொறாமை உட்பூசலால் மேலும் சிதைவுகள் ஏற்படும். இன்றைய நிலையில், இருப்பதைத் தக்கவைப்பது கூட கடினமானது. சிலர் நினைக்கிறார்கள் ஒரு பலமான தலைமையின் மூலம் அனைத்தையும் மீட்டு விடலாம் என்று. ஆனால் நாம் இங்கு விவாதித்த தத்துவப்படி இது ஒரு தற்காலிகத் தீர்வாகவே அமையும். சிதைவைத் தடுத்து நிறுத்த முடியாது. நான் தலைமை கூடாது என்று கூறவில்லை. எது நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்ற நோக்கில்தான் நான் பார்க்கிறேன்.

தமிழர் நாகரீகம் என்பது சோழர்கள் காலத்தில் உச்சியைக் கண்டபின்னர் கடந்த 800 ஆண்டுகளாக வலுவிழந்து சிதைந்து கொண்டு வருகிறது. இதை அந்நியர் படையெடுப்பு என்று சுருக்கிவிட முடியாது. நமக்குள் ஒரு அடிப்படை பலவீனம் தோன்றி இருக்கிறது, அதுதான் நம்மை கீழே இழுத்துக் கொண்டு வருகிறது. அந்த பலவீனம் என்ன என்பதைத் தான் இக்கட்டுரையில் பார்த்தோம் இதற்கு தீர்வுதான் என்ன? தீர்வு என்பது ஏற்கனவே விவாதித்ததுதான்: அது புதிய புனிதமும் அது சார்ந்த பண்பாட்டு பரிணாமும்.

தரவுகள்:

Palaver, Wolfgang. René Girard’s mimetic theory. MSU Press, 2013.

Spengler, The Decine of the West

Eliade, Mircea. The sacred and the profane: The nature of religion. Vol. 81. Houghton Mifflin Harcourt, 1959.

Rappaport, Roy A. Ritual and Religion in the Making of Humanity. Vol. 110. Cambridge University Press, 1999.

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a comment