சுயநல மரபணுக்கள் மிகவும் சுயநலமானவை. அதன் வீச்சு குறுகிய சுற்றத்தைத் தாண்டுவதில்லை. ஆனாலும் நாம் நாட்டுக்காகப் போராடி உயிர் துறக்கிறோம், எளியவர்களுக்கு உதவுகிறோம், சிலர் தங்களது உயிர் போனாலும் மற்றவர்கள் உயிரைக் காக்கிறார்கள், இன்னும் சிலர் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் பொதுநலத்துக்காக உழைக்கிறார்கள். இன்றைய நவீன உலகம் மனிதர்களிடையே ஒத்துழைப்பு இல்லாமல் நடக்கவில்லை. நாம் சுயநலம் மிகுந்தவர்கள்தான், ஆனாலும் ஒத்துழைப்பவர்கள். இந்து ஒத்துழைப்பு என்பது அடிப்படையில் ஒரு சமூகத்தில் உள்ள மீம்களின் வழியாக வருகிறது. ஒரு சமூகத்தில் உள்ள மொத்த மீம்களின் தொகுப்பை பண்பாடு எனலாம்.
மனிதனின் பண்புகள் என்பது சுயநலம், குழு பொது நலம் என இரண்டையும் உள்ளடக்கியது. நாம் 90% சுயநலத்துடனும் 10% பொதுநலத்துடன் செயல்படும் தன்மையுடன் நமது உளவியல் பரிணாமத்தால் கட்டியமைக்கப்பட்டுள்ளது என்கிறார் சானதன் ஐட்டு. ஆனாலும் இந்த 10% சதவீத பொதுநலம் சுயநல மரபணுக்களை போல தானாக மனிதனை இயக்குவதில்லை. ஒரு பண்பாடு அவன் மீது தாக்கம் செலுத்திதான் பொதுநலத்தை அவனிடம் உருவாக்க முடியும். அதில் முக்கியமான ஒன்றுதான் வீரநாயகன் சார்ந்த புனிதம்.
தலைவர் மாவீரர்களின் புனிதத்தை அடிப்படையாக வைத்து ஒரு ஒற்றுமையான படையை மக்களை உருவாக்கினார். அப்படி இருந்தும் துரோகங்களை தடுக்க முடியவில்லை. ஏனெனில் சுயநல மரபணுக்கள் சக்தி வாய்ந்தவை. அந்த சுயநலத்தைக் கட்டுப்படுத்த மேலும் சில செயல்பாடுகள் தேவைப்படுகிறது. அவை என்ன என்று இனி ஆட்டகோட்பாடுகள் மூலம் பார்ப்போம்.
இங்கு சிறிது கணிதம் தேவைப்படுகிறது. கணிதம் என்றதும் பயப்பட வேண்டாம்; பத்துவரை கூட்டத் தெரிந்தால் போதுமானது. இயற்கையின் விதிகள் கணிதம் என்கிற மொழியில் எழுதப்பட்டிருக்கிறது என்றார் கலிலியோ. இன்று நாம் காணும் அறிவியல் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக இருந்துவந்திருப்பது கணிதம். வெகுகாலமாக உயிர்கள் எவ்வாறு உத்திகளை தேர்ந்தெடுக்கின்றன, ஒத்துழைப்புகள் எவ்வாறு நடக்கின்றன என்பதற்கான கணிதம் இல்லாமல் இருந்தது. அதனாலேயே அத்துறையில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. கணிதமேதை வான் நாய்மான் ( Von Neumann) கண்டுபிடித்த ஆட்டக்கோட்பாடு (Game Theory) என்ற கணிதம் பொருளாதாரத்தில் எதுபோன்ற உத்திகள் அதிக லாபம் தரும் என்பதை அறிய பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தக் கணிதத்தை மேனாடு சுமித்து (Maynard Smith ) என்பவர் 1970-இல் பரிணாம உயிரியலில் கொண்டுவந்து பெரும் புரட்சியை ஏற்படுத்தினார். இதனைக் கொண்டு உயிர்கள் தங்கள் மரபணுக்களை பரப்பும் உத்திகளை துல்லியமாக கணக்கிட்டார். இந்த ஆட்டக்கோட்பாடுகள் பரிணாமத்தில் நுழைந்த பின்புதான் ஒத்துழைப்பு பற்றிய ஆராய்ச்சிகள் ஒரு தெளிவான பாதையில் செல்ல ஆரம்பித்திருக்கிறது. ஒரு எளிமையான கணிதம் எவ்வளவு தூரம் நமது புரிதலைக் கூட்டுகிறது என்பதற்கு “கைதிகளின் சிக்கல்” (Prisoner’s Dilemma) என்ற ஆட்டம் நல்ல உதாரணம். இந்த ஆட்டத்தைக் கொண்டு பரிணாமத்தில் முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிலிருந்து இன்று மனித சமூகம் வரை ஒத்துழைப்பை ஆராயமுடிகிறது என்பது பெரு வியப்பு. இந்த ஒரு ஆட்டத்தைக் கொண்டு மட்டும் ஆயிரக்கணக்காக ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன, இன்றும் இதைப்பற்றி ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. மனித ஒத்துழைப்பைப் புரிந்துகொள்வதற்கு இது அடிப்படையானது என்பதால், இதை நாம் அறிந்துதான் ஆகவேண்டும்.

நீங்களும் நானும் இந்த ஆட்டத்தை விளையாடுகிறோம் (படத்தைக் காண்க). நமக்கு இரண்டு உத்திகள் உள்ளன. ஒன்று ஒத்துழைப்பு, இன்னொன்று ஒத்துழைக்காமல் பின்வாங்குதல். கட்டத்தில் உள்ள எண்கள் உங்களின் இலாபத்தைக் குறிக்கிறது (ரூபாய் ஆயிரங்களில் என்று வைத்துக்கொள்ளுங்கள்) . நான் ஒத்துழைக்கிறேன் என்ற உத்தியை எடுத்தால், நீங்கள் எந்த உத்தியை எடுப்பீர்கள்? நீங்கள் ஒத்துழைத்தால், உங்களின் இலாபம் இரண்டாயிரம். நீங்கள் பின்வாங்கினால், உங்களின் இலாபம் மூவாயிரம். நீங்கள் ஒத்துழைக்காமல் பின்வாங்கினால்தான் உங்களுக்கு இலாபம் அதிகம். இப்பொழுது நான் ஒத்துழைக்காமல் பின்வாங்குகிறேன் என்றால், நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? நீங்கள் ஒத்துழைத்தால் உங்களுக்கு ஆயிரம் நட்டம், மாறாக நீங்கள் பின்வாங்கினால் உங்களுக்கு பூச்சியம். அடிப்படையில் நீங்கள் பின்வாங்குவதுதான் சிறந்த உத்தி. முடிவில் நான் என்ன செய்தாலும், நீங்கள் ஒத்துழைக்காமல் இருப்பதுதான் உங்களுக்கு இலாபம். உங்களைப்போல் சிந்தித்து நானும் ஒத்துழைக்க மாட்டேன். முடிவில் நாம் இருவரும் ஒத்துழைக்காமல், நமது இலாபம் பூச்சியமாக இருக்கும். இதுதான் அடிப்படைச் சிக்கலே. நாம் பகுத்தறிவாக சிந்தித்து எடுக்கும் முடிவு நம்மை ஒத்துழைக்காமல் செய்துவிடுகிறது. நாம் இருவரும் அதிகம் சிந்திக்காமல் ஒத்துழைத்தால் நாம் இருவருக்குமே இரண்டாயிரம் ரூபாய் இலாபமாகக் கிடைக்கும். இதுதான் பரிணாமம் அன்றிலிருந்து இன்று மனித சமூகம் வரை காணும் சிக்கல். உயிரியல் பரிணாமத்தில் ஒத்துழைப்பு என்பது இந்த சிக்கலைத் தீர்ப்பதின் மூலமே ஏற்படுகிறது. சுருக்கமாக சொல்லப்போனால் நமது தமிழ்ச்சமூகம் எதிர்நோக்கும் சிக்கலும் இதுதான். உதாரணமாக பலர் மக்கள் நலனுக்காக தங்கள் நேரத்தையும் பணத்தையும் செலவழித்துப் போராடுகிறார்கள், சிறை செல்கிறார்கள். ஆனால் பெரும்பான்மையான மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதில்லை, குறைந்த பட்சம் பண உதவிகூட செய்வதில்லை. போராட்டம் வெற்றி பெற்றால் அனைவருக்கும் இலாபம். தோல்வியடைந்தால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு மட்டும் நட்டம். போராட்டம் வெற்றியடைந்தாலும் சரி, தோல்வியடைந்தாலும் சரி, போராட்டாத்தில் கலந்துகொள்ளாமல் இருப்பதுதான் இலாபம். முடிவில் போராட்டம் தோல்வியடைந்து, போராட்டம் செய்பவர்களுக்கு பிழைக்கத் தெரியாதவர்கள் என்ற “நல்ல பெயர்” கிடைக்கிறது.
நாம் சமூகத்தில் ஒத்துழைப்பை ஏற்படுத்தி சிக்களைத் தீர்க்கமுடியாமல் போவதற்கு இந்த ஒரு ஆட்டம் மிக முக்கியமானது. இதைத் தீர்த்துவிட்டால், நாம் அனைத்தையும் தீர்த்துவிடலாம். ஆச்சரியமான விடயம் என்னவென்றால் இவ்வாட்டத்தை சிந்திக்கவே தெரியாத உயிர்கள் எப்பொழுதோ தீர்ந்துவிட்டன. இப்பொழுதுதான் ஆட்டக்கோட்பாட்டின் மூலம் அந்த ஒத்துழைப்பு எவ்வாறு ஏற்படுகிறது என்பதைப் பற்றியத் தெளிவு கிடைக்க ஆரம்பித்திருக்கிறது.
நாம் பார்த்த ஆட்டம் ஒரே ஒருமுறை விளையாடப் படுகிறதென்றால், ஒத்துழைப்பின்மைதான் வெல்லும் உத்தி. அதிலிருந்து விடுபட முடியாது. ஆனால் சமூகத்தில் மனிதர்கள் மற்றவர்களை நம்பியே இருக்கிறார்கள். பெரும்பாலான ஆட்டங்கள் ஒருமுறையுடன் முடிவதல்ல, மீண்டும் மீண்டும் ஆடித்தான் ஆகவேண்டும். அதே ஆட்டத்தை தொடர்ந்து மீண்டும் மீண்டும் விளையாடினால், எந்த உத்தி வெல்லும்? இதைக்கண்டறிய அக்சல்ராடு (Axelrod) என்பவர் பல உத்திகளை ஒன்றுடன் ஒன்று பலமுறை கணினி நிரல்களைக் கொண்டு மோதவிட்டார். முடிவில் அவர் கண்டறிந்தது என்னவென்றால் பதிலுக்குப் பதில் (Tit for Tat) என்ற உத்திதான் வென்றது. அடிப்படையில் பதிலுக்குப் பதில் என்பது:
- நீ ஒத்துழைத்தால் நான் ஒத்துழைப்பேன்
- நீ ஒத்துழைக்காவிட்டால், நான் ஒத்துழைக்கமாட்டேன்
ஒரு சமூகம் ஒத்துழைக்காமல் இருக்கும்பொழுது, பதிலுக்குப் பதில்தான் வெற்றி பெரும் உத்தி. ஒத்துழைப்பவர்கள் தங்களுக்குள் ஒத்துழைத்து நலனைப் பெருக்கிக்கொள்வார்கள். ஒத்துழைக்காதவர்களுடன் ஒத்துழைக்க மாட்டார்கள். ஒத்துழைக்காதவர்கள் அடிப்படையில் மற்றவர்கள் உழைப்பில் சுகபோகம் காண்பவர்கள். அவர்களுடன் ஒத்துழைக்காமல், ஒத்துழைப்போருடன் ஒத்துழைப்பதுதான் வெல்லும் உத்தி. அதற்காக உண்மையிலே இயலாதவர்களை ஒதுக்குவதல்ல. இயலாதவர்களுக்கு உதவி செய்து, அவர்களையும் இணைத்து ஒத்துழைத்து முன்னேறுவதுதான் இந்த உத்தி. அவர்களை இணைப்பதுதான் எளிதானது.
பதிலுக்கு பதில்தான் அதிகப்பலன் தரும் உத்தி என்பதால், மக்கள் இந்த உத்திக்குத் தாவ ஆரம்பிப்பார்கள். ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், பெரும்பாலானோர் இந்த உத்திக்குத் தாவியபின், இதைவிட சிறந்த வேறொரு உத்தி உருவாகிறது. அது என்னவென்றால்: “பெருந்தன்மையான பதிலுக்குப் பதில்”:
- நான் ஒத்துழைப்பில் ஆரம்பிப்பேன்
- நீ ஒத்துழைத்தால், நான் ஒத்துழைப்பேன்
- நீ ஒத்துழைக்காவிட்டால், நான் சிலநேரம் மன்னித்து மறு வாய்ப்பளிப்பேன். மீண்டும் ஒத்துழைக்காவிட்டால், நான் ஒத்துழைக்கமாட்டேன்.
இவ்வாறு மன்னிக்கும் குணம் கொண்டோர் இந்த உத்தியினால் அதிகப்பலன் பெற்று வெற்றியடைகின்றனர். இது வெற்றியடையும் உத்தி என்பதால், அனைவரும் இந்த உத்திக்குத் தாவ ஆரம்பிக்கின்றனர். முடிவில் இந்த உத்தியும் நிலையில்லாமல் இதைவிட சிறந்த இன்னொரு உத்தி தோன்றுகிறது: அது “எப்பொழுதும் ஒத்துழைப்பது”. அனைவருக்கும் மன்னிக்கும் குணம் உள்ளதால், எப்பொழுதும் ஒத்துழைப்பதுதான் அதிக இலாபம் தருவது. அதனால் இப்பொழுது எல்லோரும் முழு ஒத்துழைப்புக்கு மாறுகிறார்கள். முடிவில் இதுவும் ஒரு நிலையற்ற தன்மையை அடைகிறது. அனைவரும் ஒத்துழைக்கும்பொழுது, அவர்களுடன் ஒத்துழைக்காமல் ஏமாற்றுபவர்கள் அதிகப்பலன் பெற ஆரம்பிக்கிறார்கள். இதைக்கண்டு மற்றவர்களும் ஒத்துழைக்காமல் ஏமாற்ற ஆரம்பிக்கிறார்கள். முடிவில் அனைவரும் மீண்டும் ஒத்துழைப்பற்ற நிலைக்கு வந்தடைகிறார்கள். இதுதான் சமூகங்களில் அன்றிலிருந்து இன்றுவரை நடக்கும் வரலாறு (பார்க்க படம்).

முழு ஒத்துழைப்போ அல்லது ஒத்துழைப்பற்ற சமூகமோ நிரந்தரமல்ல. புத்திசாலியான சமூகம் ஒத்துழைப்பற்ற நிலையிலிருந்து சுதாரித்து சட்டென்று ஒத்துழைப்பிற்கு மாறும். அவ்வாறு மாறாத சமூகங்கள் அழிந்துவிடும்.
இந்த விளையாட்டு பலமுறை நமது பரிணாம வரலாற்றில் நடந்துள்ளதால், இந்த உத்திகள் உளவியல் மூலம் நமது உணர்வுகளையே மாற்றியுள்ளன. நமக்கு பதிலுக்குப் பதில் என்ற பலி வாங்கல், கைம்மாறு செய்தல், மன்னித்தல் ஆகிய நற்பண்புகள் இயற்கையில் வருகின்றன. அதுபோக பண்பாட்டிலும் வலியுறுத்தப்படுகிறது. இது எதோ புது உத்தி அல்ல. இன்றைய ஆட்டக்கோட்பாடுகள் ஏன் இவை வெல்லும் உத்திகள் என்று நமக்குத் தெளிவுபடுத்துகின்றன.
இன்று தமிழ்ச்சமூகம் ஒத்துழைப்பின்மையால் பல சிக்கல்களைத் தீர்க்க முடிவதில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் ஒத்துழைப்பின்மை அதிகப்பலன் தரும் உத்தியாக இருப்பதால்தான். இன்று ஒத்துழைக்கும் மக்கள் மீது ஏறிநின்று கொழுக்கும் ஓசிச்சோறு (free-loaders) ஆட்களுக்கு பதிலடி கொடுக்காமல் முன்னேற்றம் ஏற்படாது. அதுதான் பரிணாமத்தில் அன்றிலிருந்து இன்றுவரை நடப்பது.
இதிலிருந்து மீள பதிலுக்குப் பதில்தான் சிறந்த உத்தி. அதை எவ்வாறு நடைமுறைப் படுத்துவது? ஒரு உதாரணம்: ஒவ்வொரு ஊரிலும் ஒத்துழைக்கும் எண்ணம் உள்ள மக்களாக இணைந்து குழுக்களை உருவாக்கவேண்டும். இதை புலிபண்பாட்டின் அடிப்படையிலான சமூகம் என எடுத்துக்கொள்வோம். அவர்களுக்குள் ஒத்துழைப்பை அதிகப்படுத்தி அதிகப்பயன் தருவதாக குழுவை மாற்றவேண்டும். ஒத்துழைக்காதவர்களுடன் ஒத்துழைக்கக் கூடாது. இவ்வாறான குழுக்கள் அதிகப் பயன்பெற்று முன்னேறுவதைப் பார்த்து மற்றவர்களும் இணைய விரும்புவார்கள். முடிவில் முழுச்சமூகத்தையும் விழுங்கி ஒற்றுமையுள்ளவர்களாக மாற்றிவிடலாம். இது அவ்வளவு எளிதா என்று கேட்கலாம். உண்மையில் இதுதான் எளிதானது. அரசு சட்டங்களை இயற்றித் தவறுகளைத் தான் தடுக்க முடியும், ஒத்துழைப்பை சட்டங்கள் மூலம் பெருக்க முடியாது. அதுவும் ஒழுங்காகச் செய்யமுடியாது. இலஞ்சம் ஒழிக்க சட்டங்கள் வந்து இலஞ்சம் ஒழிந்ததா? கீழிருந்து மக்களால்தான் செய்ய முடியும். இலஞ்சம் வாங்குபவர்களை இகழ்ந்து மக்கள் புறக்கணித்தால், எல்லாம் மாறிவிடும். மேலும் தவறு செய்வதற்கு அரசுகள் தண்டை வழங்கலாம். நல்லது செய்யாமல் இருப்பதற்கு தண்டனை வழங்க முடியாது. நல்லதை மக்கள் வலிந்துதான் செய்யவேண்டும். இது ஒருநாளில் நடைபெறுவதல்ல. மெதுவாக ஆரம்பித்து, ஒவ்வொரு படியிலும் நமது செயல்கள் நமக்கு இலாபம் அளிப்பதாக இருக்கும்பொழுதுதான் வெற்றியடைவோம்.
போரற்ற சூழலில் மக்களை தியாகம் செய்யச்சொல்லி முன்னேற்றம் ஏற்படாது. பெரும்பாலானோர் வலிந்து தியாகம் செய்யமாட்டார்கள். அவர்களுக்குப் பலன் இருக்கும்படி செய்யும்பொழுதே ஒத்துழைப்பு ஏற்படும். மனிதனின் பரிணாம வளர்ச்சியில் சுயநலமே முக்கியமான பங்கு வகிக்கிறது. அவர்களின் சுயநலம் மூலமே பொதுநலத்தை, ஒத்துழைப்பை வளர்க்கமுடியும். மதங்கள் இந்த உத்தியைப் பயன்படுத்தியே பரவுகின்றன. உதாரணமாக அன்று அழிந்துகொண்டிருந்து ரோமாபுரி பேரரசில், கிறித்தவம் இவ்வாறு ஒத்துழைப்பான குழுக்களை உருவாக்கி பின்பு முழு ரோமப்பேரரசையும் விழுகியது என்கிறார் ரோட்னி சுடார்க்ஸ். மதங்கள் பகுத்தறிவற்ற கருத்துக்களைப் பரப்பலாம், ஆனால் காரியத்தில் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
நமது சமூகத்தில் புலிப்பண்பாட்டை நிலைநிறுத்த வேண்டுமென்றால், இதுபோன்ற உத்திகளைப் பயன்படுத்தியே சாதிக்கமுடியும். முதலில் ஒவ்வொரு ஊரிலும் சிறுசிறு அதி ஒத்துழைப்பான குழுக்களை உருவாக்கவேண்டும்.பின்பு மெதுவாக அனைவரையும் உள்ளிழுத்து முழு சமூகத்தையும் ஒத்துழைப்பான சமூகமாக மாற்றவேண்டும்.
அடிப்படையில் சமூக ஒத்துழைப்பை உருவாக்க இரண்டு வழிகளைப் பின்பற்ற வேண்டும்.
- தலைவரைப் புனிதமாகக் கொண்ட சமூகம். இதுதான் அனைத்திற்கும் அடித்தளம். அனைவரும் பொதுவான புனிதம் என்பது ஒத்துழைப்பிற்கான, தியாகத்திற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கிறது.
- ஆட்டக்கோட்பாடுகளின் அடிப்படையிலான உத்திகள் ஒத்துழைப்பைப் பெருக்கி, அனைவரையும் உள்ளிழுத்து வளர்கிறது. இது சுயநல மரபணுக்களை கட்டுப்படுத்தி ஒத்துழைப்பைப் பெருக்குகிறது.
இதை ஈழப்போர் வரலாற்றிலும் காணலாம். மாவீரர்களின் தியாகம்தான் புலிப்படையை ஒன்றிணைக்கும் அடிப்படைப் புனிதம். இதன்மேல் சுயநல மரபணுக்களைக் கட்டுப்படுத்தும் உத்திகள் பயன்படுத்தப்பட்டன. உதாரணமாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வீட்ட்டுக்கு குறைந்தது ஒருவர் படையில் இருந்தனர். யாரும் ஏமாற்ற முடியாது. தலைவரே தனது குழந்தைகளை போரில் இறக்கி முன்னுதாரணமாக இருந்தார். அவர் நினைத்திருந்தால் தனது பிள்ளைகளை வெளிநாட்டில் பத்திரமாக வைத்திருக்க முடியும். ஆனால் அதன் விளைவு மோசமானதாக இருந்திருக்கும். இது அவர் சுயநலம் கொண்டவர் போல மற்றவர் பார்வையில் நிற்கவைக்கும், பின்பு அனைவருக்கும் சுயநலம் பிடிக்கும், ஒத்துழைப்பு சீர்கேடும். அதனால்தான் இறுதிவரை தனது பிள்ளைகள் அனைவரையும் களத்தில் வைத்து பலிகொடுத்தார். உங்கள் பிள்ளைகளுக்கு என்ன கதியோ, அதுதான் எனது பிள்ளைகளுக்கும். இதுதான் சுயநல மரபணுக்களைக் கட்டுப்படுத்தி ஒத்துழைப்பைப் பெருக்குவதற்கான வழி. யாரும் யாரையும் ஏமாற்றக் கூடாது. ஏமாற்றினால் கடும் தண்டனை.
சொல்லப்போனால் மதங்களும் இதே உத்திகளையே பின்பற்றுகின்றன. ஒரு புனிதத்தின் அடிப்படையிலான சமூகத்தை உருவாக்கி அதன் மீது சுயநலத்தைக் கட்டுப்படுத்தி ஒத்துழைப்பைப் பெருக்குகிறது.
தரவுகள்:
Dawkins, The Selfish Genes
Starks, The Triumph of Christianity: How the Jesus Movement Became the World’s Largest Religion
Axelrod, The Evolution of Cooperation
Novak, Super Cooperators
Haidt, The Righteous mind