மரபணுக்களும் மீம்களும் ஒற்றுமையும்

தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை என்பது காலம் காலமாக கூறப்பட்டு வரும் ஒரு குற்றச்சாட்டு. பகுத்தறிவில்லாத எறும்புகள் ஒற்றுமையாக இருக்கின்றன, தேனீக்கள் இருக்கின்றன, ஆனால் சிந்திக்கும் நம்மால் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை. இது ஏன் என்பதற்கு ஒரு தெளிவான விளக்கம் தேவை.

ஒத்துழைப்பு எவ்வாறு ஏற்படுகிறது என்பதை அறிய ஒரு பாடப்பிரிவு உண்டு என்றால் அது பரிணாம தத்துவம்தான். மனிதனைத் தவிர்த்து, இவ்வுலகிலுள்ள அணைத்து உயிர்களுக்கும் உள்ள ஒரே குறிக்கோள் என்னவென்றால் அது இனவிருத்தி. அதன் வாழ்வு முழுவதும் இனவிருத்தியை மையமாக வைத்தே சுழல்கிறது. அது அவ்வாறு சிந்தித்து செயல்படுவதல்ல. அது ஒரு தானியங்கி இயந்திரம் போல மரபணுக்களால் செயல்படுத்தப் படுகிறது. சுருக்கமாகச் சொல்லப்போனால் மரபுணுக்கள் தங்களை இனவிருத்தி செய்துகொள்ள உருவாக்கப்பட்ட இயந்திரம்தான் உயிர். இதைத்தான் ரிச்சர்டு டாக்கின்சு சுயநல மரபணுக்கள் (selfish genes) என்கிறார். எந்த உயிர்கள் இனவிருத்தி செய்கின்றனவோ அவை வாழ்கின்றன, மற்றவை அழிகின்றன. பலமானது வெல்லும் என்பது டார்வினின் கோட்பாட்டை தவறாக புரிந்து கொள்ளல். இதுதான் உயிரியல் பரிணாமத்தின் அடிப்படைத் தத்துவம்.

இனி ஏன் தேனீக்கள் ஒற்றுமையாக இருக்கின்றன என்று பார்ப்போம். ஒரு தேன்கூட்டில் ராணி மட்டுமே இனவிருத்தி செய்யும். மற்ற ஈக்கள் எல்லாம் ராணியின் குழந்தைகள், அவை எதுவும் இனவிருத்தி செய்யமுடியாது, அதன் உடலமைப்பு அவ்வாறு. சிலநேரம் ராணி இன்னொரு ராணி ஈயைப் பெத்துப்போடும், அது வேறொரு தனி தேன்கூட்டை உருவாக்கும். பிள்ளை ஈக்களின் வேலை எல்லாம், தேன் சேகரிப்பது, தேன்கூட்டை பராமரிப்பது, காப்பது போன்றவை. மொத்தத்தில் ராணியின் வேலை பெத்துப்போடுவது மட்டுமே. குழந்தைகள்தான் எல்லா வேலையும் செய்கின்றன, தங்கள் உயிரைக் கொடுத்து ராணியைக் காக்கின்றன. அதற்கு தமிழ்ப் பேசத்தெரிந்தால் “பிள்ளை மனம் பித்து, பெத்த மனம் கல்லு” என்று சொல்லும். ஏன் பிள்ளைகள் இவ்வாறு உழைக்கவேண்டும்? இங்குதான் பரிணாமத் தத்துவத்தின் மகிமையைப் பார்க்கவேண்டும். பிள்ளைகள் தாமாக இனவிருத்தி செய்ய முடியாவிட்டாலும் அவை ராணியின் மரபணுக்களைத்தான் கொண்டுள்ளன. அதனால் பிள்ளைகள் தங்கள் மரபணுக்களை பரப்ப இருக்கும் ஒரே வழி ராணியை அதிக பிள்ளைகள் பெத்துப்போட வைப்பதே.. இதைத்தான் மற்ற ஈக்கள் எல்லாம் செய்கின்றன. அவ்வாறுதான் சுயநல மரபணுக்கள் அவற்றை வடிவமைத்திருக்கின்றன.

அனைத்து உயிர்களின் வேலையும் இவ்வாறு அதன் மரபணுக்களைப் பரப்புவதே. தேனீக்கள் அந்த குறிக்கோளை இவ்வாறு செய்து முடிக்கிறது. இந்த தத்துவத்தின் அடிப்படையில் மனிதனைத் தவிர்த்து அனைத்து உயிர்களின் செயல்பாடுகளையும் விளக்கிவிட முடியும். சில உயிர்கள் முட்டை போட்டு அடைகாத்து பராமரிக்கிறது, சில முட்டை போட்டுவிட்டு ஓடிவிடுகிறது, சில இன்னொரு பறவையின் கூட்டில் போய் முட்டை இடுகிறது, சில உயிர்கள் ஒற்றுமையாக கூடு கட்டி வாழ்கின்றன, சில தனித்து வாழ்கின்றன. இவ்வாறு பல வேறுபாடுகளுடன் உயிர்கள் இருந்தாலும், அவை அனைத்தையும் இயக்குவது “சுயநல மரபணு” தத்துவம்தான்.

இனி மனிதனுக்கு வருவோம். மனிதன் ஏன் தேனீக்களைப் போல இல்லை என்பது ஓரளவு விளங்கி இருக்கும். மனிதனையும் இந்த சுயநல மரபணுக்கள் இயக்குகின்றன, ஆனால் முற்றிலும் அல்ல. மனிதக் குழந்தைகள் வளர்ந்தபின் இனவிருத்தி செய்கின்றன. பெற்றோர்கள் தங்கள் மரபணுக்களை பரப்ப ஒரேவழி குழந்தைகளைப் பெற்று, வளர்த்து, கல்வி கொடுத்து, சொத்து சேர்த்து, கல்யாணம் செய்து, பேரன் பேத்தி கண்டு என்ற பாதைதான். இதைத்தான் ஏறக்குறைய அனைவரும் செய்கின்றனர். இந்த குறிக்கோளை அவர்கள் சிந்தித்து கண்டடையவில்லை. மற்ற உயிர்களை எவ்வாறு “சுயநல மரபணுக்கள்” இயக்குகிறதோ, அதே பாதையில்தான் நமது சமூகச்சூழலில் அதற்கேற்றவாறு இயக்குகிறது. நாமும் ஒரு வகையில் மரபணுக்களின் தானியங்கி இயந்திரம்தான்.

நமது உறவினர்களுடனான ஒத்துழைப்பு என்பது சுயநல மரபணுக்களின் தூண்டலினால் நடைபெறுவது. அவ்வாறு ஒத்துழைப்பதின் மூலம் மரபணுக்கள் தங்களை பெருக்கிக் கொள்கின்றன. நம்மிடம் உள்ள மரபணுக்களில் ஒரு பாதி தாயிடமிருந்தும் மறுபாதி தந்தையிடமிருந்தும் வருகின்றன. நமது உடன்பிறந்தோருக்கும் அதே பெற்றோர் என்பதால், நம்மிடம் உள்ள மரபணுக்களில் பாதி நமது உடன் பிறந்தோரிடமும் உள்ளது. நமது சித்தப்பா, சித்தி என்றால் 1/4 பங்கு உள்ளது. அவர்களின் குழந்தைகளுடன் நாம் 1/8 வீதம் ஒரே மரபணுக்களைக் கொண்டுள்ளோம். இவ்வாறு உறவுகளின் தூரம் அதிகரிக்க, மரபணுக்களின் பங்கும் குறைகிறது. நமது பாசம் என்பது பெரும்பாலும் எவ்வளவு தூரம் மரபணுக்களைப் பொதுவாகக் கொண்டுள்ளோம் என்பதைப் பொறுத்தே உருவாகிறது. நமது மரபணுக்களில் பாதி நமது குழந்தைகளுக்குச் செல்வதால், அவர்களை உயிரைக் கொடுத்தாவது காக்க முயல்கிறோம். அண்ணன் தங்கைப் பாசமும் இதுபோலவே வருகிறது.அண்ணனின் மரபணுக்களில் பாதி தங்கையிடமும் இருக்கிறது, அவனது பிள்ளைகளிடமும் இருக்கிறது. மரபணுக்களின் பார்வையில் குழந்தைகளும் உடன்பிறந்தோரும் ஒன்றே. அதனால்தான் அண்ணன்கள் தங்கைக்கு திருமணம் செய்துவைக்க உழைக்கிறார்கள். தங்கைக்கு திருமணம் செய்து வைப்பதும், தனது குழந்தைக்கு திருமணம் செய்து வைப்பதும் மரபணுக்களின் பார்வையில் ஒன்றுதான். இவ்வாறு நெருக்கிய சொந்தங்களுக்கு உதவி செய்வது சமூகத்தில் நடக்கும் ஒரு முக்கியமான ஒத்துழைப்பு.

சில தலைமுறைகள் தூரம் சென்றவுடன் மரபணுக்களின் பங்கு வெகுவாகக் குறைந்து விடுவதால், மரபணுக்களின் பாசம் வெகுதூரம் செல்வதில்லை. மேலும் நமது குழந்தைகளுக்கும், நமது உடன்பிறந்தோர் குழந்தைகளுக்கும் உள்ள மரபணு வேறுபாடுகளால் பங்காளிச் சண்டைகள் வெட்டுக்குத்திலும் முடிகின்றன. சுயநல மரபணுக்கள் என்பவை மிகவும் சுயநலமானவை. சுயநல மரபணுக்களுக்கு எதிராகச்சென்று சமூகத்தில் ஒத்துழைப்பு ஏற்படுவதில்லை. மாறாக அனைவரின் சுயநலத்தை ஏற்றுக்கொண்டே ஒத்துழைப்பு நடைபெறுகிறது. திருமணம், குடும்பம் என்ற அமைப்புகள் சமூகத்தில் உருவானத்திற்குக் காரணமே, அனைவருக்கும் மரபணுக்களைப் பெருக்க ஓரளவு சம வாய்ப்பு ஏற்படுத்தி ஒத்துழைப்பை பெருக்குவதற்கே. ஆனால் அதே சுயநல மரபணுக்கள், நாடே அழிந்தாலும் பரவாயில்லை தன் குடும்பம் நன்றாக இருந்தால் போதும் என்ற எண்ணத்தையும் உருவாக்கி சமூக ஒத்துழைப்பை கெடுக்கவும் வல்லது. இன்றைய முதலாளித்துவ பொருளாதாரம் (Capitalism) என்பது தனிமனித சுயநலத்தைப் பயன்படுத்துவதே. “தனக்குத் தனக்கு என்றால் சுளகு படக்குப் படக்கு என்று அடிக்கும்” என்பதுதான் முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படை. அவ்வாறான பொருளாதாரம் எல்லைதாண்டி சமூகத்தில் உள்ள பொதுவான மக்களின் நன்மையை கெடுக்கும் பொழுது சமூக ஒத்துழைப்புக்குக் கேடாகிறது. ஆனால் அதே நேரம் பொதுவுடமைப் பொருளாதாரம் (socialism, communism) தனிமனித சுயநல மரபணுக்களை புறக்கணிப்பதால், மக்களின் முழு உழைப்பைப் பெற முடிவதில்லை. முதலாளித்துவமோ, பொதுவுடைமையோ, இரண்டிலும் சுயநல மரபணுக்களால் சிக்கல்கள் இருக்கின்றன. ஒரு சமூகத்தின் ஒத்துழைப்பு என்பது அது எவ்வாறு சுயநல மரபணுக்களை கட்டுப்படுத்தி பயன்படுத்துகிறது என்பது ஒரு முக்கிய காரணி.

அடிப்படையில் மரபணுக்களின் சுயநல வீச்சு என்பது குடும்பம், நெருங்கிய சுற்றம் வரைக்கும்தான். அதற்கு அப்பால் அதன் வீச்சு இல்லை. மரபணுக்களால் “நாம் அனைவரும் தமிழர்” என்ற ஒற்றுமை உணர்வைக் கொண்டுவர முடியாது. மரபணுக்களுக்கு அத்தன்மை கிடையாது.

மரபணுக்களால் சமூக ஒற்றுமை ஏற்படுத்த முடியாது என்றால், எவ்வாறு சமூகத்தில் ஒற்றுமை ஏற்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. இங்குதான் மீம்கள் வருகின்றன. ஒற்றுமை என்பது நாம் கொண்டிருக்கும் மீம்கள் ( அல்லது கருத்துக்களினால் ) ஏற்படுகின்றன. மரபணுக்கள் எவ்வாறு குட்டிப்போட்டு பரவுகின்றனவோ, அதுபோல ஒரு மீமும் குட்டிபோட்டு பரவுகிறது. உதாரணமாக இக்கட்டுரை என்பது ஒரு மீம். அது எனது மூளையில் உதித்தது. இதை நீங்கள் படிக்கும் பொழுது, அந்த மீம் உங்கள் மூளையில் இடம் பிடிக்கிறது. அடிப்படையில் இந்த கட்டுரையை 100 பேர் படித்தால், இக்கட்டுரை 100 குட்டிகள் போட்டிருக்கிறது என எடுத்துக் கொள்ளலாம். ஒருவரின் மூளையில் பல்வேறு மீம்கள் உள்ளன. இந்த மீம்கள் ஒருவருக்கு பயனுள்ளவையாக இருந்தால், அவர் பலன் பெறுவார், இல்லையென்றால் தீமையை அடைவார்.

ஆதிகாலத்திலிருந்து மனித சமூகத்தில் போர்கள் நடந்து வருகிறது. இந்தப் போர்களில் எந்த சமூகங்கள் ஒற்றுமையை இருக்கின்றனவோ, அவை வாழ்கின்றன, மற்றவை அழிகின்றன. ஒற்றுமையை மரபணுக்கள் உருவாக்குவது இல்லை என்பதால், இவ்வொற்றுமையை மீம்கள்தான் உருவாக்குகின்றன. இப்பொழுது கேள்வி என்பது இந்த ஒற்றுமையை உருவாக்கும் மீம் என்பது எது?

போர் என்று வந்தால் உயிர்த்தியாகம் இல்லாமல் வெற்றி அடைய முடியாது. எந்த மீம்கள் பொதுநன்மைக்காக தியாகத்தை ஊக்குவிக்கிறதோ, அவைத் தானாகவே சுயநலத்தைக் குறைக்கின்றன. ஏனேனில் தியாகமும் சுயநலமும் எதிரும் புதிருமானவை. சுயநலம் குறையக் குறைய ஒற்றுமை கூடும். இதனால் அதிக தியாக உணர்வுகொண்ட சமூகம் அதிக ஒற்றுமையுடன் இருக்கும். அடிப்படையில் எந்த சமூகங்கள் தியாகத்தை உருவாக்கும் மீம்களைக் கொண்டுள்ளதோ, அவை பரிணாமப் போரில் வெல்கின்றன.

ஆரம்ப காலத்தில் உயர்ந்த தியாகிகளை முன்னுதாரணாமாகக் ( ஒரு மீமாக ) கொள்ளும் சமூகங்கள் பரிணாமப் போரில் வெல்கின்றன. இது பல்லாயிரம் ஆண்டுகள் நடக்கும் பொழுது பால்டுவின் விளைவின் (Baldwin Effect) மூலம், மரபணுக்களில் தியாகிகளை போற்றும் தன்மை புகுந்து விடுகிறது. உலகில் உள்ள அனைத்து சமூகங்களும் தியாகிகளைப் போற்றுவதைக் காணலாம். இது மீம்கள் மரபணுக்களில் ஏற்படுத்திய மாற்றம். மனித சமூகம் என்பது மரபணு-பண்பாடு கூட்டு பரிணாமத்தால் உருவாகியது. ஒரு பண்பாடு என்பது சமூகத்தில் உள்ள மீம்களின் தொகுப்பு என பார்க்கலாம்.

மரபணு-பண்பாட்டு பரிணாமம் என்பது பல்வேறு அச்சுவடிவங்களை ( archetype) மனித உளவியலில் உருவாக்குகிறது. இதை archetypes of the unconcious என்கிறார் உளவியலாளர் கார்ல் யுங்கு. இது மரபணு வழியாக நமது ஆழ்மனது உளவியலில் வந்தடைகிறது. இந்த அச்சு வடிவங்களில் ஒன்றுதான் வீரநாயகன் (Hero). ஒரு தியாக வீரநாயகனைக் கண்டால், அச்சமூகம் அவர்களின் பின்னால் அணிதிரள்கிறது. ஒரு திரைப்பட நடிகன் வீரநாயகனாக படங்களில் வருவதால், அதைப் பார்த்துப் பழகிய மக்கள் அவனின் பின்னால் அணிதிரள்கிறார்கள். இது மனிதனின் ஆழ்மனது உளவியல். உளவியலுக்கு எது உண்மை போலி என்று தெரியாது.

அடிப்படையில் வீரநாயகன் என்பதுதான் மிகப்பலமான ஒற்றுமையை ஏற்படுத்தும் உளவியல் வடிவம். அந்த வடிவத்திலிருந்துதான் புனிதம், இறைவன் என அனைத்தும் உருவாகின்றன. இந்த உளவியல் வடிவம் ஆழ்மனதில் இருப்பது, அப்படி இருப்பதே நமக்குத் தெரியாது. இது ஆழ்மனதில் உள்ள ஒரு கொக்கி (hook) எனப் பார்க்கவேண்டும். ஒரு சரியான வீரநாய்கன் கிடைத்துவிட்டால், இந்த கொக்கி அவர்களின் மீது பற்றிக் கொள்ளும். பின்பு வீரநாயகன் சொல்வதை அப்படியே பின்பற்றுவார்கள். வீரநாயகனை கடவுள் ஆக்கும்பொழுது, அவன் என்றுமே இறவாததால் அக்கொக்கி நிரந்தரமாகப் பற்றிக் கொள்கிறது. அவரின் கருத்துக்கள் (மீம்கள்) சமூகத்தை இயக்குகிறது. இங்கு ஒன்றை கவனிக்கவேண்டும் வீரநாயகன் என்ற கொக்கியை மட்டுமே உளவியல் அளிக்கிறது . அந்த கொக்கிக்கு ஒரு குறிப்பிட்ட வீரநாயகனையும் அவனின் கருத்துக்களையும் (மீம்கள்) பண்பாடுதான் அளிக்கவேண்டும். அதன் பின்புதான் உளவியல் செயல் வடிவம் அடையும். ஒரு வீரநாயகன் கிடைக்கவில்லை என்றால் அந்த கொக்கியால் எந்த செயல்பாடும் இருக்காது.

இப்பொழுது தமிழ்ச்சமூகத்தின் சிக்கல் உங்களுக்குப் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். இருந்தாலும் சுருக்கமாக அளிக்கிறேன்.

பலர் ஒற்றுமையை உருவாக்க மரபணுவைத் தேடுகிறார்கள். இது தோல்வியிலே முடியும்.

பலர் திரைப்படைத்தில் வீரநாயகனைக் கண்டு அவர்கள்பின் செல்கிறார்கள். போலிகளினால் ஏமாற்றமே மிஞ்சும்.

தலைவர் மறைந்து விட்டதால், இன்னொரு தலைவரைத் தேடுகிறார்கள். இது “நீ தலைவனா, நான் தலைவனா” என உட்பூசலில் கொண்டுபோய் சேர்க்கும். இதை mimetic rivalry என்கிறார் இரினே ஜிராடு (Rene Girard ).

மனிதர்கள் பகுத்தறிந்து ஒற்றுமையாகி தியாகம் செய்யத் தயாராக இருப்பார்கள் என நினைப்பது மாபெரும் தவறு. நமது உளவியல் அவ்வாறு வடிவமைக்கப்படவில்லை. அதிகமாக பகுத்தறிந்தால், அவன் சுயநல மரபணுவால் இயக்கப்படுவான். உதாரணமாக திராவிடப் பகுத்தறிவுத் தலைவர்கள் குடும்பத்திற்கு சொத்து சேர்ப்பதில் கவனமாக இருப்பதைப் பார்க்கலாம். பகுத்தறிவு அந்த திசையில்தான் கொண்டுசேர்க்கும், மக்களுக்காக தியாகம் செய்யத் தூண்டாது. பகுத்தறிவை நம்புபவன் கெட்டவனாக இருந்தால், தனது சுயநலத்திற்காக சமூகத்திற்கு கெடுதல் செய்யவும் தயங்கமாட்டான்.

நமக்கு இருக்கும் ஒரே வழி என்பது தலைவரை அழியாத நிரந்தர வழிகாட்டியாக இறையாக எடுத்துக் கொள்வதே. என்னுடைய அறிவுக்கு எட்டியவரை இதைத் தவிர வேறு எதனாலும் தமிழர் ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது. அப்படி இருந்தால் அது வேறொரு உளவியல் வடிவமாகத்தான் இருக்கமுடியும். வேறு ஏதாவது இருந்தால் கேட்கத் தயாராக இருக்கிறேன்.

Dawkins, The Selfish Gene

Deneett, Darwin’s dangerous idea

Palaver, Wolfgang. René Girard’s mimetic theory. MSU Press, 2013.

Jung, Carl “The archetypes of the collective unconscious.”

Richerson, Peter J., and Robert Boyd. Not by genes alone: How culture transformed human evolution. University of Chicago press, 2008.

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a comment