civil war என்பதை உள்நாட்டுப் போர் என்று மொழி பெயர்த்தல் தவறான புரிதலை அளிக்கும். இப்போரில் ஒரு நாட்டில் அண்ணன் தம்பியாக வாழ்பவர்கள் இருவேறு பிரிவாக பிரிந்து மோதுவதுதான் சகோதரப்போர். ரோமப்பேரரசில் தொடர்ச்சியாக பல்வேறு சகோதரப்போர்கள் ஏற்பட்டன. ஒரு போரில் சீசரின் தலைமையில் ஒரு அணியும், பாம்பேயின் தலைமையில் ஒரு அணியும் எதிர்த்து போரிட்டன. பாம்பேயின் மாமனார் சீசர். அப்போரின் இறுதியில் பாம்பே கொல்லப்படுகிறார், சீசர் அவரின் வளர்ப்பு மகனான புரூட்டசால் கொல்லப்படுகிறார்.
இங்கே ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. ஏன் ஒரு மாபெரும் நாகரீகம் தொடர் சகோதர யுத்தத்தில் இருக்கவேண்டும் என்பதுதான். இது ரோமிற்கு மட்டுமல்ல. அனைத்து பெரும் நாகரீகங்களும் /நாடுகளும் சகோதரப்போர்களை சந்திக்கின்றன. பிரிட்டன் கி பி. 1000 இற்கு பின்னர் 9 முறை சகோதரப் போர்களை சந்தித்துள்ளது. கடைசி சகோதரப்போரில் அமேரிக்கா உடைந்து பிரிந்தது. அவ்வாறு பிரிந்த அமெரிக்காவே ஒரு பெரும் சகோதரப் போரை சந்தித்தது. பிரஞ்சுப் புரட்சி என்பதும் சகோதரப்போர்தான். புரட்சி என்று பெயர் மாற்றிவிட்டால் அது சகோதரப்போர் இல்லாமல் போய்விடாது. ரசியப் புரட்சி, சீனப்புரட்சி என சகோதரப்போர்கள் உலகில் ஏராளம். அனைத்து முன்னேறிய நாகரீகங்களும் சகோதரப்போர்களை சந்தித்துள்ளன.
ஆய்வாளர் ஆர்மிட்டேசு கூறுவது என்னவெனில், நாகரீகமாதல் என்றாலே சகோதரப்போர் புரியும் ஆற்றலையும், அப்போருக்கு பலியாகும் தகுதியுடன் இருப்பதுதான் என்கிறார்.
சகோதரப்போர் என்பது நீதியின் அடிப்படையில் நடப்பது. ஒரு சாரார் தங்களுக்கு அநீதி ஏற்பட்டு விட்டது என்று இன்னொரு சாரார் மீது போர் தொடுக்கிறார்கள். இதன் விளைவு என்பது ஒரு நாகரீகத்தில் பழைய அநீதியான பண்பாடு (tradition) தூக்கிவீசப்பட்டு புது பண்பாடு உருவாகி நாகரீகம் வளர்ச்சியை அடைகிறது. அனைத்து சகோதரப் போர்களும் இந்த வளர்ச்சியை உருவாக்கும் எனக்கூற முடியாது. ஆனால் பொதுவாக சகோதரப்போர்கள் இந்த வளர்ச்சியை உருவாக்குகின்றன.
சகோதரப்போரின் ஒரு மோசமான தன்மை என்னவென்றால், அது வெளிநாட்டுப் போரைவிட பல மடங்கு சேதத்தை விளைவைக்கும். அமெரிக்காவின் உள்நாட்டுப் போரின் இழப்பு விகிதம் என்பது இரண்டாம் உலகப்போரை விட அதிகம். அதேபோல ரோமப்பேரரசின், ரசியாவின், சீனாவின் இழப்பும் அதிகமானது.
சகோதரப்போரே ஒரு நாகரீகத்தில் உருவாகவில்லை என்றால், ஒன்று அந்நாகரீகத்தில் மக்கள் என்றும் நீதியுடன் வாழ்கின்றனர் என்று பொருள், இல்லையென்றால் அவர்களுக்கு நீதி என்றால் என்னவென்றே தெரியாது அல்லது அதைப்பற்றி கவலையில்லை என்று பொருள்.
தமிழினத்தில் சகோதரப்போர்கள் நடந்ததாகத் தெரியவில்லை. சங்ககாலத்தில் அரசர்களுக்கு இடையே நடந்தப்போரை சகோதரப்போர் என்று கூறமுடியாது. இப்போர்கள் என்பது கிரேக்க இனத்தில் இருந்த பல்வேறு சிறிய நாடுகளுக்கு இடையே நடந்த போர் போன்றது.
இலங்கையில் ஈழத்துக்கும் சிங்களத்துக்கு இடையே நடந்தது என்பது தேசங்களுக்கு இடையேயான போர், அது சகோதரப்போர் அல்ல. ஈழத்தில் பல்வேறு ஆயுதக் குழுக்களுக்கு இடையே நடந்த போர் என்பதுதான் உண்மையான சகோதரப் போர். அது ஈழத்தில் நீதியை உருவாக்குவதற்கு எது சரியான பாதை என்பதன் அடிப்படையில் உருவான போர். அந்த சகோதரப்போரின் விளைவாக ஒரு புதிய பண்பாடு ஈழத்தில் உருவானது. ஈழம் நிலைத்திருந்தால் அந்தப் பண்பாடு நிலைபெற்று ஒரு முன்னேறிய நாகரீகமாக நாம் வளர்ச்சி அடைந்திருப்போம்.
சகோதரப்போர் என்பது சுந்தந்திரமாக இருக்கும் மக்களிடையே ஏற்படுவது, அடிமைகளுக்கு இடையே என்றுமே ஏற்படாது. ஈழத்தில் சகோதரப் போர் புரிந்த போராளிகள் ஒருவகையில் மற்ற அனைத்து தமிழர்களையும் விட சுதந்திரமானவர்கள்.
புலிகள் சகோதரப்போர் புரிந்தார்கள் என பலர் குற்றம் சாட்டுகிறார்கள், ஆனால் இது உண்மையில் குற்றம் அல்ல. நீதியை நிலைநாட்டத் தேவையான ஒன்று.
தரவு:
Armitage, David. Civil wars: a history in ideas. Yale University Press, 2017.