புளித்துப்போன கருத்துக்களை கூறுவது எனது விருப்பமல்ல. கீழுள்ள குறளில் உள்ள ஒரு முக்கியமான நுணுக்கத்தை யாரும் கண்டறியவில்லை என்றே நினைக்கிறேன்:
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
பொருள்: எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப்பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.
இனி உளவியலாளர் கார்ல் யுங்கு ( Carl Jung) என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். மனிதர்கள் சிந்திக்கிறார்கள் என நினைக்கிறார்கள், ஆனால் உண்மையில் சிந்திப்பதில்லை. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் மனதில் உதிப்பதை சிந்தனை என்று எடுத்துக் கொள்கிறார்கள். உண்மையான சிந்தனை என்பது சீரிய முயற்சியில், ஒழுக்கத்துடன் நமது மனதிற்குள் விவாதித்து நடப்பது. ஒரு கருத்தை சரியா தவறா எனப் பல்வேறு கோணங்களில் அணுகவேண்டும். பல்வேறு அறிஞர்கள் அதைப்பற்றி என்ன கூறுகிறார்கள் எனப் படிக்கவேண்டும். நமது மனதிற்குள் ஒரு கருத்துப்போர் நடக்கவேண்டும். அதுதான் மெய்ப்பொருளைக் காண்பதற்கான வழி.
People believe they think, but in reality thoughts happen to them.
True thinking requires will, discipline, and direction.
Much of what passes for thinking is actually fantasy, association, or emotional reaction. – Jung
இதிலிருந்து குறளில் உள்ள ஒரு நுணுக்கத்தை அறியலாம். மற்றவர்கள் வாயிலிருந்து வரும் கருத்துக்களின் மெய்ப்பொருளைக் காண்பதற்கு முன்னால், முதலில் நமது வாயிலிருந்து வரும் கருத்துக்களுக்கு மெய்ப்பொருள் காணவேண்டும். அதைச் செய்யப் பழகிவிட்டால் மற்றது எல்லாம் எளிதே.
உண்மையில் மெய்ப்பொருள் காண்பது என்பது எளிதானது அல்ல. அதனால்தான் பெரும்பாலான மக்கள் எளிதாக பரப்புரைக்குள் விழுகிறார்கள். அவர்கள் பேசுவது எல்லாம் மற்றவர்கள் பேசும் கருத்துக்களே. ஒரு மனிதன் எப்பொழுது மெய்ப்பொருள் காணப் பழகுகிறானோ, அப்பொழுதுதான் அவனின் பேச்சும் எழுத்தும் செயலும் மற்றவர்கள் போல இருக்காது.
ஆனால் இது இன்னொரு குறளை இடிக்கிறது.
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்
உலகத்தோடு ஒட்ட ஒழுகிறவன் மெய்ப்பொருள் காண்பவனாக இருக்க முடியுமா என்பது சந்தேகமே. அனைத்தையும் கேள்வி கேட்பவன் எவ்வாறு ஒட்ட ஒழுக முடியும். சாக்கரட்டீசு இறுதிவரை கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார், அது பிடிக்காமல்தான் அவரைக் கொன்றனர். அதேபோல பாரதியாரின் சிந்தனையால் அவரது சமூகம் அவரை ஒதுக்கி வைத்தது. ஊருக்கு வெளியில் வாழ்பவன் ஒன்று கடவுளாக இருக்கவேண்டும் அல்லது மிருகமாக இருக்கவேண்டும் என்றார் அரிசுடாட்டில். சாதாரண மக்களுக்கு கடவுளுக்கும் மிருகத்திற்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல், ஊரைவிட்டு ஒதுக்கிவிடுவார்கள். மிருகங்கள் செத்துப்போகும், கடவுள் சாகமாட்டார். பின்னர் மக்கள் அவரை ஊருக்கு உள்ளே கொண்டுவந்து கடவுளாக்கி விடுவார்கள். இதுதுதான் பாரதி, சாக்கரட்டீசு முதற்கொண்டு அனைத்து சிறந்த சிந்தனையாளர்களுக்கும் ஏற்படும் விதி. ஒருவன் ஒட்ட ஒழுகினால் அவன் அறிவாளி ஆகமுடியாது, மாறாக அவன் அரசருக்கு அல்லது அரசியல்வாதிக்கு சிங்கி அடிக்கும் வேலை செய்யலாம்.
குறிப்பு: உண்மையில் சில நல்ல விடயங்களை செய்வதற்கு அரசியல்வாதிகளுக்கு சிலநேரம் சிங்கி அடிப்பது தவறில்லை என நவீன மாக்கியவெல்லியான Kissinger கூறியிருக்கார் என்று எங்கோ படித்த ஞாபகம். அதனால் சிங்கி அடிப்பவர்களில் சில அறிவாளிகளும் உண்டு. அதை அவர்களின் பேச்சையும் செயலையும் வைத்து அடையாளம் கண்டுபிடித்து விடலாம்.