இன்று ஒரு குறளைக் கேள்விப்பட்டேன். வள்ளுவன் காமத்தில் கிடைக்கும் இன்பமும் நுண்ணிய நூல்களைக் கற்கும்பொழுது இருக்கும் இன்பமும் ஒரே மாதிரி இருப்பதைக் கண்டு வியக்கிறார்:
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு. ( 1110)
இதே கருத்தை பிளேட்டோவும் சிம்போசியம் என்ற நூலில் கூறுகிறார், ஆனால் அவர் கற்றலினால் கிடைக்கும் இன்பம் காமத்து இன்பத்தை விட உயர்ந்தது என்கிறார். மேலும் காமம் ஈர்ப்பு ஆகியன அந்த நேரத்தில் மட்டுமே இருப்பது, வயதானால் குறைவது. ஆனால் கற்றலினால் வரும் இன்பம் நீங்காத இன்பத்தை அளிப்பது, கூடிக்கொண்டே செல்வது என்கிறார். உண்மையான உயர் இன்பத்தை கற்றலின் மூலமே அடையமுடியம், காமத்தின் மூலம் அல்ல. கற்றல் என்பதை “seeking beautiful forms” என்கிறார். பெண் எவ்வாறு அழகாக இருந்து ஈர்க்கிறாளோ, அதைவிட அழகானது அறிவு, அந்த அழகு தேயாதது. மனிதனின் அடிப்படை குணம் என்பது அழகை நேசிப்பதே. ஒரு அழகியை விட பன்மடங்கு அழகானது அறிவு. அந்த அறிவுடன் காலம் முழுவதும் இணைந்து வாழ்வதே பேரின்பம் என்கிறார் ( Encomium of Love) . இதை அவர் உணர்ந்து எழுதியது. கிரேக்கர்கள் அறிவில் சாதனைகள் படைத்தது ஏன் இன்று புரிகிறது. அதுதான் திருவள்ளுவரின் அற்புதமான திருக்குறள் உருவாவதற்கும் காரணம். அறிவின் அழகைக் கண்டு இரசிக்கும் கிரங்கும் ஒருவனால் மட்டுமே அற்புத அரிய நூல்களைப் படைக்க முடியும்.
என்னுடைய அனுபவத்திலும் உணர்கிறேன். கற்றலின் ஆரம்பத்தில் இந்த இன்பம் கிடைக்காது. சொல்லப்போனால் கடின உழைப்பும் துன்பமும் ஏற்படும். ஆனால் அறிவில் ஒரு எல்லையைத் தாண்டியவுடன் இன்பம் பெற ஆரம்பிப்போம். அதன்பின் அது கூடிக்கொண்டே செல்லும், குறையவே குறையாது. நூல்களை கட்டுரைகளை எழுதிப் பகிரும்பொழுது, இன்பம் மேலும் கூடும். இந்த இன்ப நிலையை அடையாமல், ஒருவன் சிந்தனையாளனாக அறிவாளராக முடியாது என்றே நினைக்கிறேன். இன்று பலர் ஆரம்ப துன்பத்தைக் கண்டு பயந்து கற்றலை நிறுத்திவிடுகின்றனர். அவர்களுக்கு பேரின்பம் பின்னால் வருகிறது என்பது தெரியவில்லை. அறிவின் அழகைக் கண்டு காதல் கொள்ளுங்கள், அதன்பின் நீங்கள் அறிவாளி ஆவது இயற்கையின் விதி. அறிவின் அழகில் மயங்கி காதல் கொண்டு, அவளுடன் இணைந்து குழந்தைகள் ( நூல்கள்) படைப்பீர்கள். அக்குழந்தைகள் ( திருக்குறள் போன்ற நூல்கள்) சாகாத குழந்தைகளாக என்றும் இளமையுடன் உங்களின் பெயரை சொல்லிக்கொண்டு இருப்பார்கள் என்கிறார் பிளேட்டோ. ஒரு பெண்ணுடன் இணைந்து பெற்ற குழந்தைகளோ ஓரிரு தலைமுறையில் நம்மை மறப்பார்கள், ஆனால் அறிவுக்குழந்தைகள் நம்மை மறவாமல் அழியாப் புகழை உருவாக்குவார்கள். அதனால் பெண் மீதான காமத்தைவிட அறிவுக்காமமே அனைத்திலும் உயர்ந்தது.
இதுபோன்ற கருத்தை நீதிநெறி விளக்கத்தில் குமரகுருபரர் இவ்வாறு கூறுகிறார்:
கலைமகள் வாழ்க்கை முகத்தது எனினும்
மலரவன் வண் தமிழோர்க்கு ஒவ்வான்-மலரவன்செய்
வெற்று உடம்பு மாய்வன போல் மாயா புகழ்கொண்டு
மற்று இவர் செய்யும் உடம்பு
விளக்கம்: கலைமகள் படைக்கும் புகழ்வாய்ந்த நூல்கள் அழியவில்லை, ஆனால் நான்முகன் படைக்கும் உடம்புகள் அழிகின்றன. அதனால் கலைமகளே உயர்ந்தவள்.
தொடங்கும்கால் துன்பமாய் இன்பம் பயக்கும்
மடம் கொன்று அறிவு அகற்றும் கல்வி நெடுங்காமம்
முன் பயக்கும் சில நீர இன்பத்தின் முற்றிழாய்
பின் பயக்கும் பீழை பெரிது
பொருள்: கல்வி கற்க ஆரம்பிக்கும் பொழுது துன்பமாக இருக்கும். அதன் பின்னரான தொடர் கற்றல் இன்பம் பயக்கும். ஆனால் காமம் என்பது முதலில் இன்பத்தை அளித்து பின்பு துன்பத்தை அளிக்கும்.
இந்த அடிப்படை அறிவுக்காமத்தை அனுபவிக்காமல் ஒருவரால் சிறந்த கற்றவராக முடியுமா என்பது சந்தேகமே.
உலக நூல்களை இருவகைகளாகப் பிரிக்கலாம்:
- அறிவு சுரக்கும் தத்துவநூல்கள்
- மற்ற நூல்கள். இதில் பொருளீட்டுவதற்கு பயன்படும் நூல்கள், தொழிற்கல்வி நூல்களும் அடங்கும்.
முதல்வகை நூல்களைக் கற்காமல் மற்ற நூல்களைக் கற்பது எல்லாம் வெறும் சலசலப்பே என்கிறது ஒரு நாலடியார் பாடல்:
அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது
உலகநூல் ஓதுவ தெல்லாம் – கலகல
கூஉந் துணையல்லால் கொண்டு தடுமாற்றம்
போஒம் துணையறிவார் இல்.
பொருளீட்டப் பயன்படும் எந்த நூல்களும் நல்ல நூல்கள் இல்லை என்கிறார் 2000 ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த செனக்கா. தத்துவநூல்களே ஒருவனுக்கு அறிவை அளித்து உள்ளத்தைத் தூய்மைப் படுத்தி அவனை ஞாநி ஆக்குகிறது. மற்ற நூல்கள் ஒருவனை வளரவிடாமல் சிறுபிள்ளை போல விவரம் தெரியாமல் வைத்திருக்கிறது.
Seneca: (On Liberal and Vocational studies)
I deem no study good, which results in money making.. there is only one really liberal study, – that which gives a man his liberty. It is the study of wisdom, and that is lofty, brave, and great souled. All other studies are puny and puerile.
இதே கருத்தை வள்ளுவன் இவ்வாறு கூறுகிறான்:
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.
பொருள்: செல்வத்தை தேடுபவர் வேறு, அறிவைத் தேடுபவர் வேறு. ஒருவர் இன்னொருவராக முடியாது.
பிளேட்டோவும் இதே கருத்தை அவரது குடியரசு நூலில் வலியுறுத்துகிறார். அறிவை வளர்க்க முதலில் பயனற்ற அறிவைக் கற்க முயலவேண்டும். அவன் இவ்வுலகில் உள்ளதைப் பார்த்து கற்கக்கூடாது, மனக்கண்ணால் சிந்திக்க வைக்கக்கூடிய கணிதத்தில் ஆரம்பிக்க வேண்டும். எவ்வளவு ஆழமான பயனை நீங்கியாதாக உள்ளதோ அவ்வளவு நல்லது என்கிறார். கணித அழகை மனக்கண்ணால் கண்டு இரசித்து இன்பத்தைக் கண்ட பின்னரே, மற்ற பயனுள்ள நூல்களுக்கு வரவேண்டும் என்கிறார்.
அடிப்படையில் அறிவுக்காமம் என்பது சரியான நூல்களைக் கற்கும் பொழுதே ஏற்படுகிறது. மற்ற நூல்களை எவ்வளவு கற்றாலும் ஒருவருக்கு ஞானக்கண் திறக்காது, அறிவின் அழகைக் கண்டு இன்பமடைந்து, அரிய படைப்புகளை உருவாக்க முடியாது.
Plato, Republic
Seneca, Lucius Annaeus. Moral letters to Lucilius.
Symposium by Plato