புனிதம் – 4

மரபணுக்கள் வழியாக உயிரியல் பரிணாமம் ஏற்படுகிறது, அதுபோல புனிதத்தின் வழியாக பண்பாட்டு பரிணாமம் ஏற்படுகிறது. பரிணாமத் தத்துவம் ( Evolution ) என்பது இரண்டிற்கும் பொதுவானது என்பதால், உயிரியல் பரிணாமத்தில் நமக்குத் தெரிந்த பல்வேறு தத்துவங்களை ஒரு சமூகத்திற்கும் பயன்படுத்தலாம். அதன் மூலம் உலக சமூகத்தையும், நமது சமூகத்த்தின் பலம் பலவீனங்கள் என்ன, பலவீனங்களை எவ்வாறு சீர் செய்வது என பல்வேறு விடயங்களை புரிந்து முக்கியத்துவத்தின் அடிப்படையில் திட்டங்களை உருவாக்கலாம் . இனி இவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:

  1. மரபணுக்களின் வேறுபாடுகள் எவ்வாறு வெவ்வேறு உயிர்களை உருவாக்குகிறதோ, அதுபோல வெவ்வேறு புனிதங்களின் அடிப்படையில் வெவ்வேறு சமூகங்கள் உருவாகின்றன. உயிர்களுக்கிடையியே போட்டிகள் உள்ளது போல, சமூகங்களுக்கிடேயே போட்டிகள் நிலவுகின்றன. எந்த சமூகங்கள் வெற்றி பெற்று நிலைத்து நிற்கின்றன என்பதை பரிணாமம் தீர்மானிக்கிறது.
  2. பகுத்தறிவாளர்கள் சமூகத்தின் புனிதத்தைக் கண்டு, இது பகுத்தறிவற்றது, அதனால் பொய்யானது என வாதிடுகிறார்கள். டேவிட் வில்சன் கூறுவது என்னவென்றால், பரிணாமத்தில் “உண்மையா பொய்யா” என்ற கேள்வியே அர்த்தமற்றது. உதாரணமாக, ஒரு சிங்கத்தையோ புலியையோ பார்த்து, அவை உண்மையா என்று கேள்விகேட்டால் அது அர்த்தமற்றது. அவை வாழும் உயிரினங்கள். நாம் கேட்கவேண்டிய கேள்வி “ஒரு உயிர் தன் சூழலுக்கு ஏற்று பிழைப்பதற்கு சரியான பண்புகளைக் கொண்டுள்ளதா?” என்பதே. இதைத்தான் ஒரு உயிரியல் பரிணாம ஆரய்ச்சியாளர் ( Evolutionary biologist) ஆராய்கிறார். சமூகம் என்பது பரிணாம விதிகளுக்கு உட்பட்டதால், நாம் கேட்கவேண்டிய கேள்வி “ஒரு சமூகம் தனது சூழலில் தன்னை அழியாமல் காத்துக்கொள்வதற்கேற்ப பண்புகள் உள்ளதா?” என்பதே. உண்மையா பொய்யா என்ற கேள்வியே தவறானது . சொல்லப்ப்போனால் அனைத்து சமூகங்களின் அடித்தளமும் பகுத்தறிவற்றத்திலேயே தங்கி இருக்கிறது.
  3. ஒரு உயிர் வாழத்தகுதியுடன் இருக்கிறதா என்பதை “தகுதி எண்” (fitness) என்ற அளவீட்டை உயிரியளார்கள் பயன்படுத்துகிறார்கள். ஒரு உயிரின் தகுதி எண் என்பது அவ்வுயிர் தனது வாழ்நாளில் எத்தனை குட்டிகளைப் பெற்றெடுத்து அவை இனப்பெருக்க வயதை அடைகின்றன என்பதுதான். உதாரணமாக ஒரு குருவி தனது வாழ்நாளில் 100 முட்டைகளை இட்டு, அதில் 70 குஞ்சுகள் தோன்றி அவற்றில் 10 இனப்பெருக்க வயதை அடைகின்றன என்றால், அக்குருவியின் தகுதி எண் என்பது 10. இப்பொழுது நம்மூரில் குருவிகளே இல்லை என்று கேள்விப்படுகிறேன். அப்படி என்றால் அவற்றின் தகுதி எண் மிகக்குறைந்து அவை காணாமல் போய்விட்டது என்று பொருள். பலர் பரிணாமம் என்பது “பலமுள்ளது வாழும்” ( survival of the fittest) என்று தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். பரிணாமம் என்பது அடிப்படையில் “அதிக குட்டிகளை ஈன்று வளர்த்தெடுப்பது” ( multiplication of the fittest ) வாழும்.
  4. இப்பொழுது மனித சமூகத்திற்கு வருவோம். பண்பாட்டு பரிணாமம் என்பது மரபணு சார்ந்தது அல்ல, மாறாக அது புனிதம் சார்ந்தது, அடையாளம் சார்ந்தது . ஒரு சமூகத்திற்கு “மொழி, வரலாறு, நம்பிக்கைகள்” இவை அனைத்தும் அடையாளம் சார்ந்தவை. இவை எவ்வாறு ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது என்பதன் அடிப்படையிலேயே “தகுதி எண்” கணக்கிடப் படவேண்டும். இவற்றைப் பின்வருமாறு செய்யலாம்.
  5. அடுத்த தலைமுறையின் எண்ணிக்கை என்ன என்பதற்கு பிறப்பு விகிதம் அடிப்படை. ஒரு பெண் 2.1 குழந்தைங்கள் பெற்றால், அச்சமூகத்தின் மக்கள்தொகை மாறாமல் இருக்கும். இதைவிடக் குறைந்தால் அச்சமூகம் சிறிது சிறிதாகக் குறைந்து குருவிகள் போலக் காணாமல் போய்விடும்.
  6. பிறப்பு விகிதம் என்பது தகுதி எண் ஆகாது. ஏனெனில் பிறக்கும் அத்தனை குழந்தைகளும் தமிழர் என அடையாளத்துடன் வளவதில்லை . சிலர் சிங்களம் பேசி, பௌத்தம் மாறி சிங்களர் ஆகலாம். இன்றைய சிங்கள இனத்தில் உள்ள பலரின் மூதாதையர்கள் தமிழர்களே. அதுபோல தமிழர்கள் பல்வேறு நாடுகளில் வசிக்கிறாரக்ள் , அவர்கள் அந்தந்த நாட்டு பெரும்பான்மை பண்பாட்டில் கரைந்து போகலாம், போய்க்கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் பலர் தமிழர் என்ற அடையாளத்தைவிட இந்திய அடையாளத்திற்கு முதன்மை அளிக்கின்றனர். அதே போல தமிழ்நாட்டில் உள்ள வேற்று மொழியாளர்கள் தமிழர் அடையாளத்திற்கும் மாறலாம். இவ்வாறான மாற்றத்தை இனமாற்று விகிதம் எனலாம். இதை சராசரியாக ஒரு பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைகளில் எத்தனை பேர் இனமாற்றம் அடைகின்றனர் என கணக்கிடலாம்.
  7. மேற்கூறிய காரணங்களால் தகுதி எண் என்பது : பிறப்பு விகிதம் – இனமாற்று விகிதம் . ( இரண்டையும் கழிக்க வேண்டும்). ஏன் இனமாற்று விகிதத்தை குறைக்கிறோம் என்றால், அவர்கள் தமிழினத்தைப் பொறுத்தவரை இறந்துவிட்டதற்கு சமமானது.
  8. தமிழர் எண்ணிக்கை குறையாமல் இருக்கவேண்டும் என்றால் தகுதி எண் என்பது 2.1 க்கு குறையாமல் இருக்கவேண்டும். உதாரணமாக இப்பொழுது தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம் என்பது 1.4. இதில் இனமாற்று என்பது 0.4 என்று வைத்துக் கொண்டால், நமது தகுதி எண் என்பது 1.0. இதன் பொருள் நாம் மிகவேகமாக அழிந்து கொண்டிருக்கிறோம்.
  9. சிக்கல் இத்துடன் நிற்கவில்லை. தமிழ்நாட்டில் மாற்று இனத்தவரும் உண்டு. அவர்களுக்கும் தகுதி எண் உண்டு. மேலும் தமிழ்நாடு வந்து குடியேறுவோரின் எண்ணிக்கை அதிகம். அதனால் அவர்களின் தகுதி எண்ணில் குடிவரவையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் . அந்நியர் தகுதி எண் = பிறப்பு விகிதம் – இனமாற்று விகிதம் + குடிவரவு விகிதம்

குடிவரவு விகிதம் என்பதை ஒரு அந்நிய பெண்ணுக்கு சராசரியாக எத்தனை பேர் புதிதாக குடியேருகிறார்கள் என்று வரையறுக்கலாம்.

உதாரணமாக அவர்களின் பிறப்பு விகிதம் 3.2 இனமாற்று விகிதம் 0.2, குடிவரவு விகிதம் 10 என்றால் , அவர்களின் தகுதி எண் = 13. இது அடிப்படையில் என்ன கூறுகிறதென்றால், தமிழ்நாட்டில் அவர்களின் மக்கள் தொகை 13 மடங்கு வேகமாக கூடுகிறது. அதாவது நாம் ஒரு பிள்ளை பெற்றால், அவர்கள் 13 பிள்ளைகள் பெறுகிறார்கள் என்பதற்கு சமம். இந்த எண்ணிக்கை அசல் எண்ணிக்கை அல்ல. நான் எடுத்துக் காட்டுக்காக கொண்டவை.

இது வெகு விரைவில் நமது ஊரிலேயே நம்மை சிறுபான்மையினராக ஆக்கும். பின்பு நாம் அரசியல் செய்வதற்குக் கூட இடமிருக்காது. இது நமது அழிவை இன்னும் வேகப்படுத்தும்.

  1. நமக்கென்று தனி நாடு இருந்தால் குடிவரவைக் கட்டுப்படுத்தலாம், பிறப்பு விகிதத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கலாம். இவ்வளவு சிக்கல்கள் தோன்றி இருக்காது. இன்று நாம் எதிர்நோக்குவது இனப்பெருக்கச் சிக்கல், பொருளாதாரச் சிக்கல் இல்லை. சிலநேரம் ஈக்கள் தேன் உண்ணும்பொழுது, அந்த தேனிலேயே சிக்கி சாகும். அதுபோல தான் நமது பொருளாதார முன்னேற்றம் என்பது. அது குடிவரவை மேலும் பெருக்கி நம்மை அழிவை நோக்கி நகர்த்துகிறது.
  2. இலங்கையில் குடியேற்றங்கள், அரசியல் உரிமைகள் பறிப்பு ஆகியவற்றில் ஆரம்பித்து இனக்கலவரம், போர், இனப்படுகொலை வரை சென்றிருக்கிறது. நாம் கவனமாக கையாளாவிட்டால் இன்னொரு அவலத்தில் சிக்கிக்கொள்வோம். இரு தாயகங்களிலும் அவலங்கள் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. எதற்கும் தயாராகத் துணிவுடன் இருக்கவேண்டும்.
  3. மற்ற உயிரினங்களுக்கும் மனித சமூகத்திற்கும் ஒரு அடிப்படை வித்தியாசம் உண்டு. மற்ற உயிர்கள் மாறாமல் காலம் காலமாக அப்படியே இருக்கின்றன. ஆனால் மனித சமூகம் என்பது அதிவேக மாற்றம் முன்னேற்றம் கொண்டது. தேனீக்கள் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்ததோ, அப்படியேதான் இருக்கிறது. ஆனால் nமனிதன் 100 வருடத்தில் அடையாளம் iதெரியாத அளவு முன்னேறிவிட்டான். மனிதன் உயிர் வாழ்வதற்காக வாழ்வதில்லை, அவன் எல்லையில்லா சாதனைகள் படைக்கும் ஆற்றல் கொண்டவனாகவே வாழ ஆசைப்படுகிறான். தமிழ் சமூகம் அதுபோன்ற ஆற்றல் மிக்க சமூகமாக வளரவேண்டும் என்பதுதான் நமது குறிக்கோள். மற்றவரிடம் அடிபணிந்து அண்டிப்பிழைக்கும் சமூகமாக வாழ்வது ஒரு வாழ்க்கையல்ல.

சுருக்கமாக நமது எதிர்காலத்திற்கு தடங்கலாக இருக்கும் சிக்கல்கள் என்பன:

  1. குறைவான பிறப்பு விகிதம்
  2. அதிகமான இனமாற்று இழப்பு
  3. அயலார் குடியேற்றம்
  4. அடிபணிவு வாழ்க்கை
  5. பெரிய குறிக்கோளின்மை

இந்த சிக்கல்களுக்கு மூல காரணம் இன்றைய பண்பாடான நண்டுப் பண்பாடே .

  1. நம்பிக்கை இழப்பு. ஒரு காலத்தில் பிள்ளைகளை குழந்தைச் செல்வம் என்றுதான் அழைத்தனர். இப்பொழுது குழந்தைகள் சுமைகள் ஆகிவிட்டனர். திருமணமும் புனிதத்தை இழந்து மணப்பிரிவுகள் கூடிவிட்டன. ஒருவருடத்திற்கு 100,000 கருக்கலைப்புகள் தமிழகத்தில் நடக்கின்றன. இது ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு சமமாக உள்ளது.
  2. இந்து மதத்தில் தமிழ் புனிதமொழி அல்ல, வடமொழிதான் புனிதமானது. இதனால் மொழி வீழ்ச்சி அடைகிறது . அவர்கள் இந்துவா அடையாளத்திற்குள் விழுந்து எளிதாக தமிழினப் பற்றை இழந்து இனமாற்றம் அடைகின்றனர்.
  3. மக்களை சாதிகளாகப் பிரித்து ஒற்றுமையைக் கெடுக்கிறது.
  4. ஊறிப்போன கோழைத்தனம். இதைப் பாரதி தனது காலத்திலேயே கண்டும் மனம் வெந்து பாடினார்: “அஞ்சி யஞ்சிச் சாவார், இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே”.
  5. தானும் தன்குடும்பமும் என்ற குறுகிய சிந்தனை. இப்பொழுது அந்த குடும்பமும் உடைந்து கொண்டு செல்கிறது.

இப்பண்புகள் எல்லாம் பரிணாம விதிகளுக்கு எதிரனானது. நமது தகுதி எண்ணை குறைத்து நம்மை அழிவை நோக்கி நகர்த்துவது. நாம் இந்த பண்பாட்டை மாற்றாமல் எந்த முன்னேற்றமும் காண முடியாது. நமது தேவை என்பது ஒரு பண்பாட்டு பரிணாமம். ஒரு சமூகத்தை, பண்பாட்டை உருவாக்குவது புனிதம் என்றால், ஒரு புதிய புனிதம் இல்லாமால் இந்த பண்பாட்டு மாற்றம் சாத்தியமில்லை. அந்த புனிதம் என்பது தலைவரும் மாவீரர்களும். அவர்கள்தான் நாம் உருவாக்க வேண்டிய பண்பாட்டு மாற்றத்தின் மையப்புள்ளி.

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a comment