சரசுவதி சபதம் என்ற படம் இந்த கேள்வியின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. இவை மூன்றும் சமமானவை என்று கதை முடியும். எனக்கு நீண்ட காலமாக இந்த முடிவில் வேறுபாடு இல்லாமல் இருந்தது. ஆனால் நூல்களை தீவிரமாகக் கற்க ஆரம்பித்த பின்னர், தர்க்கங்களின் அடிப்படையில் எனது முடிவு மாறிவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை அறிவுதான் முதன்மையானது என்று நினைத்தேன். இப்பொழுது வீரம்தான் முதன்மையானது என்று முடிவுக்கு வந்துவிட்டேன். சுருக்கமான காரணங்கள் இதுதான்;
செல்வத்திற்கு அடிப்படை அறிவு. இதற்கு காரணமாக நான் பார்ப்பது இயற்பியலின் இரண்டாம் விதி. அது தகவலை (information) வேலையாக (work) மாற்றலாம் என்று நிரூபிக்கிறது. பொருளாதார வலிமை உள்ள நாடுகள் எல்லாம் அறிவில் முன்னேறிய நாடுகளாக இருப்பது இதுதான் காரணம். இது இயற்பியல் விதியில் இருந்து வருவது.
அறிவிற்கு அடிப்படை என்பது வீரம் (courage): மனிதனின் பரிணாம வளர்ச்சியே போரினால் உருவானது என்கிறார் டர்ச்சின் (Turchin). கலையில் இருந்து கல்விவரை அனைத்திலும் போர் பெரும் பங்கு வகித்திருக்கிறது. போர்தான் அனைத்திற்கும் தந்தை என்கிறார் கிரேக்க மேதை அராக்கிலிட்டசு (Heraclitus). தெளிவான சிந்தனை என்பதே தைரியத்தின் காரணமாக உருவாவது என்கிறார் தலீபு (Nassim Taleb). சிந்தனையால் தைரியம் உருவாகும் என்று நினைப்பது என்பது பிழை. சுயநலம், தீயென்னம், கோழைத்தனம் இம்மூன்றையும் கொண்டோரை இயற்கை அறிவின் பக்கம் அண்டவிடாது. அறிவு என்பது அவர்களுக்கு பூட்டப்பட்டு விடும் என்கிறார் கார்லைல் (Carlyl).
Nassim Taleb: Mental clarity is the child of courage, not the otherway around.
Carlyle: Nature, with her truth, remains to the bad, to the selfishand the pusillanimous forever a sealed book
முடிவில் வீரம்தான் உயர்ந்தது. வீரம் எங்கிருந்து வருகிறது என்றால் அது அன்பில் போய் நிற்கும். அன்பு என்றால் பெற்றோர் குழந்தைகள் என்பதல்ல, அது ஆடு மாடுகளுக்கும் உண்டு. அன்பு என்பது தன்னைத் தாண்டி சமூகம் என்று பரந்துசிந்திக்கும் அன்புதான் வீரத்தை அளிக்கும் அன்பு. அவ்வாறான அன்பும், அதன் வழியாக வரும் தைரியமும் கொண்டவர்கள் மட்டுமே அறிவாளர்கள் ஆகமுடியும். இறைவன் என்பது சமூகத்தின் உருவகம் (metaphor). அதனால் உண்மையான இறை அன்பு கொண்டவர்களுக்கும் அறிவு திறக்கப்படலாம். ஆனால் அன்பு மட்டும் போதாது, அவ்வன்பு தைரியத்தையும் உருவாக்க வேண்டும்.
பல கிரேக்க தத்துவமேதைகள் அரசரிடம் பரிசு பெற்று உட்கார்ந்து எழுதும் நம்மூர் புலவர்கள் போன்று என்று நினைத்தால் அது தவறானது. ஏறக்குறைய அனைவரும் போர்வீரர்கள் அல்லது படைத் தலைவர்கள். அதில் புகழ்பெற்ற பிளேட்டோ, சாக்கரட்டீசு, துசிடிடீசு என அனைவரும் அடக்கம். சக்கரட்டீசு மாபெரும் சிந்தனையாளர் என்று மட்டும் அல்ல, அவர் மாபெரும் போர் தளபதியும் கூட. தனியொருவராக பலபேருடன் ஒரு நேரத்தில் வாளுடன் மோதி வெற்றிகண்டவர். அவரின் வீரத்தை பார்த்து மற்ற கிரேக்க தளபதிகளே அரண்டுவிட்டனர். ஒருவர் சிறந்த சிந்தனையாளராக இருக்கவேண்டும் என்றால் அவன் தைரியம் கொண்ட வீரனாக இருக்கவேண்டும் என்பது அவர்களின் பார்வை.
“சிந்தனையாளர்களையம் போர்வீரர்களையும் தனித்தனியாக பிரிக்கும் சமூகத்தில், சிந்தனையாளர்களின் சிந்தனைகள் கோழைத்தனமாகவும், போர்வீரர்களின் செயல்பாடுகள் முட்டாள்தனமாகவும் இருக்கும்” – துசிடிடீசு
“A society that separates its scholars from its warriors will have its thinking done by cowards and its fighting by fools” – Thucidides
அவர்கள் தங்கள் நாட்டை ஆழமாக நேசித்தனர். பிளேட்டோவின் குடியரசு நூல் என்பதே வீழ்ந்து கிடந்த ஏதென்சை எவ்வாறு மறு சீரமைப்பது என்ற சிந்தனையின் அடிப்படையில் உருவானது. அதே போல மாக்கியவெல்லி எழுதிய நூலும் ஒன்றிணைந்த இத்தாலியை அரசை உருவாக்குவதை நோக்கியே.
புகழ்பெற்ற தமிழீழ சிந்தனையாளரும் ஆய்வாளருமான தராக்கி சிவராம் அவர்கள் ஒரு காலத்தில் ஆயுதம் ஏந்திய போராளி. அவர் போன்ற தமிழ் சிந்தனையாளரை எழுத்தாளரை அவருக்கு முன்னர் தமிழுலகத்தில் பார்த்ததே இல்லை. நமது தமிழுலகில் பெரும் கவிஞனாகப் பார்க்கப்படும் பாரதி கூட, இந்திய விடுதலைக்கான கனவில்தான் தைரியத்துடன் பலரையும் எதிர்த்து எழுதினார். ஒருவரின் சிந்தனைக்கு தைரியத்தின் முக்கியத்துவத்தை இவ்வாறு கூறுகிறார்:
துணிவுள்ளவனையே அறிவுள்ளவன் என நம் முன்னோர்கள் மதிக்கிறார்கள். அஞ்சும் இயல்புடைய கோழையொருவன் தன்னைப் பல சாத்திரங்கள் கற்றவன் என்றும் அறிவாளி என்று சொல்வானானால், அவனை நம்பாதே. அச்சமே மடமை, அச்சமில்லாமேயே அறிவு. விபத்துக்கள் வரும்போது நடுங்குபவன் மூடன். விபத்துக்கள் வரும்போது எவன் உள்ளம் நடுங்காமலும், துணிவுடன் அவற்றை எல்லாம் போக்க முயற்சி செய்கிறானோ அவனே ஞானி. துணிவே தாய்; அதிலிருந்துதான் கல்வி முதலிய மற்றெல்லா நன்மைகளும் பிறக்கின்றன. – பாரதியாரின் “தைரியம்” கட்டுரையிலிருந்து.
தமிழரின் சங்ககாலம் என்பது வீரம் நினைந்த காலம். பல அரசர்கள் அறிவில் உயர்ந்து பாடல் இயற்றும் வல்லமையும் கொண்டிருந்தனர். அன்று உருவாக்கப்பட்ட படைப்புகள் இன்றும் போற்றிப் புகழப்படுகின்றன. இவை உருவாவதற்கு வீரமே காரணம்.
இன்று நமது சமூகத்தில் சீரிய சிந்தனைகள் இல்லையென்றால், அதற்கான காரணம் அறிவின்மை இல்லை. மாறாக கோழைத்தனம் என்பேன். நீங்கள் திராவிட சிந்தனையாளர்களின் செயல்களை கூர்ந்து கவனித்தால் அதில் ஒரு கோழைத்தனம் ஓடிக்கொண்டு இருக்கும். மேடையில் வீரவசனம் இருக்கும், ஆனால் செயலில் இருக்காது. தமிழர் சிந்தனைகளை மழுங்கடித்தற்கு திராவிடத்திற்கு பெரும்பங்கு உண்டு என்றே நினைக்கிறேன்.
இவ்வுலகில் தான் நினைத்ததை சாதிக்க விரும்பும் ஒருவனுக்கு, அல்லது ஒரு சமூகத்திற்கு அடிப்படைத் தேவை என்பது துணிவு என்கிறார் ராலோ மே . அந்தத் துணிவு இல்லையென்றால் எந்தத்துறையிலும் சாதிக்க முடியாது. அவ்வாறான கோழைகளுக்கு இருக்கு ஒரே வழி என்பது மற்றவர்களுக்கு சேவகம் செய்து பிழைப்பது மட்டுமே.
பிரபாகரன் என்ற மாவீரன் தோன்றிய பிறகே தமிழனின் வீரம் வெளிவந்திருக்கிறது. அது சிந்தனையிலும் சீரிய மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. இதுவரை பிரிந்துகிடந்த வீரமும் விவேகமும், பிரபாகரனால் புலிப் பண்பாட்டில் ஒன்றிணைந்திருக்கிறது. எதிர்காலத்தில் அது மாபெரும் சாதனைகளை உருவாக்கும்.
முடிவு: வீரம்தான் உயர்ந்தது, அதிரிலிருந்துதான் மற்ற அனைத்தும் பிறக்கின்றன.
நூல்கள்:
May, Rollo. The courage to create. WW Norton & Company, 1994.
Carlyle, Thomas. On heroes, hero-worship, and the heroic in history. Vol. 1. Univ of California Press, 1993.
தமிழ் அரசுகள் இருந்த காலகட்டங்களில் இது போன்ற தத்துவாசிரியர்கள் இருந்துள்ளார்களா?
LikeLiked by 1 person
அப்படி இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.
LikeLike