நீட்சே உலகை தயனிசியன் அப்பலோனியன் [6] என இருவகையாகப் பிரித்தார். தயனிசியன் என்பது உணர்வுகளால் ஆனது, பகுத்தறிவிற்கு அப்பாற்பட்டது. அதிரிலிருந்து பிறக்கும் உணர்வுகள்தான் மனிதனுக்கு விருப்பத்தை அளித்து, உந்தி இயக்கி, அரசியல் முதல் அறிவியல் வரை சாதனைகளைப் படைக்கவைக்கிறது. தமிழினத்தின் தயனிசியன் என்பது பிரபாகரனே என முந்தைய கட்டுரைகளான தயனிசியன், வீரநாயகன், இறவாமை, ஊபர்மேன்சு, தீர்க்கதரிசி ஆகியவற்றில் நிறுவினோம். தயனிசியன் என்பது ஒரு சமூகத்திற்கு அடிப்படைக் குறிக்கோள்களை அளித்து உந்தி செயல்படுத்தும் உணர்வுகளை அளிக்கிறது. ஆனால் இது போதுமானது அல்ல. நமது செயல்பாடுகள் வீரியம் மிக்கதாக இருக்கவேண்டுமானால், அது தீவிரமாக பகுத்தறிவால் ஆராயப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டியது. இங்குதான் அப்பலோனியன் முக்கியத்துவம் பெறுகிறது.
அப்பலோனியன் என்பது பகுத்தறிவானது, சீரானது, ஏரண வயப்பட்டது, தெள்ளத் தெளிவானது. ஒரு சமூகத்திற்கு அப்பலோனியன் என்பது தத்துவ சிந்தனைகளும், அதன்படியான செயலாக்கமுமே. தமிழ்த்தேசியத்திற்கான பெருந்திட்டம் என்ற நூலில் குறிக்கோள்களை அடிப்படைக் குறிக்கோள்கள், கருவிக் குறிக்கோள்கள் என இருவகைகளாகப் பிரித்தோம். தயனிசியன் என்பது ஒரு சமூகத்திற்கு அடிப்படைக் குறிக்கோள்களை அளிக்கிறது. அப்போலோனியன் என்பது அக்குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கான கருவிகளை அளிக்கிறது. அப்பலோனியன் என்பது தயனிசியனின் சேவகன்.
தமிழ்ச் சமூகத்திற்கு ஈடு இணையற்ற தயனிசியன் பிரபாகரன் வடிவில் கிடைத்திருக்கிறது, ஆனால் அந்த தயனிசிய குறிக்கோள்களில் நாம் பெரிய முன்னேற்றம் அடையவில்லை. இதற்கான ஒரு அடிப்படைக் காரணம் என்பது அப்பபோலோனியனின் முக்கியத்துவத்தை உணராததுதான். ஒரு சமூகத்தின் அடிப்படைக் குறிக்கோள்கள் மாறாதது, ஆனால் அக்குறிக்கோள்களை அடைவதற்கான உத்திகள், செயல்பாடுகள் காலத்திற்கு ஏற்ப மாறுபடும். அவற்றைக் கண்டுபிடித்து செயல்படுத்துவதற்கு ஆழமான தத்துவ சிந்தனைகள் ( அப்போலோனியன்) தேவை. அவ்வாறு செயல்படாவிட்டால், நாம் தயனிசியனை மறந்து நம்மை நாமே அழித்துக் கொள்வோம். பிரபாகரன் நமது சமூகத்தைக் காப்பதற்கான ஒரு பாதியை நிறைவேற்றி இருக்கிறார். மீதியை சிந்தனையாளர்களும் செயல்வீரர்களும் நிறைவேற்ற வேண்டும்.
எப்பொழுது தயனிசியனும் அப்பலோனியனும் இணைந்து செயல்படுகின்றனவோ, அப்பொழுதுதான் அச்சமூகம் வெற்றியடைகிறது. உதாரணமாக ஏசு தியாகம் செய்த ஒரு தயனிசியன். அவர் கிருத்துவ சமூகத்தை உருவாக்கவில்லை. அவரின் சீடரே அல்லாத பால் (Paul) தான் ஏசுவைத் தத்துவப் படுத்தினார். பைபிளில் உள்ள புதிய ஏற்பாட்டில் எழுதப்பட்ட பெரும்பான்மையான நூல்களை பால்தான் எழுதினார். அதன் பின்னர் பல்வேறு அறிஞர்கள் காலத்திற்கு ஏற்ப தத்துவப்படுத்தி செயலாற்றினாரகள். அவர்கள் இல்லாமல் கிறித்துவ சமூகம் தோன்றி இருக்காது. அதுபோலவே நபிகள் நாயகமும். அல்பாரபி[4] இசுலாமிய தத்துவ அறிஞர்களின் பங்களிப்பையும் முக்கியத்துவத்தையும் எழுதியிருக்கிறார். இது பண்டைய சமூகங்களுக்கு மட்டுமல்ல, இன்றைய நவீன சமூகங்களிலும் தத்துவங்களின் பங்கைக் காணலாம். சில உதாரணங்களைப் பார்ப்போம்.
பிரிட்டனின் தத்துவ வெற்றிகள்:
பிரான்சிசு பேக்கன் (Francis Bacon) சோதனையியலின் (Empiricism ) தந்தை எனப் பரவலாக அறியப்பட்டவர். ஆனால் அவர்தான் பிரிட்டீசு ஏகாதிபத்தியம் உருவாகக் காரணமாக இருந்த அரசியல் தத்துவமேதை என்பது பலர் அறியாதது. அவர் பிரிட்டீசு ஏகாதியபத்தியத்தின் தேவைக்கான காரணங்களாக பின்வருபவற்றை முன்வைக்கிறார்:
- நாடுகளுக்கு இடையேயான போட்டியில், ஏகாதிபத்தியமாக வளராவிட்டால், நாம் மற்ற ஏகாதியபத்திய நாடுகளுக்கு அடிமையாக நேரிடும். ஏகாதிபத்தியம் உருவாக்குவது பிரிட்டனின் கடமை.
- ஏகாதிபத்தியம் அமைக்க எளிமையான வழி என்பது வர்த்தகர்கள், கண்டுபிடிப்பாளர்கள், கடலோடிகள், சட்டநிபுணர்கள் கொண்டு உருவாக்குவதுதான்.ஏகாதிபத்தியம் என்பதை மக்களை அடக்கும் ஆற்றல் (despotic power) என்று பாராமல், முற்றிலும் வணிக நோக்கில் அணுகவேண்டும். இவர்கள் ஏகாதிபத்தியத்தை மற்றும் உருவாக்காமல், முன்னேறிய உலகத்தைப் படைப்பார்கள்.
- அறிவியலின் மூலம் இயற்கையை கட்டுப்படுத்தும் ஆற்றலை அடையும்பொழுதே, உலகை ஆளும் வலிமையைப் பெறுவோம். அதற்கு கண்டுபிடிப்பாளர்கள் முக்கியமானவர்கள்.
- நல்லிணக்கம் (tolerance) என்பது அறம் மட்டுமன்று அது ஒரு சிறந்த ஒரு உத்தி. அதன் மூலம் பல்வேறு நாடுகளின் மக்களின் துணையுடன் வலிமை பெறலாம்.
- உலகை நாகரீகமாக்குதல், அறிவியல் சிந்தனையை உலகில் பரப்புதல், வர்த்தகம் மூலம் உலகை இணைக்தல் ஆகியவை முக்கியமானது. பழைய மூடம்பிக்கைகளிலிருந்து உலகைவிடுவிக்கும் போர்தான் உண்மையான புனிதப்போர் என்று அறிவித்தார். அதுபோன்ற போர்தான் நியாயமானது.
இந்த உத்திகளின் அடிப்படையில்தான் பிரிட்டீசு ஏகாதிபத்தியம் உருவாகி உலகை ஆண்டது. உலக வரலாற்றில் உருவாகிய மிகப்பெரிய ஏகாதிபத்தியம் இதுதான். அவர்கள் இந்தியாவில் வணிகம் செய்து நாட்டைப் பிடித்தது, கல்வியைப் பரப்பியது, அணைகளைக் கட்டியது, இருப்புப்பாதைகளை நாடு முழுதும் கட்டியது, உடன்கட்டையை தடை செய்தது, மதநல்லிணக்கத்தைப் பேணியது எல்லாம் பேக்கனின் தத்துவங்களின் அடிப்படையிலேயே. பிரித்தாளும் சூழ்ச்சி என்பது ஒரு சிறிய பங்குதானே ஒழிய, அது முதன்மையான உத்தி அல்ல.
பிரிட்டனின் வரலாற்றில் இருந்து இன்னொரு உதாரணம்:
பிரிட்டன் ஐரோப்பா பெருநிலப்பரப்பை ஒட்டிய தீவாக இருந்தும், யாரும் அதை ஆக்கிரமிக்க முடியவில்லை. இதற்கான காரணம் என்பது பிரிட்டனின் ஆற்றல் சமநிலை தத்துவம். இதன் நோக்கம் என்னவென்றால் ஐரோப்பா பெருநிலப் பரப்பில் எந்த ஒரு நாடும் ஏகபோக வலிமை வாய்ந்த நாடாக மாறிவிடக்கூடாது என்பதுதான். ஏதாவது ஒரு நாடு வலிமை பெறுகிறது என்றால், பிரிட்டன் அதன் வலிமையை சமப்படுத்துவதற்கு அவர்களின் எதிரியுடன் கைகோர்க்கும். அதற்கான போர் நடந்தால், பிரிட்டன் பங்கேற்கும். போர் பிரிட்டனுக்கு வராமல் இருக்கவேண்டும் என்றால், பிரிட்டன் ஐரோப்பா பெருநிலப் பரப்பில் போர் புரிந்துதான் ஆகவேண்டும் என்பது கொள்கை. யாரும் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை. யார் அதிக வலிமையாகிறார்களோ, அவர்கள் எதிரி. அவர்களின் எதிரி, பிரிட்டனின் நண்பன்.
தமிழ்த் தேசியமும் ஓரளவு பிரிட்டனின் நிலைதான். தமிழ்த் தேசத்தின் உரிமைகள் என்பது பலமான மத்திய அரசால் கிடைக்கப்போவதில்லை. எவ்வாறு மற்ற மாநிலங்களின் துணையுடன் அவர்களை பலமிழக்க வைப்பது, அவர்களின் ஆற்றலைக் கட்டுப்படுத்துவது என்பதை நோக்கியே இருக்கவேண்டும். தமிழ் நாட்டில் மட்டும் அரசியல் செய்து உரிமைகளை வென்று விடலாம் என்பதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றுவது. நமது அரசியல் தில்லியிலும், பஞ்சாபிலும், வங்கத்திலும், கர்நாடாக, ஆந்திரா, மற்ற அண்டைய நாடுகள் என்று நடக்கவேண்டும். பண்டைய தமிழகம் ஓரளவு சுதந்திரமாக இருந்ததற்குக் காரணம் கூட, இந்தியாவில் வலிமையான ஒற்றை அரசு இல்லமால், பல சிற்றரசுகளாக இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். இதுதான் தமிழ்த் தேசியத்தின் வெளியுறவுக் கொள்கையாக இருக்கவேண்டும்.
இரண்டாம் உலகப்போர்:
இரண்டாம் உலகப்போர் பேரழிவுகளை உருவாக்கியது. இது ஆழமான உணர்வுகளை ( தயனிசியன்) சிந்தனையாளர்களிடம் உருவாக்கி அவர்களை சிந்திக்க (அப்பலோனியன்) வைத்தது. அவர்களை உருவாக்கிய தத்துவங்கள்தான் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரான உலக ஒழுங்கைத் தீர்மானித்திருக்கிறது. அவர்கள் எழுதிய முக்கியமான மூன்று நூல்கள் கீழே [1,2,3] உள்ளன.
இவற்றின் அடிப்படைத் தத்துவம் என்பது இதுதான்: உலகப் போர்கள் உருவாக்கிய தீமை மீண்டும் ஏற்படக் கூடாது. போர்கள் என்பது வலிமையான தலைமையால், உறுதியான குறிக்கோள்களால், குழு ஒற்றுமையால், உறுதியான உண்மைகளால ஏற்படுகிறது. அமைதியான உலகை உருவாக்க வேண்டுமென்றால் இவை கூடாது. உறுதியான உண்மை என்பது எதுவும் கிடையாது. அனைத்துமே கேள்விக்கு உட்படுத்தப் படும். உறுதியான உண்மை எனக்கூறும் அனைத்து சித்தாந்தங்களும் இறை நம்பிக்கைகளும் பின் தள்ளப்பட்டு, கேள்வி கேட்பது முன் நிறுத்தப்பட வேண்டும். தேசியம் என்பது ஆபத்தானது. தனிமனித சுதந்திரம்தான் முதன்மையானது. தனிமனிதர்களின் சுயநலத்திற்குத் தான் நாடு. தனிமனிதர்களின் நலத்தை முதன்மைப் படுத்த அரசுகள் மிகக்குறைந்த அதிகாரம் உள்ளவையாக இருக்கவேண்டும். பலமான அரசு என்பது சர்வாதிகாரப் போக்கிற்கு வழிவகுக்கும். சந்தைப் பொருளாதாரம் தான் தனிமனித சுதந்திரத்தை உறுதிப் படுத்தும். மனித சமூகங்களுக்கு பெரிய உயர்ந்த குறிக்கோள்கள் கூடாது; அவை போருக்கு வழிவகுக்கும். தனிமனிதர்கள் தங்களின் நலன் என்ற குறுகிய குறிக்கோளில் செயல்பட்டால் அமைதி நிலவும். அறம் என்பது நாம் நமது நன்மைக்காக தீர்மானிப்பது. வரலாற்றின் வழியாக வரும் அறம் என்பது மனிதனின் சுதந்திரத்தைப் பறிக்கின்றன, அவை தளர்த்தப் படவேண்டும். அதற்கேற்ப கல்வித் திட்டம் உருவாக்கப்பட்டு மக்களை மாற்றவேண்டும்.
இவர்களின் சிந்தனை போர் அழிவுகளைத் தடுப்பது என்பதை நோக்கியது. தேசியம் என்பதே தீங்கானது என்ற பார்வை கொண்டது. இதன் பக்க விளைவாக தேசிய சிந்தனைகள் மேற்குலக நாடுகளில் வெகுவாக வலுவிழந்துவிட்டது. அவர்கள் தேசிய அடையாளங்களை அழித்து ஐரோப்பிய யூனியனை உருவாக்கி புதிய அடையாளத்தில் சேர்கிறார்கள். உலகின் பல்வேறு மக்களைஉள்ளுக்குள் குடியேற்றி “பல்கலாச்சார நாடாக” மாற்றுகிறார்கள். இது அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட முடிவு. இது நல்லதா கெட்டதா என்பதை காலம்தான் கூறும். இன்றைய பல தத்துவமேதைகளின் பார்வையில் இது அவர்களின் இருப்புக்கு பேராபத்துக்களை உருவாக்கும் [7]. உலகப் போர் அழிவுகளைத் தடுக்கத் தற்கொலைதான் வழி என்றால் என்ன செய்வது. இது போன்ற தத்துவங்கள் நமக்குத் தேவையில்லை. அது நமது தயனிசிய குறிக்கோள் அல்ல. இந்த உதாரணத்தை ஏன் சொல்கிறேன் என்றால், தயனிசிய உணர்வுகள் அவர்களை அவ்வாறு தூண்டி செயல்படுத்தி இருக்கிறது. அக்குறிக்கோளில் அவர்கள் வெற்றியும் அடைந்திருக்கிறார்கள்.
நான் இவற்றைக் கூறுவது தத்துவத்தின் வலிமையை எடுத்துக்காட்டவே. நாம் சரியான தத்துவ சிந்தனைகள் இல்லாமல், எவ்வாறு நமது குறிக்கோள்களை அடையப்போகிறோம், மாவீரர்களின் கனவினை நிறைவேற்றப் போகிறோம். நாம் நமது சூழலுக்கு ஏற்ற சரியான தத்துவங்களை உருவாக்கி செயல்படாவிட்டால் அது பெரும் பின்னடைவுகளை உருவாக்கும். நமது அரசியல் தத்துவம் என்பது ஆழமான கற்றலின் ஆய்வுகளின் அடிப்படையில் அமைக்கப்படவேண்டும். இன்று நமது சிந்தனைகள் அவ்வாறு இல்லை என்றுதான் என்னுடைய பார்வையில் தோன்றுகிறது.
நூல்கள்:
- Open Society and Its Enemies – Karl Popper
- The Road to Serfdom – Frederic Hayek
- Capitalism and Freedom – Milton Freedman
- Strauss, Leo, and Joseph Cropsey, eds. History of political philosophy. University of Chicago Press, 2012.
- Kissinger, Henry. World order. Penguin Books, 2015.
- Nietzsche, Friedrich. The birth of tragedy.
- Burnham J. Suicide of the West: An essay on the meaning and destiny of liberalism. Encounter Books; 2014 Nov 25.