உண்மையா தீமையா? 

அனைத்து சிந்தனையாளர்களும் அறிவுசீவிகளும் அடிப்படியில்  இரு அடிப்படைக் கருதுகோள்களுக்கு  முக்கியத்துவம் அளிக்கிறார்கள். 

1.  தீமையைக் குறைப்பது, நன்மையைப் பெருக்குவது. ( minimizing harm  or maximizing happiness ) 

2.  உண்மையைப் பெருக்குவது ( maximizing  truth ) 

இவை இரண்டும் அறத்தின் அடிப்படை. அனைத்து சிந்தனையாளர்களும் இவற்றை ஏற்றுக்கொண்டாலும், அவர்களின் சிந்தனைகள் எதிரும் புதிருமாக இருக்கிறது. இச்சிக்கலுக்கு ஒரு முக்கிய காரணம் என்னவென்றால், அவர்கள் மேலுள்ள இரண்டில் எதற்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதுதான்.   

முக்கியத்துவத்தின் அடிப்படையில் அறம் சார்ந்த சிந்தனைகளை இருவகைகளாகப் பிரிக்கலாம். 

அறம் A:  தீமையைக் குறைப்பது, நன்மையைப் பெருக்குவது என்பதுதான் அதிமுக்கியமானது. உண்மை என்பது அதற்குப் பின்புதான். உண்மை என்பது  தீமையை உருவாக்கும் என்றால், அந்த உண்மையைை மறுக்கவேண்டும். 

அறம் B: உண்மையைப் பெருக்குவதுதான் அதிமுக்கியமானது. அதன்பின்புதான் நன்மை தீமைக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும். 

இவை இரண்டும்  உண்மைக்கும், நன்மை தீமைக்கும் முக்கியத்துவம் அளித்தாலும், எது முதன்மையானது என்பதில் முற்றிலும் மாறுபடுகின்றன. அதனால் அவை எதிரும் புத்திரமான விளைவுகளை உருவாக்குகிறது. அறம் என்பது அடிப்படையில்  நாம் எது போன்ற கருத்துக்களைக் கொண்டிருக்கிறோம் என்பதல்ல, மாறாக அவற்றை எவ்வாறு முக்கியத்துவத்தின் அடிப்படையில் அடுக்கிறோம் என்பதிலேயே இருக்கிறது என்கிறார்கள் தத்துவமேதைகள்.  

இவை இரண்டில் எது சரியானது என்பது அதிமுக்கியமான கேள்வி. இவற்றில் தவறான பாதையை எடுத்தால்,  அது நம்மை பேரழிவுக்கு இட்டுச்செல்லும்.  தமிழ்த்தேசியம் வெற்றியடைய வேண்டும் என்றால், நமது சிந்தனை முறையில் தெளிவு வேண்டும்.  இக்கட்டுரையின்  நோக்கும் இந்த சிக்கலுக்குத் தீர்வு காண்பதுதான். 

1.  அறம் A  என்பதைப்   பொதுவாக தமிழ் சமூகம் உட்பட அனைத்து சமூகங்களிலும் காணலாம்.  வள்ளுவரின் பின்வரும்  குறள்கள் இவற்றைத் தெளிவாகக் கூறுகிறது: 

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் 

தீமை இலாத சொலல்.   ( 291)  

வள்ளுவர் ஒருபடி மேலே போய்  உண்மை என்பதே தீமை இல்லாதவற்றை சொல்வதுதான் என்கிறார். 

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த 

நன்மை பயக்கும் எனின். (292) 

பொருள்: குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம்.  

ஆயிரம் பொய்களைக் கூறி ஒரு திருமணத்தை செய்து வைக்கலாம் என்பதெல்லாம் இதன் அடிப்படையில்தான். உண்மை என்னவென்றால ் பொய் என்பதே  ஒரு சமூகத்தில் இல்லையென்றால், அந்த சமூகமே இயங்க முடியாது.  பல நட்புக்களும், திருமணங்களும், சொந்த பந்தங்களும்   இன்முகப் பொய்களினால்தான் நிலைத்து நிற்கின்றன. வள்ளுவர் கூறுவதில் பேருண்மை இருக்கிறது. 

ஆனால்,  நாம் எதிர் நோக்கும் கேள்வி என்பது ஒரு சமூகத்தை வழிநடுத்தும்  சிந்தனையாளர்கள், அறிவுசீவிகள் இவ்வாறு சிந்திக்கலாமா என்பதுதான்.  ஒரு பொய் சமூகத்தில் நன்மையை உருவாக்கும் எனக் கருதி,  அறிவுசீவிகள் உண்மைகளை மறுத்து  பொய்களைப் பரப்பலாமா?  இது ஏதோக் கல்லூரித் தேர்வுக்கான கேள்வி அல்ல. இது அன்றாடம் நடக்கும் சிக்கல். பல்வேறு அறிவுசீவிகள், இத்தத்துவத்தின் அடிப்படையில்  பொய்களை  சமூகத்தில் பரப்புகிறார்கள். இது சரியா? ஆழமாக ஆராய்ந்தால் இது ஒரு தவறான அறமற்ற செயல். இது போன்ற சிந்தனைகள்  தமிழ்த் தேசியத்தை அழிப்பத்தில் முனைப்புடன் செயல்படுகின்றன. ஏன் இத்தத்துவம் அறிவுசார் சிந்தனையாளர்களுக்குப் பொருந்தாது என விரிவாகப் பார்ப்போம். 

இனி  “அறம் A”   ஏன் தவறானது என பார்ப்போம்: 

அறம் A:  தீமையைக் குறைப்பது, நன்மையைப் பெருக்குவது என்பதுதான் அதிமுக்கியமானது. உண்மை என்பது அதற்குப் பின்புதான். உண்மை தீமையை உருவாக்கும் என்றால், அதை மறுக்கவேண்டும். 

1. இந்த அறத்தைப் பற்றி நாம் கேட்க வேண்டிய முக்கிய கேள்வி என்பது என்னவென்றால்  “ஒன்று நன்மையா தீமையா என எதைக் கொண்டு தீர்மானிப்பது? “. இக்கேள்விக்கான விடை என்பது  “உலகைப் பற்றிய அறிவு” அல்லது சுருக்கமாக   “உண்மை” என்று கூறலாம்.   எவர் ஒருவர் உண்மையைத் தெளிவாக அறிகிறாரோ அவரால் மட்டுமே சரியாக நன்மை தீமைகளை அறிய முடியும்.    உண்மையை அறியாதவனின் அறிவு தலைகீழாக இருக்கும். அவன் நன்மையை தீமையாகவும், தீமையை நன்மையாகவும் கருத வாய்ப்புகள் அதிகம். அவர்களைத் தான் முட்டாள்கள் அல்லது பைத்தியங்கள்  என்கிறது உலகம். உதாரணமாக ஒருவன் தேவையில்லாமல் நெருப்புக்குள்  கைவிடுகிறான் என்றால், நீ என்ன பைத்தியமா எனத்தான் யாரும் கேட்பார்கள்.  

அடிப்படையில் “அறம் A” என்பது ஏரணப் பிழையில் ( logical  error ) கொண்டு போய் நிறுத்துகிறது. நன்மை தீமையை உணர  உண்மை முதன்மையானது, அதனால்  உண்மையை  நன்மை தீமைக்குப் பின்னால் நிறுத்துவது ஏரணப் பிழை. 

  1. இது ஏரணப் பிழை என்றால் சமூகத்தில் நன்மைக்காக மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொய்களை எவ்வாறுப் புரிந்து கொள்வது? இதனைப் புரிந்து கொள்ள நாம் கேட்க வேண்டிய அடுத்த கேள்வி “நன்மை யாருக்கு, தீமை யாருக்கு?” 

உதாரணமாக ஒருவன் தன மனைவியைப் புகழ்ந்து பொய் சொல்கிறான் என்றால், அது அவனுக்கும் அவன் மனைவிக்கும் நன்மை பயக்கிறது. மனைவிக்கு அது பொய் என்று தெரிந்தாலும் மகிழ்ச்சி அடைகிறாள். இந்தப் பொய் நன்மையான பொய். 

ஒருவன் “உனக்கு வேலை வாங்கித் தருகிறேன், பணம் கொடு” என்ற பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றினால் அது அறமற்றது, சட்டப்படி குற்றமும் ஆகும். இதில் நன்மை பொய் சொல்பவனுக்கும், தீமை அதை நம்பியவனுக்கும் ஏற்படுகிறது.  

ஒருவன் தனது நெருங்கிய நண்பனின் நன்மைக்காக சில அறிவுரைகளைக் கூறுகிறான். அந்த அறிவுரைகளைப் பின்பற்றிய நண்பனுக்கு நட்டம் ஏற்படுகிறது. இது பிழையா? இங்கே எந்த ஒரு தீய எண்ணமும் இல்லை, ஆனால் தெரியாமல் செய்த தவறான அறிவுரைகள் பாதிப்பை உண்டாக்குகிறது. இங்கே இருவருக்கும் நன்மை இல்லை. அவர்களின் நட்பு முறியலாம், அல்லது நட்டத்தை பங்கு போடலாம். அடிப்படையில் இருவருக்கும் தீமை ஏற்படுகிறது. சமூகத்தில் இதுபோன்ற சிக்கல்கள் தவிர்க்க முடியாதது. இது தவறானது அல்ல. அடிப்படையில் அறியாமல் கூறும் பொய்களினால் உருவாகும் தீமை தனக்கும் தனது குறுகிய நட்பு வட்டத்திற்கும் ஏற்படுகிறதென்றால், அது சரியானதே. மக்களும் இதுபோன்ற சிக்கல்களில் தெளிவாகவே இருப்பர். தான் கூறும் அறிவுரைகள் தவறாக இருந்து நட்பு வட்டத்திற்கு பெருத்த நட்டம் ஏற்படும் என்றால், அதுபோன்ற அறிவுரைகளைக் கூறமாட்டார்கள். 

மொத்தத்தில் தனது பொய் அல்லது செயல் தெரிந்தோ தெரியாமலோ தீமையை உருவாக்கும் என்றால், அத்தீமை தனக்கு ஏற்படுவதாக இருக்கவேண்டும். அதுவே அறமானது. இதை நசீம் தலிப்பு “Skin in the game” என்கிறார். 

பாகம் 4: 

3. இனி சமூக அறிவுசீவிகளுக்கு வருவோம். அவர்களை அவர்களை மேற்கூறிய தத்துவங்களின் அடிப்படையில்  பின்வருமாறு வகைப் படுத்தலாம்  

1 ஒட்டுண்ணிகள்: தமிழ் சமூகத்தில் ஏராளமான அறிவுசீவிகள் தெரிந்தே பொய் கூறுகிறார்கள். அந்தப் பொய்யினால் அவர்களுக்கு இலாபம் ஏற்படுகிறது, தீமை என்பது ஒட்டு மொத்த மக்களுக்கு ஏற்படுகிறது. இது அறமற்ற செயல். அப்படிப்பட்டவர்களை அறிவுசீவிகள் என்று கூறுவதே தவறானது. அவர்கள் ஏமாற்றுப் பேர்வழிகள், இரத்தத்தை உறிஞ்சும் ஒட்டுண்ணிகள். பெரும்பாலான தமிழ் அறிவுசீவிகளை இதில் அடக்கிவிடலாம். 

2. முட்டாள்கள்: சில உண்மைகள் சமூகத்திற்கு தீங்கை உருவாக்கும் என உண்மையை மறைப்பார்கள். அதேபோல சில பொய்கள் நன்மைகளை உருவாக்கவும் என அவற்றைப் பரப்புவார்கள்.    இங்கே சிக்கல் என்னவென்றால், அவர்களின் அறிவு தவறாக இருந்து அவர்கள் “மறைக்கும் உண்மைகள்” அல்லது “பரப்பும் பொய்கள்”  அதிக தீமையை உருவாக்கினால் என்னவாகும்? உதாரணமாக பல அறிவுசீவிகள் “சமூக நன்மைக்காக” திராவிடக் குடும்பத்தின் குற்றங்களைக் கண்டுகொள்வதில்லை. இது தவறாக இருந்தால் என்னவாகும்? இலாபம் திராவிடக் குடும்பத்திற்கும், தீங்கு சமூகத்திற்கும் ஏற்படும். உண்மைகளை மறைக்கும் அறிவு சீவிகளுக்கு எந்தத் தீமையும் ஏற்படாது. அவர்கள் பல விருதுகளை வாங்கி நல்ல பெயர் எடுத்திருப்பார்கள். இது அறமற்றது. இந்த அறிவுசீவிகள் தங்களது அறிவின் குறுகிய எல்லையை உணர்ந்திருக்க மாட்டார்கள். பெரும்பாலும் கிணற்றுத் தவளைகளாக இருப்பார்கள்.  

3, நல்லவர்கள்: இவர்களுக்கு உண்மை தெரியும், ஆனால் உண்மையைக் கூறினால் தனக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறமாட்டார்கள். அதனால் பொய்கள் பரவி சமூகத்திற்கு ஏற்படும் தீங்கைத் தடுக்க மாட்டார்கள். இவர்கள் எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டார்கள். சமூகத்தில் நல்ல பெயர் எடுப்பது முக்கியம். அதனால் யாரையும் பகைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள். உண்மை பேசினால் பலரைப் பகைக்க வேண்டும் என்ற நிலை ஏற்ப்படும் என்றால், அதைப்பற்றி பேசமாட்டார்கள். தங்களால் சமூகத்திற்கு என்ன நன்மையை செய்ய முடியுமோ, அதைத் தொடர்ந்து செய்வார்கள். 

4. உண்மையானவர்கள்: 

உண்மையான அறிவுசீவி என்பவன் தனது அறிவின் எல்லையை விரிவாக்கிக் கொண்டே செல்வான். தனது சிந்தனையின் தவறுகளைத் தொடர்ந்து களைந்து கொண்டே செல்வான். தனது கருத்துக்களை யாருக்கும் அஞ்சாமல் கூறுவான். அதனால் தனக்குத் தீங்கு ஏற்படும் என்றாலும் உண்மையை சொல்லத் தயங்க மாட்டான். அவன் சமூக நன்மையை முதன்மையாகக் கருதுவான். தான் கொண்ட கருத்துக்களுக்கு எதிராக ஒருவன் கூறினால், அதில் உண்மை இருக்குமோ எனக் கூர்ந்து ஆராய்வான். கண்ணை மூடிக்கொண்டு தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என இருக்க மாட்டான். தனது சமூகமே தான் கூறுவதை எதிர்த்தாலும், அச்சமூகத்திற்கு நன்மை பயக்கும் என்றால் உண்மையைக் கூறத் தயங்க மாட்டான். ஏனெனில் அவன் உண்மையை முதன்மையாக நிறுத்துவான். அதன் மூலமே சமூகத்திற்கு நன்மையை உருவாக்க முடியும் என அறிந்து செயல்படுவான். 

ஒரு அறிவுசீவி உண்மையானவனா இல்லையா என்பதைக் கண்டறிவதற்கு ஒரு அடிப்படைத் தகுதி முக்கியமானது: அவன் தனக்குத் தீமையை உருவாக்குகிறானா என்பதுதான் அது. அடிப்படையில் அவனுக்கு “skin in the game” உள்ளதா எனப்பார்க்க வேண்டும். தலைவர் உண்மையானவராக இருந்தார், தனது முழுக் குடும்பத்தையும் உண்மைக்காக பலிகொடுக்கத் தயங்கவில்லை. அப்படிப்பட்டவர் ஒரு பொய் கூறினாலும் ஆயிரம் உண்மைகள்/நன்மைகள்  அதில் மறைந்திருக்கும். 

A வகை சிந்தனைக்கும்  B  வகை சிந்தனைக்கும்  உள்ள சில முக்கிய பண்புகளைப் பார்ப்போம். 

1. A   வகை சிந்தனையாளர்கள்   பெரும்பாலும் உணர்வுகளால் ( feelings) இயங்குகிறார்கள். ஒரு சிந்தனை அல்லது செயல் எதுபோன்ற உணர்வுகளை ஏற்படுத்துகிறது என்று பார்ப்பார்கள். நல்ல உணர்வுகள் என்றால் ஆதரிப்பார்கள்,  இல்லையென்றால் எதிர்ப்பார்கள். அவர்களின் சிந்தனை பெரும்பாலும் பகுத்தறிந்து வருவதல்ல, உணர்வுகளால் வருவது.  B  வகை சிந்தனையாளர்கள் பகுத்தறிவை முதன்மைப் படுத்தி தீவிரமாக ஆராய்வார்கள். அவர்கள் தங்களின் உணர்வுகளையோ  மற்றவர்களின் உணர்வுகளையோ   பெரிதாக கருத்தில் கொள்ள மாட்டார்கள். உண்மைதான் முக்கியம், உணர்வுகள் அதன் பின்னர்தான். உண்மையை உணர்ந்தபின், அவ்வுண்மைக் கேற்ப தங்களின் உணர்வுகளையும் மாற்றிக்கொள்வார்கள். 

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் 

கல்லார் அறிவிலா தார் – 140 

இந்தக்குரள்  முதல் வகை சிந்தனையாளர்களுக்குப் பொருந்தும்; இரண்டாம் வகையினருக்குப் பொருந்தாது.  உண்மை என்பதை உலகே எதிர்த்தாலும், B  வகையினர் கூறத் தயங்க மாட்டார்கள். 

2.  A  வகை சிந்தனையின் தீமையை  பல அறிவாளிகள் கூட உணருவதில்லை. உதாரணாமாக,  CHAT -GPT  என்ற  செய்யறிவை உருவாக்கியவர்கள், மக்களின் உணர்வுகளுக்கு ( A  அறம்)  முக்கியமளித்து வடிவமைத்தார்கள்.  ஒருவர் அதனிடம் பின்வரும் கேள்வியைக் கேட்டார்.  “எது மோசமான ஆபத்து?   ஒரு ஆணைத் தவறாகப்  பெண் என்று  அழைப்பதா, இல்லை ஆணு ஆயுதப் போரா?”  அதற்கு CHAT -GPT “ஒரு ஆணைத் தவறாகப்  பெண் என்று  அழைப்பது” என்றது.  இது ஒரு அபத்தமான விடை. இங்கே மேற்குலகில் பாலினத்தை மாற்றி அழைப்பது பெரும் தவறாகப் பார்க்கப்படுகிறது. அதற்கு முக்கியத்துவம் அளித்து  CHAT -GPT அபத்தமான விடையை அளித்தது.  செய்யறிவோ  அல்லது மனித அறிவோ,   A  முறைப் படி சிந்தித்தால் அது ஆபத்தான முடிவுகளையே உருவாக்கும். எந்த ஒரு அறிவும் உண்மைக்கு முதன்மைத்துவம் அளிக்கவேண்டும். அதற்குத் தான் ஆபத்துக்களை குறைக்கும் தன்மை உண்டு.  இலான் மசுக்கு இந்த சிக்கலை உணர்ந்து,  உண்மையை முதன்மைப் படுத்தும் செய்யறிவை ( XAI – GROK)  உருவாக்கிக் கொண்டிருக்கிறார். 

3.  உண்மையை அறிய கருத்துச் சுதந்திரம் முதன்மையானது. எப்படிப்பட்ட கருத்தையும் சொல்வதற்கு உரிமை இருக்கவேண்டும். சில கருத்துக்கள் ஆபத்தானது என பேச்சுக்களை தடை செய்தால், அது உண்மைக்குத் தடங்கலாக அமையும். A  வகை சிந்தனையாளர்கள்,  தங்களின் பார்வையில் தவறாகத் தோன்றும் கருத்துக்களுக்குத் தடை விதிக்க  முனைவர். அவர்கள் கட்டற்ற கருத்துச் சுதந்திரத்தை எதிர்ப்பவர்கள்.  B  வகை சிந்தனையாளர்கள் கட்டற்ற கருத்துச் சுதந்திரத்தை விரும்புபவர்கள். 

4. உண்மை என்பது எதிர் நொறுங்கும் ( Anti-fragile) தன்மை கொண்டது.  உண்மையைத் தாக்கத் தாக்க அது பலமடையும். பொய் என்பது நொறுங்கும் தன்மை கொண்டது.  கருத்துச் சுதந்திரத்தை எதிர்ப்பவர்கள் பெரும்பாலும் பொய்யான கருத்துக்களைக் கொண்டிருப்பர். உதாரணமாக  பல மதங்கள், நாத்திகர்களைத் தடை செய்கிறது, மரண தண்டனை விதிக்கிறது.  பல அறிவியலாளர்கள்  உண்மையைக் கூறியதற்காக எரிக்கப்பட்டிருக்கிறார்கள். அவ்வளவு எதிர்ப்பையும் தாண்டி அறிவியல் வளர்ந்துகொண்டுதான் செல்கிறது. உண்மையை உடைக்க முனைவது,  அதன் பலத்தை கூட்டிவிடும்.  கட்டற்ற கருத்துச் சுதந்திரம் உள்ள நாடுகளில்  பொய்கள் வெகு வேகமாக நொறுக்கப்படும், உண்மைகள் வேகமாகப் பரவும். மேற்குலகம்  வல்லரசாக, பல சாதனைகள் புரிந்ததற்கு முக்கிய காரணம் கட்டற்ற கருத்துச் சுதந்திரமே என்று பல சிந்தனையாளர்கள் கருதுகிறார்கள். இன்று மேற்குலகில் A வகை சிந்தனைகள் தலைவிரித்தாடுகிறது. இது மேற்குலகை பாதாளத்தில் வீழ்த்தும் என பலர் அஞ்சுகிறார்கள். 

5.  A  வகை சிந்தனையாளர்களுக்குக் அறிவடக்கம் ( intellectual  humility) என்பது இல்லை. தங்களின் அறிவு தவறாக  இருக்கலாம் என்று நினைக்க மாட்டார்கள். மாறாக அவர்களுக்கு உணர்வுகள்தான் முக்கியம். அவர்களின் உணர்வுகளுக்கு எதிரானவற்றை எதிர்ப்பார்கள். B  வகை சிந்தனையாளர்கள் தங்களின் அறிவில் பிழை இருக்கலாம், எனத் தொடர்ந்து அறிவைத் தேடுவார்கள். அவர்கள் தங்கள் உணர்வுகளுக்கோ, மற்றவர்களின் உணர்வுகளுக்கோ முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள். அவர்கள் மற்றவர்களுக்கு அடங்க மாட்டார்கள்,  ஆனால் அறிவடக்கம் அவர்களுக்குத்தான் அதிகம். அறிவடக்கம் வேறு,  வெறும் அடக்கம் (பணிவு) என்பது வேறு. அறிவாளர்களுக்கு அறிவடக்கம்தான் முதன்மையானது,  அதே நேரம் அவர்களுக்கு அடக்கமின்மை என்பது தேவையானது. அப்பொழுதுதான் பொய்களை உடைக்க முடியும். 

 தத்துவமேதை சாக்ரட்டீசு தன்  வாழ்நாள் முழுவதும்  உண்மைகளைப்  பரப்பி சோபிசுட்டுகளின் பொய்களை உடைத்துக் கொண்டிருந்தார். அதனால் பலரின் பகையை சம்பாத்தித்து, அதன் விளைவாக தேவையில்லாமல் வழக்குத் தொடுக்கப்பட்டு   அவருக்கு  மரண தண்டனை விதிக்கப்பட்டது .  இறப்பதற்கு ஒரு மணிநேரம் முன்புவரை கூட  நண்பர்களுடன் தத்துவம் பேசிக்கொண்டிருந்தார். பேசி முடித்துவிட்டு எங்கே நஞ்சு என்று காவலாளியிடம் கேட்டு வாங்கிக் குடித்துவிட்டு படுத்துக்கொண்டார்.  அன்றிலிருந்து இன்றுவரை  உண்மையானவன் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கு சாக்ரட்டீசு இலக்கணமாக இருக்கிறார்.  

தமிழுலகத்தில் அப்படிப்பட்ட உண்மையான  அறிவாளிகள் தோன்றி இருக்கிறார்களா என நீங்கள் கேட்கலாம். எனக்குத் தெரிந்தவரை “தராக்கி சிவராம்” அவர்களை விஞ்சிய அறிவாளி தமிழுலகத்தில் நான் பார்த்ததில்லை. ஈழப் போராட்டத்தின் நியாயங்களை, புலிகளின் நியாயங்களை, போரியல் அரசியல் ஆய்வுகளை  கொழும்பில் இருந்துகொண்டே எழுதிக் கொண்டிருந்தார். அவரால் இயக்கத்திற்கும் நன்மை, தமிழ் மக்களுக்கும் நன்மை. அதன் விளைவாக இலங்கை அரசைப் பகைத்துக் கொண்டார்.  தான் எப்பொழுதும் கொல்லப்படலாம் எனத் தெரிந்துகொண்டே  துணிவுடன் எழுதிக் கொண்டிருந்தார்.  முடிவில் அவர் எதிர்பார்த்தபடியே,  இலங்கை அரசு ஒட்டுக்குழுக்களின் உதவியுடன் அவரைக் கொலை செய்தது.  தமிழுலகத்தில் ஒரு உண்மையான அறிவாளி எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கு  அவர்தான் இலக்கணம். அதுபோல பாரதியார் அவர்களும்  தான் வாழ்நாள் முழுதும் எழுதி அரசையும் தான் சாதி மக்களையும் பகைத்துக் கொண்டார்.  அவரின் எழுத்துக்கள் இந்தியா விடுதலை ஆன  பின்பே பிரபலம் அடைந்தன. அவர் உண்மையைக்கூற பழிச்சொற்களுக்கு அஞ்சவில்லை. தனது எழுத்துக்கள் மூலம்  தனக்கு ஆபத்தை ஏற்படுத்திக் கொண்டார். ஒரு சிந்தனையாளன் உண்மையானவனா என்பதற்கான அடிப்படைத் தகுதியே   ” அவன் தனக்கு ஆபத்தை” ஏற்படுத்திக் கொள்கிறானா என்பதுதான்.  

6.  சில உண்மைகள்  மோசமான உணர்வுகளை உருவாக்கும் என்றால், A  வகை சிந்தனையாளர்கள் அந்த  உண்மைகளைக் கண்டும் காணாமல் விட்டுவிடுவார்கள். இது  ஆபத்தைக் கண்டால், தனது தலையை மண்ணுக்குள் புதைக்கும் ஆசுற்றிச்சு பார்வையைப் போன்றது.  A -வகை சிந்தனையாளர்கள் சமூகத்திற்கு ஆபத்தானவர்கள். 

7. ஒன்றை முக்கியமாக கவனிக்க வேண்டும்.  எவராலும் முழு உண்மையை உணர முடியாது, அனைவரின் அறிவும் முழுமையற்றதே. அதனால் “உண்மையானவர்களின்” அறிவிலும் பிழை இருக்கலாம், அவர்களின் உண்மை பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் அவர்கள் மற்ற அனைவரையும் விட சிறந்தவர்கள் என்பதற்கு முக்கிய காரணங்கள்: 

–  அவர்கள் தொடர்ந்து அறிவை வளர்த்துக்கொண்டு செல்வதால், அவர்கள் மற்றவர்களைவிட அறிவானவர்கள். அறிவு என்பது தீமையைக் குறைப்பதற்கு அடிப்படை என்பதால்,   அவர்களால் ஏற்படும் பாதிப்பு  குறைவு. 

–  அவர்களின் செயல்கள் அவர்களுக்கு  பாதிப்பை ஏற்படுத்தும்படி ( skin  in  the  game)  இருக்கும். அவ்வாறு செய்யும் மனிதன் எந்த சுயநலமும் இல்லாமல், துணிவுடன்  உண்மையாக செயலாற்றுகிறான் என நம்பலாம். மற்றவர்களை நம்புவது கடினம். நல்லவர்களைக் கூட நம்ப முடியாது. ஏனெனில் நல்லவனாக தோற்றப்பட விரும்புவது கூட சுயநலம்தான். அந்த சுயநலம் அவர்களின் நன்மைக்காக  பொய்கூற வைக்கும், அல்லது உண்மையை மறைக்க வைக்கும். அது சமூகத்திற்கு பெருந்தீங்காக முடியும். 

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

2 Responses to உண்மையா தீமையா? 

  1. Unknown's avatar Anonymous says:

    தங்களது கட்டுரைக்கு தான் நீண்ட நாட்கள் காத்திருந்தேன். மிக சிறப்பான கட்டுரை ஐயா. தொடர்ந்து எழுதுங்கள். தங்களது அடுத்த புத்தகம் பற்றிய தகவல்கள் ஏதேனும் உள்ளதா ஐயா.. -கதிர்வேந்தன்

    Like

    • Sethu's avatar Sethu says:

      மிக்க நன்றி. விரைவில் எழுதி முடிக்கவேண்டும். பெரிய ஒய்வு எடுத்துவிட்டேன். இப்பொழுது வருந்துகிறேன்.

      Like

Leave a comment