சுபார்ட்டா (Sparta) எனும் விசித்திர நாடும் புலிகளின் ஈழமும்

இவ்வுலகில் பல விசித்திரமான அரசியல் தத்துவங்களும் சோதனைகளும் தோன்றியுள்ளன, ஆனால் யாரும் கி.மு 800-இல் சுபார்ட்டாவில் நடந்த விசித்திரமான சோதனைகளைப்போல செய்திருப்பார்களா என்பது சந்தேகமே.  பிளேட்டோவின் “The Republic” என்ற நூலே சுபார்ட்டாவின் சோதனையிலிருந்து எடுத்துக்கொண்ட கருத்துக்கள்தான். இவ்வுலகில் தோன்றிய அனைத்து  (மார்க்சு உட்பட)  சமத்துவ கனவுதேச சித்தாந்தங்களின் மூலவேர் சுபார்ட்டா தான்.

அன்றைய சுபார்ட்டாவில் பெருளாதார வர்க்கவேறுபாடுகள் நிறைந்து பெருங்குழப்பம் நிலவியது. அரசு வலிமையற்றதாக இருந்தது. அந்நாட்டின் மன்னர் இறந்துவிட, அவரின் சிறுவயது மகன் ஆட்சிக்கு வருகிறார். அவருக்கு உதவியாக அவரின் சித்தப்பா இலைக்கர்கசு சிறப்பான ஆட்சி புரிகிறார், ஆனால் இலைக்கர்கசு அரசனைக் கொள்ள சதித்திட்டம் தீட்டுகிறார் என்று அரசரின் குடும்பத்தினர் கருத, அரசர் வளரும்வரை நாட்டைவிட்டு விலகி இருப்பதே நல்லது என்று வெளியேறுகிறார் இலைக்கர்கசு. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சுபார்ட்டாவை சிறப்பான நாடாக்க எதுமாதிரியான  சட்டதிட்டங்களை உருவாக்கவேண்டும் என ஆராய ஆரம்பிக்கிறார்.  அவர் உலகின் பலநாடுகளுக்கு சென்று அவர்களின் வரலாற்றிலிருந்து அனுபவங்களைக் கற்று  ஒரு புதிய சட்டதிட்டத்தை உருவாக்குகிறார் [1].

அதே நேரம் சுபார்ட்டாவில் குழப்பம் மேலும் கூடுகிறது. மக்கள் இலைக்கர்கசுதான் வேண்டும் என வேண்டுகின்றனர். தூதுவர்கள் பலதிசைகளுக்கும் அனுப்பப்பட்டு இலைக்கர்கசை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருகிறார்கள். அவர் தான் உருவாக்கிய சட்டதிட்டங்களை ஒரு சிறிய அறிவார்ந்த குழுவிடம் பகிர்ந்து அவர்களின் ஒப்புதல் மூலம் வெளியிட்டு செயல்படுத்துகிறார்.  ஒரு சமத்துவமான, பாலின பாகுபாடற்ற, படைத்திறனில் அனைவரையும்விட  வலிமையான,  எளிமையான, சுதந்திரமான, அனைவரது அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றும் நாட்டை உருவாக்குவதுதான் அவரது அடிப்படை குறிக்கோள். மொத்தத்தில் நாட்டையே தலைகீழாக புரட்டிப்போட்டு மாற்றினார்,

 1. அதுவரை நாடு மோசமான சர்வாதிகாரமாக இருந்தது அல்லது குழப்பமான மக்களாட்சியாக இருந்தது. அதனால் இலைக்கர்கசு இரண்டுக்கும் நடுவாக அறிவில் சிறந்த நெறியான 28 மூத்தவர்களைக் கொண்டு செனட் உருவாக்கினார். முக்கியமான விடயங்களில் அரசர் செனட்டின் ஒப்புதல் இல்லாமல் எந்த முடிவும் எடுக்க முடியாது. அரசரின் கடிவாளமாக செனட் செயல்பட்டது.

 1. பொருளாதார வேறுபாடுகளால்தான் ஏற்றத்தாழ்வுகள் உருவாகி நாடும் மக்களும் பலசிக்கல்களை எதிர்நோக்குகிறார்கள் என்று அனைவருக்கும் நிலங்கள் சரிசமமாகப் பங்கிடப்பட்டு பொருளாதாரத்தில் சமநிலையைக் கொண்டுவந்தார். அரசனுக்கும் அதே பங்குதான்.

 1. மக்களை சமநிலையில் வைத்திருக்க ஆடம்பரத்தை ஒழிக்கவேண்டும். அதற்காக தங்கம் வெள்ளியை தடை செய்து  நாணயங்களை ஒழித்து, இரும்பினால் ஆன பெரிய கனமான பணத்தைக் கொண்டுவந்தார். பணத்தை சேமிக்க வேண்டுமானால் மிகப்பெரிய அறை தேவைப்படும் அளவிற்கு பணம் மிகப்பெரியதாக கனமாக இருந்தது. வண்டியில்தான் அதைத்தூக்கிச் செல்லமுடியும். பணத்தை வைத்திருப்பதே பெரும் தொல்லை என்ற நிலைமை உருவானது.  இதனால் பல குற்றங்கள் காணமல் போயின. இதனால் வர்த்தகங்கள் அடிபட்டு வியாபாரிகள் வெளியேறினர். நாடு தற்சார்பு பொருளாதாரத்திற்கு மாறியது. எந்த நாட்டுடனும் பெரிதாக எந்த வர்த்தகமும் கிடையாது. பணமும் வர்த்தகமும்  இல்லாததால் ஆடம்பரத்திற்கு வாய்ப்பில்லை. தேவையான பொருட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன.  ஈலாட்சு (Helots) என்ற அடிமை மக்கள்தான் நிலங்களில் வேலைசெய்தனர். இது ஒன்றுதான் இன்று அவர்களைத் திருப்பிப்பார்க்கும் பொழுது அவர்கள் செய்த தவறு. அக்காலத்தில் அடிமைத்தனம் என்பது தவறு என்று உணரப்படாத காலம்; அடிமைத்தனம் அனைத்து நாடுகளிலும் காணப்பட்டது.  இன்றும் போற்றிப்புகழப்படும்  தத்துவமேதைகளான பிளேட்டோ அரிசுட்டாட்டில் தோன்றிய ஏதென்சிலும் அடிமைகள் இருந்தனர். அடிமைத்தனம் தவறு என்று இத்தத்துவமேதைகளும் கூறவில்லை.

 1. மேலும் ஆடம்பரத்தை ஒழிக்க பொதுவான உணவறைகள் உருவாக்கப்பட்டன. யாரும் வீட்டில் தனியாக சாப்பிடக்கூடாது, பொதுவாக மற்றவர்களுடன் சேர்ந்து ஆடம்பரமற்ற எளிமையான உணவைத்தான் சாப்பிடவேண்டும். அரசருக்கும் அதேதான்.

 1. பணத்தை ஒழித்ததால் சமூகத்தில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது ஒருவனின்  நடத்தையை வைத்து மட்டுமே எடை போடப்பட்டது.

 1. பழக்கவழக்கங்கள் மற்றும் பயிற்சிகள் மூலம் சட்டங்கள்  மக்களின் ஆழ் மனதில்  புகுத்தப்பட்டது.  அதனால் மக்கள் இயல்பாகவே சட்டங்களை மதித்தனர். சட்டம் என்று பயந்து யாரும் பின்பற்றவில்லை

 1. வீடுகட்ட பயன்படும் மரங்களை கோடாரியும் இரம்பமும் மட்டுமே கொண்டு வடிவமைக்கப்பட வேண்டும். அதில் எந்த ஆடம்பரமும் கூடாது. அதனால் மக்கள் மரத்தை வெட்டி அறுத்து அப்படியே வீடு கட்டினர். ஒருமுறை ஒருவர் வெளிநாடு சென்ற பொழுது, அங்குள்ள வீடுகளில் சதுரமான மரக்கட்டைகளைப் பார்த்து வியந்து, இங்குள்ள மரங்கள் சதுரமாக முளைக்கின்றனவா என்று கேட்டிருக்கிறார் என்றால் சுபார்ட்டனின் வீடுகள் எவ்வளவு எளிமையாக இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளலாம்.

 1. ஆண்களுக்கும் பெண்களும் சமம் என்று சட்டம் இயற்றப்பட்டது. எங்கும் சரி சமமாக திரியலாம், ஆடையற்று நிர்வாணமாகக் கூட செல்லலாம். நாட்டின் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்பதற்காக பெண்களுக்கு ஓட்டம், மல்யுத்தம், ஈட்டி எறிதல் பயிற்சிகள் வழங்கப்பட்டன. குழந்தைகள் நாட்டின் உடைமை, பெற்றோரின் உடமை அல்ல. பிறந்த குழந்தைகளை ஊர் பெரியவர்கள் பார்த்து ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே பெற்றோர்கள் வளர்ப்பதற்கு அனுமதிப்பர். பெண்கள் எந்த ஆண்களை வீரமானவர்கள் ஒழுக்கமானவர்கள் எனப் பார்த்தார்களோ அவர்களுக்கு புகழ் உருவானது. ஆண்களை பெண்கள் செம்மைப் படுத்தினார்கள். அடிப்படையில் பெண்கள் ஆண்களை ஆண்டார்கள். “நாங்கள்தான் உண்மையான ஆண்களை உருவாக்குகிறோம்” என்று பெருமிதம் கொண்டார்கள்.

 1. திருமணம் எளிமையாக நடத்தப்பட்டது. சொல்லப்போனால் திருமணம் என்பதே யாருக்கும் தெரியாமல்தான் நடக்கவேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது. மாப்பிள்ளை இரவில் யாருக்கும் தெரியாமல் மனமகளைக் கடத்திக் கொண்டு வரவேண்டும். பின் மணமகளின் தோழி மணமகளின் முடியை வெட்டி ஆண்போல உடையணிவித்து இருட்டறையில் விட்டுவிடுவாள். கணவன் யாருக்கு தெரியாமல் மனைவியிடம் வந்து செல்லவேண்டும். இவ்வாறு தெரியாமல்தான் பல நாட்கள் சந்தித்துக்கொள்வர். சிலர் இவ்வாறு குழந்தை பெற்று முடிந்தபின்தான் திருமணம் ஆனதையே அறிவிப்பர்.

 1. குழந்தைகளை துணிச்சலாக எதையும் எதிர்கொள்ளும்படி வளர்த்தனர். குழந்தைகளை  துணிகளில் சுற்றவில்லை, சுவையான உணவை ஊட்டவில்லை, இருட்டில் தனியாக படுக்கவைத்தனர்.

 1. ஏழு வயதில் சிறுவர்கள் தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு பொதுவான இடத்தில் கடுமையான பயிற்சிகள் அளித்து வளர்த்தெடுக்கப் பட்டார்கள். அவர்கள் அவர்களுக்குள்ளேயே அறிவிலும் போர்திறனிலும் சிறந்தவரை  தலைவரை தேர்ந்தெடுத்தார்கள்.

 1. அவர்கள் தெளிவாகவும் சுருக்கமாகவும் பேசும்படி வளத்தெடுக்கப் பட்டார்கள். இலைகர்கசிடம் எவ்வாறு எதிரிகளை அண்டவிடாமல் வைத்திருக்கப் போகிறீர்கள் என்பதற்கு “எளிமையையும் சமத்துவத்தையும் கொண்டு எதிர்ப்போம்” என்றார். அடிப்படையில் தங்கமும் வெள்ளியும் இல்லாத நாட்டை யாரும் கொள்ளையடிக்க வரப்போவதும் இல்லை. அப்படி எதிரி வந்தாலும் ஒரு அதி ஒழுக்கமான போர்திறம்மிக்க சமத்துவப் படையை எதிர்கொள்ளவேண்டும். உங்கள் நாட்டிற்கு கோட்டை என்றில்லாமல் எப்படி பாது காக்கப்போகிறீர்கள் என்பதற்கு, “வீரமுள்ள நாட்டிற்கு வீரம்தான் கோட்டை” என்கிறார்.
 2. கவிதைகள், இசை, பாடல்கள் ஆகியன வீரத்தையம் ஒழுக்கத்தையும் புகழும்படி அமைந்தது. அதே நேரம் கோழைத்தனத்தையும் ஒழுக்கமற்ற செயல்களையும் இகழ்ந்தது

 1. போர்க்காலத்தில் மட்டுமே விதிகளும் பயிற்சிகளும் தளர்த்தப்பட்டன. அப்பொழுதுதான் வீரர்கள் தங்கள் கவசங்களையும், முடியையும் அழகுபடுத்திக் கொள்ளலாம். உலகிலேயே சுபார்ட்டன் வீரர்களுக்கு மட்டும்தான் போர் என்பது எளிதாகவும் பயிற்சிக்காலம் என்பது கடினமாகவும் இருந்தது. பெர்சியப் பேரரசு கிரேக்கத்தின்மீது போர் தொடுத்தபோது, சுபார்ட்டாவின் லியோனாடைசு 300 வீரர்களுடன் வீராவேசமாக போரிட்டது இன்றும் உலகில் போற்றப்பட்டு வருகிறது. உலக இராணுவங்களுக்கு சுபார்ட்டா வீரர்களின் ஒழுக்கமும் படைத்திறமும் இன்றும் பாடமாக இருக்கிறது.

 1. சுபார்ட்டா வீரர்கள் தளபதியின் கட்டளையை அப்படியே செய்தனர், அதே நேரம் மோசமான தளபதியை என்றுமே தளபதியாக ஏற்றுக்கொண்டதில்லை. தலைமைப் பண்புகளிலும், தலைமையின் கட்டளையின்படி நடப்பதிலும் சுபார்ட்டா வீரர்களை யாரும் விஞ்சியதில்லை (புலிகள் விஞ்சியிருக்கலாம்). அன்றைய நாடுகள் பல சுபார்ட்டா வீரர்களை தங்கள்நாட்டு தளபதிகளாக நியமித்தார்கள்.

 1. தேவையில்லாத ஆடம்பரங்கள் இல்லாததாலும், பணம் சேமிக்க உழைக்கவேண்டிய தேவை இல்லாததாலும், உலகியிலேயே அவர்களுக்குத்தான் அதிக ஒய்வு நேரம் இருந்தது. உலகிலேயே அதிக சுதந்திரத்தைக் கொண்ட ஒரு இனக்குழு  இருந்திருக்கிறது என்றால் அது சுபார்ட்டன்கள் தான்.

 1. மொத்தத்தில் அவர்களுக்கு தனிமனித வாழ்க்கை என்ன என்றால் தெரியாது. அவர்கள் ஒரு தேன்கூட்டில் வாழும் ஈக்களைப் போல பொதுவான நன்மைக்காக நாட்டுக்காக வாழ்ந்தார்கள்.

 1. போரில் இறந்தவர்கள் மட்டுமே புதைக்கப்பட்டு அவர்களின் கல்லறையில் பெயர் பொறிக்க அனுமதிக்கப்பட்டது. மற்றவர்கள் பெயரில்லாமல்தான் புதைக்கப்பட்டார்கள்.

 1. நாட்டு மக்கள் தேவையில்லாமல் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அதே போல் வெளிநாட்டினரும் தேவையில்லாமல் அனுமதிக்கப்படவில்லை. அவ்வாறான கலப்பு, தேவையில்லாத எண்ணங்களை மக்களின் மனதில் விதைத்து விதிகளை மீற வைத்துவிடும் என்ற பயம்  தான் இத்தடைக்குக் காரணம்.

 1. இவ்வாறு விதிகளை உருவாக்கி திடமான நாட்டை உருவாக்கியபின், இலைக்கர்கசு டெல்பை கோவிலுக்கு செல்ல முடிவு செய்கிறார். அதற்குமுன் மக்களையும் அரசனையும் செனட்டையும் அழைத்து, அவர் திரும்பி வரும்வரை யாரும்  விதிகளை மீறக்கூடாது என சத்தியம் வாங்குகிறார். பின் டெல்பை கோவிலுக்கு சென்று அவரின் விதிகள் சுபார்ட்டாவை உலகிலேயே சிறப்பான நாடாகும் என்ற உறுதியை கடவுளிடமிருந்து பெறுகிறார். அதன்பின் அவர் உண்ணா நோன்பிருந்து உயிர் துறக்கிறார். எங்கே தானோ அல்லது தனது உடலோ திரும்பினால், மக்கள் விதிகளை விட்டுவிடுவர் என்று எண்ணி, அவரின் உடலை நண்பர்கள் மூலம் எரிக்க உத்தரவிடுகிறார்.  ஒரு அரசன்  தனது இறப்பையும் நாட்டுக்காகவே செய்யவேண்டும், வயது முதிர்ந்து அமைதியாக எதுவும் செய்யாமல் இறக்கக்கூடாது என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.

 1. அவரின் எண்ணப்படியே சுபார்ட்டா உலகில் புகழ்மிக்க நாடாக விளங்கியது. சிறப்பான ஆட்சி, ஒழுக்கமான மக்கள், ஒழுக்கமான அரசன், குற்றமில்லாத நாடு,  சிறந்த நிர்வாகம், வீரத்தில் உயர்ந்த என மற்ற நாடுகளை விஞ்சி இருந்தது.  எந்த நாட்டையும் ஆக்கிரமிக்கவில்லை, கொள்ளை அடிக்கவில்லை. அண்டைய ஏதென்சு நாட்டுடன் போர் ஏற்பட்டபோது, அவர்களை தோற்கடித்து அவர்களின் கோட்டையை இடித்து விட்டு நாட்டை அவர்களிடமே கொடுத்து வெளியேறிவிட்டனர். ஒரு தங்க நாணயமோ வெள்ளியையோ அவர்கள் கொள்ளையடிக்கவில்லை.  அவர்கள் யாருக்கும் தொல்லை கொடுக்க விரும்பவில்லை, அதே நேரம் யாரும் அவர்கள் நாட்டில் மூக்கை நுழைப்பதை விரும்பவில்லை. அவர்கள் போக்கில் சுதந்திரமாக வாழ்ந்துவந்தனர். இது 500 ஆண்டுகள் தொடர்ந்தது.  அதன்பின் தோன்றிய அரசன்  ஒருவன் மீண்டும் தங்க வெள்ளி பணத்தை அனுமதித்தான். அதன் விளைவாக போட்டி பொறாமை என அனைத்தும் தோன்றி சுபார்ட்டாவின் ஒழுக்கம் குலைந்து சீரழிந்தது.

பண்டைய கிரேக்கர்களின் சோதனைகள் கண்டுபிடிப்புகள் இல்லாமல் நாம் இன்று காணும் நவீன உலகை அடைந்திருப்போமா என்பது சந்தேகமே. சுபார்ட்டா  இராணுவ கட்டுப்பாடான அரசைக்கொண்டிருந்த அதே நேரம் ஏதென்சு மக்களாட்சியுடன் திகழ்ந்தது. அவர்கள்தான் அறிவியலில் முன்னோடிகள். கணிதம், அறிவியல், தத்துவம் என்று அவர்கள் படைத்தது இன்றும் பயன்பாட்டில் உள்ளது. கிரேக்க நாகரீகம் அழிந்தபின் அவர்களின் புரட்சிகரமான கண்டுபிடிப்புகளை ரோமாபுரிப் பேரரசு தொடர்ந்தது. ஐந்தாம் நூற்றாண்டில்   ரோமாபுரி வீழ்ந்தவுடன், மேற்குலகம் இருண்ட காலத்தில் ஆழ்ந்தது. எந்த ஒரு ஒரு புதுமையும் படைக்கப்படவில்லை. அனைத்து கிரேக்க நூல்களையும் இழந்தார்கள். ஒருவகையான மத இறுக்கத்தில் ஆழ்ந்து முன்னேற்றமில்லாமல் உலகம் இருந்தது. பின்பு 13 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் மேற்குலகம் இசுலாமிய உலகத்துடன் தொடர்பு ஏற்பட்டது. அத்தொடர்பின் மூலமாக  கிரேக்க அறிவு சார்ந்த நூல்கள் மீண்டும் மேற்குலகிற்கு கிடைத்தன. இதன் பின்னரே மேற்குலகம் சிந்திக்க ஆரம்பித்தது, சீரிய சிந்தனைகள் வளர்ந்தன, புதிய படைப்புகள் வெளிவந்தன. கோப்பர்நிக்கஸ், கெப்ளர், கலிலியோ, நியூட்டன் ஆகியோர் தோன்றி நவீன அறிவியலை உருவாக்கினர் [2].

சுபார்ட்டா ஏதென்சின் அரசியல்  சோதனைகள்  மக்களிடேயே நல்லாட்சிக்கான கனவினை விதைத்தன. இதன் தாக்கத்தை இத்தாலிய மறுமலர்ச்சி, பிரெஞ்சுப் புரட்சி, இன்று நிலவும் மக்களாட்சி, பொதுவுடமை ஆட்சி, உலக அரசியல் இராணுவ கட்டமைப்புகள் வரை காணலாம்[3]. பண்டைய கிரேக்க வரலாற்றை மேற்குலகம் தனது பழைய பொற்காலமாகக் (Classical civilizations) கருதுகிறது. அதனால்தான் இடைப்பட்ட காலத்தை இருண்டகாலம் என்று பெயர் சூட்டினார்கள். இன்றைய மேற்குலகு என்பது பண்டைய கிரேக்க வரலாற்றின் தொடர்ச்சியாகவே பார்க்கவேண்டும். நவீன அறிவியலுக்குக் காரணமான நியூட்டனின் சிந்தனையைத் தூண்டியவர்கள் பண்டைய அரிசுட்டாட்டிலும், யூக்ளிடும், பிளாட்டோவும்தான். பண்டைய கிரேக்கர்கள் இல்லாமல் நவீன அறிவியலேத் தோன்றி இருக்காது.  அவர்கள் இல்லாவிட்டால் இவுலகமே இன்னும் இருண்டகாலத்தில் இருந்தாலும் இருந்திருக்கும் [2].

சுபார்ட்டா மற்றும் இலைகர்கசின் கதையைப் படிக்கும்பொழுது அதன் சாயலை ஓரளவு புலிகளின் ஈழத்திலும் பிரபாகரனிலும் காணலாம். ஒருவகையில் பார்த்தால் புலிகளின்  ஈழம் என்பது தமிழர்களின் வீரம்செறிந்த ஒழுக்கமான சுபார்ட்டாவும் அறிவிற்சிறந்த ஏதென்சும் சேர்ந்த கலவை. பிரபாகரன் இலைக்கர்கசைப் போன்று ஒரு சட்டசிற்பி (Law  giver). இருவரும் எதையும் எழுதவில்லை, எல்லாவற்றையும் நடைமுறைப் படுத்தினர். புலிகளின் ஈழம் என்பது ஒருவகையில் குறுகிய காலமே இருந்த ஒரு கனவு தேசம் (Utopia). இந்த கனவுதேசம் தான் இன்னும் பலரைத் தூங்கவிடாமல் உசுப்பிக்கொண்டிருக்கிறது.  இந்த கனவுதேச சிந்தனைதான் இன்று தமிழ்த்தேசிய அரசியலை இயக்கிக்கொண்டிருக்கிறது.  புலிகள் உருவாக்கிய கனவுதேசம் மீண்டும் மக்களை உசுப்பி அக்கனவை மெய்ப்பிக்கும். இந்த  சிந்தனையை அண்ணன் ஆழி செந்தில்நாதன் அவர்கள்  கவிதையில் காணலாம்[4]:

“நீ ஒரு வித்தைபுரிந்தாய்.
விடுதலையை கண்முன்பு காட்டிச்சென்றாய்.
தமிழர் வரலாற்றில் ஓர் கணநேரக்காட்சியாக அது
இன்று முடிந்துபோயினும் முள்ளிவாய்க்காலில்,
நீ அதைக்காட்டிவிட்டாய்தானே!
அதை நாங்கள் ருசிகண்டோம்தானே!
இனி தாகம் அடங்காது.” [4]

எவ்வாறு மேற்குலகம் கிரேக்க வரலாற்றை இறுகப்பற்றி இருண்டகாலத்தில் இருந்து வெளிவந்து சாதனைகளைப் படைத்ததோ, அதைப்போல நாம் புலிகளின் வரலாற்றை இறுகப்பற்றியே, நாம் மீண்டு எழுந்து சாதனைகளைப் படைக்கமுடியும்.  தமிழினத்தின் விடுதலை என்பது புலிகளின் கனவுதேசத்தை நாம் இறுகப் பற்றிக்கொள்வதிலேயே இருக்கிறது. அது தானாக நம்மைக் கொண்டுபோய் கரை சேர்க்கும்.

 

உசாத்துணை:

 1. Plutarch’s Lives, Volume 1, Life of Lykurgus.
 2. சு.சேது, நாம் அறிவார்ந்த சமூகமாகமாறத் தேவையான அடிப்படை காரணிகள்,   https://sethusubbar.wordpress.com/2017/11/11/sciencefactors/
 3. Hodkinson, Stephen, and Ian Macgregor Morris, eds. Sparta in modern thought: politics, history and culture. ISD LLC, 2012.
 4. ஆழி செந்தில்நாதன், https://www.facebook.com/senthilnathan.aazhi/posts/10157933428469046
This entry was posted in ஈழப்போர், ஈழம், Uncategorized. Bookmark the permalink.

2 Responses to சுபார்ட்டா (Sparta) எனும் விசித்திர நாடும் புலிகளின் ஈழமும்

 1. Pingback: சுபார்ட்டா (Sparta) எனும் விசித்திர நாடும் புலிகளின் ஈழமும் | EelamView

 2. Pingback: ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 7 – இறுதி பாகம் | Sethu's Blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s