ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 3

பாடம் 3: அதிக எண்ணிக்கையிலான வேறுபட்ட உத்திகளே வெற்றியைத் தரும்

ஏன் 2009-இல் ஈழ விடுதலைப் போரில் பின்னடைவு ஏற்பட்டது என்பதற்குக் காரணமாக உள்நாட்டு சூழ்ச்சி, வெளி  நாட்டு சதிகள், உலக நாடுகளின் புலிகள் மீதான தடை, உலக இராணுவங்களின் உதவி எனப்  பல்வேறு  கோணங்களில் ஏற்கனவே அலசப்பட்டிருக்கிறது. இவை  என்ன நடந்தது என்று ஒரு கதையைக்  கூறுகிறதே தவிர,  அவற்றைப் பொதுவான அறிவியல் தத்துவங்கள் மூலம் விளக்குவதில்லை. அதனால் எங்கே நமது பிழை ஏற்பட்டது, இனி நாம் எது மாதிரியான உத்திகளைக் கையாளவேண்டும் என்ற விளக்கத்தை அளிப்பதில்லை. ஆயுதப் போர்தான் 2009-இல் முடிவுக்கு வந்ததே ஒழிய,  நமது ஈழ விடுதலை முன்னெடுப்பு நிற்கப்போவதில்லை. அதேபோல  எதிரியின் இனவழிப்பு வேறு வகைகளில்  தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  இந்த சூழலில் 2009-ஐ அறிவியல் பூர்வமாக அறிந்து, இன்றைய சூழலுக்கு ஏற்றுபடி  உத்திகளை எவ்வாறு  சீரமைப்பது என்பதை அறிவது அவசியம். அதுதான்  இக்கட்டுரைப் பகுதியின்  நோக்கம். முதலில் சிக்கலான அமைப்புகள் பற்றிய ஆராய்ச்சிகளிலிருந்து ஒரு முக்கியமான  தத்துவத்தைப் பார்ப்போம், பின்பு இதனடிப்படையில் ஈழ விடுதலைப் போரையும், இன்று பயன்படுத்த வேண்டிய உத்திகளையும் ஆராய்வோம்.

சிக்கல் வரைபடம் (Complexity Profile):

சிக்கலான அமைப்பு என்பது பல பாகங்களைக் கொண்டு, பாகங்கள் ஒன்றுடன் ஒன்று  இணைந்து சிக்கலான முறையில் இயங்கும். உதாரணமாக   உயிர்கள், சமூகங்கள், ஒரு நாட்டின் பொருளாதார, சுகாதார, கல்வி,  இராணுவ  அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். ஒரு சிக்கலான அமைப்பு பல்வேறு சிக்கலான அமைப்புகளை உள்ளடக்கி இருக்கலாம்.  அனைத்து உயிர்களையம் உள்ளடக்கிய பூமிமண்டலம் (Biosphere) மிகச்சிக்கலானாது. ஒரு சிக்கலான அமைப்பை புரிந்துகொள்வது எளிதல்ல; நாம் ஒன்று செய்தால் அதனால் விளையும் பக்க விளைவுகளை முன்கூட்டியே அறிய முடியாது. உதாரணமாக  உலகம் இயந்திர மயமாக்கல் மூலம் முன்னேற ஆரம்பித்தபின், அதன் விளைவாக பூமியும் சூடேற ஆரம்பித்தது. அதை முன்கூட்டியே  நம்மால் அறிய முடியவில்லை. மேலும் அதனால் ஏற்படும் மாற்றங்களால் பல்வேறு உயிர்கள் உலகில் அழிந்து வருகின்றன. அதை எப்படிக் காப்பது என்பது இன்னும்  புலப்படாத ஒன்று.

human-profile

ஓர் அமைப்பு எதிர்நோக்கும் மொத்த சிக்கல்களை விளக்குவது சிக்கல் வரைபடம் (Complexity Profile) [1]. உதாரணமாக மனிதனை எடுத்துக் கொள்வோம் (படம்-1).  X -அச்சு சிக்கலின் அளவைக் குறிக்கும். சிக்கலின் அளவு ஒரு “செல்” (cell) அளவிலிருந்து “அண்டம்” (Universe) வரை இருக்கலாம்.  Y-அச்சு எத்தனை வேறுபட்ட சிக்கல்களை நாம் எதிர்நோக்குகிறோம் என்பதைக் குறிக்கிறது.

ஒரு செல் அளவில் நமது உடலை பல்வேறு  கிருமிகள் தாக்குகின்றன. புதிது புதிதாக கிருமிகள் உருவாகி புதிய நோய்களும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. நமது நோய் எதிர்ப்பு மண்டலம் இக்கிருமிகளுடன் தினந்தோறும் போரிட்டுக் கொண்டே இருக்கிறது. என்று போர் உக்கிரமாகி நோய் எதிர்ப்பு மண்டலாத்தால் முடியவில்லையோ, அப்பொழுதுதான் நாம் இந்தப் போரையே உணர்கிறோம், மருத்துவரை நாடுகிறோம். இவ்வுலகில்  மக்களைக் கொல்வதில் முன்னிலையில் இருப்பது இந்தக் கிருமிகளே. அதுபோக செல் அளவில் புற்று நோய் போன்று செல் மாறுதல் (Mutation) நிகழ்வுகளாலும் பாதிப்புகள் உண்டாகின்றன. மனிதன் எதிர்நோக்கும் சிக்கல்கள் என்பது சிறிய அளவில் மிக அதிகமாகவும், அளவு கூடக்கூட குறைவாகவும் இருக்கின்றன[1]. இதைத்தான் படம் விளக்குகிறது. நாம் அன்றாடம் உணரும் சிக்கல்கள் என்பது இதில் ஒரு பகுதியே. பெரும்பாலான சிக்கல்கள் நமக்கு  புலப்படுவதில்லை.

நாம் இவ்வுலகில் வெற்றிகரமாக வாழ்வதற்கு சிறிய அளவிலிருந்து பெரிய அளவு வரை அனைத்து சிக்கல்களையும் எதிர்கொள்ளும் வல்லமை வேண்டும். சுருக்கமாகக் கூறினால் நாம் சிக்கலை அதன் அளவிலும் எண்ணிக்கையிலும் ஈடுகட்டவேண்டும்.  நமது செயல்பாடு சிக்கல் வரைபடத்திற்கு இணையாக இருக்கவேண்டும். (we need to match in size and complexity) [1].

நமது உடலை வெவ்வேறு கிருமிகள் தாக்குகின்றன. அதற்கு ஈடாக நமது நோய் எதிர்ப்பு மண்டலமும் கிட்டத்தட்ட அதே எண்ணிக்கை வேறுபாடான எதிர்-உயிர்களை (anti-bodies) உருவாக்கும் வல்லமை கொண்டது. நமது நோய் எதிர்ப்பு மண்டலம்  எதிர்க்க முடியாத அளவிற்கு கிருமிகள் தோன்றும்பொழுது,  நாம் நவீன மருத்துவ அமைப்புகளை உருவாக்கி நமது சிக்கலை எதிர்கொள்ளும் தன்மையைக் கூட்டுகிறோம்.  மனிதகுலம்  சிறு அளவிலிருந்து பெரிய அளவு வரை சிக்கல்களை  சம அளவில் எதிர்நோக்கும் தன்மையுடன் உள்ளது. அதனால் தான் மனிதன் இன்னும் அழியாமல் இருக்கிறான். மனிதகுலத்திற்கு சவால்களை எதிர்நோக்கும் அளவு சிக்கலான அமைப்புகளை உருவாக்க முடிவதால்  சிறு கிருமிகள் முதல் சுனாமி வரை நம்மைக் காப்பாற்றிக்கொள்ள  முடிகிறது.  இனி விண்ணில் இருந்து வரும் பெருங்கற்களையும் திசைதிருப்ப முடியும்.

சமூகம் என்பது சிக்கலானது, எதிர்கொள்ளும் சிக்கல்கள் எண்ணிக்கையிலும் அளவிலும் பெரிது.  சமூக சிக்கல்களையும்  சிக்கல் வரைபடத்தைக் கொண்டு ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளைப் பற்றியும் சிந்திக்கலாம்.  முதலில் ஈழப்போரை ஆராய்வோம், பின்பு இன்று எதிர்நோக்கும் சிக்கல்களுக்கான தீர்வைப் பற்றி பார்ப்போம்.

புலிகளின் கொரில்லாப் போர்:

போர் என்பது இரு சிக்கலான அமைப்புகளுக்கிடேயே நிலவும் போட்டி [1]. ஏற்கனவே பார்த்தபடி சிக்கலான அமைப்புகளில் யார்  அதிக வேறுபாடுகளுடனான உத்திகளைப் பின்பற்றுகிறார்களோ  அவர்களுக்குத்தான் வெற்றி. புலிகள் ஆரம்பகட்ட ஈழ விடுதலைப் போர்களில்  இந்திய, இலங்கை இராணுவங்களைத் தோற்கடித்தற்குக் காரணம் கொரில்லாப்  போர்முறைதான். இதை சிக்கல் வரைபடம் மூலம் பார்த்தால் தெளிவாகப் புரியும் (படம்-2):

gori-profile-2

புலிகள் சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து, பதுங்கி பல்வேறு தாங்குதல்களைத் தொடுத்தார்கள். ஒரே தலைமை என்று இருந்தாலும், சிறு குழுக்கள் சுயமாக இயங்கும் தன்மையைக் கொண்டிருக்கும். சிறு குழுக்கள் தாங்களே இலக்கையும்,  தாக்கும் நேரத்தையும், முறைகளையும் வகுத்தார்கள். அவர்கள் எங்கு பதுங்கி இருக்கிறார்கள் எப்பொழுது   தாக்குதல் நடத்துவார்கள் என்று எதிரிக்குத் தெரியாது. எதிரிகள் இதற்கு மாறாக பெரும்படை கொண்டு இயங்கினார்கள். யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பதுபோல அவர்களின் நகர்வுகளை புலிகளால்  எளிதாக அறிய முடிந்தது. மொத்தமாக புலிகள் அதிக அளவு  வேறுபாடான தாக்குதல் உத்திகளையும் வாய்ப்புகளையும் பயன்படுத்தினார்கள். மாறாக எதிரிகள், ஒரு படையதிகாரி திட்டமிட்டு பெரிய நகர்வுகளை மேற்கொண்டார்கள், ஆனால் அந்நகர்வுகள் அதிக வேறுபட்டது அல்ல; மேலும் புலிகள் அவர்களின் நகர்வுகளை முன்கூட்டியே அறிந்து  பாதையிலிருந்து விலகிக் கொள்வதால்,  தாக்குதலுக்கான வாய்ப்புகளும் குறைவு. கீழ்நிலை சிப்பாயிலிருந்து மொத்த படையும்  மேலுள்ள அதிகாரியின் திட்டபடிதான், அதனால் அவர்களின் நகர்வுகள் புலிகளைப் போன்று சுதந்திரமான சிக்கலான நகர்வுகளாக இல்லை. இந்த வேறுபாடுதான் கொரில்லாப் பொறிமுறையில் புலிகள் வெற்றி கொண்டதற்குக் காரணம் [1].

இந்த கருத்து மிகமுக்கியமானது என்பதால் இதை இன்னொரு உதாரணம் கொண்டு சிறப்பாக புரிந்து கொள்ளலாம். நீங்கள் பள்ளியில் ஒரு தேர்வுக்குப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தேர்வுக்கு மூன்று  வினாத்தாள்கள் (Question  paper) உள்ளன. ஒரு வினாத்தாளில் 10 கேள்விகள் உள்ளன, அந்த பத்திற்கும் விடையளிக்க வேண்டும். இரண்டாவது வினாத்தாளில்  15 கேள்விகள் உள்ளன, அதில் 10 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். மூன்றாவது வினாத்தாளில் 20 கேள்விகள் உள்ளன, அதிலும் 10 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். எந்த வினாத்தாள் உங்களுக்குப் பிடிக்கும்? அனைவருக்கும் மூன்றாவது  வினாத்தாள்தான் பிடிக்கும் என்பது தெளிவானது. ஏனென்றால் மூன்றாவது வினாத்தால்தான் “அதிக வாய்ப்புகளை” அளிக்கிறது. எப்பொழுது வாய்ப்புகள் கூடுகிறது, அப்பொழுது வெற்றி கூடுகிறது. இது தேர்வுக்கு மட்டுமல்ல அனைத்து சிக்கலமைப்புகளின் வெற்றிக்கும் இதுதான் அடிப்படை. தற்கொலை செய்துகொள்ள முனையும் ஒருவரிடம், ஏன் என்று கேட்டால்  “வேறு வழி” இல்லை என்று பதில் வரும். வாய்ப்புகள் தான் அனைத்து உயிர்கள் மற்றும்  சமூக அமைப்புகளின் வெற்றிக்கும்  அடிப்படை.

புலிகள் சிறுசிறு குழுக்களாக சுதந்திரமாக இயங்கியதால் தாக்குதலுக்கு சிங்களப் படைகளை விட அதிக வாய்ப்புகளை உத்திகளை உருவாக்கினார்கள். இதுதான் வெற்றிக்கான சூத்திரம். பார்ப்பதற்கு ஒரு பலமான தலைமையின் கட்டளை மூலம் இயங்குவது சிறப்பாகத் தோன்றலாம், ஆனால் அதுதான்  பலவீனமே. பிரிந்து வெவேறு  விதமாகத் தாக்கும்பொழுது எதிரி நிலைகுலைந்து விடுகிறான். இவ்வாறு பிரிந்து தாக்குவதால் எதிரியை ஓட வைக்க முடியும், ஆனால் நிலத்தை நிரந்தரமாகத் தக்கவைக்க முடியாது. அதுதான் கொரில்லாப் போர்முறையின் பலவீனமும்.

ஏன் இறுதிப்போரில் பின்னடைவு ஏற்பட்டது?

புலிகள் தோன்றியதிலிருந்து படிப்படியாக பரிணமித்து வலிமை மிக்க இயக்கமாக மாறி மாபெரும் போர் சாதனைகளைப் படைத்தனர். ஆனால் இறுதிப்போரில் வெற்றிகொள்ள முடியவில்லை;  இறுதியில் இயக்கம் ஈழத்தில் முற்றிலும்  இல்லாமல்  போனது. இதை எவ்வாறு புரிந்து கொள்வது? இதை வரலாற்று நிகழ்வுகளைக்கொண்டு சிக்கல் வரைபடத்தை வரைந்து  பின்வருமாறு விளக்கலாம் (படம்-3).

final_war-2

 1. புலிகளின் ஆரம்ப காலத்தில், சிறு குழுக்களைக் கொண்டு கொரில்லாப் பொறிமுறைகளை மட்டும் பின்பற்றினார்கள். இந்திய சிங்களப் படைகள் மரபுவழித் தாக்குதல்களை மேற்கொண்டார்கள். ஏற்கனவே நாம் பார்த்தபடி, இதில் புலிகளின் செய்லபாடுகள் அதிக வேறுபாடுகளுடன் இருந்ததால், அவர்களுக்கு வெற்றி கிடைத்தது. (படம்-3: புலிகள்-1, சிங்களம்-1)
 1. கொரில்லாப் போர்முறைகளை மட்டும் கொண்டு நிலத்தைத் தக்கவைக்க முடியாது என்பதால், புலிகள் மரபுவழி இராணுவமாகப் பரிணமிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. மரபுவழி இராணுவத்தில் படைகள் ஒன்று சேர்ந்து இயங்கி நிலத்தை காக்க வேண்டி இருப்பதால், அவர்களின் கொரில்லா தாக்குதல் எண்ணிக்கைகள் குறையும். இவ்வாறு மரபுவழிப் படையாக பரிணமிக்கும் காலத்தில், கொரில்லாத் தாக்குதல்களும் அவ்வப்போது மரபுவழித் தாக்குதல்களும் எனக் கலந்து உபயோகிக்கப் பட்டது. சிங்களம் நடத்தும் மரபுவழித் தாக்குதலுக்கும், புலிகள் நடத்தும் மரபுவழித் தாக்குதலுக்கும் ஒரு பெரிய வேறுபாடு உண்டு. புலிகள் எபோழுது தாக்குவார்கள், எங்கே தாக்குவார்கள், எவ்வளவு நேரம் தாக்குவார்கள், இறுதி இலக்கு  என்ன என்று யாருக்கும் தெரியாது. சிங்களம் ஒவ்வொரு நாளும் பக்கு பக்கென்று எங்கே அடி விழும் என்று காத்திருப்பார்கள். சிங்களப் படைகள் இதற்கு மாறாக, முழுத்த திட்டம் வகுத்து உலகுக்கே அறிவித்து விட்டு, பெரும்படை கொண்டு நகர்வார்கள்.  உதாரணமாக சிங்களத்தின்  செயசிக்குறு நடவடிக்கையை எடுத்துக்கொள்ளலாம்.  ஒன்றரை வருடங்களாக A9 வீதியைக் கைப்பற்ற முனைந்த யுத்தம் இறுதியில் தோல்வியில் முடிந்தது.   மொத்தத்தில் புலிகளின் தாக்குதல் வாய்ப்புகளின் எண்ணிக்கை, சிங்களத்தின் தாக்குதல் வாய்ப்புகளின் எண்ணிக்கையை விட அதிகம்.  அதாவது புலிகளின் தாக்குதல் அதிக வேறுபாடுகளைக் கொண்டிருந்தது. (படம்-3: புலிகள் -2, சிங்களம்-2).
 1. நிலத்தை முழுதுமாகக் கைப்பற்ற புலிகள் மேலும் பெரிய மரபுவழிப் படையாக பரிணமிக்க வேண்டியத் தேவை இருந்தது. அவ்வாறு பரிணமித்து அடித்த அடியில்தான் சிங்களமும் உலகமும் ஆடிப்போனது. ஆனையிறவு கைப்பற்றப்ப பட்டது, வன்னியிலிருந்து சிங்களம் துடைத்தெறியப்பட்டது, புலிகள் யாழ்ப்பாணத்தை நெருங்கினார்கள். அதன் பின்புதான் உலகம் தலையிட்டு சிங்களத்தைக் காப்பாற்றியது.

புலிகளின் தாக்குதல்கள் சிங்களத்தைப் போல முதலிலேயே முடிவு செய்வதல்ல. பல்வேறு இலக்குகளைத் தேர்ந்தெடுத்து, மாதக்கணக்கில் வேவு பார்த்து, எது வாய்ப்பாக இருக்கிறதோ அதை நேரம் பார்த்து வீழ்த்துவர். வாய்ப்புதான் முடிவில்  தீர்மானிக்கும் காரணியாக இருக்கும். ஆனால் சிங்களத்திற்கு வாய்ப்பு எல்லாம் முக்கியமல்ல. கொழும்பில் ஒரு குறிக்கோள் தீட்டப்பட்டு, படைகளுக்கு அளிக்கப்படும். அதை நிறைவேற்றுவதுதான் அவர்களின் கடமை. இந்தப் போரிலும் புலிகளின் திட்டங்கள் சிங்களத்திற்குத் தெரியவில்லை. அவர்கள் எப்பொழுதுமே சிங்களத்தை எங்கே தாக்குதல் நடக்கும் என்ற பயத்திலேயே வைத்திருந்தார்கள். தாக்குதல் எங்கே வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், அவர்கள் அனைத்து இடங்களிலும்   தயாராக இருக்கவேண்டும். இவ்வாறு அதிக வாய்ப்புகளை புலிகள் உருவாக்கியதுதான், அவர்களின்     தாக்குதல் வேறுபாடுகளைக் கூட்டும் முக்கிய காரணி. முடிவில் சிங்களம் புலிகளின் அதிக வேறுபட்ட நகர்வுகளுக்குப்  பலியானார்கள். சிங்களம் பழைய அதே உத்திகளைப் பயன்படுத்தியதால் அவர்களின் உத்திகள் எல்லாம் புலிகளுக்கு முன்பே தெரிந்ததுதான். மொத்தத்தில் புலிகளின் அதிக வேறுபாடுகளானத் தாக்குதல்களால், சிங்களம் தோற்றது. (படம்-3: புலிகள்-3, சிங்களம்-2). புலிகளின் வெற்றியோடு மூன்றாம் ஈழப்போர் முடிந்தது.

இப்பொழுது பின்னோக்கி பார்க்கும் பொழுது, ஏன் சிங்களம் இவ்வாறு மோசமான உத்திகளைக் கையாண்டது என்ற கேள்வி எழும். உண்மை என்னவென்றால் இதுதான் சென்ற நூற்றாண்டு இறுதிவரை உலக இராணவங்களின் உத்தி[1]. இதை நியூட்டன் சட்டகம் (Newton’s paradigm) என்று அறிவியல் மொழியில் கூறுகிறார்கள் [2]. நியூட்டனின் விதிப்படி, ஓர் இலக்கை கல்லால் வீழ்த்த  குறிபார்த்து வீசினால் போதும், இலக்கு வீழ்ந்து விடும். அதுபோலத்தான் உலக இராணுவங்கள் போரைப் பார்த்தன. அதிகாரிகள் உட்கார்ந்து முழுத் திட்டமிடுவர். பின்பு அத்திட்டப்படி நகர்வுகளை மேற்கொள்வர். இதுதான் சிங்களத்திற்குக் கற்பிக்கப்பட்டது,  அதன்படி தான் சிங்கள இராணுவம் செயல்பட்டது. . இது மாதிரியான திட்டமிடல்கள் மோசமான உத்தி என்று சிக்கலான அமைப்புகளைப் பற்றி ஆராய்ச்சிகள்  சென்ற நூற்றாண்டின் இறுதியில்தான் தெளிவுபடுத்த ஆரம்பித்தது. போரில் வெற்றிபெற அதிக எண்ணிக்கையில் வேறுபட்ட உத்திகளும், முழுத் திட்டமிடல் இல்லாமல் சந்தர்ப்பவாத அணுகுமுறையே வெற்றியைத் தரும் என்று இந்த ஆராய்ச்சிகள் கூறின. இதன்பின் தான் உலக இராணுவங்கள் “நியூட்டன் சட்டகத்தை” விட்டு “சிக்கல் அமைப்புகள்” (Complex Systems Paradigm) சட்டகத்திற்கு மாறினர். அடிப்படையில் புலிகள் என்ன உத்திகளைக் கையாண்டார்களோ அவைதான்  சிறப்பான உத்தி என்று  உலக இராணுவங்கள் முடிவுக்கு வந்தன. உத்திகளில் புலிகள் உலக இராணுவங்களுக்கு முன்னோடியாக இருந்திருக்கிறார்கள்.

 1. இறுதிப் போருக்கு சிங்கள இராணுவத்திற்கு பயிற்சிகள் வழங்கிய உலக இராணுவத்தினர் புதிய உத்திகளை, அதாவது புலிகளின் உத்திகளைக் கையாள கற்பித்தனர். அதைத்தான்  சிங்களம் பின்பற்றியது:
 • கொரில்லாத் தாக்குதல் பாணியில் ஆழ ஊடுருவும் படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் புலிகள் சில முக்கிய தளபதிகளை இழந்தனர். புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியையே பாதுகாப்பற்ற பகுதியாக மாற்றினர். வேவுப் பணிகளையும் செய்தனர்.
 • ஜெயசிக்குறு போன்ற முழுத் திட்டமிடல் கைவிடப்பட்டது. எங்கெங்கே வாய்ப்பு கிடைத்ததோ அங்கங்கே தாக்குதல் நடத்தப்பட்டது. நீரைத் திறந்து விட்டால், வாய்ப்பு உள்ள இடங்களில் எப்படி பாயுமோ, அப்படி பாய்ந்தார்கள். இதைத் தண்ணீர் கோட்பாடு என்கிறார் ஆய்வாளர் பரணி கிருஷ்ணரஜனி [5,8].
 • சிறியதும் பெரிதுமாக அனைத்துவகைப் படை நகர்வுகளையும் பயன்படுத்தினார்கள்.

மொத்தத்தில் அவர்களின் சிக்கல் வரைபடம் புலிகளைத் தாண்டியது (படம்-3: புலிகள் -3, சிங்களம்-3). புலிகள் சிங்களத்தைத் தோற்கடிக்க மேலதிக சிக்கலுடன் செயல்படவேண்டும், ஆனால் அதில் பல பின்னடைவுகள் ஏற்பட்டது. முக்கியமாக:

 • புலிகள் இயக்கம் உலகளவில் தடை செய்யப்பட்டு, புலிகளின் பணவரவு  முடக்கப்பட்டது.
 • ஆயுதக் கப்பல்களை உலகநாடுகள் சிங்களத்திற்குக் காட்டிக் கொடுத்தன. மேலும் முன்னேறி வந்துகொண்டிருந்த செயற்கைக்கோள், GPS தொழிநுட்பம், புலிகளின் கப்பல்களை எளிதில் காட்டிக்கொடுத்தது. புலிகளின் அனைத்து போர் செயல்பாடுகளுக்கும் ஆதாரமான கப்பல் போக்குவரத்து நூலிழையில் தொங்கியது.

சிங்களத்திற்கு புலிகளை வீழ்த்தும் வல்லமை என்றுமே இருந்ததில்லை. உண்மையில் புலிகளை வீழ்த்தியது  சிங்களம் அல்ல, உலக நாடுகள்தான். புலிகளின் இராணுவ உத்திகளில் எந்த பிழையும் இல்லை. அவர்கள்தான் உத்திகளின் முன்னோடியே. உலக நாடுகள் புலிகளுக்கு  உதவாவிட்டாலும், உபத்திரமாக இல்லாமல் இருந்தால்கூட புலிகள் வெற்றிபெற வாய்ப்புகள் அதிமாக இருந்திருக்கும். கடைசியில் உலகநாடுகளின் உதவி  இனவழிப்பில் முடிந்தது.

பலர் எழுப்பும் ஒரு முக்கியக் கேள்வி என்னவெனில்: ஏன் புலிகள் போரை விட்டுவிட்டு சிங்களம் கொடுப்பதை ஏற்றுக்கொண்டு செல்லக் கூடாது? அவ்வாறு செய்திருந்தால் இந்த பின்னடைவு ஏற்பட்டிருக்காது, மேலும் இன்று இருப்பதைவிட நல்ல  நிலைமையிலேயே இருப்போம்.

புலிகள் ஆரம்பத்திலிருந்து தமிழரின் இறையாண்மையை என்றுமே அடகு வைத்ததில்லை. நவீன தமிழர் வரலாற்றில் புலிகளைப் போன்ற ஒரு இயக்கம் தோன்றியதில்லை. அவர்கள் என்ன முன்னுதாரணம் ஏற்படுத்துகிறார்களோ அதுதான் இனிவரும் காலம் முழுதும்  எதிரொலிக்கும். புலிகள் தமிழர் இறையாண்மையை அடகு வைத்தால், அதை முன்னுதாரணமாகக் கொண்டு “புலிகளே விட்டுக் கொடுத்து விட்டார்கள், இனி நாம் எம்மாத்திரம்” என்று தமிழர் இறையாண்மை முற்றிலும் குழிதோண்டி புதைக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். அது எதிர்காலத்தில் தமிழின அழிவிற்கே இட்டுச்செல்லும். புலிகள் இன்று அழிந்தாலும், தமிழர் இறையாண்மையை விட்டுக் கொடுக்காத முன்னுதாரணத்தை வைத்துவிட்டு போயிருக்கிறார்கள். அதுதான் எதிர்காலத்தில் நம்மை வழிநடத்தப் போவது. இன்று ஏற்பட்டுள்ள பின்னடைவு தற்காலிகமானதே. தற்காலிக இலாபத்திற்காக  நீண்டகால நன்மையை அடகு வைக்க புலிகள் எக்காலமும், தாங்கள் முற்றிலும் அழிய வாய்பிருந்தாலும்,  ஒப்பமாட்டார்கள். அதுதான் நடந்தது.

தமிழர்கள் எதிர்காலத்தில் கட்டாயம் இறையாண்மைக்குப் போராடி வெற்றி பெறுவார்கள். இதற்கு ஒரு வரலாற்று உதாரணம் தருகிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தாக நம்பப்படும் “மசாதா” என்ற  ஒரு கட்டுக்கதை நவீன இசுரேலின் தோற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம் [3].  அன்றைய இசுரேலை ரோமாபுரி ஆக்கிரமித்திருந்தது. அவர்களுக்கு எதிராக இசுரேலியர்களில் “சிகாரி” என்ற குழுவினர் போர் புரிந்தனர். அவர்களை ரோமப்படைகள் “மசாதா” என்ற மலைக்கோட்டையில் சுற்றி வளைத்தது. சரணடைவதை விட  சுதந்திரமாகச் சாவதே மேல் என்று அக்கோட்டையில் இருந்த அனைவரும், பெரியவர் முதல் சிறியவர் வரை பெண்கள் உட்பட மொத்தமாக ஆயிரம் பேரும்  தற்கொலை செய்துகொள்கின்றனர். இது உண்மையானது அல்ல, ஒரு கட்டுக்கதை. ஆனால் இதுவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு, இசுரேலை உருவாக்க முனைந்த ஆயுதக் குழுக்கள் அனைத்திற்கும் அடிப்படை. அவர்களை சுதத்ந்திரப்போரில் வெற்றி பெற வைத்ததும் “மசாதா” உருவாக்கிய ஓர்மம் தான். இந்த கட்டுக்கதையை உள்வாங்கியவர்கள் தான் பின்பு இசுரேலின் தலைவர்களாகவும் ஆனார்கள். இன்று மசாதா தான் இசுரேலியர்களின்  அடையாளம். இன்றைய இசுரேலிய இராணுவ வீரர்கள் “இன்னொரு முறை மசாதா வீழாது” (Masada shall not fall again) என்று கூறிதான் உறுதிமொழி ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஆயிரம்பேர் சுதந்திரத்திற்காகத் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற ஒரு கட்டுக்கதை இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து ஒரு நாட்டை உருவாக்கும் வல்லமை இருக்கும் என்றால், இலட்சக் கணக்கில் சுதந்திரத்திற்காக முள்ளிவாய்க்காலில் உயிர் துறந்த மக்களைப் பற்றிய  நினைவு சும்மா விடுமா என்ன! எதிர் காலத்தில் இந்தியா, இலங்கை, ஐ.நா போன்றவை இருக்குமா இல்லையா என்று உறுதியாகக் கூற முடியாது, ஆனால் ஈழம் என்ற ஒரு நாடு கண்டிப்பாக இருக்கும். அதுதான் முள்ளிவாய்க்கால் உருவாக்குகின்ற உருவாக்கப்போகின்ற ஓர்மம்.

“The Zealots indeed all fell in the battle, but their war, sacrifice, love, and death planted eternal life in the Hebraic nation, and it still exists; and look at the miracle: it is fighting again—after two thousand years of [dispersion in the] Galut—to free its holy land… . Where is the people whose heroes destroyed Masada? … Read well the writing on the wall.” [3]

வரலாற்றின் பலம் மிக அதிகம், அது நீண்ட கால்நோக்கில் பாய்வது. முள்ளிவாய்க்காலில் நடந்ததை ஒவ்வொரு வளரும் மாணவனிடம் கொண்டு சேர்த்தால் போதும், அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். இன்று தமிழ்த்தேசிய அரசியலை நடத்தும் அமைப்புகளை, தலைவர்களை இயக்குவதும்  இந்த முள்ளிவாய்க்கால் தான். தமிழர் என்ற அடையாளத்தை இனி கொடுக்கப்போவதும்  இந்த முள்ளிவாய்க்கால் தான். உலக யூதர்களை எவ்வாறு மசாதா ஒன்று சேர்த்து போராட வைத்ததோ, அதுபோல முள்ளிவாய்க்கால் செய்யும். இதை உறுதியாகச் சொல்லலாம். அதை உணர்ந்தே புலிகள் கடைசிவரையும் விட்டுக்கொடுக்கவில்லை.  எதிர்காலத்தில் அவ்வாறு ஈழம் அமையவில்லை என்றால் அது புலிகளின் தவறாக  இருக்காது, இன்று வாழும் தமிழர்களின் தவறாக இருக்கும்.

அடுத்து  என்ன?

ஆயுதவழி ஈழப்போர் முடிவுற்றாலும், எதிரிகளின் இனவழிப்பு நடவடிக்கைகள் வேறுவழிகளில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதுபோல நாமும் ஈழவிடுதலையை தொடர்ந்து வேறு வழிகளில் முன்னெடுத்துக் கொண்டுதான் இருக்கப்போகிறோம். இப்பொழுதைய முக்கியக் கேள்வி எது மாதிரியான உத்திகளை எதிரி கையாள்கிறான், அதை எதிர்கொள்ள நாம் எதுமாதிர்யான உத்திகளைக் கையாள வேண்டும் என்பதே.

இன்று நமது சிக்கல்களைத் தீர்க்கும் முறை  என்பது  எந்த உத்தி சிறந்தது என்று ஆராய்ந்து, அதன்படி முழுத்திட்டமிட்டு  இலக்கை வீழ்த்த முனைகிறோம். இது சிங்களத்தின் தோல்வியுற்ற  செயசிக்குறு போர்  திட்டமிடல் போன்றது.   சிக்கலான அமைப்புகளுக்கு இதுபோன்ற திட்டமிடல் உதவாது.  சிக்கலான அமைப்புகளின் ஆராய்ச்சியின்படி,  புலிகளின் போர் உத்திகளே இருப்பதிலேயே சிறந்தது என்று பார்த்தோம். அதன்படி எதிரியைவிட அதிக எண்ணிக்கையில் வேறுபட்ட உத்திகளும், முழுத் திட்டமிடல் இல்லாத சந்தர்ப்பவாத அணுகுமுறையே வெற்றியைத் தரும்.   இந்த உத்திகளின் சிறப்பு என்னவென்றால் இவற்றை அனைத்து சிக்கலான அமைப்புகளுக்கும் பயன்படுத்தலாம். சமூகம் என்பது சிக்கலான அமைப்பு என்பதால் இன்று நிலவும் அனைத்து சமூக அரசியல் சிக்கல்களுக்கும் புலிகளின் அணுகுமுறைதான்  தீர்வு. இதை இனி விரிவாகப் பார்ப்போம்.

ஒரு சமூகம் என்பது பல சிக்கலான அமைப்புகளை உள்ளடக்கிய மிகப்பெரிய சிக்கலான அமைப்பு. சமூகத்தின் அடிப்படை அலகு  மனிதன், பின்பு குடும்பம், சமூக அமைப்புகள், பொருளாதார அமைப்புகள், கல்வி  அமைப்புகள், அரசியல் அமைப்புகள், இராணுவம், அரசு என்று பல்வேறு சிக்கலான  அமைப்புகளை உள்ளடக்கியது.  ஈழப்போரில் முக்கியமாக  நாம் இழந்தது ஓர்  அரசும்,  இராணுவ கட்டமைப்பையும், இலட்சத்திற்கு அதிகமான மக்களையும். இது மிகப்பெரிய இழப்பு என்பதில் ஐயமில்லை. ஆனால் நாம் இன்னும் முழுதாக ஈழத்தில் அழிந்துவிடவில்லை. எதிரியின் இறுதி வெற்றி நம்மை முற்றிலும் அழிப்பதிலேயே இருக்கிறது.

அவர்களின் அடுத்த இலக்கு மீதி இருக்கும் சமூக அலகுகள்தான். மனிதர்களை முன்புபோல சுட்டுக் கொல்ல  முடியாது என்பதால், அவர்களின் உத்திகள் வேறுமாதிரி இருக்கும். உதாரணமாக,  தமிழர்களை சிங்கள அடையாளத்திற்கு மாற்றுவது, மொழியை அழிப்பது, குடும்பத்தை  சிதைத்து பிறப்பு விகிதத்தை குறைப்பது, பொருளாதாரத்தை முடக்குவது, நிலத்தை அபகரித்து சிங்களர்களை குடியேற்றுவது, தமிழர் தரப்பு அரசியல் கட்சிகளை அவர்களின் நோக்கங்களுக்கு இணங்க வைப்பது போன்று இருக்கும். புலிகள் இருந்தபோது இதெல்லாம் சாத்தியமில்லை, ஆனால் இப்பொழுது அவர்களுக்கு சாத்தியமான ஒன்றே.

புலிகளின் உத்திகளை இது போன்ற சூழலுக்கு எவ்வாறு பயன்படுத்துவது? தமிழ்தேசியமும் எதிரியும் வெற்றிபெற போட்டி போடுகின்றனர். இதில் யார் அதிக வேறுபாடான வாய்ப்புகளை உருவாக்குகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெறுவர். உதாரணமாக சில சமூக  சிக்கல்களை எடுத்துக் கொள்ளலாம்:

 1. ஒரு தமிழருக்கு தமிழர் என்ற அடையாளத்தைப் பேணுவதற்கான வாய்புகளைவிட, சிங்கள அடையாளத்தை ஏற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகமானால், அவர் சிங்கள அடையாளத்திற்கு மாறுவார்.
 1. தமிழ்வழியில் கல்வி கற்றால் ஏற்படும் வாய்புகளைவிட, ஆங்கிலவழியில் கல்வி கற்றால் அதிக வாய்ப்புகள் ஏற்படும் என்றால், மக்கள் ஆங்கிலவழிக்கு மாறுவர். இதுதான் தமிழகத்தில் நடக்கிறது.
 1. ஒரு தமிழ் அரசியல் கட்சி தமிழ்த்தேசியம் பேசுவதைவிட, எதிரித்தேசியம் பேசினால் கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பும், தலைவர்களுக்கு பதவியும், கூடினால், அரசியல் கட்சிகள் எதிரிதேசியத்திற்கு மாறும். இவ்வாறுதான் திராவிடக் கட்சிகளை இந்தியம் வீழ்த்தியது. தமிழர் அரசியலைப் பேசிய திராவிட முன்னேற்றக் கழகத்தை பலமுறை மத்திய அரசு கவிழ்த்தது. அதன்பின் இந்தியத்திற்கு தாவியபின் பதவிகளைக் கொடுத்தது, ஊழல்களை தாராளமாக அனுமதித்தது. இந்திய அரசு ஊழலை அதன் நோக்கத்திற்கு ஒரு கருவியாக ஊக்குவிக்கிறது.

இவ்வாறு ஒரு அரசினால் ஒவ்வொரு சமூக அமைப்பாக  ஒழித்து நம்மை இல்லாமல் செய்ய முடியும். ஈழத்தில் புலிகள் சென்றபின் சிங்களம் இதை ஆரம்பித்தது; தமிழகத்தில் நீண்டகாலமாக நடந்து கொண்டிருக்கிறது.  இன்றைய நிலவரம் அப்படியே தொடர்ந்தால் நாம் முற்றிலும் அழிவதற்கான வாய்ப்புகள் அதிகமானது. என்னுடைய அனுமானத்தில்,   இன்றைய தமிழர் நிலவரத்தை ஒரு சிக்கல் வரைபடத்தில் வரைந்தால் படம்-4 -இல் இருப்பதுபோல இருக்கும்.

competition_nations

நாம் வெற்றிபெற ஒரே வழி தான் உண்டு:  எதிரி உருவாக்கும் வாய்புகளைவிட நாம் அதிக வாய்ப்புகளை உருவாக்கவேண்டும். இதை எப்படி செய்வது? புலிகள் எப்படி சிறு சிறு குழுக்களாக கொரில்லாத்   தாக்குதல் நடத்தி, வெற்றி பெற்று, மரபுவழிப் படையாக பரிணமித்தார்களோ, அதே போன்ற உத்திகளை இன்றைய சிக்கல்களுக்கு செயல்படுத்த வேண்டும். அதைக் கீழ்வருமாறு செய்யலாம்:

நாம் பல்வேறு சமூக இயக்கங்களை பல வேறுபாடான உத்திகளின் அடிப்படையில் அமைத்து, அடையாளம், குடும்பம், பிறப்பு விகிதம், பொருளாதாரம் என ஒவ்வொன்றிலும் கொரில்லாத் தாக்குதல் போன்று  பல வாய்ப்புகளை உருவாக்கி வெற்றிகொள்ள வேண்டும். எதிரிகளின் உத்தி என்பது அரசு திட்டமிட்டு செய்யும் செயசிக்குறு உத்தி போன்றதுதான். அதை  சமூக இயக்கங்களைக் கட்டி கொரில்லாத் தாக்குதல் நடத்தி எளிதில் வெற்றி கொள்ளலாம். எங்கெங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் அடிக்கவேண்டும். எதிரியால் பெரிதாக ஒன்றும் செய்யமுடியாது. ஆயுதப் போராட்டத்தை ஒடுக்க சட்டம் அனுமதிக்கும். ஆனால் சட்டத்தை மீறாத சமூக செயல்பாடுகளை அவர்களால் வேடிக்கைதான் பார்க்கமுடியம். நாம் அரசை இழக்கலாம், நிலத்தை இழக்கலாம், ஆனால் அடையாளத்தையும் பிறப்பு விகிதத்திலும் வெற்றிகொண்டால் வாய்ப்பு கிடைக்கும் பொழுது நிலத்தையும் அரசையும்  உருவாக்கி விடலாம். உலக ஒழுங்கு என்பது நிலையானது அல்ல; அவ்வப்பொழுது உலகு ஒழுங்கில் மறுசீரமைப்பு நடக்கும். அப்பொழுது வாய்ப்பைப் பயன்படுத்தி வெற்றிகொள்ளலாம். இரண்டாம் உலகப்போர் முடிந்த பொழுது உலக ஒழுங்கில்  மறுசீரமைப்பு ஏற்பட்டு உலகில் பலநாடுகள் தோன்றின, அப்பொழுது தமிழினம் தூங்கியதனால்தான் இன்று இவ்வளவு அவலமும். இனி ஒரு நூற்றாண்டுக்குள் மீண்டும் வாய்ப்பு ஏற்படலாம், அதற்கு நாம் தயாராக இருக்கவேண்டும்.  இந்த தமிழ்த்தேசிய பரிணாம உத்தியை  படம்-5 -இல் காணலாம்.

tn-evolution

உதாரணமாக யூதர்கள் அடையாளம், பிறப்பு விகிதம், சமூக அமைப்புகளை மட்டுமே கொண்டு 2000 ஆண்டுகள் அழியாமல் தாக்குப் பிடித்தார்கள். அவர்களுக்கு அரசோ, நிலமோ இல்லை. பின்பு இரண்டாம் உலகப்போர் அளித்த வாய்ப்பில் தனி நாட்டை அடைந்தனர். அடையாளத்தையும், மக்கள் தொகையும் காத்து விட்டால், நாட்டையும்  அரசையும் உருவாக்குவதற்கு நேரம் மட்டுமே தேவை. அவர்களால் எவ்வாறு அடையாளத்தைக் காக்க முடிந்தது என்று பார்த்தால், அடிப்படையில் அவர்கள் சமூக இயக்கங்களைக் கொண்டு  கொரில்லா முறையில்  அதிக வாய்ப்புகளை உருவாக்கியத்தினால்தான். உலக அரசுகள் எவ்வளவோ திட்டமிட்டு பல இனப்படுகொலைகளை செய்தும் அவர்களால் அழிக்க முடியவில்லை. அதேநேரம் யூதர்களை  அழிக்க  முனைந்த  பலமான பண்டைய ரோமாபுரி, எகிப்திய அரசுகள் இன்று இல்லை. இதற்குக் காரணம் அவர்கள். அடையாளத்தைக் காப்பதற்கு அரசை  நம்பி இருந்தனர். அரசு அழிந்தவுடன் அவர்கள் அழிந்தனர்.

மொத்தத்தில் இன்றைய சூழலிலும் நம்மால் பல வெற்றிகளைப் பெறமுடியும். அதற்கு அடிப்படையாக “சிக்கல் அமைப்புகள்” பற்றி அறிவியல் உத்திகளை வகுத்திருக்கிறது. அதுபோன்ற உத்திகளையே புலிகள் போரில் முன்னோடிகளாக பயன்படுத்தி பலவெற்றிகளைக் கண்டனர். அதே உத்திகளை நாம் இன்றை அரசியல் சமூக சூழலிலும் பயன்படுத்தி வெற்றி கொள்ளலாம்.

எவ்வாறு வேறுபட்ட சமூக இயக்கங்களை கட்டி எழுப்பி கொரில்லாத் தாக்குதல் நடத்துவது என்ற கேள்வி எழும். இதற்கான உத்தியை, குறிப்பாக மூன்று விதிகளை,  நாம் ஏற்கனவே பாடம்-2  இல் பார்த்து விட்டோம். விவரத்திற்கு அக்கட்டுரையைப் பார்க்கவும் [7].

இன்று நாம் செய்யும் பிழை என்னவென்றால், நாம் வெற்றிக்காக ஒரு உத்தியைப் பயன்படுத்துகிறோம், அல்லது தேடிக்கொண்டிருக்கிறோம். அதுபோன்ற ஒரு உத்தி என்பது இல்லை. வேறுபட்ட பல்வேறு உத்திகள்தான் வெற்றியைத் தரும், அதனால் அனைத்து முறைகளும் சரியே.  “நமது மூளையில்  ஒரு மோசமான  வியாதி உண்டென்றால் அது “இதுதான் சரியானது,  இது தவறானது” என்பதுதான் என்கிறார் ஒரு சீனப் பெரியோர். அனைத்து வேறுபட்ட முரணான உத்திகளும் ஏற்புடையதே. உத்திகளின், வாய்ப்புகளின் எண்ணிக்கைதான் நமக்கு வெற்றியைத் தருவது. அனைத்தும் ஏற்புடையதே என்பதே வெற்றிக்கான பாதை.

If you want the truth to stand clear before you, never be for or against. The struggle between ‘for’ and ‘against’ is the mind’s worst disease.”  – Jianzhi Sengcan

The only principle that does not inhibit progress is: anything goes – Feyerabend [4]

பி.கு: நான் புலிகளிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறுவது, அவர்கள் செய்தது அனைத்தையும் சரி என்று நியாயப்படுத்துவது அல்ல. நல்ல உத்திகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே.

. உசாத்துணை:

 1. Bar-Yam, Yaneer. Making things work: solving complex problems in a complex world. Knowledge Industry, 2004.
 2. Command and Control: The Military Implications of Complexity Theory, http://www.dodccrp.org/html4/bibliography/comch09.html
 3. Ben-Yehuda, Nachman. Masada myth: Collective memory and mythmaking in Israel. Univ of Wisconsin Press, 1996.
 4. Feyerabend, Paul. Against method. Verso, 1993.
 5. பரணி கிருஸ்ணரஜனி, நந்திக்கடல் – ‘தண்ணீர் கோட்பாடு’ (Water Theory), http://www.velichaveedu.com/17218-4/
 6. சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் –  பகுதி 1
 7. சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 2
 8. பரணி கிருஸ்ணரஜனி, நந்திக்கடல்’ கோட்பாடுகள். ஒரு அறிமுகம், http://eeladhesam.com/?p=5459
This entry was posted in அரசியல், ஈழப்போர், ஈழம், சமூகம், தமிழ்த்தேசியம், Uncategorized. Bookmark the permalink.

8 Responses to ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 3

 1. Pingback: ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 5 | Sethu's Blog

 2. Pingback: ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 5 | EelamView

 3. Pingback: நந்திக்கடல் / பத்தாண்டுகள். மீள் பதிவு 03. | வெளிச்சவீடு

 4. Pingback: ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 7 – இறுதி பாகம் | Sethu's Blog

 5. Pingback: ஏன் இறுதிப்போரில் பின்னடைவு ஏற்பட்டது? | வெளிச்சவீடு

 6. Pingback: பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவம் | Sethu's Blog

 7. Pingback: பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவம் ! | EelamView

 8. Pingback: மாவீரர்களின் அர்த்தமுள்ள வாழ்க்கை | Sethu's Blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s