பிளேட்டோவின் கனவுதேசம், இந்துத்வா, தமிழ்த்தேசியம்

அழிவின் விளிம்பிலிருந்த அன்றைய கிரேக்க நாடான ஏதென்சின் நிலைமையைக் கண்டு கலங்கிய தத்துவமேதை பிளேட்டோ, ஒரு திடமான என்றுமே அழியாத ஏதென்சு நாட்டை உருவாக்க என்ன செய்யவேண்டும் என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். அன்றைய அருகிலுள்ள  நாடுகளை எல்லாம் ஆராய்ந்து, ஒரு கனவு தேசத்திற்கான (Utopia) திட்டத்தை உருவாக்குகிறார். அதுதான் பிளேட்டோவின் உலகப்புகழ்பெற்ற “குடியரசு” (The Republic) என்ற நூல். அவரின் திட்டம் சுருக்கமாக இதுதான் [1]:

 1. ஒரு நாட்டில் காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்கள்தான் நாட்டை சிதைவுக்கு உள்ளாக்குகிறது. அதனால் அனைத்து மாற்றங்களும் தடை செய்யப்படவேண்டும்.
 2. மனிதர்கள் வெவ்வேறு குணமுடையவர்கள். அதனால் மக்கள்  அவர்களின் குணத்திற்கு ஏற்ற வேலைகளை செய்வதே நாட்டுக்கு சிறந்தது.
 3. ஒரு நாட்டை ஆள அறிவில் சிறந்த தத்துவமேதைதான் தேவை. மக்களாட்சி மாற்றத்தை உருவாக்கி அழிவைத்தரும், அதனால் மக்களாட்சி கூடாது. பிறப்பினால் மக்களை அவர்களின் “தன்மைக்கேற்று”  மூன்று இனங்களாக “ஆட்சி”, “காவல்”, “ வேலை” என்று கடமை ஆற்றுவதற்கென  பிரித்தார். “ஆட்சி” இனத்திற்கு கல்வி அளிக்கப்பட்டு அதிலிருந்து தத்துவமேதையை தேர்ந்தெடுத்து ஆட்சியளிக்கவேண்டும் என்கிறார். “வேலை” இனம் கல்வி இல்லாமல் அடிமைத்தொழில் செய்யவேண்டும். “காவலினம்” நாட்டைக் காக்கவேண்டும் என்று கூறுகிறார்..
 4. இந்த மூன்று இனங்களின் குணங்களும் பாதுகாக்கப் படவேண்டும், அதனால் இனங்களுக்குள் கலப்பு கூடாது. கலப்பு செய்தால் ஆட்சியாளர்களின் குணங்கள் குன்றி நாடு அழியும்.
 5. நாட்டின் பலம் ஆட்சியாளர்ளுக்கு இடையே இருக்கும் ஒற்றுமையில்தான் இருக்கிறது.  உலகில் பெரும்பாலான நாடுகள் அழிவதற்கு ஒரு காரணம் ஆட்சியாளர்களுக்கு இடையே நிலவும் போட்டிதான்.  அதனால் அவர்களுக்குள் இருக்கும்  போட்டியை நீக்க, அவர்களுக்கு செல்வம் மறுக்கப்படவேண்டும். அவர்கள் பொருள் சேகரிப்பில் ஈடுபடக் கூடாது. மேலும் இதனால் அவர்கள் கீழுள்ள மற்ற இனங்களைப் பெரிதாக ஓரளவுக்கு மேல் சுரண்ட முடியாது. அதனால் கீழுள்ள மக்களும் பெரிதாக எதிர்க்க மாட்டார்கள். மேலும் மக்களிடம் ஒற்றுமை ஏற்படுத்த மதம் முதற்கொண்டு உளவியல் முறைகளைப் பின்பற்றவேண்டும்.
 6. நீதி என்பது எது நாட்டின் பலத்தைக் கூட்டத் துணைபுரிகிறதோ அதுதான் நீதி. அதனால் இனங்கள் தங்களுக்கு அளிக்கப்பட கடமைகளிலிருந்து வழுவாமல் இருப்பதுதான் நீதி. மக்கள் நாட்டுக்காக தியாகம் செய்யவேண்டும். அவ்வாறில்லாமல் எதிர்ப்பவர்களை அரசு இரும்புக்கரம் கொண்டு நசுக்கவேண்டும்.
 7. நாட்டை பலமிக்கதாக மாற்ற அரசு பொய் கூறலாம், தவறான பரப்புரைகளை மேற்கொள்ளலாம். இது தவறல்ல, தேவையான ஒன்று.

இவ்வாறு உருவாக்கப்பட்டு மாற்றமில்லாமல்  செயல்படும் அரசுதான் பலமுடையாதாக என்றும் அழியாமல் நிற்கும் என்கிறார் பிளேட்டோ. அவர்   தனது நூலுக்கு  “குடியரசு” (The Republic) என்று பெயரிட்டுள்ளார், ஆனால் உண்மையில் அது ஒரு சர்வாதிபத்திய ஆட்சி (Totalitarian rule).

பண்டைய இந்து ஆட்சிமுறை:

மேற்கண்ட பிளேட்டோவின் கருத்துக்களுக்கும் பண்டைய இந்து அரசுகளின் ஆட்சி முறைக்கும் பெரிய வேறுபாடு இல்லை. ஆனால் இந்து ஆட்சி முறை பிளேட்டோவின் தத்துவத்தில் ஒரு “முன்னேற்றத்தை” செய்திருக்கிறது. ஆட்சியில் உள்ளவர்களிடமிருந்து செல்வத்தைப் பிரிப்பது கடினம் என்பதால்,  கல்விக்கு என்று “கல்வி”  இனம் உருவாக்கப்பட்டு, அதற்கு செல்வம் ஈட்டுவது மறுக்கப்பட்டது.  ஆட்சி அதிகாரம் காவலினத்துக்கு அளிக்கப்பட்டது. “கல்வி” இனம் “காவல்” இனத்திற்கு ஆலோசனை வழங்கி பின்னிருந்து இயக்கும்.  பிளேட்டோ  கூறியபடி அனைத்து மாற்றங்களும் தடை செய்யப்பட்டன. ஒரே ஒரு மாற்றம் மட்டும் அனுமதிக்கப்பட்டது: அது எந்த   “காவலர்” ஆட்சி செய்வது என்பது மட்டுமே. “கல்வி” இனத்திற்கு செல்வம் ஈட்டுவது மறுக்கப் பட்டது. காவலினம் ஒதுக்கும் நிதியிலேயே பெரும்பாலும் அவர்களின் வாழ்க்கை  ஓடியது. நாட்டின் ஒற்றுமை பிளேட்டோ கூறியபடி மதம், உளவியல், பலம் ஆகியவற்றைக் கொண்டு பேணப்பட்டது. “வேலை” இனம்  மாடு மாதிரி தலைமுறை தலைமுறையாக அடிமைத் தொழில் புரிந்தார்கள். இனங்களுக்கிடையே கலப்பு தடுக்கப்பட்டது. மொத்தத்தில் அன்றைய இந்து அரசுகள்   பிளேட்டோவின் உண்மையான  “கனவுதேசங்களாக” விளங்கியது.  ஈராயிரம் வருடங்களுக்கு மேலாக இந்து அரசுகளால் மாற்றங்களைத் தடுத்து இந்தக் கட்டுமானத்தை வெற்றிகரமாக காக்க முடிந்திருக்கிறது. பிளேட்டோவின் “அறிவுரையைப்” பின்பற்றாத பண்டைய கிரேக்க நாகரீகம் இன்றில்லை.

இன்றைய இந்துத்வாவின் எதிர்காலம்:

இன்றைய இந்துத்வாவும் பெரும்பாலும் பிளேட்டோவின் அறிவுரையின்படிதான் நடக்கின்றது. சாதிக் கட்டமைப்பைத் தூக்கிப் பிடிக்கிறார்கள்; மதமாற்றத்தை தடுக்கச்  சட்டம் கொண்டு .வருகிறார்கள்; இந்து மதத்தைக் கொண்டு இந்து தேசம் என்று மக்களைத் தூண்டி ஓரளவு ஒற்றுமைப்படுத்தி வெற்றி பெறுகிறார்கள்; அவர்களின் நீதி என்பது இந்து நாட்டிற்கு எது நல்லதோ அதுதான் நீதி, அதற்குத் தடையாக இருப்பவர்களை தேசத் துரோகிகள் என்று முத்திரை குத்துவார்கள், பலத்தைக் கொண்டு நசுக்குவார்கள்; அனைத்து பொய்யான  பரப்புரைகளும் செய்யப்படும். இவ்வளவு செய்தும், அவர்களால்  பிளேட்டோ கூறியபடி அனைத்து மாற்றங்களையும்  தடுக்க முடியுமா? அவர்களால் சாதி மாறி நடக்கும் திருமணங்களைத் தடுக்க முடியுமா? சாதிகளை “அவர்களுக்குரிய” வேலைகளுக்குள் மீண்டும் தள்ள முடியுமா?  அவர்களால்  பெரும்பாலும் தடுக்க முடியாது. இவ்வளவு தூரம் இந்துத்வா அட்டகாசம் செய்தாலும், முடிவில் அவர்களின் தோல்வி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்றே. இதனை அறிய சிக்கலான ஆராய்ச்சிகள் எல்லாம் தேவை இல்லை, பிளேட்டோவின் தத்துவத்தைக் கொண்டு பார்த்தாலே தெரியும். அவர்களின் வெற்றிக்குப் பெரிய தடையாக இருப்பதே அவர்கள்தான். அன்றைய “கல்வி” இனம் ஆட்சி இன்றி, செல்வம் இன்றி பின்னிருந்து சேவகம் புரிந்து கொண்டிருந்தது. இப்பொழுது அது ஆட்சியையும் செல்வத்தையும் எடுத்துக் கொண்டிருக்கிறது. இது பிளேட்டோ கூறியபடி இரு விளைவுகளை உருவாக்குகிறது:

 1. இவ்வாறு ஒரு இனம் அனைத்தையும் அனுபவிப்பதை மற்ற இனங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கப் போவதில்லை. இனங்களுக்கிடையே முரண்கள் கூடும். இது ஏற்கனவே தமிழகத்தில் நடந்துதான் திராவிடம் ஆட்சியைப் பிடித்தது. இந்த முரண் இந்தியா முழுவதும் நடக்கிறது.
 2. ஆட்சியை நடத்தும் “கல்வி” இனத்திற்குள்ளே செல்வத்தைப் பங்குபோடுவதில் சிக்கல் உண்டாகும். அதனால் அவர்களுக்குள்ளும் முரண்கள் கூடிக்கொண்டே செல்லும்.

இந்த நவீன இந்துத்வ அரசுக்கு காலப்போக்கில் முடிவுகட்ட  இவ்விரண்டு முரண்களே  போதுமானது. இதிலிருந்து தப்பிக்க  அவர்கள் பழையபடி ஆட்சியையும் செல்வத்தையும் இழக்கவேண்டும். ஆனால்  ருசிகண்ட பூனை அதை விடப்போவதில்லை.  அவர்களே அவர்களின் அழிவுக்கு வழி சமைக்கிறார்கள்; அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

எது கனவு தேசம்?

பிளேட்டோ கூறியபடி கனவு  தேசம் என்பது இவ்வாறு மாற்ற முடியாதவாறுதான் இருக்கவேண்டுமா? உண்மை என்னவென்றால் இவ்வுலகில் சிறப்பான கனவுதேசம் (perfect utopia) என ஒன்று இல்லை. யாராலும் எதிர்கால சமூகங்கள் எவ்வாறு வாழும் என்று யூகிக்க முடியாது. இதற்குக் காரணம் மிக எளிமையானது:  இவுலகைப் பற்றிய நமது  அறிவு (knowledge) முழுமையற்றது. நமது அறிவு என்பது நிலையானது அல்ல, தொடர்ந்து கண்டுபிடிப்புகள் செய்து வளர்ந்து கொண்டே இருப்பது.  புதிய கண்டுபிடிப்புகளின் விளைவாக சமூகத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். இன்று வரும் கண்டுபிடிப்புகளின் சமூகத் தாக்கங்களையே நம்மால் அறிய முடியாத பொழுது, எதிர்காலத்தில் வரும் கண்டுபிடிப்புகளின் விளைவை நம்மால் கற்பனை கூட செய்ய முடியாது. சமூகம் என்பது தொடந்து மாறிக்கொண்டே தான் இருக்கும். அதனால் எது நல்ல சமூகம், எது கனவு தேசம்  என்ற நமது பார்வையும் தொடர்ந்து மாறிக்கொண்டே செல்லும். இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், நமது சமூகம் ஒரு வளர்ச்சிப் பாதையில் மாறிக்கொண்டுதான் இருக்கும். அடிப்படையில் சமூக, அரசியல் அமைப்புகளைத் தீர்மானிப்பது, ஒரு சமூகம் அப்பொழுது பெற்றுள்ள அறிவைப் பொறுத்தே அமையும். அறிவுதான் சமூகத்தைத்  தீர்மானிக்கும் அடிப்படை காரணி. ஒரு சமூகம் வாழுமா அழியுமா என்பது எல்லாம் அச்சமூகம் பெற்றுள்ள அறிவைப் பொறுத்ததே.

அறிவியல் புரட்சிக்கு முந்தைய காலத்தில், அறிவு முன்னேற்றம் என்பது அரிதானது. காலகாலமாக மக்கள் என்ன தொழில் செய்தார்களோ அதையே பரம்பரை பரம்பரையாக செய்து வந்தார்கள். அவ்வாறு அறிவு முன்னேற்றம் இல்லாத காலத்தில், சிறப்பாக கட்டியமைக்கப்பட்ட மாறாத சமூகங்கள் (Static Society) [2] தங்களை சிறப்பாகக் காத்துக்கொள்ள முடிந்தது. அப்பொழுது மாறாத சமூகங்கள்தான் பரிணாமத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டன. அறிவியல் புரட்சி உருவாகி  நவீன உலகு தோன்றியபின் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.  எந்த சமூகம் அறிவைப் பெருக்கி தன்னை முன்னேற்றிக்கொள்கிறதோ, அதுதான் செழித்து வளரும். முதலில் அறிவியல் புரட்சியை உருவாக்கி முன்னேறிய மேற்குலகு, மாறாத பழைய உலக நாடுகளை எல்லாம் எளிதாக வீழ்த்தி தனது காலனி ஆதிக்கத்திற்கு உட்படுத்தியது உலகம் அறிந்ததே. ஒரு காலத்தில் பொற்காலம் கண்டு சிறந்திருந்த மாறாத இசுலாமிய உலகம், மேற்குலகால் சிதைக்கப்பட்டது. இனி மேல் இவ்வுலகம் கற்று முன்னேறும் மாறும் சமூகங்களுக்குத் தான். மாறாதவைக் காலப்போக்கில் அழியும். நாம் எவ்வாறு  அறிவைப் பெருக்கும்  ஒரு மாறும் சமூகமாக மாறுவது என்பதுதான் நாம் எதிர்நோக்கும் ஒரு முக்கிய சிக்கல். அந்தப் பாதையை நோக்கியே தமிழ்த்தேசியம் செயல்படவேண்டும்.

தமிழ்த்தேசியம்:

பிளேட்டோ கூறியதிற்கு நேர்மாறாக நாம் ஒரு மாறும் சமூகத்தைப் (Dynamic Society) படைக்கவேண்டும் [1,2]. மேற்குலகு இவ்வாறான ஒரு மாறும் சமூகமாக தன்னை மாற்றிக்கொண்டு முன்னேறிக்கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் சப்பானும் பிளேட்டோ கூறியபடி ஒரு நிலையான சமூகமாக சாமுராய்களை உயர்ந்த நிலையில் வைத்து கட்டியமைக்கப் பட்டிருந்தது. இந்த வர்க்க வேறுபாடுகளை எல்லாம் ஒழித்து அவர்களும் ஒரு மாறும் சமூகமாக முன்னேறிவிட்டார்கள். அவ்வாறு மாறுவதில் சிக்கல்கள் இல்லை என்று பொருள் இல்லை, அவ்வாறு உருவாகும் சிக்கல்களைத் தீர்த்து முன்னேறும் அறிவைப் பெருக்கும் சமூகமாக நாம் மாறவேண்டும்.  அவ்வாறு செய்வதற்கு  நாம் பிளேட்டோவின் கருத்துக்களுக்கு நேர்மாறாக செல்லவேண்டும்:

 • நிரந்தர கனவு தேசம் என்று ஒன்றில்லை. தொடர்ந்து அறிவைப் பெருக்கி காலத்திற்கேற்ப சமூகக் கட்டமைப்புகளை மாற்றி சிறப்பித்துக் கொண்டே செல்லவேண்டும்.
 • அனைவரும் சமம், தனிமனித சுதந்திரம்,  வேறுபாடுகளை சகிக்கும் தன்மை,  கருத்துக்களை பகுத்து ஆய்தல்  (critical thinking), குறைகளைக் கண்டுபிடித்தல் (criticism of ideas), சுயமாக சிந்தித்தல்  (independent thinking) ஆகியவற்றிற்கு  முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.  அப்பொழுதுதான் சமூகத்தில் அறிவுப்பெருக்கம் ஏற்படும். அதற்கேற்ற சமூக அமைப்புகள் உருவாக்கப்படவேண்டும்
 • உண்மையான மக்களாட்சிக்கு ஆதரவளிக்கவேண்டும். அப்பொழுதுதான் தவறான மோசமான ஆட்சிகளை எளிதாக நீக்கி முன்னேறமுடியும். நவீன உலகில் ஒரு நாட்டை  ஒரு தலைமையால் முழுதாக திட்டமிட்டு நடத்த முடியாது. உலகம் இன்று பல மடங்கு சிக்கலானது. இதை பரவலாக்கப்பட்ட அதிகாரம் மூலமே நிர்வகிக்க முடியும். இதனால்தான் நவீன உலகம் தோன்றியபின் மன்னராட்சி கவிழ்ந்து உலகம் முழுதும் மக்களாட்சி முறைக்குத் தாவியிருக்கிறது. அவ்வாறு மாறாதவை பின்தங்கிய சமூகங்களாகவே இன்னும் இருக்கின்றன. இன்றைய உலகில் பலமான தலைமையைவிட பரவலாக்கப்பட்ட அதிகாரம்தான் முக்கியம். அதுபோல பலமான அரசைவிட பரவலாக்கப்பட்ட சமூக அமைப்புகள் (social institutions) முக்கியமானது.
 • நீதி என்பது நாட்டுக்காக அல்ல;. நீதி என்பது தனி மனித நீதி. தனி மனிதனுக்கு நீதி அளிக்கமுடியவில்லை என்றால், அதுபோன்ற நாடு தேவையில்லை. தனிமனித நீதி இருக்கும்பொழுதே,  மனிதனால் சுதந்திரமாக செயல்பட்டு அறிவைப் பெருக்க முடியும், அறிவைச் செயல்படுத்த முடியும். அதுபோன்ற நாடுகளே முன்னேறி இருக்கின்றன.

நம்மை அழிக்க நினைக்கும் இந்துத்வ மற்றும் சிங்கள மகாவம்ச அமைப்புகள் பார்ப்பதற்கு பலமாகத் தோன்றினாலும்,  அவர்கள் ஒரு பழைய மாறாத கட்டமைப்பைக் கொண்டுள்ளார்கள். அதுதான் அவர்களின்  பலவீனம். இன்றையத் தமிழ்ச் சமூகத்தின் கட்டமைப்பும் அவர்களைப்போலவே ஒரு பழமையான சாதிக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. நவீன உலகுக்கு ஏற்றபடி சமூகக் கட்டமைப்பை மாற்றி ஒரு மாறும் கற்கும் சமூகமாக நாம் மாறவேண்டியது அவசியம். அவ்வாறு மாறும்பொழுது, நமது பலம் பன்மடங்கு அதிகரிக்கும்;  அப்பொழுது நமது உரிமைகளை வென்றெடுப்பது எளிதான காரியமாக மாறும்.

பி.கு: இதைப் பற்றி எனது  மேலதிக சிந்தனைகளை கீழுள்ள கட்டுரைகளில்  காணலாம் [3,4,5,6].

உசாத்துணை:

 1. Popper, Karl. The open society and its enemies. Routledge,
 2. Deutsch, David. The beginning of infinity: Explanations that transform the world. Penguin UK,
 3. சு.சேது, யார் ஆட்சி செய்வது?
 4. சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் –  பகுதி 1
 5. சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் –  பகுதி 2
 6. சு.சேது, நாம் அறிவார்ந்த சமூகமாகமாறத் தேவையான அடிப்படை காரணிகள்

 

This entry was posted in அரசியல், அறிவு, தத்துவம், தமிழ்த்தேசியம், Uncategorized. Bookmark the permalink.

1 Response to பிளேட்டோவின் கனவுதேசம், இந்துத்வா, தமிழ்த்தேசியம்

 1. விசுவேசுவரன் says:

  திருக்குறள் மனித வாழ்க்கையை சரியான பார்வையாக பார்க்கிறது..
  அது காலத்திற்கேற்ப மாறுதல்களை தன்னுள்ளே கொண்டிருக்கிறது. Self correction.
  அன்புள்ளவர் அருளாளர் என்ற மனித குணங்களை அடிப்படையாகக் கொண்டு சமூகம் கட்டமைக்கப்படும் பொழுது மனித வளர்ச்சி அதனால் ஏற்படும் மன வளர்ச்சி சமூகத்தை சரியான முறையில் வழி நடத்தும்

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s