ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 2

பாடம் 2: தமிழ்த்தேசியத்தை பரிணமித்துதான் வெல்ல முடியும்

புலிகளால் ஈழப் போர்களில் உலகை வியக்கவைக்கும் பல வெற்றிகளைப் பெறமுடிந்தது. இது எவ்வாறு சாத்தியமானது?  இதற்கு பெரும்பாலானோர் கூறும் காரணம்   பிரபாகரனின் நிகரற்ற தலைமை என்பதே. இதில் எந்த பெரிய  மாற்றுக் கருத்து யாருக்கும்  இருக்க முடியாது. ஆனால் இதுபோன்ற விளக்கங்களின் சிக்கல் என்னவென்றால், இனி வெற்றிகரமான இயக்கங்களை  எவ்வாறு கட்டி எழுப்புவது என்று  எந்த ஒரு விளக்கத்தையும்  இது அளிப்பதில்லை. இந்த விளக்கத்தின்படி நாம் நல்ல தலைமைக்காக காத்திருக்க வேண்டியதுதான். இன்றைய தமிழ்த்தேசிய அரசியலைப் பார்த்தால், அதுதான் இப்பொழுதைய உத்தி போலத் தோன்றுகிறது.

நமது சிந்தனையின் அடிப்படைச்  சிக்கல் என்னவென்றால் நாம் சிக்கலான பிரச்சினைகளுக்கும் பொதுப் புத்தியைக் கொண்டு  ஆராய்வதுதான்.  இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய பாடங்கள் கடினமாகக் கருதப்படுகின்றன, ஆனால் அரசியல் சிக்கல்கள், சமூக சிக்கல்கள் என்று வந்து விட்டால் நாம் அனைவரும் மேதாவி ஆகிவிடுகிறோம். சமூகத்தைப் புரிந்து கொள்வது அறிவியலைப் போல கடினமில்லை என்று நினைக்கிறோம். இது முற்றிலும் தவறான பார்வை. நம்மால் அறிவியலைக் கொண்டு சந்திரனுக்குப் போய்வர முடியும், ஆனால் சமூக சிக்கல்களை எப்படித் தீர்ப்பதென்று தெரியாது. தெரிந்திருந்தால் உலகிலுள்ள சமூக சிக்கல்களை  என்றோ தீர்த்திருப்போம். அவ்வாறு இருக்கும்பொழுது நாம் சமூக அறிவியலை பற்றி மட்டும் ஏன் எளிதாக எடுத்துக் கொள்கிறோம்? இதற்கு அடிப்படைக் காரணம் நமது பொதுபுத்தியின் (Common sense) தன்மை அப்படி” என்கிறார் இடங்கன் வாட்சு [1]. நமது பொதுப்புத்தி என்ன செய்கிறது என்றால், ஒரு நிகழ்வு நடந்த முடிந்தபின் ஒரு கதையை உருவாக்குகிறது. உதாரணமாக ஈழப்போரில் புலிகள் வெற்றிபெற ஆரம்பித்தபின் ஒரு நல்ல தலைமையினால்தான் இது சாத்தியமானது என்று பொதுப்புத்தியில் மூலம் முடிவுக்கு வருகிறோம். இதுபோன்ற விளக்கங்கள் நடந்து முடிந்தபின்புதான் சாத்தியம்.  நடப்பதற்கு முன்பே  இந்த பொதுப்புத்தி விளக்கத்தால் எந்த நிகழ்வையும் கணிக்கப் பயன்படாது. ஆயுதப்போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் பல்வேறு ஆயுதக் குழுக்கள் தோன்றின. அவற்றில் எது மாபெரும் இயக்கமாக வரும் என்று யாருக்கும் தெரியாது. புலிகளுக்கு பயிற்சி கொடுத்த இந்தியப் படைகளுக்கும் தெரியவில்லை.  ஏன்,  அது புலிகளுக்கே தெரிந்திருக்குமா என்பதே சந்தேகமே.  புலிகள் ஏன் வெற்றியடைந்தார்கள் என்பதை  முறையான அறிவியல் தத்துவங்களைக் கொண்டே அறிய முடியும்.

நம்மால்  சந்திரனுக்குப்   போய் வருவது எளிதா அல்லது ஈழம் அடைவது எளிதா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?  சந்திரனுக்கு எப்படிப் போய்வருவது என்பது அறிவியலால் ஏற்கனேவே அறியப்பட்ட ஒன்று.  ஆனால் ஈழம் எப்படிப் பெறுவது என்ற ஒரு திட்டம்  உலகில் எந்த அறிவாளியிடமும்  இல்லை. புலிகள் சாதனையின் உச்சத்திலிருந்த பொழுது கூட, எப்பொழுது ஈழத்தை அடைவீர்கள் என்ற கேள்விக்கு “ஈழம் அடைவதுதான் குறிக்கோள், ஆனால் எப்பொழுது என்று கூறமுடியாது” என்றே பிரபாகரன் அவர்கள்  கூறியிருக்கிறார்கள்.  நமது சிக்கல் என்பது ஈழத்தை எப்பொழுது அடைவோம் என்பது மட்டுமல்ல, அதற்கு எந்தப் பாதையில் செல்லவேண்டும் என்பதுகூட அறியப்படாத ஒன்று.

சமூகம் என்பது மிகச்சிக்கலான அமைப்பு. அதில் ஒரு நாட்டை அடைவது என்பது எளிதானது அல்ல. அது மக்களின் ஒத்துழைப்பு, எதிரிகளின் பலம், நமது பலம்,   அண்டைய நாடுகளின் போக்கு, உலக நாடுகளின் சுயநலம்,  பல்வேறு அமைப்புகள், உலகப் பொருளாதாரம், உலக ஒழுங்கு எனப் பலவற்றை நம்பியுள்ளது. இவை காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே வேறு இருக்கும்.  இவ்வாறான மிகச்சிக்கலான அமைப்புகளில் ஏற்படும் சிக்கல்களை X=? என்று கணிதத்தில் விடை காண்பதுபோல சிந்தித்து கணித்து விடை காண முடியாது.  கடந்த சில பத்தாண்டுகளாக சிக்கலான அமைப்புக்களைப் பற்றிய ஆராய்ச்சிகள், இதுபோன்ற சிக்கல்களுக்கு முழுத் திட்டமிடல் சாத்தியமில்லை என்றே கூறுகிறது [2]. நம்மால் ஈழத்தை முழுத்திட்டமிட்டு அடையமுடியாது, அப்படி ஒரு திட்டம் இருக்கவும் முடியாது. அப்படி என்றால் தீர்வுதான் என்ன? சிக்கலான அமைப்புக்களைப் பற்றிய ஆராய்ச்சிகள் கூறுவது என்னவென்றால், இதற்கு பரிணாமம்தான் (Evolution) ஒரே தீர்வு [2]. இவ்வுலகில் முழுத் திட்டமிடல் இல்லாமல்  இலக்கை வீழ்த்தும் ஒரே உத்தி பரிணாமம்தான்,  வேறு வழி இல்லை. புலிகள் பலம் வாய்ந்த இயக்கமாக மாறுவதற்கும்பலவெற்றிகளைப் பெறுவதற்கும்  அடிப்படைக் காரணம் அவர்கள் இந்த பரிணாம உத்தியின் வழியாக பயணித்ததே. இதை அவர்கள் அறிந்து செய்யவில்லை, மாறாக வரலாறு தற்செயலாக அவர்களை அப்பாதையில் செலுத்தியது.  இக்கட்டுரையின் அடிப்படை நோக்கம் அந்த உத்தியை வெளிப்படையாக்குவதே. முதலில் பரிணாம  உத்தி எவ்வாறு வேலை செய்கிறதென்று பார்ப்போம்,  பின்பு  இந்த பரிணாம உத்தி எவ்வாறு புலிகளை வடிவமைத்தது என்று ஆராய்ந்து,  அதன்பின் இன்றைய சூழலில் இந்த உத்தியை நாம் எவ்வாறு பயன்படுத்தி செயல்படுவதென்று பார்ப்போம்.  இதுவரை  நாம் கொண்டிருக்கும் கருத்துக்களை உத்திகளை எல்லாம்  இது  பெரும்பாலும் தலைகீழாக்கும், அதனால் திறந்த கண்ணோட்டத்தோடு  படிக்கவும்.

பரிணாமத் தத்துவம் (Evolution):

இவ்வுலகில் மனிதன் உட்பட அனைத்து உயிர்களும் யாருடைய திட்டமிடலும் இல்லாமல் தாமாக பரிணாமத்தன  என்பது  அனைவரும் அறிந்ததே. இது எப்படி சாத்தியமானது? பரிணாமம் என்பது அடிப்படையில் மூன்று அடிகளைக் கொண்டது [3,4]:

 1. வேறுபாடுகளுடனான உயிர்கள்: ஓர் உயிரினத்தில் பார்ப்பதற்கு அனைத்து உயிர்களும் ஒரே மாதிரியாக இருந்தாலும், அவற்றுக்குள் வேறுபாடுகள் உண்டு. உதாரணமாக ஒரு குருவிக்கு பார்வை சிறப்பாக இருக்கும், இன்னொன்றுக்கு நன்றாக கூடுகட்டத் தெரியும்.
 2. தகுதியானவை வாழ்கின்றன: எந்த உயிர்கள் தனது சுற்றச்சூழலுக்கு ஏற்ப தகுதியாக இருக்கிறதோ அவை வாழ்கின்றன. அவ்வாறு இல்லாதவை அழிகின்றன.
 3. இனப்பெருக்கம்: அவ்வாறு வெற்றியடைந்தவை அதிக குட்டிகளை ஈனுகிறது.

இந்த மூன்றடுக்கு முறை சுழற்சியில் குருட்டுத்தனமாக இயற்கையில் இயங்குகிறது. இதுதான் ஒரு செல் உயிரிலிருந்து மனிதன் வரைப் படைத்தது. பரிணாமம் என்பது போட்டி என்பது மட்டுமல்ல, ஒத்துழைப்பும் சேர்ந்ததுதான். எந்த உயிர்கள் நன்றாக ஒத்துழைக்கின்றனவோ, அவை வாழ்வதற்கான வாய்ப்பு கூடுவதால்தான் ஒரு செல் உயிரான பாக்டீரியாவிலிருந்து  பல்சேல் உயிர்களான தாவரங்களும் விலங்குகளும் தோன்றின. மனித  சமூகமே ஒத்துழைப்பினால் உருவானதுதான்.

இந்த பரிணாமத்திற்கு மூன்று முக்கிய பண்புகள் உள்ளது:

 1. தெளிவான ஒரு பாதை கிடையாது. பரிணாமம் திட்டமிட்டு பாதை வகுத்து மனிதனை உருவாக்கவில்லை
 2. முன்னேறுவதற்கு அடுத்த உடனடியாக எத்தனை பாதைகள் உள்ளனவோ, அத்தனை வழியாகவும் பயணிக்கும். இவ்வாறுதான் ஒரு செல்லில் உயிர் ஆரம்பித்து இன்று பூமி முழுவதும் ஆழ்கடலில் பல்வேறு உயிர்கள் விரவிக் கிடக்கின்றன. அனைத்து உயிரிகளின் மூலமும் ஒன்றே. இவ்வுலகிலுள்ள மற்ற உயிர்கள் அனைத்தும் நமது மூதாதையர்கள் அல்லது உறவினர்கள். நாம்தான் கடைக்குட்டி.
 3. இவ்வாறு உருவாக்கிய பல பாதைகளில், பெரும்பாலானவை தோற்கும். இதுவரை பூமியில் தோன்றிய உயிரினங்களில் 99% இறந்துவிட்டன.

அடிப்படையில் பரிணாமத்தில் என்ன நடக்கிறதென்றால், உயிர்கள் அனைத்தும் அவற்றின் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தகவமைக்கப் படுகின்றன. மீன்கள் நீரில் வாழ்வாதாரக்கேற்ப உடல் தகவமைக்கப்பட்டுள்ளது. அதுபோல பறவைகள் வானிலும் வாழ பரிணாமத்தால் உடல் தகவமைக்கப்பட்டுள்ளது. தத்துவமேதைகள் கார்ல் பாப்பர், புளொட்கின் [5,6] ஆகியோர் தகவமைப்புகளை அறிவு என்றே பார்க்கின்றனர். இதன் அடிப்படையில் உயிர்கள் அனைத்தும் அவை வாழும் சூழலுக்கு ஏற்ற அறிவைப் பெற்றுள்ளன என்று கூறலாம்.  இதன்படி  ஓர் உயிர் தான்வாழும் சூழலுக்கு ஏற்ப அறிவைப் பெற்றுள்ளதா இல்லையா என்பதே அதன் வாழ்வை தீர்மானிக்கிறது. தாவரங்கள்  விலங்குகள் அறிவை உணர்வதில்லை,  ஆனால் இந்த அறிவு அதன் மரபணுக்களில் இருந்து அவற்றை இயக்குகிறது. நாம்  அறிவை உணர்கிறோம் கற்கிறோம்; அதுதான் வித்தியாசம்.  மனிதன் அடைப்படையில் நிலத்தில்  வாழ்வதற்கென்று வடிவமைக்கப் பட்டாலும், அவனால் நீரிலும் வானிலும், விண்வெளியில் வாழ முடியும். இதற்கு காரணம் நாம் அறிவைக் கற்றல் மூலம் வளர்த்துக்கொள்ள முடிவதால்தான். இந்த அறிவின் தேவை உயிர்களுக்கு மட்டுமல்ல, உயிரை ஒட்டிய அனைத்து அமைப்புகளுக்கும் பொருந்தும். ஒரு தனிமனிதனின் வெற்றி, வணிக நிறுவனத்தின் வெற்றி, ஒரு நாட்டின் வெற்றி உட்பட தீர்மானிப்பது அவ்வமைப்புகள் பெற்றுள்ள அறிவு. இவ்வுலகம் உயிர்கள் வாழமுடியாதபடி  வெப்பமடைந்தாலும், அந்தச் சூழலிலும் வாழ்வதற்கான அறிவை மனிதன் பெற்றுக் கொண்டால்,  அதிலும் செழிக்க முடியும். அடிப்படையில் மனிதனின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போவது அறிவு மட்டுமே. இதிலிருந்து நமக்கு ஒரு அரசியல் பாடம் இருக்கிறது. ஓர்  இனம் வாழ்கிறதா அல்லது அழிகிறதா என்பது அவ்வினம் பெற்றுள்ள அறிவைப் பொறுத்தே அமைகிறது. நமது சிக்கல்கள் அடிப்படையில் ஒரு அறிவுச் சிக்கல் என்று உணரவேண்டும்.

பரிணாமம் என்பது  அறிவை உருவாக்கும் முறை. நமது அறிவியல் முன்னேற்றம் என்பதும் இவ்வழியிலேயே நடக்கிறது என்கிறார் அறிவியல் தத்துவமேதை பாப்பர் [5]. நமது அறிவியல் வளர்ச்சி என்பது பரிணாம வளர்ச்சியின் தொடர்ச்சியாக பார்க்கிறார்.  அறிவியல் முறை என்பது அடிப்படையில் பரிணாமத்தின் மூன்றடுக்கு முறைதான்:

 1. தற்காலிக கோட்பாடுகள் (வேறுபாடுகள்)
 2. ஆய்ந்து, விவாதித்து, சோதனை செய்து தவறான கோட்பாடுகளை கண்டுபிடித்து நீக்குதல். (தேர்வு)
 3. விவாதத்தின் விளைவாக புதிய சிக்கல்களின் தோற்றம்¸ அதனால் புதிய கோட்ப்பாடுகளின்   உருவாக்கம். (இனப்பெருக்கம்)

அறிவியலும்  பரிணாமத்தைப் போல முழுத் திட்டமிடல் இல்லாமல், அடுத்தடுத்து எந்த  சிக்கல்களைத் தீர்க்க முடியுமோ, அதற்கு கோட்பாடுகளை உருவாக்கி தீர்த்துக்கொண்டே போகிறது.  இவ்வாறுதான் அறிவியல் முன்னேறுகிறது.  மனிதனின் பரிணாம வளர்ச்சி மரபணுக்கள் மூலம் நிகழ்வதல்ல, கற்றல் மூலம் நிகழ்வது. நமது மூளை ஈராயிரம் வருடங்களுக்கு முன் எப்படி இருந்ததோ அப்படியேத் தான் இன்றும் இருக்கிறது, நமது முன்னேற்றம் அனைத்தும் கற்றலையும் கண்டுபிடிப்புகளையும் அடுக்குவதனால் உருவாகிறது.

அறிவியலைப் போலவே  ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் இந்த பரிணாம உத்தியை நம்பியே இருக்கிறது:

 1. பல்வேறு வேறுபாடுகளுடனான தொழில் நிறுவனங்கள் (வேறுபாடுகள்)
 2. இலாபமான தொழில் நிறுவங்கள் பிழைக்கின்றன, வளர்கின்றன; முடியாதவை அழிகின்றன (தேர்வு)
 3. புதிய வாய்ப்புகளினால் புதிய நிறுவனங்களின் தோற்றம் (இனப்பெருக்கம்)

அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கில் 75% சதவிகித தொழில் முனைவோர் தோல்வி அடைகின்றனர்.  வெற்றிபெறும் சில நிறுவனங்கள் மாபெரும் வளர்ச்சியடைந்து பொருளாதாரத்தையே மாற்றி அமைக்கின்றன. வெற்றியடைந்தோரின் வெற்றி என்பது தோற்றவர்கள் இல்லாமல் நடப்பது இல்லை [10]. அவற்றின் தோல்விகளிலிருந்து கற்றுதான் மற்றவை வெற்றியடைகின்றன. அதிலும் ஒரு சிலதே  மாபெரும் வெற்றியடைகின்றன. எது மாபெரும் வெற்றியடையும் என்று  முன்கூட்டியே அறியமுடியாது. அது தானாக பரிணமிப்பது [7].

அடிப்படையில் சமூகம் என்பது மிகச்சிக்கலான அமைப்பு என்பதால், அதில் தோன்றும் கடினமான சிக்கல்களை முழுத்  திட்டமிட்டு தீர்க்கமுடிவதில்லை. அவ்வாறான சிக்கல்களைத் தீர்க்க சிறந்த உத்தி என்பது பரிணாமமே என்கிறார் பார்யாம் [2]. இதற்கு அறிவியல் முன்னேற்றமும் பொருளாதாரமும் நல்ல சான்றுகள். இதே உத்தியைப் பயன்படுத்தி நல்ல கல்வி, சுகாதார அமைப்புகளையும் உருவாக்க முடியும் என்கிறார். இதை நீட்டித்து ஒரு தேசிய இனத்தின் பாதுகாப்பிற்குத் தேவையான இயக்கங்களையும் நம்மால் உருவாக்க முடியும்.  முதலில் புலிகள் எவ்வாறு பரிணமித்தார்கள் என்று பார்ப்போம்.

புலிகளின் பரிணாமம்:

புலிகள் இயக்கம் முதலிலேயே முற்றும் முழுதும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல. அது ஈழச் சூழலுக்கு ஏற்ப பரிணமித்த ஒரு தனித்துவமான  இயக்கம். யாரையும் அப்படியே படி (copy) எடுத்து உருவாக்கப்பட்டதல்ல.

முதலில் அரசியல் பாதையில் சென்று கொண்டிருந்த ஈழப்போராட்டம், வெற்றிபெற முடியாததனால், ஆயுதப் போராட்டக் கருத்தியல் உருவானது. முதலில் பல்வேறு இயக்கங்கள் பல்வேறு கருத்தியல் வேறுபாடுகளுடன்    தோன்றின.  அவற்றிற்கிடையே யார் சிறப்பாக ஈழவிடுதலையை முன்னெடுக்கிறார்களோ, அவர்களுக்கு மக்களின் ஆதரவு பெருகும், அவர்கள் பலசாலி ஆவார்கள். இவ்வாறு இயக்கங்களுக்கிடேயே ஒரு பரிணாமப் போட்டி ஆரம்பிக்கிறது. பரிணாமத் தத்துவத்தின்படி  எந்த இயக்கம் ஈழச்சூழலுக்கு ஏற்றபடி கற்று தங்களை சரியாக தகவமைத்துக்  கொள்கிறார்களோ,  அவர்களே வெற்றி பெறுவார்கள்.  முடிவில் அந்தப் பேறு புலிகளுக்கே கிடைத்தது. வேறு எவராவது சிறப்பாக தகவமைத்திருந்தால் அவர்கள் வென்றிருப்பார்கள்.  அவர்கள் பரிணாமத்தால் சிறப்பானவர்கள் என்று தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். அதனால்தான் அவர்கள் பல வெற்றிகளைப் பெறமுடிந்தது.

இயக்கங்களுக்கு இடையேயான ஆரம்பகால போட்டிகளை  சகோதர யுத்தம் என்று குற்றம் கூறுவது அறியாமை. ஆரம்பத்தில் யார் வெற்றி பெறுவார், எந்த கருத்தியல் வெற்றி பெரும், எந்த இயக்கம் திறமையானது என்று யாராலும் தீர்மானிக்க முடியாது. அதற்கான அறிவு யாரிடமும் இல்லை.  மேலும் ஒரு தேசியத்திற்கு ஒரு இராணுவம்தான் இருக்கமுடியும். உலகில் எந்த நாடும் இரு இராணுவங்களை வைத்து இருப்பதில்லை. ஆரம்பத்தில் பல ஆயுத இயக்கங்களாக இருந்தாலும், முடிவில் அவை இணைந்து அல்லது சில அழிந்து ஒரே இராணுவமாகத்தான் பரிணமிக்கும்,  வேறு வழியில்லை. அதுதான் ஈழத்தில்  நடந்தது. இயக்கங்களுக்கிடையே போட்டி இல்லாமல் இயக்கங்கள் கற்கவும் முடியாது, வளர்ச்சியும் அடையவும் முடியாது. ஒரு பலமான தமிழ்த்தேசிய இராணுவப் பரிணாமத்திற்குத் தேவையான ஒன்று.

இவ்வாறு பல இயக்கங்கங்கள் தோன்றாமல், பிரபாகரன் அவர்கள் தலைமையில் மட்டும் ஒரே இயக்கம் தோன்றி  இருந்திருந்தால், அந்த புலிகள் இயக்கம் இப்பொழுது படைத்துள்ள சாதனைகளைப் படைத்திருக்குமா?  இந்தக் கேள்விக்கு பரிணாமத் தத்துவம் கூறும் பதில் “இல்லை” என்பதுதான். ஏனென்றால் பிரபாகரன் அவர்கள் எவ்வளவுதான் திறமைசாலியாக இருந்தாலும், மற்ற இயக்கங்கள் செய்யும் பிழைகளிலிருந்து கற்று முன்னேற வாய்ப்பு இருந்திருக்காது. அவர்களை எளிதாக எதிரிகள் மடக்கி இருப்பார்கள். போட்டி இருக்கும் பொழுதுதான்  கற்றல் அதிவேகமாக இருக்கும். புலிகளை அடைப்படையில் வெற்றி பெற வைத்தது பரிணாமத்தால்  உருவாகும் கற்றலே.

புலிகள் இவ்வாறு வெற்றியடைந்து ஒரு தேசிய இராணுவத்தை  உருவாக்கியபின்னும்  கற்றல் நின்றுவிடவில்லை. உலக இராணுவ உத்திகளை கற்றது மட்டுமில்லாமல், ஒவ்வொரு போரிலும் அனுபவம் பெற்று புதிய உத்திகளை, அமைப்புகளை, படைப்பிரிவுகளே  உருவாக்கிக் கொண்டே இருந்தார்கள். எவ்வாறு பரிணாமம்  அனைத்துப் பாதைகளின் வழியாக செல்கிறதோ, அதே போன்று அனைத்து  வழிமுறைகளும் பின்பற்றப்பட்டன. படைப் பிரிவுகளுக்குள்ளே யார் எதிரியுடன் போரில் சிறக்கிறார்கள் என்ற போட்டியும் உருவாகிறது. இதன் விளைவாக பல சிறப்பான படையணிகளும் தலைவர்களும் பரிணமிக்கிறார்கள். கடற்படை விமானப்படை என புதிது புதிதாக பரிணமித்துக்கொண்டே இருந்தார்கள். இன்று புலிகள் இருந்திருந்தால், மேலும் பல சாதனைகளை செய்திருப்பார்கள்.  ஒரு செயற்கைக் கோளை ஏவினாலும்  ஏவி இருப்பார்கள்.  அவர்களுக்கு எப்பொழுது ஈழம் அடைவோம், அதற்கு என்ன பாதை  எனவும்  தெரியாது , ஆனால் ஒவ்வொரு அடியும் அதனை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார்கள். அதுதான் பரிணாம உத்தி என்பது. அதைத்தான் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ பின்பற்றிக் கொண்டிருந்தார்கள். புலிகள் இயக்கம் என்பது பரிணமிக்கும் கற்கும் இயக்கம். அதனால்தான் அவர்களால் மாபெரும் சாதனைகளைப் படைக்க முடிந்தது.   அவர்கள் கற்றது பலவகைகளில் புதுமையானது என்பதால், உலகம் இன்னும் பல நூற்றாண்டுகள் அவர்களைக் கற்றுக்கொண்டு இருக்கும். இன்று உலக இராணுவப் பள்ளிகளில் புலிகளைப் பற்றியப் பாடம் கட்டாயம் ஒன்று இருக்கும்.  புலிகள் உலக இராணுவங்களுக்குப்  பாடத்தைக் கற்றுக்கொடுத்தவர்கள். அதுபோன்ற சாதனைகளை ஒரு பரிணாம இயக்கத்தினால் மட்டுமே செய்ய முடியும்

இனி நாம் செய்யவேண்டியது என்ன?

இறுதிப் போருக்குப்பின் இப்பொழுது எது போன்ற உத்திகள் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியவில்லை. நான் பார்த்த அளவில் “ஒரு நல்ல தலைமை” கிடைத்தால்தான் நம்மால் மீண்டும் எழ முடியும் என்ற சிந்தனைககளை அடிக்கடிப் பார்க்கிறேன். இது பரிணாம உத்தியின் பார்வையில் பிழையான தத்துவம். இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அவற்றைப் பற்றி தனிக் கட்டுரை எழுதியிருக்கிறேன்[8].  நாம் எதிர்நோக்கும் சிக்கல் என்பது அறிவுச்சிக்கல். ஈழத்தை எப்படி அடைவது  என்பதற்கான அறிவு யாரிடமும் இல்லை. இதுபோன்ற சிக்கல்களுக்கு பரிணாமா உத்தி ஒன்றுதான் வேலை செய்யும். நல்ல தலைமையைக் கூட பரிணாம உத்தியின்படிதான் கண்டறிய முடியும்.

பரிணாம உத்தியை தமிழ்த்தேசியத்திற்கு  எவ்வாறு பயன்படுத்துவது?  சிக்கலான தகவமையும்  அமைப்புகளைப்  (Complex Adaptive Systems) பற்றிய ஆராய்ச்சிகள் இதற்கான முறையை அளிக்கிறது [2]. அதை தமிழ்தேசியத்திற்கு கீழ்வருமாறு  பயன்படுத்தலாம்:  இது சிக்கலானது அல்ல,  மூன்று எளிமையான விதிகள் போதுமானது.

விதி 1:  முதலில் பரிணாமப் போட்டிக்கான விதிமுறைகளைப் பட்டியலிடவேண்டும்.  கண்டிப்பாகத் தேவையான விதிமுறைகள் மட்டுமே இருக்கவேண்டும். தேவையற்ற விதிமுறைகள் பரிணாமத்தைப் பாதிக்கும். எவ்வளவு குறைவான விதிகள் உள்ளதோ அவ்வளவு நல்லது.  அனைத்து தமிழ்த்தேசிய இயக்கங்களும் இந்த விதிகளைப் பின்பற்ற வேண்டும். இவற்றை மீறினால், அவர்கள் ஆட்டத்தில் இல்லை, அவர்களுடன் மற்ற இயக்கங்கள் ஒத்துழைக்கக்  கூடாது, ஆனால் அவர்களை தோற்கடிக்க முயலவேண்டும்.  இந்த விதிகள் ஆழமாக சிந்திக்கப்பட வேண்டியது. இப்பொழுது எனது எண்ணத்தில் தோன்றியதைப்  பகிர்கிறேன். இவை எதிர்காலத்தில் மாறலாம்.

புலிகளை உணர்வுப்பூர்வமாக இணைத்துப் போராட வைத்தது மாவீரர்களின் நினைவுதான். உணர்வுகள்தான் மனிதனை இயககும் சக்தி; பகுத்தறிவு  உணர்வுகளுக்கு அடிமை.  அதனால்,  தமிழ்த்தேசிய உணர்வுதான் இயக்கங்களுக்கு அடிப்படையாக இருக்கவேண்டியது. அதை எடைபோடும் ஒரே கருவி என்பது  அவர்கள் குடும்பத்துடன் மாவீரர் நிகழ்வுகளை அனுசரிக்கிறார்களா என்பதே. நூறு பொய்கள் சொல்லி ஏமாற்ற முடியும். ஆனால் தொடர்ந்து உணர்வுகளால் இணைக்கும் சடங்குகளை ஏமாற்ற முடியாது [11]. அதனால் பரிணாமப் போட்டியின் விதி என்பது ஒன்றே ஒன்றுதான்: அனைத்து இயக்கங்களும் அவற்றில் உள்ளவர்களும் மாவீரர் நாளையும் மற்ற முக்கியமான நினைவு நாட்களையும்  குடும்பத்துடன் அனுசரிக்கவேண்டும்.

விதி 2: பல்வேறு அமைப்புகளிடேயே போட்டியை உருவாக்க வேண்டும்.  அது அரசியல் முதல் எந்தத் துறையாகவும் இருக்கலாம். எது சரியான பாதை என்பதைப் பரிணாமம் தீர்மானிக்கட்டும். முயற்சிகள்  எவ்வளவு புதுமையோ அவ்வளவு நல்லது. முயற்சிகள் ஒன்றுக்கொன்று முரணாக இருந்தால், கூடுதல் சிறப்பு. பரிணாமத்தில் முரண் என்று எதுவும் இல்லை. வெற்றி என்பது மட்டுமே பரிணாமத்தில் முக்கியமானது. பெரும்பாலான முயற்சிகள் தோற்கும். அது ஏற்புடையதே, அதிலிருந்து கற்றுதான் மற்ற அமைப்புகள் வெற்றி அடையும். தோல்வியுற்ற அமைப்புகளும் கொண்டாடப்பட வேண்டியவையே. அமைப்புகள்  தேவையான இடத்தில் ஒத்துழைக்க வேண்டும், தேவையான இடத்தில் முரண்படவேண்டும். தனித்து இயங்குவதுதான் சிறப்பானது என்றால் தனித்து இயங்கவேண்டும். அவ்வாறு தனித்து இயங்கினால், ஒரு அமைப்பிற்கு ஏற்படும் பாதிப்பு இன்னொரு அமைப்பைப் பாதிக்காது. அனைத்து அமைப்புகளும் சேர்ந்து ஒரு பொதுவான தலைமையின் கீழ் இயங்கினால், ஒரு சிறு தவறின் மூலம் மொத்தமும் அழியும். பொதுவான தலைமை என்பது கூடாது. ஒவ்வொரு அமைப்பும் அதற்கான தலைமையுடன் தனித்து இயங்கும். ஓர் அமைப்பு நினைத்தால் இன்னொரு அமைப்புடன் இணைந்து கொள்ளலாம்.  ஒன்றிணைத்து செயல்பட  தலைமை தேவைப்பட்டால், தேவைக்கற்றபடி தலைமைத் தானாக பரிணமிக்கும். வாய்ப்பு இருக்கும் இடத்தில் எல்லாம் புதிது புதிதாக அமைப்புகள் தோன்றிக்கொண்டே இருக்கவேண்டும். புதிய  அமைப்புகளை மக்களோ அல்லது மற்ற அமைப்புகளோ உருவாக்கலாம்.

விதி 3. இந்த ஆட்டத்தில்  வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் நடுவர்கள் மக்களும் அமைப்புகளுமே. எந்த அமைப்புகளை அவர்கள் ஆதரிக்கிறார்களோ அவர்கள் வளர்வார்கள். எவை எதிரிக்கு எதிராகத் தாக்குப்பிடித்து வெற்றி அடைகிறார்களோ, அவர்களுக்கு மக்களின் ஆதரவு பெருகும். மொத்தத்தில் ஓர் அமைப்பின் வெற்றியைத் தீர்மானிப்பது அவ்வமைப்பு  தனது  சூழலுக்கு ஏற்று சிறப்பாகச் செயல்படுகிறதா என்பதே.  இந்த ஆட்டத்தை ஒழுங்குபடுத்தி செயல்படுத்த தலைமை எதுவும் தேவை இல்லை. மக்களும் போட்டிபோடும் அமைப்புகளும் தாங்களே இந்த மூன்று பரிணாம விதிகளின்படி ஒழுங்குபடுத்திக் கொள்வார்கள். இதைப் பரிணாமத் தத்துவத்தில் சுயஒழுங்கு (Self Organization) என்று அழைக்கிறார்கள். இதன் மூலம்தான் யாரின் மேற்பார்வையும் இல்லாமல் உயிர்கள் பரிணமித்தன. அதுபோலத்தான் நாம் உருவாக்கும் இயக்கங்களும் பரிணமிக்கவேண்டும்.

இந்தப் பரிணாம உத்தியைக் கொண்டு நமக்குத் தேவையான சிறப்பான  அமைப்புகளைப் பரிணமித்து உருவாக்கலாம். நாம் பயன்படுத்தும் பரிணாம உத்தி அடுக்கடுக்காக பல்வேறு அமைப்புகளையும் கிளைகளையும்  உருவாக்கும். அவை தேவைப்பட்டால் இணைந்து இயங்கும் அல்லது தனித்து இயங்கும். எவ்வாறு நமது உடலில் வெவ்வேறு உறுப்புகள் பரிணமித்து  இணைந்து இயங்குகின்றனவோ, அதைப்போல நாம் எதிர்நோக்கும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கேற்றவாறு அமைப்புகள் பரிணமிக்கும். புலிகள் தெரிந்தோ தெரியாமலோ போர்த்துறையில் மட்டும் இவ்வுத்தியை பயன்படுத்தினர். நாம் அனைத்து துறைகளிலும் வலிந்து பயன்படுத்த வேண்டும்.

பல்வேறு அமைப்புகள் இருப்பதால், ஒன்றின் தோல்வி நம்மைப் பெரிதாக பாதிக்காது. உதாரணமாக பரிணாமம் நமக்கு, இரண்டு கண்கள், கைகள் கால்கள் என இரட்டிப்பாக உருவாக்கியதால், ஒன்றை இழப்பதால் நாம் முற்றும் செயலிழப்பதில்லை. அதுபோல ஒரு அமைப்பின் அழிவை இன்னொன்று ஈடுகட்டும். விரைவில் அத்தோல்வியிலிருந்து கற்று புதிய அமைப்புகள் உருவாகி முன்பைவிட சிறப்பாக செயலாற்றும். எந்த ஒரு தனி அமைப்பின் தோல்வி என்பது பெரிய பின்னடைவை உருவாக்காது.

இதை எங்கிருந்து ஆரம்பிப்பது என்ற கேள்வி எழும். தமிழ்த்தேசிய உணர்வுள்ள மக்கள்தான் இந்த உத்திக்கு அடிப்படை (விதி 1) என்பதால், முதலில் அவர்களை உருவாக்குவதுதான் முக்கியமானது.  இன்று தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் உணர்வுகளற்று இருக்கிறார்கள். எத்தனை வீடுகளில் மாவீரர் நாள் அனுசரிக்கப்படுகிறது?  ஒருமித்த  உணர்வுள்ள மக்கள் கூட்டத்தை உருவாக்குவதற்குத்தான் முதலில் பரிணாம உத்தியைப் பயன்படுத்தவேண்டும். இதனை பற்றி பகுதி-1 இல்  எவ்வாறு புலிகளின் வரலாற்றுக் கற்பிதங்கள்  இதற்குத் துணைபுரியும் என்று விரிவாகப் பார்த்தோம் [9]. பல்வேறு   பண்பாட்டு அமைப்புகளை உருவாக்கி அவர்களுக்குள் போட்டியை உருவாக்கவேண்டும். எவை உணர்வுப்பூர்வமாக மக்களை இணைக்கிறதோ, அவைத்  தாமாக வெற்றி பெரும். உதாரணமாக யூதர்கள் இவ்வாறு பல்வேறுபட்ட பண்பாட்டு அமைப்புகளை உருவாக்கி  தங்களைக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.    இத்தனைக்கும் அவர்களுக்கு ஈராயிரம் ஆண்டுகளாக நாடும் இல்லை, தலைமையும் இல்லை.

எங்கெங்கெல்லாம் சிக்கல்கள் தோன்றுகிறதோ, அங்கெல்லாம் பல்வேறு அமைப்புகளை அமைத்து போட்டியை உருவாக்கவேண்டும். இவையெல்லாம் உடனடியாக நடப்பதல்ல. புலிகள் பரிணமித்து பலமாக வெற்றிபெற எவ்வளவு காலமானதோ, அதுபோல ஆகும். அதனால் இவ்வுத்தியை நீண்டகால நோக்கில் பயன்படுத்தவேண்டும். பரிணாம உத்தி என்பது அடிப்படையில் அறிவை உருவாக்கும் உத்தி. புலிகள் போர்த்துறையில் அறிவைப் படைத்துக் கொண்டிருந்தார்கள். அதுதான் அவர்களை வெற்றியின் உச்சிக்கு கொண்டு சென்றது.  அதுபோல நாம் ஈடுபடும் அனைத்து துறைகளிலும் புதிய  அறிவைப் படைத்துக் கொண்டே இருக்கவேண்டும். நாம் வெற்றி பெறுவது நாம் பெரும் அறிவினிலேயே உள்ளது. அறிவியல் பூர்வமாக சிந்த்தித்து எங்கெல்லாம் வாய்ப்புகள் உள்ளன, அடுத்து எடுப்பதற்கு எது நல்ல அடி, எதுபோன்ற உத்திகள் சிறப்பானவை என்று மாறும் சூழலுக்கு ஏற்ப தொடர்ந்து  ஆராயப்பட வேண்டியது.  அதற்கேற்ற ஆராய்ச்சி அமைப்புகளைத் தோற்றுவித்து அவர்களுக்குள்ளும் போட்டியை உருவாக்கவேண்டும். மக்கள் அனைவருக்கும் இந்த பரிணாம உத்தி கற்பிக்கப் பட்டு, பரிணாமம் என்பது நமது பண்பாட்டு பழக்கவழக்கமாக மாற்றவேண்டும் [10]. அதற்கு நாம் ஓர் அறிவார்ந்த சமூகமாக மாறவேண்டியுள்ளது. அதற்கேற்ற கல்வி அமைப்புகளை உருவாக்குவது அவசியாயமானது. அவற்றையும் பரிணாம உத்தியின் மூலம் உருவாக்கலாம்.

இவ்வாறு போட்டியை உருவாக்குவது, ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு திசையில் இழுத்து முன்னேற்றத்தைத்  தடுக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவ்வாறு நடக்கப் போவதில்லை. இதற்குக் காரணமாக நான் வைப்பது:

 • இந்த பரிணாம உத்தியின் அடிப்படை என்பது போட்டி அல்ல, கற்றலே அடிப்படை. போட்டி என்பது கற்றலுக்குத் துணைபுரிகிறது.
 • அமைப்புகள் அனைத்தும் குருட்டுத்தனத்தில் நாம் உருவாக்கப் போவதில்லை. நன்றாக கற்றறிந்து, பயனுள்ள உத்திகளை கண்டறிந்து, அவற்றில் எது உகந்ததோ அவைதான் இயக்கங்களாக உருவாகும். அவ்வாறு உருவாகும் இயக்கங்களுக்குள் போட்டி இருக்கும். எவ்வாறு அறிவியலாளர்களுக்குள் ஏற்படும் போட்டி அறிவியல் முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறதோ, அதைப்போன்ற முன்னேற்றத்தை நோக்கி போட்டியை உருவாக்கவேண்டும்.
 • பரிணாம உத்தியில் எந்த விதிகளின் அடிப்படையில் (விதி-1)  அமைப்புகள் போட்டி போடுகின்றன என்பதை சரியாக அமைப்பதின் மூலம், அமைப்புகளை  முன்னேற்றத்தை நோக்கி செலுத்தலாம்.
 • பரிணாம உத்தியை ஓர் அமைப்பிற்குள்ளும் செயல்படுத்தலாம். உதாரணமாக கூகிள் (Google) நிறுவனம் வெவ்வேறு குழுக்களை உருவாக்கி வெவ்வேறு கண்டுபிடிப்புகளைச் செய்கிறது. அவற்றில் 80% கண்டுபிடிப்புகள் தோல்வி அடைகிறது [12], ஆனால் வெற்றி பெரும் கண்டுபிடிப்புகளினால் வரும் இலாபம் மிக அதிகமானது. இந்த பரிணாம உத்தியின் மூலமே கூகிள் கற்று முன்னேறுகிறது.
 • அதனால் போட்டி என்பது பின்னடைவைக் கொடுக்கும் என்று பயம் கொள்ளத் தேவையில்லை. அவ்வாறு சில அமைப்புகள் தவறான பாதையில் செல்லும்பொழுது, மற்ற இயக்கங்கள் இந்த இழப்பை ஈடுகட்டும். அவ்வாறு இல்லாமல் நாம் ஒரே இயக்கம் மட்டுமே உருவாக்கினால், அதன் இழப்பை ஈடுகட்டுவது கடினம்.

இக்கட்டுரையில் நான் விளக்கிய பரிணாம  உத்தி என்பது மேலோட்டமானது. இதைப்பற்றி ஆழ்ந்த ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. அவற்றைக் கற்று தெளிந்து செயல்படவேண்டும்.

இக்கட்டுரையை எப்படி முடிப்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்தபொழுது நண்பர்  பரணி கிருஷ்ணரஜனி  கீழ்வரும்  வாசகத்தைப் முகநூலில்  பதிவிட்டார்:

“பாதையைத் தேடாதே, உருவாக்கு”#தேசியத் தலைவர். #2019 விடுதலைக்கான ஆண்டு

இந்த வாசகத்தை பலமுறை பார்த்திருக்கிறேன், ஆனால் அப்பொழுதெல்லாம்  அதன் முழுப்பொருள் விளங்கவில்லை. இந்தக் கட்டுரையின் வழியாகப் பார்க்கும்பொழுதே என்னால் முழுதுமாகப் புரியமுடிகிறது.   ஈழத்தைப் பெறுவதற்கானப் பாதை என்று ஒன்று இல்லை. அதைத் திட்டமிட்டு முன்கூட்டியே அறிய முடியாது. அதை ஒவ்வொரு படியாக  பரிணமித்துதான் அடையமுடியும். இதுதான் அறிவியல் பூர்வமான வெற்றிக்கான உத்தி.

பி.கு: நான் புலிகளிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறுவது, அவர்கள் செய்தது அனைத்தையும் சரி என்று நியாயப்படுத்துவது அல்ல. பல மோசமான பிழைகளும் நடந்திருக்கின்றன. நமது முன்னேற்றத்திற்குத் தேவையான நல்ல பாடங்களை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் எனது கருத்து.  உலகிலுள்ள அனைத்து நாடுகளின் வரலாற்றிலும் தவறுகள் நடந்துள்ளன. அதற்காக அவர்களின் மாவீரர்களைத் தூற்றுவதில்லை. தவறுகளை ஏற்றுக்கொள்ளுவோம், மாவீரர்களைப் போற்றுவோம்.

 1. Watts, Duncan J. Everything is obvious:* Once you know the answer. Crown Business, 2011.
 2. Bar-Yam, Yaneer. Making things work: solving complex problems in a complex world. Knowledge Industry, 2004.
 3. Dennett, Daniel C. “Darwin’s dangerous idea.” The Sciences3 (1995): 34-40.
 4. Maynard Smith, John, and Eors Szathmary. “The origins of life: From the birth of life to the origin of language.” (1999).
 5. Popper, Karl. All life is problem solving. Routledge, 2013.
 6. Plotkin, Henry C. Darwin machines and the nature of knowledge. Harvard University Press, 1997.
 7. Taleb, Nassim Nicholas. Antifragile: Things that gain from disorder. Vol. 3. Random House Incorporated, 2012.
 8. சு.சேது, யார் ஆட்சி செய்வது?
 9. சு.சேது, ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் –  பகுதி 1
 10. Banathy, Bela H. Guided evolution of society: A systems view. Springer Science & Business Media, 2013.
 11. Rappaport, Roy A. Ritual and Religion in the Making of Humanity. Vol. 110. Cambridge University Press, 1999.
 12. Hamel, Gary. “The future of management.” Human Resource Management International Digest6 (2008)
This entry was posted in அரசியல், ஈழப்போர், ஈழம், சமூக அறிவியல், தமிழ்த்தேசியம், Uncategorized. Bookmark the permalink.

4 Responses to ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 2

 1. Pingback: புலிகளின் பரிணாமம்: | வெளிச்சவீடு

 2. Pingback: நந்திக்கடல்/ பத்தாண்டுகள். மீள் பதிவு 02. | வெளிச்சவீடு

 3. Pingback: ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 7 – இறுதி பாகம் | Sethu's Blog

 4. Pingback: மாவீரர்களின் அர்த்தமுள்ள வாழ்க்கை | Sethu's Blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s