பகுதி 2: இன அரசியல் – நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

உண்மை என்பது சிக்கலானது. அதை நாம் பார்த்து உணர்வதில்லை, மாறாக நாம் தத்துவங்களின் வழியாகவே பார்க்கிறோம்  என்கிறார் பாப்பர் [3]. உலகில் எந்த ஒரு தத்துவமும் உண்மையை முழுதுமாக பிரதிபலிப்பதில்லை. அதனால் ஒரு தத்துவம் என்றில்லாமல், அனைத்து தத்துவங்களின் வழியாகவும் பார்த்து  அறிந்து கொள்வதே சிறப்பான புரிதலைத் தரும் [4].  முதல்  பகுதி கட்டுரையில் “பகுதி 1: இன அரசியல் – இன எழுச்சி எவ்வாறு ஏற்படுகிறது?” [1,2]  காஃப்மனின் குறியீட்டு அரசியல் தத்துவத்தைப் பார்த்தோம்.  அதனடிப்படையிலேயே கீழ்வரும் கருத்துக்கள் இருக்கும். அதனால் இதுதான் இன அரசியல், இதுதான் முழுமையானது என்று எடுத்துக் கொள்ளவேண்டாம். ஒரு அறிவியல் தத்துவத்தின் திறனை அது எவ்வாறு மற்ற அறிவியல் தத்துவங்களுடன் இணைந்து விளக்குகிறது என்பதைக் கொண்டு அறியலாம் [5]. இத்தத்துவம் தனித்து நிற்காமல் மூளை நரம்பியல்[15] மற்றும் பரிணாமத் தத்துவங்களுடன்[14] நன்றாக இணைவதால்,  இதன் விளக்குத்திறன் மற்ற  அரசியல் தத்துவங்களை விட சிறப்பானது என்று கருதுகிறேன். இனி இதன் வழியாக ஒவ்வொரு பாடங்களாக பார்ப்போம்.

 1. அரசியலில் உணர்வுகளுக்கு முதன்மைத்துவம் அளிக்கவேண்டும்.

முதலில் நாம் உணரவேண்டியது என்னவென்றால், சமூக அரசியல் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு பகுத்தறிவுதான் முதன்மையானது, எல்லையில்லா சக்தி கொண்டது என்ற நிலைப்பாட்டை தவிர்க்கவேண்டும்.  நமது சிக்கல்களைத் தீர்க்க அனைத்து ஆயுதங்களையும் திறனுக்கேற்றபடி பயன்படுத்த வேண்டும். பகுத்தறிவு என்பது அதில் ஒரு ஆயுதமே.  அரசியலில் உணர்வுகளின் பங்கு முதன்மையானது; மக்களை உணர்வுகளால் வெல்ல முடியாமல், தமிழ்த்தேசிய அரசியலை நகர்த்த முடியாது. இதன் பொருள் பகுத்தறிவை நிராகரித்து குருட்டுத்தனமாக உணர்வுகளின் பின்னால் செல்வதல்ல. நமது குறிக்கோள்கள், திட்டமிடல்கள் அனைத்தும் பகுத்தறிந்துதான் உருவாக்கப்பட வேண்டும், ஆனால் அதை   அடையும் முறையில் உத்திகளை அவற்றின் செயற்திறனுக்கு ஏற்றபடி  பயன்படத்த வேண்டும். உணர்வுகள்தான் வீரியமிக்கது என்றால், அதை பயன்படுத்துவதில் தவறில்லை. அவ்வாறு இல்லாமல் பகுத்தறிவை மட்டுமே பயன்படுத்துவேன் என்றால் அது பகுத்தறிவான செயலாகாது. நமது முன்னேற்றத்தைத்  தடுக்காத ஒரு தத்துவம்  உண்டென்றால் அது “அனைத்தும் ஏற்பானதே” என்பதுதான்  என்கிறார் தத்துவமேதை  பெயிராபெண்டு.

“The only principle that does not inhibit progress is anything goes.” [4]

 1. நமக்கு வரலாற்றுக் கற்பிதங்கள் தேவை

இன அரசியலில் வரலாற்றுக் கற்பிதங்கள் முதன்மையாக இருக்கிறது. இது இன அடையாளம், பூர்விகம், புனிதம், அறம்,  இனக் குறியீடுகள், வரலாறு, எதிரிகள்  யார், மாவீரர்கள் யார் என அனைத்தையும் உள்ளடக்கியது. இது மக்களின் உணர்வுகளுடன் கலந்து அவர்களை இயக்குகிறது. இதிலிருந்து வரும் குறியீட்டு சார்புகளையும், ஒரவஞ்சனைகளையும் கொண்டே தலைவர்கள் கருத்துருவாக்கம் செய்து மக்களின் ஆதரவைப் பெறுகின்றனர், அமைப்புகளை உருவாக்கி மக்களை ஒன்று திரட்டுகின்றனர்.

கற்பிதங்களின் பலம் என்பது அதன் உண்மையில் இல்லை, அவை உணர்வுகளைத் தூண்டி மக்களை ஒன்று திரட்டுவதின் திறனிலேயே இருக்கிறது. அரசியல் கட்டுக்கதைகளின் உண்மைத் தன்மையை ஆராய்வது என்பது ஒரு துப்பாக்கியின் உண்மைத் தன்மையை ஆராய்வது போன்று பொருளற்றது,  நகைப்புக்குரியது. இரண்டுமே ஆயுதங்கள், அவற்றின் உண்மைத் தன்மை என்பது அவை இலக்கை எப்படி வீழ்த்துகின்றன என்பதே ஆகும். நமது எதிரிகள் இரண்டாயிரம் ஆண்டு பழமையான அரசியல் கட்டுக்கதைகளை  நமக்கு எதிராக ஆயுதங்களாகப் பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றனர். அவர்களின் ஆயுதங்களை எவ்வாறான ஆயுதங்கள் கொண்டு எதிர்கொள்ளவேண்டும் என்று சிந்திப்பதே சரியான வழி.

“To inquire into the “truth” of the political myths is, therefore, as meaningless and as ridiculous as to ask for the truth of a machine gun or a fighter plane. Both are weapons; and weapons prove their truth by their efficiency. If the political myths could stand this test they needed no other and no better proof. In this respect the theory was beyond attack and invulnerable. All it had to do was to put the political myths into action and to show their constructive and destructive power.” [6]

சிங்களர்கள் மகாவம்சக் கட்டுக்கதைகளைக் கொண்டிருக்கிறார்கள், இந்துத்வா குழுக்கள் புராண இதிகாசங்களைக் கொண்டுள்ளார்கள். நமது வரலாற்றுக் கற்பிதங்கள் என்ன என்பதை சிந்திக்கும் பொழுது, ஒரு தெளிவின்மையேத் தெரிகிறது. சிலர் திருக்குறள்தான் நமது கற்பிதம், அடையாளம் என்கிறார்கள். ஆனால் திருக்குறள் கற்பிதங்களுக்கான  முழுமையான தேவையை பூர்த்தி செய்வதில்லை. சமைய நூல்களை எடுத்துக் கொண்டால், அது காந்தி செய்த பிழைபோல மற்ற சமையங்களை ஒதுக்குவதாக முடியும் (விவரத்திற்கு முந்தைய கட்டுரையைக் காண்க). அதனால் நமது கற்பிதங்கள் மதச்சார்பற்றதாகவே இருக்க முடியும்.  மேலும் மதம் சார்ந்த கற்பிதங்கள் உணர்வுகளைத் தூண்டி இன அரசியலுக்கு பெரிய ஆயுதமாக இருந்தாலும், அவை மக்களை மூட நம்பிக்கைகளில் ஆழ்த்தி பெரும்பாலும் பின்தங்கிய சமூகமாகவே வைத்திருக்கிறது. கற்பிதங்கள் இன  அரசியலை மட்டும் தீர்மானிப்பதல்ல, அவை ஒரு சமூகம் எந்த திசையில் செல்கிறது, எப்படி வளர்ச்சி அடைகிறது, முன்னேறுகிறதா இல்லையா எனப் பலவற்றையும் தீர்மானிப்பது [10].

இவை அனைத்தையும் கொண்டு பார்க்கும் பொழுது, நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் கற்பிதங்கள் என்ன என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றே தோன்றுகிறது. ஒரு வகையில் இது நமக்கு நன்மையே. கற்பிதங்கள் ஒருமுறை உருவாகிவிட்டால் அதை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. சிங்களர்களோ, இந்துத்வவோ அவர்களின் கற்பிதங்களை மாற்ற முடியாது. அது அவர்களின் அடையாளம். அவர்களின் கற்பிதங்கள் இரண்டாயிர வருடம் பழமையானது, பிற்போக்குத் தனமானது, அதுவே அவர்களின் பலவீனமும். நமக்குத் தெளிவான கற்பிதங்கள் இல்லை என்பதால், அதை 21-ஆம் நூற்றாண்டிற்குத் தேவையான, முன்னேற்றப் பார்வை கொண்ட, மற்றவர்களின் மேல் வெறுப்பை காக்காத கற்பிதத்தை உருவாக்க முடியும். அவ்வாறு கற்பிதத்திற்கு தேவையாக நான் பார்ப்பது:

 1. இன அடையாளம், இனக் குறியீடுகள், வரலாறு, பூர்விகம், அறம், மாவீரர்கள் என கற்பிதத்திற்குத் தேவையான அனைத்தையும் உள்ளடக்கியிருக்க வேண்டும். இதை நாம் புதிதாக உருவாக்க முடியாது. இது நமது வரலாற்றிலிருந்தே திரட்டப்படவேண்டும்.
 2. உணர்வுகளால் பிணைத்து மக்களை இயக்கும் வல்லமை கொண்டதாக இருக்கவேண்டும். இதுதான் கற்பிதங்களின் உண்மையான பலம்.
 1. கற்பிதங்கள்  ஓர் அறிவுள்ள, முன்னேற்றப் பாதையில் செல்லும் சமூகத்தை உருவாக்குவதற்கு ஏற்றபடி இருக்கவேண்டும். பகுத்தறிவிற்கு ஒவ்வாத கட்டுக்கதைகளாலும், மூடநம்பிக்கைகளாலோ, மற்றவர்கள்மேல் வெறுப்பினாலோ கட்டப்பட்டிருக்கக் கூடாது. மனிதனில் எவ்வாறு பகுத்தறிவும் உணர்வுகளும் இணைந்து செயல்படுகிறதோ, அதுபோலவே சமூகமும் செய்லபடவேண்டும். பகுத்தறிவும் உணர்வுகளும் சரியான சமநிலையில் இருக்கவேண்டும். ஏதாவது ஒன்று விஞ்சினால் அது நாட்டுக்குக் கேடாக முடியும் என்கிறார் பிளேட்டோ:

“The first great political theorist, Plato, was an ardent admirer of reason. Yet he recognized that reason and passion each had its proper place in mind and state. When one or the other consistently takes control in an individual, Plato asserted, the result is “injustice of the soul”. The same imbalance between reason and passion can lead, he argued, to injustice in the state.” [7]

சிறந்த அறிவியலாளர்களின் சாதனைகளுக்குக் காரணம் அவர்கள் தங்களை வருத்திக் கொண்டதனால் அல்ல. மாறாக அதில் அவர்கள் அதியுச்ச இன்பம் கண்டதனால்தான். உணர்வுகள் சாதகமாக இல்லாவிட்டால் எதையும் சிறப்பாக செய்ய முடியாது. யூதர்கள் பல நோபல் பரிசுகளைப் பெறுவது அவர்களின் மரபணுக்கள் காரணம் அல்ல. அவர்களின் கற்பிதங்களின் மூலம் வரும் நெறிகளே [8,9]. நெறிகள் மனிதனின் உணர்வுகளின் அங்கமாவதால், அவை நம்மை இயக்கும் தன்மையைப் பெறுகின்றன. நாம்  உணர்வுகளையும் பகுத்தறிவினையும் சரியான சமநிலையில் அமைத்தால், நாம் ஒரு பலமான  அறிவுப்பூர்வமான சமூகத்தை கட்டமைக்க முடியும்.

நமது கற்பிதங்களை புதிதாகத் தேடி அலையத் தேவையில்லை. மறைமலை அடிகள் முதல் பல்வேறு அறிஞர்கள் பல ஆராய்ச்சிகளை செய்து வைத்திருக்கிறார்கள்.  கற்பிதங்களின்  உண்மையான பலம் அது உருவாக்கும் உணர்வுகளில் இருப்பதால், புலிகள் எதைப்  பயன்படுத்தி ஒரு உணர்வுப் பூர்வமான இயக்கத்தை கட்டி எழுப்பமுடிந்தது என்பதையும் ஆராயவேண்டும். உலகிலுள்ள எந்த மதங்களும் அவர்களை போல உணர்வுகளை உருவாக்க முடியவில்லை. சிறு தொகையான மக்கள் பலத்தைக் கொண்டு,  பலம் வாய்ந்த இரண்டு இராணுவங்களை தோற்கடித்தார்கள். இதில்தான் அவர்களின் உணர்வு பலத்தை பார்க்கவேண்டும். இவை அனைத்தையும் அவர்கள் மதசார்பற்ற கற்பிதங்களால் செய்ய முடிந்திருக்கிறது.

 1. சாதிப் பிணக்குகளுக்கான தீர்வு

நமது சமூகத்தில் இருக்கும் சாதி சச்சரவுகளையும் காஃப்மனின்  தத்துவம் மூலம் புரிந்து கொள்ளலாம். சாதி சச்சரவுகளின் வேர்  இந்துமத கற்பிதங்களிலேயே இருக்கிறது. அதனுடன் காலகாலமாக வரும் சாதிகளுக்கிடையேயான முத்திரை குத்தல், ஓரவஞ்சனைகள் ஆகியன காஃப்மனின் இன அரசியலை ஒத்ததே. சாதி பிணக்குகள், சாதி அரசியல் ஆகியன மக்களின் கற்பிதங்களில் இருந்து  உணர்வுகள்   வழியாக வெளிப்படுகின்றன. இது பகுத்தறிவிலிருந்து  வருவதல்ல, அதனால் இதை பகுத்தறிவைக் கொண்டு விளக்கி தீர்க்க முடியாது.  இச்சிக்கலை மாற்றுக் கற்பிதங்கள் மூலம்  உணர்வுகளை மாற்றுவதன்  வழியாகத்தான் தீர்க்க முடியும். இது வரலாற்றில் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக, பண்டைய அரேபியாவில் அரேபியர்கள் பல குழுக்களாக ஒருவருடன் ஒருவர் சாதிக் கலவரங்களை போல வெட்டுக்குத்தில் ஈடுபட்டிருந்தார்கள் [11]. அவர்களை இசுலாம் ஒரு புதிய கற்பிதங்கள் மூலம் ஒன்றிணைத்து  அன்றைய உலகில் தலைசிறந்த நாகரீகத்தை தோற்றுவித்தது. கற்பிதங்களின் பலம் மிக அதிகம் என்பதை நாம் உணரவேண்டும். கற்பிதங்கள் வேரூண்ட ஓரிரு தலைமுறைகள் ஆகும், ஆனால் அதனால் சாதி ஒழிப்பை செய்யமுடிகிற காரியமே. கற்பிதங்கள் என்பது எல்லாம் பகுத்தறிவற்றவையாக இருக்கவேண்டிய அவசியமில்லை. கற்பிதங்கள் உணர்வுகளின் மூலமாக வேலைசெய்யும். அவற்றை உண்மையின் அடிப்படையிலும்    அமைக்கலாம். சொல்லப்போனால் மதங்களே  தங்களை உண்மையானவை என்று கூறியே மக்களை ஈர்க்கிறது.  இவையெல்லாம்  கற்பிதங்களை உருவாக்க நமக்கு இன்னொரு காரணமாக அமைகிறது.

 1. குறியீட்டு அரசியல் உத்திகளை பயன்படுத்தவேண்டும்:

இந்துத்வாவின் அரசியல் உத்திகளை காஃப்மனின் குறியீட்டு அரசியல் (Symbolic Politics)  தத்துவம் மூலம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

 1. அவர்கள் கற்பிதங்களின் (narratives) சக்தியை நன்றாக உணர்ந்தவர்கள். பல்வேறு இந்துத்வ அமைப்புகளை நாடு முழுவதும் உருவாக்கி கற்பிதங்களை பரப்புகிறார்கள். கற்பிதங்கள் சிறார்களிடம் வளரும் வயதில் உள்வாங்கப்பட்டு  உணர்வுகளுடன் பிணைவதால், சிறார்களை நோக்கி அவர்களின் செயல்பாடுகள் உள்ளன. ஒரு கற்பிதத்தை உள்வாங்கி வளர்ந்தபின் அவர்களை மாற்றுவது கடினம்.  அவர்களின் அரசியல் ஆதரவு திசை தீர்மானிக்கப்பட்ட ஒன்றாக ஆகிவிடுகிறது.
 1. மத்திய அரசின் பாடத்திட்டங்கள் மூலமும் இந்துத்வா கற்பிதங்கள் பரப்பப்படுகிறது. அதனால் மாநில பாடத்திட்டங்களை ஒழித்துக்கட்டுவதில் குறியாக இருக்கிறார்கள்.
 1. சிறுபான்மையினருக்கு எதிராக முத்திரை குத்தலும், ஓரவஞ்சனைகளும், கலவரங்களும் திட்டமிட்டு பரப்பப்படுகினறன. அவை சிறுபான்மையினருக்கு எதிராக மக்களை திருப்பி அவர்களுக்கு ஆதரவாக மாற்றுகிறது.
 1. தமிழ்த்தேசிய அரசியல் தலைவர்களை கிருத்தவர்கள் என்று முத்திரை குத்துகிறது. ஈழப்போராட்டத்தையும், தமிழகத்தில் நடக்கும் அனைத்து போராட்டங்களையும்  கிருத்துவர்களின் சதி  என்று பரப்புகிறது.
 2. அதே நேரம் தமிழர்களின் வரலாற்றுக் கற்பிதங்களை பரப்புவதற்கு தடங்கல் ஏற்படுத்துகிறது. ஈழப்போராட்டங்களைப் பற்றிய திரைப்படங்கள் தடை செய்யப்படுகின்றன. ஐயா நெடுமாறனின் நூலை உயர்நீதி மன்றம் அழிக்கச் சொல்கிறது. அகழ்வாராய்ச்சிகளில் தமிழரின் தொன்மங்களை மறைக்கப் பார்க்கிறது.

அவர்கள் செய்வது அனைத்தும்  மனிதனின் உணர்வுகளை நோக்கி செய்யப்படும் அரசியல். தமிழர் என்ற உணர்வுகளைத் தூண்டும் அனைத்தும் தடை செய்யப்படுகிறது. அதே நேரம் இந்துத்வ உணர்வுகளைத் தூண்டும் அனைத்தும் புகுத்தப்படுகிறது. அவர்கள் செய்வது காஃப்மனின் குறியீட்டு அரசியல். ஈழத்திலும் அதுபோன்ற செயல்பாடுகளையே சிங்கள அரசு பின்பற்றுகிறது. எதுவெல்லாம் உணர்வுகளைத் தூண்டுமோ , அவை எல்லாவற்றையும் மறைப்பது, அழிப்பது என்பவற்றை  முக்கியமாக அவர்கள் கருதுகிறார்கள். உதாரணமாக  மாவீரர்களின் கல்லறைகளை இடித்தார்கள். போரில் இறந்த முக்கிய தலைவர்களின் உடல்களை, எங்கே நாம் கல்லறைகளை உருவாக்கிவிடுவோமா என்று காணாமல் செய்தார்கள்.  அதேநேரம் அவர்களின் புத்தமத கற்பிதங்களை தமிழர்களிடம் பரப்ப முனைகிறார்கள்.

நமது அரசியல் செயல்பாடுகள் அவர்களின் குறியீட்டு அரசியலை எதிர்கொள்ளும்படியாக இல்லை என்பதே எனது கருத்து. நமது அரசியல் என்பது மக்களின் பகுத்தறிவை நோக்கி நகர்கிறது. இது செவிடன் காதில் ஊதுகின்ற சங்கைப் போன்று எந்த ஒரு பெரிய விளைவையும் உருவாக்கப் போவதில்லை. நாம் செய்வது  நாயின் வாலை நிமிர்த்த நினைப்பது போன்றது. பகுத்தறிவு மேடைப்பேச்சுக்களுக்கு அவர்கள் என்றுமே தடை விதித்ததில்லை. அவற்றினால் எந்த பாதிப்பும் அவர்களுக்கு  இல்லை என்று அவர்களுக்குத் தெரியும்.

அவர்களின் செயல்பாடுகளை பகுத்தறிவற்றது, நகைப்புக்குரியது என்று நாம் ஒதுக்கினால், நாம்தான் தோற்போம். நாம் நமது வரலாற்றுக் கற்பிதங்களை மக்களிடம் எப்படி பரப்புவது, எதிரிகளின் குறியீட்டு அரசியலை எப்படி தகர்ப்பது என்ற நோக்கில் செயல்படவேண்டும்.  அடிப்படையில் நமது அரசியல் செயல்பாடுகள் மக்களின் உணர்வுகளை நோக்கி   நகர்த்தப்படவேண்டும்.   அதற்காக  நாமும் அவர்களைப்போல  மற்றவர்களின் மேல் வெறுப்பை கக்கவேண்டும் என்பதல்ல. மனிதனின் மூளை  குறியீட்டு அரசியலுக்கு ஏற்றவாறே அமைந்திருக்கிறது. இதை நம்மால் மாற்ற முடியாது. இதை வைத்து நமது இலக்குகளை ஒரு நேர்மையுடன்  அடைய முயலுவதே வெற்றிக்கான பாதையாக இருக்கும்.

 1. கருத்துருவாக்கத்தில் குறியீட்டு சார்புகள் பயன்படுத்தப்பட வேண்டும்:

நாம் திட்டங்களையும் உத்திகளையும் வகுக்கும்பொழுது பகுத்தறிவுடன் ஆராய்ந்து சிறப்பாக உருவாக்கவேண்டும், ஆனால் மக்களிடம் அதை செயல்படுத்த கருத்துருவாக்கம்   செய்யும்பொழுது குறியீட்டு சார்புகளின் துணைகொண்டு செய்யவேண்டும். அப்பொழுதே அது மக்களின் உணர்வுகளைத் தூண்டி நம்மை ஆதரிக்கவைக்கும். அதைப் போலவே நாம் மக்களை  ஒன்று திரட்ட உருவாக்கும் அனைத்து இயக்கங்களும் குறியீட்டு சார்புகளைக் கொண்டு மக்களை ஈர்ப்பதாக இருக்கவேண்டும்.

 1. கற்பிதங்களைப் பரப்ப நாடு முழுவதும் அமைப்புகள் உருவாக்கப்படவேண்டும்.

கற்பிதங்கள் எனப்து நீண்ட காலநோக்கில் உருவாவது, உடனே மாற்ற முடியாதது.  இந்துத்வ அமைப்புகள்  கற்பிதங்களைப் பரப்ப நீண்டகால நோக்கில் செயல்பட்டு மக்களை மாற்றிவருகிறது. அதன் மூலம் அது அரசியலில் பலம்பெற்று வருகிறது.  மேலும் மத்திய அரசின்  பாடத்திட்டம் மூலம், மாநில பாடத்திட்டத்தை ஒழித்து,  தமிழர் என்று நாம் கற்றுத்தரும் சிறு கற்பிதங்களையும் ஒழிக்கப் பார்க்கிறது. அவர்களைத் தடுத்து நிறுத்தி நமது கற்பிதங்களை எவ்வாறு பரப்புகிறோமா, அதில் தான் நமது எதிர்கால வெற்றி இருக்கிறது. யார் இன்றைய குழந்தைகளின் மூளைக்கு சொந்தக்காரர்கள் ஆகிறார்களோ, அவர்களுக்குத் தான் எதிர்கால அரசியல். அவ்வாறு செயல்படுவதற்கான அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

 1. தமிழ்க் கல்வியை மறுபரிசீலனை செய்யவேண்டும்

யூதர்கள் இரண்டாயிரம் வருடங்களாக தங்களுக்கு என்று ஒரு நாடில்லாவிட்டாலும், தங்களை அழியாமல் காத்துக் கொண்டதற்கு ஒரு முக்கிய காரணம் அவர்களின் யூதக்கல்வி முறை (Jewish Education) [17,18]. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் 100% சதவீதம் கல்வியை எட்டி விட்டார்கள். அவர்கள் வெவ்வேறு நாடுகளில் சிறு  குழுக்களாக  சிதறுண்டு கிடந்ததால், அவர்களின் ஈப்ரு மொழியை தாய் மொழியாக கற்பிக்க முடியவில்லை. அதனால் அவர்களின் அடையாளத்தை அழியாமல் பாதுகாக்க உருவாக்கப் பட்டதுதான் யூதக் கல்விமுறை.

“You’ve stumbled upon one of the secrets to Jewish survival. As holy as Hebrew is, and as central as it is to our prayer and study, it is not what defines us as Jews… Ever since we were exiled from Israel, we have spoken many languages…Is this ideal? No. In a perfect world, we would all be speaking Hebrew…But the rabbis understood that it is not Hebrew, but the Torah, that sustains us as a nation. Our language, country of residence, culture, and accent have changed numerous times throughout history. But we are still here today. For the Torah has been studied and its mitzvahs observed in all times, lands, and circumstances. Let the language be compromised, but not the message.” [19]

யூதக்கல்வி முறை என்பது  குறியீட்டு அரசியலை மையமாகக் கொண்டது:

 1. கற்பிதங்கள் தான் ஒரு குழுவின் ஒற்றுமைக்கு அடிப்படை. அது எந்த மொழியிலும் கற்பிக்கப்படலாம் என்பதால், அவர்கள் எந்த நாடுகளில் வாழ்ந்தார்களோ, அந்த மொழியிலேயே குழந்தைகளுக்கு  கற்பித்தார்கள்.
 1. ஈப்ரு மொழியை ஒரு பண்பாட்டு குறியீட்டு மொழியாக கற்பித்தார்கள். அவர்களுக்கு அடிப்படையில் அதில் பிரார்த்தனை செய்யவும், எழுத்துக்களை அடையாளம் காண்பது, ஓரளவு எழுத்துக்கூட்டி படிக்கவும் கற்றுக்கொடுத்தார்கள். அனைவராலும் அவ்வாறு முடியும் என்று உறுதியாகக் கூறமுடியாது. ஆனால் அவர்களின் ஈப்ரு மொழி உயர்வானது என்ற உணர்வுகள் கற்பிதங்கள் மூலம் கற்றுத்தரப்பட்டன. இது இந்தியாவில் வடமொழியைப் போல, வழக்கொழிந்தாலும் கற்பிதங்களால் உயர்வாகக் கருதப்பட்டது.

முடிவில் வாய்ப்பு கிடைத்தபொழுது, யூதர்கள் இழந்த நாட்டையும் மொழியையும் மீட்டுவிட்டார்கள்.   இதெல்லாம்  கற்பிதங்கள் மூலம் வரும் உணர்வுகளின் உந்துதலால்  செய்யப்பட்டது.  இந்துத்வ குழுக்களும் அவ்வாறு வடமொழியை மீட்க முயற்சி செய்கின்றன. ஒரு மொழி வாழ அதன் தகுதி என்ன என்பதுதான் முக்கியம். மொழிக்குத் தகுதி இருந்தால், இறந்த மொழியை மீட்டு விடலாம். தகுதி இல்லாவிட்டால், இருக்கிற மொழியும் இறந்துவிடும்[16].

நமது தமிழ்க்கல்வி முறையை குறியீட்டு அரசியல் தத்துவத்தைக் கொண்டு மறுபரிசீலனை செய்யவேண்டும். வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடம், மொழியை மட்டும் நாம் கற்பிக்க முனைந்தால் தோல்வி ஏற்படலாம். வரலாற்றுக் கற்பிதங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். நமது பூர்வீக  நிலங்களில் தமிழ் கற்பிக்கப்பட்டாலும், வரலாற்றுக் கற்பிதங்கள் சிறப்பாகக் கற்பிக்கப் படுவதில்லை. இதனால் தமிழ் ஒரு தாழ்வான மொழியாகக் கருதப்பட்டு, தமிழ் மொழியும் தமிழ்வழிக் கல்வியும் அழிந்து வருகிறது. நாம் உணர்வுகளைக் கண்டுகொள்ளாமல், பகுத்தறிவு முறைகளால் தமிழை வளர்க்க நினைப்பதுதான் நாம் செய்யும் பிழை. தமிழையும், தமிழ்வழிக் கல்வியையும், வரலாற்றுக் கற்பிதங்களால் மீட்க முடியும் என்பதை உணரவேண்டும்.  தமிழ்க்கல்வி என்பது வரலாற்றுக் கற்பிதங்களுடன் சேர்த்து கற்பிக்கப்படவேண்டும்  அதைப்பற்றிய எனது சிந்தனைகளை கீழுள்ள சுட்டியில் காணலாம் [12].

முடிவுரை:

நாம் விரும்பும் ஒரு நல்ல சமூகத்தை அடையும் முயற்சியில் நீண்டகாலமாக மதங்களிடமும் சாதிகளிடமும்  தோற்றுக்கொண்டிருக்கிறோம். இந்தத் தோல்விக்குக் காரணம் சாதிமத அமைப்புகள் புத்திசாலியானவை என்பதோ அல்லது நாம் முட்டாள்கள் என்பதோ அல்ல. ஒரு சிங்கத்திற்கு எந்த பகுத்தறிவும் இல்லை, ஆனால் நம்மை கொல்லும்  சக்தி வாய்ந்தது. அவை இயற்கையில் குருட்டுத்தனமாக பரிணாமத்தால் உருவானவை.  அதை அடக்க நாம் ஒரு குழுவை  ஒழுங்குபடுத்தி, தேவையான ஆயுதங்களைக் கொண்டு சிங்கத்தை  அடக்குகிறோம். மதங்களும் சிங்கத்தைப் போன்றதுதான். அவைகளும் குருட்டுத்தனத்தில் பரிணமித்தன,  பகுத்தறிவு  கிடையாது,  ஆனாலும்  நம்மை அழிக்க வல்லது. அதை அடக்குவதற்கும் சிங்கத்தை அடக்குவதுபோல  ஒழுங்குபடுத்தி  அதற்கேற்ற ஆயுதங்களைக் கொண்டு அடக்கவேண்டும். இத்தனை  நாளும் நம்மால் அடக்க முடியாததற்கு,  நாம் எவ்வாறு ஒழுங்குபடுத்துவது, எது மாதிரியான ஆயுதங்கள் தேவை என்பதற்கான அறிவு நம்மிடம் இல்லை. நீண்ட காலமாக பகுத்தறிவுதான் மனிதனை இயக்குகிறது என்ற தவறான கருதுகோள் ஒரு முக்கிய காரணம். பகுத்தறிவும்  உணர்வுகளும் ஒரு சமூகத்தில் ஒரு சமநிலையில் இருக்கவேண்டும். ஏதாவது ஒன்று விஞ்சினால், அது நாட்டிற்கு கேடாய் முடியும்  என்கிறார் பிளேட்டோ. நாம் இதுவரை பகுத்தறிவில் விஞ்சினோம், மதங்கள் உணர்வுகளில் விஞ்சுகின்றன. அதுதான் மதங்களின் பலவீனம்.  நாம் உணர்வுகளிலும் பகுத்தறிவிலும்  ஒரு சமநிலையை அடையும் பொழுதுதான்  சாதி மத அரசியல்களை ஒரு கட்டுக்கு கொண்டுவரமுடியும். நான் மதங்களை கட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்று கூறுவது, அவற்றை அழிப்பது என்ற பொருளில் அல்ல. மதங்கள் தனிமனிதனைப் பொறுத்தவரையில் பலருக்கும் தேவையாக இருக்கிறது. அதில் நாம் தலையிடத் தேவையில்லை. மதங்கள் அரசியல் சக்தியாக இருப்பதைத்தான் ஒழிக்கவேண்டும். சாதிகள் ஒழிக்கப்பட வேண்டியது.

நாம் இதுவரை பார்த்தது நாம் வெற்றியடையத் தேவையான ஒரு முக்கியமான அறிவு. ஆனால் இதுவே மொத்தமும் அல்ல, போதுமானதும் அல்ல. நாம் தொடர்ந்து நமக்குத் தேவையான அறிவை பெருக்கிக் கொண்டே செல்லவேண்டும். அறிவில் தான் அனைத்து சிக்கல்களுக்கான தீர்வு உள்ளது[13].

உசாத்துணை:

 1. Kaufman, Stuart J. Nationalist passions. Cornell University Press, 2015.
 2. சு. சேது, பகுதி 1: இன அரசியல் – இன எழுச்சி எவ்வாறு ஏற்படுகிறது?
 3. Popper, Karl. All life is problem solving. Routledge, 2013.
 4. Feyerabend, Paul. Against method. Verso, 1993.
 5. Wilson, Edward O. Consilience: The unity of knowledge. Vol. 31. Vintage, 1999.
 6. Kapferer, Bruce. Legends of people, myths of state: violence, intolerance, and political culture in Sri Lanka and Australia. Berghahn Books, 2011.
 7. Westen, Drew. The political brain: The role of emotion in deciding the fate of the nation. PublicAffairs, 2008.
 8. Harrison, Lawrence E. Jews, Confucians, and Protestants. Rowman & Littlefield Publishers, 2012.
 9. Leipziger, Henry Marcus. The Education of the Jews. Vol. 3. No. 6. Laurie, 1890.
 10. Harrison, Lawrence E. The central liberal truth: How politics can change a culture and save it from itself. Oxford University Press, 2008.
 11. Wright, Robert. The evolution of God: The origins of our beliefs. Hachette UK, 2010.
 12. சு. சேது, தமிழ்வழிக் கல்விக்கான ஒரு திட்டம்
 13. சு. சேது, தமிழ்த்தேசிய அரசியலுக்கு எதிராக உள்ள பெரிய தடைக்கல் எது?
 14. Richerson, Peter J., and Robert Boyd. “Not by genes alone.” (2005).
 15. Haidt, Jonathan. The righteous mind: Why good people are divided by politics and religion. Vintage, 2012.
 16. Abrams, Daniel M., and Steven H. Strogatz. “Linguistics: Modelling the dynamics of language death.” Nature6951 (2003): 900.
 17. Botticini, Maristella, and Zvi Eckstein. “The Chosen Few: How Education Shaped Jewish History, 70-1492.” Economics Books (2013).
 18. Fox, Seymour, Israel Scheffler, and Daniel Marom, eds. Visions of Jewish education. Cambridge University Press, 2003.
 19. Is it Torah if it is not in Hebrew, https://www.chabad.org/library/article_cdo/aid/1073767/jewish/Is-It-Torah-If-Its-Not-In-Hebrew.htm

 

This entry was posted in அரசியல், சமூக அறிவியல், சமூகம், தத்துவம், தமிழ்த்தேசியம், Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s