பகுதி 1: இன அரசியல் – இன எழுச்சி எவ்வாறு ஏற்படுகிறது?

இன்று தமிழினம் ஈழத்திலும்  தமிழகத்திலும் தனது இருப்பையே கேள்விக்குள்ளாக்கும்  பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள், குறிப்பாகத் தமிழகத்தில், கவலை கொள்வதாகத் தெரியவில்லை.  நம்மால் மக்களிடையே ஒரு இன எழுச்சியை உருவாக்க முடிந்தால், நமது சிக்கல்களுக்கு தீர்வு காண்பது எளிதாகும். அனைத்து தமிழ்த்தேசிய அரசியல் செயல்பாடுகளின் அடிப்படை நோக்கமும் அதுபோன்ற ஓர் எழுச்சியை உருவாக்குவதே. அதற்கான நமது  சிந்தனைகள் எப்படி இருக்கின்றன என்றால்:

1) மக்களுக்கு சிக்கல்களைப் பற்றிய அறிவு இல்லை. அதனால் அவர்களிடம் சிக்கல்களைப்  பகுத்தறிவைக் கொண்டு  விளக்கிப் புரியவைத்தால், மக்கள் ஒன்று திரண்டு ஆதரிப்பர்.

2) மக்கள் சாதிமத மூடநம்பிக்கைகள் கொண்டு பகுத்தறிவற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் பகுத்ததறிவற்ற சிந்தனைகளைக் களைந்து பகுதித்தறிவு உள்ளவர்களாக மாற்றினால், நமது அனைத்து சிக்கல்களும் தீரும்.

அடிப்படையில்  நமது அனைத்து சிக்கல்களுக்குமான தீர்வுகள்  பகுத்தறிவின் மீது கட்டப்பட்டிருக்கிறது.  பகுத்தறிவுதான் நமது செயல்பாடுகளின் மையமாக இருக்கும் ஆயுதம்.

நாம் ஒரு சிக்கலைத் தீர்க்க திட்டமிடும் பொழுது, சில நேரம் நம்மை அறியாமல்,  அறிந்தாலும் தீர ஆராயாமல்,  சில கருதுகோள்களை   உண்மை என்று எடுத்துக் கொண்டு செயல்படுவோம். அவ்வாறு நமது சிந்தனையில்  இருக்கும் ஓர் அடிப்படை கருதுகோள் என்னவென்றால்:  மனிதன்  அடிப்படையில் பகுத்தறிவானவன், ,அவனின் தவறுகள் அறியாமையால் வருவது, விளக்கிப் புரியவைத்தால் திருந்திவிடுவான். அடிப்படையில் பகுத்தறிவு என்பது நமது எசமானான்.

இப்பொழுது இந்த  கருதுகோள்  தவறு என்றால் என்னவாகும்?  ஒரு சுத்தியை எடுத்தவனுக்கு பார்ப்பதெல்லாம் ஆணியாகத் தெரிவது  போல,  பகுத்தறிவு என்ற ஆயுதத்தை எடுத்த நமக்கு, பார்ப்பதெல்லாம் அறியாமையாகத் தெரிகிறது. கடந்த சில பத்தாண்டுகளாக நடந்த உளவியல், மூளை நரம்பியல் ஆராய்ச்சிகள் “பகுத்தறிவு உணர்வுகளுக்கு அடிமை” [1] என்று நமது கருதுகோளை  தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது. இது அடிப்படையில்  நமது அரசியல் செயல்பாடுகள் அனைத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது.  ஆயிரக்கணக்காக பகுத்தறிவாளர்கள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பல மேடைகளில் பேசி மக்களை இன்னும் பகுத்தறிவாளர்களாக ஆக்க முடியவில்லை. அது ஏன் என்பது இப்பொழுது விளங்குகிறது. அவர்களால் இவ்வளவு காலம் பேசியும் கூட்ட முடியாத கூட்டத்தை, பேசவே முடியாத ஒரு சல்லிக்கட்டு மாடு கூட்டிவிட்டது.

அறிவியலாளர்கள் இந்த புதிய அறிவினைக் கொண்டு, எவ்வாறு அரசியல் நடத்தப்படுகிறது, மக்கள் எவ்வாறு வாக்களிக்கின்றனர், எவ்வாறு தேசியம் செயல்படுகிறது, இனச்சிக்கல்கள், இனப்போர்கள் எவ்வாறு தோன்றுகின்றன என்று புதிய கோணத்தில் ஆய்ந்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சிகளிலிருந்து நாம் என்ன கற்கலாம் என்பதுதான்  இக்கட்டுரையின் நோக்கம்.

அரசியலில் உணர்வும் பகுத்தறிவும்:

பொதுவாக மனிதன் பகுத்தறிவானவன் என்ற கருதுகோள் அடிப்படையிலேயே அரசியல் செயல்பாடுகள் அலசப்பட்டு வருகின்றன. ஆனால் உண்மையில் மக்கள் அரசியலைப் பற்றி சிந்திப்பதில்லை, மாறாக அவர்களின் உணர்வுகளின் வழியாக அரசியலைப் பார்த்து எது பிடித்திருக்கிறதோ அந்த அரசியலை ஆதரிக்கின்றனர்.  தீர விசாரித்து நன்மை தீமைகளை கணக்கிட்டு எடுக்கப்படுவதல்ல.  அரசியலில் உணர்வுக்கும் பகுத்தறிவிற்கும் இடையேயான மோதலில், உணர்வுகளே எப்பொழுதும் வெல்கின்றன என்கிறார்  வெசுடன் [2]. அரசியலில் உணர்வுகள்தான் முக்கியம், உண்மையோ அல்லது ஆதாயமோ அவ்வளவு முக்கியமல்ல.

“In politics, when reason and emotion collide, emotion invariably wins.” [2]

மனிதர்கள் பகுத்தறிவுடன் சிந்தித்து முடிவெடுப்பதாக இருந்தால், அரசியல்வாதிகள் பேசுவதற்கு ஒன்றுமே இருக்காது. எல்லாம் வெட்டிப் பேச்சாகவே இருக்கும். உண்மையில் என்ன நடக்கிறதென்றால் அரசியல்வாதிகள்  மக்களை பகுத்தறிவினால் பேசி ஈர்ப்பதில்லை,  மாறாக அவர்களின் அடையாளம் (சாதி, மதம்) , சித்தாந்தம்,  வெறுப்பு,  பயம், காழ்ப்புணர்ச்சி ஆகியவற்றின் அடிப்படியில் உணர்வுகளைத் தூண்டி ஈர்க்கிறார்கள்.

பொதுவாக ஒருவர் எந்த அரசியலை ஆதரிக்கிறார் என்பதை அறிய அவருக்கு என்ன ஆதாயம் என்று பார்க்கக் கூடாது, மாறாக அவர் எது மாதிரியான பாரபட்சங்களைக, விருப்பு, வெறுப்புக்களைக்  கொண்டுள்ளார், எது உணர்வுகளைத் தூண்டும் என்று பார்க்கவேண்டும்.  ஒருவர் தனக்கு முக்கியம் என்று கருதுவது எதுவும் உணர்வுகளுடன் தொடர்புடையது. முக்கியமானதை இழந்தால் உணர்வுகள் வருத்தத்தை அளிக்கும்.  நாம் இழந்தால்  வருத்தப்படாத ஒன்றை முக்கியமாகக் கருதமுடியாது.

ஏன் உணர்வுகள் இவ்வளவு முக்கியமானதாக செயல்படுகிறது  என்பதற்கு நமது மூளையின் வடிவமைப்புதான் அடிப்படைக் காரணம். பகுத்தறிவு என்பது பரிணாம வளர்ச்சியில் மூளையில் உருவான கடைசி அடுக்கு, அது உணர்வுகளை உருவாக்கும் அடுக்கின் மீது கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக  உணர்வுகளின் வழியாகப் பகுத்தறிவு செயல்படுவதால், உணர்வுகளுக்கு பகுத்தறிவு அடிமையாக இருக்கிறது. பகுத்தறிவு இல்லாவிட்டால் நாம் விலங்குபோல அறிவின்றி  செயல்படுவோம். உணர்வுகள் இல்லாவிட்டால், ஒரு சமூகத்தில்  மனிதனாக செயல்படவே முடியாது. சில உளநோய் (psychopath) உள்ளவர்கள் கொடிய கொலைகள் புரிவதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு உணர்வுகள் இல்லாததுதான். உணர்வும் அறிவும் இனைந்துதான் செயல்படுகின்றன. நாம் உணர்வுகள் காட்டும் திசையில் பகுத்தறிவு செயல்படுகிறது. பகுத்தறிவு என்பது ஒரு வக்கீல் போன்றது. உணர்வு எதை சரி என்று சொல்கிறதோ, அதை நியாயப்படுத்தும் ஒரு வக்கீல்தான் பகுத்தறிவு என்கிறது உளவியல் ஆராய்ச்சிகள். உதாரணமாக தொலைக்காட்சி  அல்லது முகநூல் விவாதங்களில், யாரவது “நீங்கள் சொல்வது சரி”  என்று பகுத்தறிந்து கட்சி தாவி பார்த்து இருக்கிறீர்களா? உண்மையில் என்ன நடக்கிறதென்றால் அனைவரும் உணர்வுகளின் அடிப்படையில் ஒரு முடிவை எடுத்துவிட்டு, அதற்கு சாதகமாக ஒரு வக்கீலைப் போல நியாயம் கற்பிக்கிறார்கள். உணர்வுகளே அனைத்து முடிவையும் எடுப்பதில்லை. சில விடயங்களில் உணர்வுகள் பகுத்தறிவின் கையில் முடிவெடுக்கும் பொறுப்பை  கொடுத்து விடும். உணர்வுகள் என்பது ஒரு முட்டாள் எசமானான் போல. பகுத்தறிவு அவன் சொல்கேட்டு நடக்கும் ஒரு புத்திசாலியான அடிமை.

இன  அரசியல்:

உணர்வுகளின் முக்கியத்துவத்தை  அடைப்படையாகக் கொண்டு  சுடூவர்டு காஃப்மன் (Stuart Kaufman) [3] அவர்கள் இன அரசியலை ஆராய்ந்து  “குறியிட்டு அரசியல் தத்துவம்” (Theory of Sybmolic Politics)  என்று ஒரு தத்துவத்தை வெளியிட்டுள்ளார். இது   நமது  அரசியல் சிக்கல்களைப்   புரிந்துகொள்ள மிகவும்  பயனுள்ளதாக இருப்பதால் இனி  இதைப்பற்றி  விரிவாகப் பார்ப்போம்.

இன அரசியலின் அடிப்படையாக இருப்பது வரலாற்றுக் கற்பிதங்கள். அவை  எவ்வாறு ஓர்  இனத்தையும் அதன் அண்டைய இனங்களையும் விவரிக்கிறது என்பது இன அரசியலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கற்பிதங்கள் அண்டைய இனங்களைப் பற்றி பாரபட்சங்களையும் ஓரவஞ்சனைகளையும் கற்பித்தால், அது இனங்களுக்கிடையே   பயத்தை உருவாக்குகிறது. அவற்றை அரசியல் தலைவர்கள் பயன்படுத்தி  கருத்துருவாக்கம் செய்து மக்களின் ஆதரவைப் பெறுகின்றனர். பின்பு  அந்த ஆதரவின் துணையுடன் நல்ல பரவலாக்கப்பட்ட அடிமட்ட  அமைப்புகளை உருவாக்கி,   மக்களை  இன்னொரு  இனத்திற்கு எதிராக அணி திரட்டுகின்றனர். இதைப் படம் (1) விளக்குகிறது.  இனி ஒவ்வொரு அலகையும் விளக்கமாகப் பார்ப்போம்.

ethnicPolitics1

கற்பிதங்கள் (Narratives):

ஓர் இனம் என்பது ஒரு பெரிய கற்பிதக் குடும்பம் [9]. அவர்கள்  ஒரு பொதுவான மரபுவழியில்  வந்தவர்கள் என்ற நம்பிக்கையாலும் (உண்மையாக இருக்கவேண்டிய அவசியமில்லை), பொதுவான வரலாற்று நினைவுகள்,  பொதுவான பண்பாடு ஆகியவற்றின் மூலம் ஒரு குழுவாக பிணைக்கப்படுகின்றனர்.  இந்த கற்பிதக் கூறுகள் யார் குழுவின் உறுப்பினர், யார் இல்லை, இனக்  குறியீடுகள், இனத்தின் பொற்காலம், இறந்த காலம், அழிவு காலம், எது புனிதம்,  எது  பூர்வீகம்,  யார் மாவீரர்கள், யார் எதிரிகள்,   ஆகியவற்றை உள்ளடக்கி  இன அடையாளக்  கற்பிதங்களின்  மையமாக இருக்கிறது. இந்தக் கற்பிதங்கள்தான் மூலம் தான்  நிலத்தை  காக்கவேண்டும், அடையாளத்தை காக்கவேண்டும் ( மொழி அல்லது  மதம்),  மாவீரர்களைப் போற்றவேண்டும், எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணமும் வருகிறது.

உதாரணமாக,  சிங்கள தேசியத்திற்கும் அதன் தமிழின அழிப்பிற்கும் அடிப்படைக் காரணமாக  இருப்பது சிங்களர்களின் மகாவம்சக் கட்டுக்கதைகளே என்கிறார் கேப்வெரர்:

Sinhalese nationalism is constructed out of its myths of history and the deeds of its heroes, wherein Tamils threaten to destroy or subsume Sinhalese but are themselves conquered and destroyed. These ideas are integral to the modern social and political practice of nationalism in Sri Lanka and are part of a current tragedy, and in the fires of its passions, Sinhalese, and especially Tamils, are being consumed. [4]

தமிழர்களுக்கு எதிரான இனப்போருக்கு  சிங்களர்களின் இந்த மகாவம்ச மனநிலைதான் அடிப்படை காரணம் என்று பிரபாகரன் அவர்கள் ஏறக்குறைய ஒவ்வொரு மாவீரர் உரையிலும்  கூறியிருக்கிறார்.  நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் ருத்ரகுமாரன் [5] அவர்களும் இனப்படுகொலைக்குக் காரணமாக இதையேக் கூறுகின்றார்.

“None of these pogroms are spontaneous outbursts of anger, nor are they random acts of violence. They are expressions of a genocidal intent against the Tamils, institutionalized within the Mahavamsa mindset of the Sinhala nation. The architect of Black July, JR Jayewardene, and the brain behind Mullivaikkaaal, Mahinda Rajapaksa, both had the same doctrine to guide them, the doctrine of Tamil Genocide.” [5]

குறியீட்டு சார்புகள் (Symbolic Predispositions)

உணர்வுகளைத் தூண்டி செயல்படுத்தும் குறியீடுகள் அனைத்தும் குறியீட்டு சார்புகளாகும். கொடி, சின்னம், சித்தாந்தம் (இந்துத்வா, தமிழ்த்தேசியம்) ஆகியவையும் குறியீட்டு சார்புகளே. உதாரணமாக ஒரு நாட்டின் தேசியக்கொடி என்பது ஒரு குறியீடு. அவர்களின் பிடித்த நாட்டின் கொடி நல்ல உணர்வுகளைத் தூண்டும். எதிரி நாட்டின் கொடி வெறுப்பைத் தூண்டும். இதனால்தான் கொடி   எரிப்புகள் அடிக்கடி நடைபெறுகிறது. குறியீட்டு சார்புகள் காஃப்மன் தத்துவத்தில் மையமாக இருக்கிறது.

 1. இனவெறுப்பு இருந்தால் அவ்வினத்தின் எந்த குறியீடும், பிடிக்காத உணர்வுகளைத்  தூண்டுவதாக இருக்கும்.
 2. ஒரு இனம் ஆபத்தை எதிர்நோக்கும் பொழுது, தத்துவங்களைச் சார்ந்த குறியீட்டு சார்புகள், அவ்வினம் எவ்வாறு ஆபத்தை எதிர்நோக்குகிறது என்பதைத் தீர்மானிக்கிறது. அடங்கிப்போகும்  தத்துவம்  கொண்டவர்கள், எதிர்க்காமல் அடங்கி விடுவர்.  எதிர்த்து போரிடும் தத்துவம் சார்ந்தவர்கள் எதிர்த்துப் போரிடுவர்.
 3. எந்த அமைப்புகள் மக்களுக்குப் பிடித்த குறியீடுகளைப் பயன்படுத்துகிறதோ, அதை மக்கள் விரும்புவர். பிடிக்காத குறியீடுகளைக் கொண்ட அமைப்புகளை மக்கள் வெறுப்பர்.
 4. எந்த தலைவர் மக்களுக்கு பிடித்த குறியீடுகளை பயன்படுத்துகிறாரோ, அந்த தலைவரை மக்களுக்கு பிடிக்கிறது. சிலநேரம் ஒரு தலைவரே பிடித்தக் குறியீடாக மாறிப்போகிறார். அப்பொழுது அவரின் பின்னால் மக்கள் குருட்டுத்தனமாக செல்கின்றனர். நடிகர்கள் அரசியலில் வெல்வதும் இதனால்தான்.

பெரும்பாலும் மக்கள் குறியீட்டு சார்புகளின் வழியாகவே அரசியல் ஆதரவைத் தீர்மானிக்கின்றனர், பகுத்தறிவின் அடிப்படையில் நன்மை தீமைகளை ஆராய்ந்து அல்ல.

“Most of the times in politics, symbolic predispositions – ideology, values, prejudices, are what matters most.” [3]

இன அரசியலில், இரு இனங்களுக்கிடேயே எவ்வளவு ஓரவஞ்சனை (Prejudice) உள்ளதோ, அதனைப் பொறுத்தே பகையும்  இருக்கும்.   ஓரவஞ்சனை  என்பது  இவர்கள்  இப்படித்தான் என்ற முத்திரை குத்துதல், எதிர்ப்பான உணர்வுகளைக் கொள்ளுதல், எதிராக  நடந்து கொள்ள விரும்புதல் என்ற வகையில் வெளிப்படும்.  உதாரணமாக அர்மேனியர்கள் துருக்கியர்களை “இனக்கொலை செய்யும் காட்டு  மிராண்டிகள், எதிரிகள், பலமானவர்கள், ஆனால் பண்பாட்டிலும் தகுதியிலும் தாழ்ந்தவர்கள்” என்று கருதுகின்றனர். இது மாதிரியான ஓரவஞ்சனைகள்  மக்களுக்கு அவர்களின் பண்பாட்டின் வழியாக கற்பிதங்கள் மூலம் வருகிறது.  கற்பிதங்கள் எவ்வளவு தூரம் ஒரு குழுவிற்கு எதிராக இருக்கிறதோ, அவ்வளவு ஓரவஞ்சனையும் இருக்கும்.  எவ்வளவு தூரம் ஓரவஞ்சனை உள்ளதோ, அவ்வளவு தூரம்  அவர்கள்  வேற்றின  மக்களுக்கு எதிரான செயல்பாட்டுக்கு ஆதாரவளிப்பார்கள். ஓரவஞ்சனைகள் ஒரு மனிதனின் உள்ளுணர்வில் புகுந்து, அவருக்குத் தெரியாமலே கூட   அவரை ஆட்டுவிக்கும் வல்லமை கொண்டது. ஈழத்தில் இனப்படுகொலை நடந்தேறியதற்கு அடிப்படைக் காரணம் தமிழர்கள் மீது மகாவம்சக் கட்டுக்கதைகள் உருவாக்கிய  ஓரவஞ்சனையே.

இனி குறியீட்டு சார்புகள் அரசியலில் எவ்வாறு பயன்படுகின்றன என இந்திய, ஈழ வரலாற்றிலிருந்து பார்ப்போம்.   காந்தியின் வெற்றியைப் புரிந்து கொள்ள அவர் எவ்வாறு குறியீட்டு சார்புகளைப் பயன்படுத்தினார் என்று பார்க்கவேண்டும் எகிறார் காஃப்மன் [3]. அன்றைய கல்வியறிவற்ற இந்தியாவில் இருந்த கற்பிதங்கள் எல்லாம் மதம் சார்ந்த கற்பிதங்களே. அவர் இந்துமத கற்பிதங்கள் வழியாக வரும் குறியீட்டு சார்புகளைப் பயன்படுத்தியே வெற்றி கொண்டார்.

அவர் தன்னை இந்து சாமியார் போல மாற்றிக் கொண்டார். அரசர்கள், மந்திரிகள் ஆகியோர் அரசகுருவிடம் ஆலோசனை கேட்பது போல, தன்னை ஒரு அரசகுருவாக உருவாக்கிக் கொண்டார். அவரின் அகிம்சை தத்துவம் என்பது இந்து, புத்த,  சைன மாதங்களில் இருக்கும் ஒரு தத்துவத்தின் வடிவமே. அவரின் சதியாகிரகத் தத்துவமே மதக்குறியீட்டைக் கொண்டது. அவரை தெய்வத்தன்மை பொருந்தியவராகவே மக்கள் பார்த்தனர்.   அவரைக்  காண்பது என்பது ஒரு சாமியாரின் நல்லாசி பெரும் தரிசனமாகவே மக்கள் கருதினர். காந்தியே தன்னை கண்ணனின் ஒரு அவதாரமாக இருக்கலாம் என கருதி இருக்கிறார் என்கிறார் காஃப்மன். அவரைப் பின்பற்றிய  பலர், அவரின் சத்தியாகிரகப் பாதையை  ஒரு மோட்சத்திற்கான வழியாகவே பார்த்தனர்.

புராணங்களில் ஆசிரமத்தில் போர்முறைகள் கற்றுத்தரப்படுவது போல, காந்தி தனது ஆசிரமங்களில் சத்தியாகிரக போர்ப்பயிற்சி அளித்தார். கண்ணன் பரமாத்மா என்பதுபோல, காந்தி மகாத்மா ஆனார். கண்ணனிடம் சுதர்சன சக்கரம் இருப்பதுபோல, காந்தி இராட்டின சக்கரம் கொண்டு போர் புரிந்தார். மக்களை பஜனைகள் மூலம் கூட்டினார். மொத்தத்தில் அவர் பயன்படுத்திய குறியீடுகள் மக்களை உணர்வுப்பூர்வமாக அவரை நோக்கி இழுத்ததனால்தான் அவரால் வெற்றி அடைய முடிந்தது.

எது அவரின் வெற்றிக்கு காரணமாக இருந்ததோ, அதுவே இந்து-முசுலிம் ஒற்றுமைக்கும் தடங்கலாக இருந்தது. காந்தி இந்து குறியீடுகளை பயன்படுத்தியதால் பெரும்பான்மையான இசுலாமியர்களை அவர் பக்கம் ஈர்க்க முடியவில்லை. அப்பொழுது இந்துத்வ அமைப்புகள் இராம இராச்சியம் அமைப்போம் என்றும் இசுலாமியர்களுக்கு எதிராகவும் கருத்துருவாக்கம் செய்து வந்தனர். காந்தியும் இராம இராச்சியம் அமைப்போம் என்றது இசுலாமியர்களை அந்நியப்படுத்தியது.  மேலும் இந்துத்வ அணிகள் இசுலாமியர்களின் மீது ஒரவஞ்சனையை கட்டுக்கதைகள் மூலம் பரப்பி இருதரப்பினரிடமும் பகையை வளர்த்தனர். அவர்கள் ஆங்கிலேயரை விட,  இசுலாமியர்களுக்கு எதிராகவே ஏராளமான கட்டுக்கதைகளை உருவாக்கி பரப்பினார்கள்.  ஆங்கிலேயருக்கு எதிரான கலவரங்களைவிட இசுலாமியருக்கு எதிரான கலவரங்களே அதிகமாக நிகழ்ந்தன என்கிறார் காஃப்மன். அதைப் போலவே அன்றைய இசுலாமியர்களிடம் இந்துக்களைப் பற்றிய கட்டுக்கதைகளும் ஒரவஞ்சனைகளும் பரப்பப்பட்டன. இவை எல்லாம் சேர்ந்து பகையையும் அச்ச உணர்வுகளையும் பரப்பி  பிரிவினைக்கும் கலவரத்திற்கும் வித்திட்டன.

புலிகளின் பல போர் வெற்றிகளுக்கும் அவர்கள்  குறியீடுகளைப் பயன்படுத்தி மக்களையும் போராளிகளையும் உணர்வுப் பூர்வமான ஆதரவைப் பெற்றது ஒரு முக்கிய காரணம். “புலிகள்” என்ற பெயரும் புலிக்கொடியும் விபத்து அல்ல. மாவீரர்கள் நிகழ்வும், மாவீரர்களை விதைப்பதும் பண்டைய புறநானூற்றிலிருந்து எடுத்து வரப்பட்ட குறியீடுகள். அச்சமற்று போர் புரியும் கலையும் புறநாநூற்று கதைகளிலின் மூலம் உணர்வுகளால் கட்டி அமைக்கப்பட்டதே. புலிகள் இயக்கம் உணர்வுகளை மையமாகக் கொண்டு கட்டி எழுப்பப்பட்ட இயக்கம்.  அவர்கள் போராளிகளை உணர்வுப்பூர்வமாக  ஊக்கப்படுத்தியது போல, உலகில் வேறு எந்த இராணுவமோ போராளிகளோ செய்து விஞ்சியிருப்பார்களா என்பது சந்தேகமே.

 

அச்ச உணர்வுகள்:

ஓர் இனம் எவ்வளவு தூரம் ஓரவஞ்சனை கொண்டுள்ளார்களோ, அவ்வளவு தூரம்  வேற்றின மக்களிடமிருந்து ஆபத்தை உணர்வார்கள். ஆபத்தை உணரும்  குழுவில், ஒற்றுமை கூடி இன அடையாளம் பலம் பெரும்.  அதே நேரம் மற்ற இனங்களின் மீது எதிர்ப்பும்  பாரபட்சமும் கூடும். அவ்வாறு இருக்கும்பொழுது மற்ற இனங்களின் மீதான அடக்குமுறைக்கு ஆதரவு அளிப்பர்.

ஓர் இனம் தனது இருப்புக்கு, உயிருக்கு  ஆபத்து என்று உணரும்பொழுது, அவர்கள் எதிர்த்துப் போரிடுவதற்கு  அவர்களுக்குள் ஆதரவு பெருகும். அச்ச உணர்வுக்கு கொண்ட மக்கள், மற்றவர்கள் துன்பத்தை கண்டுகொள்ளாத, எதிர்க்கும் மனப்பான்மையுள்ள, தேசிய சிந்தனையுள்ள, சகிப்புத்தன்மையற்ற மக்களாக மாறுவர்.

எதிரி மிகுந்த பலத்துடன் அசச்சுறுத்தும் பொழுது,  ஓர் இனத்திற்கு எதிர்த்து போரிடும் வலிமை இல்லாவிட்டால் அமைதியாகப் பணிந்து செல்லும். அந்நிலையில் எதிர்த்து போரிடுவதற்கான ஆதரவு குறையும்.   அச்சுறுத்தல் எதிர்கொள்ளும்படியாக இருந்தால், இனம் எதிர்த்து போராடலாம், அது வன்முறையாகவும்  இருக்கலாம்.

ஓர் இனம் அச்சம் கொண்டு எதிர்வினை ஆற்றும்பொழுது, எதிர் இனத்திற்கு அச்சம் மேலும் கூடுகிறது, அவர்களின் ஒரவஞ்சனைகளும் கூடுகிறது. இவ்வாறு ஒருவர்மீது இன்னொருவருக்க்கான  அச்சம் கூடி,  இனங்களுக்கிடையே பிளவு ஏற்பட்டு, பல கலவரங்கள் நடக்கின்றன. இந்துத்வ அரசியல் இந்த தத்துவத்தை பயன்படுத்தியே தங்களை வளர்த்துக் கொண்டு வருகினறன.

ஓரவஞ்சனை இல்லாவிட்டால், அச்சம் தோன்றுவதில்லை.  அது போன்ற நிலையில்,  அரசியல் என்பது பெரும்பாலும் எவ்வாறு பொருளாதாரப் பயனைப்   பங்கிடுவது என்றே இருக்கும்.

சமூகங்களுக்கு இடையேயான அச்ச நிலை, வெவ்வேறு அரசியல் வடிவத்தையம் சமூகங்களுக்கு இடையேயான உறவையும் தீர்மானிக்கிறது (படம் 2).

politics1

இலங்கை சுதந்திரம் அடையும் பொழுது, தமிழர்கள் சிங்களர்களின் மீது எந்த அச்சமும் கொள்ளவில்லை. இதற்குக் காரணம் தமிழர்களின் கற்பிதங்கள் சிங்களர்களின் மீது பயம் கொள்ளும்படியாக பாரபட்சமாக இல்லை. மேலும் தமிழ் அரசியல்வாதிகள் பய உணர்வைத் தூண்டும் விதமாகப் பேசவில்லை. அவ்வாறு பேசினாலும் ஓரவஞ்சனை இல்லாமல் எடுபட்டிருக்குமா என்பது சந்தேகமே. ஆனால் சிங்களர்களிடம் தமிழர்கள் மீதான வெறுப்பு அவர்களின் மகாவம்ச  கட்டுக்கதைகள்  மூலம் கட்டியமைக்கப் பட்டிருந்தது. அவர்களுக்கு அதிகாரம் கிடைத்தவுடன், தமிழர்களுக்கு எதிரான அரசியல் சூடு பிடித்தது. இலங்கை இனப்போர் என்பது இலங்கை விடுதலை அடையும் முன்னரே மகாவம்ச கட்டுக்கதைகளால் தீர்மானிக்கப்பட்ட ஒன்று. இதை நாம் அறியவில்லை. இன்றும் இலங்கை அரசியல் மகாவம்சத்தால் தீர்மானிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது என்கிறார் புரூசு கேப்வரர் [4].

இந்தியா சுதந்திரமடையும் முன்னர் திராவிடநாடு கோரிக்கை எழுந்தது, ஆனால் மக்களிடம் பெரிய ஆதரவு இல்லை.  அண்மையில் ஆழி செந்தில்நாதன் [6] அவர்கள், அண்ணா திராவிடநாடு கோரிக்கையை கைவிட்டதற்கு முக்கிய காரணமாகக் கூறுவதும் இதே ஆதரவின்மை தான்.  இதற்கு முக்கிய காரணம் என்ன என்பதை குறியீட்டு அரசியல் தத்துவத்தின் மூலம் அறியலாம். தமிழக மக்கள் என்றுமே இந்தியாவை அச்சுறுத்தலாகப் பார்க்கவில்லை. பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொண்ட கற்பிதங்கள் பொதுவாக இந்திய கற்பிதங்களுடன் ஒத்து செல்கின்றன. ஆரிய திராவிட கற்பிதங்கள் உருவாக்கப் பட்டு பரப்பப்பட்டாலும், அவை அச்சுறுத்தலை உருவாக்காமல், ஒரு இணக்கப்பாடு அல்லது மீள்பங்கீடு  அரசியலை நோக்கியே நகர்த்தியது. இந்திய தேசியத்திற்கு உயிர்விட்ட தமிழர்களின் எண்ணிக்கை திராவிட நாட்டுக்கு உயிர்விட்டவர்களைவிட(?) அதிகமானது.    இது மக்களிடம் திராவிடநாடு கற்பிதங்கள் பரப்பப்படவில்லை அல்லது உணர்வுப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப் படவில்லை என்பதையே காட்டுகிறது.

 

தலைவர்களின் கருத்துருவாக்கம்:

இன  அரசியலில் தலைவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஓர் இனம் இன்னொரு இனத்தைப் பற்றி ஓரவஞ்சனை கொண்டிருந்தாலும், அது ஒரு அரசியல் தலைவரின் கருத்துருவாக்கம் இல்லாமல்  இனப்பகை  ஏற்படுவதில்லை. தலைவர்களால் இனங்களுக்கிடையே பகையையும் உண்டு பண்ண முடியும், அதே நேரம் பகையைத் தனித்து அமைதியையும் நிலை நாட்ட முடியும். அதை அவர்கள் கருத்துருவாக்கம் மூலம்  செய்கிறார்கள். கருத்துருவாக்கம் என்பது சிக்கல் என்ன, தீர்வு என்ன, எவ்வாறு தீர்வை நடைமுறைப் படுத்துவது  என்று தெளிவு படுத்தும்.   எப்படிப்பட்ட கருத்துருவாக்கத்தையும் கொண்டு அவர்களால்  வெற்றி பெறமுடியாது. எப்பொழுது அவர்களின் கருத்துருவாக்கம் குறியீட்டு சார்புகளை ஒத்து இருக்கிறதோ, அப்பொழுதுதான் மக்களின் ஆதரவு பெருகும். சுருக்கமாகக் கூறினால் தலைவர்கள் கருத்துருவாக்கம் மூலம் தலைமை தங்குகிறார்கள். அக்கருத்துருவாக்கம் சாதகமான  உணர்வலைகளை ஏற்படுத்தினால், மக்கள் ஒன்று திரள்வர். அவ்வாறான ஒன்று திரட்டல் வன்முறையில் முடியவேண்டும் என்று  அவசியமில்லை. காந்தி இதை சத்தியாகிரகப் போராட்டங்களாக மாற்றி அமைத்தார். ஒரு சமூகம் பல்வேறு  சிக்கல்களை எதிநோக்குவதால், அனைத்தையும் இணைத்து ஒரு முக்கிய  கருத்துருவாக்கத்தின் கீழ் கொண்டுவருவர்.  பெரும்பாலும் அநீதி என்ற  மைய கருத்துருவாக்கம் இன மோதல்களில்  பயன்படுத்தப்படுகிறது. மேலும் தலைமை நம்பிக்கைக்கு உரிய தலைமையாக இருக்கவேண்டும். தலைமை சுயநலம் கொண்டதாக இருந்தால், மக்களை ஒன்று திரட்டமுடியாது.

 

எவ்வளவுதூரம்  இனங்களுக்கிடேயே ஓரவஞ்சனை இருக்கிறதோ, அவ்வளவுதூரம் தலைவர்களின் பேச்சில் உண்மை இருக்கவேண்டிய அவசியமில்லை. எளிதாக மக்களை உசுப்பிவிட்டு   இன்னொரு இனத்திற்கு எதிராக அணிதிரள வைப்பர், ஆனால் இது தலைவர்களுக்கு ஆபத்தானதும் கூட. உசுப்பிவிட்டு பின்வாங்கினால், அவரின் ஆதரவாளர்களாலேயே உயிரிழக்க நேரிடலாம். இலங்கையின் பண்டார நாயக்கே, “சிங்களமொழி மட்டும்”  என்ற கருத்துருவாக்கத்தைக் கொண்டு சிங்களவர்களே உசுப்பிவிட்டு வெற்றி கொண்டார், ஆனால் பின்னர் தமிழர் எதிர்ப்பினால் பின்வாங்க ஆரம்பித்த பொழுது,  ஒரு சிங்களராலேயே  சுட்டுக் கொல்லப்பட்டார்.

இலங்கைத்தீவு புத்த தர்மத்திற்காக கடவுளால் அளிக்கப்பட்டது என்று மகாவம்ச புராணக் கதைகளினால் சிங்கள தேசிய கருத்தியலை கட்டமைத்துள்ளனர் [7]. அதுபோலவே இந்துத்வாவும் இராம இராச்சியம் அமைப்போம், இந்தியா ஒரு இந்து தேசம் என்ற கருத்தியலை புராணங்கள் மூலம் கட்டியமைத்திருக்கிறார்கள். இவ்வாறு அவர்களது  கருத்துருவாக்கம்  மக்களிடம் உள்ள கற்பிதம் சார்ந்த குறியீடுகளுடன்  ஒத்து வருவதால், மக்கள் அவ்வியக்கங்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர்.

திராவிட அரசியல் என்பது பகுத்தறிவு இயக்கத்திலிருந்து வந்தது என்றாலும், அவர்களின் வெற்றிக்குக் காரணம் பகுத்தறிவு அல்ல. அன்று மக்களிடம் பரப்பப்பட்ட  ஆரிய-திராவிட கற்பிதங்கள், மொழிப் பற்று, திரைப்படங்கள், உணர்வுப் பூர்வமான மேடை பேச்சுக்கள், சமூக நீதி  ஆகியன மக்களின் உணர்வுகளைத் தூண்டி அவர்கள் பக்கம் இழுத்தது. அவர்கள் மக்களின் உணர்வுகளை வென்றதால்தான் அவர்களால் அரசியலில் வெல்ல முடிந்தது.[8]

அமைப்புகள்:

கருத்துருவாக்கம் குறியீட்டு சார்புகளுடன் ஒத்து  இருக்கும்பொழுதே  ஆதரவு பெருகும், ஆனால் அது மட்டும் மக்களை அணி திரட்டிவிடாது.  மக்களை பல்வேறு அமைப்புகள் மூலம் ஒரு வலைப்பின்னலாக இணைக்கவேண்டும். கருத்துருவாக்கம் என்பது வான்போர்  போன்றது; வலைப்பின்னல் என்பது தரைப்போர்  போன்றது. இரண்டு போர்களையும் சரியாக நடத்தினால்தான் மக்கள் அணிதிரள்வர்.[3]

எவ்வளவு திறமை  வாய்ந்த பேச்சாளராக ஒரு தலைவர் இருந்தாலும், அவர் நாடு முழுவதும் பரவலாக அடிமட்ட அளவில் அமைப்புகளை உருவாக்கவிட்டால், அவரால் மக்களை அணிதிரட்ட முடியாது. அந்த அமைப்புகள் மக்களின் குறியீட்டு சார்புகளைத் ஒத்து இருக்கும்பொழுது மக்கள் அமைப்புகளில் இணைகின்றனர். ஒரே அமைப்பு என்றில்லாமல் பல்வேறு  வேறுபட்ட  அமைப்புகளின் ஆதரவு கிடைக்கும் பொழுது, மக்களை அணி திரட்டுவது எளிதாகிறது.

காந்தி அடிகளுக்கு மக்களை ஒன்று திரட்ட   நாடு முழுவதும் இருந்த  காங்கிரசு கட்சியின் அமைப்புகளும், அவரின் ஆசிரமங்களும்  துணையாக இருந்தன [3]. இன்று  இந்துத்வா அமைப்புகள் நாடு முழுவதும் பலவேறு கிளைகளை உருவாக்கி இந்துக்களின் குறியீட்டு சார்புகளைக் கொண்டு அவர்களின் அமைப்புகளில் சேர்த்து வருகிறது. மேலும் சிறுவர்களை கற்பிதங்கள் மூலம் அவர்களை இந்துத்வ அரசியலுக்கு ஏற்றவாறு உணர்வுப் பூர்வமாக  வளர்த்து வருகிறது. இந்த அமைப்புகள்தான் இந்துத்வ அரசியலின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம். அவர்கள் மனிதர்களின் குறியீட்டு சார்புகளின் தன்மையை நன்றாக உணர்ந்து அதை பயன்படுத்துகின்றனர். திராவிட, தமிழ் அமைப்புகள் பகுத்தறிவின் மூலம் மக்களை ஈர்த்து விடலாம் என்ற நோக்கில் இந்துத்வாவை எதிர்கொள்ள அமைப்புகளை பெரிதாக உருவாக்கவில்லை.  அவ்வாறு கட்சி  அலுவலகங்கள்  இருந்தாலும், அது மக்களை குறியீட்டு சார்புகள் மூலம் உணர்வுப் பூர்வமாக ஈர்ப்பதில்லை. அவ்வாறு உணர்ச்சி இருந்திருந்தால் ஈழ இனப்படுகொலை நடந்த பொழுது மாபெரும் போராட்டம் நடந்திருக்கவேண்டும். அதற்குப் பதிலாக போராட்டம் செய்ப்பவர்கள்தான் ஒடுக்கப்பட்டார்கள். உணர்ச்சி அற்ற அமைப்புகளால் மக்களை ஒன்று திரட்ட முடியாது.

மக்களை இயக்கங்களில் சேர்ப்பதற்கு தனிமனிதத் தொடர்பு முக்கியமானது. தொடர்பு கொள்ளும் மனிதர் தெரிந்தவர், உறவினர், நண்பர் என்றால், அவர்களை இணைப்பது எளிதானது. மக்களை இணைப்பதில் அனைத்து சாதகமான சம்மதிக்கவைக்கும் உளவியல் முறைகளும் கையாளப்படுகின்றன.

எழுச்சிக்கு தேவையான நிலைமைகள்:

இதுவரை பார்த்ததிலிருந்து, ஒர்  இன எழுச்சி ஏற்பட பல சாதகமான நிலைமைகள் இருக்கவேண்டும் [3]:

 1. இனங்களுக்கிடைய ஓரவஞ்சனை இருத்தல் வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் ஒரு இனத்தின் மீது இன்னொரு இனத்திற்கு அச்ச உணர்வு இருப்பதில்லை. அப்படி இருக்கும்பொழுது, தலைவர்கள் எவ்வளவு கூச்சலிட்டாலும் மக்கள் கேட்கப்போவதில்லை.
 2. இனங்களுக்கிடையே ஓரவஞ்சனை இருந்தாலும், தலைவர்கள் அதைப்பயன்படுத்தி கருத்துருவாக்கம் செய்யவேண்டும். மேலும் தலைமை நம்பிக்கையுள்ள தலைமையாக இருக்கவேண்டும். நம்பிக்கையற்றவர்கள் பேசினால் எடுபடாது.
 3. எதிர்கொள்ள முடியாதபடி அதீத அடக்குமுறை இருந்தாலும், எழுச்சி ஏற்படாது.
 4. தலைவர்கள் நாடு முழுவதும் பரவலான அமைப்புகளை ஏற்படுத்தி மக்களை ஒருங்கிணைக்க வேண்டும்.

மேலுள்ள நான்கு நிலைமைகளும் சாதகமாக இருக்கும்பொழுதே எழுச்சி ஏற்படும். ஏதாவது ஒன்று இல்லாவிட்டாலும் எழுச்சி ஏற்படாது.  இதனால்தான் இன  எழுச்சி என்பது அவ்வளவு எளிதில் ஏற்படுவதில்லை.  மக்களை அரசுக்கு எதிராக அணிதிரட்ட உதவும் மற்ற காரணிகள் என்னவென்றால், மக்கள் பெரும்பான்மையாக உள்ள நிலம், ஏழ்மை, திடமற்ற பலவீனமான அரசு, அரசியல் உரிமை மறுப்பு ஆகியன.

இனங்களுக்கிடையேயான ஓரவஞ்சனைதான் இனச்சிக்கலுக்கு  அடிப்படைக் காரணம். அரசியல் தலைமைகள், அமைப்புகள் என்பதெல்லாம்   அதைப் பயன்படுத்தி வெற்றி கொள்வதே.  ஓரவஞ்சனை என்பது உடனடியாக உருவாக்கப்படுவதல்ல. இது வரலாற்றுக் கற்பிதங்கள் மூலம் நீண்ட காலமாக ஒரு சமூகத்தில்  நிலவுவது.  இதை எளிதில் மாற்ற முடியாததுதான் பல இனச்சிக்கல்களுக்குக் காரணம். சிங்களர்கள் மகாவம்ச வரலாற்றுக் கற்பிதங்கள் மூலம், தமிழர்கள் அவர்களின் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் என்ற வெறுப்பு இட்டு கட்டப்பட்டுள்ளது. அந்த வெறுப்பு இருக்கும்வரை ஒரே நாட்டில் இன அமைதி என்பது சாத்தியப்படப் போவதில்லை.

 

இரண்டாம் பகுதி: பகுதி 2: இன அரசியல் – நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

உசாத்துணை:

 1. Haidt, Jonathan. The righteous mind: Why good people are divided by politics and religion. Vintage, 2012.
 2. Westen, Drew. The political brain: The role of emotion in deciding the fate of the nation. PublicAffairs, 2008.
 3. Kaufman, Stuart J. Nationalist passions. Cornell University Press, 2015.
 4. Kapferer, Bruce. Legends of people, myths of state: violence, intolerance, and political culture in Sri Lanka and Australia. Berghahn Books, 2011.
 5. Visuvanathan Rudrakumaran, Black July, Mullivaikal, and the Mahavamsa mindset of the Sinhala nation. https://www.colombotelegraph.com/index.php/black-july-mullivaikkaaal-and-the-mahavamsa-mindset-of-the-sinhala-nation/
 6. ஆழி செந்தில்நாதன், காணொளி, https://www.youtube.com/watch?v=t4YCC5NetFQ&feature=share 
 7. L. Devananda. The Mahavamsa mindset : Revisiting Political Budhism in Srilanka, http://dbsjeyaraj.com/dbsj/archives/1886
 8. சு. சேது, பண்பாட்டுத் தளத்தில் தமிழ்த் தேசிய வேர்கள்
 9. சு. சேது, இன அடையாளம்
This entry was posted in அரசியல், சமூக அறிவியல், தமிழ்த்தேசியம், பகுத்தறிவு, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to பகுதி 1: இன அரசியல் – இன எழுச்சி எவ்வாறு ஏற்படுகிறது?

 1. Pingback: ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 1 | வெளிச்சவீடு

 2. Pingback: ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 1 | EelamView

 3. Pingback: ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் : ஈழம் செய்திகள்

 4. Pingback: யூதர்களின் கல்விமுறையிலிருந்து தமிழ்க்கல்விக்கான சில உத்திகள் | Sethu's Blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s