திறந்த வெளியில் பூட்டப்பட்ட உலகு

ஒரு முறை நண்பர்களுடன் “அறை தப்பித்தல் (Escape Room)” [1] என்ற ஒரு விளையாட்டில் பங்கு பெற்றேன். இவ்விளையாட்டில் ஒரு அறைக்குள் கூட்டிச்சென்று நம்மை அடைத்து விடுவார்கள். அவ்வறைக்குள் ஒரு இரகசியக்  கதவு இருக்கும், ஆனால் எங்கிருக்கிறது என்று பார்த்தால் தெரியாது. அவ்வறைக்குள் பல புதிர்கள் இருக்கும். அவை என்ன புதிர்கள்,  எப்படித் தீர்ப்பது, எதை முதலில் தீர்ப்பது என்று எந்த விளக்கமும் இருக்காது. அறையின் சில இடங்களில் வெளிச்சமே இருக்காது. ஒரு புதிரின் விடையைக் கொண்டு ஒரு பெட்டியின் பூட்டினை திறக்கலாம்,  அந்தப் பெட்டிக்குள் இன்னொரு புதிர் இருக்கும் அல்லது இதற்குமுன் எங்குமே பார்க்காத சில கருவிகள் இருக்கும். ஒரு புதிரின் விடை இருட்டான பகுதியில் உள்ள மின்விளக்கைப்  போட உதவும். இவ்வாறு ஒவ்வொரு  புதிராக அவிழ்த்தால் இறுதியாகக் கதவு தென்படும், பின்பு நாம் கண்டுபிடித்த கருவிகளைக் கொண்டு அதைத் திறந்து தப்பிக்கலாம். இதை ஒரு மணி நேரத்திற்குள் நண்பர்களுடன் இணைந்து செய்து முடிக்கவேண்டும். இவ்விளையாட்டை மிகுந்த ஈடுபாடுனுடன் விளையாடினோம், ஆனால் எங்களால் முக்கால்வாசி தூரம்தான் செல்ல முடிந்தது.

கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் மனிதனின் வாழ்க்கையும் இது போன்றதுதான், ஆனால் கூடுதலாக சிக்கலானது.  நாம் திறந்த வெளியில் பூட்டப்பட்ட ஒரு பிரபஞ்சத்தில் வாழ்கிறோம், அதனால் நாம் பூட்டப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்வதில்லை.  அதிலுள்ள பெரும்பாலான புதிர்களும் தெரிவதில்லை, பூட்டப்பட்ட கதவுகளும் தெரிவதில்லை. நமது வெற்றி தோல்விகள் நாம் எவ்வாறு இப்புதிர்களை தீர்க்கிறோம் என்பதிலேயே இருக்கிறது. அதனால்தான்   என்னவோ பரிணாமம்  நமக்கு இயற்கையிலேயேப் புதிர்களைத் தீர்ப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.   நியூட்டன் முதலில் அறிவியலின் ஒரு பெரிய புதிரை அவிழ்த்தபின் தான் இயற்கையில் பல புதிர்களும் கதவுகளும் ஒழிந்திருக்கின்றன என்றே தெரிய ஆரம்பித்தது.  அதற்குமுன் அறிவு என்பது மேலிருந்து மந்திரங்களால் குதித்து வந்ததாகவே நம்பப்பட்டது. அதனால் எந்த ஒரு பெரிய முன்னேற்றமும் இல்லை. நியூட்டனுக்குப் பின்புதான்  மனிதன் “அறிவியல்” என்று ஒரு பிரிவை உருவாக்கி இயற்கையின் புதிர்களைத் தீர்த்து முன்னேற ஆரம்பித்தான் [2]. இன்று நமது முன்னேற்றம் என்பது புதிர்களைத் தீர்ப்பதிலேயே இருக்கிறது என்பது தெள்ளத்தெளிவு. புதிர்களின்  தீர்வு புதிய புதிய கதவுகளை திறந்து விட்டுக்கொண்டே செல்கிறது. சில  நூறு  ஆண்டுகளுக்குமுன் நாம் இவ்வாறு திறன் பேசிகளைக் (Smart Phones) கொண்டு திரிவோம் என்று நினைத்திருக்க மாட்டார்கள். இன்னும் நூறு ஆண்டுகளுக்குப்பின் எப்படி இருப்போம் என்பது யார் கற்பனைக்கும் எட்டாதது. அது நாம்  புதிர்களைத் தீர்ப்பதில் இருக்கும் முனைப்பையும், நாம் திறக்கும் கதவுகளின் தன்மையைப் பொறுத்தே இருக்கும்.

அரசியல் சமூகச் சிக்கல்கள்:

இன்றைய தமிழ்ச்சமூகம் இனவழிப்பு, மொழியழிப்பு, நிலம், சுற்றுச்சூழல் எனப்பல சிக்கல்களை எதிர் நோக்கி இருக்கிறது. அவற்றைத் தீர்க்கவிட்டால், தமிழினம் என்று ஒன்று  அடுத்த நூற்றாண்டில் இல்லாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது  இச்சிக்கல்களில் இருந்து விடுபடுவதற்கான கதவு நமக்குத்தேவை என்பது அனைவரும் அறிந்ததே, . ஆனால் அக்கதவை அடைய நாம்  எந்த வழியைப் பின்பற்றுகிறோம்  என்பது நமது வெற்றி தோல்வியை பெரும்பாலும் தீர்மானிக்கும்.   நான் இரண்டு வழிகளைக்  காண்கிறேன்:

  1. நாம் சிக்கலைப் பார்த்தால் தெளிவாகத் தெரியும், அதன் தீர்வுக்கானப் பாதை தெளிவானது, நாம் ஏற்கனவே அறிந்தது, அல்லது எளிதாக அறிய முடிவது. அதனால் நாம் செய்யவேண்டியது எல்லாம் அப்பாதையில் பயணித்து வெற்றி காண்பது மட்டுமே.
  1. நமது சிக்கலின் ஆழம் தெளிவாகத் தெரிவதில்லை. அதன் தீர்வுக்கான பாதையும் தெளிவானது இல்லை. இவற்றைப் புரிந்து தெளிவடைய “அறை தப்பித்தல்” போன்று பல அறிவுப் புதிர்களைத் தீர்க்கவேண்டும். மேலும் இப்புதிர்களே கண்ணுக்கு புலப்படாமல் மறைந்திருக்கும். இவற்றைத் தீர்ப்பது கடினமானது, இவை நமது சீரிய சிந்தனைக்கு உட்படுத்தப் படவேண்டியவை.

முதலாவது தவறானது, இரண்டாவது சரியானது.

நாம் அனைத்தையும் வெறுமனே பார்த்து அறிந்துகொள்ள முடியும் என்பது தவறான பார்வை. பல ஆயிரம் வருடங்களாக மக்கள் சூரியன்தான் பூமியை சுற்றிவருகிறது என்று நினைத்தார்கள், ஆனால் உண்மை தலை கீழாகத் தானே இருந்தது. கோபெர்னிக்கசு  பலவருடங்கள் கடுமையாக சிந்தித்து உழைத்துதான் உண்மையை கண்டுபிடித்தார் [2]. இவ்வாறு உண்மைகள் நாம் காண்பவைக்குப் புறம்பாக இருக்கும்ப பொழுது, அரசியல் சமூகச் சிக்கல்கள் மட்டும் எப்படி நாம் எளிதாக சரியாகக் காணமுடியும்?

உண்மை என்னவென்றால் உலகில் முதலில் தோன்றியது இயற்பியல் விதிகள், அதிலிருந்து வேதியல், பின்பு உயிரியல், மனிதன் உட்பட பல உயிரிகள், மனித சமூகம் எனப் படிப்படியாக இவ்வுலகம் சிக்கலாகிக் கொண்டே செல்கிறது. நமக்கு இயற்பியலைப் புரிவது கடினமாக இருக்கலாம், ஆனால் அதன் விதிகள் எளிதானது;  ஒரு கரும்பலகையில் அனைத்தையும் எழுதிவிடலாம். சமூகம் பார்ப்பதற்கு புரியும்படியாகத் தோன்றுகிறது, ஆனால் இது ஒரு மாயை. இப்பிரபஞ்சத்திலேயே சிக்கலான அமைப்புகள் நமது மூளையும் சமூக அமைப்புகளும்தான். அதனால்தான் இப்பிரபஞ்சத்தை அறிந்துகொள்ள முடிகிற நம்மால் இன்னும் நம்மை அறிந்துகொள்ள முடியவில்லை [3, 4].

நீங்கள் கூறலாம்:  இத்தனை ஆண்டுகாலம் யாரும் இப்படி சமூக அரசியல் சிக்கல்களை இவ்வாறு சிந்திக்கவில்லை, இப்பொழுது மட்டும் ஏன் மாறவேண்டும்? இதுவரையான தமிழ்ச் சமூகம் ஒரு நிலையான மாற்றமில்லாத சமூகக் கட்டமைப்பில் (static society)  [5] ஆடுமாடுகள் போல எந்த மாற்றமில்லாமல் வாழ்ந்து வந்தது. அதனால் அழிவதற்கு வாய்ப்புக் குறைவாகவே இருந்தது. ஆனால் அறிவியல் புரட்சி ஏற்பட்டபின், குறிப்பாக கடந்த ஒரு நூற்றாண்டாக மாற்றங்கள் வெகுவேகமா நிகழ்ந்து வருகின்றன. இந்த மாற்றங்கள் பழைய பிற்போக்கான சமூக வழக்கங்களை ஒழித்துக்கட்டி பல்வகைகளில் நன்மை புரிந்துள்ளது. ஆனால்  மொழி, பண்பாடு, நிலம் ஆகியற்றில் ஏற்படும் அதிவேக மாற்றங்கள் தமிழினம் என்று ஒன்று இல்லாமல் ஆக்கவும் வாய்ப்பளிக்கிறது. மாற்றமில்லாத சமூகத்தில் நிலவும் சிக்கல்களைக் காலம் காலமாக என்ன செய்தார்களோ அதையே வைத்து தீர்த்துவிடலாம். ஆனால் நாம் இன்று காணும் சிக்கல்கள் நமது அசுரவேக அறிவியல் வளர்ச்சியினால், உலகமயமாக்கலினால், புதிய உலக ஒழுங்கினால்  தோன்றியவை. இவை நாம் வளர வளர சிக்கல்கள் கூடிகொண்டே செல்லும். அந்தக்காலம் போல பழைய முறைகளில் சிக்கல்களை அலசுவது பெரிதாக உதவப்போவதில்லை என்பதை உணரவேண்டும்.   அவ்வாறு செய்வது பீரங்கிகளுக்கு முன் கத்தியைக் கொண்டு சண்டை போடுவது போன்றது. நமது சிந்தனை எதிரியின் சிந்தனையை விட சிறந்ததாக இருக்கேவேண்டும். அதுதான் இருப்பதிலேயே பலமான ஆயுதம்.

உசாத்துணை:

  1. Escape Room, https://en.wikipedia.org/wiki/Escape_room
  2. Dolnick, Edward. The clockwork universe: Isaac Newton, the Royal Society, and the birth of the modern world. New York: HarperCollins, 2011.
  3. Gell-Mann, Murray. The Quark and the Jaguar: Adventures in the Simple and the Complex. Macmillan, 1995.
  4. Bak, Per. How nature works: the science of self-organized criticality. Springer Science & Business Media, 2013.
  5. Deutsch, David. The beginning of infinity: Explanations that transform the world. Penguin UK, 2011.
This entry was posted in அறிவியல், தத்துவம், Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s