சமூகத்தைப் பற்றி நமது சிந்தனைகளில் உள்ள தவறான கருதுகோள்கள் – பகுதி 2

சிக்கலான அமைப்புகளில் (Complex Systems) உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பொதுவான வழிமுறைகளை ஆராய்ந்த டோனெல்லா மெடோஸ் (Donella Meadows) [1] அவர்கள் பன்னிரண்டு செயல்பாடுகளை (leverage points) முக்கியத்துவத்தின்படி வரிசையாக அடுக்குகிறார். அவற்றில் முதல்  இரண்டு அதிமுக்கிய செயல்பாடுகளாக அவர் கருதுவது கருதுகோள் மாற்றங்கள் (paradigm changes).  இருப்பதிலேயே கருதுகோள்கள்தான் அதிமுக்கியம் என்கிற பொழுது, நமது கருதுகோள்களை ஆராயவேண்டியது அவசியமாகிறது. அதை நோக்கிய  ஒரு முயற்சிதான் இக்கட்டுரை. ஏற்கனேவே இரு தவறான கருதுகோள்களை  முதற்பாகத்தில்  பார்த்தோம். அதைப்படிக்காதவர்கள் இந்த சுட்டியில் படிக்கலாம்.

பகுதி -1: சமூகத்தைப் பற்றி நமது சிந்தனைகளில் உள்ள தவறான கருதுகோள்கள்

இக்கட்டுரையில் இன்னொரு தவறான கருதுகோளை ஆராய்வோம்.

தவறான கருதுகோள் 3: மனிதர்கள் சுயமாக முடிவெடுக்கும் திறன் (Freewill) பெற்றவர்கள்.

நாம் மனிதர்கள் சுயமாக  முடிவெடுக்கும் தன்மை (Freewill) உடையவர்கள்  என்று நினைக்கிறோம். அதனால் சமூக மற்றும் அரசியல் செயல்பாடுகள்   அனைத்தும் தனி மனிதனை நோக்கி செயல்படுத்தப்படுகிறது. இது ஒரு வீரியமற்ற செயல்பாடு. மனிதர்களின் சுயமுடிவு என்பது ஒரு மாயை. அவன் எடுக்கும் முடிவு அவன் கைகளில் இல்லை என்ற உண்மையை உணர வேண்டியது முக்கியம். நமது செயல்பாடுகள் பலனளிக்க எது மனிதன் எடுக்கும் முடிவை தீர்மானிக்கிறது என்பதை அறிந்து, அதை நோக்கி நமது செயல்பாடுகளை முடுக்கவேண்டும்.

பெரும்பான்மையான அறிவியலாளர்கள் மனிதர்களின் முடிவெடுக்கும் திறனைப் பற்றிக் கூறுவது என்னவெனில்  மனிதர்களுக்கு சுயமுடிவு எடுக்கும் திறன் இல்லை, அது ஒரு மாயை (illusion) என்பதுதான் [2]. ஒருவரின்  செயல்பாடு என்பது வரலாற்றாலும், சுற்றுச்சூழலாலும், ஓரளவு குருட்டுத்தனத்தாலும்   தீர்மானிக்கப்படுகிறது. இங்கு வரலாறு என்பது ஒருவர் தனது குழந்தைப்  பருவத்திலிருந்து எதிர்நோக்கிய அனைத்து  நிகழ்வுகளும், கற்றலும், பெற்றோரிடமிருந்து வந்த மரபணுக்களின் தாக்கமும் அடங்கும். சுற்றுச்சூழல் என்பது ஒருவர் வாழும் சமூக பண்பாட்டையும் அவர் எதிர்நோக்கும் சவால்களும் அடங்கும். நாம் ஒரு காரண-விளைவு (cause and effect) என்ற உலகில் வாழ்கிறோம். ஒன்று, நமது முடிவுகள் நமது கட்டுப்பாட்டில் இல்லாத பல காரணங்களால் (causal chains) விளைகிறது, அல்லது முற்றிலும் குருட்டுத்தனமான விளைவுகளால் (random effects) ஏற்படுகிறது. எப்படி இருந்தாலும் நமது செயல்பாட்டிற்கு நாம் பொறுப்பல்ல. சுய முடிவு என்பது ஒரு மாயை [2]. “திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்ற பாடல் வரிகள் மனிதனுக்கு சுயமுடிவு எடுக்கும் திறன் உள்ளது என்ற கருதுகோளின் அடிப்படையில் எழுதப்பட்டது. இது முற்றிலும் தவறான பார்வை.

ஆதிகாலத்திலிருந்து இன்றுவரை முன்னேற்றத்திற்குத் தடங்கலாக இருப்பது, நாம் பார்ப்பவை அனைத்தையும் யாரோ இயக்குகிறார்கள் என்று நினைப்பதுதான் [3]. நாம் பார்க்கும் ஒவ்வொரு கோளும்  ஒரு கடவுள் இயக்குவதாக நினைத்தார்கள். உயிர்களை இறைவன் படைத்ததாக நினைத்தார்கள். நமது அறிவியல்  முன்னேற்றம் என்பது இந்த தவறான கருதுகோள்களை உடைத்ததின் ஊடாகவே ஏற்பட்டுள்ளது. இது இயற்பிலுக்கும் உயிரியலுக்கு மட்டுமல்ல, சமூகத்திற்கும் பொருந்தும் என்று அறியவேண்டும். நமது சமூகத்திலும்  அரசியலிலும் இன்னும் இந்த குருட்டுப்பார்வை நிலவுகிறது. மனிதர்கள் ஏன் சாதி வெறியர்களாக இருக்கிறார்கள், மத வெறியர்களாக இருக்கிறார்கள் என்று கேள்விக்கு பொதுவாக  வரும் பதில்கள் என்னவென்றால் அவர்கள் பகுத்தறிவற்றவர்கள், சிந்திக்கும் திறன் இல்லை என்று இருக்கும். அவர்களுடனான வாக்குவாதத்தில் “திருந்துங்கடா, மூளையைப் பயன்படுத்துங்கடா” என்ற பதில்களைப் பொதுவாகக் காணலாம். நாம் அறியவேண்டியது என்னவென்றால் நாம் அனைவருக்கும் சுய முடிவுத் திறன் இல்லை,  நமது வரலாறும் சூழலும் நாம் அனைவரையும் அவரவர் நிலைக்கு தள்ளிவிட்டிருக்கின்றன என்பதுதான். முகநூல், தொலைக்காட்சி விவாதங்களில் ஈடுபட்டுள்ள எத்தனைபேர் தங்களின் முடிவை மாற்றி இருக்கிறார்கள்? அவரவர் இருக்கும் நிலைக்கு ஆதரவாக அவர்களின் கருத்துக்களை முன் வைப்பார்களே ஒழிய அவர்களின் நிலையை மாற்ற மாட்டார்கள்.

சரி, நமக்கு சுயமாக முடிவெடுக்கும் திறன் இல்லை. அப்படியென்றால் நமது அரசியல் சமூக சிக்கல்களைத் தீர்ப்பது எப்படி? முதலில் தனி மனிதர்களை நோக்கிய நமது செயல்பாடுகளை புறம் தள்ளிவிட்டு, எந்த காரணிகள் மனிதனை முடிவெடுக்க வைக்கிறதோ, அவற்றை நோக்கி செயல்பாடுகளை முடுக்கவேண்டும்.

இது விவசாயத்தைப் போன்றதுதான்.  நல்ல விளைச்சலுக்கு,  முழு உழைப்பும் விதைகள் வளர்வதற்கேற்ற சுற்றுச்சூழலை உருவாக்குவதை நோக்கியே இருக்கின்றன, உதாரணமாக நீர் பாய்ச்சல், களையெடுப்பு, உரமிடுதல் போன்றன. அதுபோல நமது மக்களை ஒன்றுபடுத்த, சாதி மத பாகுபாடுகளைக்  களைய,  அறிவியல் பொருளாதார முன்னேற்றமும் ஏற்பட, அதற்கான சூழலை உருவாக்கவேண்டும். உதாரணமாக

  1. ஒற்றுமை ஏற்பட அனைவருக்கும் தமிழர் வரலாறும் மொழியும் சிறு வயதிலிருந்து கற்பிக்கப்பட்டு தமிழர் என்ற உணர்வை அனைவருக்கும் அளிக்கவேண்டும்.
  1. பண்பாடு என்பது ஒரு மனிதனின் பெரும்பாலான சுற்றுச்சூழல். அதை சரியான திசையில் இருந்தால், மனிதர்களின் செயல்பாடுகளும் அதற்கேற்ப இருக்கும். பண்பாட்டு சீர்திருத்தங்களைக் கொண்டு சாதிமதப் பிளவுகளைக் களையலாம், நம்மை ஒரு அறிவார்ந்த முன்னேறிய சமூகமாக மாற்றலாம். பண்பாட்டு மாற்றங்கள் மிக சக்தி வாய்ந்தவை. உதாரணங்களாக:
  • மேற்குலகம் 16 ஆம் நூற்றாண்டுவரை எந்த முன்னேற்றமும் இன்றி மத இறுக்கத்தில் இருந்தது. அதன்பின் ஏற்பட்ட பிராட்டஸ்டன்ட் மதப்பிளவின் விளைவாக போர்கள் ஏற்பட்டு மத இறுக்கம் தளர ஆரம்பித்து பண்பாட்டு மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. அதன் விளைவாக அறிவொளிக்காலம்,  அறிவியல் புரட்சி என மேற்குலகு படுவேகமாக முன்னேறி நிற்கிறது. அவர்களின்  முன்னேற்றத்திற்கு ஒரு அடிப்படை காரணம் பண்பாட்டு மாற்றமாகும் [4].
  • ஒதுக்குப் புறமாக பாலைவனத்தில் வாழ்ந்த அரேபியர்களிடம், முகம்மது அவர்களின் வழியாக பண்பாட்டு மாற்றம் (இசுலாம்) ஏற்பட்டது. அதன் விளைவாக அவர்கள் மாபெரும் அரசியல் சக்தியாக மாறிப் பேரரசுகளை உருவாக்கினார்கள்.

இதுபோன்ற பண்பாட்டு செயல்பாடுகள் திட்டமிட்டு மேலிருந்து கீழாக செயப்படுவதல்ல. அது கீழிருந்து மேலாக தாமாக சுய ஒழுங்குபடுத்தி (self-organized) தனக்குத் தேவையான பொருளாதார பலத்தை தாமாக பெற்றுச் செயல்படும் (self-sustaining) தன்மையை பெற்றவை. ஆரம்பத்தில் சில அறிவுசீவிகளால் ஆரம்பிக்கப்படும், ஆனால் விரைவில் அவை தனக்கென ஒரு பாதையை ஏற்படுத்திக்கொள்ளும்.  அது  மாதிரியான செயல்பாடுகளை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது. மேற்குலக அறிவியல் முன்னேற்றம் என்பது அதுபோன்றதுதான், யாராலும் அறிவியல் முன்னேற்றத்தை தடுக்க முடியாது. அதுபோல மதங்களும் அப்படியே. தாமாக சுய ஒழுங்குபடுத்தி செயல்படுகின்றன. யூதர்களின் வெற்றிக்கும் முன்னேற்றத்திற்கும் இதுபோன்ற பண்பாட்டு செயல்பாடுகளேக்  காரணம் [4].

நாம் அவ்வாறான சுயமாக செயல்படும் பண்பாட்டு அமைப்புகளை செயல்படுத்துவது மாபெரும் பலன்களைத் தரும்.  அதை எவ்வாறு மதசார்பற்ற முறையில் செயல்படுத்துவது என்று ஆராயவேண்டும். இவ்வுலகில் அனைத்தும் விதைகள் போன்றதுதான். சரியான சூழலை அமைந்துவிட்டால் அவை தானாக செழிக்கும். உயிர்கள் மற்ற கோள்களில் தோன்றாமல் பூமியில் தோன்றுவதற்குக் காரணம், பூமியில் அதற்கேற்ற சூழல் இருந்தது. யாரின் மேற்பார்வையும் இல்லாமல் உயிர்கள் பல்கிப்பெருகின.  அதுபோலத்தான் சமூகமும். நல்ல சூழலை அமைந்துவிட்டால் சமூகம் தானாக செழிக்கும்,  மேற்பார்வை கூடத்தேவையில்லை. அது தானாக தனக்கேற்ற தலைமையை உருவாக்கும், சிக்கல்களைத் தீர்க்கும், முன்னேற்றப்பாதையில் செல்லும். அதை யாராலும் தடுக்க முடியாது.

உசாத்துணை

  1. Meadows, Donella H. Thinking in systems: A primer. chelsea green publishing, 2008.
  2. Sam Harris, The case against Freewill, https://www.youtube.com/watch?v=zhO2lVQRT8Y&t=951s
  3. Deutsch, David. The beginning of infinity: Explanations that transform the world. Penguin UK, 2011.
  4. Harrison, Lawrence E. Jews, Confucians, and Protestants. Rowman & Littlefield, 2013.

 

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s