பகுதி 2: தமிழ்வழிக் கல்விக்கான ஒரு திட்டம்

முதற்பகுதியை படிக்காதவர்கள் அதை இங்கே படிக்கலாம்: https://sethusubbar.wordpress.com/2018/04/14/tamileducation/

அண்மையில்  நூலகநாளை முன்னிட்டு நண்பர்கள் தாங்களறிந்த சிறப்பான தமிழ்  நூல்களைப் பகிர்ந்தனர். ஒரு அதிர்ச்சியான விடயம் என்னவெனில், பல அருமையான அறிவியல் சார்ந்த நூல்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளன [1,2,3], ஆனால் பலருக்கும் அப்படிப்பட்ட நூல்கள் இருந்ததே தெரியவில்லை. பயனுள்ள நூல்கள் இருந்தும் எந்த பயனுமில்லாமல் நூலகங்களில் அடைந்து கிடக்கின்றன. ஏன் இந்த நிலைமை? பலர் இதற்கு மக்களிடம்  விழிப்புணர்வு இல்லை,  இந்நூல்களைப் பற்றி  அறிந்தால் படித்து பயனடைவார்கள் என்று கூறினார்கள். அது உண்மைதான், ஆனால் இதில் இன்னும் ஆழமான சிக்கல்கள் உள்ளன.  ஒரு சமூகத்தில் அறிவுப்பெருக்கம் என்பது ஒரு கூட்டு சமூக செயல்பாடு, தனிமனித செயல்பாடல்ல. அறிவுப்பெருக்கம் ஏற்பட சரியான சூழல் அமையவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், உலகிலுள்ள அனைத்து நூல்களையும் மொழிபெயர்த்து கொண்டு வந்தாலும், பெரிய பயன் இருக்கப்போவதில்லை. இக்கட்டுரையில் எது மாதிரியான சூழலை அமைத்தால், நமது தமிழ்வழிக் கல்வி அமைப்பு வேகமாக வளரும் என்பதனை ஆராய்வோம்.

உத்தி 11: சமூக வலைப்பின்னல்: தமிழில் எழுதப்பட்டுள்ள பல அருமையான அறிவியல் நூல்கள் இருப்பினும், மக்கள் பயன்படுத்தாமல் இருப்பதற்கு காரணம் அனைவரும் ஒரு சமூக வலைப்பின்னலில் (social network) இணைக்கப்படவில்லை. அறிவு என்பது சமூக வலைப்பின்னலில் பொதிந்து இருப்பது [4,5]. அணுவெடிப்புக்கு எப்படி ஒரு குறைந்தபட்ச எடையுள்ள யுரேனியம் தேவைப்படுகிறதோ, அதுபோல ஒரு குறைந்தபட்ச எண்ணிக்கையுள்ள அறிவியலாளர்களும் மாணவர்களும் ஒரு வலைப்பின்னலில் இருக்கவேண்டும். அவர்களுக்குள் சீரிய கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கவேண்டும். அவ்வாறு இருக்கும் பொழுதுதான் அணுவெடிப்பு போல அறிவுப்பெருக்கம் ஏற்படும். மாணவர்களும் மக்களும் பயனுறுவர், அறிவியலாளர்கள் மேலும் புதிய புதிய படைப்புகளைப் படைப்பர், வளர்ச்சி மிகவேகமாக இருக்கும், மேலும் வலைப்பின்னல் தானாக பெரிதாகிக்கொண்டே செல்லும். இப்பொழுது அந்த வலைப்பின்னல் இல்லாததனால் நாம் என்ன செய்தாலும் கிணற்றில் விழுந்த கல் போல எந்த ஒரு பெரியவினையும் நடப்பதில்லை. நாம் அமைக்க விரும்பும் கல்வி அமைப்பு  இந்த வலைப்பின்னலை கட்டி எழுப்பவேண்டும்.

உத்தி 12: ஊக்கம்:  நாம் ஆர்வலர்களால் (volunteers) நடத்தப்படும் ஒரு அமைப்பை நிறுவ  முயற்சிக்கிறோம். இதில் அடிப்படையான கேள்விகள் என்னவென்றால்: நாம் எவ்வாறு ஆர்வலர்களை ஈர்ப்பது, ஊக்குவிப்பது? எது அறிவியலாளர்களும் கண்டுபிடிப்பாளர்களையும் ஊக்குவிக்கிறது? இதைப்பற்றி ஓரளவு ஆராய்ச்சிகள் நடந்துள்ளன [6,7]. அடிப்படையில் மூன்று காரணிகள் உள்ளன: 1) புதிதாக கண்டுபிடிப்பதிலும், புதிரைத் தீர்ப்பதிலும், அறிவைப் பகிர்வதிலும்   உள்ள உற்சாகம் (puzzle solving, sharing knowledge) 2. பாராட்டுக்கள், பொன்னாடை (Ribbon) 3. பொருள் சேர்த்தல் (Gold). இந்த ஆராய்ச்சியில் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு  என்னவென்றால் யாரும் பொருளை மட்டும் நோக்கமாகக்  கொண்டு அறிவியிலிலோ கண்டுபிடிப்பிலோ ஈடுபடுவதில்லை. பொருள் சிறிய பங்கையே வகிக்கிறது. மற்ற இரண்டும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆர்வமும் பாராட்டுக்களும் இல்லாமல் கண்டுபிடிப்பு நடக்காது. காலகாலமாக பெரும்பாலான அறிவியலாளர்களை ஊக்குவிப்பது ஆர்வமும் பாராட்டுக்களுமே, வெறும் பொருளல்ல. பண்டைய தமிழ்ப்புலவர்கள் பெரும்பாலும் வறுமையிலே வாழ்ந்தவர்கள்தான். ஆனால் அப்புலவர்கள் அதி உயர்வான மதிப்புடன் நடத்தப்பட்டனர், அவர்களுக்கு அரசர்கள் பரிசில்கள் வழங்கி பெருமை செய்தனர். அரசன்  புலவருக்கு கவரி வீசிய கதையும் உள்ளது.  பெரும்பான்மையான அறிவைப் படைப்பவர்கள் எதிர் பார்ப்பது  அவர்களின் படைப்புக்கு ஏற்ற பாராட்டுக்களும் அங்கீகாரங்களுமே, பொருள் அதற்குப்பின்தான் வருகிறது.  உலகில் மிக உயர்வானதாகக் கருதப்படும் பரிசில்களில் நோபல் பரிசு இருப்பதில் வியப்பில்லை. இதை விட உயர்வானதாக ஒரு பரிசில்/பதக்கம் உள்ளது என்றால் அது ஒரு நாட்டின் மாவீரர்களுக்கு அளிக்கும் பதக்கங்கள் மட்டுமே. ஒரு நல்ல சமூகம் தனது மாவீரர்களை முதலில் போற்றும், அதன்பின் அதன் அறிவாளர்களைப் போற்றும். அதை உலகின் முதல் பத்து பரிசில்கள் பிரதிபலிக்கின்றன [8]. தற்பொழுது நமது சமூகத்தில் பொருள்தான் முதலில் நிற்கிறது,  அறிவாளர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இன்று பள்ளி,  கல்லூரி, பல்கலைக்கழகங்களில்  நடக்கும் ஊழல்கள், வெறும் பணத்தை வைத்து சிறந்த கல்வியை உருவாக்கி விடலாம் என்ற திட்டத்தின் விளைவாக உருவானதாகக் கூட இருக்கலாம். இது அறிவு வளர்ச்சிக்கு சாதகமானது இல்லை.  நாம் அறிவாளர்களை ஊக்குவிப்பதற்கு ஏற்றவாறு பண்பாட்டுச் சூழலை உருவாக்கவேண்டும்.  அறிவாளர்களை ஊக்குவிக்க அவர்களுக்கு கிடைக்கவேண்டிய பாராட்டுக்களையும், அங்கீகரிப்பையும்  அளிக்கவேண்டும்.. அதற்கு நான் வைக்கும் சில பரிந்துரைகள்:

 1. தமிழில் புதிய கருத்துக்களைக் கொண்டுவருவது ஒருவகையில் புதிதாக கண்டுபிடித்து அளிப்பது போன்ற உற்சாகத்தை கொடுப்பது. ஏற்கனவே இதைப் பலரும் செய்துகொண்டிருக்கின்றனர். இதுவே நான் எழுதுவதற்கும் முதன்மையான ஊக்கமாக இருக்கிறது. தற்பொழுது உள்ள நிலைமை எப்படி இருக்கிறதென்றால் அவ்வாறு புதிதாக கருத்துக்களை கொண்டுவந்தாலும் பயனிருக்குமா என்று எண்ணும்படியாக இருக்கிறது. ஏற்கனேவே எழுதப்பட்ட பல நூல்கள்  யாரும் படிக்காமல் நூலகங்களில் தூங்குகின்றன. இது புதிய அறிவைப் படைப்போர்க்கு உற்சாகமளிக்கும் விடயமல்ல. நாம் அமைக்கும் கல்வி அமைப்பு அனைத்து அறிவுசார் தமிழ்  படைப்புகளையும் முழுமையாக பயன்படுத்தும்படியாக கட்டமைக்கவேண்டும். இது எழுதுவோர்க்கும், எழுத முனைவோர்க்கும்   மேலும் ஊக்கமளிக்கும்.
 1. தமிழில் படைப்புக்களை உருவாக்குபவர்களுக்கும் தமிழ்வழிக் கல்வியளிக்கும் ஆசிரியர்களுக்கும் முதன்மையான மதிப்பும், பாராட்டுக்களும் இருக்கவேண்டும். ஒருவர் எவ்வளவு பெரிய உலகம் போற்றும் சாதனைகள் செய்தாலும், எவ்வளவு பெரிய பட்டங்கள் பதவிகள் வகித்தாலும், தமிழுக்கு எந்த பங்களிப்பும் செய்யாவிட்டால் அவரைப் புகழுதல் கூடாது. இது சிறப்பான சாதனைகள் படைத்தோரை  தமிழில் பங்களிக்க ஊக்குவிக்கும்.  நமது குறிக்கோள்களுக்கேற்ப பல அடுக்குகளாக பரிசில்கள்/பதக்கங்கள் உருவாக்கப்படவேண்டும். ஒரு புதிய கௌரவ அமைப்பை (honor system) உருவாக்கவேண்டும். இதை ஆரம்பத்தில் முழு சமூகத்தையும் ஏற்றுக்கொள்ள வைக்க முடியாது. ஆனால் நாம் அமைக்க இருக்கும் கல்வி அமைப்பிலும், மற்ற ஈடுபாடுள்ள கல்வி, அரசியல், பண்பாட்டு, பத்திரிக்கை அமைப்புகளையும் இந்த புதிய கௌரவ அமைப்பை அங்கீகரித்து செயல்படுத்த வைக்கவேண்டும்.
 1. ஐரோப்பாவில் நியூட்டனின் கண்டுபிடிப்புக்குப்பின் மாபெரும் அறிவியல் புரட்சி ஏற்பட்டது. அவருக்குப் பின் ஏராளமான அறிவியலாளர்கள் தோன்றி புதிய கண்டுபிடிப்புக்களுக்கு அவர்களிடம் மாபெரும் போட்டி நிலவியது. புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு பெரும்புகழ் கிட்டியது. அவர்கள் மறைந்தாலும், அவர்கள் அழியாப்புகழை அடைந்தார்கள். இது அவர்களுக்கு மாபெரும் ஊக்கமாக இருந்தது.

நாம் தமிழில் புதிய கருத்துக்களை கொண்டுவர அதுபோன்ற ஒரு போட்டியை  அறிவியலாளர்களுக்குள் உருவாக்கவேண்டும். இதற்கு சில வித்தியாசமான முறையில் சிந்திக்க வேண்டியிருக்கிறது. நியூட்டன் கண்டுபிடித்த விதிகளை “நியூட்டன் விதிகள்” என அழைக்கிறோம். ஆனால் நியூட்டன்  கண்டுபிடித்தாலும் அவ்விதிகளைத் தமிழில் கொண்டுவர நியூட்டன் எந்த முயற்சியும் செய்யவில்லை. தமிழர்களை பொறுத்தவரை மொழிச்சிக்கலால் நியூட்டனின் விதிகள் முழுமையாக புரியப்படாத ஒன்று. அதனால் நியூட்டனின் விதிகளை தமிழில் நூல்களை எழுதி சிறப்பான பாடத்திட்டத்தை உருவாக்குபவருக்கு மதிப்பளித்து, நியூட்டனின் விதிகளுடன் அவரின் பெயரையும் சேர்த்துக்கொள்ளலாம். உதாரணாமாக, ஈசுவரன் என்பவர் அவ்வாறான முயற்சியில் வெற்றி கண்டால், நமது கல்வி அமைப்பில் உள்ள பாடங்களில் “நியூட்டனின் விதிகள் (ஈசுவரன்)” என்று அழைக்கலாம். இவ்வாறு ஒவ்வொரு புது தத்துவங்களைத் தமிழில் கொண்டுவர பெருமுயற்சி செய்து வெற்றி கண்டவர்களின் பெயர்களில் அத்தத்துவங்களை அழைக்கலாம்.  இதை நாம் எழுதும்  நூல்கள், கட்டுரைகள், பத்திரிகைகள் என அனைத்திலும்  இவ்வுலகம் உள்ளவரை பின்பற்றப்படவேண்டும். தமிழில் எழுதுவோர் அழியாப்புகழை அடைவார்கள் என்ற நிலையை உருவாக்கவேண்டும். இவ்வாறு செய்தால் ஐரோப்பியர்களிடம் அறிவியலில் ஆரம்பகாலத்திலிருந்த போட்டியை நமது சமூகத்திலும்  அறிவியலாளர்களிடம் உருவாக்கிவிட முடியும். அறிவியல் தத்துவங்களின் பெயர்கள் என்பது ஒரு சமூகத்தால்  தீர்மானிக்கப்படுவது. அதனால் நமது சமூகத்திற்கு யார்  பங்களிக்கிறார்களோ, அவர்களின் பெயரை தத்துவங்களின் பெயர்களுடன் இணைத்து  பெருமைப்படுத்துவது  தவறல்ல,  இது நமக்குத் தேவையான ஒன்று.

 1. மேற்குலகின் அறிவியல் முன்னேற்றத்திற்கு இன்னொரு முக்கிய காரணம், ஒருவர் எழுதும் கட்டுரைகள் மற்றவர்களின் கட்டுரைகளை அடித்தளமாகக் கொண்டு எழுதப்படும். இதனால் இரு விளைவுகள் ஏற்படுகினறன:
 1. இது ஒரு தொடர்வினையை உருவாக்கி அறிவுப்பெருக்கம் ஏற்பட வழி வகுக்கிறது. இவ்வாறுதான் அறிவுக்கட்டுமானம் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. ஒரு வீடு கட்ட எப்படி கற்களை ஒன்றின்மேல் அடுக்கி இணைத்து காட்டுகிறோமோ, அதுபோலவே ஒரு சமூகத்தின் அறிவும் கட்டி எழுப்பப்பட வேண்டியது. அவ்வாறில்லாமல் தனித்தனியாக எழுதிக்கொண்டிருந்தால், நாம் இருக்கும் இடத்திலேயே சுற்றிக்கொண்டு இருப்போம், அறிவில் முன்னேற முடியாது [4]. நியூட்டன் தனது கண்டுபிடிப்புக்கு முக்கியக் காரணமாக் கூறுவதும் அவருக்கு முன்வந்த கண்டுபிடிப்பாளர்களையே:

If I have seen further it is by standing on the shoulders of giants”

 1. ஒருவர் மற்றொருவரின் கட்டுரையை மேற்கோள் காட்டுவதின் மூலம், மற்றவர்களின் படைப்புகளுக்கு மதிப்பளிக்கிறார், நன்றியை தெரிவித்துக் கொள்கிறார். மேலும் மேற்கோள்களின் எண்ணிக்கையை வைத்து எது சிறந்த படைப்புகள் என்பதனை ஓரளவு அறியவும் முடிகிறது. இந்த மேற்கோள் எண்ணிக்கையும் ஒருவகையான பாராட்டுதல் ஊக்கமளித்தல் என்று உணரவேண்டும்.

இச்செயல்முறைகளை நாம் தமிழிலும் கொண்டுவரவேண்டும். முதலில் Google Scholar போன்று தமிழ் படைப்புகளை அடுக்கிய ஒரு தகவல் தளத்தை உருவாக்கவேண்டும். அனைவரும் எழுதும் சீரிய கட்டுரைகள், தமிழில் முன்னதாக எழுதப்பட்ட கட்டுரைகளை மேற்கோளிட்டு  எழுதப்பட்டிருக்கவேண்டும். அவ்வாறு இல்லையெனில் அவற்றை ஏற்றுக்கொள்ளக்கூடாது. ஏதாவது மேற்கோள்கள் விடுபட்டிருந்தால் தெரிந்தவர்கள் திருத்தவேண்டும்.

( நான் என்னுடைய கட்டுரைகளில், தமிழில் எழுதப்பட்ட மற்ற கட்டுரைகளை பெரிதாக மேற்கோள் காட்டாததற்கு முக்கிய காரணம், எனக்கு அவற்றைப்பற்றிய அறிய தகவல்தளம் இல்லாதது. ஆனால் என்னிடமும் பிழை உள்ளது.  இவை சரி செய்யப்படவேண்டியது. என்னுடைய  கட்டுரைகளிலுள்ள  கருத்துக்களுக்கு உதவியாக ஒத்த தமிழ் நூல்கள் மற்றும் கட்டுரைகளை அறிந்தால் எனக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.)

உத்தி 13: அடிப்படையான அறிவியல் கருத்துக்கள் :  அறிவுப்பெருக்கத்திற்கு அடிப்படையாக குறைந்தபட்சத் தேவையான அடிப்படையான அறிவியல் கருத்துக்கள் சமூகத்தில் இருக்கவேண்டும். அவை:  தத்துவங்கள், அறிவியல் முறை,  கணிதம்,  அறிவு ஒரு ஒற்றைக் கட்டுமானம் என்பன. இந்த அடிப்படை கருத்துக்கள்  குறிப்பாக  புதிய அறிவைப் படைக்க நினைப்பவர்களிடம் பரவலாக இருக்கவேண்டும். இவை பெரும்பான்மையான அறிவியலாளர்கள் அறிந்ததே, ஆனால் பெரும்பாலான மாணவர்கள் அறியாதது. நாம் இவற்றை அடிப்படைக்  கல்வியாக கற்பிக்கவேண்டும். இது இன்னொரு கட்டுரையில் விளக்கமாக ஆராயப்பட்டுள்ளது [5].

முடிவுரை:

நாம் தமிழ்வழிக் கல்வியைப் பெருக்கி அறிவை வளர்க்க சரியான சூழலை அமைக்கவேண்டும். மாணவர்களையோ, பெற்றோர்களையோ, கல்வியாளர்களையோ குற்றம் சொல்வது தவறானது. இதைப் புரிந்துகொள்ள சர் கென் ராபின்சன் [9] ஒரு கதையைக் கூறுகிறார். கலிபோர்னியா மாநிலத்தில் சாவுப்பள்ளத்தாக்கு (death valley) என்று ஒரு இடம் உண்டு. அங்கு மழை பெய்வதே இல்லை என்பதால் எதுவும் முளைப்பதில்லை; அதனால் தான் அவ்விடத்திற்கு சாவுப்பள்ளத்தாக்கு என்ற பெயர். ஒரு முறை ஏழு அங்குலம் கனமழை பெய்தது. அதன் விளைவாக அந்தப்பள்ளத்தாக்கே ஒரு பசுமைக் கம்பளத்தை விரித்ததுபோல செடிகள் முளைத்து பூத்துக் குலுங்கின. விதைகள் முளைக்காமல் இருப்பது விதைகளின் குற்றமில்லை, அது சூழலின் குற்றம். கல்வியும் இதைப்போன்றதுதான் என்கிறார் ராபின்சன்.  இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களும் , சமூகம் உட்பட, செழிக்க சரியான சூழல் தேவை. தமிழ்வழிக் கல்வியும் அவ்வாறே. அதன் வளர்ச்சிக்கேற்ப சூழல் தற்பொழுது இல்லை. அதை உருவாக்குவதுதான் நமது முக்கிய குறிக்கோளாக இருக்கவேண்டும். தமிழ்வழிக் கல்விக்கு தடங்கலாக அரசுகளின் கொள்கைகள் இருந்தாலும், தமிழ்வழிக் கல்வி வளர அதற்கேற்ற சூழலை உருவாக்க நமக்குப்  போதிய சுதந்திரம் உள்ளது என்பது எனது கணிப்பு.  உண்மையில் நம்மால் அரசினைவிடவும் சிறப்பான கல்வியைக் கொடுக்க முடியும். அதற்கான சூழலை நாம் உருவாக்கவேண்டும். இக்கட்டுரையில் எதுமாதிரியான சூழல் ஆர்வலர்களை ஈர்ப்பதற்கும், அறிவுப்பெருக்கத்திற்கும் சாதகமாக இருக்கும் என்பதை ஓரளவு பார்த்தோம்.   இது முழுமையான ஆய்வு அல்ல. இதுபோக வேறுபல வகைகளிலும் சூழலை உருவாக்கலாம். பொதுவாக பண்பாடு என்பது அறிவு வளர்ச்சியில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. சிறிய இனமான யூதர்கள் பல நோபல் பரிசுகளை வாங்குவதற்கு அவர்களின் பண்பாடு முக்கியப் பங்கை வகிக்கிறது. ஒரு சமூகத்தின் பண்பாட்டை மாற்றுவது எளிதல்ல, ஆனால் நாம் உருவாக்கும் கல்வி அமைப்பில் சாதகமான பண்பாட்டு சூழலை அமைக்கலாம். இந்த பண்பாட்டு சூழலைப் பற்றி இன்னொரு கட்டுரையில் ஓரளவு விரிவாக எழுதியுள்ளேன் [5].

சிறிதுபேர் சேர்ந்து ஒரு நாட்டையே மாற்ற முடியுமா என்று கேட்கலாம். நவீன அறிவியலை உருவாக்க உழைத்தோர் தாமாக முன்வந்து உழைத்தவர்கள்தான்; யாரையும் அரசுகள் அவ்வாறு செய்யுமாறு பணிக்கவில்லை. உண்மையில் அவ்வாறு செய்தவர்களுக்கு தொல்லைதான் கொடுத்தது. உதாரணமாக கலிலியோ பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்று கூறியதற்கு சிறை பிடிக்கப்பட்டார். முடிவில் அவர்களின்  கண்டுபிடிப்புகள் பண்பாட்டை மற்றுமல்ல  உலகத்தையே மாற்றியிருக்கின்றன. அவ்வாறு மாற்றும் என்று அவர்களே நினைத்திருக்க மாட்டார்கள். அதுபோன்ற செயற்கரிய அறிவார்ந்த செயல்களை செய்வதற்கு நாம் முயலவேண்டும். நமது சமூகத்தில் அறிவார்ந்த மக்கள் ஏராளாமாக இருக்கிறார்கள். நாம் இணைந்து முயற்சித்தால் வெற்றி எளிதாகும்.

உசாத்துணை:

 1. ஜார்ஜ் கேமாவ் “எழுதிய ஒன்று இரண்டு  மூன்று முடிவிலி “ (one two three infinity). தமிழில் மொழியாக்கம்: ஜெயபாண்டியன் கோட்டாளம்.
 2. கதிரவன் கிருஷ்ணமூர்த்தி, அடிப்படை ரேடியோ தொடர்பாடல்.
 3. தமிழ்ப் பல்கலைக்கழகம், அறிவியல் களஞ்சியம்.
 4. Simonton, Dean Keith. Creativity in science: Chance, logic, genius, and zeitgeist. Cambridge University Press, 2004.
 5. சு.சேது, நாம் அறிவார்ந்த சமூகமாகமாறத் தேவையான அடிப்படை காரணிகள்.
 6. Lam, Alice. “What motivates academic scientists to engage in research commercialization:‘Gold’,‘ribbon’or ‘puzzle’?.” Research policy10 (2011): 1354-1368.
 7. Martín-Sempere, María José, Belén Garzón-García, and Jesús Rey-Rocha. “Scientists’ motivation to communicate science and technology to the public: surveying participants at the Madrid Science Fair.” Public Understanding of Science3 (2008): 349-367.
 8. Top Ten Most Prestigious Medals, https://www.historyandheadlines.com/top-ten-prestigious-medals/
 9. Sir Ken Robinson, How to escape education’s death valley, TED talk, https://www.youtube.com/watch?v=wX78iKhInsc

 

 

This entry was posted in கல்வி, சமூகம், தமிழ், தமிழ்வழிக் கல்வி, மொழி, Uncategorized. Bookmark the permalink.

1 Response to பகுதி 2: தமிழ்வழிக் கல்விக்கான ஒரு திட்டம்

 1. Pingback: மறுகல்வியமைப்பு – 0 இன்றையக் கல்விச்சூழல், “நீட்” … | ParamAnu

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s