தமிழ்வழிக் கல்விக்கான ஒரு திட்டம்

தாய்மொழி வழிக் கல்வியே மாணவர்களின் கல்விக்கு சிறந்தது என பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன[1]. அதுபோக தமிழ்வழிப் பள்ளிகளே இன்று தமிழர் என்ற அடையாளத்தை ஊக்குவிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆனால் பலகாலமாக ஆங்கிலவழிப் பள்ளிகளும், மத்திய பாடத்திட்டங்களும் பெரிய அளவில் தமிழ்ப்பள்ளிகளை அழித்து வருகின்றன. இன்று அவை இன்னும் வீரியத்துடன் செயல்படுகின்றன. அதனால் தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்கிறது.  மத்திய அரசின் வரலாற்றுப்பாடம் தேசிய அடையாளத்தை வளர்க்கவே செயல்படுமே அன்றி தமிழர் அடையாளத்தை முன் நிறுத்தாது.  தமிழ்வழிக் கல்வி என்பது மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு மட்டுமின்றி, ஒரு தேசியம் தனது அடையாளத்தை தக்க வைப்பதற்கும்  அடிப்படை என்பதை புரிந்துகொள்ளுதல் அவசியம். அதனால் தமிழ்வழிக் கல்வியை உருவாக்கும் சவாலில்  நாம் வெற்றிபெறுவது மிக முக்கியமானதாக இருக்கிறது,   ஆனால் இதுவரை அது நடக்கவில்லை. இக்கட்டுரையில் இந்த சவாலை எதிர்கொள்ள,  பரவலாக அறிவியலாளர்களால் ஏற்றுகொள்ளப்பட்ட கருத்துக்களையும் தந்திரமுறைகளையும் கொண்டு ஒரு புத்திசாலித்தனமான தந்திரத்தை  வடிவமைப்போம்.

தற்பொழுதைய நமது பொறிமுறைகள் நேரடியாக ஆங்கிலப்பள்ளிகளை எதிர் கொள்ளுதல் என்ற  உத்தியை அடிப்படையாக கொண்டது. நாம் தமிழ் பள்ளிகளின் தரத்தை உயர்த்திவிட்டால், நாம் ஆங்கிலவழிப் பள்ளிகளை வெற்றிகொண்டு விடலாம்  என்ற எண்ணம் நிலவுகிறது. இது தோல்வியடைவதற்கான வாய்ப்புகளே அதிகம். அதற்காக காரணங்கள் அனைவரும் அறிந்ததே:

  1. மேற்கல்விகள் மற்றும் வேலை வாய்ப்புகள் ஆங்கிலத்திலேயே உள்ளன, அதனால் ஆங்கிலவழி மாணவர்களுக்கு பெரிய அனுகூலம் உள்ளது.
  2. ஆங்கிலம் தமிழைவிட தகுதி  வாய்ந்தது என்று பரவலாக கருதப்படுகிறது. அவ்வாறு இருந்தால் தகுதி குறைவான மொழி பேசும் மக்கள், தகுதி கூடுதலான மொழிக்கு தாவுவார்கள் என்பது மொழி ஆராய்ச்சியாளர்கள் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை [2,3].

நாம் தமிழ்வழிக்  கல்வியின் தரத்தை உயர்த்தினாலும், நாம் மேலுள்ள இரண்டு காரணங்களையும் நம்மால் பெரிதாக மாற்ற முடியாது. அதனால் இந்த உத்தியின் மூலம் நம்மால் வெற்றி கொள்ள முடியாது அல்லது  வெற்றி கடினமானது; இதனால் நாம் வேறு உத்திகளையே அணுகவேண்டும். அதற்காக தமிழ் வழிப்பள்ளிகளை தரம் உயர்த்தக்கூடாது என்பதல்ல. அவற்றின் தரத்தை உயர்த்தவேண்டும், ஆனால் நாம் அதன் வழியாக மட்டும் சென்று வெற்றியடையப் போவதில்லை.

உத்தி 1: முதலில் நாம் எந்த இடத்தில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்த முடியுமோ அங்கு ஆரம்பிக்கவேண்டும் [4].

இந்த தந்திரம் தொழில் முனைவோருக்கு அடிப்படைப் பாடமாக சொல்லித்தரப்படுகிறது. ஆழ்ந்து நோக்கினால், இதன் அடிப்படையில்தான் உயிர்களே பரிணமிக்கின்றன . உயிர்களின் உச்ச வளர்ச்சியான மனிதன் நிலத்தில் ஆதிக்கம் செலுத்தினாலும்,  உயிர்களின் ஆரம்ப பரிணாமம் நீரில் தோன்றின, பின் நிலத்திற்கு வந்தன,  அதன் பின் வானிற்குத் தாவின, இனி விண்ணுக்கும் தாவும் [5]. எங்கு சாதகமான சூழல் நிலவுகிறதோ, அங்குதான் ஆரம்பிக்கவேண்டும். அதில் வெற்றிகண்டு ஆதிக்கம் செலுத்தியபின் மற்ற இடத்திற்குத் தாவலாம். டெசுலா ஊர்திகள்  முதலில் சொகுசு வாகனங்களாக அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றி கொண்ட பின்னரே, பொதுவான  வானகனங்களுக்குத் தாவியது.  மதங்களும் அவ்வாறே தாவுகின்றன. அடிமைப்பட்ட இசுரேலில் ஏசு போதித்தாலும், முடிவில் அதன் வெற்றிகரமான ஆரம்பம் ரோமாபுரியிலேயே ஆரம்பித்தது. ஒதுக்குப்புறமான பாலைவன அரேபியாவில் தோன்றிய இசுலாம் உலகம் முழுவது பரவியது. அவ்வாறே  நோய் கிருமிகளும் பரவுகின்றன. கண்காணாத கேள்விப்படாத இடத்தில் தோன்றும் கிருமிகளினால் உலகமே நடுங்குகிறது.  எங்கு நாம் வெற்றிபெற சாதகமான சூழ்நிலை இருக்கிறதோ,  ஆதிக்கம்  செலுத்தமுடிகிறதோ அங்குதான் ஆரம்பிக்கவேண்டும். அதன் பின்பு எங்கு வேண்டுமானாலும் தாவலாம்.

தற்பொழுது கல்விச் சாலைகள்  என்பது பெரும்பாலும் மனப்பாட சாலைகளாக மாறிவிட்டன. மனப்பாடம் செய்து அப்படியே எழுதுபவர்களுக்கு அதிக மதிப்பெண் கிடைக்கும். தானாக புரிந்து சொந்தமொழியில் எழுதினால் மதிப்பெண் குறையும்.  புரிதலுக்கும் படைப்புக்கும் எந்த ஒரு அனுகூலமும் மதிப்பெண்ணில் இல்லை. இதில் போய் நாம் போட்டி போடுவது என்பது  இழுக்கான செயலாகும். மேலும் அதில் போட்டியிடும் கல்வி நிறுவனங்களின் திறமை பல வருடங்களாக கூர் தீட்டப்பட்டுள்ளன. அவர்களுடன் போட்டி போடுவதும் முடியாத காரியம். அவர்களே இதில் ஆதிக்கம் செலுத்தட்டும். நாம் நமக்கென்று யாரும் போட்டிபோடாத தனிப்பாதையை அமைப்போம். சுருக்கமாக அடிப்படையில் நாம் செய்யவேண்டியது என்னவென்றால், ஒரு தமிழ் வழிக்கல்வி அமைப்பை உருவாக்கவேண்டும். இது மாலைநேர அல்லது பகுதிநேர அடிப்படையில் இயங்கும்.  அது இரண்டு செயல்பாடுகளை மையமாக கொண்டிருக்கும்.

  1. கல்வி: எந்த தமிழ்வழி பள்ளியிலோ, ஆங்கிலவழிப் பள்ளியிலோ படிப்பவர்கள் யார் வேண்டுமானாலும்  நமது அமைப்பில் இணையலாம். ஆனால் அவர்களுக்குத் தமிழில்தான் நமது கல்வி அமைப்பில் கற்பித்தல் நடைபெறும். கல்வி அமைப்பின் தரம் எப்படி இருக்குமென்றால், அதில் இணைந்து படிக்கும் மாணவர்கள் சிறந்த சாதனையாளர்களாக உருவாவார்கள். அவர்களின் சாதனை,  நம் அமைப்பில் இணையாத மாணவர்களை விட  அதிகமாக இருக்கும்.  அவர்கள் அவ்வாறு இணையாவிட்டால், கல்வி வேலைவாய்ப்பு போட்டிகளில் பின் தங்குவார்கள் என்ற நிலைமையை உருவாக்கவேண்டும். இந்த ஒரு ஒற்றைக் காரணம் அனைத்து மாணவர்களையும், ஆங்கிலவழி மாணவர்கள் உட்பட, நமது தமிழ்வழிக் கல்வி அமைப்பில் இணைவதற்கு காரணமாக அமையும். அனைவருக்கும் தமிழ்வழிக் கல்வி என்பது சாத்தியமாகும்.  இது தமிழ் வழிக்கல்விக்கு எதிரான மேற்கூறிய  முதல் காரணத்தை உடைக்கிறது. தமிழ் வழியில் நமது அமைப்பில் படிப்பதன் மூலம், மாணவர்களின் வெற்றி உயர்கிறது. கீழுள்ள படத்தை பார்க்கவும்
  2. பண்பாடு: இந்த இரண்டாவது செயல்பாடு மாணவர்களை மட்டுமில்லாமல் பொது மக்களையும் இணைத்து செய்லபடவேண்டும். படிக்கும் மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் தமிழர் என்ற அடையாளத்தை அவர்களிடம் உருவாக்கி அதை அவர்களின் உணர்வுகளுடன் பிணைக்கவேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களிடம் தமிழ் ஆங்கிலத்தைவிட முக்கியம் உயர்ந்தது  என்ற எண்ணம் தோன்றும், அவர்கள் மொழி வளர்ச்சிக்கு இணைந்து உழைப்பார்கள். இது ஏனென்றால், தமிழ் அடையாளம் ஒருவரின் சுயத்தில் அங்கமாக இருக்கும் பொழுது அவர்களால் தமிழை  கீழாக கருத முடியாது. அவ்வாறு செய்தால் அவர்கள் தங்களையே இழிவாகாக் கருதுவதாகும். அவ்வாறு  இழிவாகக் கருதுவது நடக்க முடியாத காரியம் [20]. இது தமிழ் வழிக்கல்விக்கு எதிரான மேற்கூறிய  இரண்டாவது காரணத்தை உடைக்கிறது.

மொத்தத்தில் இவ்வமைப்பு கல்வியையும் பண்பாட்டையும் உள்ளடக்கிய அமைப்பு.  இக்கட்டுரையில் எவ்வாறு சிறந்த கல்வி அமைப்பை உருவாக்குவதென்பதை முதன்மையாக ஆராய்வோம். பண்பாட்டு உத்திகள் தனியாக ஆராயப்படவேண்டியது.

உத்தி 2: ஓர் உயிரின் வெற்றிக்கு இறுதியில் அடிப்படையாக இருப்பது, அவ்வுயிரிடம்  அதன்  வாழும் சூழலுக்கு ஏற்ப அறிவு உள்ளதா இல்லையா என்பது மட்டுமே [6]. இது ஒரு செல் உயிரிலிருந்து, மனிதன், மந்தம் சமூகம், நிறுவனங்கள் வரை பொருந்தும். தாவரங்கள், விலங்குகள் அறிவை உணர்வதில்லை, ஆனால் இந்த அறிவு அதன் மரபணுக்களில் இருந்து அவற்றை இயக்குகிறது. நாம் அறிவை உணர்கிறோம் கற்கிறோம், அதுதான் வித்தியாசம்.

அரசுகள் ஒரு குறுகிய பாடத்திட்டத்தை வைத்து மனப்பாட மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு பள்ளி வெற்றியை தீர்மானிக்கும் சூழலை உருவாக்கியிருக்கிறது. இதை நம்மால் மாற்ற முடியாது. ஆனால் இறுதியில் கல்லூரி படிப்பில் வெற்றியோ, வேலை வாய்ப்பு வெற்றியோ, வாழ்க்கையில் சாதனைகளோ இந்த மனப்பாட மதிப்பெண்களை நம்பி இல்லை.  நாம் எது மாதிரியான அறிவை அளித்தால், மாணவர்களின் வாழ்க்கையில் வெற்றியை அடைய உதவுகிறதோ அதில் நாம் கவனம்  செலுத்தவேண்டும். நாம் உருவாக்க நினைக்கும் தமிழ் வழிக்கல்வி என்பது இதுபோன்ற அறிவை அளிப்பதிலே தனித்துவம் பெற்றதாக இருக்கவேண்டும்.

உத்தி 3: நாம் எது மாதிரியான அமைப்பை உருவாக்கவேண்டும், எவ்வாறு அவற்றை நடத்துவதற்கான வருமானத்தைப் பெறுவது, அது எவ்வளவு காலத்திற்கு செயல்படவேண்டும்  போன்ற கேள்விகள் முக்கியமானவை. நாம் உருவாக்கும் கல்வி-பண்பாட்டு அமைப்பு  இலாப நோக்கமற்ற,  தமிழினம் உள்ளவரை என்றென்றும்  தொடர்ந்து நீங்காத சேவை செய்யும் அமைப்பாக இருக்கவேண்டும்.  அப்படியென்றால், எது மாதிரியான அமைப்புகள் அதுபோன்று  இலாப நோக்கற்ற முறையில் பெரிய அளவில் நீடித்து நிற்கின்றனவோ அதன் நிர்வாக அடிப்படையிலேயே கட்டியமைக்கவேண்டும்.  இலாப நோக்கில் செயல்படும் நிறுவனங்கள் நீண்ட காலம் தாக்குப்பிடிப்பதில்லை, அவை காலம் மாறும்பொழுது அழிந்து  விடுகின்றன. வரலாற்றில் நீண்டகாலம் தாக்குப்பிடித்து நிற்பவை மத நிறுவனங்கள் தான். ஏன் அவர்களால் முடிகிறது? இத்தனைக்கும் அவை பகுத்தறிவிற்கு ஒவ்வாத கருத்துக்களையே பரப்பி வருகின்றன. அவர்களின் வெற்றிக்கு அடிப்படையாக நான் கற்றறிந்த நூல்களிருந்து அறிவது [7, 8]:

  1. அவர்கள் ஆர்வலர்களை (volunteers) நம்பி செயல்படுகிறது, இலாப நோக்கில் அல்ல. பொறுப்பில் உள்ளவர்களுக்கு சந்நியாசம் எனக் கடுமையான விதிகளை உருவாக்கி, ஆர்வமுள்ளவர்களை மட்டுமே ஈர்க்கிறது.
  2. அதில் பங்கேற்கும் மக்களுக்கு, அவர்கள் அதில் பயன்பெறுகிறார்கள் (உண்மையோ பொய்யோ அது வேறு) என்று உணரவைக்கிறது.
  3. அவர்கள் அனைவரும் பொதுவான நம்பிக்கையும் வாழ்க்கைக்கான பாதையையும் கொண்டவர்கள். அவர்களுக்குள் அதீத ஒத்துழைப்புடன் செயல்படுபவர்கள்.
  4. மக்களின் ஈடுபாடும் ஆர்வலர்களின் ஈடுபாடும் உணர்வுப் பூர்வமானது, பகுத்தறிவினால் உருவாவது அல்ல. ஒருவர் உணர்வுப்பூர்வமாக ஈடுபடும் பொழுதுதான், அவர்களின் செயல்திறமும் ஈடுபாடும் அதிகமாக இருக்கும்.
  5. பெரும்பாலான மதங்கள் கீழிருந்து மேலாக (bottom-up) செயல்படுகிறது. மேலிருந்து கீழாக சிலமதங்கள் செயல்பட்டாலும், அவற்றில் பெருமளவு ஊழல்கள் நடைபெற்றுள்ளன. கீழிருந்து மேலாக செயல்படுபவை வீரியமுடன் செயல்படுகிறது. யூதர்கள் இவ்வாறாக கீழிருந்து மேலான செயல்படும் பண்பாட்டு அமைப்புகள் மூலமே அவர்கள் இன்றும் அழியாது இருக்கிறார்கள். அவை செயல்படுவதற்கான வருமானத்தை மக்களிடமிருந்தே பெறுகின்றன, அரசிடமிருந்து அல்ல.

நமது கல்வி பண்பாட்டு அமைப்பு மத சார்பற்ற பண்பாட்டு அமைப்பாக பகுத்தறிவுடன் செயல்படும் படியாக  இருக்கவேண்டும். மத அமைப்புகளின் வெற்றிக்கு அடிப்படையாக இருக்கும் நிர்வாக அமைப்புகளை, செயல் முறைகளை  நாம் பயன்படுத்துவதில் தவறில்லை. ஏன் நாம் நவீன நிர்வாக உத்திகளைப் பயன்படுத்தாமல், மத நிறுவனங்களின் நிர்வாக உத்தியை பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி எழும். உண்மை என்னவென்றால் எதிர்கால நவீன நிர்வாக உத்திகள் (Future of management) இவ்வாறு சுயமாக  இயங்கும் மத மற்றும் தொண்டு நிறுவனங்களின் உத்தியை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கின்றன. இவை எதிர்கால நிர்வாக முறைக்கான முன்னோடிகள் என்கிறார் நிர்வாகத்தில் புலமை பெற்ற பீட்டர் டிரக்கர் [9]. இதை மேலும் விரிவாக அடுத்து கீழ்வரும்  உத்திகளில் காண்போம்.

நாம் உருவாக்க நினைக்கும் கல்வி-பண்பாட்டு அமைப்புகள் தாம் இயங்குவதற்கான வருமானத்தை தாமாக மக்களிடம் உற்பத்தி செய்யும் திறன் இருக்கவேண்டும். அவற்றால் முடியவில்லை என்றால், அது மக்களுக்குத் தேவையான கல்வியை அளிக்கவில்லை என்றே பொருள் கொள்ளவேண்டும். இவை இலாப நோக்கம் கொண்ட இயக்கங்களாக இருக்கக் கூடாது, ஆனால் சுயமாக  இயங்குவதற்கான வருமானத்தை பெருமளவுக்கு திறன் இருக்கவேண்டும். இது நாம் பயனுள்ள வேலையை செய்கிறோமா இல்லையா என்பதற்கான அளவுகோல். மக்களையும் ஆர்வலர்களையும்  உணர்வுகளால் இணைத்து செய்லபடவேண்டும் அதுதான் வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும். சொந்தக் காலில் உணர்வுகளுடன் நிற்கும் அது போன்ற இயக்கங்கள்தான் வளரும், மற்றவை காலத்தால் அழியும்.  இலாப நோக்கான செயல்பாடுகள் மற்றும் உணர்வுகளற்ற செயல்பாடுகள்  நீண்ட நாட்கள் தாக்குப்பிடிக்காது. யூதர்கள் இதுபோன்ற உத்தியுடன்தான்  செயல்படுகின்றனர். நாம் அவர்களைவிட சிறப்பாக பகுத்தறிவுடன்  செயல்படுவதை ஒரு குறிக்கோளாகக் கொள்ளவேண்டும்.

உத்தி 4: கல்வி  என்பது தண்ணீரை ஒரு கோப்பையிலிருந்து இன்னொரு கோப்பைக்கு ஊற்றுவது போல அல்ல. அறிவு என்பது நெருப்பு போல, அது   உரையாடல்கள், கேள்விகள், உணர்வுப்பூரவமான ஈடுபாடுகள் மூலம் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தாவுகிறது என்கிறார் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பிளேட்டோ [10]. தற்பொழுது உள்ள வகுப்பறை கல்விமுறை 19 -ஆம்  நூற்றாண்டில் பிரசியா நாட்டில் நல்ல படை  வீரர்களை உருவாக்குவதற்காக ஆரம்பிக்கப் பட்டது. அம்முறையே இன்னும் நடைமுறையில் இருக்கிறது. நாம் புது கல்வி முறைகளுக்கு மாறவேண்டும், பல சோதனைகள் செய்து பார்க்கவேண்டும். ஆசிரியர்கள் அதிகாரிகளாகவும்,  மாணவர்கள்  படை வீரகளைப்போல உள்ள நிலையை மாற்றவேண்டும்.

மனித மூளை என்பது சமூக சூழலுக்கு ஏற்றவாரு தகவமைக்கப் பட்டுள்ளது. அதனால் ஒருவரால்  மணிக்கணக்காக உட்கார்ந்து கதைகளை கேட்க முடியும், தொலைக்காட்சியை பார்க்க  முடியும். ஆனால் ஒரு மணிநேரம் ஏரணத்தைக் கொண்டு ஒரு அறிவியல் கருத்தை விளக்கினால், ஓடி விடுவார்கள். நமது மூளை ஏரணத்திற்காக வடிவமைக்கப்பட வில்லை. அறிவியலை கதைகளைக் கொண்டு விளக்குவதை விட சிறந்த முறை இல்லை  என்கிறார் நோபல் பரிசு பெற்ற ஸ்டீவன் வெய்ன்பெர்க் [11]. அறிவியல் கருத்துக்கள் தோன்றிய கதைகள் சற்றும் குறைந்தவையல்ல. இதுபோன்று புதிய முறைகளைக் கொண்டு கல்வியை மாணவர்களிடம் கொண்டு செல்லவேண்டும். நமது செயல்முறைகள் கல்வியை எவ்வாறு சிறப்பாக கற்பிப்பது என்ற குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

உத்தி 5: கல்வி என்பது ஒரு பண்பாட்டு செயல்பாடு.  2300 ஆண்டுகளுக்கு முன் இருந்த ஏதென்சில் கிரேக்கர்களின்  கணிதம், அறிவியல், தத்துவங்கள் என அறிவுசார் படைப்புகள் அபாரமானவை. அவர்கள் எழுதிய நூல்களே ஐரோப்பியாவில் 17-ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்த அறிவியல் புரட்சிக்கு அடித்தளமாக அமைந்தது.  பண்டைய ஏதென்சின் மொத்த மக்கள் தொகையே ஒரு லட்சம், அதில் வெறும் 30,000 பேரே குடிகள். எப்படி இவ்வளவு குறைந்த மக்களால் அறிவில் பல சாதனைகள் படைக்க முடிந்தது என்ற கேள்வி எழுகிறது. அதே போல இன்று யூதர்களும் அறிவியல் முன்னேற்றத்தில் பாரிய சாதனைகள் புரிந்துள்ளனர். உலகில் 0.2% மக்கள் தொகை கொண்ட யூதர்கள் 22% நோபல் பரிசுகளை வென்றுள்ளனர். ஏன் மற்ற மக்களால் முடியவில்லை?  இதற்கு அவர்களின் பண்பாடுதான் பெரிய காரணம், மரபணுக்கள் அல்ல [12, 13]. கிரேக்க பண்பாட்டை ஆராய்ந்த தத்தவ ஆசிரியர் ரிபெக்கா கோல்ட்ஸ்டீன் (Rebecca Goldstein) [10] கூறுவது என்னவென்றால், அவர்களின் சாதனைகளுக்கு  “புகழைத் தேடுதல்” என்ற பண்பாட்டு விழுமியம்தான் அடிப்படைக் காரணம் என்கிறார்.  மனித வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்குவதற்கு அவர்கள் கண்ட விடை: மனிதன் பெரும்புகழ் உடையவனாக வாழவேண்டும், ஒருவன் மறைந்த பின்னரும் மக்கள் அவனைப்பற்றி பலகாலம் உயர்வாக பேசும்படியான வாழ்க்கையை வாழவேண்டும், அவன் மக்களின் மனதில் நீங்க இடம் பெறும்படியான வாழ்க்கை இருத்தல் வேண்டும்  என்பதே.  அது அறிவாளியாக சிறந்த பேச்சாளராக, விளையாட்டு வீரராக, போர் வீரராக, அழகானவராக, செல்வந்தராக என மக்களுடைய கவனத்தை ஈர்க்கும் எது வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த பண்பாட்டு விழுமியம் மக்களிடையே பெரிய போட்டியை உருவாக்கி அவர்களை மாபெரும் சாதனைகள் படைக்க அடிப்படையாக இருந்தது. அதுபோலவே  யூதர்களின் பண்பாட்டில் அறிவைப் படைத்தல்  அதி உயர்வாக காணப்படுகிறது [14]. அதுபோலவே சீன, சப்பானியர்கள், கொரியர்களின் முன்னேற்றத்திற்கு காரணமாக அவர்களின் பண்பாடு முக்கிய காரணியாக கருதப்படுகிறது [14].ஒரு பண்பாட்டின் விழுமியங்கள் புதிய அறிவை உருவாக்குவதற்கு ஏற்றவாறு  இருக்கும்பொழுதே அங்கு அறிவு மேன்மை அடையும். நமது பண்பாட்டிலும் இவ்வாறான அறிவைப்பெறுதல் ஒரு காலத்தில் மேன்மையாக கருதப்பட்டது. அதன் விளைவாக உருவான நூல்களே இன்று நாம் போற்றி புகழும் சங்க இலக்கியங்கள். இன்று அந்த பண்பாடு இல்லை.

பண்பாட்டு அம்சங்களை  மக்கள் அகப்படுத்த வேண்டும் அதுதான் நிரந்தரமாக இருக்கும், அவற்றை முன்னேற்றத்திற்கு ஒரு கருவியாகப் (Instrumental values) பார்க்கக் கூடாது. உதாரணமாக கல்வியை பொருளாதார  வளர்ச்சிக்கு  ஒரு கருவியாகப் பார்த்தால், பொருளாதாரம் வளர்ந்தவுடன் அச்சமூகத்தின் கற்றல் வளர்ச்சியடையாமல் நின்று போகும். கற்றலை மக்கள் அகப்படுத்தி அவர்களின் ஒரு தன்மையாகப் பார்க்கவேண்டும் என்று  கிரொன்டோனா அவர்கள்  கூறுகிறார் [12].

நாம்  உருவாக்க நினைக்கும் கல்வி நிறுவனங்கள், அறிவு வளர்ச்சிக்கு உகந்த பண்பாட்டு விழுமியங்களை மாணவர்களிடம் அகப்படுத்தவேண்டும். அவ்வாறான பண்பாட்டு விழுமியங்கள் நமது பண்பாட்டிலிருந்து எடுக்கப்படுவேண்டும். அப்பொழுதுதான் அதற்கு செயல்திறன் அதிகமாக இருக்கும். உதாரணாமாக சப்பானின் அறிவியல் முன்னேற்றத்திற்கு  அவர்களின் பண்பாட்டு விழுமியங்கள் முக்கிய பங்கு வகித்தன. ஆழமான அறிவியல் கருத்துக்களை கொண்ட ஒரு சப்பானியரை உற்று நோக்கினால், அவருக்குள் ஒரு சாமுராய் தெரிவார் என்கிறார் நிடோபே [15]. நம்மை உற்று நோக்கினால் எது தெரியவேண்டும் என்பது நாம் சிந்திக்க வேண்டியது. அதுதான் நமது சாதனைகளின் அடிப்படையாக இருக்கும். யூதர்களைப் போல, பண்டைய கிரேக்கர்களைப் போல நாம் சாதனைகள் படைப்பதற்கு,  நல்ல பண்பாட்டு விழுமியங்கள் அடிப்படையானது. இன்றைய  கல்வி நிறுவனங்கள் அதை அளிப்பதில்லை.  ஆனால் நம்மால் முடியும்,  நமது பண்டைய வரலாற்று பண்பாட்டில் அது உள்ளது, அதை மீண்டும் உயிர்பிக்கவேண்டும்.  அதில்தான் நமது வெற்றிக்கான வேர் உள்ளது.

உத்தி 6: எப்படி நமது போட்டியாளர்களை விட சிறந்த கல்விமுறையை உருவாக்குவது?  எந்த ஒரு போட்டியென்றாலும் அளவிலும்  சிக்கலிலும் (size and complexity) சமமாக போட்டியிடா விட்டால் தோல்வி ஏற்பட வாய்ப்புகள் அதிகம் [16]. இதைப் போர் உதாரணம் கொண்டு விளக்கலாம். மரபுவழிப்படைகளை நேரடியாக மரபு வழியாக எதிர்கொள்ள, எதிரிப்படைகளுக்கு சமமான எண்ணிக்கையிலும் ஆய்த தளபாட வகைகளிலும் சமமாக  எதிர்கொள்ளவேண்டியது அவசியம். இல்லையென்றால் தோல்வி ஏற்படும். ஆனால் அதே மரபுவழிப்படையை கொரில்லா படைத்தாக்குதல் நடத்தும் பொழுது, கொரில்லாப்படைகள் சிறு குழுக்களாகப் பிரிந்து பல்வேறு விதமாக தாக்குதல் நடத்துகிறார்கள். மரபுவழிப் படைகளின் அளவும் ஆயுத தளபாடங்களும் பயனற்றுப்போகின்றன. கொரில்லாப் படைகள் சிக்கலான முறையில் செயல்படுகின்றன, ஆனால் அந்த சிக்கலுக்கு ஏற்றவாறு மரபுவழிப்படைகள் மாற முடியாததால் தோல்வி அடைகின்றன [16].

கல்வியில் அரசின் செயல்பாடுகள் மரபுவழித் தாக்குதல் போன்றானது. பாடத்திட்டத்தை ஒரு சிறுகுழு உருவாக்கும். அதைப்பெரிய படைகொண்டு குழந்தைகளுக்கு கற்பிக்கும். அதன் அளவு பெரியது, ஆனால் சிக்கலானது இல்லை [16]. ஒரு பாடத்தின் சிக்கல் என்பது ஒரு 12 பேரின் அறிவுதான் இருக்கும், அதுவும் மிகச்சிறந்த அறிவாளர்களால் உருவாக்கப்பட்டது என்று கூற முடியாது.. நாம் அவர்களைவிட சிறப்பாகக் கல்வியை கொண்டு செல்ல கொரில்லா தாக்குதல்போன்று சிக்கலான முறையில் செயல்படவேண்டும். அவர்கள் 12 பேரைக்கொண்டு ஒரு பாடத்திட்டத்தை உருவாக்குகிறார்கள் என்றால் நாம் 100 வல்லுநர்களைக் கொண்டு பல்வேறு பாடத்திட்டங்களை உருவாக்கவேண்டும்.அவர்கள் மாத ஊதியம் வாங்குபவர்களின் மூலம் செயலாற்றுகிறார்கள், நாம் கொரில்லாப் படையை போன்று  ஈடுபாடுள்ள ஆர்வளர்களை பயன்படுத்த வேண்டும்.  ஏற்கனவே பல பட்டங்கள்  பெற்று உலகம் முழுவது உள்ள ஆர்வலர்கள் இணையத்தில் அறிவியல் கருத்துக்களை எழுதி வருகிறார்கள். பெரிய படை ஏற்கனவே இருக்கிறது. அதை ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டியதுதான் மிச்சம். நண்பர் கதிரவன் கிருஷ்ணமூர்த்தி ஏற்கனேவே ஆர்வலர்களைக் கொண்டு அறிவியல் சார்ந்து ஒரு நூலை உருவாக்கும் முயற்சியில் முன்னோடியாக ஈடுபட்டுள்ளார். இதுபோன்ற செயல்களை நாம் விரிவாக்கவேண்டும்[21].

ஆர்வலர்களின் உழைப்பின் முன் எப்பொழுதும் ஊதிய  பெறுவோரின் உழைப்பு தோற்கும். உதாரணமாக ஆர்வலர்களால் நடத்தப்படும் விக்கிப்பீடியா என் இவ்வளவு பயனுள்ளதாக அதே நேரம் இலவசமாகவும் இருக்கிறது ? அதை ஏன் வணிக நிறுவனங்களால் காசு வாங்கியும் போட்டிபோட முடியவில்லை? இந்த இணைய யுகத்தில் ஆர்வலர்களால் இணைந்து உருவாகும் சிக்கலான படைப்புகளை, நிறுவனங்களால் உருவாக்க முடியாது, அதிலும் இலவசமாக தரவே முடியாது. அதேபோல் ஆர்வலர்களால் உருவாக்கப்பட்ட லினக்சு(Linux) கணினி இயக்குதளம்  விண்டோஸ் இயக்குதளத்திற்கு போட்டியாகவும் சிறந்ததாகவும் இருக்கிறது. விக்கிப்பீடியாவும், லினக்சும் நமது செயல்பாட்டிற்கு முன்னோடி உதாரணங்கள் [17,18].

பாடம் சொல்லித்தரும் ஆசிரியர்களும்  ஆர்வலர்களால் நடத்தப்படவேண்டும். இன்று பொதுவாக நமது வாகனம் பழுதடைந்தால்,  நான்கு  பழுதுசெய்வோரை விசாரித்து, எவர் சிறந்தவரோ அவரிடம் பழுது பார்ப்போம். ஆனால் நமது குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தரும் ஆசிரியரை நாம் தேர்ந்தெடுப்பதற்கு உரிமை இல்லை. இந்நிலமை நாம்  உருவாக்கும் அமைப்பில் மாற்றப்படும். பல ஆர்வலர்கள் பாடம் சொல்லித்தருவார்கள், அதில் மாணவர்களும் பெற்றோர்களும் தங்களுக்கு விருப்பமானவர்களை தேர்வு செய்யலாம். ஆசிரியர்களுக்கான தொடர் பயிற்சிகளும் அளிக்கப்படவேண்டும். ஆர்வலர்கள் கிடைப்பார்களா என்று கேட்கலாம். இன்று அமெரிக்காவில் நடக்கும் குழந்தைகளுக்கான தமிழ் பள்ளிகள் பெரும்பாலும் ஆர்வலர்களாலேயே நடத்தப்பட்டு வருகின்றன. நாம் செயல்பட ஆரம்பிக்கும் பொழுது உண்மையான நிலவரம் தெரியும். அதன்படி உத்திகளை அமைக்கலாம். பள்ளிகள் பகுதிநேர மாலை பள்ளிகளாக இருப்பதால், ஆர்வலர்களை ஈர்க்கும் வாய்ப்புகள் அதிகம். ஆர்வலர்கள் கிடைக்காவிட்டால், ஓரளவிற்கு ஊதியம் அளித்து ஈடுபாடுள்ளவர்களை பணிக்கு அமர்த்தலாம்.

உத்தி 7:  அமைப்பு நிர்வாகமுறை மேலிருந்து கீழாக வழிநடத்தப் படாமல், கீழிருந்து  மேலாக வழி நடத்தப்படவேண்டும்  . இதுதான் எதிராக்கால நிர்வாகத் தத்துவம் [17]. பல அறிவுசார் படைப்புகளை உருவாக்கும் நிறுவனங்கள் இந்த முறைக்கு மாறி வருகின்றன. உதாரணகளாக  Google, Whole foods, WL Gore எடுத்துக் கொள்ளலாம்.  மேலும் தன்னார்வ இலாப நோக்கமற்ற இயக்கங்களும் இதே நிர்வாக முறையை பின்பற்றுகின்றன.  நிர்வாகத்தில் புலமை பெற்ற டிரக்கர் அவர்கள், தன்னார்வ இலாப நோக்கமற்ற முறையில் இயங்கும் நிறுவனங்கள் எதிர்கால  நிர்வாக முறைக்கான பாதையை மற்றவர்களுக்கு உருவாக்கி வருகின்றன என்கிறார் [9].

பழைய மேலிருந்து கீழான நிர்வாக முறை தொழிற்சாலையில் மொத்த உற்பத்தியை பெருக்குவதற்காக உருவாக்கப்பட்டது, இம்முறை அறிவுசார் துறைக்கு பொருந்தாது. அறிவை அடித்து  வாங்கமுடியாது,  அது தானாக சுதந்திரமாக உருவாக்கப்படுவது.  அறிவுசார் உற்பத்தியை பெருக்குவதற்கு, ஒருவருக்கு தான் விரும்பும் படைப்பை படைப்பதற்கான சுதந்திரம் இருக்கவேண்டும். அவருக்குப் பிடிக்காத எந்த ஒரு வேலையையும் அளிக்கக்கூடாது. அவர் என்ன செய்ய விரும்புகிறாரோ, யாருடன் இணைந்து செய்ய விரும்புகிறாரோ, எப்படி செய்ய விரும்புகிறாரோ அப்படியே செய்யலாம். அறிவு உற்பத்தியில் பெரும்பாலான முயற்சிகள் தோல்வி அடையும், அதனால் தோல்வி என்பது குற்றமில்லை. Google நிறுவனத்தில் 80% முயற்சிகள் தோல்வி அடைகிறது. வெற்றி என்பது  தோல்வியில்லாமல் சாத்தியமில்லை, ஆனால் தோல்வியடையும் சோதனைகள் சிறிதாகவும் விரைவாகவும் நடக்கவேண்டும் [17]. இதுபோன்ற ஒரு எதிர்கால நிர்வாக முறையை நோக்கி நாம் செயல்படவேண்டும்.   நமது அமைப்பு ஆர்வலர்களால் நடத்தப்படுவதால் இது மேலும் எளிதாகிறது. தலைமை வழிநடத்தல் என்று ஒன்று இல்லாமல் நாமாக சுயமாக ஒழுங்குபடுத்தி  செயல்படலாம். மற்ற நிறுவனங்கள் செய்கிற சோதனைகளிலிருந்து கற்று, நாமும் பல சோதனைகள் செய்து நமக்கேற்ற நிர்வாக முறையைக் கண்டறியவேண்டும்.

உத்தி 8 : ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆர்வம் உண்டு, திறமை உண்டு. அவர்களுக்கு எதில்  ஈடுபாடு உள்ளதோ அதில் அவர்கள்  கற்கும்படியாக நமது கல்வி அமைப்புமுறை பல்வகையான  பாடத்திட்டங்களை, அறிவியல், கணிதத்திலிருந்து,   கவிதை, இசை,  அரசியல்  வரை அளிக்கவேண்டும்.   அனைத்தையும்  நேரடியாக ஆசிரியரைக் கொண்டு அளிக்க வாய்பில்லாததால், எளிதான இணையவழியைக் கொண்டு செயல்படலாம். ஒரு சமூகத்திற்கு அனைத்து வகையான திறமைகளும் தேவைப்படுகின்றன. அவற்றை நாம் பூர்த்தி .செய்யவேண்டும். இப்பொழுதுள்ள அரசின் கல்வி முறை அதில் தோல்வியடைகிறது.

உத்தி 9: ஒரு சமூகத்தின் பாரிய முன்னேற்றங்கள் சராசரி கல்வியறிவின் உயர்வினால் ஏற்படுவதல்ல. பாரிய முன்னேற்றங்களை உருவாக்குவது, ஒரு துறையில் சிறந்து விளங்குபவர்களினால் தான் என்கிறது ஆராய்ச்சி முடிவுகள் [19]. இன்று  நாம் கைகளில் இருக்கும் பழைய தமிழிலக்கியங்களை உருவாக்கியவர்கள் சிறந்தவர்கள்,  சாதாரணமானவர்கள் அல்ல. இன்று நாம் சராசரி கல்வியறிவில் அந்த கால மக்களைவிட உயர்ந்திருந்தாலும், தமிழில் அவர்கள் செய்த படைப்புகளை நம்மால் ஏன்  செய்ய முடியவில்லை? இதுபோலவே அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களும் வெகு சிலரால் உருவாக்கப்பட்டு அனைவருக்கும் பயனுள்ளதாக அமைகிறது. அதனால் நமது கல்வியமைப்பு, அதிசிறந்தவர்களை உருவாக்குவதில் முனைப்புடன் செயல்படவேண்டும். இதில் தோல்வியுற்றால், நாம் செய்வதில் பெரிய பயன் ஏதும் இல்லை.  எவ்வாறு யூதர்கள் அறிவில் சிறந்தவர்களை உருவாக்குகிறார்களோ, அதற்கு இணையாக மட்டுமில்லாமல்  அனைத்து துறைகளிலும்  நாம் செயல்படவேண்டும்,

ஒரு  சமூகத்தின் முன்னேற்றத்திற்கு காலத்திற்கேற்றவாறு  புதிய தத்துவங்களையும் சித்தாந்தங்களையும் உருவாக்கும் மேதைகள் அவசியம். மேற்குலக முன்னேற்றத்திற்கு அவர்களின் தத்துவமேதைகள் முக்கிய பங்கு வகித்தார்கள். அதுபோன்று தத்துவமேதைகளை உருவாக்குவது நமது ஒரு அடிப்படை குறிக்கோளாக இருக்கவேண்டும்.

நமது அமைப்புமுறை பள்ளி மாணவர்களுக்கு என்று மட்டும் இருக்கவேண்டிய அவசியமில்லை.  தொழில் முனைவோரிலிருந்து, அரசியல், தத்துவங்கள் வரை ஈடுபாடுள்ளவர்களுக்கு கற்பித்தல், கற்றல், ஆராய்ச்சி செய்தல் என்று  பல செயல்களில் ஈடுபடலாம்.

உத்தி 10:   நல்ல திட்டத்தின் ஒரு தன்மை என்னவென்றால், அது ஒரு கல்லில் பல மாங்காய்களை  அடிக்கும் . இத்திட்டம் கல்வியை மட்டும் வளர்ப்பதல்ல, ஒரு இன  அடையாளத்தை காக்கிறது, தான் உற்பத்தி செய்யும் சிறந்த  மாணவர்களைக் கொண்டு பொருளாதாரம், அறிவியல், அரசியல் வரை அனைத்து துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. மக்களை  சாதிமத பிரிவினைகளை கடந்து தமிழர்  உணர்வை அளித்து ஒற்றுமைப் படுத்துவது.

நல்ல திட்டத்தின் இன்னொரு  தன்மை என்னவென்றால், அதன் எதிர்கால வளர்ச்சிக்கு பெரிய அளவு வாய்ப்புகள் இருக்கும். ஆரம்பத்தில் சில இடங்களில் ஆரம்பிக்கப் பட்டாலும், ஒரு சில வருடங்களில் தமிழகம் முழுவது அனைத்து ஊர்களிலும் ஆர்வலர்களால் பரவலாக விரிவாக்கப்படும். இங்கு குறிப்பிட்டுள்ள குறிக்கோள்களில் வெற்றியடைந்தால், தரம் வாய்ந்த ஆராய்ச்சி பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள்  நிறுவப்படும்.  மேலும் இத்திட்டங்கள் உலகலாவ தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் செயல்படுத்த முடியும். அதுபோக மற்ற அழிந்து வரும் மொழிகளைக் காப்பதற்கும், இத்திட்டங்களை அந்த இனங்களிடம் செயல்படுத்தலாம். இது ஒரு உலகளாவிய அமைப்பாக அந்தந்த  பண்பாட்டிற்கு ஏற்றவாறு  செயல்படுத்த முடியும்.

முடிவுரை:

இக்கட்டுரையில் தமிழ்வழிக் கல்வியை வளர்க்கவும் அதே நேரத்தில் இன   அடையாளத்தை காப்பதற்கும் உகந்த ஒரு பண்பாட்டு அமைப்பை உருவாக்குவதற்கான உத்திகளைப் பார்த்தோம். இது ஒரு புதியமுறை அல்ல. ஏற்கனேவே யூதர்கள் இதுபோன்ற உத்திகளை பயன்படுத்தியே தங்களது இனத்தை காத்ததுடன் இல்லாமல், அறிவுசார் படைப்புகளிலும், பொருளாதார முன்னேற்றத்திலும் முன்னணியில் இருக்கிறார்கள்.  இக்கட்டுரையில் உள்ள திட்டங்களை ஒரு முதல் முயற்சியாகவே கொள்ளவேண்டும். இது ஒரு முடிவான திட்டமல்ல, இது ஒரு ஆரம்பமே. இதில் ஈடுபாடுள்ளவர்கள் ஆராய்ந்து மேலும் திட்டத்தை செம்மை படுத்தலாம், அல்லது வேறு மாற்று திட்டங்களையும் முன் வைக்கலாம். நாம் இணைந்து ஆராய்ந்து அனைவரின் அறிவையும்  சேர்த்து செயல்படுத்தப்பட வேண்டிய செயல்பாடு இது. நம்மை முடிவில் வெற்றிகொள்ள வைக்கப்போவது அறிவு மட்டுமே. நாம் எவ்வாறு நமது சூழலுக்கேற்று  செயல்படுவதற்கான அறிவைப்பெறுகிறோம் என்பதை பொருத்தே நமது வெற்றி  அமையும். இது இயற்கையின் விதி [6]. அதனால்  ஈடுபாடுள்ள அறிவாளர்களை எல்லாம் ஒன்று திரட்டி இணைந்து செயல்படுவது  அதிமுக்கியமாகிறது. அவ்வாறு செய்தால் வெற்றி நமது  கைக்கெட்டும் தொலைவிலேயே உள்ளது.

 

உசாத்துணை:

  1. Bühmann, Dörthe, and Barbara Trudell. “Mother tongue matters: Local language as a key to effective learning.” France: UNESCO (2008).
  2. Crystal, David. Language death. Ernst Klett Sprachen, 2000.
  3. Abrams, Daniel M., and Steven H. Strogatz. “Linguistics: Modelling the dynamics of language death.” Nature6951 (2003): 900-900.
  4. Thiel, Peter A., and Blake Masters. Zero to one: notes on startups, or how to build the future. Crown Pub, 2014.
  5. Maynard Smith, John, and Eors Szathmary. “The origins of life: from the birth of life to the origin of language.” (1999).
  6. Plotkin, Henry C. Darwin machines and the nature of knowledge (pp. xv, 240, 244). Harvard University Press, 1997.
  7. Stark, Rodney, and William Sims Bainbridge. The future of religion: Secularization, revival and cult formation. Univ of California Press, 1985.
  8. Galanter, Marc. Cults: Faith, healing and coercion. Oxford University Press, 1999.
  9. Drucker, P. F. “The essential Drucker: The best of sixty years of Peter Drucker’s ideas on management.” (2001).
  10. Goldstein, Rebecca. Plato at the googleplex: Why philosophy won’t go away. Vintage, 2015.
  11. Weinberg, Steven. Facing up. Harvard University Press, 2003.
  12. Harrison, Lawrence E., and Samuel P. Huntington. Culture matters: How values shape human progress. Basic books, 2000.
  13. Harrison, Lawrence E. The central liberal truth: How politics can change a culture and save it from itself. Oxford University Press, 2006.
  14. Harrison, Lawrence E. Jews, Confucians, and Protestants. Rowman & Littlefield, 2013.
  15. Low, Morris. Science and the Building of a New Japan. Springer, 2005.
  16. Bar-Yam, Yaneer. Making things work: solving complex problems in a complex world. Knowledge Industry, 2004.
  17. Hamel, Gary. “The future of management.” Human Resource Management International Digest6 (2008).
  18. Surowiecki, James. The wisdom of crowds. Anchor, 2005.
  19. Ridley, Matt. The evolution of everything: how new ideas emerge. HarperCollins, 2015.
  20. Herriot, Peter. Religious fundamentalism and social identity. Routledge, 2014.
  21. Krishnamurthi, Kathiravan, ஒரு புதிய முயற்சி, https://www.facebook.com/kathir.krishnamurthi/posts/10212460239273429
This entry was posted in அறிவியல், அறிவு, கல்வி, தமிழ், தமிழ்வழிக் கல்வி, மொழி. Bookmark the permalink.

8 Responses to தமிழ்வழிக் கல்விக்கான ஒரு திட்டம்

  1. மிக அருமையான கருத்துகள்! மிக்க நன்றி

    Like

  2. Pingback: தமிழ்வழிக் கல்விக்கான ஒரு திட்டம் – பகுதி 2 | Sethu's Blog

  3. sundararajulu says:

    Nalla thittam .

    Liked by 1 person

  4. Pingback: யார் ஆட்சி செய்வது? | Sethu's Blog

  5. pa.umasankar says:

    அய்யா வணக்கம் உரை அருமை ,என் நீண்டநாள் எண்ணத்தின் நிறைவு வடிவம் மிக்க நன்றி பல என் பேசி 9629173553

    Liked by 1 person

  6. Sethu says:

    நன்றி ஐயா

    Like

  7. Pingback: யூதர்களின் கல்விமுறையிலிருந்து தமிழ்க்கல்விக்கான சில உத்திகள் | Sethu's Blog

Leave a comment