மொழி வளர்ச்சிக்கு எது முக்கியம்?

1. கருத்து (அ): ஒரு மொழி வளர, அது பொருளாதாரத்தில் அதனுடன் போட்டி போடும் மற்ற மொழிகளுக்கு இணையாக அல்லது அவற்றைவிட அதிக பலம் கொண்டதாக இருக்கவேண்டும் என நம்பப்படுகிறது [1]. இது உண்மையா?

2. கருத்து (ஆ): மொழி அழிவைப் பற்றிய அடிப்படை ஆராய்ச்சிகள் கூறுவது என்னவென்றால், மக்களின் பார்வையில் எந்த மொழி அதிகத் தகுதி கொண்டதோ, அதனை நோக்கி மக்கள் நகர்வார்கள் [2,3]. அவர்களின் தாய்மொழியின் தகுதி குறைவாக இருந்தால், காலப்போக்கில் மக்கள் அதிலிருந்து வெளியேறுவர், முடிவில் அம்மொழி அழியும். இதிலிருந்து பொருளாதார பலம் குன்றிய மொழிகளின் தகுதி குறைவாக இருப்பதால், அம்மொழிகள் அழிகின்றன என்று கருதலாம். இது கருத்து (அ)-ஐ சரி என்று ஆமோதிக்கிறது.

3. ஆனால், அழிந்துபோன யூதர்களின் ஈப்ரு மொழி எவ்வாறு மீண்டும் உயிர் பெற்றது? அழிந்த மொழிக்கு பொருளாதார பலம் பூச்சியம் தானே! நாடில்லாமல், மொழியில்லாமல், நாடெல்லாம் விரட்டியடிக்கப்பட்ட யூதர்கள் எப்படி அனைத்தையும் மீட்டார்கள்? யூதர்களின் உதாரணம் மேலுள்ள இரண்டு கருத்துக்களையும் தவறாக்குகிறதா?

4. அடிப்படை உண்மையாக கருத்து (ஆ) கூறுவது என்னவென்றால், ஒரு மொழி வாழ அதன் தகுதி உயர்வாக இருக்கவேண்டும். அந்த உயர்வு பொருளாதார வழியாக வரலாம் அல்லது வேறு வழியாகவும் வரலாம். அதனால் கருத்து (அ)-ஆன பொருளாதார உயர்வு என்பது மொழியை வளர்க்க ஒரு வழிதானே ஒழிய அதுதான் ஒரே வழி அல்ல. அப்படியென்றால் யூதர்கள் தங்களின் மொழியை எவ்வாறு அதிகத் தகுதி கொண்டதாக மாற்றினார்கள்?

5. யூதர்களால் அவர்கள் ஈப்ரு மொழியை பேச்சுவழக்கில் மறந்தாலும், அது சமய மொழியாக பின்பற்றப்பட்டது. முக்கியமாக நாம் பார்க்கவேண்டியது என்னவென்றால் ஈப்ருவை அவர்களால் பேச முடியாவிட்டாலும் அவர்களின் அடையாளத்தில் அங்கமாக இருந்தது. அதனால் அவர்கள் ஈப்ருவை உயர்வாகக் கருதினர். இத ஏனென்றால் சமூக அடையாளம் ஒருவரின் சுயத்தின் அங்கமாகிவிடுவதால், அந்த அடையாளத்தை இழிவாகக் கருதினால் தன்னை இழிவாகக் கருதுவதாகும், இது நடக்கமுடியாத காரியம். ஒருவரின் அடையாளத்தில் அங்கமாவது, அனைத்தையும் விட உயர்வாகவே கருதப்படும். அதனால் காலம் அவர்களுக்கு சாதகமாக வாய்த்த பொழுது அவர்களின் மொழியை மீண்டும் உயிர்ப்பித்துவிட்டார்கள். அதுபோல இறந்துபோன வடமொழி மீண்டும் உயிர்பிக்கப்படலாம். [4]

6. ஒரு மொழி இறக்க அதன் கீழான தகுதி எவ்வாறு காரணமாகிறதோ, அதுபோல இறந்துபோன மொழியை உயிர்ப்பிக்க அதன் மேலான தகுதி போதுமானது. முடிவில் ஒருமொழியின் வாழ்வையும் இறப்பையும் தீர்மானிப்பது அதன் தகுதி மட்டுமே. அந்த தகுதி அடையாளம் மூலம் வரலாம் அல்லது பயன் மூலம் வரலாம். யூதர்கள் அந்நிய அரசுகளின் கீழ் வாழ்ந்தாலும், அவர்கள் தங்கள் அடையாளத்தை கற்பிப்பதற்கென்று பரவலாக்கப்பட்ட சமூக அமைப்புக்களை உருவாக்கினார்கள். இது அன்றுமுதல் இன்றுவரை நடந்து வருகிறது. அவர்களின் யூத அடையாளத்தை அவர்களின் குழந்தைகளிடம் வலுவாக அகப்படுத்தி உணர்வுபூர்வமாக ஆக்கிவிடுகிறார்கள். அந்நிய அரசுகள் சட்டங்கள் மூலம் ஒரு மொழியின் பொருளாதார வளர்ச்சியை முடக்கி விடலாம், ஆனால் ஒருவரிடம் உணர்வுப்பூர்வமாக உள்ள அடையாளத்தை அழிக்க முடியாது. இதனால்தான் யூதர்கள் இன்றும் இருக்கிறார்கள்.

7. இன்று தமிழை வளர்க்க பாடுபடுபவர்களை இயக்குவது அவர்களின் பொருளாதார பயன் அல்ல. அவர்களின் தமிழ் அடையாளம் தான். அது தமிழ்வழி பயின்றது மூலமாக வரலாம், அல்லது வேறு பண்பாட்டு செயல்பாடுகளினால் வந்திருக்கலாம். அவ்வாறு அடையாளத்தை உள்வாங்கியவர்கள், மொழியின் இறப்பை தன்னில் ஒரு பங்கை இழப்பதுபோன்றே உணர்வர். இதுதான் அவர்களை பொருளாதாரத்தில் நட்டமானாலும், மொழிக்காக உழைக்க வைக்கிறது, உயிரையும் கொடுக்க வைக்கிறது. அவர்களின் செயல்களை எவ்வளவு பொருள் கொண்டும் ஈடு செய்ய முடியாது. உணர்வுகள் எளிதாக பணத்தை தோற்கடிக்கும். இன்று தமிழை பொருளாதாரத்தில் அதிக பயனுள்ளதாக மாற்ற போராடுபவர்களை இயங்குவதே உணர்வுகள் தான். அடையாளம் பொருளாதாரத்தை விட மொழி வளர்ச்சிக்கு மிக அடிப்படையானது. இன்று அரசியலிலிருந்து மொழி வரைக்கும் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளுக்கு நாம் மக்களிடம் தமிழர் என்ற அடையாளத்தை கற்பிக்காதுதான் முக்கிய காரணம் என நான் நினைக்கிறேன்.

8. அடையாளம் எங்கிருந்து வருகிறது? கிரெயிலாக் (Greylag Goose) என்ற ஒரு வாத்தினத்தில், புதிதாக பிறந்து ஒரு வாத்துக்குட்டி முதன் முதலில் எந்த விலங்கை காண்கிறதோ, அதுதான் அதன் தாய் என்று நினைத்து பின் செல்லுமாம். அது அதன் தாயின் அடையாளத்தை ஒருமுறைதான் பெரும், அதன்பின் அதை மாற்ற முடியாது[8]. மனிதனும் தனது சமூக அடையாளம் ஓரளவு இதுபோன்றதுதான். ஒரு மனிதன் தனது சமூக அடையாளத்தை இளவயதில் வளரும்பொழுது பெறுகிறான் என  ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அவன் வளர்ந்து பெரியவனான பின் அவனது அடையாளத்தை மாற்றுவது எளிதல்ல. அவன் சார்ந்த சமூகம் அவனை விலக்கி வைத்து கொடுமைப்படுத்தினால் அவன் மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் சாதாரணமாக நிகழ்வதல்ல [5,6,7].

9. இன்று தமிழர் என்ற அடையாளத்தை ஊக்குவிப்பதில் பெரும்பங்கு தமிழ்வழிப் பள்ளிகளே. ஆனால் ஆங்கிலவழிப் பள்ளிகளும், மத்திய பாடத்திட்டங்களும் பெரிய அளவில் தமிழ்ப்பள்ளிகளை அழித்து வருகின்றன. மத்திய அரசின் வரலாற்றுப்பாடம் தேசிய அடையாளத்தை வளர்க்கவே செயல்படுமே அன்றி தமிழர் அடையாளத்தை முன் நிறுத்தாது. மேலும் ஆங்கில வழியிலோ, மத்திய பாடத்திட்டத்திலோ படிக்கும் மாணவர்களுக்கு தமிழுணர்வை வளர்க்க நாம் முயற்சிகள் செய்வதாகத் தெரியவில்லை.

10. நாம் நமது அடையாளத்தை குழந்தைகளிடம் மையப்படுத்தி விட்டால், ஆங்கில மொழி பாடத்திட்டமோ, மத்திய பாடத்திட்டமோ அவர்களை ஒன்றும் செய்யமுடியாது. இதைப்போன்ற உத்தியைக் கொண்டே யூதர்கள் பலநாடுகளில் வாழ்ந்தாலும் அவர்கள் அடையாளத்தை இன்றுவரை பாதுகாத்து வருகின்றனர். தமிழர் என்ற உணர்வை மக்களிடம் வளர்க்க பரவலாக்கப்பட்ட அமைப்புகள் உருவாக்கப்படவேண்டும். இது மக்களால் அரசுகளின் துணையின்றி தாமாக நடத்தப்படவேண்டும். யூதர்கள் எவ்வளவு வீரியமுடன் செய்கிறார்களோ அதைப்போல செய்யவேண்டும், ஆனால் மத சார்பற்றவாறு செய்யவேண்டும். இதுதான் இன்று நாம் எதிர்நோக்கும் பல சிக்கல்களுக்கு தீர்வு. இதை நாம் செய்யாவிட்டால், மத அடிப்படைவாதிகளும் அந்நிய அரசுகளும் அவர்கள்தான் தாய் என்று நம் மக்களை கிரெயிலாக் வாத்துக்குட்டியைப் போல அவர்கள் பின் இழுத்துச் சென்றுவிடுவார்கள். ஏற்கனவே பலபேர் சென்றுவிட்டார்கள். இனியாவது விழித்துக்கொள்வோம்.

11. சமூக அடையாளம் என்பது உலகில் மனிதர்கள் அனைவருக்கும் இயற்கையாக உருவாவது. அனைத்து நாடுகளும் அரசுகளும், குழுக்களும் அந்த அடையாளத்தை வளர்க்கின்றன பாதுகாக்கின்றன. அதுபோல நாமும் நமது அடையாளத்தை பாதுகாத்தல் தவறல்ல. ஆனால் பாதுகாக்கிறோம் என்று கூறி மக்களை அந்நியப்படுத்துவதோ இனவெறியில் ஈடுபடுவதோ தவறானது. நமது அடையாளத்தில் இணைந்துகொள்ள வருபவர்கள் அனைவரையும் இணைத்துக்கொள்ள வேண்டும். வேறு அடையாளத்தைக் கொண்டவர்களுடன் ஒத்துழைத்து நட்பு பேணவேண்டும். மத சார்பற்ற முறையில் இயங்கவேண்டும். அதுவே நல்ல நெறி. நல்ல நெறிகளின் தன்மை என்னவென்றால் அவை சிறந்த உத்திகளும் கூட. மக்கள் திடீரென்று நல்லவர்கள் ஆவதனால் நெறிகள் தோன்றுவது அல்ல. பரிணாமப் போரில் வெற்றியடைய அந்நெறிகள் உதவியதானாலேயே நல்ல நெறிகளாக நிற்கின்றன. நெறிகளை மனிதனின் பரிணாமபோரின் விளைவாக வருகின்ற உத்திகளாகவே அறிவியலாளர்கள் பார்க்கிறார்கள் [9].

1. Economic success drives language Extinction, http://www.bbc.com/news/science-environment-29037168 .
2. Crystal, David. Language death. Ernst Klett Sprachen, 2000.
3. Abrams, Daniel M., and Steven H. Strogatz. “Linguistics: Modelling the dynamics of language death.” Nature6951 (2003): 900-900.
4. Keren, Michael. The pen and the sword: Israeli intellectuals and the making of the nation-state. Westview Pr, 1989.
5. Wade, Nicholas. The faith instinct: How religion evolved and why it endures. Penguin, 2009.
6. McLean, Kate C., and Moin U. Syed, eds. The Oxford handbook of identity development. Oxford Library of Psychology, 2014.
7. Herriot, Peter. Religious fundamentalism and social identity. Routledge, 2014.
8. Gell-Mann, Murray. The Quark and the Jaguar: Adventures in the Simple and the Complex. Macmillan, 1995.
9. Singer, Peter. The expanding circle: Ethics, evolution, and moral progress. Princeton University Press, 2011.

This entry was posted in அறிவு, சமூகம், தமிழ், மொழி, Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s