சமூகத்தைப் பற்றி நமது சிந்தனைகளில் உள்ள தவறான கருதுகோள்கள்

நமது சமூகத்திலுள்ள சிக்கல்களைத் தீர்க்க நாம் ஆராயும் பொழுது, நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ சில கருதுகோள்களை நாம்  உண்மை என்று எடுத்துக்கொண்டு சிக்கல்களுக்குத் தீர்வுகாண முயல்கிறோம். அவ்வாறான கருதுகோள்கள்  தவறாக இருந்தால், நமது தீர்வுகள் முற்றிலும் தவறாகவோ அல்லது நாம் எதிர்பார்க்கிறப் பலனைத் தராமல் வீரியமற்றதாகவோ இருக்கும். சமூகம் போன்ற சிக்கலான அமைப்புகளில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பொதுவான வழிமுறைகளை ஆராய்ந்த டோனெல்லா மெடோஸ் (Donella Meadows) [1] அவர்கள் பன்னிரண்டு செயல்பாடுகளை (leverage points) முக்கியத்துவத்தின்படி வரிசையாக அடுக்குகிறார். அவற்றில் முதல்  இரண்டு அதிமுக்கிய செயல்பாடுகளாக அவர் கருதுவது கருதுகோள் மாற்றங்கள் (paradigm changes).  இருப்பதிலேயே கருதுகோள்கள்தான் அதிமுக்கியம் என்கிற பொழுது, நமது கருதுகோள்களை ஆராயவேண்டியது அவசியமாகிறது. அதை நோக்கிய  ஒரு முயற்சிதான் இக்கட்டுரை. இக்கட்டுரையில் இரண்டு முக்கியமான கருதுகோள்களை ஆராய்வோம்.

தவறான கருதுகோள் 1:  ஒரு சமூகம் தன்னைக் காத்துக்கொள்ள பலமானத் தலைமையுடன் மேலிருந்து கீழாக கட்டமைக்கப்பட வேண்டும்.

இருப்பதிலேயே இக்கருதுகோள்தான் அதிக பாதிப்பை உருவாக்குவது. அனைவரும் பொதுவாக ஏற்றுக்கொள்வது என்னவெனில் அறிவான ஒன்றை உருவாக்க அறிவாளி ஒருவர் தேவை என்பது. அதிலிருந்து வருவதுதான்  “ஒரு பலமான சமூகத்தை உருவாக்க பலமான தலைமை தேவை” என்ற கருதுகோள். ஆனால் அதி புத்திசாலியான மனிதனை யார் உருவாக்கினார்கள்?  இடார்வின் அவர்கள் பரிணாம தத்துவத்தின் மூலம் அனைத்து உயிரிகளும் தாமாக கீழிருந்து மேலாக (bottom-up) எந்த  ஒரு அறிவாளியின் தேவையுமில்லாமல் பரிணமித்தது என்கிறார். அது உண்மையென்றால் ஏன் ஒரு பலமான சமூகத்தைக் கட்டமைக்க பலமான தலைமை தேவை? உண்மையில் அது தேவையில்லை.  மக்களால் தாமாக ஒன்றிணைந்து பலமான சமூகத்தை உருவாக்கி  அதன் பின்பு  ஒரு பலமான தலைமையையும் உருவாக்க முடியும். இது கீழிருந்து மேலாக செயல்படும் முறை.  இதைப்புரிந்துகொள்ள சில உதாரணங்களைப் பார்ப்போம்,

 1. ஒரு குழந்தை எவ்வாறு கருப்பையில் ஒரு செல்லில் ஆரம்பித்து முழு குழந்தையாக வளர்கிறது என்பது கீழிருந்து மேலுக்கு ஒரு சிறந்த உதாரணம். யார் ஒரு செல்லிலிருந்து முழு குழந்தையை உருவாக்குகிறார்? யாருமில்லை! மரபணுக்களில் முழு குழந்தையின் உடலுக்கான ஒரு முழு திட்டமில்லை. மரபணுக்களில் உள்ள விதிகள் என்னவென்றால் ஒரு செல் அதனை ஒட்டிய செல்களுடன் எவ்வாறு இணைத்து செயல்படவேண்டும் என்ற விதிகள் மட்டுமே உள்ளன [2]. இந்த விதிகள் செல்களைப் பெருக்கி இணைத்து முழு உடலையும் யாரின் மேற்பார்வையும் இல்லாமல் கட்டியமைக்கிறது. குழந்தையின் மூளை குழந்தையை உருவாக்கவில்லை. கீழிருந்து மேலான விதிகள்தான் குழந்தையை உருவாக்குகிறது.
 2. உயிர்கள் இவ்வாறு கீழிருந்து மேலாக வளர்ச்சியடைந்தாலும், அவ்வுயிர்களின் செயல்பாடுகள் கீழிருந்த மேலாகவோ அல்லது மேலிருந்து கீழாகவோ இருக்கலாம். உதாரணங்களாக எட்டுக்கால் பூச்சியையும் நட்சத்திர மீனையும் எடுத்துக் கொள்வோம். இவை இரண்டும் ஒரு குழந்தையைப்போல கீழிருந்து மேலாக வளர்ச்சியடைகிறது, ஆனால் செயல்பாடுகளில் வித்தியாசமுள்ளது. ஒரு எட்டுக்கால் பூச்சியின் காலை உடைத்தால், மீண்டும் கால் வளர்வதில்லை. அது தனது தலையை இழந்தால் இறந்துவிடும். இது ஏனென்றால் அதன் செயல்பாடுகள் மேலிருந்து கீழாக கட்டமைக்கப் பட்டுள்ளன[3]. ஆனால் நட்சத்திரமீனின் செயல்பாடுகள் கீழிருந்து மேலாக கட்டமைக்கப்பட்டுள்ளன. அதன் காலை உடைத்தால், உடைந்த இடத்தில் கால் மீண்டும் முளைக்கும். மேலும் உடைந்துபோன கால் முழு நட்சத்திர மீனாக வளர்ச்சியடையும். ஒரு உயிர் கீழிருந்து மேலாக கட்டியமைக்கப்பட்டு செயல்படும்பொழுது, அதனை அழிப்பது அவ்வளவு எளிதல்ல. இதுபோன்ற தன்மையை எதிர்-நொறுங்கும் (Anti-fragile) தன்மை என்கிறார் நசீம் நிக்கலஸ் தலீப்[4]. நட்சத்திர மீனின் காலை நாம் உடைப்பதின் மூலம் அதனை நாம் பலமிழக்க செய்யமுடியவில்லை. மாறாக பலமான இரண்டு நட்சத்திர மீன்களை உருவாக்கியிருக்கிறோம்.  மேலிருந்து கீழான முறை நொறுங்கும் தன்மையுடையது.  எட்டுக்கால் பூச்சி ஒரு உதாரணம்.
 3. ஒரு சமூகத்தை கீழிருந்து மேலாகவோ அல்லது மேலிருந்து கீழாகவோ கட்டியமைக்கலாம். இவ்விரண்டு முறைகளையும் உதாரணங்களைக் கொண்டு ஒப்பீடு செய்வதன் மூலம் நன்றாக விளங்கிக் கொள்ளலாம்.
 • மேலிருந்து கீழான சமூகத்தில்/நாட்டில், தலைமை வீழ்ச்சியடைந்தால், அந்நாடு அழியும். அம்மக்கள் அடிமையாகி காலப்போக்கில் கரைந்து காணாமல் போவார்கள். உதாரணங்களாக பண்டைய எகிப்திய  மற்றும் ரோமாபுரி பேரரசுகளை எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் பலமான தலைமையைக் கொண்டிருந்தார்கள், ஆனால் அவர்கள் பலம் குன்றியபின் அவர்கள் நாகரீகம் காணாமல் போய்விட்டது. மேலிருந்து கீழாக கட்டப்படும் நாடுகள்/சமூகங்கள் இவ்வாறான நொறுங்கும் தன்மையைக் கொண்டுள்ளன.
 • மக்களால் உருவாக்கப்பட்ட கம்யூனிசப் புரட்சி கீழிருந்து மேலாகக் கட்டப்பட்டாலும், அப்புரட்சி உருவாக்கிய நாடுகள் மேலிருந்து கீழாக செயல்படுகின்றன. உதாரணமாக சோவியத் ரசியாவை எடுத்துக்கொள்ளலாம். சோவியத் ரசியா மேலிருந்து கீழாக செயல்பட்டதால், அது நொறுங்கும் தன்மையை இயற்கையிலேயேப் பெறுகிறது. உடைந்த அந்நாடு மீண்டும் உருவாகாது.
 • ஒரு சமூகத்திலுள்ள மக்கள் தாமாக ஒன்றிணைந்து தலைமையை உருவாக்கி நட்சத்திர மீன் போல செயல்பட்டால் எப்படி இருக்கும் என சிந்தித்துப் பாருங்கள். அதுபோன்ற சமூகம் தலைமையை இழந்தால் மீண்டும் புது தலைமையை உருவாக்கும், நாட்டை இழந்தால் மீண்டும் நாட்டை அடையும், தனது மொழியை இழந்தால் மீண்டும் மொழியை உயிர்ப்பிக்கும். அப்படி ஒரு மாயாஜால வித்தையைப் புரியும் நாடு ஒன்று உள்ளது என்றால் அது இசுரேல் / யூதர்கள் தான்.  இவர்களைப்பற்றி ஏற்கனவே சில கட்டுரைகளில் எழுதியிருக்கிறேன். முக்கியத்துவம் கருதி  சில கருத்துக்களை மீண்டும் முன்வைக்கிறேன். யூதர்களை அழிக்க முனைந்த ரோமாபுரிப் பேரரசு, எகிப்தியர்கள், பாபிலோனியர்கள்  நாசிகள் இன்றில்லை, ஆனால் அவர்களை விட பலம்குறைந்த யூதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இழந்த நாட்டையும் மொழியையும் இரண்டாயிரம் வருடங்கள் கழித்து மீட்டிருக்கிறார்கள். அவர்கள் சிறுசிறு குழுக்களாக பல நாடுகளில் துண்டு துண்டாக விடப்பட்டாலும், அவர்கள் கரைந்து போகாமல் நட்சத்திர மீனைப் போன்று சுயமாக வாழும் சமூகத்தை  உருவாக்குகிறார்கள். அவர்களின் இந்த வெற்றிகளுக்கு காரணம் அவர்களின் கீழிருந்து மேலான செயல்பாடுகள்தான் காரணம்.

அவர்கள் எப்படி இதைச்செய்கிறார்கள் என்பது பெரிய புரியாத புதிர்  இல்லை. இம்முறை என்பது ஒரு கரு முழு உடலாக வளர்ச்சியடையும் முறையைப் போன்றதே.  நமது DNA-வில் உள்ள விதிகள் ஒரு செல் மற்றொரு செல்லுடன் எவ்வாறு ஒத்துழைத்து செயல்படவேண்டும் என்று கூறுகிறது. இவ்விதிகளே நமது உடலை உருவாக்குகின்றது. அதுபோல யூதர்கள் அவர்களுக்குள் எவ்வாறு ஒத்துழைத்து செயல்படவேண்டும் என்ற விதிகள் அவர்கள் பண்பாட்டில் உள்ளது. இவ்விதிகள் அவர்களை உணர்வுப்பூர்வமாக பிணைத்து செயல்படுத்துகிறது. இவ்விதிகள்தான் அவர்களை கீழிருந்து மேலாக இயக்கம் தன்மையை அளித்து வெற்றிபெற வைத்திருக்கிறது.

யூதர்கள் அவ்விதிகளை அவர்களின் மதம் மூலம் செய்திருக்கிறார்கள். நாம் அதுபோன்ற விதிகளை எவ்வாறு மதச்சார்பற்ற முறையில் செயல்படுத்துவது எனப்பார்க்க வேண்டும். இது செய்ய முடியாதக் காரியமல்ல.  இருப்பதிலேயே இதுபோன்ற கீழிருந்து மேலான செயல்பாடுகளினால்தான் நமது வெற்றி எளிதாகும். நாம் மக்களாட்சி நாடுகளில் வாழ்கிறோம். மக்களின் வாக்குகள் கிடைத்தால்தான் நமது திட்டங்கள் நிறைவேறும். மக்களைத் தாமாக ஒன்று திரட்டுவதென்பதும், வாக்குகளை ஒன்று திரட்டுவது என்பது ஒன்றுதான். நாம் மேலிருந்து திட்டங்களை வகுத்து மக்களை ஒன்றுதிரட்ட முயல்வதை விட,  மக்களை அவர்களாக ஒன்று திரட்டவைக்க  முயலவேண்டும். அதுதான் எளிமையானது, சிக்கனமானது, பலமானது, நட்சத்திர மீனைப்போன்று  எதிர்-நொறுங்கும் தன்மை கொண்டது. அவ்வாறு செய்வதற்கு சுய-ஒழுங்கு விதிகளை நமது சமூகத்திற்கு நாம் உருவாக்கவேண்டும்.  இவற்றை யூதர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். அவர்களிடமிருந்து அப்படியே பிரதி எடுத்து  பயன்படுத்தினால் பலனிருக்காது.  நமது பண்பாட்டிற்கேற்ப, நமது பண்பாட்டு விழுமியங்களிலிருந்து விதிகளை மக்களிடம் சோதனை செய்து கண்டுபிடிக்கவேண்டும்.  இவ்விதிகள் மக்கள் தாமாக முன்வந்து ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கவேண்டும். இவ்விதிகளை மேலிருந்து கீழாகப் பரப்பமுடியாது. மாறாக அவை மக்களினூடாக மக்களிடம் பரவவேண்டும். இன்னொரு முக்கிய கருத்து என்னெவெனில் இவ்விதிகளை உணர்வுப் பூர்வமாக ஒவ்வொருவரும் தமது அங்கமாக்கிக் கொள்ளவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் பலனிருக்காது. நாம் பகுத்தறிவினால் மக்களை செயல்படுத்த முனைகிறோம். பகுத்தறிவிற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை உணர்வுகளுக்கு அளிப்பதில்லை. இது நாம் கொண்டிருக்கும் அடுத்த பிழையான கருதுகோளுக்கு இட்டுச்செல்கிறது.

தவறான கருதுகோள் 2:  மனிதனை இயக்குவது அவனது பகுத்தறிவு (Reason)

பல வரலாற்றுக் காரணங்களால் நமது அரசியல் செய்ல்பாடுகளில் இக்கருத்தியல் பரவலாக நிலவுகிறது. உதாரணமாக மக்களை ஒற்றுமைப்படுத்த பகுத்தறிவுதான் பெரிய ஆயுதம் எனப் பகுத்தறிவின் மூலம் செயல்பாடுகள் அமைக்கப்படுகின்றன. நாம் மக்களிடம் சிக்கல்களை பகுத்தறிவுடன் அறிவியல் பூர்வமாக விளக்கினால், மக்கள் புரிந்துகொண்டு நம்மை ஆதரித்து வாக்களிப்பர் என்ற எண்ணம் நிலவுகிறது. இக்கருத்து நம்மிடம் மட்டுமில்லாமல், பரவலாக மேற்குலகில் நிலவுகிறது. இவை வீரியமற்ற செயல்பாடுகள் என ஜார்ஜ் லக்காஃப் [5] அவர்கள் கூறுகிறார். அந்தோனியோ தமாசியோ[6], ஜொனாதன் ஹைட்[7] அவர்களின் ஆராய்ச்சிகள் கூறுவது என்னவெனில் மனிதனின் பகுத்தறிவு அவனது உணர்வுகளுக்கு பெரும்பாலும் அடிமை என்பதுதான். உணர்வுகள் நமது சிந்தனைக்கு அடிப்படை. உணர்வுகள் காட்டும் திசையில் நமது பகுத்தறிவு செயல்படும். உணர்வுகளில்லாமல் பகுத்தறிவினால் சரியாக செயல்படமுடியாது என்கிறது ஆராய்ச்சி முடிவுகள். இது ஏனென்று  புரிந்து கொள்வது அவசியம். உணர்வுகளின் முக்கிய வேலை என்னவென்றால் நமது வாழ்க்கை நலமுடன் நல்ல எதிர்காலத்தை நோக்கி இருக்கிறதா இல்லையா என்பதை உணர்த்துவதுதான் என்கிறார் தமாசியோ. உதாரணமாக, நமக்கு உடல்நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள நமக்கு பெரும்பாலும் மருத்துவர் தேவையில்லை. நமது உணர்வுகள் நமது உடல்நிலையைத் தெளிவாகக் கூறிவிடும். நமது வாழ்க்கையின் நிலை சரியில்லை என்றால் உணர்வுகள் நம்மை செயல்படுத்தத்  தூண்டி  வாழ்க்கையை ஒழுங்குபடுத்த வைக்கும். அவ்வாறான ஒழுங்கு படுத்தலுக்கு பகுத்தறிவு துணைபுரியும். மேலும் மனிதன் ஒரு சமூக விலங்கு என்பதால், ஒருவர் அவர் சார்ந்த சமூகத்திற்கு அச்சுறுத்தல் என்றால், அது அவர்களின் உணர்வைத் தூண்டி சமூகத்திற்காக போராட வைக்கும். மனிதனின் சமூக அடையாளம் பிறப்பினால் வருவதல்ல. அது பண்பாட்டிலிருந்து கற்றல் மூலம் வருகிறது, குறிப்பாக எந்த அடையாளம் ஒருவரின் தினசரி தொடர்புகளில் மையமாக இருக்கிறதோ, அந்த அடையாளம் அவரிடம் மையமாக இருக்கும் [8]. தமிழர்களில் பலர் தம்மை தமிழராக உணராமல், சாதி மத அடையாளத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு காரணம், அவ்வடையாளங்கள் அவர்களின் தினசரி தொடர்புகளில் மையமாக இருக்கிறது. அது அவர்களுக்கு அவ்வடையாளத்தைக் கொடுத்து உணர்வுகளால் பிணைத்திருக்கிறது.

உணர்வுகளின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள  சில உதாரணங்களை பார்க்கலாம்.

 1. ஒரு முகநூல் விவாதத்தில் உங்கள் பகுத்தறிவினால் எத்தனை எதிரிகளை உங்களின் பக்கம் இழுத்து இருக்கிறீர்கள்? அறுதிப் பெரும்பாலோனோர் யாரும் தங்கள் அரசியல் சார்பை பகுத்தறிவினால் மாற்றிக்கொள்வதில்லை. அவர்கள் உணர்வுகள் எங்கு அவர்களைத் தள்ளுகிறதோ அங்கேதான் அவர்கள் இருப்பர்.
 2. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட மத நூல்களிலோ அல்லது பிளேட்டோ, சாக்ரடீஸ் போன்ற மேதைகளோ அடிமைத்தனம் கூடாது என்று கூறவில்லை. இது ஏன்? அவர்களுக்கு பகுத்தறியும் திறன் இல்லையா என்று கேள்வி எழும். இதைப்பற்றி தத்துவ ஆசிரியர் ரிபெக்கா கோல்ட்ஸ்டீன்[9] கூறுவது என்னவென்றால், அடிமைத்தனம் தவறு என்ற உணர்வு அவர்களிடம் தோன்றவில்லை. உணர்வுகள் நமது பகுத்தறியும் திசையை தீர்மானிப்பதால், அவர்களால் அடிமைத்தனம் தவறு எனப்பகுத்தறிய முடியவில்லை. அதேபோல இன்று நாம் சரியெனக் கருதுபவற்றை, எதிர்கால மக்கள் தவறு என்று கூறலாம். அவற்றை நம்மால் இப்பொழுது பகுத்தறிய முடியாது.
 3. இதுவரை மேலே விவாதித்த இரண்டு கருதுகோள்களையும் இணைத்து விளக்கும் ஒரு அண்மைய உதாரணம் சல்லிக்கட்டு போராட்டங்கள். இது யாராலும் திட்டமிடப்பாடாமல் தலைமையில்லாமல் நாடு முழுவதும் மக்களால் தாமாக நடத்தப்பட்டன. இதுவரை அரசியல் கட்சிகளால் மேலிருந்து கீழாக திட்டமிட்டு  நடத்தப்பட்ட எந்த ஒரு போராட்டமும் சல்லிக்கட்டு போராட்டத்திற்கு இணையாக இருந்ததில்லை. சல்லிக்கட்டு போராட்டம்  ஒரு கீழிருந்து மேலான போராட்டம். அதுபோக இப்போராட்டம் அரசியல்வாதிகள் மேடைகளில்  பகுத்தறிவினால் முழங்கியதனால் உருவானதல்ல. இது பேசவே முடியாத மாடு உருவாக்கிய போராட்டம். ஆயிரம் பகுத்தறிவாளர்கள் பேசி ஒன்றுபடுத்தமுடியாத மக்களை பேசமுடியாத மாடு ஒன்றுபடுத்தியிருக்கிறது. இதற்கு காரணம் மக்கள் சல்லிக்கட்டின் மேல் கொண்டுள்ள பண்பாட்டு உணர்வுகள். அவ்வுணர்வுகளின் தூண்டுதலே அவர்களைப் போராட  வைத்துள்ளது.
 4. மக்களை ஒன்று திரட்ட பலமான ஆயுதம் உணர்வுகளே, பகுத்தறிவு அல்ல. இன்று தமிழ்ச் சமூகத்திற்கு எந்த ஒரு பலனும் எதிர்பாராமல் தொண்டு புரிபவர்கள் பலரையும் இயக்குவது அவர்களிடம் உள்ள உணர்வுகளே அன்றி இலாப நோக்கம் அல்ல. நாம் மக்களிடம் தமிழுணர்வை வளர்ப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவேண்டும். இவ்வுணர்வுகள் குறிப்பாக பதின்ம வயதில் (13-19) குழந்தைகளிடம் உள்வாங்கப்படுகிறது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அவ்வயதினரைக் குறிப்பிட்டு நமது செயல்பாடுகளை முடுக்கவேண்டும். யூதர்கள் அவர்களின் குழந்தைகளிடம் உணர்வகளை வளர்ப்பதன் மூலமே அவர்களால் கீழிருந்து மேலாக செயல்பட முடிகிறது.

முடிவுரை:

இக்கட்டுரையில் நமது சமூகத்தில் நிலவும் அதிமுக்கிய இரண்டு  தவறான கருதுகோள்களையும்,   நாம் செய்யவேண்டிய கருதுகோள் மாற்றங்களையும்  பார்த்தோம். நமது தற்பொழுதைய செயல்பாடுகள்  மேலிருந்து கீழாக பகுத்தறிவை முதன்மையாகக் கொண்டு நடத்தப்படுகிறது. இதைத் தலைகீழாக மாற்றவேண்டும். நமது செயல்பாடுகளை  வீரியமாக்க நாம் கீழிருந்து மேலாக உணர்வுகளைக்   கொண்டு செயல்படவேண்டும். இதன்பொருள் தலைமையே இருக்கக்கூடாது என்பதல்ல. தலைமை கீழிருந்து மேலாக மக்களால் தாமாக உருவாக்கப்பட வேண்டும். அதுபோன்ற தலைமை மக்களுக்கு துரோகம் இழைக்காமல் மக்கள் நலன் கருதி செயல்படும். அவ்வாறு இல்லையெனில் மக்கள் தாமாக தலைமையை மாற்றிவிடுவார்கள். இப்பொழுது நமது செயல்பாடுகள் மேலிருந்து கீழாக இருப்பதால், எதிரிகள் நமது தலைமையை எளிதாக அவர்கள் கைவசப்படுத்தி விடுகிறார்கள்.

உணர்வுகளைக் கொண்டு செயல்படுவது பகுத்தறிவை நிராகரிப்பதல்ல. அந்தோனியோ தமாசியோ[6] அவர்கள் கூறுவது என்னவெனில் உணர்வுகளைப் பகுத்தறிவின் மூலம் ஆராய்ந்து, தேவையற்றவையை நீக்கி, பயனுள்ளவற்றை அறிவுப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டும். பகுத்தறிவையும்  உணர்வுகளையும்  சரியான விகிதத்தில் பயன்படுத்த வேண்டும். அப்பொழுதான் செயல்பாடுகள் அதிக பலன் தரும் என்கிறார்.

நமது மூளையில் ஆழமாக பதிந்துள்ள கருதுகோள்களை மாற்றுவது எளிதல்ல, ஆனால் அதுபோன்ற கருதுகோள் மாற்றங்கள்தான் பாரிய முன்னேற்றத்தை அளிக்கும் என்கிறார் டோனெல்லா மெடோஸ் [1]. அதுபோன்ற  மாற்றத்திற்கு சிந்தனையாளர்களிடம் அறிவுப்போராட்டம் நடக்கவேண்டும். நமது தவறான கருதுகோள்கள் இவை இரண்டு மட்டுமல்ல; மேலும் பல உள்ளன. அவற்றை அடுத்த கட்டுரைகளில் பார்க்கலாம்.

உசாத்துணை

 1. Meadows, Donella H. Thinking in systems: A primer. chelsea green publishing, 2008.
 2. Bar-Yam, Yaneer. Making things work: solving complex problems in a complex world. Knowledge Industry, 2004.
 3. Brafman, Ori, and Rod A. Beckstrom. The starfish and the spider: The unstoppable power of leaderless organizations. Penguin, 2006.
 4. Taleb, Nassim Nicholas. Antifragile: Things that gain from disorder. Vol. 3. Random House Incorporated, 2012.
 5. Lakoff, George. The political mind: why you can’t understand 21st-century politics with an 18th-century brain. Penguin, 2008.
 6. Damasio, Antonio R. The Strange order of things. Pantheon, 2018.
 7. Haidt, Jonathan. The righteous mind. Vintage, 2012.
 8. Herriot, Peter. Religious fundamentalism and social identity. Routledge, 2014.
 9. Goldstein, Rebecca. Plato at the googleplex: Why philosophy won’t go away. Vintage, 2015.
This entry was posted in அரசியல், அறிவு, சமூக அறிவியல், சமூகம், Uncategorized. Bookmark the permalink.

6 Responses to சமூகத்தைப் பற்றி நமது சிந்தனைகளில் உள்ள தவறான கருதுகோள்கள்

 1. Vetriselvan TA says:

  மிகவும் முக்கியமான மிகச்சிறந்த பதிவு.
  இந்த மாற்றத்தை எல்லோரும் நன்றுணர்ந்து புரிந்து கொண்டுவருவோம்..

  Like

  • Sethu says:

   நன்றி வெற்றிச்செல்வன். மேலும் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். நேரம் இருக்கும் பொழுது படிக்கவும்.

   Like

 2. Arun says:

  Amazing! Written very succinctly. Mannikavum for commenting in English

  Like

 3. Pingback: பகுதி-2: சமூகத்தைப் பற்றி நமது சிந்தனைகளில் உள்ள தவறான கருதுகோள்கள் | Sethu's Blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s