ஒரு சமூகத்தின் சாதனையில் புகழின் பங்கு

பண்டைய கிரேக்கர்கள் (800 BC- 200 BC ) அறிவியல், தத்துவங்கள், கணிதம், கலை, இலக்கியம், போர்திறன் எனப் பலதுறைகளில் சிறந்து விளங்கினார்கள். அவர்கள்தான் இன்று நாம் காணும் அறிவியல் முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்டவர்கள். அவர்களின் சிறந்த தத்துவமேதைகளான சாக்ரட்டிஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோர்கள் படைத்த தத்துவங்கள் இன்றளவும் பேசப்படுகின்றன உபயோகப்படுகின்றன. அவர்களின் உயர்தரமான அறிவுசார் படைப்புகளை  2000 ஆண்டுகளாக மற்ற  நாகரீகங்கள் அண்மைக்காலம் வரை விஞ்ச முடியவில்லை. இங்கு எழுகிற முக்கியக் கேள்வி என்னவென்றால் ஏன் கிரேக்கர்களால் முடிந்ததை மற்றவர்களால் முடியவில்லை. ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு பண்பாட்டு விழுமியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என் ஏற்கனேவே இன்னொரு கட்டுரையில் பார்த்தோம். கிரேக்க பண்பாட்டை ஆராய்ந்த தத்தவ ஆசிரியர் ரிபெக்கா கோல்ட்ஸ்டீன் (Rebecca Goldstein) கூறுவது என்னவென்றால், அவர்களின் சாதனைகளுக்கு  “புகழைத் தேடுதல்” என்ற பண்பாட்டு விழுமியம்தான் அடிப்படைக் காரணம். பண்டைய தமிழர்களும்  கலை, இலக்கியம்,  வீரம் என்ற பல சாதனைகளைப் படைத்துள்ளனர். இந்த சாதனைகளும் புகழைத் தேடுதல் ஒரு காரணமாக இருக்கலாம் என நான் எண்ணுகிறேன். கிரேக்கர்களின் “புகழைத் தேடுதல்” என்ற பண்பாட்டு விழுமியத்தை விளக்கி,  பண்டைய மற்ற இன்றைய தமிழர்களின் புகழ் பற்றிய விழுமியங்களை ஓரளவு ஒப்பீடு செய்து ஆராய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

இருத்தலியல் கேள்வி (existential question)  

பண்டைய மனிதனிலிருந்து இன்றைய மனிதன் வரை “மனித வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்குவது எது” என்ற ஒரு அடிப்படைக்கேள்வி அவர்களுக்குள் இருக்கிறது. மனிதர்கள் தோன்றுகிறார்கள், மறைகிறார்கள்; சிலகாலங்கள் கழிந்தபின் அவர்கள் வாழ்ந்ததற்கான எந்த தடயமும் இல்லாமல் மனிதர்கள் காணமால் போகிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும்  தனக்கு இருக்கும் இந்த ஒரு வாழ்க்கையை எவ்வாறு அர்த்தமுள்ளதாக மாற்றுவது என்பது அடிப்படைக் கேள்வியாக அமைகிறது.

இந்தக்கேள்வியை பண்டைய கிரேக்கர்கள், சீனர்கள், இந்தியர்கள், பாரசீகர்கள், யூதர்கள் ஆகியோர் ஆராய்ந்துள்ளனர். இக்கேள்விகளுக்கான விடைகளை கிரேக்கர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு அவர்கள் சார்ந்த மதங்களான கன்பியூசனிசம், டாவோயிசம், புத்தம், இந்து மதம், ஜெயினம்,  ஜொராஷ்ட்ரியனிசம், ஆபிரகாமிய மதங்கள் வழங்கின. ஒரு ஆச்சரியமான விடயம் என்னவென்றால் இன்றும் மனிதர்களின் இந்த இருத்தலியல் கேள்வியை அன்று (800 BC -200 BC) தோன்றிய தத்துவங்களே விடை தருகின்றன. இந்த காலப்பிரிவை அச்சு காலம் (Axial age) என்று கார்ல் யாஸ்பர் (Karl Jasper) குறிப்பிடுகிறார்.  இன்று நாம் காணும் மதச்சார்பின்மையும் (Secularism) அன்று தோன்றிய கிரேக்க கருத்தியல் மூலமே வந்துள்ளது. மேற்குலக நாகரீகம் என்பது யூத மதம், ரோமாபுரி,  கிரேக்க பண்பாடு ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது என்கிறார் பெர்ட்ராண்டு ரசல்.  இம்மூன்றில் யூத, ரோமாபுரிப் பண்பாடுகள் 1500  வர ஆதிக்கம் செலுத்தின. அதன்பின் பிராட்டஸ்டன்ட் சீர்திருத்தற்குப் பின் கிரேக்கப் பண்பாட்டு கூறுகளின் ஆதிக்கம் ஆரம்பிக்கிறது. இன்றைய மேற்குலகின் முன்னேற்றத்திற்கும்  உலக மதச்சார்பின்மைக்கு அடிப்ப்டையாகத் திகழ்வது கிரேக்கக் கருத்துக்களே.

கிரேக்கர்கள்

பண்டைய கிரேக்கர்களும் மற்றவர்களுக்கும் இந்த இருத்தலியல் பற்றிய கேள்வியை அணுகுவதில் ஒரு வித்தியாசம் உண்டு. மற்ற அனைவரும் இக்கேள்விக்கான விடையை மதங்களிடம் எதிர்பார்த்தனர், ஆனால் கிரேக்கர்கள் அவ்வாறில்லை. அவர்கள் கடவுளை நம்பினாலும், அவர்கள் கடவுள்களை தீமை அணுகாதவாறு இருப்பதற்காக மட்டுமே வணங்கினார்கள். கடவுளரிடம் எவ்வாறு இவ்வுலக வாழ்க்கையை வாழவேண்டும் என எதிர்பார்க்கவில்லை. இந்தக்கேள்வியை அவர்களுக்குள்ளேயே விவாதித்து முடிவு கண்டார்கள். அவர்கள் மனித வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்குவதற்கு கண்டவிடை: மனிதன் பெரும்புகழ் உடையவனாக வாழவேண்டும், ஒருவன் மறைந்த பின்னரும் மக்கள் அவனைப்பற்றி பலகாலம் உயர்வாக பேசும்படியான வாழ்க்கையை வாழவேண்டும், அவன் மக்களின் மனதில் நீங்க இடம் பெறும்படியான வாழ்க்கை இருத்தல் வேண்டும் என்பதே. மனிதன் பிறக்கும்பொழுது அர்த்தமற்ற வாழ்க்கையிலேயே பிறக்கிறான். அதனால் அவன் அர்த்தமுள்ள வாழ்க்கையைத் தேடி உழைத்துதான் பெறவேண்டும் என்பது அவர்களின் பார்வையாக இருந்தது. இந்த கருத்தை கோல்ட்ஸ்டீன் அவர்கள் “அசாதாரணமானவர்களின் பண்புகள்” (Ethos of the extraordinary) என்கிறார். அர்த்தமுள்ள வாழ்க்கை என்பது எந்த புகழ்பெற்ற வாழ்க்கையென்றாலும் சரி என்று எடுத்துக்கொள்ளப்பட்டது. அது அறிவாளியாக, சிறந்த பேச்சாளராக, விளையாட்டு வீரராக, போர் வீரராக, அழகானவராக, செல்வந்தராக என மக்களுடைய கவனத்தை ஈர்க்கும் எது வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த பண்பாட்டு விழுமியம் மக்களிடையே பெரிய போட்டியை உருவாக்கி அவர்களை மாபெரும் சாதனைகள் படைக்க அடிப்படையாக இருந்தது.

அவர்களின் கலை, இலக்கியம், அறிவுசார் படைப்புகள், அரசியல், போர் திறன்  இன்றும் பேசப்படுபவையாக இருக்கின்றன என்பது வியப்பூட்டுகிறது. அரசியலில் முதன் முதலாக மக்களாட்சியை தொடங்கியவர்கள் அவர்கள்தான். போர் திறனில் தலைசிறந்த வீரனான அலெக்ஸ்சாண்டரை பெற்றது அவர்கள்தான். அவர்களின் வாழ்வு என்பது மற்றவர்கள் பாடலாக எழுதுவதற்காக வாழ்ந்தனர் என்கிறார் கோல்ட்ஸ்டீன். அறிவுசார் துறைகளான  விண்ணியல், இயற்பியல், உயிரியல், கணிதம், வரலாற்று பகுப்பாய்வு, தத்துவங்கள், கவிதைகள், நாடகங்கள் எனபனவற்றில் அவர்களின் படைப்புக்கள் வியப்பூட்டுவன.

இந்த புகழைத் தேடுதலில் உள்ள ஒரு நடைமுறை சிக்கல் என்னவெனில் பெரும்பான்மையான மக்கள் சாதாரணமானவர்களே. அனைவரும் சாதனைகள் படைக்கமுடியாது. இதற்கு அவர்கள் கண்ட தீர்வு என்னவென்றால்  மக்கள் ஒட்டுமொத்த கிரேக்கர்களின் புகழில் ஈடுபடுவது. கிரேக்கனாகப் பிறப்பதே மாபெரும் புகழாகக் கருதப்பட்டது. அவர்கள் தங்களை உயர்ந்தவர்களாகக் கருதியதால் மற்றவர்களை Barbarians (காட்டுமிராண்டிகள்) என அழைத்தனர். அச்சொல் ஆங்கிலத்தில் இன்றும் புழக்கத்தில் உள்ளது.

தமிழர்கள்:

பண்டைய தமிழர்களும் கலை, இலக்கியம், வீரம் எனப்பல சாதனைகளை படைத்துள்ளனர்.  எது அவர்களை சாதனைப் படைக்கத்தூண்டியது, அவர்களின் வாழ்க்கைக்கான இருத்தலியல் எங்கிருந்து வந்தது போன்ற கேள்விகள் சிந்திக்கப்பட வேண்டியன. நான் பண்டையத் தமிழர்களின் வரலாற்றை ஆழ்ந்து அறியாததால் உறுதியாக என்னால் இக்கேள்விகளுக்கு விடைகூற முடியாது. எனக்குத்தெரிந்த சில கருத்துக்களை முன்வைக்கிறேன்.

  1. இருத்தலியல்: பண்டைய தமிழர்களிடம் சாதிகள் இல்லையென்பது பழைய இலக்கியங்களிலிருந்து தெரிகிறது. இன்றுள்ள இந்துமதம் அன்றில்லை, இந்து மதம் பிற்காலத்தில் வடக்கிலிருந்து வந்தது. இன்று கிராமங்களில் பல காவல் தெய்வங்கள் உள்ளன. இக்கடவுள்கள் தீமைகளிடமிருந்து மக்களைக் காப்பதற்காகவே இருப்பதாக நம்பப்படுகிறது. அக்கடவுளர் நாம் எவ்வாறு வாழ்க்கையை வாழவேண்டும் என்று கூறுவதில்லை. பண்டையத் தமிழரும் இதுபோன்ற நம்பிக்கையையே பின்பற்றியிருக்கலாம் என்று தோன்றுகிறது. அதனால் அவர்களின் இருத்தலியல் கொள்கைகளும் பண்டைய கிரேக்கர்களைப்போல தாமாக சிந்தித்து உருவாக்கியவையாக இருக்கும் என எண்ணுகிறேன். அவர்களின் இருத்தலியல் கடவுளரிடமிருந்து வரவில்லை. அவர்களின் இருத்தலியல் என்ன என்பது ஆராயப்பட வேண்டியது.
  2. புகழ்: தமிழ் சங்கங்களில் புலவர்களிடையே சிறந்த படைப்புக்களை உருவாக்க போட்டி நிலவியிருக்கிறது. அதுபோல அரசர்களிடமும் புலவர்கள் புகழ்ந்து எழுதவேண்டும், அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான போட்டியும் இருந்திருக்கிறது. கங்கைகொண்டான், கடாரம் கொண்டான்,  இமய வரம்பன், பாரி ‘வள்ளல்’ எனப்பல பட்டப்பெயர்கள் அவர்களின் புகழை இன்றும் பறைசாட்டுகின்றன. இன்றும் அரசியலில் புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி, கலைஞர், நாவலர், தளபதி என்று பட்டப்  பெயர்கள் உலாவருகின்றன.  இந்தியாவில் மற்ற இனத்தவர்கள் இதுபோன்று பட்டப்பெயர்கள் வைத்திருப்பதாகத் தெரியவில்லை. புகழைத் தேடுதல் தமிழரின் ஒரு பண்பாட்டு விழுமியமாக இருந்திருக்க சான்றுகள் பல இருப்பதுபோல தோன்றுகிறது. புகழுக்கு திருவள்ளுவரின் ஒரு குறள் நல்ல எடுத்துக்காட்டு:

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.

  1. கிரேக்கர்கள் தங்களை புகழ்பெற்ற இனமாகக் கருதியதுபோல பண்டையத் தமிழர்கள் கருதினார்களா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இன்று “தமிழர் உலகின் மூத்த குடி, தமிழ் முதல் மொழி” என்ற புகழ்ச்சி நம்மிடம் நிலவுகிறது. இதன் நோக்கம் அனைத்து தமிழர்களையும் புகழ் பெற்றவராக உணரவைத்து ஒருமைப்படுத்தி மீண்டும் பழைய புகழை அடையவேண்டும் என்பதாக இருக்கலாம்.

இறுதிச்சுருக்கம்:

கிரேக்கர்களின் சாதனைகளுக்கு புகழைத்தேடுதல் என்பது வாழ்வின் இருத்தலியலின் அடிப்படைப் பண்பாக இருந்த்திருக்கிறது. பண்டையத் தமிழர்களின் அடைப்படை இருத்தலியல் என்ன என்பது அறிந்து கொள்ளவேண்டிய ஒன்று. இதைப்பற்றிய ஆராய்ச்சிகள் நடந்துள்ளனவா என எனக்குத்தெரியவில்லை. ஆனால் புகழைத்தேடுதல் என்பது அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் சமூகத்தில் பண்பாட்டின் அங்கமாக இருக்கிறது  என்று ஓரளவு புலனாகிறது. அன்று புகழ் என்பது வாழ்விற்கு முக்கியமான அறிவு, அறம், வீரம், ஈதல், கலை, நாடகம், நடனம், இலக்கியம் ஆகியவற்றை ஒட்டி அமைந்தது. அது மாபெரும் படைப்புகளையும் வீரத்தையும்  உருவாக்கியது. இன்று புகழ் என்பது பொய்யான திரைப்படத்தில் நடிப்பவர்களை நோக்கிப் பாய்கிறது. இது ஒரு சமூகக்கேடாக இன்று மாறி நிற்கிறது. இன்று உண்மையான வீரத்தை நிலை நாட்டியவர்களைப் பற்றி பாடாமல், பொய்யான திரைப்பட வீரத்தைப்பற்றி பெரும்பாலும்  பாடப்படுகிறது. இன்றைய நமது சமூகத்தின் வீழ்ச்சிக்கு இந்தப் புகழின் திரிபு ஒரு காரணமாக இருக்கலாம். புகழ் என்பது அறம் சார்ந்து நிற்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் சமூகம் சீரழிய வாய்ப்புகள் அதிகம். இதுபோன்ற சிக்கல்களில் பண்டைய கிரேக்க நாடான ஏதென்சு சிக்கியிருந்திருக்கிறது. சாக்ரடீஸ் அவர்கள் நற்பண்புகள் (virtues) இல்லாத புகழினால் எந்த ஒரு பெருமையும் இல்லை என்று அன்றைய பண்பாட்டு பழக்கவழக்கங்களுக்கு எதிராக வாதாடினார். அதற்காக அவர் கடவுளை அவமதித்தார் என்றும் இளைஞர்களை சீர்கெடுக்கிறார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டு மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது. தமிழ் சமூகமும் இதுபோன்ற ஒரு அறமற்ற புகழில் இன்று ஈடுபடுகிறதென்று தோன்றுகிறது.

உசாத்துணை:

  1. Goldstein, Rebecca. Plato at the Googleplex: Why Philosophy Won’t Go Away. Vintage, 2015.
  2. Rebecca Goldstein: Plato’s Despair, YouTube video , https://www.youtube.com/watch?v=N3hlnSlIMYk
  3. Russell, Bertrand. History of Western Philosophy: Collector’s Edition. Routledge, 2013.

 

This entry was posted in அறிவு, இருத்தலியல், சமூக அறிவியல், சமூகம். Bookmark the permalink.

1 Response to ஒரு சமூகத்தின் சாதனையில் புகழின் பங்கு

  1. Pingback: மாவீரர்களின் அர்த்தமுள்ள வாழ்க்கை | Sethu's Blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s