ஒரு சமூகத்தை அழிவிலிருந்து காப்பது எது?

உலகில் சில நாடுகள் முன்னேறிய நாடுகளாக  இருக்கின்றன, சில நாடுகள் பின்தங்கி வறுமையில் இருக்கின்றன, இன்னும்  சில நாடுகள் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டு சிறிது சிறிதாக அழிக்கப்படுகின்றன. இரண்டு வாரத்திற்கு ஒருமொழி என்ற வீதத்தில் இவ்வுலகில் பேசுவோர் யாருமில்லாமல் நிரந்தரமாக மொழிகள் அழிந்து கொண்டிருக்கின்றன[1]. அதுபோக மனித வரலாற்றில் இதுவரை அழிந்த சமூகங்கள் எண்ணற்றவை.  இதிலிருந்து ஒரு பொதுவான அடைப்படைக்கேள்வி இதுதான்: ஒரு சமூகத்தின் அல்லது நாட்டின் எதிகாலத்தை தீர்மானிப்பது எது? நீங்கள் இதற்கு பல்வேறு விடைகள் அளிக்கலாம். உதாரணமாக மக்களிடம் சமூக ஒற்றுமை இருக்கவேண்டும், நல்ல அரசியல் தலைமை இருக்கவேண்டும், மக்கள் பகுத்தறிவைப் பின்பற்றுபவர்களாக இருக்கவேண்டும் என்று கூறலாம். இந்த பதில்களில் ஓரளவு உண்மையுள்ளது, ஆனால் இவை முழுமையாக விளக்குவதில்லை.  கடந்த ஐம்பது ஆண்டுகளில் நடைபெற்ற அறிவியல் ஆராய்ச்சிகள், இந்தக்கேள்விக்கு ஒரு தீர்க்கமான விடையை அளித்திருக்கிறது —  அந்த விடை அறிவு என்பதுதான்.   இந்த அறிவியல் கருத்தை விளக்கி, அதன்படி ஒரு சமூகம் எவ்வாறு செயல்படவேண்டும் என்று இக்கட்டுரையில்  பார்ப்போம்.

இவ்வுலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் மனித சமூகமும் பரிணாம வளர்ச்சியில் உருவானவை. அதனால் நாம் அணுக வேண்டிய அடிப்படைக் கேள்வி என்னவென்றால்  “ஒரு உயிர் வாழ்வதற்கான அடிப்படையான காரணம் என்ன?” என்பதுதான். எறும்பு ஊறக் கல்லும் தேயும் என்பது பழமொழி.  இவ்வுலகில் அனைத்தும் காலப்போக்கில் சிதைந்து கரைந்து காணாமல் போகும். இது இயற்கையின் விதி. ஆனால் இதில் உயிர் மட்டும் எதிர் நீச்சல் போடுகிறது. நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நுண்ணியிரியாக தோன்றிய உயிர்கள் பரிணாம வளர்ச்சியடைந்து பல்வகையான தாவரங்களையும் விலங்குகளையும் உருவாக்கி, மனிதனையும் மனித சமூகங்களையும் உருவாக்கி  இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. எது உயிர்களை இயற்கையின் அழிவிலிருந்து எதிர்த்து முன்னேற வைக்கிறது? இதைப்பற்றிய ஆராய்ச்சிகளின் முடிவு என்னெவென்றால் ஒரு உயிரின் வாழ்விற்கு அடிப்படையானது அறிவு என்பதுதான். இந்த கருத்து நான் அறிந்து மூன்று கோணங்களில் ஆராயப்பட்டுள்ளது. இந்த மூன்று கோணங்களும் உயிர்களைப் பற்றி ஆழமாகப் புரிந்துகொள்ள உதவுவதால், இம்மூன்றையும் பார்ப்போம். இதை முழுவதும் படிக்க நேரமில்லாதவர்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளதை மட்டும் படித்துவிட்டு,  “கற்கவேண்டிய பாடங்கள்” பகுதிக்குச் செல்லவும்.

 1. உயிரியல்: ஒரு உயிர் தனது சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் (Adaptation) கொள்கிறது என்பது உயிரியலில் அடிப்படை கருத்து. அதாவது உயிர்  தனது உடல் அமைப்பையும் செயல்பாட்டையும்  சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்வதன் மூலம் தன்னை பாதுகாத்துக் கொள்கிறது. உயிர்கள் அவ்வாறு சுற்றுச்சூழலுக்கேற்ப தகவமைப்பதன் மூலம்,  அவற்றிற்கு சுற்றுச்சூழலைப் பற்றிய அறிவு உள்ளது என்று எடுத்துக்கொள்ளலாம். இதன் பொருள் உயிர்களுக்கு அந்த அறிவை அறியும் திறன் உள்ளது என்பதல்ல, சுற்றுச்சூழலைப் பற்றிய அறிவு அதன் தகவமைப்பில் உள்ளது என்பதே. அதனால் தகவமைப்பு  என்பது சுற்றுச்சூழலைப் பற்றிய அறிவு எனலாம். தகவமைப்புகள் உட்பட ஒரு உயிரை உருவாக்குவதற்கான தகவல்கள் மரபணுக்களில் இருப்பதால், ஒரு உயிரின் சுற்றுச்சூழலைப் பற்றிய அறிவு அதன் மரபணுக்களில் உள்ளது என்று எடுத்துக்கொள்ளலாம்.

“Adaptations are themselves knowledge, themselves forms of incorporations of the world into the structure and organization of living things… Adaptations are biological knowledge, and knowledge as we commonly understand the word is a special kind of biological knowledge.” [2]

அனைத்து தகவமைப்புகளும் அறிவு என்றே கொள்ளவேண்டும்.  நாம் பொதுவாக பேசும்  “சிந்திக்கும் மனித அறிவு” (conscious though) என்பதுவும்  ஒருவகை உயிரியல் தகவமைப்பு என்கிறார் புளோட்கின் .

இதை சில உதாரணங்கள் மூலம் விளக்கினால் தெளிவாகும். மீன்கள் நீரில் வாழ்கின்றன, ஆனால் நிலத்தில் வாழ முடிவதில்லை. ஏனெனில் அதனுக்குள் உள்ள அறிவு அப்படி. அதற்கு எதிர்மாறாக விலங்குகள் நிலத்தில் வாழ்கின்றன,  ஆனால் நீரில் வாழ முடிவதில்லை. மனிதனின் மரபணுக்களில் உள்ள அறிவு அவனை நிலத்தில் வாழ ஏற்றவாறு  மட்டுமே உடலை தகவமைத்துள்ளது. ஆனால் மனிதனால் விமானம் மூலம் வானிலும், விண்கலங்கள் மூலம் விண்ணிலும், கப்பல்கள் மூலம் நீரிலும் வாழமுடிகிறது. இது எவ்வாறு சாத்தியமானது? விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் அதனுடைய அறிவு மரபணுக்களில் இருந்து மட்டுமே வருகின்றன. மனிதர்களைப் போல கற்கும் திறன் அவைகளுக்கு கிடையாது அல்லது மிகக்குறைவானது. மனிதன் மற்ற அனைத்து உயிர்களையும் விட ஒரு வகையில் மாறுபட்டவன்.  அவனுக்கு கூடுதலாக இன்னொரு அறிவடையும் ஆற்றல் உள்ளது —  அது பண்பாடு. இதுதான் அவனை நீரிலும், நிலத்திலும், விண்ணிலும் வாழும் அறிவைக் கொடுக்கிறது.

மனிதனால் ஒரு பண்பாட்டிலிருந்து மொழியையும் அறிவையும் கற்றுக்கொள்ளும் திறன் இருக்கிறது. ஒரு பண்பாட்டினைக் கொண்ட சமூகம் ஒரு உயிர்போல செயல்படுகிறது. அதற்கென்று ஒரு தலைமை, ஒரு அரசு, கடமைகளைப் பிரித்து செயல்பட வெவ்வேறு பிரிவுகள், வெவ்வேறு தொழில்கள் என்று சமூகத்தை வடிவமைத்து செயல்படுகிறது. எப்படி ஒரு உயிர் வாழ்வதற்கு அதன் மரபணுக்களிலுள்ள  சுற்றுச்சூழல்பற்றிய அறிவுத் தீர்மானிக்கிறதோ, அதேபோல ஒரு சமூகத்தின் எதிர்காலம் அதன் பண்பாட்டில் புதைந்துள்ள சுற்றுச்சூழல்பற்றிய  அறிவே தீர்மானிக்கிறது.

Social evolution is a process of accumulating  “useful” cultural information that is used for social purposes, passed on via social processes, and stored in artifacts ( for example, books) as well as in people’s memories… The term useful must be understood as that which assists survival and growth”. [3]

மேலும் ஒரு சமூகத்திற்குள்ளே ஒரு தனிமனிதனின் வளர்ச்சிக்கும் அறிவின் பங்கு அதிகம். அதனால்தான் நாம் குழந்தைகளைப் பள்ளிக்கு போட்டிபோட்டு அனுப்புகிறோம். சுருக்கமாகக் கூறினால் ஒரு உயிரை வாழவைப்பது அறிவு. அதேபோல ஒரு சமூகம் வாழுமா அழியுமா என்பது அந்த சமூகம் பெற்றுள்ள அறிவைப் பொறுத்தே அமையும். எது சுற்றுப்புறத் தகவலை அறிந்து, அத்தகவலை அகப்படுத்தி தன்னை மாற்றி அமைத்துக்கொள்கிறதோ அவை வளர்கின்றனமற்றவை அழிகின்றன.

“The success is a result of living things being able successfully to match their own organization to the order of the outside world. That is, they can and do indeed know about the world outside of themselves. Inaccurate, incomplete and partial though the knowledge might be, it none the less is a practical working knowledge. Our lives depend on it.” [2]

சமூகம் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் எதிர்காலத்தையும் அறிவுதான் தீர்மானிக்கப் போகிறது. உலகவெப்பமாதல் போன்ற விளைவுகளினால் மனிதகுலம் அழிய வாய்ப்பிருக்கிறது, அதனால் பூமியை வெப்பமடையாமல் பாதுகாக்கவேண்டும் என்று பலர் சிந்திக்கிறார்கள். இது ஒரு குறுகிய பார்வை என்கிறார் டேவிட் டாய்ச்[9]. நமது எதிர்காலத்தை தீர்மானிக்கப்போவது அறிவு மட்டுமே. நாம் வெப்பமாதலைத் தடுக்கமுனைவதோடு, வெப்பமடைந்தாலும் அவ்வாறான உலகில் வாழ்வது எவ்வாறு என்ற அறிவினைப் பெருக்கவேண்டும் என்கிறார். இந்த உலகுதான் மனித குலத்தின்  இறுதி இலக்கு என்றால் கண்டிப்பாக ஒரு நாள் அழிந்துபோவோம். வேற்று  கிரகங்களுக்கு தாவுவதைப் பற்றியும் அதற்கான அறிவைப்பெறுவதிலும் முனையவேண்டும். உயிர் முதலில் நீரில் தோன்றி, பின் நிலத்திற்கும் வானிற்கும் தாவியது. அதன் அடுத்த இலக்கு விண்வெளிதான். உயிர்கள் இப்பூமியில் நிரந்தரமாக அடைபட்டிருப்பதற்காக பரிணமிக்கவில்லை. அவ்வாறு விண்ணில் பாய்வதற்கு நமக்குத்தேவையானது அறிவு மட்டுமே என்பதை உணரவேண்டும்.

 1. இயற்பியல்: ஏன் அறிவிற்கும் உயிரின் வளர்ச்சிக்கும் தொடர்புள்ளது என்று அறிவியல் சிந்தனையாளர்கள் யோசிக்கலாம். இதற்கு இயற்பியலின் இரண்டாவது விதிதான் அடிப்படை காரணம். ஏற்கனவே “தமிழுணர்வு எங்கிருந்து வருகிறது, அதன் சமூக தாக்கம் என்ன” என்ற கட்டுரையில் எவ்வாறு சிதைவுறுதல் இயற்கையின் அடிப்படை குறிக்கோள் என்றும், அந்த சிதைவுறுதலுக்கு உயிர்கள் துணைபோவதானால் உயிர்கள் தழைக்கின்றன என்றும் பார்த்தோம். இங்கு அறிவின் பங்கு என்னவென்றால், அந்த சிதைவுறுதலுக்கு உயிர்களுக்குத் தேவையான அடிப்படைக் காரணியாக அறிவு இருக்கிறது. இயற்பியலின்படி தகவலுக்கும் பயனுள்ள வேலைக்கும்  நேரடித் தொடர்புள்ளது. இதை எளிதாகப் புரிந்துகொள்ள ஒரு சிறிய உதாரணம் அளிக்கிறேன். நாளைக்கு பங்குச்சந்தையில் எந்தப்பங்கின் விலை உயரும் என்று உங்களுக்கு உறுதியாகத் தெரிந்தால், அந்தத் தகவலைப் பயன்படுத்தி பணமாக மாற்றலாம். அந்தப்பணத்தைக் கொண்டு மற்றவர்க்கு  ஊதியமாக அளித்து நீங்கள் பயனுள்ள வேலையைப்  பெறலாம் ( அந்தத்தகவல் உட்தகவல் (insider information) என்றால் சிறைக்கு செல்வீர்கள் என்பது வேறுவிடயம்). பயனுள்ள தகவலுக்கும் பணத்திற்கும் தொடர்பு உள்ளது. இந்த உலகின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை நடக்கும் உண்மையானப் போர் என்னவென்றால் சிதைவுறுதலுக்கும் தகவலுக்கும் இடையே நடக்கும் போர்தான் என்கிறார் இடால்கோ [6]. ஒரு உயிர் சுற்றுச்சூழலிருந்து பயனுள்ள தகவல்களை சேகரிப்பதன் மூலமே வாழ்கின்றன. ஒரு உயிர் அழிவதற்கு அடிப்படைக் காரணம் அதனால் மேலதிக அறிவைப் பெறமுடியாமல் போவதுதான் காரணமே ஒழிய, தேவையான உணவைப் பெறமுடியாததால் அல்ல என்கிறார் வெட்ரால்:

“Life paradoxically ends not when it under doses on fuel, but, more fundamentally, when it overdoses on information ( i.e. when it reaches a saturation point and can no longer process any further information ).. The second law of thermodynamics tells us that in physical terms, a system reaches its death when it reaches its maximum disorder. This is sometimes referred as thermal death, which could really more appropriately be called information overload. ” [4]

இதே கருத்தை “ஒரு சமூகம் அழிவதற்கான அறிகுறிகள்” என்ற கட்டுரையில், எவ்வாறு ஒரு சமூகம் தனது சிக்கலைத் தீர்க்கும் அறிவைப்பெறும் ஆற்றல் இல்லாமல் அழிகிறது என்று விளக்கமாகப்   பார்த்தோம். ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை அறிவுதான்  தீர்மனிக்கிறது என்றபின், சமூகத்தின் ஒவ்வொரு  அங்கத்தையும் அலசவேண்டிய அவசியமில்லை. இருந்தாலும் உதாரணமாகப் பொருளாதாரத்தை எடுத்துக்கொள்வோம். பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் இடையேயுள்ள பொருளாதார இடைவெளியை ஆராய்ந்து ஒரு நாட்டின் அறிவுதான் அந்த இடைவெளிக்கு பெரும்பாலும்  காரணம் என்று கூறுகிறார்:

“Much of the difference in per capita income between developing countries and the more advanced are attributable to differences in knowledge. Policies that transform their economies and societies into “learning societies” would enable them to close the gap in knowledge with marked increase in income.” [5]

இன்னொரு உதாரணமாகப் போர்களை எடுத்துக்கொள்வோம். பொதுவாகப் போர்களின் முடிவுகள் எதிர்பாராத விதமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் போரின் முடிவைத் தீர்மானிக்கும் பங்கு அதிர்ட்டத்தை விட அறிவுக்கே அதிகம் என்கிறார் இராணுவ வாலாற்றாசிரியர்  லிட்டல் ஹார்ட். ஒரு வெற்றிக்கு காரணமாக நாம் அடிக்கடி  திறமையான தலைமையையும்  உத்வேகத்தையும் காண்கிறோம். ஆனால் அவை உண்மையல்ல:

.“In reality, reason has had a greater influence than fortune on the issue of the wars that have most influenced history. Creative thought has often counted far more than courage, far more, even, than gifted leadership. It is a romantic habit to ascribe to a flash of inspiration what more truly has been due to seeds long sown, to the previous development of some new military practice by the victors, or to avoidable decay in the military practice of losers.” [7]

 1. கட்டுப்பாட்டு அமைப்புகள் (cybernetics, control systems): அறிவின் முக்கியத்துவத்தை கட்டுப்பாட்டு அமைப்புகளின் தன்மையைக் கொண்டு ஆராயும்பொழுது இன்னும் சில ஆழமான கருத்துக்கள் புலனாகும். ஒரு உயிரினம் என்பது அதன் மரபணுக்களைக் காப்பாற்ற உருவாக்கப்பட்ட ஒரு இயந்திரம் என்பது உயிரியிலாளர்கள் ஏற்றுக்கொண்ட கருத்து. இதனால் உயிரினங்களை ஒரு ஒழுங்குபடுத்தி (regulator) என்றும் கூறலாம். எவ்வாறு ஒரு குளிரூட்டி (Air Conditioner) என்ற ஒழுங்குபடுத்தி வெளியில் உள்ள வெப்பம் ஒரு அறையின் வெப்பத்தை மாறவிடாமல்  கட்டுப்படுத்துகிறதோ, அதுபோல ஒரு உயிரினம் வெளியுலகிலுள்ள தடங்கல்கள் மரபணுக்களைச் சென்று தாக்கியளிக்காமல் பாதுக்காக்கின்றது. அவ்வாறு தடங்கல்கள் மரபணுக்களை அடையாமல் தடுப்பதற்கு ஒரே வழி சுற்றுச்சூழலிலிருந்து தகவலை உள்வாங்கி அதன் மூலம் பாதுகாத்துக் கொள்வதுதான்.  இதை விட்டால் வேறு வழியில்லை என்கிறது “வேறுபாடுகளின் தேவை” (Law of Requisite Variety” என்ற ஒரு விதி.

“A species continues to exist primarily because its members can block the flow of variety into the gene-pattern, and this blockage is the species most fundamental need.  Natural selection has shown the advantage to be gained by taking large amount of variety (as information) partly into the system so that it does not reach the gene pattern.” [10]

ஒரு உயிரினத்தின் உறுப்பினர்கள்  அவ்வுயிரினத்தின் மரபணுக்களை தடங்கல்களிலிருந்து  காக்கிறார்கள். தனி ஒரு உயிரின் இழப்பினால் சிக்கல் இல்லை. உதாரணமாக ஒரு உயிர் தனது குட்டிகளை காக்க தனது உயிரை அளிக்க தயாராக இருக்கும். இதன் மூலம் அந்த உயிரின் மரபணுக்கள்  செழிக்கும் என்பதால் அவ்வாறு அது செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

கற்கவேண்டிய பாடங்கள்:

இனி இதுவரை பார்த்த  கருத்துக்களைக் கொண்டு நாம் கற்கவேண்டிய பாடங்கள் என்னவென்று பார்ப்போம்.

 1. அறிவே அடிப்படை: தமிழ்ச் சமூகத்தின் தற்பொழுதைய சிக்கல்களைக்கண்டு அதன் காரணமாகப் பெரும்பாலானோர் கருதுவது நம்மில் ஒற்றுமையில்லை, சாதிமதப் பிளவுகள், மூடநம்பிக்கைகள் எனப் பல காரணங்கள். இவை சரியென்றாலும், அடிப்படை சிக்கலை விளக்குவதில்லை. இந்த சிக்கல்களுக்கு அறிவியல் கூறும் ஒரு சுருக்கமான பதில் — நம்மிடம் நமது சிக்கல்களைத் தீர்க்கும் அறிவு இல்லை என்பதுதான்.  அடிப்படையில் நமது அனைத்து சிக்கல்களும் அறிவுசார் புதிர்களே. நாம் அறிவைப் பெறுவதற்கு அதிக முக்கியத்துவம்  அளிக்கவேண்டும். முடிவில் அதுமட்டும் தான் நமக்கு வெற்றியை அளிக்கும். அறிவைப்பெறாமல் செயல்பட்டால், நமது வெற்றிதோல்வி என்பது அதிர்ட்டத்தை நம்பியே இருக்கும்.
 2. அறிவியல்முறைக்கு மாறவேண்டும்: தற்பொழுது நமது அறிவு பெரும்பாலும் பொது அறிவின் மூலம் பெறப்பட்டவை அல்லது இறக்குமதி செய்யப்பட்டவை.  இந்த அறிவு தவறாக இருந்தால், அதன்படி நடக்கும் செயல்பாடுகள் அனைத்தும் எதிர்பார்க்கும் பலனைத் தராது. இவ்வுலகில் அறிவியல் முறை ஒன்று மட்டுமே மெதுவாக நடக்கும் நிகழ்வுகளிலிருந்து வேகமாக நடக்கும் நிகழ்வுகள் வரை கண்டுபிடித்து அறிவைத் தரவல்லது. இதைவிட சிறந்த முறை வேறில்லை, அதனால் அறிவியல் முறைக்கு நாம் மாற வேண்டியது மிக அவசியம்.

Science is the only level in the whole complex structure that can encompass knowledge of extremely slow change like ice ages and extraordinary rapid events such as those found in chemical reactions. Science is a kind of Humean uncertainty detector whose success we measure by the extent to which it pins down and cuts back uncertainty – ultimately to the point where it cannot diminish any further. Physics now tells us that irreducible uncertainty is a characteristic of all physical systems, but we know the source and magnitude of this. Such knowledge is an extraordinary achievement, as close to prescience as we will ever come. It is so close that one might want to judge it unnatural knowledge. [2]

 1. அறிவு சூழலுக்கேற்ப அமையவேண்டும்: நாம் அறிவுள்ள சமூகமாக இருந்தால் மட்டும் போதும் பிழைத்துக்கொள்வோம் என்று நினைத்துவிடக்கூடாது. நாம் நமது சூழலுக்கேற்ப அறிவைப் பெற்றிருந்தால்தான் வெற்றியடைவோம். உதாரணமாக மனித குலத்தை அழிக்கும் வாய்ப்புள்ள சிக்கல்களை (உதாரணம்:உலக வெப்பமடைதல், அணு ஆயுதப்போர்) தீர்க்காவிட்டால் மனிதகுலம் அழிய வாய்ப்பிருக்கிறது. அப்படி நாம் அழிந்தாலும்  நம்முடன் அறிவில் ஒப்பிடவே முடியாத பல நுண்ணியிரிகள் பிழைத்துக் கொள்ளும். நமக்குத் தேவை நாம் நமது சூழலில் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கான அறிவே. ஒரு சமூகத்தில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்ட உத்தி  இன்னொரு சமூகத்தில் சூழல் மாறுபடுவதால் வேலை செய்யாமல் போகலாம். வெளிநாடுகளிலிருந்து  இறக்குமதி செய்யும் சித்தாந்தங்கள் நமக்கு பயன்படாமல் போவதும் இதனால்தான்.
 2. அறிவை அறிந்திருக்க அவசியமில்லை: ஒரு உயிர் வாழ்வதற்கு அவ்வறிவை உணர வேண்டிய அவசியமில்லை. அது சூழலுக்கேற்ற அறிவின்படி செயல்படுகிறதென்றால் போதுமானது.  உதாரணமாக தாவரங்களுக்கு மூளையே இல்லை, இருந்தாலும் அவை வாழ்கின்றன. நாம் அழிந்துபோனாலும் கூட அவை வாழ்ந்துவிடும். இதே கருத்தை மனித சமூகங்களுக்கும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு சமூகம் அனைத்து மத மூட நம்பிக்கைகளைக் கொண்டு அதன்படி குருட்டுத்தனமாக ஏனென்று ஆராயாமல் செயல்பட்டாலும், அதன் செயல்பாடுகள் சமூக சூழலுக்கேற்ப இருந்தால் போதும் அவை வெற்றிபெற்று விடும். ஆனால் அதே நேரம் ஒரு பகுத்தறிவான சமூகம் தனது சூழலுக்கேற்ற அறிவில்லாமல் செயல்பட்டால் அழிந்துபோகும். இயற்கைக்கு நமது புத்திசாலித்தனமோ பகுத்தறிவோ முக்கியமல்ல. நமது செயல்பாடுகள் சூழலுக்கேற்ப இருக்கிறதா என்பதை வைத்தே எடைபோடும்.
 3. பல்வகை உத்திகளின் தேவை: எதிரி பல்வேறு உத்திகளை பயன்படுத்தும்பொழுது, அதற்கு இணையாகக் குறைந்தது அதே அளவு வேறுபாடான உத்திகளைப் பின்பற்றுவது அவசியம். அவர்கள் பின்பற்றும் அதே உத்திகளைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை, ஆனால் எண்ணிக்கை முக்கியம். அவ்வாறு இல்லையென்றால் தோல்வி நிச்சயம் என்று  “வேறுபாடுகளின் தேவை” (Law of Requisite Variety) விதியின்  மூலம் அறியலாம். இன்றைய சூழலில் அரசியல் மூலம் சிக்கல்களைத் தீர்த்தல் என்ற உத்தி பிரபலமாக இருக்கிறது. இந்த உத்தி தேவை, ஆனால் இது மட்டும் போதாது என்பதை உணர்ந்து எதிரிகளைவிட அதிக அளவு உத்திகளைக் கையாளப் பழகவேண்டும்.
 4. எதிரியின் பலமோ அளவோ முக்கியமல்ல: ஒரு உயிரினம் வெளியுலகிலுள்ள தடங்கல்கள் மரபணுக்களைச் சென்று தாக்கியளிக்காமல் பாதுக்காக்கின்றது. அதுபோல ஒரு சமூகம் தனது அடையாளத்தை அந்நிய தடங்கல்களிலிருந்து பாதுகாக்கவேண்டும். எதிரியின் பலத்தைப் பார்க்காமல், நாம் முக்கியமாகப் செய்யவேண்டியது எது மாதிரியான தடங்கல்கள் நமது அடையாளத்தை அழிப்பதற்கு வீசப்படுகின்றன என்று பார்த்து அவற்றிலிருந்து அடையாளத்தைப் பாதுகாக்கவேண்டும். இதற்கு சிறந்த உதாரணம் யூதர்கள்தான். அவர்களை  விட பலம் வாய்ந்த பல அரசுகள் அழிக்க முனைந்தாலும்,  முடிவில் யூதர்கள் இருக்கிறார்கள். ஆனால் பலம் வாய்ந்த அந்த மக்களோ அரசுகளோ இன்று இல்லை. இதற்கு முக்கிய காரணம் யூதர்கள் தங்கள் அடையாளங்களைப் பாதுகாத்ததுதான். இதைப்பற்றி  “தமிழுணர்வு எங்கிருந்து வருகிறது, அதன் சமூக தாக்கம் என்ன?” என்ற கட்டுரையில் ஏற்கனவே அலசியிருக்கிறோம்.

“Regulation in biological systems certainly raises difficult problems… Largeness in itself is not the source…what is usually the main cause of difficulty is the variety in the disturbances that must be regulated against… When the effects of size are distinguished from those that affect the variety in disturbances, it will usually be found that the former is in itself irrelevant, and what matters is the latter.” [10]

 1. அறிவை அடுக்குதல் (Accumulation of Knowledge): பல விலங்குகளுக்கு (காகம், குரங்கு), கருவிகளை உருவாக்கி உபயோகிக்க முடியும். சில எறும்புகள் விவசாயமும் செய்கின்றன. ஆனால் எந்த ஒரு விலங்கும் மனிதனைப் போல முன்னேற முடியவில்லை. அதற்கு முக்கிய காரணமாக உயிரியலாளர்கள் கருதுவது என்னவென்றால் மனிதனால் ஒருவன் உருவாக்கிய கருவியை இன்னொருவனால் மாற்றி சிறந்ததாக்க முடியும். இருவேறு கருவிகளை இணைத்து புதிதாக ஒரு கருவியை உருவாக்க முடியும். அதனால் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் காலப்போக்கில் சிறந்ததாகிக் கொண்டே செல்கின்றன; புதிய புதிய கண்டுபிடிப்புகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் மற்ற விலங்குகளினால் அது முடிவதில்லை.  இன்று நாம் காணும் மனிதனுக்கும், 2000 வருடங்களுக்கு முன்வாழ்ந்த மனிதர்களுக்கும் அடிப்படை புத்திகூர்மையில் எந்த வித்தியாசமும் இல்லை. நாம் ஏன் இன்று முன்னேறியிருக்கிறோம் என்றால், இதுவரை மனித சமூகம் பெருக்கிவைத்துள்ள அறிவினால் மட்டும்தான். இன்று ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு பொருளாதார நிலையில் உள்ளன. இதற்கு அந்த நாடுகள் தேக்கிவைத்துள்ள அறிவுதான் காரணம் என ஏற்கனேவே பார்த்தோம்.

மேற்குலகில் ஆராய்ந்து பதிப்பிக்கப்பட்ட கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு, மற்ற ஆராய்ச்சியாளர்கள் புது அறிவைப்படைக்கிறார்கள். இதுதான் அவர்களின் அறிவு  முன்னேற்றத்திற்கு உதவிய முக்கியமான காரணம். ஆனால் நமது சமூகத்தில் எழுதப்படும் கட்டுரைகள் தனியாகவே பெரும்பாலும் நிற்கின்றன. தமிழ்ச் சமூகத்தில் நாம் எவ்வாறு கூட்டு முயற்சியில் அறிவைப் பெருக்கவேண்டும் என்று பார்க்கவேண்டும்.

 1. அறிவை வலைப்பின்னல்களில் பொருத்துதல் (Embodying knowledge in human networks): சமூகம் ஒரு சிக்கலான அமைப்பு. அதனைத் தீர்ப்பதற்கான அறிவைப் பெறுவது கடினம். அவ்வாறான அறிவு இருந்தாலும், அவை பல்வேறு துறைகளில் பிரிந்து கிடக்கும். இதனால் சமூக சிக்கல்களைத் தனிமனிதனாகத் தீர்ப்பது என்பது பெரும்பாலும் முடியாத காரியம். அதனால் பல்வேறு துறை வல்லுநர்களின் கூட்டு முயற்சியினால்தான் சாத்தியமாகும். மேலும் அறிவு என்பது அறிவியலார்களிடம் மட்டும் இல்லாமல், மக்களிடம் அறிவைப் பரப்பி அவர்களை சமூக வலைப்பின்னல்களில் இணைக்கவேண்டும். இது ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியைப் பெருக்கும்.

“The social and economic problem that we are truly trying to solve is that of embodying knowledge and knowhow in networks of humans.”  [6]

நமது தமிழ்ச்சமூகத்தில் அதுபோன்ற கூட்டு வலைப்பின்னல்களை உருவாக்கி சிக்கல்களை ஆராய முயலவேண்டும். அவற்றை செய்யாமல்  மேற்குலகிலுள்ள நூல்களை எல்லாம் மொழி பெயர்த்து பதுப்பித்தாலும் எந்த ஒரு பெரிய பலனும் இருக்கப்போவதில்லை.

 1. மதங்களின் எதிர்காலம்: அறிவுதான் உயிர்கள் வாழ்வதற்கு அடிப்படையென்றால், மனிதனை சிந்திக்கவிடாமல் தடுத்து வந்திருக்கின்ற மதங்கள் ஏன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்ற ஆச்சரியமான கேள்வி எழுகிறது. இவ்வாறு அறிவைத் தடுக்கின்ற மதத்தை பின்பற்றிய சமூகங்கள் அழிந்திருக்கவேண்டும், ஆனால் நடக்கவில்லை. இதற்கு காரணங்கள்:
 • ஒரு சமூகம் அழியாதிருக்க அதன் அடையாளத்தை அது பாதுகாக்க வேண்டும் என்று பார்த்தோம். மதங்கள் தங்கள் அடையாளங்களை பகுத்தறிவற்ற கட்டுக்கதைகளை நம்பி அமைத்திருக்கிறது. நவீன அறிவியல் கருத்துக்கள் இந்த அடையாளத்தை அழிக்கும் கருத்து என்பதால் மதங்கள் அவற்றை எதிர்க்கின்றன. மத கடும்போக்குவாதிகள் அறிவியலை எதிர்த்தாலும், அதே அறிவியல் மூலம் வருகின்ற ஆயுதங்களை எதிர்ப்பதில்லை. அவர்களின் எதிர்ப்பு என்பது எது அவர்களின் மத அடையாளத்தை அழிக்க முனைகிறதோ அதை நோக்கியே இருக்கும். உண்மையில் நாம் இதுவரை ஆராய்ந்த கருத்துக்களின்படி அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், மத அடிப்படையிலான சமூகங்கள் அழிந்துபோகும். அவர்களின் அறிவியல் மீதான எதிர்ப்பு என்பது அறிவியல் பூர்வமானதே என்பதுதான் வேடிக்கை.
 • மதங்களில் உள்ள அறிவு தாவரங்களில் உள்ள அறிவைப்போன்றது. அவற்றில் உள்ள அறிவு அவற்றை காக்கிறது, ஆனால் அவை அவ்வறிவை உணர்வதில்லை, அவ்வாறு உணரவேண்டிய அவசியமில்லை. மதங்கள் பெரும்பாலும் மனிதமூளையின் தன்மைக்கேற்றவற்று தன்னை தகவமைத்து அதை நன்றாகப் பயன்படுத்தி மக்களை கட்டுப்படுத்துகிறது. மேலும் மதத்தின் செயல்பாடுகள் பல்லாயிரம் ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சியடைந்து இந்த தன்மையை செதுக்கி பெற்றிருக்கிறது. மதங்களில் பொதிந்துள்ள அறிவு என்பது பெரும்பாலும் மனிதமூளையின் தன்மையைப் பற்றிய அறிவு.
 • பண்டைய காலத்தில் அறிவியல்முறை என்று இருந்ததில்லை. அதனால் புதிதாக வரும் ஒரு கருத்து உண்மையா பொய்யா என்ற அறியும் திறனும் ஒரு சமூகத்தில் இல்லை. மேலும் அக்கருத்துக்களினால் பயனைவிட சமூக ஒழுங்கு குலைவதற்கான வாய்ப்புகளே அதிகமாக இருந்ததால், புதிய அறிவிற்கான எதிர்ப்பு இருந்திருக்கலாம். உதாரணமாக கத்தோலிக்க மதத்திலிருந்து, பிராட்டஸ்டன்ட் மதம் உருவாக்கியதனால் ஏற்பட்ட முப்பத்துவருடப் போரில் மத்திய ஐரோப்பாவில் மூன்றில் ஒருபங்கு மக்கள் இறந்தனர்[8]. இதனால்தான் மதங்கள்  மாற்று கருத்துக்கள் அனைத்தையும் (அவை உண்மையே ஆனாலும்) எதிர்க்கின்றன.

நவீன அறிவியலின் நுழைவு மதங்களுக்கு பெரிய சவாலாக அமைந்துள்ளது. அறிவியல் சமூகத்திற்கு பயனுள்ளதாகவும் இருக்கிறது, ஆனால் அதன் நுழைவு மத அடையாளத்திற்கு எதிராகவும் உள்ளது. அறிவியலைப் பின்பற்றாவிட்டால் சமூகம் பின்தங்கிவிடும். அதன் விளைவாக அறிவியலைப் பின்பற்றும் பலமான சமூகத்தினிடம் அடிமைப்படலாம்.  இதற்கு நல்ல உதாரணம்  இசுலாமியப் பேரரசுகள். மேற்குலகு அறிவியலைப் பின்பற்றி முன்னேற ஆரம்பித்தன, ஆனால் இசுலாமியப் பேரரசுகள் அறிவியலைப்பின்பற்றாமல் எதிர்த்தன. இதன் விளைவாக பலம்பெற்ற மேற்குலக நாடுகள் உலகிலிருந்த இசுலாமியப் பேரரசுகளை அழித்தன (உதாரணம் ஆட்டமன் பேரரசு). மதங்கள்  அறிவியலைப் புறம் தள்ளி பிழைத்துவிட முடியாது. மதங்கள் வாழுமா வாழாதா என்பது அம்மதங்கள் அறிவியலுடன் எவ்வாறு சமரசம் செய்துகொள்ளுகின்றன என்பதைப் பொறுத்தே அமையும்.

முடிவுரை:

அறிவு என்பது மனித சமூகம் உட்பட அனைத்து உயிர்களின் வாழ்விற்கும் அடிப்படை. சமூகத்தில் நாம் காணும் சிக்கல்கள் அனைத்தையும் அறிவுசார் புதிர்களாகப் பார்த்து, அறிவைக்கண்டறிந்து, சிக்கல்களைத் தீர்க்க முயலவேண்டும். அதற்கு பல்துறை அறிவுகளை தமிழ்ச்சமூகத்திற்கு கொண்டுவந்து, அவற்றை அறிவாளர்களைக் கொண்ட வலைப்பின்னல்களில் பதிக்க வேண்டும். அவ்வாறான அறிவாளர்களின் கூட்டு முயற்சியினால்தான் நமது சிக்கல்களைத் தீர்ப்பது எளிதாகும். மக்களிடமும் அறிவைப் பரப்ப வேண்டும். இது பொருளாதாராத்திலும் அறிவிலும் நாம் ஒரு முன்னேறிய  சமூகமாக  மாறுவதற்கு அடிப்படையாக இருக்கும்.  இதைவிட சிறந்தவழி வேறில்லை.

பயன்படுத்திய நூல்கள்:

 1. Crystal, David. Language death. Ernst Klett Sprachen, 2000.
 2. Plotkin, Henry C. Darwin machines and the nature of knowledge (pp. xv, 240, 244). Harvard University Press, 1997.
 3. Ayres, Robert U. Information, entropy, and progress: a new evolutionary paradigm (pp. xv). Springer Science & Business Media, 1997.
 4. Vedral, Vlatko. Decoding reality: the universe as quantum information (pp. 58). Oxford University Press, 2012.
 5. Stiglitz, Joseph E., and Bruce C. Greenwald. Creating a learning society: A new approach to growth, development, and social progress. Columbia University Press, 2014.
 6. Hidalgo, Cesar. “Why information grows.” The evolution of Order, from Atoms to Economies (pp. 179). New York: Basic Books (2015).
 7. Hart, BH Liddell. Why don’t we learn from history? (pp. 22) Lulu Press, Inc, 2015.
 8. Russell, Bertrand. History of Western Philosophy: Collectors Edition. Routledge, 2013.
 9. David Deutsch: Chemical scum that dream of distant quasars, TED talk
 10. Ashby, W. Ross. An introduction to cybernetics (pp.212, 244). Chapman & Hall Ltd, 1961.

 

This entry was posted in அரசியல், அறிவு, சமூக அறிவியல், சமூகம், பகுத்தறிவு. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s