தமிழுணர்வு எங்கிருந்து வருகிறது, அதன் சமூக தாக்கம் என்ன?

வரலாற்றை உற்று நோக்கினால் ஒன்று தெளிவாகத் தெரியும். தமிழ் நூல்களைத்தேடி சேகரித்த உ. வே. சாமிநாதர்,  தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளிலிருந்து  இன்றுவரை தமிழ் பற்றுடன் இயங்கும் பலரை இயக்குவது அவர்களிடமுள்ள தமிழுணர்வுதான் என்பதில் எந்த ஐயமுமில்லை. தமிழ் தழைக்க இதுவரை மாபெரும் உந்து சக்தியாக உணர்வுகளே இருந்து வந்திருக்கிறது,  மாறாக சுயநலம் அல்ல. தமிழுணர்வுகள் மொழி வளர்ச்சிக்கு மட்டுமின்றி, அரசியல், பொருளாதார உரிமைப் போராட்டத்திலும் பெரும்பங்கு வகிக்கிறது. அதே நேரம் பெரும்பாலான மக்கள் நமக்கென்ன என்று அவர்களின் குடும்ப நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுகின்றனர். மொழி அழிவோ, அரசியலுரிமை இழப்போ, மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதோ,  ஈழ இனப்படுகொலையோ  அவர்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை. இது சில முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. ஏன் ஒரு பங்கு மக்கள் தங்களுக்கு இழப்பு இருந்தாலும் பரவாயில்லை என்று பொது நலனுக்காக உழைக்கின்றனர், இன்னொரு பங்கு மக்கள் தனது நலன் சார்ந்து மட்டும் இயங்குகின்றனர்? சிலர் எதிரிகளுக்கு துணைபோகின்றனர்.  இது நமது மக்களின் குணம் மட்டுமா, இல்லை பொதுவாக அனைத்து சமூகங்களும் இவ்வாறுதானா? பகுத்தறிவின் பங்கு என்ன? ஆயிரக்கணக்கான பகுத்தறிவாளர்கள்  பல மேடைகளில் பலபத்தாண்டுகளாக கூறியதை செவிமடுக்காமல், பேசவே முடியாத சல்லிக்கட்டு மாட்டிற்காக  இலட்சக்கணக்கில் போராட்டம் நடத்தினர்.  மக்களுக்கு பகுத்தறியும் திறன் உள்ளதா இல்லையா? பகுத்தறிவுக்கும் உணர்வுகளுக்கும் என்ன தொடர்பு?  எவ்வாறு அனைத்து மக்களையும் போராட்டத்தில் ஈடுபடுத்துவது?  இக்கேள்விகளுக்கான பதில்களை அறிவியல் தத்துவங்களைக் கொண்டு விளக்குவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.  மொழி வளர்ச்சிக்கு,  நமது இருப்பை தக்க வைப்பதற்கு, அரசியல் சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கு  இந்த அறிவியல் கருத்துக்களை அறிந்து கொள்வது  அதிமுக்கியம்  என்பது எனது கருத்து.  முழுவதும் படிக்க நேரமில்லாதவர்கள்  தடித்த எழுத்துக்களில் உள்ளவற்றை மட்டும் படித்து விட்டு  “நாம் கற்கவேண்டிய பாடங்கள்” என்ற பகுதிக்குச்செல்லவும்.

அறிவியல் முறையின் ஒரு சிறப்பான அம்சம் என்னவென்றால் பார்ப்பதற்கு வெவேறு நிகழ்வுகளாகத் தோன்றினாலும், அந்நிகழ்வுகளை இணைத்து சில சொர்ப்பமான தத்துவங்களை கொண்டு தெளிவாக விளக்கிவிடும். இக்கேள்விகளுக்கான பதில்களைப் புரிந்துகொள்ள நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு அடிப்படை கருத்து என்னெவென்றால் மனிதர்களின் குறிக்கோள்கள் எங்கிருந்து வருகின்றன என்பதுதான். முதலில்  குறிக்கோள்கள் எங்கிருந்து வருகின்றன என்று பார்ப்போம், பின்பு அதைக்கொண்டு சமூகத்தைப் புரிந்துகொள்ள முயல்வோம்.

குறிக்கோள்களின் இயற்பியல் அடிப்படை:

உயிர்கள் உயிரற்ற பொருள்களிலிருந்து தானாகப் பரிணமித்தவை. அப்படி உயிரற்ற பொருள்களிலிருந்து தோன்றிய ஒன்றுக்கு ஏன் குறிக்கோள்கள் இருக்கவேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இவ்வுலகில் உள்ள அனைத்திற்கும் அடிப்படை இயற்பியல் விதிகளாக இருப்பதனால் குறிக்கோள்களின் அடிப்படையும் இயற்பியல் விதிகளிலிருந்தே ஆரம்பிக்கவேண்டும். உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் முக்கியப் பங்கை வகிப்பது இயற்பியலின் இரண்டாவது விதி [1,2]. இவ்விதியை எளிதாக விளக்குவதென்றால் வெப்பமானது  சூடான இடத்திலிருந்து குளிரான இடத்தை நோக்கி நகருவதை எடுத்துக்கொள்ளலாம். ஓர் சூடான தேநீர் கோப்பையை ஒரு அறையில் வைத்தால், அந்தக் கோப்பையில் உள்ள வெப்பம் கோப்பையை விட்டு பரவ ஆரம்பிக்கிறது. முடிவில் கோப்பையின் சூடும் அறையின் சூடும் ஒரே நிலையை அடைகிறது. இதுபோன்ற  வெப்பநிலை பரவல் நமது பிரபஞ்சம் முழுவதும் நடக்கிறது.  இயற்பியலின் விதிகளின்படி இந்த பிரபஞ்சம் வெப்ப சமநிலை அடைந்து உயிர்வாழ முடியாதவாறு அனைத்தும் அழியும். இதை இயற்பியலாளர்கள் வெப்ப அழிவு (heat death) என்று கூறுகிறார்கள்.  அவ்வாறு நடக்க பல பில்லியன் ஆண்டுகளை இருப்பதால், அதைப்பற்றி நாம் இப்பொழுது கவலைகொள்ளத் தேவையில்லை.  இந்த வெப்பநிலை பரவலை ஆற்றலின் சிதைவு என்றும் கூறலாம். ஆற்றலின் சிதைவு  இயற்பியலின் ஒரு அடிப்படை குறிக்கோள் [2,3]. நாம் இவ்வுலகில் உருவாக்கும் எந்த ஒரு பொருளும் காலப்போக்கில் பயனற்று சிதைவுறுவதும் இந்த இயற்பியலின் இரண்டாவது விதிதான் காரணம்.

இவ்வாறு அனைத்தும் காலப்போக்கில் சிதைவதுதான் இயற்பியலின் விதி என்றால், ஏன் உயிர் உருவாகவேண்டும்? பரிணாம வளர்ச்சியில் முதலில் ஒருசெல் உயிரியாகத் தோன்றிய உயிரினம், இன்று பல தாவரங்களாக, விலங்குகளாக, மனிதனாக, சமூகங்களாக பல தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இருப்பதைப் பார்த்தால்  இரண்டாவது விதிக்கு எதிராக செயல்படுவதுபோல தோன்றும். உண்மையில் என்ன நடக்கிறதென்றால் உயிர்கள் இரண்டாவது விதியை மீறாமல் (இயற்கை விதிகளை யாராலும் மீற முடியாது), அதிலுள்ள ஒரு ஓட்டையை பயன்படுத்திக் கொள்கின்றன. அந்த ஓட்டை என்னவென்றால் இரண்டாவது விதிக்குத் துணையாக இவ்வுலகை வேகமாக சிதைத்தால், இரண்டாவது விதி உயிர்கள்வாழ துணைபுரியும். உதாரணமாக ஒரு சர்க்கரைக் கட்டியை தரையில் வையுங்கள். இயற்பியல் விதிகளின்படி இது தானாக சிதைவுற நீண்டகாலமாகும், ஆனால் அங்கெ வரும் எறும்புகள் சிலநிமிடங்களில் சர்க்கரை கட்டியை சிதைக்கின்றன . பூமிக்கடியில் இருக்கும் எண்ணை, நிலக்கரி மனிதர்களால் எடுக்கப்பட்டு வேகமாக சிதைக்கப்படுகின்றன. உயிர்கள் வாழ்வது ஏனென்றால், அவை இரண்டாவது விதியின்படி சிதைவுறுதலுக்குத் துணைபுரிவதுதான் [3].

உயிர்களின் குறிக்கோள்கள் எங்கிருந்து வருகின்றன?

இவ்வுலகில் வாழும் உயிர்களின், குறிப்பாக தாவரங்கள் மற்றும் விலங்குகளின், அடிப்படை குறிக்கோள் தற்காத்து இனவிருத்தி செய்தல் [4]. சிதைவுறுத்தல் இயற்பியலின்  அடைப்படை குறிக்கோளென்றால், உயிரிகளின் குறிக்கோளான இனவிருத்தி எங்கிருந்து வருகின்றன? ஜெரமி  இங்கிலாந்து [2] என்ன கண்டுபிடித்தார் என்றால், சிதறப்பட்ட வெள்ளி நானோ தண்டுகளை ஒளி வெள்ளத்தால் மிளிர வைக்கும்பொழுது, அத்தண்டுகள் தானாக ஒழுக்கமாகத் திரண்டு ஆற்றல் சிதைவுறுதலைக் கூட்டின. இதிலிருந்து அவர் கூறுவது என்னெவென்றால், உயிர்களின் ஆரம்பம் இவ்வாறு மூலக்கூறுகள் ஒன்றிணைந்து சிதைவுறுதலைக் கூட்டியிருக்கும். அவ்வாறு ஒன்றிணைந்த மூலக்கூறு அமைப்பு தன்னைப்போல பல பிரதிகளை உருவாக்கும். தனியாக சிதைப்பதைவிட, பல பிரதிகளின் மூலம் சிதைப்பதால் சிதைவுறுதலின் வேகம் கூடும் என்பதால், ஒரு மூலக்கூறு அமைப்பு தன்னைப்போல பிரதியை உருவாக்குவதற்கு இயற்பியலின் இரண்டாவதுவிதி  துணைபுரியும். இவ்வாறு பல பிரதிகளும் அந்தப்பிரதிகளுக்குள் சிலவேறுபாடுகள்  இயற்கையில் தோன்றுவதால், அந்தப் பிரதிகளுக்கிடையே இடார்வினின்  வாழ்க்கைக்கான போட்டி ஆரம்பிக்கிறது. இந்தப் பிரதிகளுக்கிடையேயானப் போட்டியில், எந்தப்பிரதி அதிகமாக ஆற்றலை சிதைக்கிறதோ, அந்தப்பிரதி தன்னைப்போன்ற மேலும் பல பிரதிகளை உருவாக்கும். இவ்வாறுதான் இடார்வினின் பரிணாம தத்துவம் உருவாகியது என்கிறார் ஜெரமி இங்கிலாந்து.

“Winning Darwin’s game happens to be about dissipating more than your competitor.” [2]

ஒரு உயிரின் குறிக்கோளான இனப்பெருக்கம் என்பது இயற்கையின் குறிக்கோளான சிதைவுறுதல் உருவாக்கிய துணை குறிக்கோள்.[3]

ஒரு உயிர் தன்னை தற்காத்துக் கொள்ளும் குறிக்கோள் இனப்பெருக்க குறிக்கோளின் கீழ் வருகிறது. ஏனென்றால் தன்னை தற்காத்துக்கொள்ளாமல், தனது இனத்தை பெருக்கமுடியாது. இந்த குறிக்கோள்களை விலங்குகளில் தெளிவாகக் காணலாம். உதாரணமாக ஆடுமாடுகள் தாவரங்களிலுள்ள சக்தியினை சிதைப்பதன் மூலம் உயிர்வாழ்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன. உயிர்களின் குறிக்கோள்களான தற்காப்பும் இனப்பெருக்கமும் என்பன ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபணுக்கள்  மூலம் துல்லியமாக கடத்தப்படுகின்றன. இந்த மரபணுக்களை தாவர விலங்குகளை உருவாக்கி இயக்கும் நிரல் (Program) எனலாம்.

மனிதர்களின் குறிக்கோள்களின் தோற்றம்:

இனப்பெருக்கம் விலங்குகளின் முதன்மை குறிக்கோளாக இருக்கும்பொழுது, விலங்குகளிலிருந்து பரிணமித்த மனிதர்கள் அவ்வாறு உணர்வதில்லை. நாம் கருத்தடை செய்கிறோம், தன்னுடைய நலனுக்கு மட்டுமில்லாமல் பொது நலனுக்காகவும் செயல்படுகிறோம், நாட்டுக்காக சிலர் உயிரையும் முன்வந்து கொடுக்கின்றனர். இவற்றை எவ்வாறு விளக்குவது?

இதைப்புரிந்துகொள்ள மனிதனின் பரிணாம வரலாற்றைப் பார்க்கவேண்டும். மனிதன் பண்பாட்டைக் கொண்ட சமூகத்தில் வாழ்பவன். மனிதர்கள்  ஒரு சமூக விலங்கு,  அவனால் தனியாக வாழ முடியாது. அவனுடைய இனப்பெருக்க குறிக்கோள் ஒரு சமூகத்தின் அங்கமாக இருக்கும் பொழுதுதான் வெற்றியடைய வாய்ப்புகள் அதிகம். அதே நேரம் மனித சமூகம் பல குழுக்களாக இருக்கும்பொழுது, அவற்றிற்கிடையேயான பரிணாமப் போரும் (Intergroup conflicts) ஏற்படுகிறது. எந்த சமூகம் வெற்றியடைகிறதோ, அந்த சமூக மக்கள் இனவிருத்தியில் வெற்றியடைகின்றனர். தோல்வியுற்ற சமூகங்கள் அழிகின்றன. ஒரு மனிதனின் இனப்பெருக்க வெற்றி என்பது இரண்டு பரிணாமப் போட்டிகளை நம்பியுள்ளது:  முதலில்  ஒரு சமூகத்திலுள்ள  மற்றவர்களுடன் போட்டி போட்டு வெல்ல வேண்டியது அவசியம். இரண்டாவதாக,  அதே நேரத்தில் சமூகத்தில் உள்ள அனைவருடன் ஒத்துழைத்து மற்ற சமூகங்களுடன்  உருவாகும் போர்களில்  வெற்றிபெறுவதும் முக்கியமாகிறது. இவ்வாறான தனிமனித போட்டியும், குழு ஒத்துழைப்பும், குழுக்கிளிடையேயான போட்டியும் கலந்த பல ஆயிரக்கணக்கான வருட பரிணாம வளர்ச்சியின் விளைவுதான் இன்றைய மனிதன். இந்த பரிணாம வளர்ச்சியை மரபணு-பண்பாட்டு கூட்டு பரிணாமம் (Gene-culture co-evolution) [5,6] என்று உயிரியலாளர்கள் அழைக்கிறார்கள்.  மனிதனின் மரபணுக்களும் பண்பாடும் ஒன்றை ஒன்று மாற்றி இசைந்து செயல்படுகின்றன. இதன் விளைவாக சமூகத்திலிருந்து மொழி, சமூக பழக்கவழக்கங்கள், ஒழுக்கம், நெறிமுறைகள், விழுமியங்கள் ஆகியவற்றை கற்று அகப்படுத்த முடியும்படியாக மரபணுக்கள் தகைமையைப் பெற்றுள்ளன. இதன் விளைவாக மனிதனின் குறிக்கோள்கள் மரபணுக்களிடமிருந்தும், பண்பாட்டிலிருந்தும் வருகிறது. மனிதனின் தன்மையை  மரபணுக்கள் மட்டுமோ அல்லது பண்பாடு மட்டுமோ தீர்மானிப்பதில்லை. இரண்டும் சேர்ந்த கலவைதான் மனிதன்.   இதன் முக்கிய விளைவுகள்:

 1. மூளை வெற்றுப்பலகை அல்ல [7]:  மனிதன் பிறக்கும்பொழுது மூளையில் ஒன்றுமே இல்லாத  வெற்றுப்பலகையாகப்  பிறப்பதில்லை. மொழியையும், பண்பாட்டையும் கற்கும் விதமாக மூளை மரபணுக்களால் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. எந்த மொழியை எந்த பண்பாட்டை கற்கவேண்டும் என்று மூளையில் தகவல் இல்லை. குழந்தை எந்த சமூகத்தில் வாழ்கிறதோ, அதிலிருந்து கற்றுக்கொள்ளும் .
 2. இனப்பெருக்க குறிக்கோள்: விலங்குகளிலுள்ள அடிப்படை இனப்பெருக்க குறிக்கோள் மனிதர்களிலும் உள்ளது. இதுவும் மரபணுக்கள் வழியாக மூளையில் எவ்வாறு செயல்படவேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. இது நேராக “நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ளவேண்டும்” என்று எழுதப்படவில்லை. இது வேறு விதமாக பாலியல் உணர்வுகளால் (Sexual instincts) எழுதப்பட்டுள்ளது. இதனால்தான் நாம் எளிதாக மரபணுக்களை ஏமாற்றி கருத்தடை செய்யமுடிகிறது.  மேலும் ஒரு சமூகத்தில் இனப்பெருக்க வெற்றி (குறிப்பாக ஆண்களின்) ஒருவரின் தகுதியை பெரும்பாலும் நம்பி இருப்பதால், மனிதன் தனது தகுதியை உயர்த்துவதற்கான உணர்வுகள் மூளையில் எழுதப்பட்டுள்ளன.  இதனால்தான் மனிதன் பதவிக்கும் பணத்திற்கும் ஆசைப்படுகிறான். அதேபோல குழந்தைகளை பாதுகாத்து வளர்த்தல் போன்ற உணர்வுகளும் மூளையில் மரபணுக்களால் எழுதப்பட்டுள்ளன. குழுந்தைகளைப் பாதுகாக்க பெற்றோர்கள் உயிரையும் கொடுக்க முன்வருவது என்பது இதனால்தான். மேலும் உயிர் காக்கும் பல பயங்களும் (பாம்பு, உயரம்) பரிணாம வரலாற்றில் பயனுள்ளதாக இருந்ததால், அவையும் மரபணுக்கள் வழியாக நமக்கு வருகின்றன. மொத்தத்தில் இனப்பெருக்கம் என்ற மரபணு வழியாக வரும் குறிக்கோள் மனிதனிடமும் உள்ளது, ஆனால் இது நேரடியாக இல்லாமல், பாலியல் உணர்வு (sexual instincts), சமூகத் தகுதியை (social status) உயர்த்துதல் என்ற குறிக்கோள்களாக அமைந்துள்ளன [5,6,7].
 3. சமூக அடையாளம்: மனிதர்களுக்கு இயற்கையாக சமூக அடையாளத்தைப் பெரும் தன்மை அமைந்துள்ளது. உதாரணமாக “நான் தமிழன்” என்ற அடையாளப்படுத்தலை எடுத்துக்கொள்ளலாம். இந்த சமூக அடையாளம் மனிதனின் “தான்” (Self) என்ற சுயத்துடன்  ஐக்கியமாகிவிடுகிறது. இதனால் தனது சமூகத்தின் மீதான தாக்குதலை தன்மீதான தாக்குதலாகவே உணர்கிறான்,  அதனால் தனது சமூகத்தைக் காக்க போராட முன்வருகிறான்.   சில முக்கியமான கருத்துக்கள்:
 4. ஒருவன் சமூக அடையாளத்தைக் கொண்டிருந்தாலும், அந்த அடையாளம் அவனை செயல்படுத்த முக்கியமான நிபந்தனை என்னவென்றால்  ஒரு சமூக அடையாளம் வலுவாக “நான்” என்ற அவனுக்குள் அகப்படுத்தப் பட்டிருக்கவேண்டும். மனிதனுக்கு பலவகையான சமூக அடையாளங்கள் உண்டு. உதாரணமாக ஒரு தமிழனுக்கு,  நான் இந்த மதத்தை சார்ந்தவன், நான் இந்த சாதி, தமிழன், இந்தியன் என்ற பல அடையாளங்கள் இருக்கும். எந்த அடையாளம் ஒருவனுடைய “நான்” என்ற அவனுக்குள் மையமாக உள்ளதோ, அடிக்கடி பயன்படுத்தப் படுகிறதோ, அதுவே அவனை செயல்படுத்தும். [10]
 5. ஒருவன் சமூக அடையாளத்தை எப்பொழுது பெறுகிறான் என்பதை பற்றி ஆராய்ச்சிகள் பொதுவாகக் கூறுவது 13 வயதிலிருந்து 21 வயது வரையான பருவம் [8,9]. இந்த பருவத்தில் எந்த அடையாளம் மையப்படுத்தப் படுகிறதோ,  அந்த அடையாளம் வலுவாக இருக்கும். ஆனால் அதை மாற்ற முடியாததல்ல. உதாரணமாக தான் சார்ந்த சமூகம் தன்னை மோசமாக நடத்தினாலோ அல்லது சமூகத்திலிருந்து தனிமைப் படுத்தப்பட்டதானால் வேறொரு அடையாளத்தை பெறலாம். ஆனால் இயல்பான நிலையில் அந்த அடையாள மாற்றம் எளிதாக நிகழாது.
 6. வலுவான சமூக அடையாளம் கொண்டவன் தனது  சமூகத்தின் மீதான தாக்குதலைத் தன்மீதான தாக்குதலாகப் பார்த்து எதிர்க்கிறான் [10]. மொத்தத்தில் பண்பாடு வழியாக சமூகத்தைக் காத்தல் என்ற குறிக்கோள் மனிதனுக்கு வருகிறது. ஆனால் அந்த குறிக்கோள் எவ்வளவு வலுவாக உள்ளது என்பது அந்த சமூகம் எவ்வாறு மக்களை வளர்த்தெடுக்கிறது என்பதை பொறுத்தே அமைகிறது.  உதாரணமாக மேற்கத்திய நாடுகளில் தனிமனித அடையாளத்திற்கு அதிக முக்கியத்துவமும், சமூக அடையாளத்திற்கு குறைந்த மதிப்பும் அளிக்கப்படுகிறது. அதற்கு மாறாக மத்திய கிழக்கு நாடுகளில் சமூக அடையாளத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால் இது அனைத்து காலங்களிலும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. சமூக அடையாளம் வலுப்பெறுதலும் தளர்தலும் சுழற்சியின் அடிப்படையில் இயங்குகின்றன. மேலும் விவரத்திற்கு என்னுடைய “சமூகத்தின் நான்கு படிநிலை சுழற்சி” என்ற கட்டுரையைப் படிக்கவும்.

இனி இந்த குறிக்கோள்களின் சில முக்கிய செயல்பாடுகளையும் பண்புகளையும் பார்ப்போம்

 • மனிதனுக்குள்ள மேற்கூறிய இரண்டு குறிக்கோள்களுக்கும் அடிப்படை இயற்பியலின் “ஆற்றல் சிதைவு” குறிக்கோள்தான். எந்த சமூகம் ஆற்றலை அதிகமாக சிதைக்கிறதோ அதுதான் பலமானதாக இருக்கும். இதற்கு நீங்கள் உலக நாடுகளின் ஆற்றல் உபயோக அட்டவணையைப் பார்த்தாலே புரியும். அதைப்போல தனிமனிதனின் தகுதி மற்றும் செல்வத்திற்கேற்ப அதிக குழந்தைகள் பெறுவது அண்மைய காலம்வரை நடந்து கொண்டிருந்தது. தற்பொழுது கருத்தடை கண்டுபிடிப்புக்குகளாலும் பண்பாட்டு மாற்றங்களாலும் மரபணுக்களை ஏமாற்றமுடிகிறது.
 • இந்த இரண்டு குறிக்கோள்களும் (தனிமனித நலன், சமூக நலன்) ஒருவகையான முறுகலும் ஒத்துழைப்பும் கலந்து இயங்கிவருகின்றன.  தனிமனித சுயநலம் அதிகரிக்கும் பொழுது,  சமூக நலன் பாதிக்கப்படுகிறது. சமூக நலனும் சமூக அடையாளமும்  முன்னிறுத்தப்பட்டு தனிமனித நலன் பின் தள்ளப்படும் பொழுது, பல காரணங்களால் பொருளாதாரம் வளர்ச்சியடைவதில்லை. சமூக ஒற்றுமை பலமளிக்கும், ஆனால் பொருளாதார பின்னடைவு வீழ்ச்சியளிக்கும். பொருளாதார பலம் சமூகத்தை வலிமையாக்கும், ஆனால் சமூக ஒற்றுமையின்மை வீழ்ச்சியளிக்கும்.  இந்த சிக்கலினால்தான் சமூகம் ஒரு நிலையில்லாமல் ஒரு சுழற்சியில் மாட்டிக்கொள்கிறது.
 • ஒரு முக்கியமான கருத்தை நினைவில் கொள்ளவேண்டும். இந்த குறிக்கோள்கள் சராசரி மனிதனின் பண்புகள். ஒரு சமூகத்தில் மனிதர்களின் மரபணுக்களில் வேறுபாடுகள் உண்டு. அந்த வேறுபாடுகளுக்கேற்ப சிலருக்கு சமூக அடையாளத்தைப் பெரும் பண்பு இயற்கையிலேயே குறைவாக இருக்கலாம், அதுபோல சிலருக்கு சமூக அடையாளம் மிக வலிமையாக இருக்கலாம். ஆனால் சராசரி மனிதனுக்கு இக்குறிக்கோள்கள் பொருந்தும்.
 • இந்த குறிக்கோள்கள் உணர்வுகளின் வழியாக செயல்படுத்தப் படுகின்றன, பகுத்தறிவின் வழியாக அல்ல. அப்படியென்றால் பகுத்தறிவின் வேலைதான் என்ன என்ற கேள்வி எழுகிறது. அண்மைய உளவியல் ஆராய்ச்சிகள் இதற்கு ஒரு ஆச்சரியமான விடையளித்துள்ளது: பகுத்தறிவு என்பது பெரும்பாலும் உணர்வுகளுக்கு அடிமை . பகுத்தறிவின் வேலை உணர்வுகள் இடும் கட்டளையை வெற்றிகரமாக செய்து முடிப்பதுதான் [11] . இதை உங்களுடைய அனுபவத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். உங்களுடைய அரசியல் நிலைப்பாட்டின் எதிர்நிலையில் உள்ளவர்களில் எத்தனை பேரை உங்களால் பகுத்தறிவால் விளக்கி உங்கள் பக்கம் ஈர்க்க முடிந்துள்ளது என்று பாருங்கள். அதுபோல தொலைக்காட்சியில் நடக்கும் விவாதங்களில் எத்தனை பேர் நிலைமாறியிருக்கிறார்கள்?  குறிக்கோள்கள்  மனிதனை உணர்வுகளால் இயக்குகின்றன. பகுத்தறிவினால் குறிக்கோள்களை எளிதாக மாற்ற முடியாது; அதை நிறைவேற்ற ஒரு கருவியாகப் பயன்படும்.
 • மக்களை ஒருமைப்படுத்தி செயல்படுத்துவதற்கு வலுவான சமூக அடையாளம் மட்டும் போதாது. அவ்வாறு செயல்படுத்துவதற்கு ஏற்றவாறு மக்களிடம் சமூக ஒழுக்கம், நெறிமுறைகள்,  பண்பாட்டு விழுமியங்கள் ஆகியவையும் அகப்படுத்தப் படவேண்டும். மேலும்  சமூக நிறுவனங்களும் (social institutions) அமைக்கப்படுதல் வேண்டும்.
 • சமூக அடையாளம் என்பது மரபணுக்கள் வழியாக வருவதல்ல. அது பண்பாட்டின் வழியாக சிறுவர்கள் வளரும்பொழுது (13-19 வயது) அவர்கள் உள்வாங்கிக் கொள்கிறார்கள். மரபணுக்கள் சமூக அடையாளத்தைப் கற்றுக்கொள்வதற்கான  தன்மையைத் தருகிறது, ஆனால் அடையாளத்தை தீர்மானிப்பதில்லை.  அதனால் பிறப்பை  அடிப்படையாகக் கொண்டு மட்டும்  சமூக ஒற்றுமையை உருவாக்கிவிட முடியாது.
 • இதுவரை எவ்வாறு மரபணுக்களும் பண்பாடும் நமது குறிக்கோள்களை செயல்களை தீர்மானிக்கிறது என்று பார்த்தோம். அப்படியென்றால் மனிதர்கள் தாங்களாக  சிந்தித்து முடிவெடுக்கும் உரிமை (free will) இல்லையா என்ற கேள்வி எழும்.   இதற்கு இல்லை என்பதுதான்  அறிவியலாளர்களிடன் நிலவும் கருத்து [12, 13]. நமக்கு முடிவெடுக்கும் உரிமை இருப்பதுபோலத் தோன்றுவது ஒரு மாயை என்கின்றனர். நம்மை இயக்குவது நமது உயிரியல் கட்டமைப்பு, பண்பாடு,  நமது அனுபவம், மற்றும் சுற்றச்சூழல் காராணிகள். நாம் முடிவெடுப்பது போல தோன்றினாலும், அது உண்மையல்ல. நமது உடலுக்குள்ளே ஒரு ஆவி இருந்துகொண்டு இயக்குகிறது என்பது அறிவியல்படி தவறான கருத்து.

யூதர்கள் ஓர் உதாரணம்:

யூதர்கள் வரலாற்றில் எப்பொழுதுமே ஒரு சிறிய இனமாக இருந்து வந்துள்ளார்கள். பலம்பொருந்திய பண்டைய எகிப்தியர்கள், பாபிலோனியர்கள், ரோமர்கள் தொடங்கி  நாசிகள் வரை அவர்களை கொடுமைப் படுத்தியுள்ளனர்,  அழிக்க முனைந்துள்ளனர். ஆனால் என்னவோ அழிந்தது அழிக்க முனைந்தவர்கள்தான். யூதர்கள் எப்படி இதை சாதித்தார்கள் என்பதை புரிந்து கொள்வது முக்கியம். பொதுவாக பரிணாம தத்துவத்தின் தவறான புரிதல் என்னவென்றால் “பலமானது வாழும், பலமற்றது மறையும்”. உண்மை என்னெவென்றால் தக்கது பிழைக்கும். ஓர் சமூகம்  முற்றிலும் மறைவதற்கு   அச்சமூகத்தில் உள்ள அனைவரும் மரணமாகவேண்டும் என்ற அவசியமில்லை. அவர்கள் அனைவரும் வேறு சமூக அடையாளத்தில் ஐக்கியமாகிவிட்டால் போதும். ஒரு  சமூகத்தை அழியாமல் பாதுகாக்க ஒரு 100 பேர் வேறு சமூகத்தில் ஐக்கியமாகாவிட்டாலும் அந்த சமூகம் பிழைத்து விடும். இதுதான் யூதர்களின் வெற்றிக்கு காரணம்.  அவர்கள் செய்தது:

 1. ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு சமூக அடையாளங்கள் கற்பிக்கப்பட்டன. அவர்கள் அந்நிய அரசுகளின் கீழ் வாழ்ந்தாலும், அவர்கள் தங்கள் அடையாளத்தை கற்பிப்பதற்கென்று சமூக அமைப்புக்களை உருவாக்கினார்கள். இது அன்றுமுதல் இன்றுவரை நடந்து வருகிறது. அவர்களின் யூத அடையாளத்தை வலுவாக அகப்படுத்தி உணர்வுபூர்வமாக ஆக்கிவிடுகிறார்கள்.
 2. அவ்வாறான கற்பித்தல் மக்களால் தாமாக இணைந்து பரவலாக்கப்பட்ட அமைப்புகளை உருவாக்கி செயல்படுத்துகிறார்கள். யூதர்கள் பலநாடுகளில் எந்த தொடர்புமின்றி சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து கிடந்தாலும், தங்கள் அடையாளத்தை காக்க முடிந்துள்ளது. ஏதாவது ஒரு நாட்டில் அரசுகள் அவர்களை முற்றிலும் அழித்தாலும், மற்ற நாடுகளில் உள்ளவர்கள் அழிவதில்லை.
 3. இதன்பொருள் அவர்கள் குழுந்தைகள் அனைவருக்கும் அடையாளத்தை வெற்றிகரமாக புகுத்தி விட்டார்கள் என்று பொருள்கொள்ளக் கூடாது. அவர்களில் பலர் வேறு சமூகத்தில் அன்றிலிருந்து இன்றுவரை இணைந்து வருகிறார்கள். ஆனால் அவர்களால் ஒருபகுதி மக்களுக்கு வெற்றிகரமாக அடையாளத்தை புகுத்திவிட முடிகிறது . இதனால்தான் அன்றுமுதல் இன்றுவரை அவர்கள் சிறுகுழுவாகவே இருக்கிறார்கள்.
 4. உலகத்தில் இறந்துபோன ஒரு மொழி மீண்டும் உயிர்த்தெழுந்திருக்கிறது என்றால் அது யூதர்களின் ஈப்ரு மொழி மட்டுமே. வேறுசில மொழிகளும் அண்மையில் உயிர்பிக்கப்பட்டுள்ளன, ஆனால் அவற்றின் எதிர்காலம் இன்னும் உறுதியாக சொல்லமுடியாது [14],. யூதர்களால் இது எவ்வாறு சாத்தியமானது? அவர்கள் ஈப்ரு மொழியை பேச்சுவழக்கில் மறந்தாலும், அது சமய மொழியாக  பின்பற்றப்பட்டது.  முக்கியமாக நாம் பார்க்கவேண்டியது என்னவென்றால் ஈப்ருவை  அவர்களால் பேச முடியாவிட்டாலும் அவர்களின்  அடையாளத்தில் அங்கமாக இருந்தது. அதனால் காலம் அவர்களுக்கு சாதகமாக வாய்த்த பொழுது அவர்களின் மொழியை மீண்டும் உயிர்ப்பித்துவிட்டார்கள். மொழியியலாளர்கள் ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணமாகக் கூறுவது அந்த மொழி பேசும் மக்கள் தங்கள் மொழியை மற்ற மொழியுடன் ஒப்பிடும்பொழுது கீழ்த்தரமானதாகக் கருதுவதுதான் அடிப்படைக் காரணம்.

“‘The decision to abandon one’s own language always derives from a change in the self-esteem of the speech community.” [14]

ஈப்ரு மொழியை அவர்கள் மறந்தாலும் அது அவர்களின் அடையாளத்தின் ஒரு அங்கமாக இருந்ததால்,  அவர்கள் ஈப்ருவை உயர்வாகக் கருதினர். இத ஏனென்றால் சமூக அடையாளம் ஒருவரின் சுயத்தின் அங்கமாகிவிடுவதால், அந்த அடையாளத்தை இழிவாகக் கருதினால் தன்னை இழிவாகக் கருதுவதாகும், இது நடக்கமுடியாத காரியம். ஒரு மொழி இறக்க அதன் கீழான தகுதி எவ்வாறு  காரணமாகிறதோ, அதுபோல இறந்துபோன மொழியை உயிர்ப்பிக்க அதன் மேலான தகுதி போதுமானது. முடிவில் ஒருமொழியின் வாழ்வையும் இறப்பையும் தீர்மானிப்பது அதன் தகுதி மட்டுமே. அந்த தகுதி அடையாளம் மூலம் வரலாம் அல்லது பயன் மூலம் வரலாம். ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஸ்ட்ரோகட்ஸ் [15] அவர்களின் ஆராய்ச்சியும் மொழியின் தகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

ஏன் பலம் பொருந்திய சமூகங்கள் அழிந்தன என்பதற்கு என்னுடைய கருத்து  என்னவென்றால்   அவர்களின் அடையாளங்கள் பலமான அரசுகளை நம்பியே இருந்தன. அரசுகள் வீழ்ந்தவுடன் அல்லது அரசு ஆதரவு இழந்தவுடன் அவர்களால் அடையாளங்களை காக்கமுடியவில்லை. அவர்கள் யூதர்கள் போன்று அடையாளத்தை வலுவாக அகப்படுத்துவதற்கு ஏற்றவாறு அரசுகளை நம்பாத பரவலாக்கப்பட்ட  அமைப்புகளை உருவாக்கி செயல்படவில்லை.

நாம் கற்கவேண்டிய பாடங்கள்:

பொதுவாக நமது சமூகத்திலிருக்கும் பல சிக்கல்களுக்கு அடிப்படைக்  காரணம் என்னவென்றால் தமிழ் மக்கள் சாதிமத பிரிவுகளால் தான் தமிழன் என்ற உணர்வற்று  இருக்கிறான். இது அனைவரும் அறிந்த வெளிப்படையான ஒன்று. அதற்குத் தீர்வாக சிந்தனையாளர்கள் முன்வைக்கும் கருத்து என்னெவென்றால் நாம் மக்களை பகுத்தறிவால் தெளியவைத்து, சாதி மத வேற்றுமைகளை பகுத்தறிவால் களைந்து  தமிழராக ஒன்றிணைக்கவேண்டும்.  இந்த நோக்கம் மிகச்சரியானது. ஆனால் செயல்படும் விதம்தான் வீரியமற்றதாக இருக்கிறது.  இக்கட்டுரையில் நாம் கற்ற கருத்துக்களின் அடிப்படையில் செயல்பாடுகளை மாற்றி அமைத்தால், அது பின்வருமாறு இருக்கும்:

 1. தமிழர் என்ற உணர்வை மக்களிடம் வளர்க்க பரவலாக்கப்பட்ட அமைப்புகள் உருவாக்கப்படவேண்டும். இது மக்களால் அரசுகளின் துணையின்றி தாமாக நடத்தப்படவேண்டும். யூதர்கள் எவ்வளவு வீரியமுடன் செய்கிறார்களோ அதைப்போல செய்யவேண்டும், ஆனால் மத சார்பற்றவாறு செய்யவேண்டும். முக்கியமானது என்னவெனில் தமிழர் என்ற அடையாளம் மையப்படுத்தப்பட வேண்டும்.
 2. சாதி மதங்களை ஒழித்தால் தான் தமிழர் ஒற்றுமை ஏற்படும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் நாம் கண்ட தத்துவங்களின் அடைப்படையில் பார்க்கும்பொழுது இது தேவையற்றது போல் தோன்றுகிறது. நாம் காணும் சிக்கல் “ஒரு குச்சியை எப்படி சிறிதாக்குவது” என்ற புதிர்போல உள்ளது. சாதி மத குச்சிகளை சிறிதாக்க நாம் செய்யவேண்டியது தமிழர் என்ற பெருங்குச்சியை நடுவதுதான். தமிழர் என்ற அடையாளத்தை  மையப்படுத்தி மற்ற அடையாளங்களை பின்தள்ளவேண்டும்.
 3. அரசியல் அமைப்புக்கள் வாக்குரிமையுள்ள மக்களை நோக்கி செயல்பாடுகளை அமைக்கிறது. ஆனால் இதிலுள்ள சிக்கல் என்னவென்றால் வாக்குரிமையுள்ளவர்கள் ஏற்கனவே சமூக அடையாளங்களை பெற்றுவிட்டனர். அவர்களை மாற்றுவது கடினம். அரசியலால் தமிழுணர்வுள்ளவர்களை ஈர்க்க முடியும், சாதி மத அடையாளங்களை முதன்மையாகக்  கொண்டவர்களை ஈர்ப்பது எளிதல்ல. நாம் குறிப்பாக செய்யவேண்டியது 13-19 வயத்துக்குட்பட்டவர்களை தமிழுணர்வு உள்ளவர்களாக மாற்றுவது. இதை பரவலாக்கப்பட்ட சமூக அமைப்புகளினால் தான் முடியும். யூதர்கள் இசுரேலை அமைத்த வரலாற்றிலிருந்து நாம் காற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அவர்கள் முக்கியமாக செய்ததது தேசிய விடுதலையை வென்றெடுக்க  அதற்கென்று ஒரு புதிய தலைமுறையை கற்பித்து உருவாக்குகிறார்கள். அவர்கள்தான் பின்  நாட்டை வென்றெடுக்கிறார்கள்.  பழைய தலைமுறையை நம்பி யூதர்கள் செயல்படவில்லை.

Jewish Nationalism was always influenced by the model of biblical Exodus, according to which an old generation had to expire in the desert before a new generation, free of the norms adopted during slavery, could  be relied upon to conquer the land. Similarly, after 2000 years of Jewish life in Exile, it could not be expected that the same elite who led the people in “house of bondage” would lead them successfully into Promised Land. Ahad Ha’am, for example, was aware that the future of Zionist movement lay not with the parents in the synagogues but with the children who could be influenced in educational institutions. Ahad Ha’am wrote “that in a war of parents and children it is always the children who win in the end; the future is theirs”.[16]

 1. கடந்த 50 ஆண்டு அரசியலில் பொருளாதார முன்னேற்றமும் சமூக நீதியும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது தேவையானது என்பதை யாரும் மறுக்கமுடியாது, ஆனால் தமிழர் என்ற அடையாளத்தை வளர்ப்பதற்கு தேவையான  முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இதுவே நாம் செய்த பிழைகளில் பெரும்பிழையாக இருக்கும் எனத் தோன்றுகிறது. சாதி மத குழுக்கள் நம்மைவிட நன்றாகவே செயல்பட்டுள்ளார்கள்.
 2. இன்று தமிழர் என்ற அடையாளத்தை ஊக்குவிப்பதில் பெரும்பங்கு தமிழ்வழிப் பள்ளிகளே. ஆனால் ஆங்கிலவழிப் பள்ளிகளும், மத்திய பாடத்திட்டங்களும் பெரிய அளவில் தமிழ்ப்பள்ளிகளை அழித்து வருகின்றன. மத்திய அரசின் வரலாற்றுப்பாடம் தேசிய அடையாளத்தை வளர்க்கவே செயல்படுமே அன்றி தமிழர் அடையாளத்தை முன் நிறுத்தாது.

“In his study History – Remembered, Recovered, Invented” Bernard Lewis doubted whether nationalist history ever had any value to the historian, but he did recognize the great contribution of nationalist history to the national movement itself.”[16]

இதுவரை இதற்கு தீர்வு கண்டுபிடிக்கப் படவில்லை. மேலும் ஆங்கிலவழியிலோ மத்திய பாடத்திட்டத்திலோ படிக்கும் மாணவர்களுக்கு தமிழுணர்வை வளர்க்க நாம் முயற்சிகள்  செய்வதாகத்  தெரியவில்லை. என்னுடைய முன்மொழிவான  பரவலாக்கப்பட்ட சமூக அமைப்புகள் இச்சிக்கலைத்  தீர்க்கும். நாம் நமது அடையாளத்தை குழந்தைகளிடம் மையப்படுத்தி விட்டால், ஆங்கில மொழி பாடத்திட்டமோ மத்திய பாடத்திட்டமோ அவர்களை ஒன்றும் செய்யமுடியாது. இதைப்போன்ற உத்தியைக் கொண்டே யூதர்கள் பலநாடுகளில் வாழ்ந்தாலும் அவர்கள் அடையாளத்தை இன்றுவரை பாதுகாத்து வருகின்றனர்.

கேள்விகளுக்கான பதில்கள்:

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் சில கேள்விகள் எழுப்பியிருந்தேன். இந்தக்கேள்விகளுக்கான பதில்களை இந்த கட்டுரையில் கண்ட கருத்துக்களைக் கொண்டு அறிந்திருப்பீர்கள். இருந்தாலும் தெளிவிற்காக ஒவ்வொன்றாக பார்ப்போம்.

 1. ஏன் ஒரு பங்கு மக்கள் தங்களுக்கு இழப்பு இருந்தாலும் பரவாயில்லை என்று தமிழர் பொது நலனுக்காக உழைக்கின்றனர்?

தமிழர் பொதுநலனுக்கு உழைப்பவர்களுக்கு வலுவான தமிழர் என்ற அடையாளம் மையமாக  அகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அடையாளம் மட்டும் போதாது. அவர்கள் சேர்ந்துள்ள சமூக நட்புவட்டங்கள் அதே உணர்வுடன்/ விழுமியங்களுடன்  இருப்பது அவசியம் என்று சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பொதுவாக ஒரே உணர்வுகள் உள்ளவர்கள் நட்புவட்டத்தில் இணைவது இயல்பு, ஆனால் அவசியமில்லை.

தமிழரென்ற உணர்வு  இல்லாதவர்களால் தமிழர் பொதுநலனில் தங்கள் இழப்பையும் தாண்டி ஈடுபடுவது எளிதானதல்ல. அதனால்  ஈடுபடாதவர்கள் அனைவருக்கும் தமிழுணர்வு இல்லை என்று கூறிவிடமுடியாது. ஒன்று அவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி அடைப்படைத் தேவையைக் கூட பெறமுடியாதவர்களாக இருந்தால், அவர்களுக்கு  அன்றாட வாழ்க்கையே போராகத்தான் இருக்கும். அதனால் அவர்களுக்கு தங்களது தற்காப்பு முதன்மை பெரும் (முதல் குறிக்கோள்). இது மனித இயல்பு.  இரண்டாவது, சிலருக்கு தமிழர் என்ற சமூக அடையாளம் இருக்கும், ஆனால் வேறு அடையாளம் (மதம், சாதி) மையமாக இருக்கும். இதுபோக வேறு காரணங்களும் இருக்கலாம்.

 1. மக்களுக்கு பகுத்தறியும் திறன் உள்ளதா இல்லையா? பகுத்தறிவுக்கும் உணர்வுகளுக்கும் என்ன தொடர்பு? எவ்வாறு அனைத்து மக்களையும் போராட்டத்தில் ஈடுபடுத்துவது?

மக்களுக்கு பகுத்தறியும் திறன் உள்ளது, ஆனால் அது அவர்களின் உணர்வுகள் எதை சொல்கின்றனவோ அதற்குத்தான் துணைபுரியும். பகுத்தறிவு உணர்வுகளுக்கு அடிமை. மக்களை உணர்வுகள் மூலமே பெரும்பாலும் ஒன்று திரட்ட முடியம்.[11,17]

 1. நமக்குள் ஒற்றுமையில்லை. இதற்கு நமது மக்களின் குணம் காரணமா அல்லது சிந்திக்கும் அறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்களா? இல்லை பொதுவாக அனைத்து சமூகங்களும் இவ்வாறுதானா?

மனிதர்கள் சுயமாக முடிவெடுக்கும் உரிமை என்பது ஒரு மாயை. அவர்களை  இயக்குவது உயிரியல் கட்டமைப்பு (biology), பண்பாடு, வாழ்க்கை அனுபவம்,  சுற்றச்சூழல் காராணிகள் இவைதான். உலக சமூகங்களுக்கிடையேயான மரபணு வேறுபாடுகள் குறைவானது  என்பது அறிவியலாளர்களின் பொதுவான கருத்து [5]. அதனால் மரபணு வேறுபாட்டைக் கொண்டு சமூக செயல்பாட்டு வேறுபாட்டை விளக்க முடியாது. அதனால் நமது மக்கள் ஒற்றுமையின்றி இருப்பதற்குக் காரணம் நமது பண்பாடும் சூழலும்தான் காரணம்.

முடிவுரை:

தமிழினம்  இனவழிப்பு, அந்நிய மொழித்திணிப்பு, மொழிச்சிதைவு, என பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. அதுபோக இளைய தலைமுறையினர் வேறுமொழிகளில் படித்து அடையாளாச் சிதைவுக்கு உள்ளாகின்றனர். தற்பொழுது இந்த சிக்கல்கள் பொதுவாக அரசியல் சிக்கலாக பார்க்கப்படுகிறது. ஒரு நல்ல பலமான அரசியல் அமைப்பை உருவாக்கிவிட்டால் நமது சிக்கல்களைத் தீர்த்துவிடலாம் என்று எண்ணம் ஒருபக்கம் நிலவுகிறது.  இன்னொரு பக்கம் நமது சிக்கல்கள் சாதிமத மூட நம்பிக்கைகள் மூலம் வருகிறது. அதனால் மக்களை பகுத்தறிவு உள்ளவர்களாக மாற்றுவதுதான் தீர்வு என்கிறது. இந்த கட்டுரையில் மூலம் நான் கூறவரும் ஒரு முக்கிய கருத்து என்னவென்றால் நமது குழந்தைகளுக்கு வலுவான அடையாளத்தைக் கொடுத்துவிட்டால்,  நம்மை  அழிவிலிருந்து காத்துக்கொள்ளலாம்.  கடலில் மிதக்கும் ஒரு பனிப்பாறையில்  மேலே தெரியும் பாகம் அரசியலென்று எடுத்துக்கொண்டால், கண்ணுக்குத்தெரியாமல் நீர் மட்டத்திற்கு கீழே இருக்கும் பெரும்பாறை தான்  அடையாளம். இந்த கீழுள்ள பாறையின் அளவுதான் மேலுள்ள பாறையின் அளவைத் தீர்மானிக்கும்.  தமிழரென்ற அடையாளம் கற்பித்தலின் மூலமே வருகிறது. அதனால் நாம்தான் சமூக அமைப்புக்களை உருவாக்கி செயல்படவேண்டும். அடையாளம் என்பது அடிப்படைத் தேவை, ஆனால் அதுமட்டும் போதாது.  மக்களிடம் சமூக ஒழுக்கம், நெறிமுறைகள்,  நல்ல பண்பாட்டு விழுமியங்கள் ஆகியவையும் அகப்படுத்தப் படவேண்டும். அதற்கு  சமூக நிறுவனங்களை அமைக்க வேண்டும், பொருளாதாரத்தையும் வளர்க்கவேண்டும், சரியான தந்திரங்களும்  திட்டங்களும் வகுக்கப்படவேண்டும்.

சமூக அடையாளம் என்பது உலகில் மனிதர்கள் அனைவருக்கும் இயற்கையாக உருவாவது. அனைத்து நாடுகளும் அரசுகளும், குழுக்களும் அந்த அடையாளத்தை வளர்க்கின்றன பாதுகாக்கின்றன. அதுபோல நாமும் நமது அடையாளத்தை பாதுகாத்தல் தவறல்ல. ஆனால் பாதுகாக்கிறோம் என்று கூறி மக்களை அந்நியப்படுத்துவதோ இனவெறியில் ஈடுபடுவதோ தவறானது.  நமது அடையாளத்தில் இணைந்துகொள்ள வருபவர்கள் அனைவரையும் இணைத்துக்கொள்ள வேண்டும். வேறு அடையாளத்தைக் கொண்டவர்களுடன் ஒத்துழைத்து நட்பு பேணவேண்டும். மத சார்பற்ற முறையில் இயங்கவேண்டும்.  அதுவே நல்ல நெறி. நல்ல நெறிகளின் தன்மை என்னவென்றால் அவை சிறந்த  உத்திகளும் கூட. மக்கள் திடீரென்று நல்லவர்கள் ஆவதனால் நெறிகள் தோன்றுவது அல்ல.  பரிணாமப் போரில் வெற்றியடைய அந்நெறிகள் உதவியதானாலேயே நல்ல நெறிகளாக  நிற்கின்றன. நெறிகளை மனிதனின் பரிணாமபோரின்  விளைவாக வருகின்ற உத்திகளாகவே அறிவியலாளர்கள் பார்க்கிறார்கள் [18]. இதனை தனியாக இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.

பி.கு: இந்த கருத்துக்கள் நான் கற்ற நூலிருந்து நான் புரிந்து கொண்டவை. நான் இதில் ஆழ்ந்து ஆராய்ந்தவன் இல்லை, அதனால் பிழைகள் இருக்கலாம். பிழைகளை தரவுகளுடன் சுட்டிக்காட்டினால், இக்கட்டுரையை திருத்துவதற்கு உதவியாக இருக்கும்.

பயன்படுத்திய நூல்கள்:

 1. Atkins, Peter William. The second law. Scientific American Library, 1984.
 2. What is Life? Lecture by Jeremy England. https://www.youtube.com/watch?v=e91D5UAz-f4
 3. Tegmark, Max. Life 3.0: Being Human in the Age of Artificial Intelligence. Knopf, 2017.
 4. Dawkins, Richard. The selfish gene. Oxford university press, 2016.
 5. Richerson, P. “J and Boyd, R.(2005): Not by Genes Alone: How Culture Transformed Human Evolution.” Univeristy of Chicago Press, Chicago.
 6. Wilson, Edward O. The social conquest of earth. WW Norton & Company, 2012.
 7. Pinker, Steven. The blank slate: The modern denial of human nature. Penguin, 2003.
 8. Wade, Nicholas. The faith instinct: How religion evolved and why it endures. Penguin, 2009.
 9. McLean, Kate C., and Moin U. Syed, eds. The Oxford handbook of identity development. Oxford Library of Psychology, 2014.
 10. Herriot, Peter. Religious fundamentalism and social identity. Routledge, 2014.
 11. Haidt, Jonathan. The righteous mind. Vintage, 2012.
 12. Harris, Sam. Lecture on The case against free will. https://www.youtube.com/watch?v=zhO2lVQRT8Y&t=83s
 13. Ridley, Matt. The evolution of everything: How new ideas emerge. HarperCollins, 2015.
 14. Crystal, David. Language death. Ernst Klett Sprachen, 2000.
 15. Abrams, Daniel M., and Steven H. Strogatz. “Linguistics: Modelling the dynamics of language death.” Nature6951 (2003): 900-900.
 16. Keren, Michael. The pen and the sword: Israeli intellectuals and the making of the nation-state. Westview Pr, 1989.
 17. Lakoff, George. The political mind: why you can’t understand 21st-century politics with an 18th-century brain. Penguin, 2008.
 18. Singer, Peter. The expanding circle: Ethics, evolution, and moral progress. Princeton University Press, 2011.

 

This entry was posted in அரசியல், அறிவு, சமூக அறிவியல், சமூகம், பகுத்தறிவு, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to தமிழுணர்வு எங்கிருந்து வருகிறது, அதன் சமூக தாக்கம் என்ன?

 1. Nageswaran R says:

  Excellent article Sethu! As usual! There is a saying, which is probably pertinent to the Tamil community, ” saamiyaaraa ponaalum jaathi buddhi pohaadhu”. This saying talks about oxymoronic extremities, one is about losing the identity, and another on holding on to that. I think we already kind of doing what you prescribe, unknowingly. The idea of dominant nature of particular societies, based on the cateistic separations pop up from the very fear of the lower castes economical equality, andಚಥ the fear of equal status or the dominant status pf the lower ones. Not in every place you face a racial attacks, but at the places where the separation is higher. I think holding on to certain identities tend to be like a natural selection. But the efforts could also be a natural selection, now i sound like a Swamiyaar! 😁 more we shall think and work together! By the way, if you have the Englisch Version of this article, please consider sending it to epw like journals! Consider the Chomskying process!

  Liked by 1 person

 2. Pingback: ஒரு சமூகத்தை அழிவிலிருந்து காப்பது எது? | Sethu's Blog

 3. Pingback: ஈழப்போரிலிருந்து நாம் கற்கவேண்டிய பாடங்கள் – பகுதி 5 | Sethu's Blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s