ஒரு சமூகம் அழிவதற்கான அறிகுறிகள்

என்னுடைய முந்தைய “அறிவியலும் தமிழர் அரசியலும்” [1] என்ற கட்டுரையில், தமிழ்ச்சமூகத்தில் தற்பொழுதைய சிந்தனைகளில் உள்ள சில பிழைகளை விளக்கி,  நாம் எது மாதிரியான அறிவியல் பூர்வமான சிந்தனைக்கு மாறவேண்டும் என்று ஆராய்ந்தேன். ஆனால் நாம் எது மாதிரியான பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்றும், அதனால் நமது சிந்தனையை மாற்றவேண்டியதன் அவசரத்தையும் ஆராயவில்லை. அண்மையில் பார்யாமும் கோஸ்ட்டாவும் (Bar-Yam and Costa) [2]  ஒரு சமூகம் ஏன் அழிகிறது என்றும் அவ்வாறு அழிவதற்கான அறிகுறிகள் என்னவென்றும் ஆராய்ந்துள்ளார்கள். அவற்றை விளக்கி,  நமது நிலைமை எவ்வாறு அவற்றுடன்  பொருந்துகிறது என்றும், அதனால் நமது சிந்தனை முறையை மாற்றவேண்டிய அவசியத்தை எடுத்துரைப்பதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

ஒரு சமூகம் தனது வளர்ச்சியின் பொழுது தோன்றும் சிக்கல்களை காலகாலமாக தனக்குத் தெரிந்த முறைகளைக் கொண்டு சாதாரணமாக தீர்த்துவிடமுடியும். ஆனால் சமூகம் பெரிதாக வளர்ந்து பெரிய சிக்கல்கள் உருவாகும்பொழுது,  அச்சிக்கல்களை தீர்க்கும் அறிவாற்றல் இல்லாவிட்டால் அச்சமூகத்தின் அழிவு ஆரம்பமாகிறது.  ஒரு சமூகத்திற்கு ஒரு குறிப்பிட்ட அறிவுத்திறன் எல்லை (cognitive threshold) உண்டு. ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்கான அறிவு, அச்சமூகத்தின் அறிவுத்திறன் எல்லையை தாண்டும்பொழுது, அச்சிக்கலை சமூகத்தால் தீர்க்கமுடிவதில்லை.  ஒரு சமூகம் இறுதியில் போரினாலோ, பஞ்சத்தினாலோ,  சுற்றுச்சூழல் அழிவினாலோ,  நோய்களினாலோ அழிந்தாலும், அழிவிற்கு உண்மையான காரணம் சிக்கல்களைத் தீர்க்கும் அறிவாற்றல் இல்லாததுதான் முக்கிய காரணம் என்கிறார் பார்யாம்.   பண்டைய ரோமப்பேரரசு, மாயன் நாகரீகம்,  கம்போடியாவின் கெமர் நாகரீகம் ஆகியவற்றை ஆராய்ந்து அவை அழிவதற்கான முக்கிய காரணம் அவர்கள் தங்களது சிக்கல்களைத் தீர்க்கும் அறிவினைப் பெறமுடியாதவர்களாக இருந்ததுதான் அடிப்படை காரணம் என்கிறார். ஒரு சமூகம் தன்னைக் காத்துக் கொள்வதற்கும் அழிவதற்கும் உள்ள அடைப்படை வித்தியாசம் அறிவு.

“The difference between an advanced culture that survives and the one that does not may simply boil down to whether a society develops new ways to triumph over a naturally reoccurring cognitive threshold.”

அவ்வாறு அறிவுத்திறன் அற்ற சமூகம் உடனடியாக அழிவதில்லை, சிலதலைமுறைகள் கழித்துதான் நிகழும். ஒரு சமூகம் அதுபோன்ற தீர்க்கமுடியாத சிக்கல்களில் சிக்கியிருக்கிறதா என்று கண்டறிவதற்கு  இரண்டு அறிகுறிகள் உள்ளன:

  1. முடக்கம் (gridlock): ஒரு சமூகம் தன்னை அழிக்கக்கூடிய  சிக்கலான பிரச்சனைகளை உணர்ந்து அங்கீகரித்தாலும்,  அசிக்கல்களை புரிந்து ஆராய்ந்து தீர்க்கும் வல்லமையற்றதாக இருக்கும். இந்த சிக்கல்கள் நிரந்தரமாக தீர்க்கப்படாமல், தற்காலிக ஒட்டுபோடும் வேலைகளும், நோயை குணப்படுத்தாமல் நோயின் விளைவுகளை மட்டுப்படுத்தும் செயல்கள் போன்றும்  அணுகப்படும்.  இதன் விளைவாக சிக்கல்கள் தீர்க்கப்படாமல் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படும். புதுமையான சிந்தனைகளின்றி காலகாலமாக என்ன  செய்தார்களோ, அதே வழிமுறையைப் பின்பற்றுவார்கள்.  அம்முறைகள்  தோற்றாலும் விடாப்பிடியாக  சில மாறுதல்களுடன் மீண்டும் மீண்டும் முயற்சி செய்வார்கள்.
  2. அறிவு பின்தள்ளப்பட்டு நம்பிக்கைகள் முன் நிறுத்தப்படும் (Substitution of beliefs for knowledge and facts): நிலைமை மோசமானபின் நம்பிக்கைகள் முன் நிறுத்தப்படும். தாம்  கடினமாக அர்ப்பணிப்புடன் குறிக்கோள்களை நோக்கி உழைத்தால் சிக்கல்களைத் தீர்த்துவிடலாம் என்ற நம்புவர், ஆனால் நிலவரம் அதுபோன்ற முயற்சிகள் தோல்வியடைவதையே காட்டும். இருந்தாலும் நம்பிக்கையுடன் எதிர் நீச்சல் போடுவர். அவர்களின் நம்பிக்கைக்கு எதிரான எந்த ஒரு ஆதாரத்தையும் உண்மையையும் அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. சாவை நோக்கினாலும் நம்பிக்கையிலிருந்து பின்வாங்குவதில்லை.  இது ஏன் நடக்கிறதென்றால் நம்பிக்கையும் அறிவைப்பெறுதலும் மனிதனின் அடிப்படை பண்புகள். ஒரு சமூகம் வளர்ந்து பெரிதானவுடன், சமூகத்தின் சிக்கல்களும் பெரிதாகின்றன (complexity increases). அவாறு சிக்கல்கள் பெரிதாகின்ற பொழுது, அவற்றைத் தீர்க்கத் தேவையான அறிவைப் பெறுவது கடினமாகிக் கொண்டே செல்கிறது.  முடிவில் சிக்கலைத் தீர்க்கமுடியாத பொழுது இருக்கும் ஒரே வழி அவர்களுக்கு நம்பிக்கை மட்டுமே. இவ்விரண்டு குறிகளும் தோன்றியபின்,  அச்சமூகம் அழிவிற்குத் தயாராகிறது.

“Once a society begins exhibiting the first two signs – gridlock and the substitution of beliefs for facts – the stage is set for collapse.”

உதாரணமாக மாயன் நாகரீகம் வாழ்விடத்தில் பல நூற்றாண்டுகளாக மழைப்பொழிவு சீரில்லாமல் இருந்தது. இதனால் அவர்கள் நீரை சிக்கனப்படுத்தலிலும் தேக்கி வைத்தலிலும் அதிக கவனம் செலுத்தினாராகள். இதற்கு பிரம்மிப்பூட்டும் நீர் பராமரிப்பு கட்டுமானங்களை அமைத்தனர். அதே நேரம் அவர்களின் மக்கள் தொகையும் சீராக உயர்ந்து கொண்டே இருந்தன. அதுபோக மழைப்பொழிவு குறைய ஆரம்பித்தது. எவ்வளவுதான் சிக்கனமாக இருந்தாலும் மழையில்லையென்றால் என்னே செய்வது. நீர் சேமிப்பு என்பது தற்காலிக தீர்வுதானே தவிர  நிரந்தர தீர்வாகாது, அதுவும் குறிப்பாக மக்கள் தொகை வளர்ந்து கொண்டிருக்கும் பொழுது. அவர்கள் தங்கள் சிக்கலை தீர்க்க முடியாமல் மத நம்பிக்கையில் மூழ்கி குழந்தைகள் உட்பட மனிதர்களை இறைவனுக்கு பலிகொடுக்க ஆரம்பித்தனர், காலப்போக்கில் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறினர். மூவாயிர வருட பழமையான நாகரீகம் முடிவுக்கு வந்தது.  அவர்கள் நினைத்திருந்தால் வேறு இடத்திற்கு திட்டமிட்டு நகர்ந்திருக்க முடியும், ஆனால் செய்யவில்லை. ஏன் மாயன்கள் நம்பிக்கைக்கு பலியாகாமல் சிந்திக்கவில்லை என்பதற்கு முக்கிய காரணம் அவர்களது சிக்கல் அவர்களின் அறிவுத்திறனும் அப்பாற்பட்டதாகிவிட்டது.

“They encountered a cognitive threshold: As the complexity of their situation grew, the Mayans never developed complex problem solving techniques. So, when the methods designed to solve simpler issues began to fail, beliefs rushed in to take place of knowledge.”

கம்போடியாவில் இருந்த கெமர் நாகரீகம் இதுபோன்ற நீர் மேலாண்மை சிக்கலினால் அழிந்தது.

ரோமப்பேரரசில் விவசாய விளைச்சல் பல தலைமுறைகளாக குறைய ஆரம்பித்தது, ஆனால் மக்கள் தொகை கூடிக்கொண்டே சென்றது. உற்பத்தியைப் பெருக்க அவர்கள் அந்நிய நாடுகளை ஆக்கிரமித்தார்கள். இது ஒரு தாற்காலிகத் தீர்வாகவே அமைந்தது. நாடு பெரிதானதால், நாட்டைப் பாத்து காக்கும் செலவும்  ஆட்சி செய்ய ஆகும் செலவுகளும் அதிகமாயின. முடிவில் செலவுகள் மிக அதிகமானதால்,  அதை ஆக்கிரமிப்பின் மூலம் ஈடு கட்ட முடியவில்லை.  முடிவில் ரோமப்பேரரசு வலுவிழந்து முடிவிற்கு வந்தது. அவர்கள் அழியும் வரையும் தாங்கள் பலம் வாய்ந்தவர்கள், யாரும் அழிக்கமுடியாது என்ற நம்பிக்கையிலேயே இருந்தனர்.

தமிழ்ச்சமூகத்தின் நிலை:

என்னுடைய பார்வையில் தமிழ்ச்சமூகத்தில்  சில மோசமான அறிகுறிகள் தென்படுகின்றன. உதாரணமாக கடந்த பல பத்தாண்டுகளாக மொழி சீரழிந்து வருகிறது, குறிப்பாக ஆங்கில மொழியின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது, தமிழ் வழியில் பயிலுவோரின் விகிதம் குறைந்து கொண்டே செல்கிறது. ஈழத்தில் இனவழிப்பு, தமிழகத்தில் மொழி அரசியல் உரிமைகள் எனப் பல சிக்கல்கள் என தமிழ்ச்சமூகம் பல பத்தாண்டுகளாக  எதிர்நோக்கி வருகிறது. இச்சிக்கல்கள் ஓரிரு தலைமுறைகளையும் கடந்துவிட்டன, ஆனாலும் தீர்ந்த பாடில்லை. போராட்டங்களில் தேக்கமும் பின்னடைவும் ஏற்பட்டுள்ளன. இவற்றைத் தீர்க்க நமது அறிவுசார்ந்த சிந்தனைகள் எவ்வாறு இருக்கின்றன என்பதை ஆழி செந்தில்நாதன் அவர்களின் தமிழகத்தின் வருங்காலம் படைப்பவர்கள் வருக!  என்ற கட்டுரை தெளிவாக விளக்குகிறது:

இந்த சமூகத்துக்கு என்ன தேவையோ அல்லது இந்த சமூகத்தைப் புரிந்துகொள்வதற்கு என்ன தேவையோ அவை இன்னும் பத்து சதவீதம் கூட எழுத்தாக்கம் பெறவில்லை என்றுதான் நினைககிறேன்புனைவிலிகளைப் (non-fiction) பொறுத்தமட்டில், நாம் இன்னும் பழைய கருத்துருக்களையே பேசிக்கொண்டிருக்கிறோம். இது தவறல்ல. ஆனால் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் புரிந்துகொள்ள இது மட்டுமே போதாதே. கடந்த காலத்தைத் தெரியாதவனால் எதிர் காலத்தைத் தெரிந்துகொள்ளமுடியாது என்பதெல்லாம் சரி. எத்தனை நாட்களுக்கு கடந்த காலத்தையே விண்டு விண்டு பிளந்துகொண்டிருக்கப்போகிறோம்? அதுவும் எந்த கருவிகளின் அடிப்படையில் அதை செய்கிறோம்?

சிக்கல்களைத் தீர்க்க முனைபவர்களின்  செயல்பாடுகளில் உழைப்பும் அர்ப்பணிப்பும் அபாரமாக உள்ளது,  ஆனால்  சமூகம்  சார்ந்த அறிவியல் அடிப்படையிலான புரிதலும்  செயல்பாடுகளும் அதிகமாக இல்லை. இது அவர்களின் குற்றமல்ல. பொதுவாக  இவ்விடயத்தில் நமது சமூகம் பின்தங்கியுள்ளது. பார்-யாம் அவர்களின் ஆராய்ச்சியின்படி பார்க்கும் பொழுது, நாம் நமது சிக்கல்களைத் தீர்க்க அறிவியல் சார்ந்த முறைக்கு மாறி சிந்திப்பது அதிமுக்கியமாகிறது.  அவ்வாறு செய்வதற்கு காலம் இன்னும் நமக்கு சாதகமாக இருப்பது நல்ல விடயம்.

 

பயன்படுத்திய நூல்கள்/கட்டுரைகள்:

 

  1. Sethu S., அறிவியலும் தமிழர் அரசியலும்.
  2. Costa, Rebecca. The Watchman’s Rattle: Thinking Our Way Out of Extinction. Vanguard, 2010.
  3. Aazhi Senthil Nathan, தமிழகத்தின் வருங்காலம் படைப்பவர்கள் வருக! , 2016.

.

 

 

 

This entry was posted in அரசியல், அறிவு, சமூக அறிவியல், சமூகம், Uncategorized. Bookmark the permalink.

1 Response to ஒரு சமூகம் அழிவதற்கான அறிகுறிகள்

  1. Pingback: ஒரு சமூகத்தை அழிவிலிருந்து காப்பது எது? | Sethu's Blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s