நாம் அறிவார்ந்த சமூகமாகமாறத் தேவையான அடிப்படை காரணிகள்

மேற்குலகம் அறிவிலும் மற்றும் பலதுறைகளிலும் முதன் முதலில் பெரிய அளவில் முன்னேறி அறிவார்ந்த சமூகமாக உள்ளது,  ஆனால் நம்மால் இன்னும் அறிவியலைத் தமிழில் கொண்டுவருவதற்கே முடியவில்லை. நாமும் ஒரு அறிவார்ந்த சமூகமாக மாறி புதிய அறிவியல் தத்துவங்களை தமிழில் படைக்க நாம் என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி பலருக்கும் உண்டு.  சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு கிரேக்க சிந்தனையாளர்கள்  உருவாக்கிய தத்துவப் படைப்புகள் நவீன உலகை உருவாக்குவதில்  பெரும்பங்கு வகித்தது மட்டுமில்லாமல்,  இன்றும் அறிவியல் உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன. ஏன் அவர்களால் முடிந்தது,  ஆனால் நம்மால் இந்த நவீன உலகில் பல வசதிகளிருந்தும் ஏன் முடியவில்லை?  காலனி ஆதிக்கம், அந்நியர் ஆட்சி, அரசுகளின் முயற்சியின்மை, மக்களின் ஆங்கிலமோகம் என பல பதில்கள் இருந்தாலும், இவை நமது நிலைமைக்கு முழுக் காரணங்களாக எடுத்துக்கொள்ள முடியாது. மாறாக நாம் அறிவார்ந்த சமூகமாக இருந்திருந்தால், நாம் இன்று காணும் பல சிக்கல்களே தோன்றாமலே இருந்திருக்கலாம், அல்லது சிக்கல்களை என்றோ தீர்த்திருப்போம். நாம் ஏன் அறிவார்ந்த சமூகமாக மாறவேண்டும்  என்று  நான் விளக்கத் தேவையில்லை. இது அனைவரும் தெரிந்த தெளிவான விடயம்.

ஒரு சமூகத்தை அறிவார்ந்த முன்னேறும் சமூகமாக மாற்றும் அடிப்படை காரணிகள் எவை என்ற கேள்விக்கு நான் கற்ற சில நூல்களிருந்து என்னால் ஒரளவு விடைகாண முடிந்தது. அவற்றைப் பகிர்வதுதான் இக்கட்டுரையின் முக்கிய நோக்கம்.  இந்த காரணிகளை இரண்டு பிரிவாக நான் பிரிக்கிறேன். ஒன்று, ஒரு சமூகத்தில் சில குறிப்பிட்ட குறைந்தபட்சத் தேவையான அறிவியல் கருத்துக்கள் இருக்கவேண்டும். அனைவருக்கும் இருக்கவேண்டிய அவசியமில்லை, ஆனால் பரவலாக அறிவுசார் படைப்புகளை உருவாக்க நினைப்பவர்களிடம் இருக்கவேண்டும். இரண்டாவது,  பண்பாட்டு விழுமியங்கள் அறிவைத் தேடுவதிலும் படைப்பதிலும் சுதந்திரமும் ஊக்கமும் அளிக்கவேண்டும்.  இவ்விரண்டும் இருந்தால் அறிவு வளர்ச்சி மளமளவென்று கட்டுக்கடங்காமல் ( exponential growth) தானாக ஏற்படும்.  இனி இவற்றை விரிவாகப் பார்ப்போம்

 1. குறைந்தபட்சத் தேவையான அடிப்படை அறிவியல் கருத்துக்கள்

முதலில் உயிரியலிலிருந்து சில அடிப்படை கருத்துக்களை பார்ப்போம். ஒரு குழந்தை  வளரும்பொழுது தனது சமூகத்திலிருந்து மொழியையும், சமூகத்தில் எவ்வாறு செயல்படவேண்டும் என்றும் எளிதாக எந்த ஒரு சீரிய முயற்சியுமில்லாமல் இயற்கையாகக் கற்றுக்கொள்கிறது. ஆனால்  அதே குழந்தையின் இடத்தில் ஒரு குரங்கு குட்டியை வளர்த்தால், அந்த குரங்குக்கு குட்டியால் மூளை இருந்தும்.மனிதக் குழந்தையைப் போல கற்றுக்கொள்ள முடியவில்லை. எது குழந்தையை எளிதாகக்  கற்க வைக்கிறது? இது உண்மையில் மிக ஆழமான கேள்வி. நமது மூளையின் செயல்பாடுகள் பற்றிய ஆராய்ச்சிகள் ஆரம்பநிலைகளிலேயே உள்ளன. ஒரு கணிணியால் வளர்ந்த மனிதர்கள் போடமுடியாத பல கணக்குகளை எளிதில் போடமுடியும், ஆனால் வேடிக்கை என்னெவென்றால் ஒரு  இரண்டு வயது குழந்தைக்கு இருக்கும் கற்றுக்கொள்ளும் திறன் அதனிடம் இல்லை. மனித மூளையின் செயல்பாட்டினை நாம் அறிந்தால்,  அதைப்போன்ற கற்றல் திறன் வாய்ந்த செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) உருவாக்கிவிடலாம். அதனால் அதுபோன்ற செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றன என்பது வேறு விடயம்[1]. ஒரு குழந்தையின் மூளையின் கற்றல் திறனைவிட சிறந்தது இவ்வுலகில் வேறெதுவுமில்லை. தற்பொழுதுள்ள உயிரியல் விளக்கம் என்னெவென்றால் மனிதர்களின் பரிணாம வளர்ச்சியின் விளைவாக  பண்பாட்டிலிருந்து கற்கும் திறனும் மற்றும் சமூகத்தில் செயல்பட ஏற்ற திறனும் உள்ளவாறு மனித மூளை மரபணுக்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன [2].  மனித மூளை பிறக்கும்பொழுது வெற்று மூளையாக இல்லை [3]. அதில் சமூகத்திலிருந்து கற்றுக்கொள்ளும் திறன் வாய்ந்த,  இன்னும் நமது அறிவியலுக்கு எட்டாத  அதீத அறிவு உள்ளது. இதில் முக்கியமாக கவனிக்கவேண்டிய விடயம் என்ன வென்றால், மரபணுக்களால் மூளையில் உருவாக்கப்பட்ட  ஆரம்ப  அறிவு வரையறுக்கப்பட்டது (finite) என்றாலும், மனித மூளையால் அறியமுடியும் கருத்துக்களின் எண்ணிக்கை வரையறுக்க முடியாதது (infinite). அதாவது பிறந்த குழந்தையின் அறிவின் அளவீடு குறைவு,  ஆனால்  அந்த அறிவைக்கொண்டு அக்குழந்தையால் காற்றுக்கொள்ள  மற்றும் படைக்க  முடிகிற கருத்துக்களின் எண்ணிக்கைக்கு அளவில்லை. நமக்கு மரபணுக்களால் அளிக்கப்பட இந்த வரையறுக்கப்பட்ட அறிவு எவை என்று முழுவதமாகத் தெரியாது, ஆனால் இதுதான் மனிதனின் அதீதமான அறிவாற்றலுக்குக் காரணம். அடிப்படை கருத்து என்னவென்றால் வரையறுக்கப்பட்ட (finite) அறிவினைக் கொண்டு வரையறுக்கமுடியாத (infinite) அளவு கருத்துக்களை படைக்க முடியம். உதாரணமாக, நீங்கள் நினைத்தால் உங்களால இதுவரை மனிதகுலத்தில் யாரும் பேசாத ஒரு புது வாக்கியத்தை எளிதில் உருவாக்க முடியம்.

மனிதனின் படைப்புத்திறனுக்கும் ஒரு சமூகத்தின் அறிவுப்  படைப்புத்திறனுக்கும் ஒரு முக்கிய ஒப்புமை உள்ளது. மேலே நாம் பார்த்த கருத்தினைப் போல, ஒரு சமூகத்தில் குறைந்த பட்ச வரையறுக்கப்பட்ட அறிவு இருந்தால், அந்த சமூகமும் வரையறுக்கமுடியாத அளவு அறிவினைப் படைக்கும் ஆற்றலைப்பெறுகிறது.   இது ஏனென்றால் எந்த ஒரு புது அறிவும், நாம் அறிந்த அறிவுகளின் சேர்க்கையினால் தான் உருவாக்க முடியும். அதாவது தெரியாத ஒரு கருத்தை நமக்கு தெரிந்த கருத்துக்களின் மூலம் தான் அறிந்து கொள்ள முடியும். அதனால் நமக்குத் தெரிந்த அறிவியல் கருத்துக்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருப்பின், நம்மால் பல புதிய கருத்துக்களை அறிந்து கொள்ளமுடியாது, படைக்கவும் முடியாது.  ஆர்வர்டு பல்கலைக்கழக  பொருளாதரப் பேராசிரியர் மைக்கேல் போர்ட்டர் [4]  இக்கருத்தை பின்வருமாறு விளக்குகிறார்:

“Ideas beget ideas. The dynamics of innovation may be characterized by increasing returns to scale, in which a kind of chain reaction takes place in response to an initial stock of ideas. Societies that have a critical mass of technological ideas may experience a takeoff into self-sustaining growth, whereas the societies that fall short of that critical mass may experience continuing stagnation. The rich get richer because existing ideas are the source of new ideas.”

UC-Davis  பல்கலையின்  உளவியல் பேராசிரியர் சைமண்டன் [5] அறிவியல் கண்டுபிடிப்புகள் எவ்வாறு நடக்கின்றன என ஆராய்ந்து பின்வருமாறு கூறுகிறார்.  ஒரு ஆராய்ச்சிப் பிரிவில் புது கண்டுபிடிப்புகள், அவர்களிடம் ஏற்கனவே உள்ள  கருத்துக்களின் தொகுப்புகள் மூலமே உருவாக்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட புதிய கண்டுபிடிப்புக்குத்  தேவையான   ஒரு கருத்து அவர்களிடம் இல்லையென்றால், அந்த ஆராய்ச்சியில் தோல்வி ஏற்படும் என்கிறார். உதாரணமாக நியூட்டனின் கண்டுபிடிப்புக்கு நுண்கணிதம் தேவைப்பட்டது, ஆனால் நுண்கணிதத்திற்கு அடிப்படையான xy – அச்சமைப்பை (XY- coordinate system) தேகார்டு (Descartes) கண்டுபிடிக்காமல்  நியூட்டனின் கண்டுபிடிப்பு சாத்தியமல்ல.

“The spirit of the times (Zeitgeist, culture) can be conceived as the collection of phenomena, facts, concepts, variables, constants, techniques, theories, laws, questions, goals, and criteria that enter the disciplinary pool from which creators draw their unique sample of ideas for their combinatory activities… The repository of ideas that constitute a domain supplies the necessary conditions for all discoveries made in a specific period of discipline’s history.  Hence, if a prerequisite idea is missing from the given zeitgeist, the corresponding ideational combination can never emerge.” [5]

இதை நாம் எப்படி பார்க்கவேண்டுமென்றால், எவ்வாறு யுரேனியம் அணுக்களின் தொகுப்பு  ஒரு குறிப்பிட்ட எடையைத்  தாண்டியவுடன், அணுகுண்டாக வெடிக்கிறதோ, அதேபோல ஒரு குறிப்பிட்ட அளவு தேவையான அடிப்படை அறிவியல் கருத்துக்களைக் கொண்ட சமூகத்திலும், அறிவுப்படைப்பு மளமளவென்று குவிகிறது. இதுதான் மேற்குலகு முதன்முதலில் அறிவார்ந்த சமூகமாக முன்னேறியதற்கும், நாம் இன்னும் பின்தங்கி இருப்பதற்கும்  ஒரு அடிப்படை காரணம். இதை நன்றாகப் புரிந்துகொள்ள மேற்குலகின் அறிவியல் வளர்ச்சியின் வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.

ரோமப்பேரரசு வீழ்ந்தபின் (476 AD), மேற்குலகம் சிறிது காலத்தில் மதநூல்களைத் தவிர பெரும்பான்மையான அறிவு சார்ந்த கிரேக்க நூல்களை  இழந்தன. மேலும் மத அடிப்படைவாதம் எந்த ஒரு சுய சிந்தனையையோ விமர்சனத்தையோ ஆதரிக்கவில்லை. அடுத்த 5 நூற்றாண்டுகள்  மேற்குலகின் இருண்டகாலம் என்றே கூறப்படுகிறது [6,11]. எந்த ஒரு புதிய அறிவும் உருவாக்கப்படவில்லை. அவ்வாறு உருவாக்கப்பட்ட அறிவு அனைத்தும் மத சம்பந்தப்பட்ட தர்க்கத்திற்காகவே உருவாக்கப்பட்டன. பின்பு 13 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் மேற்குலகம் இசுலாமிய உலகத்துடன் தொடர்பு ஏற்பட்டது. அத்தொடர்பின் மூலமாக  கிரேக்க அறிவு சார்ந்த நூல்கள் மீண்டும் மேற்குலகிற்கு கிடைத்தன]. ஆர்வர்டு பேராசிரியர் இராபர்ட் சபோல்சுகி (Robert Sapolsky) [13], தனது உரையில் ஒரு சுவாரசியமான கதையைக் கூறுகிறார். என்னெவென்றால் 1085 -இல் மேற்குலகம்  ஸ்பெயினில் உள்ள டோலிடோ என்ற நகரை முகம்மதியர்களிடமிருந்து கைப்பற்றுகிறார்கள். அவர்கள் அந்நகரில் ஒரு சாதாரண நூலகத்தை மிக ஆச்சரியமாகப் பார்த்தனர் காரணம் என்னவென்றால் அந்த ஒரு நூலகத்தில் உள்ள நூல்கள் மேற்குலகில் உள்ள மொத்த நூல்களையும் விட அதிகமாக இருந்தது. இதன் மூலமாகவே மீண்டும் கிரேக்க நூல்கள் அவர்களுக்கு கிடைத்தன. இதன் பின்னரே மேற்குலகம் சிந்திக்க ஆரம்பித்தது என்கிறார்.  இந்த கதைக்கு வேறு ஆதாரம் எனக்கு கிடைக்கவில்லை. முகம்மதியர்களிடம் கிரேக்க தத்துவங்கள் இருந்திருந்தாலும், மத இறுக்கத்தால் அவர்களால் புதிய தத்துவங்களில்  பாரிய முன்னேற்றங்கள் செய்ய முடியவில்லை [11]. அவர்களின் கடைசி புகழ்பெற்ற தத்துவ அறிஞர் அவரொயிஸ் (Averroes 1126-1198) கிரேக்க தத்துவங்களின் அடைப்படையில் எழுதியதனால் , மதப்பழமை வாதத்தினால் நாடு கடத்தப்பட்டார். அல்மன்சூர் என்ற ஆட்சியாளரால் மதத்திற்கு ஒவ்வாத ஏரண, தத்துவ நூல்கள் தீக்கிரையாக்கப்பட்டன [11].

கிரேக்க தத்துவங்களின் தாக்கத்தினால் இத்தாலியில்தான் முதன் முதலில்  சிந்தனை ஆரம்பித்தது (Italian Renaissance).  ஆனாலும் மதப்பழமை வாதம் இருக்கமாகத்தான் இருந்தது. இதற்கு பின்னர் 1517-இல் மார்ட்டின் லூதர் கத்தோலிக்க  மதத்தை எதிர்த்து புரட்சி செய்து பிராட்டஸ்டன்ட் மதப்பிரிவை  உருவாக்குகிறார் [11]. இந்த மதப்பிரிவின் விளைவாக கத்தோலிக்க நாடுகளுக்கும் பிராட்டஸ்டன்ட் நாடுகளுக்குமிடையே பேரழிவைத்த தந்த முப்பது வருட போர் (1618 – 1648) மூண்டது. இப்போரினால் மத்திய ஐரோப்பாவின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு இறந்தனர். இதன் விளைவாக மக்களும் அரசுகளும்  மதவெறியின் விளைவை உணர்ந்தனர், மதக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன, மதமடங்களின் அரசியல் சக்தி குறைக்கப்பட்டது, அரசுகள் மத சகிப்புத்தன்மையை ஏற்றுக்கொண்டன. இதன்பின் தான்  மேற்குலகம் அறிவுசார் படைப்புகளில் ஒரு பாரிய வளர்ச்சியைக் கண்டது.இந்தப்பிரிவில் மதத்தின் பிடி தளர்ந்ததால், சீரிய சிந்தனைகள் வளர்ந்தன, புதிய படைப்புகள் வெளிவந்தன. கோப்பர்நிக்கஸ், கெப்ளர், கலிலியோ, நியூட்டன் ஆகியோர் தோன்றி நவீன அறிவியலை உருவாக்கினர்.

“The thirty years’ war persuaded everybody that neither Protestants nor Catholics could be completely victorious; it became necessary to abandon the mideval hope of doctrinal unity, and this increased men’s freedom to think for themselves, even about fundamentals. The diversity of creeds in different countries made it possible to escape persecution by living abroad. Disgust with theological warfare turned the attention of able men increasingly to secular learning, especially mathematics and science. These are among the reasons for the fact that, while the sixteenth century, after the rise of Luther, is philosophically barren, the seventeenth contains the greatest names and marks the most notable advances since Greek times.” [11]

பின்பு  1700 -இல் அறிவொளிக்கலாம் (enlightenment) ஆரம்பித்து. எண்ணற்ற தத்துவமேதைகள் உருவாகினர். அவர்களின் தத்துவங்கள் இன்றும் இவ்வுலகை ஆண்டுகொண்டிருக்கின்றன. பொதுவுடமை தத்துவங்கள் கிழக்கு நாடுகளிலும், தென் அமெரிக்க நாடுகளிலும் ஆண்டுகொண்டிருந்தாலும், அத்தத்துவம் உருவாக்கப்பட்டது மேற்குலகில்தான்.

இந்த சுருக்கிய மேற்குலக வரலாற்றிலிருந்து, அவர்கள் நவீன அறிவு சார்ந்த  சமூகமாக மாறுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் விளங்கும். 1. கிரேக்க தத்துவங்களின் நுழைவு 2. சுதந்திரமாக சிந்திப்பதற்கேற்றவாறு பண்பாட்டு மாற்றம்.  இரண்டாவது கருத்தான பண்பாட்டு மாற்றத்தை அடுத்த பிரிவில் பார்ப்போம்.  என்னுடைய பார்வையில் கிரேக்க கருத்துக்களின் பங்கு என்னவென்றால், அறிவு வெடிப்புக்குத் தேவையான கருத்துக்களில் பெரும்பங்கு அவற்றிடம் இருந்துதான் வந்தது. நவீன அறிவியலின் பெருவெடிப்பு  நியூட்டனின் கண்டுபிடிப்பிலிருந்துதான் ஆரம்பித்தது. அப்படியென்றால் இந்த பெருவெடிப்பிற்கு காரணமான “தேவையான அடிப்படை அறிவியல் கருத்துக்கள்”  நியூட்டனின் கண்டுபிடிப்புக்கு முன்தான் தோன்றியிருக்கவேண்டும். நியூட்டனின் கண்டுபிடிப்பின் அடிப்படை அறிவுகள் என்ன என்பதை அறிவதில் மூலம், நாம் ஓரளவு இந்த “தேவையான அடிப்படை அறிவு” என்ன என்பதனை அறிய முடியும்:

 1. தத்துவங்கள்: இவ்வுலகம் பொதுவான இயற்கை விதிகளின்படி இயங்குகிறது. அவ்விதிகளை நமது முயற்சியால் கண்டுபிடிக்க முடியும் என்ற பார்வை முக்கியம். அவ்வாறில்லாமல் இவ்வுலகில் நடப்பது எல்லாம் கடவுளரின் அல்லது பேய்களின் இச்சைப்படி மாறிக்கொண்டே இருக்கிறது. எந்த ஒரு பொதுவிதிகளுமில்லை என்றால் நாம் எந்த முயற்சியும் செய்யப்போவதில்லை. இதுபோன்ற கருத்துக்கள்தான் அறிவு வளர்ச்சிக்கு பெரிய தடை கற்களாக இருந்தன. இந்த தடை கற்களை கிரேக்க தத்துவங்கள் உடைத்தெறிந்தன. குறிப்பாக எபிகியூரியன் தத்துவப்பிரிவு பெரும்பங்கு வகிக்கிறது. ஆர்வர்டு வரலாற்றுப் பேராசிரியர் ஸ்டீபன் கிரீன்பிளாட்டு [10] அவர்கள் எபிகியூரியன் தத்துவங்களின் அடிப்படையில் லுக்ரிசியசினால் (100 BC) எழுதப்பட்ட கவிதையான  De Rerum Natura (“On the Nature of Things”) என்ற நூலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். நவீன உலகை உருவாக்கிய காரணிகளில் ஒன்றாகப் பார்க்கிறார். அவர் எபிகியூரியன் தத்துவங்களை இவ்வாறு சுருக்கமாகக் கூறுகிறார்.

“எபிகியூரஸ் உலகத்தின் தன்மையையும், அதில் மனிதன் எவ்வாறு வாழவேண்டும் என்று ஒரு தத்துவத்தை உருவாக்கினார், அத்தத்துவத்தின் படி உலகம் உடைக்கமுடியாத சிறிய அணுக்களால் உருவாக்கப்பட்டது. அணுக்கள் நகர்ந்துகொண்டே இருக்கின்றன, ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன. சூனியன், சந்திரன், மனிதர்கள், பூச்சிகள், மணல் என அனைத்தும் அணுக்களின் தொகுப்பால் உருவானவை. விண்ணில் இருக்கும் கோள்கள் கடவுளர் அல்ல, அவை நமது விதியை தீர்மானிப்பவை அல்ல,  அவற்றை இயக்குவதும்  கடவுளர் அல்ல. இயற்கையின் ஒழுங்கில் கோள்களும் மற்றவைப் போல ஆக்கல் அழித்தல் விதிகளுக்குட்பட்டது.  உலக ஒழுங்கு சிந்திக்கமுடியாத அளவு பெரிதாயினும், நம்மால் அதன் அடிப்படையான அணுக்களையும், இயற்கையின் விதிகளையும்  ஓரளவு நம்மால் அறிந்து கொள்ளமுடியும். இயற்கையில் அணுக்களும் வெற்றிடமும் மட்டுமே உள்ளன, வேறெதுவும் இல்லை என்ற  தத்துவம்தான் மனிதனை அவனது  துன்பங்களான மூடநம்பிக்கை, பேய் பிசாசுகளின் பயம் ஆகியவற்றிலிருந்து  விடுபட்டு  உண்மையான இன்பத்தை அடைய உதவும். இவ்வுலகில் இன்பம்தான் மனிதனுக்கு தலையாயது.  இன்பமென்பது ஊதாரித்தனமோ, உண்டு களிப்பதோ, காமமோ அல்ல.  இவை எந்த மனநிம்மதியையும் தரப்போவதில்லை. மனிதன் தேவையில்லாததை இன்பமெனத் தேடி துன்புறுகிறான்.  மனிதன் இன்பம்பெற  கவனமாக, கவுரவமாக,  நீதியாக, தைரியமாக,  எதிலும் அளவுக்கதிகமாக இல்லாமல்,  பெருந்தன்மையுடன், தானம் செய்து, நல்ல நட்புகளுடன்  வாழவேண்டும்.”  [10]

இதுதவிர பிளேட்டோ, சாக்ரட்டிஸ், அரிஸ்டாட்டில் என பல கிரேக்க தத்துவமேதைகளின் நூல்களும் பெரும் பங்கு வகித்தன. நியூட்டனுக்கு முன்பு அறிவியல் என்று தனிப்பாடம் இல்லை. அன்றைய ஐரோப்பிய பல்கலைகளில், மதநூல்களைத் தவிர, தத்துவம் என்பதே பெரிய பாடம்.  அப்பொழுது கிரேக்க தத்துவங்கள்தான் பல்கலைகளில் ஆதிக்கம் செலுத்தின. நியூட்டன் தனது கண்டுபிடிப்புகளை அடக்கிய நூலை “இயற்கை தத்துவத்தின் கணித கோட்பாடுகள்” என்றுதான் பெயரிட்டார். “அறிவியல்” என்ற சொல் அதிலில்லை. நியூட்டனுக்குப்பின் தான் அறிவியல் என்ற பாடப்பிரிவு தத்துவத்திலிருந்து பிரிக்கப்பட்டது.

 1. அறிவியல் முறை: முன்பொரு காலத்தில் அறிவு என்பது மேலிருந்து வருவது என்று கருத்து நிலவியது. அதுபோன்ற கருத்துக்கள் புது அறிவைப் படைப்பதற்கு பெருந்தடையாக இருந்தது. ஆனால் நம்மால் அறிவை இயற்கையிலிருந்து நமது பட்டறிவின் மூலம் பெறலாம் என்று அறிவியல் முறையை முதன்முதலில் உணர்த்தியவர் அரிஸ்டாட்டில்.  அறிவை எப்படி முறையாக ஆராய்ந்து கண்டறிவது என்று விளக்கினார். அவர் ஏரணம், இயக்கவியல், இயற்பியல், வானியல், வானிலையியல், தாவரவியல், விலங்கியல், உளவியல்,அறவியல், பொருளாதாரம், அரசியல், இலக்கியம் எனப் பலதுறைகளில் ஆராய்ச்சி செய்தவர். இதனால் அரிஸ்டாட்டில் நவீன அறிவியலைத் தோற்றுவித்தவர் எனப் புகழப்படுகிறார். அனைத்து துறைகளையும் அடக்கிய உண்மையான முழு அறிவைக்கொண்டு இவ்வுல ஒழுங்கை நாம் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்  என்று  நம்பினார். இந்த கருத்து இன்றும் நிலவுகிறது.

“Aristotle, pupil of Plato and tutor of Alexander the Great, was the first universal man in the breadth of his interests. Proceeding on the conviction that unity and order prevail in the universe, “The Philosopher”, as the ancients entitled him, set out to inventory and describe every imaginable aspect of learning: logic, mechanics, physics, astronomy, meteorology, botany, zoology, psychology, ethics, economics, politics, metaphysics, and literature. The encyclopedic writings ascribed to him, estimated in excess of 400 titles, encompass virtually all the knowledge of his time. A comprehensive view based on facts, was essential, Aristotle believed, before any rational explanation of the cosmic order can be attempted… Aristotle’s theory of knowledge in essence that experience is the true source and cause of all our knowledge.” [12]

அறிவியல் கருத்து என்பது இயற்கையில் சோதனை செய்யப்பட்டு சரி பார்த்த பின்னரே ஏற்கப்படும் கருத்து ஆகும். எது சரி என்று தீர்மானிக்கும் உரிமை இயற்கைக்கு மட்டுமே உண்டு. ஒரு கருத்து இயற்கையுடன் ஒத்துவராவிட்டால் அந்த கருத்து அறிவியலாகாது.  தத்துவம் என்பது அறிவியலைத் தாண்டியது.  இது அறிவியல் கருத்துக்களையம் ஏரணத்தையும் (logic) கொண்டு புதிய கருத்துக்களை படைக்கிறது. இந்த கருத்துக்கள் இயற்கையில் சோதனை செய்யப்படாதவை அல்லது அவ்வாறு செய்ய முடியாதவை. தத்துவம் அறிவியல் கருத்துக்கு முன் செல்பவை. அதனால் அது அறிவியலின் பாதையை தீர்மானிக்கும் வல்லமையுடையது.  நமது கேள்விகளுக்கு அறிவியலினால் விடைகாண முடியாதபொழுது நாம் தத்துவத்தை நாடவேண்டும்.

 1. கணிதம்: பண்டைய கிரேக்கர்களின் கணித அறிவு அபாரமானது, குறிப்பாக வடிவியல் (Geometry), தேற்றம் நிரூபித்தல் (Mathematical proofs), எண்கணிதம், அல்சிப்ரா ஆகியன முக்கிய கண்டுபிடிப்புகளாகப் பார்க்கப்படுகிறது. கிரேக்கர்கள் கண்டுபிடித்த அல்சிப்ரா முகம்மதியர்களால் மேலும் வளர்ந்தது [11]. வருடம் 1687-இல் நியூட்டன் தனது கண்டுபிடிப்புகளை செய்வதற்குத் தேவையான ஒன்றைத்தவிர அனைத்து கணிதமும் இருந்தன. அது XY – அச்சு முறை. இதை தேகார்ட் (Descartes 1596 –1650) கண்டுபிடித்தார். ஒரு சிறு கண்டுபிடிப்பை 1000 வருடங்களாக செய்ய முடியாதது பெரும் வியப்புதான். இது இல்லாமல் வடிவியலும் (geometry) அல்சீப்ராவும் எந்த சம்பந்தமும் இல்லாத தனிப்பிரிவுகளாக இருந்தன. XY-அச்சு இவை இரண்டையும் இணைத்து இவற்றின் பயனைப் பெருக்கியது. உதாரணமாக ஒரு வட்டத்தை X^2 + Y^2 = a^2 என்று நாம் இயல்பாக இன்று எழுதுகிறோம். தேகார்ட்டின் கண்டுபிடிப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை இக்கண்டுபிடிப்பைக் கொண்டு பின்வந்த நியூட்டனும்  லைபினிசும் நுண்கணிதத்தைத் (calculus) தனித்தனியாக கண்டுபிடித்தனர். பின் நுண்கணிதம் மூலம் நியூட்டன் தனது விதிகளை கண்டுபிடித்தார் [7]. XY-அச்சு கண்டுபிடிக்கப் படாமல் இருந்திருந்தால் இன்னும் நாம் இந்த நவீன உலகை அடைந்திருக்க மாட்டோம் என்ற உண்மை சிந்திக்கத்தக்கது.  நவீன உலகத்தைப்படைக்க  இருந்த தடைக்கற்களுக்குள் ஒன்று கணிதம். அது தேகார்ட், நியூட்டன்,  லைபினிசுடன்  முடிவிற்கு வந்தது. கணிதத்தின் பயனை கலிலியோ சுருக்கமாக இவ்வாறு கூறுகிறார்: “இயற்கையின் புத்தகம்  கணிதம் என்ற மொழியினால் எழுத்தப்பட்டிருக்கிறது”

“The book of nature is written in the language of mathematics. “

 1. அறிவு ஒரு ஒற்றைக் கட்டுமானம்: அனைத்து அறிவும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. கிரேக்கர்கள் கணிதம் என்பது விண்ணில் இருக்கும் கோள்களின் நிலையை, பாதையை கணக்கிடப் பயன்படுத்தினர். அவர்களின் கணித கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் அழகுக்காக ஆர்வத்திற்காக பெருமைக்காக செய்யப்பட்டன, பயனுக்காக அல்ல. கிரேக்கர்கள் அனைத்து வேலைகளுக்கும் அடிமைகளை பயன்படுத்தினர். பயன்படும் வேலைகளைச் செய்வது என்பது இழுக்காகப் பார்க்கப்பட்டது [7, 11]. அவர்கள் விட்ட பெரிய பிழை  இயற்கையின் விதிகளுக்கும் கணிதத்திற்கும் உள்ள தொடர்பை அறியாததுதான்.  அவர்கள் அதை உணர்ந்திருந்தால், அவர்களின் அறிவுத்திறனுக்கு நியூட்டனின் கண்டுபிடிப்பை அவர்களே செய்தாலும் செய்திருப்பார்கள்.  உண்மையில் மேற்குல அறிவியல் முன்னேற்றத்தை கிரேக்கர்களின் கண்டுபிடிப்புகளின் தொடர்ச்சியாகத் தான் பார்க்க முடியுமே தவிர தனியாகப் பார்க்க முடியாது.

அறிவியல் கருத்துக்களின் தொடர்பை உணர்வது மிகமுக்கியமானது.  இன்றுள்ள அறிவியலில் ஒரு பெரிய சிக்கல் என்னவனெறால் பலதுறைகள் மற்ற துறைகளுடன் இணைந்து இயங்காமல் தனியாகச் செயல்படுகின்றன. நம் உலகில் உள்ள பலச்சிக்கல்களைத் தீர்க்கமுடியாமல் போவதற்கு இதுவொரு முக்கிய காரணம் என்கிறார் உயிரியலாளர் வில்சன்:

“Most of the issues that vex humanity daily – ethnic conflict, arms escalation, over population, abortion, environment, endemic poverty, to cite several most persistently before us – cannot be solved without integrating knowledge from the natural sciences with that of the social sciences and humanities. Only fluency across the boundaries will provide a clear view of the world as it really is, not as seen through the lens of ideologies and religious dogmas or commanded by myopic response to immediate need.” – E.O. Wilson [8]

உதாரணமாக இன்றைய பொருளாதார தத்துவங்கள்  சுற்றுச்சூழலையம் உயிரியலையும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இதன் விளைவு என்னெவென்றால் ஒரு நாடு அதன் GDP என்ற உற்பத்தியை மட்டுமே  வளர்ச்சியாக  எடுத்துக்கொண்டு சுற்றச்சூழல் மற்றும் பல உயிரினங்களுக்கு ஏற்படும் கேடுகளை கணக்கிடுவதில்லை. இது பொருளாதார அறிவியல் பிரிவின் மாபெரும் பிழை என்றே பார்க்கவேண்டும். இன்னொரு உதாரணம் அரசியல். அரசியல் சிக்கல் என்பது பொருளாதாரம், உயிரியல், உளவியல், மனிதப் பண்புகள், பண்பாடு ஆட்டக்கோட்பாடு, தத்துவம் என்று பலத்துறைகளுடன் தொடர்புடையது. நமது சிக்கல்களை அரசியல் அறிவின் மூலம் மட்டுமே தீர்ப்பது கடினம். பல்துறை அறிவு மிகமுக்கியமானது.

நான் இந்த நான்கு கருத்துக்களை  அடிப்படைத்  தேவையான கருத்துக்களாகப் பார்க்கிறேன். என்னுடைய அறிவியல் வரலாற்று அறிவு குறைவானதால், எனக்குத் தெரியாத முக்கியமானவை விடுபட்டு போயிருக்கலாம் என்பதையும்  நினைவில் கொள்ளவும். இந்த கருத்துக்களை தீயைப் போல பார்க்கவேண்டும். எவ்வாறு சிறிய தீப்பொறி பெரும் காட்டை எரிக்கிறதோ, அதுபோல கடினமான சிக்கல்களைத் தீர்ப்பதற்கு இவைதான்  அடிப்படை கருத்துக்கள்.

 1. பண்பாட்டு விழுமியங்கள்:

விவசாயத்தில் விளைச்சல் நன்றாக இருக்க நிலத்தின் தன்மை எவ்வளவு முக்கியமோ, அதுபோல ஒரு சமூகம் செழிக்க பண்பாட்டின் விழுமியங்கள் முக்கியம்.  மரியானா கிரொன்டோனா (Mariana Grondona) [4] அவர்கள் ஒரு சமூகம் முன்னேற்றமடைவதற்கு  உதவியாக இருக்கக்கூடிய 25 பண்பாட்டு அம்சங்களை விளக்கியிருக்கிறார். அதை சுருக்கமாகக் கீழே தருகிறேன்:

 1. நம்பிக்கைகள்: சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகள் பகுத்தறிவிற்கு ஆதரவாக இருக்கவேண்டும். மக்களிடம் தங்களுடைய எதிர்காலத்தை மாற்றும் திறன் தங்கள் கைகளிலேயே இருக்கிறது, கோள்களில் இல்லை என்ற நம்பிக்கை இருக்கவேண்டும்.
 2. அறிவு: மக்கள் நடைமுறைக்கு ஏற்ற சோதனை செய்து தெரிந்து கொள்ளும்படியான அறிவைத்தேடும் எண்ணம் இருக்கவேண்டும். அவ்வாறில்லாமல் நிரூபிக்கப் படமுடியாத தேவலோக தத்துவங்களையும் சித்தாந்தங்களையும் உண்மையென்று நம்பி அதில் பட்டிமன்றம் நடத்திக்கொண்டு   இருந்துவிடக்கூடாது. கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும். கருத்துவேறுபாடுகளை ஏற்கும் பக்குவம் இருக்கவேண்டும். படைப்புத்திறனை ஊக்குவிக்கவேண்டும்.
 3. நெறிகள், நற்குணங்கள்: கடுமையான ஆனால் மக்கள் பின்பற்றும்படியாக எதார்த்தமான சட்டங்களாக, நெறிகளாக இருக்கவேண்டும். அவ்வாறில்லாமல் யாரும் பின்பற்றமுடியாதவாறு கற்பனை உலகொன்றில் உள்ளதுபோல் இருக்கக்கூடாது.
 4. தொழில்/வேலை: வேலை செய்வது என்பது வாழ்க்கையின் அங்கமாக இருக்கவேண்டும், அதில் மகிழ்ச்சி காணவேண்டும். அவ்வாறில்லாமல் வேலை செய்வது வாழ்வதற்கு என்று இருக்கக் கூடாது. வேலை என்பது பொருளற்றவர்கள் அல்லது ஏழைகள் செய்வது என்ற எண்ணம் இருக்கக்கூடாது. தொழில் முனைவோர், கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோரை ஊக்குவிக்கவேண்டும். மக்களிடம் உழைப்பில், தொழிலில்  போட்டி இருக்கவேண்டும்.
 5. சமூக ஒழுக்கம்: சட்டத்தின்படி நடக்கவேண்டும். சமூகத்தை ஒரு குடும்பமெனக் கருதவேண்டும். அதில்லாமல் சமூகத்திலிருந்து நம்மை காத்துக்கொள்வதுதான் குடும்பம் என்றிருக்கக்கூடாது. தனிமனித சுதந்திரத்திற்கு ஆதரவாக இருக்கவேண்டும், ஆனால் எல்லையில்லா சுந்தந்திரம் அளிக்கக்கூடாது. தலைவர்கள் சமூகத்திற்காக உழைக்கவேண்டும். அரசுகள் மத சார்பற்று இருக்கவேண்டும்.

முன்னேறிய நாடுகள் மேலே கூறிய பெரும்பாலான தத்துவங்களைப் பின்பற்றுகின்றன என்று கிரொன்டோனா அவர்கள்  கூறுகிறார். மேலும் அவர் முக்கியாமாகாக் கூறுவது இந்த பண்பாட்டு அம்சங்களை  மக்கள் அகப்படுத்த வேண்டும் (Intrinsic values); அதுதான் நிரந்தரமாக இருக்கும், அவற்றை முன்னேற்றத்திற்கு ஒரு கருவியாகப் (Instrumental values) பார்க்கக் கூடாது. உதாரணமாக கல்வியை பொருளாதார வளர்ச்சிக்கு  ஒரு கருவியாகப் பார்த்தால், பொருளாதாரம் வளர்ந்தவுடன் அச்சமூகத்தின் கற்றல் வளர்ச்சியடையாமல் நின்று போகும். கற்றலை மக்கள் அகப்படுத்தி அவர்களின் ஒரு தன்மையாகப் பார்க்கவேண்டும். கிரேக்கர்கள் தத்துவங்களில் 2000 வருடங்களாக யாரும் அவர்களை மிஞ்ச முடியாதவாறு இருந்ததற்கு கற்றலை அகப்படுத்தியதுதான் காரணம். மாபெரும் தத்துவமேதைகளான  பிளேட்டோவும்  அரிஸ்டாட்டிலும்  செல்வந்தர்கள். அவர்கள் இதைப் பொருளுக்காக செய்யவில்லை. அதுபோலவே நியூட்டன் உட்பட பல அறிவியல் அறிஞர்கள் ஈடுபாட்டின் காரணமாகவே சாதித்தனர். கணிதமேதை ராமனுசனும் அவ்வாறே.

இதுவரை முன்னேற்றத்திற்கு தேவையான பொதுவான பண்பாட்டு  அம்சங்களை பார்த்தோம். பண்பாட்டு மாற்றம் என்பது எளிதானதல்ல,  ஆனால் மாற்ற முடியாதது அல்ல. ஆரிசன் (Harrison) [9] அவர்களின் நூலில் பண்பாட்டு மாற்றத்திற்கு செய்யவேண்டிய பல வழிமுறைகளைத் தந்திருக்கிறார். ஆனால் அறிவுசார் படைப்புகளை  உருவாக்குவதற்கு முழு பண்பாட்டு மாற்றம்  தேவை இல்லை; அறிவைத் தேடுவதற்கான சுதந்திரமும், உண்மையான உணர்வுப் பூர்வமான  ஈடுபாடும் தான் அடிப்படையான தேவைகள். உதாரணமாக கிரேக்க தத்துவமேதைகள் அவரவர்கள் தனியாக பள்ளி அமைத்து ஈடுபாடுள்ள மாணவர்களுக்கு கற்பித்தனர். அம்மாணவர்களில் மேதையானவர்கள் அவர்களுக்கென்று பள்ளிகள் ஆரம்பித்தனர். அரசுகளின் எந்த ஒரு முனைப்பும் கிடையாது. அதுபோல நவீன அறிவியலை உருவாக்க உழைத்தோர் யாரையும் அரசுகள் அவ்வாறு செய்யுமாறு பணிக்கவில்லை. உண்மையில் அவ்வாறு செய்தவர்களுக்கு தொல்லைதான் கொடுத்தது. உதாரணமாக கலிலியோ பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்று கூறியதற்கு சிறை பிடிக்கப்பட்டார். அவர்கள் செய்தது:

 1. அறிவியல் முறைப்படி சோதனைகள் செய்தனர். நூல்களை எழுதினர், மற்றவர்கள் எழுதிய நூல்களை கற்றனர். வருடக்கணக்காக உழைத்தனர்.
 2. அவர்கள் சங்கம் அமைத்து, கருத்துக்களைப் பரிமாறி ஆராய்ச்சி செய்தனர். அரசுகள் சங்கம் உருவாக்கவில்லை. உதாரணமாக நியூட்டன் செயல்பட்ட ” லண்டனின் ராயல் சொசைட்டி” முதலில் உருவாக்கப்படவில்லை. முதலில் பல அறிஞர்கள் அவர்களாக இணைந்து குழுக்களை அமைத்தனர். அதன் பின்பு பல வருடுங்கள் கழித்துதான் புகழ்பெற்ற ராயல் சொசைட்டியை அவர்கள் உருவாக்கினர். அரசின் உதவி அவர்கள் உருவாக்கிய பின்னரே கிடைத்து.

முடிவில் அவர்களின்  கண்டுபிடிப்புகள் பண்பாட்டை மற்றுமல்ல  உலகத்தையே மாற்றியிருக்கின்றன. அவ்வாறு மாற்றும் என்று அவர்களே நினைத்திருக்க மாட்டார்கள்.

முடிவுரை:

இக்கட்டுரையில் ஒரு சமூகம் அறிவார்ந்த சமூகமாக மாற தேவையான அடிப்படை கருத்துக்களையும், பண்பாட்டு விழுமியங்களையும் பார்த்தோம். இதிலிருந்து தமிழ் சமூகத்தில் என்னென்ன ஓட்டைகள் உள்ளன என்று  அறியலாம்:

 1. சமூகத்தில் அறிவியல் சிந்தனைக்கேற்ற அடிப்படை அறிவு இன்னும் பரவலாக இல்லை. பெரும்பான்மையான மக்கள் மூடப் பழக்க வழக்கங்களில் சிக்குண்டு இருக்கின்றனர். என்னுடைய அனுபவப்படி, அடிப்படை கருத்துக்களில் பெரும்பான்மை நான் சுயமாகக் கற்றதுதான், அதுவும் இளம் கல்லூரி படிப்பு முடித்த பின்புதான். தமிழ் நாட்டில் 12-ஆம் வகுப்பில் கணிதமில்லாமல் அறிவியல் பிரிவு ஒன்று உள்ளது. இது முட்டாள் தனமானது. அறிவியலையும் கணிதத்தையும் பிரிக்க முடியாதது. இந்த அறிவியல் பிரிவில் படித்த எனது நண்பர் ஒருவர் அறிவியல் ஆராய்ச்சிக்கு படிக்கும் பொழுது கணிதத்தைக் கண்டு பெரிய அதிர்ச்சியுற்றார். இதிலிருந்து பல மாணவர்கள்   இதனால் பாதிக்கப்பட்டு  இருக்கிறார்கள் என்று தெரிகிறது.
 2. பண்பாடு பின்தங்கியே உள்ளது. பண்பாட்டில் அறிவைத் தேடுவதில் சுதந்திரமும் ஊக்கமும் இருந்தாலும், அறிவைத் தேடுவது அகப்படுத்தப் படவில்லை. கல்வி என்பது ஒரு கருவியாக மட்டும் பார்க்கப் படுகிறது.
 3. தமிழ் தழைக்க தமிழை அனைத்து துறைகளிலும் பயன்படும் மொழியாக மாற்றவேண்டும் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான கருத்து. ஆனால் இக்கருத்து முக்கியமான ஒன்றை மறைத்து விட்டது. முக்கியமாக நாம் பார்க்கவேண்டியது என்னவென்றால் தமிழ் மொழியை வளர்க்க செயல்படுபவர்களை இயக்குவது அவர்களுக்குள் அகப்படுத்தப்பட்ட உணர்வுகளே அன்றி அவர்களை வேறெந்த ஆதாயமும் இயக்குவதில்லை. இன்று தமிழைத் தழைக்க பெருந்துணையாக இருப்பது இந்த உணர்வுகளே. அவர்களுக்கு இந்த உணர்வு எங்கிருந்து வந்தது?   தமிழை வளர்ப்பதற்கு உணர்வுகளும் பயனும் இரண்டு பலமான ஆயுதங்கள். நாம் பயனை வளர்க்க பாடுபடும் அளவிற்கு உணர்வை வளர்க்க பாடுபடுவதில்லை. மக்களிடம் அதுபோன்ற உணர்வுகளை, குறிக்கோள்களை எப்படி வளர்ப்பது என்று இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.
 4. தமிழை அறிவியல் மொழியாக்கப் பல தடங்கல்கள் இருந்தாலும், நம்மால் முடியாத காரியமில்லை. அறிவியலின் ஆரம்பகால வரலாற்றைப் பார்த்தால் ஒன்று தெளிவாகப் புரியும். அறிவியலை வளர்த்தது ஆர்வம் மட்டுமே. ஆரம்பகால அறிவியலில் எந்த உடனடிப் பலனும் இல்லை. அவ்வாறு பலனிருக்கும் என்று யாரும் பெரிதாக எதிர்பார்க்கவுமில்லை. அரசுகளின் எந்த உதவியும் இன்றே செய்தனர். தமிழை அறிவியல் மொழியாக்க ஆர்வத்தை தூண்டும் உணர்வுகளும், அடிப்படை அறிவியல் கருத்துக்களுமே  போதுமானது.  அதைப் பயன்படும்படியாக மாற்றிவிட்டால் காரியம் மிக எளிது. அவ்வாறு செய்வதற்கான  நடைமுறைப் படுத்தக்கூடிய  உத்திகளைக் கண்டறிவது மிக அவசியம். உதாரணாமாக  தமிழ் அறிவியல் சங்கங்கள் ஆர்வளர்களால் நாடு முழுவதும்  உருவாக்கப்பட வேண்டும். பல மடங்கு சிறந்த அறிவியல், கணிதம், தத்துவம், அரசியல், சமூகம் உள்ளடக்கிய பாடத்திட்டங்கள்  உருவாக்க வேண்டும். இது இந்த நவீன கணினி உலகில் ஆர்வலர்களால்  செய்யக்கூடிய காரியமே. கிரேக்கர்களைப் போல சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பங்கேற்ககும்  பண்பாட்டு பழக்கமாக மாற்றவேண்டும்.  அவ்வாறான  பண்பாட்டு மாற்றங்கள் மாபெரும் பலனைத் தரும்.

Greatest shapers don’t stop at introducing originality into the world; they create cultures that unleash the originality in others – Adam Grant [14]

பொதுவாக தமிழ் அறிவுசீவிகளின் மத்தியில்  அறிவியலினால்  நமது சமூக, அரசியல் சிக்கல்களைத் தீர்க்க உதவ முடியுமா என்ற கேள்விக்கு சரியான விடை அவர்களிடம் இல்லை. முடியாது என்றால் அது ஒரு மூடநம்பிக்கை போன்றதுதான். அவர்கள் கேட்கவேண்டிய அடிப்படைக் கேள்வி நாம் வாழும் இவ்வுலகு  ஒழுங்கான உலகா இல்லையா என்பதே. இதுவரை வளர்ந்துள்ள அறிவியல் நமக்கு கூறுவது நாம் ஒரு ஒழுங்கான உலகில் வாழ்கிறோம் என்பதே. அப்படியென்றால் அரசியலும் சமூகமும் அறிவியலின் விதிகளுக்கு அப்பாற்பட்டதில்லை. நாம் சமூகத்தை அறிவியலின் மூலம் அறிந்து கொண்டால், நமது சிக்கல்களை தீர்ப்பது எளிதாகலாம்.

பயன்படுத்திய நூல்கள்:

 1. Bostrom, Nick. Superintelligence: Paths, dangers, strategies. OUP Oxford, 2014.
 2. Richerson, Peter J., and Robert Boyd. “Not by genes alone.” (2005).
 3. Pinker, Steven. The blank slate: The modern denial of human nature. Penguin, 2003.
 4. Harrison, Lawrence E., and Samuel P. Huntington. Culture matters: How values shape human progress. Basic books, 2000.
 5. Simonton, Dean Keith. Creativity in science: Chance, logic, genius, and zeitgeist. Cambridge University Press, 2004.
 6. Transmission of Greek Classics. https://en.wikipedia.org/wiki/Transmission_of_the_Greek_Classics 
 1. Dolnick, Edward. The Clockwork Universe: Isaac Newton, Royal Society, and the Birth of the Modern World. Harper Collins, 2011.
 2. Wilson, Edward O. Consilience: The unity of knowledge. Vol. 31. Vintage, 1999.
 3. Harrison, Lawrence E. The central liberal truth: How politics can change a culture and save it from itself. Oxford University Press, 2006.
 4. Greenblatt, Stephen. The swerve: How the world became modern. WW Norton & Company, 2011.
 5. Russell, Bertrand. History of Western Philosophy, Routledge, 2013.
 6. Downs, Robert B. Books that changed the world. Pickle Partners Publishing, 2016.
 7. Sapolsky, Lecture on Chaos and Reductionism, https://www.youtube.com/watch?v=_njf8jwEGRo&t=282s
 8. Grant, Adam. Originals: How non-conformists move the world. Penguin, 2017.

 

This entry was posted in அரசியல், சமூக அறிவியல், சமூகம், பகுத்தறிவு. Bookmark the permalink.

4 Responses to நாம் அறிவார்ந்த சமூகமாகமாறத் தேவையான அடிப்படை காரணிகள்

 1. Pingback: ஒரு சமூகத்தின் சாதனையில் புகழின் பங்கு | Sethu's Blog

 2. Pingback: தமிழ்வழிக் கல்விக்கான ஒரு திட்டம் – பகுதி 2 | Sethu's Blog

 3. Pingback: பகுதி 2: தமிழ்வழிக் கல்விக்கான ஒரு திட்டம் | Sethu's Blog

 4. Pingback: சுபார்ட்டா (Sparta) எனும் விசித்திர நாடும் புலிகளின் ஈழமும் | Sethu's Blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s