ஒரு சமூகத்தின் நான்கு படிநிலை சுழற்சி

சமூக அடையாளம் [1] என்ற நூலில் ஸ்டீபன் ஓர்செல் அவர்கள் குழுக்களின்  படிநிலை வளர்ச்சியை ஆராய்ந்து ஒரு பொது தத்துவத்தை முன்வைக்கிறார். இத்தத்துவம் தமிழ் சமூகம் எந்நிலையில் இருக்கிறது எதை நோக்கி செயல்படுகிறது என்பதை அறிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு  உதவும் என்பதால் இக்கட்டுரையை எழுதுகிறேன்.  மற்றபடி நான் எது சரி, எது தவறு, என்ற  விவாதத்தில் ஈடுபடவில்லை; அறிவியல் கருத்துக்களை  மட்டுமே பகிர்கிறேன்.  ஸ்டீபன் ஓர்செல் அவர்களின் தத்துவத்தின் படி, ஒரு சமூகம் சமூக அடையாளப்படுத்தல்,  சமூக உற்பத்தியை பெருக்குதல்,  தனிமனித  அடையாள வளர்ச்சி,   சிதைவு என்ற  நான்கு படிநிலை சுழற்சியை கொண்டு செயல்படுகிறது. இனி இந்த நான்கு நிலைகளைப் பற்றி   சுருக்கமாகப் பார்ப்போம்.

 1. சமூக அடையாளப்படுத்தல் (Identification): இந்நிலையில் ஒரு சமூகத்தின் அடையாளம் என்ன என்று தீர்மானிக்கப்படுகிறது. அந்த அடையாளத்தை ஏற்றுக்கொள்வோர் அனைவரும் ஒரே சீரான மனப்பான்மை,  மொழி, குறியீடுகளைக் கொண்டவர்களாக மாற்றப்படுகிறார்கள்.  சீரான மக்களாக மாற்ற அவர்களின் மீது  பலமான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. சிறுபான்மையினரை  ஏற்றுக்கொள்வதில்லை. வரலாற்றை ஆராய்ந்து குழுவின் தொன்மையும் அங்கீகாரமும் (legitimacy)  நிறுவப்படுகிறது. மேலும் குழுவை “நிறுவிய” பழைய தலைவர்களின் நினைவு மீளெழுப்படுகிறது. ஒரு குழுவின் உறுப்பினராவதற்கான அடையாளங்கள்/தகுதிகள்  நிறுவப்படுகிறது. இவ்வடையாளங்கள் இல்லாதவர்கள் அந்நியர்கள் என நிராகரிக்கப் படுகிறார்கள். அந்நியர்களுடன் பூசல்கள் உருவாக்கப்படுகிறது.  அந்நியர்கள் ஆபத்தானவர்கள், நம்மை அழிக்கும் தீய உள்நோக்கம் கொண்டவர்கள் எனப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. தலைமை மையப் படுத்தப்படுகிறது. குழு உறுப்பினர்கள் விசுவாசத்தை காண்பிக்க தியாகம் செய்ய தூண்டப்படுகிறார்கள். குழுவிற்குள்ளே இருக்கும் ஒப்புமையும்  அந்நியர்களுக்கு உள்ள வேற்றுமையும் பெரிதாக வலியுறுத்தப் படுகிறது. இந்நிலையின் முக்கிய குறிக்கோள் தனிமனித அடையாளங்களின் மீது  கவனம் செலுத்தாமல்  மக்களின் கவனத்தை  சமூக அடையாளத்தை நோக்கி நகர்த்துதல் ஆகும்.
 2. குழு உற்பத்தியைப் பெருக்குதல் (Group productivity):   ஒரு குழுவின் அடையாளங்கள் நிறுவப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டபின், ஒரு குழு தன்னுடைய குறிக்கோள்களின் மீது, குறிப்பாக குழுவின் உற்பத்தியின் மீது கவனம் செலுத்துகிறது. இந்நிலையில், குழு இறுக்கமாக ஒற்றுமையாக இருந்தாலும், கவனம் உற்பத்தியின் மீது செலுத்தப்படுகிறது. குழு இறுக்கம் உற்பத்தித்திக்கு குறுக்காக இருப்பதால், தனி மனித அடையாளத்திற்கு கதவு திறக்கப்படுகிறது.  ஒரு குழுவின் எல்லைகளும்  மெதுவாக திறக்கப்படுகிறது.  அந்நியர்கள் குழுவிற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் அவர்கள் தங்கள் தகுதியை நிரூபிக்கும் வரை தாழ்ந்த நிலையிலேயே வைக்கப்படுகிறார்கள். அந்நிய குழுக்களுடனான  பூசல் குறைகிறது,  ஆனால் எச்சரிக்கையுடன் செயல்படுகிறது.
 3. தனிமனித  அடையாள வளர்ச்சி (Individuation): மனிதர்கள் தங்களின் திறமைகளுக்கேற்ப தங்களை வேறுபடுத்திக் கொள்கிறார்கள். தனிமனித நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள் விரிவாகி வேகமெடுக்கிறது. மக்கள் தங்கள் திறமைக்கேற்ப பாகம் (பங்கு) எதிர்பார்க்கிறார்கள். பல உட்குழுக்கள் உருவாகின்றன. மக்கள் தனிமனித பான்மையிலும் தேவையிலும் கவனம் செலுத்துகிறார்கள். சிறுபான்மையினரின் கருத்துக்கள்  செவிமடுக்கப்படுகின்றன, ஊக்குவிக்கப்படுகின்றன. குழு நலனுக்கு செயல்படாமல் தனிமனித நலனுக்கு செயல்படுவது சாதாரணமாகிறது. தலைவர்கள் கேள்வி கேட்கப்படுகிறார்கள், தோல்விகள் தலைமையின்மேல் பலி சுமத்தப்படுகின்றன. மற்ற குழுக்களை ஒப்பிட்டு, எவ்வாறு தமது குழு தமது தேவையை நிறைவு செய்யவில்லை என் கேள்விகள் எழுப்பப்படும்.  சட்டங்கள், பணிகள், செயல்முறைகள்  கேள்விக்குள்ளாக்கப் படுகின்றன.  அதிகமான தனிமனித சுதந்திரத்திற்கு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. தனிமனிதர்களும் உட்குழுக்களும்  குழுவுடன் பேரம்பேசி தங்களது நிலையை உயர்த்திக்கொள்ள முனைகின்றன.
 4. சிதைவு (Decay): தனிமனித அடையாள முதன்மைப்படுத்தல் குழு அடையாளத்திற்கு பாதகமாக அமைகிறது. குழு அடையாளம் தனிமனித அடையாளத்தின் முன் மங்கிவிடுகிறது. தனிமனிதர்களில் பலர்  வேறு குழுக்களுக்கு, உட்குழுக்களுக்கு அல்லது புதிய குழுக்களுக்கு தாவுவதற்கு தயாராகுகின்றனர். ஒரு குழுவின் அடையாளத்திற்கு விளிம்புநிலையில் உள்ள மக்கள் முதலில் தாவுகின்றனர். பின்பு குழுவின் மையத்தில் உள்ளவர்கள், குறிப்பாக தங்கள் திறமைகளை விற்கும் தகுதிப்படைத்தவர்கள் விலகுகின்றனர். இது குழுவிற்குள் எச்சரிக்கை மணியை ஒலிக்கிறது, மக்கள் மாற்றத்தை வேண்டுகின்றனர். ஆனால் ஆரம்ப எதிர்வினைகள் ஒழுங்கற்று  வீரியமற்றதாக இருக்கின்றன. எளிதான மாற்றம் தலைமை மாற்றம்தான்.  தலைமைகள் வேகமாக மாற்றப்படுகின்றன, ஆனால் மக்கள் தலைமையின் மேல் அதிகமாக அதிகாரம் கொடுப்பதில்லை. மக்கள் தாங்கள் தவறான வாக்குறுதிகளாலும்  எதிர்பார்ப்புகளாலும்  ஏமாற்றப்பட்டதாக உணர்கின்றனர். மக்கள் குழு ஒற்றுமைக்கு எதிராக செயல்படுவர். அந்நிய குழுக்கள் இந்த தளர்ச்சியை உணர்ந்து குழுவை உடைத்து மக்களை தங்கள் பக்கம் ஈர்க்க போட்டி போடுவர், ஆனால் குழு எதிர்த்து நிற்கும் ஆற்றலில்லாமல் திண்டாடும். ஒரு குழுவின் அழிவில் ஆதாயமடைய   நினைக்கும் எதிர் குழுக்களிடையே பிணம் தின்னி கழுகுகளைப்போல போட்டியும் பூசல்களும் உருவாகும்.

சுழற்சி:

பெரும்பாலான ஏமாற்றமடைந்த மக்கள் விலகியபின் மீதமிருப்பவர்கள் தங்கள் குழுவின் மீது கவனம் செலுத்துவார்கள். இந்த குழப்பத்தில் நம்பிக்கை தருகிற ஒரு பலமான தலைமை எழுகிற  வாய்ப்புகள் அதிகமாகிறது.  குழுவிலிருந்து  பலர் விலகியதனால்  குழு தூய்மை பெற்றதாக  பார்க்கப்படுகிறது. குழு மீண்டும் “சமூக அடையாளப்படுத்தல்” நிலைக்குத் தாவுகிறது. அதனால் மீண்டும் குழு அடிப்படைவாதம் தலைதூக்குகிறது. தனிமனித அடையாளம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, மக்களின் குழு அடையாளம் மீண்டும் முதன்மைப் படுத்தப்படுகிறது. இவ்வாறு மீண்டும் பழைய சுழற்சி ஆரம்பிக்கிறது.

இந்த தத்துவத்தின்படி ஒரு சமூகம் இந்த சுழற்சியில் இறுக்கமாக  செயல்படும் என்று கொள்ளமுடியாது. இங்கே சில விளக்கங்கள் தேவைப்படுகின்றது.

 1. ஒரு நிலையிலிருந்து எந்த ஒரு நிலைக்கும் சில எதிர்பார்த்த அல்லது எதிர்பாராத நிகழ்வுகளால் தாவுதல் நிகழலாம். இதற்கு அடிக்கடி நிகழும் உதாரணம்: ஒரு குழுவிற்கு வெளியிலிருந்து வரும் ஆபத்தினால், மீண்டும் அது சமூக அடையாளப்படுத்தல் நிலைக்குத் தாவும்.
 2. ஒரு நிலைக்கும் இன்னொரு நிலைக்குமான எல்லை தெளிவாக இராது. ஒரே நேரத்தில் பல நிலைகளுக்கான செயல்பாடுகளை ஒரு சமூகத்தில் காணலாம். பெரும்பாலான மக்களின் செயல்பாடுகளைக் கொண்டே, ஒரு சமூகம் என்ன நிலையிலிருக்கிறது என்று எடுத்துக் கொள்ளவேண்டும்.
 3. நான் இந்த துறையில் அதிகம் பயின்றவன் அல்ல. அதனால் சமூக செயல்பாடுகளை சுழற்சிகளை விளக்கும் அண்மைய வேறு சிறந்த தத்துவங்களும் இருக்கலாம். நாம் இதைப்பற்றி நன்கு ஆராயாமல் இதுதான் முடிவு என்று கொள்ளக்கூடாது.

அனைவருக்கும் பொதுவாகத் தோன்றும் கேள்வி என்னெவென்றால் ஏன் இந்த சுழற்சி ஏற்படவேண்டும், ஏன்  ஒரு சமூகம் தனக்குப் பிடித்த ஏதாவது ஒரு கட்டத்தில் நிரந்தரமாக நிற்கமுடியாது. இதை அறிய இச்சுழற்சி எங்கிருந்து தோன்றுகிறது என்ற புரிதல் அவசியம். நாம் இதுவரை பார்த்த கருத்துக்களை உள்ளடக்கியது   “சமூக அடையாளத் தத்துவம்” என்ற ஒரு ஆராய்ச்சி பாதை. இந்த பிரிவை  உருவாக்கிய  சமூக உளவியல் ஆராய்ச்சியாளர்  தஜவேல்[2]  அவர்கள்  கூறுவது என்னவென்றால், நமது சமூக செயல்பாடுகளின் வடிவத்தை உருவாக்குதலில் முக்கிய பங்கு வகிப்பது நமது உயிரியல் மற்றும் உளவியல். மக்கள் ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறுவது பகுத்தறிவின் மூலம் ஆராய்ந்து செயல்படுவது போல தோன்றினாலும், உண்மையில் அவர்களை அவ்வாறு நகர்த்துவது மனிதர்களுக்கு பொதுவான உளவியல்தான் காரணம்.  இதை எவ்வாறு நாம் பார்க்கவேண்டும் எனில்,  நமது 10 விரல்கள் எவ்வாறு நாம் வரையும் சித்திரங்கள் மற்றும் செதுக்கும் சிற்பங்களின் வடிவங்களை தீர்மானிக்கிறதோ, அதுபோல நமது உளவியல் நமது சமூக செயல்பாடுகளை தீர்மானிக்கிறது.

ஆனால் இந்த சுழற்சி தத்துவம் எவ்வாறு உயிரியல் மற்றும் உளவியலிருந்து தோன்றியது என்று ஸ்டீபன் ஓர்செல் அவர்கள் விளக்கவில்லை. அதுபோன்ற ஆராய்ச்சிகள் இல்லாமல் நம்மால் மேலெழுப்பிய கேளிவிகளுக்கு விடைகாண முடியாது.. இதே கருத்தை உயிரியலாளர் வில்சன் [3] அவர்கள்  இவ்வாறு கூறுகிறார்:

“The full understanding of utility will come from biology and psychology by reduction to the elements of human behavior followed by bottom-up synthesis, not top-down inference and guess work based on intuitive knowledge. It is in biology and psychology that economists and other social scientists will find the premises needed to fashion more predictive models, just as it was in physics and chemistry that researchers found premises that upgraded biology.”

இதுபோன்ற ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. உதாரணமாக மனித பரிணாம வளர்ச்சியில் எவ்வாறு ஒத்துழைப்பு உருவானது என்ற ஆராய்ச்சியில், மார்ட்டின் நோவாக் [4] அவர்களின் கண்டுபிடிப்பு சமூகத்தில் நிகழும் சுழற்சியை ஆட்டக்கோட்பாட்டின்  (Game Theory) மூலம் ஓரளவு  அறிந்து கொள்ள முடிகிறது. இவரின் கருத்துப்படியம் சமூகம் நான்கு படிநிலையில் சுழற்சி ஏற்படுகிறது , ஆனால் நிலைகள் சிறிது மாறுபட்டவை:

 1. முற்றிலும் ஒத்துழைப்பற்ற சமூகம் (All defect)
 2. நீ ஒத்துழைத்தால் நான் ஒத்துழைப்பேன். நீ கெடுதல் செய்தால், நான் கெடுதல் செய்வேன் (Tit-for-Tat)
 3. நீ ஒத்துழைத்தால் நான் ஒத்துழைப்பேன். நீ கெடுதல் செய்தால், நான் மன்னித்து உனக்கு சில வாய்ப்பளிப்பேன். நீ திருந்தாமல் கெடுதல் செய்தால், நான் கெடுதல் செய்வேன். ( Generous Tit-for-Tat)
 4. முற்றிலும் ஒத்துழைப்பான சமூகம் (All cooperate)
 5. மீண்டும் (1) (All defect)

இந்த நிலைகளை ஆரம்பத்தில் நாம் கண்ட ஸ்டீபன் ஓர்செல்  அவர்கள் கூறிய நிலைகளையும் நாம் ஓரளவு ஒப்பிடலாம். அடிப்படையில் ஒத்துழைப்பும்  ஒத்துழைப்பின்மையும் தான் சமூகத்தின் வளர்ச்சிக்கும் சிக்கல்களுக்கும் அடிப்படை காரணங்கள்.  அதை  இவ்விரண்டு தத்துவங்களும் சரியாக கணிக்கின்றன. நிலைகளை ஒப்பிடும்பொழுது, நிலை (1 -நோவாக்) – நிலை (4-ஓர்செல்) பொருந்துகிறது;  நிலை (2-நோவாக்) – நிலை (1-ஓர்செல்) ஓரளவு பொருந்துகிறது. மற்ற நிலைகள் பொருந்துவதாகத் தெரியவில்லை.

ஏன் இந்த சுழற்சி ஏற்படுகிறதென்றால், ஒவ்வொரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு செல்வதில் தனிமனிதனுக்கு நன்மை பயக்கிறது. எந்த ஒரு நிலையும் நிரந்தரமாக இருக்கும்படியான திடத்தன்மை கிடையாது. அதனால் சமூகம் சுழன்று கொண்டேதான் இருக்கும் என்கிறார். மனித பரிணாம வளர்ச்சியில் இதுபோன்ற ஆட்டங்களில் மக்கள் பங்குபெற்றிருக்க வேண்டும் என்றும், அதனால் தான் நமக்கு மற்றவருக்கு உதவும் எண்ணமும், மன்னிக்கும் குணங்களும், மற்றவர் தீங்கிழைத்தால் நமக்கு கோபமும் வரும்படியாக நமது உளவியல் பரிணாம வளர்ச்சியில் கட்டமைக்கப் பட்டிருக்கிறது என்று பல உயிரியலாளர்கள் கருதுகின்றனர் [5]. இந்த ஆட்டக்கோட்பாட்டு ஒப்புரு (model) மிக எளிமையானது, ஆனால் சில ஆழமான கருத்துக்களை விளக்குகின்றன. சிக்கலான சமூக இயக்கத்தை அறிந்துகொள்ள மேலும் சிக்கலான ஒப்புருக்கள் தேவைப்படும்.

பயன்படுத்திய நூல்கள்:

 1. Worchel, Stephen, ed. Social identity: International perspectives. Sage, 1998.
 2. Robinson, William Peter, and Henri Tajfel, eds. Social groups and identities: Developing the legacy of Henri Tajfel. Psychology Press, 1996.
 3. Wilson, Edward O. Consilience: The unity of knowledge. Vol. 31. Vintage, 1999.
 4. Martin Nowak: ‘The Evolution of Cooperation’ | 2015 ISNIE Annual Meeting, https://www.youtube.com/watch?v=A8Y0kCdYoug&t=1603s
 5. Nowak, Martin, and Roger Highfield. Supercooperators: Altruism, evolution, and why we need each other to succeed. Simon and Schuster, 2011.

 

 

 

 

This entry was posted in அரசியல், சமூக அறிவியல், சமூகம், பகுத்தறிவு. Bookmark the permalink.

1 Response to ஒரு சமூகத்தின் நான்கு படிநிலை சுழற்சி

 1. Pingback: தமிழுணர்வு எங்கிருந்து வருகிறது, அதன் சமூக தாக்கம் என்ன? | Sethu's Blog

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s