அறிவியலும் தமிழர் அரசியலும்

ஒரு சமூகம் தன்னுடைய அரசியல் இலக்கை அடைய என்ன செய்யவேண்டும்? தன்னை எவ்வாறு ஒரு வல்லமையான சமூகமாக மாற்றுவது? தன்னை அழியாமல் காத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும்? இந்த கேள்விகள் அனைத்து சமூகங்களுக்கும் முக்கியமானவை, குறிப்பாக இன்றைய சூழலில் தமிழ்ச் சமூகத்திற்கு மிகமுக்கியமானவை. இக்கேள்விகளுக்கு தற்பொழுதுள்ள பதில்கள் இவ்வாறு இருக்கின்றன: 1. நாம் காண்பது ஒரு அரசியல் சிக்கல். ஒரு நல்ல அரசியல் தலைமை கிடைத்துவிட்டால் நமது சிக்கல்களை தீர்த்துவிடலாம், 2. சாதி மதங்களை ஒழித்து அனைவரையும் பகுத்தறிவு உள்ளவர்களாக மாற்றவேண்டும். பகுத்தறிவுக் கொள்கைதான் தீர்வு. 3. பொதுவுடமைக் கொள்கைதான் தீர்வு. 4. நமது சிக்கல்களை மக்களிடம் விளக்கி பரப்புரை செய்தால் மக்கள் கிளர்ந்து சிக்கல்களை தீர்ப்பர். இது போன்ற கருத்துக்கள்தான் இன்றைய சமூக அரசியல் செயல்பாட்டுக்களை இயக்கும் அடிப்படை கோட்பாடுகள். ஆனால் இக்கருத்துக்கள் போதுமானவையா? இவற்றைக்கொண்டு நமது சமூகம் தனது இலக்குகளை அடையமுடியுமா? இந்தக்கேள்விகளுக்கு எதனடிப்படையில் விடை காண்பது?

நமது சமூகம் பற்றிய அறிவுகள் ஒரு உறுதியான அடித்ததளத்தில் கட்டப்பட்டிருக்கவேண்டும். இல்லையென்றால் அவையனைத்தும் தவறாகப்போக வாய்ப்பிருக்கிறது. சமூகம் பற்றிய அறிவியல் கருத்துக்கள் எவ்வளவு தூரம் தமிழுலகத்தில் அறியப்பட்டிருக்கிறது என்று எனக்குத் தெரியாது. ஆனால் பதிப்பகத்துறையிலே இருக்கும் அழி செந்தில்நாதன் அவர்கள் ஒரு வருடத்திற்கு முன் எழுதிய கட்டுரையில் இவ்வாறு கூறியிருந்தார்:

“இந்த சமூகத்துக்கு என்ன தேவையோ அல்லது இந்த சமூகத்தைப் புரிந்துகொள்வதற்கு என்ன தேவையோ அவை இன்னும் பத்து சதவீதம் கூட எழுத்தாக்கம் பெறவில்லை என்றுதான் நினைக்கிறேன்.”[1]

இக்கட்டுரை செந்தில்நாதன் அவர்கள் கூறிய தேவையை நோக்கிய எனது முதலடி. நமது இன்றைய கருத்துக்கள் பெரும்பாலும் பொதுப்புலன் (common sense) அறிவு மூலம் பெறப்பட்டவை அல்லது இறக்குமதி செய்யப்பட்டவை. கடந்த 50 ஆண்டுகளில் சமூக செயல்பாட்டினைப் புரிந்துகொள்ள அறிவியலில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் சில தத்துவங்களைக் கொண்டு, எவ்வாறு நமது இன்றைய அரசியல் அறிவு தவறாக உள்ளது என்றும், அதனால் அரசியல் செயல்பாடுகள் எவ்வாறு பாதிப்படைகின்றன என்றும், நாம் எது மாதிரியான அறிவியல் பூர்வமான சிந்தனைக்கு மாறவேண்டும் என பார்ப்போம். இது அறிவியல் கட்டுரை என்றாலும் அனைவருக்கும் புரியும்படியாகவே எழுதியிருக்கிறேன்.

மனிதத்தன்மையைப் பற்றிய தவறான புரிதல்களினால் விளையும் தவறான அரசியல் செயல்பாடுகள்:

பொதுப்புலன் அறிவு அன்றாட வாழ்க்கையில் மிகவும் பயனுள்ளது. உதாரணமாக நாம் வகுப்புகளில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், கோவில்களில் எப்படி இருக்கவேண்டும், திருமண வீட்டில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று நமக்குத் தானாகவே புலப்படும். ஆனால் அன்றாட வாழ்க்கை அல்லாத இடங்களில் பொதுப்புலன் அறிவு தவறான பாதையில் இட்டுச்செல்லும் என்கிறார் டங்கன் வாட்ஸ்[2]. மேலும் நாம் அடிக்கடி நடக்கும் விடயமாக இருந்தாலும், அவை நமது புலன்களுக்கு நேரடியாக தெரியாவிட்டால் நமது பொதுப்புலன் வேலை செய்யாது. உதாரணாமாக பூமி தட்டை என்றும் சூரியன் பூமியை சுற்றிவருகிறது என்ற தவறான பார்வையைக் கொள்ளலாம். இனி அரசியலுக்கு முக்கியமான சில கருத்துக்களை பார்ப்போம்:

பூமி தட்டை என்ற பொதுப்புலன் அறிவிற்கு ஏற்ற மாதிரி தினமும் நாம் காணும் ஒன்றைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோமென்றால் அது மனிதனின் தன்மையைப் பற்றியதுதான், அதுவும் குறிப்பாக மனிதனின் பகுத்தறிவின் (reason) திறம் பற்றியது. தற்பொழுது நிலவும் மனிதனின் பகுத்தறிவு பற்றிய கருத்துக்களாக ஜார்ஜ் லக்காஃப் [3] கூறுவது என்னவென்றால் நாம் என்ன சிந்திக்கிறோம் என்று நமக்குத்தெரியும் (conscious), மனிதன் இயற்கையில் பகுத்தறிவானவன் (rational), உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு சிந்திக்கும் திறமை பெற்றவன் (unemotional), தர்க்கரீதியாக சிந்திப்பவன் (logical), தனது நலம் எது என்று சிந்திக்கும் திறமை வாய்ந்தவன் (self-interested), சிந்திக்கும் திறன் உடலிற்கு அப்பாற்பட்டது (disembodied), மற்றும் உலகிலுள்ள அனைவருக்கும் சிந்திக்கும் திறன் பொதுவானது (universal). இக்கருத்துக்கள் 18-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்டு உலகலாவப் பரவியுள்ளன. உண்மை என்னவெனில் இக்கருத்துக்கள் எல்லாம் பிழையானவை என்கிறார் லக்காஃப். கடந்த நாற்பதாண்டுகளாக மூளை மற்றும் மனித இயல்பு சார்ந்த ஆராய்ச்சிகள் இவற்றைத் தவறு என நிரூபிக்கின்றன. இதனால் நமக்கு என்ன என்று கேட்கலாம். உண்மை என்னவெனில் நமது பெரும்பாலான அரசியல் செயல்பாடுகள் மனிதனின் சிந்தனைத்திறன் பற்றிய நமது புரிதலின் அடிப்படையிலேயே அமைகின்றன. உதாரணமாக நீங்கள் இவ்வாறு நினைப்பீர்கள்: 1. மக்களுக்கு உண்மையான நிலவரத்தை எடுத்துக் கூறினால் சரியான முடிவெடுப்பார்கள். 2. மக்களுக்கு என்ன தேவை என்று கேட்டால், அவர்கள் என்ன வேண்டும் என்று கூறுவார்கள். அதன்படி அவர்கள் வாக்களிப்பார்கள். 3. மக்களிடம் உணர்ச்சிகரமாக பேசவேண்டிய அவசியம் இல்லை. புள்ளி விவரங்களைத் தந்தால் போதுமானது. 4. உங்களுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை எனில் அவர்கள் அறியாமையில் உள்ளனர், அவர்கள் ஏமாற்றப் பட்டுள்ளனர், அல்லது அவர்கள் ஊழல் வயப்பட்டவர்கள் என நினைப்பீர்கள். இவ்வாறு நினைப்பீர்களானால் உங்கள் எண்ணங்கள் முற்றிலும் தவறு என்கிறார் லக்காஃப். மனிதனின் சிந்தனை பற்றிய ஆராய்ச்சியில் மிகவும் ஆச்சரியப் படக்கூடிய விடயம் என்னவென்றால் நம்முடைய மூளையின் செயல்பாடுகளில் 98% நமக்கு புலப்படுவதில்லை, வெறும் 2% நமக்குத்தெரிகிறது[3]. இதன் பொருள் என்னவென்றால் நாம் எவ்வாறு சிந்தித்து முடிவெடுக்கிறோம் என்பது பெரும்பாலான விடயங்களில் நமக்கே தெரியாது. அவை தன்னிச்சையாக நடைபெறுகின்றன. நமது உணர்வுகள் நமது முடிவுகளில் பெரும்பங்கு வகிக்கிறது.

இன்னொரு ஆச்சரியாமன விடயம் என்னவென்றால் பகுத்தறிவு என்பது உணர்வுகளுக்கு பெரும்பாலும் அடிமை என ஜானதன் ஹைட்[5] அவர்களின் ஆராய்ச்சிமுடிவுகள் கூறுகின்றன. இதை நாம் அன்றாட நடக்கும் முகநூல் மற்றும் தொலைகாட்சி விவாதங்களை கூர்ந்து கவனித்தால் புரியும். எத்தனை முறை எதிரணியில் உள்ளவர்கள் உங்கள் பகுத்தறிவு கருத்துக்களை ஏற்று உங்கள் பக்கம் நிலை மாறியிருக்கிறார்கள்? இந்த சிக்கல் அறிவியலாளர்களுக்கும் உண்டு. அறிவியலாளர் மாக்ஸ் பிளாங்க்[11] அவர்கள் “அறிவியில் கருத்து முன்னேற்றம் ஒவ்வொரு இழவு வழியாக ஏற்படுகிறது. உண்மையான அறிவியல் தத்துவம் வெற்றியடைவதில்லை, அதன் எதிர்ப்பாளர்கள் காலப்போக்கில் இறந்துவிடுகிறார்கள்” என்கிறார். உணர்வுகளுக்கு எது சரியென்று படுகிறதோ, அதைக் கெட்டியாகப்பிடித்துக் கொண்டு “முயலுக்கு மூன்றே கால்கள்” என்று நிற்பது மனித இயல்பு. பகுத்தறிவின் வேலை என்னவென்றால் எப்படி அந்த முயலுக்கு மூன்று கால்கள் என்று விளக்கத் துணைபுரியும். பகுத்தறிவு என்பது உணர்வுகளுக்கு வக்கீல் போன்றது என்கிறார் அறிவியலாளர் ஜானதன் ஹைட் (Jonathan Haidt). அதாவது உணர்வுகளின் முடிவை நியாப்படுத்துவதுதான் பகுத்தறிவின் வேலை என்கிறார். அந்தோனியோ தோமாசியோ என்கிற மூளை அறிவியலாளர் தன்னுடைய ஆராய்ச்சியில் இன்னொரு ஆச்சரியமான விடயத்தை கண்டுபிடித்தார். மூளையில் உணர்வுகள் உள்ள இடத்தில் அடிபட்டு சிதைந்த நோயாளிகளின் அறிவுத்திறனை அவர் ஆராய்ச்சி செய்தார். இந்த நோயாளிகளுக்கு எது சரி தவறு என்று தெளிவாகித் தெரிகிறது, மேலும் அவர்களின் நுண்ணறிவு எண்ணில் (IQ) எந்த குறைபாடும் இல்லை. ஆனால் அவர்கள் சொந்த வாழ்க்கையிலும், அலுவலக வேலைகளிலும் முட்டாள் தனமான முடிவுகளை எடுத்தார்கள். அவர்கள் நண்பர்களையும் குடும்பத்தினரையும் பகைத்துக்கொண்டு அவர்கள் தங்களது வாழ்க்கையை சின்னாபின்னமாக்கிக் கொண்டார்கள். அடிப்படையில் அவர் கண்டுபிடிப்பு என்னவென்றால் உணர்வுகள் இல்லாமல் நம்மால் சரியாக சிந்திக்கமுடியாது என்பதுதான். இதே கருத்தை கணிதமேதை ஹென்றி பொங்கரே அவர்கள் கணித அறிவியலாளர்களின் கண்டுபிடிப்பைப் பற்றி கூறுவதிலிருந்து அறியலாம்: “நாம் உள்ளுணர்வுகளால் கண்டுபிடிக்கிறோம், அதைத் தர்க்கத்தால் நிரூபிக்கிறோம். கண்டுபிடிப்பு விமர்சனத்தைவிட சிறந்தது”:

“It is by logic that we prove, but by intuition that we discover. To know how to criticize is good, to know how to create is better.”

மனிதர்களின் தன்மை ஆயிரக்கணக்கான வருடங்களாக அதே மாதிரிதான் இருக்கிறது, இதை மாற்றும் தொழில் நுட்பம் இன்னும் வரவில்லை. மனிதர்களைப் பகுத்தறிவுள்ளவர்களாக மாற்ற நினைப்பதும் நாயின் வாலை நேராக்க முனைவதும் ஒன்றுதான். இவையெல்லாம் அரசியலில் உள்ளவர்களுக்கு முக்கியமானது. அரசியலில் யாருக்கு வாக்களிப்பது போன்ற முடிவுகள் பெரும்பாலும் மனிதனின் புலனுக்கு எட்டாத சிந்தனைகள் மூலம் நடைபெறுகிறது என்கிறார் அறிவியலாளர் லக்காஃப். மனித சிந்தனையானது மூளையிலுள்ள நியூரான்கள் எவ்வாறு இணைக்கப்பட்டு சொடுக்கப்படுகின்றன என்பதன் விளைவாக வருவது. ஒரு மனிதனின் அரசியல் நிலைப்பாடு மாற்றம் என்பது மூளையிலுள்ள நியூரான்களின் இணைப்பு மாற்றமாகும். ஒருவரின் மூளையை வரிவருடு (scan) செய்து அவர் வலதுசாரியா அல்லது இடதுசாரியா என்று கண்டுபிடிக்கும் முயற்சிகளில் வெற்றியும் கிடைத்துள்ளது[13]. இது லக்காஃப் அவர்களின் முடிவுகளுக்கு துணையாக நிற்கிறது. லக்காஃப் அரசியலாளர்களுக்கு அறிவுறுத்துவது என்னவென்றால் ஒருவரின் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் அவரின் அரசியல் நிலைப்பாட்டை மாற்ற முடியாது. அதுமாதிரியான மூளை மாற்றங்கள் பகுத்தறிவின் வழியாக நடப்பதல்ல. மாற்றத்தை உருவாக்க மக்களை அவர்களின் உணர்வுகள் வழியாக அணுகவேண்டும். மனிதர்களின் உணர்வுகளைத் தூண்டும் விதமாக உங்களின் கருத்துக்களை ஒரு கோர்வையான கதைகளாகக் கூறவேண்டும். மூளையில் மாற்றம் உடனே நிகழ்வதல்ல, அதனால் தொடர்ந்து திரும்பத்திரும்ப செய்யவேண்டும். உதாரணமாக அமெரிக்க வலதுசாரிகளுக்கு சாதகமான உணர்வு என்பது பயம். இடதுசாரிகளுக்கு சாதகமான உணர்வு என்பது இரக்கம். வலதுசாரிகள் இதை நன்கு உணர்ந்து பயத்தினை நன்றாகப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் இடதுசாரிகள் பகுத்தறிவு என்கிற பெயரில் உணர்வுகளுக்கு அதிக இடமளிப்பதில்லை, அதனால் அவர்களின் செயல்பாடுகள் வீரியமற்றதாக இருக்கிறது என்கிறார் லக்காஃப். தமிழக மக்கள் ஏன் சினிமாக்காரர்களுக்கு வாக்களிக்கிறார்கள் என்பதும் இதுபோன்ற புலனுக்கு எட்டாத சிந்தனைகள் மூலமே நடைபெறுகிறது என நினைக்கிறேன். சினிமாவில் கதாநாயகர்கள் மக்களை தொடந்து அவர்கள் விருப்பப்பட்ட உணர்வுகளில் மூழ்கடித்து அவர்கள் மூளையில் உணர்வுப்பூர்வமாக அங்கமாகி விடுகிறார்கள். முடிவில் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கிறார்கள். அவ்வாறு வாக்களிப்பவர்களிடம் ஏன் என்று கேட்டால் பல காரணங்களைக் கூறுவார்கள். ஆனால் அது ஒரு வக்கீலின் பேச்சு மாதிரி. உண்மையான காரணம் அதுவல்ல.

இந்த மனிதத்தன்மை பற்றிய ஆராய்ச்சிகளிலிருந்து தெரியவருவது என்னவென்றால் நமது சமூக அரசியல் செயல்பாட்டில் உள்ள பல அடிப்படை ஊகங்கள் தவறாக உள்ளன. இந்த சிக்கல் தமிழ்ச் சமூகத்தில் மட்டும் இல்லை. இது உலகம் முழுவதும், அமெரிக்கா உட்பட, குறிப்பாக இடதுசாரி அரசியலில் உள்ளவர்கள் இந்தத் தவறை செய்கிறார்கள் என லக்காஃப் கூறுகிறார். இதன் விளைவு அவர்களின் அரசியல் செயல்பாடுகள் வீரியமற்றதாக ஆகின்றன, வலது சாரிகள் இதை நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அறிவியலைப் பற்றி நாம் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும். அறிவியல் என்பது உண்மைகளைக் கண்டுபிடிக்கும் ஒரு சிறந்த கருவி, அவ்வளவே. நாம், நமது சமூகம் எவ்வாறு செயல்படவேண்டும், எந்த குறிக்கோள்களை அடையவேண்டும் என தீர்மானிப்பவர்கள் நாம் மட்டுமே. அறிவியலால் நமது குறிக்கோள்களை மாற்றமுடியாது, ஆனால் நமது குறிக்கோள்களை அடைவதற்கு ஒரு மிக வலிமையான கருவியாக துணைபுரியும். லக்காஃப் அவர்கள் அமெரிக்கா 21ம் நூற்றாண்டுக்கு ஏற்றவாறு அறிவொளிக்கால (enlightenment) சிந்தனைகளை மாற்றியமைத்து செயல்படவேண்டும் என்று கூறுகிறார். அதுபோலவே தமிழ் சமுதாயமும் பகுத்தறிவு சிந்தனைகளை 21-ஆம் நூற்றாண்டு அறிவினைக் கொண்டு மாற்றியமைக்க வேண்டும். நமது சிக்கல்கள் பகுத்தறிவினைப் பின்பற்றுவதினால் ஏற்படுவதில்லை. நமது மனித சிந்தனைத் தன்மையின் அறியாமையிலிருந்து வருகிறது. இதே கருத்தை புகழ்பெற்ற இராணுவ தத்துவ அறிஞரும் வரலாற்று ஆசிரியருமான லிட்டல் ஹார்ட்[9] 1944-இல் இவ்வாறு கூறுகிறார்:

“A deeper diagnosis of the malady from which left wing intellectuals have suffered in the past might suggest that their troubles have come not from following reason too far but from not following it far enough to realize the general power of unreason.”[9]

சமூகம் ஒரு சிக்கலான அமைப்பு:

சமூகம் என்பது பெரிய எண்ணிக்கையிலான மனிதர்கள் பல்வேறு விதமான அமைப்புகளை தொழில்களை அமைத்து பல்வேறு விதங்களில் அவற்றை அடுக்கி, இணைத்து உருவாக்கிய ஒரு சிக்கலான அமைப்பு (Complex system). இதுபோன்ற சிக்கலான அமைப்பில் ஒரு விளைவு நடந்தால் அதன் காரணங்கள் பல அடுக்குகளின் அடியில் புதைந்து இருக்கும். டங்கன் வாட்ஸ் உதாரணமாகத் தருவது அமெரிக்காவில் 2008-இல் நடந்த பொருளாதாரப் பின்னடைவுக்கு “மனிதனின் பேராசை” தான் என்று பலர் மேலோட்டமாக கருத்து கூறினர். ஒரு மோசமான விளைவு நடந்தபின் நமது பொதுப்புலன் ஒரு கதையை உருவாக்கி இதுதான் காரணம் என்று கூறும். ஆனால் உண்மையான காரணங்கள் ஆழமாக பல அடுக்குகளின் கீழ் புதைந்துள்ளன என்கிறார். மேலும் இதுபோன்ற பொதுப்புலன் அறிவு ஒரு மோசமான விளைவு நடப்பதற்குமுன் அதைக்கணிக்க எந்தவகையிலும் உதவாது என்கிறார். இதை நமது சூழலில் எடுத்துக்கொண்டால், ஏன் ஈழபோராட்டம் 2009-இல் இனப்படுகொலையில் முடிந்தது? யார் இதற்கு காரணம்? என்பது போன்ற கேள்விகளுக்கு பொதுப்புலனால் அறியமுடியாது. அவ்வாறு கூறப்படும் காரணங்கள் டங்கன் வாட்ஸ் கூறுவதுபோல, நடந்து முடிந்தபின் கூறப்படும் கதை போல. இதை முன்னரே அவர்களால் கணித்திருக்க முடியாது. மேலும் தமிழ்ச் சமூகம் எதிர்காலத்தில் வரப்போகும் சிக்கல்களையும் அறிய உதவாது.

நாம் தினமும் உறவாடுவது தனிமனிதர்களுடன் மட்டுமே, ஒரு குழுவிடம் அல்ல. இதனால் பொதுப்புலனுக்கு குழுவின் செயல்பாடு, மற்றும் தன்மைகளை முழுவதுமாக அறிய முடியாது. தனிமனிதர்களின் ஒட்டுமொத்த செயல்பாட்டின் விளைவாக வருவதுதான் சமூக செயல்பாடு. சமூகம் ஒரு சிக்கலான அமைப்பு என்பதால் தனிமனித செயல்பாட்டிலிருந்து விளையும் சமூக செயல்பாட்டை முழுவதுமாக கண்டறிவது கடினம்[10]. மேலும் அரசின் கொள்கைகள் என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்தும், அந்த கொள்கைகள் அதன் இலக்கை அடையுமா என்பன எளிதில் கண்டறிய முடிவதில்லை. உதாரணமாக இந்தியாவின் அண்மைய பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளலாம். இன்னொரு தன்மை என்னவெனில் ஒரு சமூகத்தில் இன்று ஏற்படும் சிறுசிறு மாற்றங்கள் நமது கண்ணுக்கு புலப்படுவதில்லை, ஆனால் இம்மாற்றங்கள் உருதிரண்டு மொத்தமாக சில ஆண்டுகள் அல்லது தசாப்தங்களுக்குப் பிறகு ஒரு பேரிடரை உருவாக்கும் பொழுதுதான் என்ன நடந்தது என்றே விளங்கும். மாற்றங்கள் மிகமெதுவாக ஏற்படும், ஆனால் விளைவுகள் நீண்ட காலத்திற்குப்பிறகு திடீரென நடக்கும். உதாரணங்களாக 2008 அமெரிக்க பொருளாதாரப் பின்னடைவை, சோவியத்தின் திடீர் எதிர்பாராத வீழ்ச்சி ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். இவை நிபுணர்களாலும் அறியமுடியாதவாறு இருந்திருக்கின்றன என்பதிலிருந்து சமூகம் எவ்வளவு சிக்கலானது என்பதை புரிந்துகொள்ளலாம். ஒன்று செய்தால் ஒன்று விளையும் என்றால் நம்மால் பொதுப்புலன் மூலம் புரிந்து கொள்ளலாம், ஆனால் சமூகத்தில் ஒன்று செய்தால் பல விளையும், அவை என்ன என்ற உடனே சிலசமயம் காணவும் முடியாது. பல சிறுசிறு செயல்கள் சேர்ந்து பெரிதாக ஒன்று விளையும், அதையும் நம்மால் உடனடியாகக் காணமுடியாது. இது சிக்கலான அமைப்பின் தன்மைகள்[10].

எது மாதிரியான அறிவு தேவை?

இதுவரை எவ்வாறு பொதுப்புலன் நம்மை சமூகத்தைப் பற்றி தவறான புரிதலில் கொண்டு செல்கிறது என்று பார்த்தோம். அதிலிருந்து விடுபட நமக்கு அறிவியல் அடிப்படையான சிந்தனைத் தேவை என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆனால் அறிவியலில் பலவகையான துறைகள் உண்டு; அதில் எந்தத் துறையைப் பின்பற்றுவது என்ற கேள்வி எழும். அறிவியல் பற்றி நாம் அடிப்படையாக புரிந்துகொள்ளவேண்டியது, ஆனால் பெரும்பாலோனோர் புரிந்து கொள்ளாதது, என்னெவென்றால் அனைத்து அறிவியல் துறைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டது. அனைத்திற்கும் அடிப்படை இயற்பியல் விதிகள், அதிலிருந்து வருவது வேதியியல், வேதியிலிருந்து உயிரியல், பின்பு அதிலிருந்து மூளை நரம்பியல், உளவியல், பொருளாதாரம், சமூக அறிவியல் என்று அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை. இந்த தொடர்புகளைக் கணக்கிடுவது அல்லது கண்டறிவதும் மிகவும் சிக்கலானவை என்பதால் அறிவியலாளர்கள் பல துறைகளாகப் பிரித்து ஆராய்ச்சி செய்கின்றனர்[6]. இந்தப்பிரிவுகள் மனிதனால் உருவாக்கப்பட்டவையே ஒழிய இயற்கையால் உருவாக்கப்பட்டவை அல்ல. இயற்கையில் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை. உதாரணாமாக நான் மேலே விளக்கிய உளவியல் மற்றும் மூளை நரம்பியலுக்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பை எடுத்துக் கொள்ளலாம். இன்னொரு உதாரணம்: நமது உடல் மற்றும் அதிலடங்கிய மூளை எல்லாம் வேதியியல் வினைகளால் இயங்குகின்றன, அதனால் நோய்களை வேதியியல் வழியாகவும் தீர்க்கமுடியும் என்ற அறிவிலிருந்து உருவானதுதான் இன்று நாம் காணும் நவீன மருந்துகள், வேறுவிதமாக கூறுவதென்றால் வேதியியல் மூலக்கூறுகள். ஆராய்ச்சிவசதிக்காகத்தான் அறிவியல் பலதுறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன, ஆனால் உண்மையில் அறிவியல் என்பது அனைத்தும் துறைகளும் இணைக்கப்பட்ட ஒற்றை கட்டுமானம் என்கிறார் வில்சன்[7]. இவ்வாறு உள்ள பல அறிவியல் துறைகள் சிலநேரம் இந்த இயற்கையாக உள்ள இணைப்பை உணராமல் தன்னந்தனியாக செயல்படுகின்றன. குறிப்பாக சமூக அறிவியலுக்கும் உயிரியலுக்குமானத் தொடர்பு இன்னும் முழுவதுமாக ஆராயப்படவில்லை. இதனால் சமுதாயத்தில் சுற்றுச்சூழல் அழிவுகள், இனக்கலவரங்கள், மக்கள்தொகைப் பெருக்கம், ஆயுதப் பெருக்கம், பசி பஞ்சம் போன்ற பல சிக்கல்களை தீர்க்கும் அறிவைப் பெறமுடியாமல் போகிறது என்கிறார். வில்சன் அவர்கள் 1975-இல் சமூக-உயிரியல்[8] என்ற நூலின்மூலம் எப்படி உயிரியலையும் சமூக அறிவியலையும் இணைப்பது என்று எடுத்துரைத்தார். அதை சமூக அறிவியலார்கள் எதிர்த்து பெரிய சர்ச்சையாக்கினர். ஆனால் இன்று சமூக அறிவியலையும் உயிரியலையும் இணைக்கும் பல ஆராய்ச்சிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. சமூக அறிவியலில் மனிதனின் தன்மைகள் பற்றி பல தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. உளவியலாளர் ஸ்டிபன் பிங்கர்[4] இப்பிழைகளை விளக்கி அண்மையில் ஒரு பெரிய நூலை எழுதியிருக்கிறார்.

வில்சனின் அறிவியல் ஒருமை தத்துவம் (unity of knowledge) அனைத்து துறைகளையும் இணைத்து இயற்கையின் உண்மையான தன்மையை பிரதிபலிப்பாதாக இருக்கிறது. அதனால் நமது அணுகுமுறை வில்சனின் பாதையில் பலதரப்பட்டத் துறைகளை இணைத்து சமூக செயல்பாடுகளை அறிந்து கொண்டு, அதன் மூலம் சிக்கல்களுக்கு விடைகாண்பதாக இருக்க வேண்டும்.

“Most of the issues that vex humanity daily – ethnic conflict, arms escalation, over population, abortion, environment, endemic poverty, to cite several most persistently before us – cannot be solved without integrating knowledge from the natural sciences with that of the social sciences and humanities. Only fluency across the boundaries will provide a clear view of the world as it really is, not as seen through the lens of ideologies and religious dogmas or commanded by myopic response to immediate need.” – E.O. Wilson [7]

நாம் சமூக சிக்கல்களைத் தீர்க்க முயல்வதால், நாம் உருவாக்கும் அறிவியல் கட்டுமானம் சமூகத்தை மையமாக வைத்துக் கட்டப்படவேண்டும். இதில் முக்கியமாக “ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதாவது” என்ற பழமொழிக்கு ஏற்றவாறு ஏட்டுச்சுரைக்காய் படைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும். அதற்காக நான் முன்மொழிவது: 1. சமூகம் சாராத எதற்கும் அதில் இடமில்லை. 2. அந்த கட்டுமானத்தில் எந்த ஒரு கருத்தும் அறிவியல் தத்துவங்களின் அடிப்படையில் இருக்கவேண்டும். 3. அக்கருத்துக்கள் சமூகத்தில் செயல்படுவதற்கான வெளிப்படையான அறிவைத்தருவதாக இருக்கவேண்டும். 4. கருத்துக்கள் மற்ற அறிவியல் அறிஞர்களால் சரி பார்க்கப்பட்ட பின்னரே கட்டுமானத்தில் இணைக்கப்பபடவேண்டும். சிலநேரங்களில் சில அறிவியல் தத்துவங்கள் நமது புரிதல்களை விரிவாக்கும், ஆனால் உடனியாக அதன் பயனை அறியமுடியாது. அதுபோன்ற தத்துவங்களை தனியாக அடுக்கலாம். ஆனால் இவை கட்டுமானத்தில் வராது.

இறுதிச் சுருக்கம்:

இந்த கட்டுரையில் நமது தவறான புரிதல்களினால் அரசியலில் ஏற்படும் விளைவுகளை உளவியல் மற்றும் மூளைநரம்பியல் கொண்டு பார்த்தோம். மேலும் நமது செயல்பாடுக்களை 21-ஆம் நூற்றாண்டு அறிவியலின் துணைகொண்டு செயல்படவேண்டிய தேவையையும், அவ்வாறு செயல்படுவதற்கான அறிவியல் கட்டுமானத்தை எவ்வாறு உருவாக்குவது என்றும் பார்த்தோம். இதுபோன்ற அறிவியல் கட்டுமானத்தை அமைப்பது நிறைய சிந்தனையாளர்களின் கூட்டு முயற்சியினால்தான் சாத்தியமாகும். இதற்கு ஆழி செந்தில்நாதன்[1] அவர்களின் அறைகூவலை நினைவுபடுத்த விரும்புகிறேன்:

“இவற்றையெல்லாம் களப்போராளிகளே செய்யவேண்டும் என்பதல்ல. உண்மையில் அறிவாளர்களின் வேலையே இதுதான். அவர்கள்தான் உட்கார்ந்து யோசி்த்து ஆராய்ந்து தேடிஓடி அலைந்து புதிய தரவுகளோடு நமக்கு இவற்றையெல்லாம் சொல்லவேண்டும். இங்கே அது நடந்தாகவேண்டும். நடந்தால் மட்டுமே- புதிய அறிவுப் புரட்சி ஒன்று ஏற்பட்டால் மட்டுமே – சமூகத்தை அடுத்தநிலைக்கு நகர்த்தமுடியும்.”

உசாத்துணை:

1. Aazhi Senthil Nathan, தமிழகத்தின் வருங்காலம் படைப்பவர்கள் வருக! , 2016
2. Watts, Duncan J. Everything is obvious:* Once you know the answer. Crown Business, 2011.
3. Lakoff, George. The political mind: why you can’t understand 21st-century politics with an 18th-century brain. Penguin, 2008.
4. Pinker, Steven. The blank slate: The modern denial of human nature. Penguin, 2003.
5. Haidt, Jonathan. The righteous mind. Vintage, 2012.
6. Bak, Per. How nature works: the science of self-organized criticality. Springer Science & Business Media, 2013, p. 6.
7. Wilson, Edward O. Consilience: The unity of knowledge. Vol. 31. Vintage, 1999.
8. Wilson, Edward O. Sociobiology. Harvard University Press, 2000.
9. Liddell, Hart, and Henry Basil. “Why Don’t We Learn From History?.” (1944), p. 91.
10. Miller, John H., and Scott E. Page. Complex adaptive systems: An introduction to computational models of social life. Princeton university press, 2009.
11. Planck’s principle , Wikipedia
12. Poincaré, Henri. Science and method. Courier Corporation, 2013, p. 129.
13. Kanai, Ryota, et al. “Political orientations are correlated with brain structure in young adults.” Current biology 21.8 (2011): 677-680.
14. ஜெயபாண்டியன் கோட்டாளம். அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களை தமிழாக்குவதற்கான ஒரு கையேடு: https://drive.google.com/file/d/0BzwpbxABzaV5SzVpQ24tY0NGVXc

This entry was posted in அரசியல், சமூக அறிவியல், சமூகம், பகுத்தறிவு, Uncategorized and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s